Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 5 3

“சார் ஹோட்டல் ரங்கசாமியோடது….”

“எந்த கொம்பனா இருந்தா என்ன? சட்டம் அதோட கடமையைச் செய்யட்டும். இல்லைன்னா இப்ப போலீஸ் மினிஸ்டர் உங்க லைன்ல வருவார். நீங்க மணிமாறனுக்கு மெமோ கொடுத்தா அவர் உங்க வேலைக்கு உலை வைப்பார். எப்படி?”



Advertisement

“நான் கேசை புரசீட் பண்ணச் சொல்றேன் சார்”, என்று சொன்ன ஐ.ஜி மணிமாறனை அழைத்து சொன்னார்.

Advertisement

புன்னகையுடன் “நான் ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சிட்டேன் சார்”, என்றான்.

Advertisement

“மணிமாறன் உங்க நேர்மை எனக்கு தெரியும் தான். உங்க வயசுக்கு ரத்தம் சூடா தான் இருக்கும். ஆனா அவங்க சாக்கடை”, என்று எச்சரித்தார்.

Advertisement

“அவங்க யாரா வேணா இருக்கட்டும். அந்த சாக்கடை என் மேல படாம பாத்துக்க எனக்கு தெரியும்”

“கவனமா இருங்க”

“தேங்க் யு சார்”, என்று சொல்லி விட்டு வைத்தான். அடுத்த பத்து நாட்களில் கூண்டோடு கைலாசம் என்பது போல எக்ஸ். மினிஸ்டர் மட்டும் அல்ல அவனது பினாமிக்கலான அவனது உறவினர்கள் அனைவரும் ஜெயிலுக்கு சென்றார்கள்.

மீடியா இதில் தலையிட்டதாலும் ஆளுங்கட்சியின் சப்போர்ட் போலீஸ்க்கு இருந்ததாலும் ரங்கசாமியால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. ஆனால் மணிமாறனை ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினான்.

அவன் நினைத்தது போல ஒரு நாள் அவன் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அவனை ஆள் வைத்து அடிக்க வைத்தார். ஆனால் அவன் அனைவரையும் துவைத்து தோரணம் கட்டினான்.

அடுத்து அவனுடைய வீட்டினரை டார்கெட் செய்தார்கள். அவன் வீட்டருகே ஏடிஎம் இருந்தது. அங்கே எப்போதும் சிசிடி‌வியும் செக்யூரிட்டியும் இருந்ததால் அவனது குடும்பத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பூங்கொடியை கதிரவன் அழைத்துச் சென்று அழைத்து வருவதால் அவளையும் அவர்களால் நெருங்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் தந்தை மற்றும் மனைவிக்கு என ஒரு கான்ஸ்டபிளையும் துணைக்கு அனுப்பி வைத்தான். அவர்களுக்கு தெரியாமல் அந்த கான்ஸ்டபுல் அவர்கள் பின்னே செல்வார்.

போதாக் குறைக்கு மீடியாவிடம் “என்னோட உயிருக்கும், என்னோட குடும்பத்தினரின் உயிருக்கும் ரங்கசாமியால் ஆபத்து இருக்கிறது”, என்றும் மணிமாறன் பேட்டி கொடுத்திருக்க ரங்கசாமியால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவனது வேலைக்காவது உலை வைக்க வேண்டும் என்று எண்ணி அவனுக்கு லஞ்சம் கொடுக்க ஒரு ஆளை அனுப்பி வைத்தான். மணிமாறன் ஒரு நாள் ஒரு கேஸ் விஷயமாக வெளியே சென்றிருக்க அவனுடைய வண்டி அருகில் கொய்யாப் பழம் விற்பவரின் சைக்கிள் வந்து நின்றது.

அந்த சைக்கிள் வந்து நின்றதையும், அந்த சைக்கிளை ஓட்டி வந்தவன் அவனுடைய பைக்கில் ஏதோ வைப்பதையும் மணிமாறன் பார்த்து விட்டான். மணிமாறன் வண்டி அருகில் செல்லும் போது அந்த ஆள் அங்கிருந்து ஓடி விட்டான். அவனுடைய சைக்கிள் மட்டும் அங்கே இருந்தது.

அவசரமாக தன்னுடைய வண்டியை சோதித்தான். அதில் கத்தையாக பணக்கட்டு இருக்க அதை அவசரமாக அருகில் இருந்த கொய்யாப் பழத்துக்குள் வைத்து மறைத்தான்.

அவன் பணத்தை மறைத்த அடுத்த நொடி அங்கே லஞ்ச ஒழிப்புத் துறை ஜீப் வந்து நின்றது. அவன் அவர்களுக்கு வணக்கம் சொல்ல அவர்களோ அவன் வண்டியை சோதனையிட வேண்டும் என்றார்கள்.

அவர்கள் அங்கே சோதனையிட்டுக் கொண்டிருக்க அப்போது அந்த சைக்கிள் காரன் அங்கே வந்தான். அவனை மணிமாறன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் எதுவும் சொல்ல வில்லை.

அந்த சைக்கிள் காரனைப் பார்த்து லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து வந்திருந்த அதிகாரி “யாரு மேன் நீ? இங்க என்ன பண்ணுற?”, என்று கேட்டார்.

“கொய்யாப் பழம் விக்குறவங்க. ஒண்ணுக்கு போயிட்டு சைக்கிளை எடுக்க வந்தேன்”

“சரி போ”, என்று அவர் சொல்ல அவன் சைக்கிளை எடுத்தான். அப்போது தான் அவன் கண்ணில் மணிமாறன் வைத்த பணப்பை கொய்யாப் பழக் கூடையில் இருப்பதைக் கண்டான். உடனே மணிமாறனைத் திரும்பிப் பார்த்தான். மணிமாறன் நக்கலாக அவனைப் பார்த்து சிரித்தான். அந்த சிரிப்பில் அந்த சைக்கிள் காரனுக்கு குளிர் பிறந்தது. அவசரவசரமாக சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

வண்டியை சோதனையிட்டவர்கள் “பணம் எதுவும் இல்லை, தவறான தகவல் வந்திருக்கு”, என்று சொல்லி மன்னிப்பு கேட்டு விட்டுச் சென்றார்கள்.

அதே இடத்தில் அப்படியே நின்றிருந்தான் மணிமாறன். அவன் மூளை வேகமாக சிந்தித்தது. தன்னை மாட்டி விட இது ரங்கசாமி செய்த செயல் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அவனது குழப்பம் ஒன்றே ஒன்று தான்.

தன்னை மாட்டி விட பணம் கொண்டு வந்த அந்த சைக்கிள் காரன் மீண்டும் தன்னை ஏன் மாட்டி விடலை என்பதே? அந்த சைக்கிள் காரன் நினைத்திருந்தால் “சார், என்னோட சைக்கிள்ள பணம் இருக்கு. இதோ இவர் தான் இதை என் சைக்கிள்ல வச்சார்”, என்று சொல்லியிருக்கலாம். அவன் அப்படிச் சொல்லியிருந்தால் கட்டாயம் மணிமாறன் சிக்கி இருப்பான். அவனால் அதில் இருந்து தப்பித்திருக்க முடியாது.

தன்னை மாட்டி விட வந்தவன் மீண்டும் வாய்ப்பு இருந்தும் தன்னை மாட்டி விடாமல் பயந்து ஓடியதற்கு காரணம் என்ன என்று தான் அவனுக்கு தெரிய வில்லை.

சுற்றி தன்னுடைய பார்வையை செலுத்தினான். கொஞ்சம் தள்ளி இருந்த அப்பார்ட்மெண்டில் கேமரா மாட்டியிருந்தது தெரிந்தது. அவசரமாக அங்கே சென்றவன் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் பெர்மிசன் கேட்டு அதை ஆராய்ந்தான். அதில் அந்த வியாபாரியின் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் அவனுக்கு முகம் தெரியுமே?

பின் அதை காப்பி பண்ணி விட்டு ஸ்டேஷன் வந்தவன் அங்கிருந்த எல்லா போலீசிடமும் காண்பித்து அந்த சைக்கிள் காரனைப் பற்றி விசாரித்தான்.

அனைவரும் அவனைப் பார்த்ததில்லை என்று சொல்ல ஒரே ஒரு கான்ஸ்டபுள் மட்டும் “இவன் முகம் தெரியலைனாலும் இவனை எங்கயோ பாத்துருக்கேன் சார்”, என்றார்.

“எங்க?”, என்று கேட்டு அவரை யோசிக்க விட “சார், நினைவு வந்துருச்சு. இவன் நம்ம பஸ் ஸ்டாண்ட் பக்கம் சைக்கிள்ல கொய்யாப்பழம் விப்பான் சார். மாமியார் வீட்டுக்கு போகும் போது இவன் கிட்ட ஒரு நாள் வாங்கிட்டு போனேன். ஆனா இவன் எந்த ஊர், என்ன ஏதுன்னு எதுவும் தெரியலை”, என்றார்.

“சரி வேலையைப் பாருங்க”, என்று சொல்லி அவரை அனுப்பியவன் அந்த வீடியோவை ஐ.ஜிக்கு அனுப்பி வைத்து தனக்கு எதிராக சதி நடப்பதை தெரியப் படுத்தினான். எல்லாம் கேட்ட அவரோ “இதுக்கு தான் அவர் கூட மோதாதீங்கன்னு சொன்னேன். சரி இதை இதோட விட்டுருங்க. மீடியா பிரஸ் எல்லாம் தெரிய வேண்டாம்”, என்றார்.

“சரி சார்”, என்று சொல்லி போனை வைத்தான். அவன் உதடுகள் புன்னகையால் மலர்ந்தது. பின் அந்த சைக்கிள் காரனை எப்படிப் பிடிக்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தான் மணிமாறன். இவ்வளவு பிரச்சனையில் அவன் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்தது. அவன் இல்லாமல் அவள் தான் தவித்துப் போனாள்.

இருவருக்கும் இடையே சுமூகமான பேச்சு வார்த்தை எல்லாம் இல்லை தான். ஆனால் தன்னுடன் ஒரே அறையில் ஒரே கட்டிலில் தூங்கும் அவன் இல்லாதது அவளுக்கு என்னவோ போல இருந்தது. முதன் முறையாக அவன் இல்லாத தனிமை அவளை வாட்டியது. தான் இந்த அளவுக்கு அவனை நினைப்போமா என்று அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

இதற்கிடையில் அவன் ரங்கசாமியை பிடித்து சிறை வைத்தது எல்லாம் பத்திரிக்கை மற்றும் செய்தியில் பார்க்கிறாள் தான். அவளது தோழிகள் அவனை புகழ்கிறார்கள். அவளுடைய வீட்டில் உள்ளவர்களும் அவனை புகழ்ந்து விட்டு அவனை கவனமாக இருக்கச் சொல்கிறார்கள். ஆனால் அவளால் தான் அவனைக் காண முடிய வில்லை.

இப்போதெல்லாம் கதிரவன் தான் அவளை காலேஜ் அழைத்துச் செல்கிறார். கவர்ன்மெண்டில் இருந்தே அவர்களின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். நியூசில் அவனுக்கு ஆபத்து வரும் என்று சொல்லும் போதெல்லாம் அவள் பதறித் தான் போகிறாள்.

அவனிடம் பேச முடியாமல் தன்னுடைய போனில் இருந்து அவனுக்கு அழைத்தாள். ஆனால் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.

அவனைப் பற்றி எண்ணிக் கொண்டு அவள் புத்தகத்தை விரித்து வைத்திருக்க மணியம்மை அவளை அழைத்தாள்.

அதை எடுத்து “சொல்லு கிழவி”, என்றாள்.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!