Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 6 1

அத்தியாயம் 6

தொலைவில் இருந்தாலும்

அருகில் இருக்கும் உணர்வைத்

தருவது காதல் மட்டுமே!!!



Advertisement

“ஏட்டி என்ன இங்க வரவே மட்டிக்க? ஒரெட்டு வந்து பாத்துட்டு போயேன். உன் அண்ணன்களும் கேட்டாங்க”, என்றார் மணியம்மை.

Advertisement

“எங்க மா வர முடியுது? உன் மாப்பிள்ளை பிசியோ பிஸி”, என்று சொன்னாள் பூங்கொடி.

Advertisement

“ஆமா கேக்கணும்னு நினைச்சேன். மாப்பிள்ளை வந்தாரா வீட்டுக்கு?”

Advertisement

“எங்க? காலைல என்னை காலேஜ்ல கொண்டு விடுறது கூட மாமா தான். இந்த ஹோட்டல் கேஸ்ல பிஸி போல. எப்ப சாப்பிடுறார் எப்ப குளிக்கிறார்னே தெரியலை. முந்தாநேத்து நான் காலேஜ் போன பிறகு வந்தாராம். டிரஸ் எடுத்துட்டு போய்ட்டாராம்? வேலை முடிஞ்சு தான் வருவாராம். பாத்தே ரொம்ப நாள் ஆச்சு”

“அவர் வேலை வேலைன்னு இருக்கட்டும். நீ படிப்பு படிப்புன்னு இரு. அப்ப நான் எப்ப டி என் பேரப் பிள்ளைகளைப் பாக்குறது?”, என்று மணியம்மை கேட்டதும் அவள் முகம் சிவந்தது.

“என்னட்டி வாயை மூடிட்ட? சீக்கிரம் பிள்ளையை பெத்துக் கொடுக்குற வழியைப் பாரு, சொல்லிட்டேன்”

….

“கேக்குதா?”

“கேக்குது மா”

“அப்ப சரின்னு சொல்லு”

“சரி மா”

“சரி மாப்பிள்ளைக்கு லீவ் கிடைச்சா இங்க கூட்டிட்டு வரச் சொல்லு. பிள்ளைக எல்லாம் அத்தை அத்தைன்னு உன்னைக் கேக்குதுக”

“சரி மா, வரேன்”

“இந்த வாரம் வர முடியலைன்னா சொல்லு. நாங்க அங்க வரோம்”

“சரி மா அவர் கிட்ட கேட்டு சொல்றேன்”

“மாப்பிள்ளையை கவனமா இருக்கச் சொல்லு டி. எல்லாரும் அவரை புகழும் போது நல்லா தான் இருக்கு. ஆனா பக்கு பக்குன்னு இருக்கு. ரெண்டு நாள் முன்னாடி மனசு கேக்காம உன் அண்ணன் கிட்ட மாப்பிள்ளைக்கு போன் போடச் சொன்னேன்”

“அண்ணன் அவர் கிட்ட பேசுச்சா மா? என்ன சொன்னாராம்?”

“பயப்படாதீங்க, எல்லாம் நான் பாத்துக்குறேன்னு சொன்னாராம். கேசவனும் அவருக்கு இருக்குற ஆபத்தைப் பத்தி கேட்டான். ஆனா அவர் எதுவும் ஆகாது, சீக்கிரம் இந்த கேஸ் முடிஞ்சிரும்னு சொன்னாராம். சரி டி நீயும் கவலைப் படாம இரு. நம்ம குலதெய்வம் நம்ம கூட இருக்கும். சரி வைக்கிறேன். சொன்னது நினைவு இருக்கட்டும்”, என்று சொல்லி விட்டு மணியம்மை வைத்ததும் அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். குழந்தையைப் பற்றி எண்ணியதும் அவள் முகம் சிவந்தது.

முதல் நாள் அவன் அவளை நெருங்கிப் படுத்ததோடு சரி. அதன் பின் அவன் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய வில்லை. ஒரே அறையில் இருப்பதால் சில சங்கடமான நிகழ்வுகள் நிகழத் தான் செய்தது. அதை எல்லாம் எண்ணிப் பார்த்தாள்.

அவள் கற்பனைகள் கட்டுப்பாடற்று செல்ல “தேவையில்லாம யோசிக்காத டி பூவு. முதல்ல படிக்கிற வேலையைப் பாரு”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்.

எல்லா வேலையும் முடித்து விட்டு அப்பாடி என்று தன்னுடைய சீட்டில் அமர்ந்தான் மணிமாறன். அந்த கொய்யாப் பழ வியாபாரியை பிடித்து விட்டான். இன்று பஸ் ஸ்டாண்ட் பக்கமாக வேலை இருப்பது போல சென்று அவனைப் பார்த்து விட்டான்.

பஸ் ஸ்டாண்டில் பல வியாபாரிகள் தங்களின் பொருள்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இவன் மட்டும் வேறு ஒரு இடத்தில் தனியாக நின்றான். வியாபாரி இப்படி ஏனோ தானோவென்று இருப்பானா என்று சந்தேகம் வந்தது மணிமாறனுக்கு. அவனையே பார்த்த படி நின்றான்.

அப்போது இரண்டு ஆட்கள் அவன் சைக்கிள் அருகே சென்றார்கள். அதில் ஒரு பெண் அவனிடம் கொய்யாப் பழம் கேட்க அவளுக்கு நிறுத்துக் கொடுத்தான். அவள் சென்றதும் மற்றொரு ஆள் எதையோ கேட்க சுற்றி முற்றி பார்த்து அடியில் இருந்து எதையோ எடுத்துக் கொடுத்தான்.

மணிமாறனுக்கு சந்தேகம் வந்தது. கொய்யாப் பழத்துடன் அவன் வேறு ஏதோ விற்கிறான் என்று புரிந்தது. மீண்டும் கொக்கு போல் பொறுமையாக நின்று அவனை வேவு பார்த்தான். வாஜித்தையும் வரச் சொல்லி விட்டான்.

ஐந்தாறு பேர் அவனிடம் ஏதோ வாங்கி விட்டு செல்ல அடுத்த நொடி அவனை நெருங்கி சென்றான் மணிமாறன். இவனைக் கண்டு அந்த வியாபாரி ஓட முயல வாஜித் மற்ற போலீசுடன் அங்கு வந்து விட்டான்.

அவன் சைக்கிளைச் சோதனையிடும் போது தான் தெரிந்தது அவன் கஞ்சா விற்பது. அவனை அள்ளிக் கொண்டு ஸ்டேஷன் சென்றான். முதலில் அவனை அடிக்காமல் விசாரித்தான். யார் அதைச் செய்ய சொன்னது என்று கேட்டான் அவன் சொல்ல வில்லை. கஞ்சா யார் கொடுத்தது என்று கேட்டதற்கும் அவன் பதில் சொல்ல வில்லை.

சரி பொறுமையாக விசாரிக்கலாம் என்று எண்ணி அன்று நிம்மதியாக வீட்டுக்கு வந்தான் மணிமாறன். அவனை நிமிர்ந்து பார்த்த அவனது மனைவி திகைத்து நின்று விட்டாள். அவன் யூனிபார்மில் வந்திருந்தான். அன்று தான் அவனை யூனிபார்மில் நேரில் பார்க்கிறாள். டிவியில் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போல் இராதே. மற்ற நாட்களில் யூனிபார்மை கழட்டி விட்டு தான் வருவான். ஆனால் இன்றோ அப்படியே வந்து விட்டான்.

அவள் தன்னையே பார்த்த படி இருக்கவும் “என்ன மேடம் அழகா இருக்கேனா?”, என்று கேட்டான்.

அவன் அப்படிக் கேட்கவும் முகம் சிவந்தவள் “யூனிபார்ம்ல இன்னைக்கு தான் பாக்குறேன், அதான்”, என்றாள்.

“நல்லா இருக்கா?”

“ம்ம்”, என்று அவள் முணுமுணுக்க இப்போது அவன் பார்வை அவளை வருடியது.

ஷர்ட், பேண்ட் என்ற இரவு உடையில் தான் இருந்தாள். ஆனால் தேவகிக்காக நெற்றி மற்றும் வகிட்டில் குங்குமம், தலையில் மல்லிகைப் பூ என இருந்தாள்.

அவளைக் கண்டதும் அவன் மனம் மயங்க ஆரம்பிக்க “டேய் இங்க இருந்து போ டா”, என்று அவன் மனம் அவனை அரட்டியது.

அவன் அமைதியாக இருக்கவும் “சாப்பாடு எடுத்து வைக்கவா?”, என்று கேட்டாள்.

“எடுத்து வை, குளிச்சிட்டு வரேன்”, என்று சொன்னவன் யூனிபார்ம் சட்டையைக் கழட்ட ஆரம்பிக்க “சார் யூனிபார்ம்ல கம்பீரமா தான் இருக்கார்”, என்று எண்ணிக் கொண்டு வெளியே சென்றாள்.

அவள் கடைசி தோசையை சுட்டு தட்டில் வைக்க குளித்து முடித்து வந்தான். அவனுக்கு பரிமாறினாள். எப்போதும் போல் அவன் அவளுக்கு ஊட்ட வர “நான் சாப்பிட்டேன்”, என்று மறுத்தாள்.

“கூட ஒரு வாய் சாப்பிட்டா ஒண்ணும் பண்ணாது. இன்னும் கொஞ்சம் சதை போட்டா தான் இன்னும் அழகா இருப்ப”, என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு ஊட்ட சிவந்த முகத்துடன் அதை வாங்கிக் கொண்டு அவன் அருகே அமர்ந்து அவனுக்கு தேவையானதைப் பரிமாறினாள்.

அவள் எல்லாவற்றையும் எடுத்து வைத்து வரும் போது அவன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை ஒரு பார்வை பார்த்தவள் அறைக்குச் சென்று படுத்து விட்டாள்.

அவன் டி‌வியை அணைத்து விட்டு அறைக்கு வரும் போது அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அழகுச் சிலை போல ஒருக்களித்துப் படுத்திருந்தவளைப் பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன் அவள் அருகே படுத்தான். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான்.

அடுத்த நாள் எப்போதும் போல விடிய காலேஜ்க்கு கிளம்பினாள் பூங்கொடி. அவளை விடுவதற்காக அவனும் குளித்து முடித்து தயாரானான்.

இருவருக்கும் காலை உணவை பரிமாறினார் தேவகி. குளித்து முடித்து வந்த கதிரவனும் அவர்களுடன் அமர்ந்து உண்டார்.

பெரியவர்களிடம் சொல்லி விட்டு இருவரும் கிளம்பினார்கள். அவளை காலேஜில் விட்டுவிட்டு வீட்டுக்கு வருவதாக இருந்தால் அவளை வண்டியில் அழைத்துச் செல்வான். அப்படியே ஸ்டேஷன் செல்வதாக இருந்தால் ஜீப்பில் அழைத்துச் செல்வான்.

இன்று ஜீப் எடுத்ததும் போலீஸ்காரன் பொண்டாட்டியாக கம்பீரமாக அவன் அருகே ஏறி அமர்ந்தாள் பூங்கொடி. போகும் போது இருவருக்கும் இடையே அமைதியே நிலவ “இந்த வீக்கெண்ட் நீங்க பிரியா?”, என்று கேட்டாள்.

“நீ கேட்டா பிரி ஆக்கிக்க வேண்டியது தான்”

“எனக்காக யாரும் ஒண்ணும் எதுவும் செய்ய வேண்டாம். உண்மையைச் சொல்லுங்க”

“பிரி தான். என்ன செய்யணும்? ஹனிமூன் போகப் போறோமா?”

“ஆசை தான். வீட்டுக்கு போகணும். பிள்ளைங்க பாக்கணும்னு சொன்னாங்களாம்”

“அத்தையைக் கூட்டிட்டு போறியா?”

“உங்களோட போனா தான் மரியாதையா இருக்கும். நீங்க வந்தா போறேன். இல்ல போகலை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!