Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 3 1

அத்தியாயம் 3

காதல் கொண்ட நெஞ்சம்

சுமப்பது வண்ணக் கனவுகளையோ?!!!



Advertisement

வெண்ணிலா பேசுவது புவியின் திருமண விஷயம் என்பதால் அமைதியாகி விட்டாள் சுஜி. அவனுக்கு திருமணம் ஆகி விட்டால் தன்னுடைய நிலைமை என்ன ஆகும் என்று உள்ளுக்குள் கலங்கி விட்டாள். அவள் மனநிலை உணர்ந்த மைதிலி வெண்ணிலாவுக்கு தெரியாமல் சுஜியின் கையை ஆறுதலாக பற்றிக் கொண்டாள்.

வெண்ணிலாவின் கவனம் சுஜி மேல் சென்று விடக் கூடாது என்பதற்காக “வெண்ணிலா எனக்கு ஒரு சந்தேகம்?”, என்றாள் மைதிலி.

Advertisement

Advertisement

“என்ன டி”?’

“உங்க வீட்ல உங்க அண்ணா மட்டுமா கல்யாணம் பண்ணாம இருக்காங்க? பரணி அண்ணாவும் தானே கல்யாணம் பண்ணாம இருக்காங்க? அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலையா?”, என்று கேட்க இப்போது வெண்ணிலா முகம் ஒரு மாதிரி போனது.

Advertisement

“தெரியலை டி”, என்று சொன்ன வெண்ணிலா அமைதியாகி விட்டாள்.

“அவங்க அவங்க ஆள் பத்தி பேசின உடனே சைலேண்ட் ஆகிட்டாங்க. என் ஆள் எங்க இருப்பானோ?”, என்று அவள் எண்ண அப்போது வகுப்பு எடுக்க வந்த ஆசிரியை “சுஜிதா, உன் அண்ணன் உன்னைப் பாக்க வந்துருக்காங்க. என்னன்னு கேட்டுட்டு வா”, என்று சொன்னார்.

உடனே எழுந்து சென்றாள் சுஜி. “நம்ம ஆளைப் பத்தி நினைச்சா சுஜி அண்ணன் வராங்க. அவங்க தான் என் ஆளா? சே நான் ஏன் லூசு மாதிரி நினைக்கிறேன்?”, என்று எண்ணிய மைதிலி பாடம் கவனித்தாள்.

வெளியே சென்று பார்த்த போது ஒரு மரத்தடியில் ஒரு பையை வைத்துக் கொண்டு நின்றான் சுஜியின் அண்ணன் மதன்.

அவனைக் கண்டதும் “அண்ணா, நீ என்ன இங்க வந்துருக்க?”, என்று கேட்டாள்.

“குட்டி மா, எதுக்கு சாப்பாடை வச்சிட்டு வந்துட்ட? அதை கொடுக்க தான் வந்தேன்”

“வீட்ல ஒரு வேலையும் செய்யுறது இல்லைன்னு அம்மா திட்டுச்சு அதான் கோபத்துல வந்துட்டேன்”, என்று குற்ற உணர்வுடன் சொல்ல

“நம்ம வீட்டுக்கு நீ இளவரசி டா. உன்னை வேலைச் செய்ய சொன்ன அம்மாவை என்ன செய்யுறேன் பாரு. சாயங்காலம் அம்மா கிட்ட சண்டை போடலாம் சரியா?”, என்று சொல்லி தங்கையை சமாதானப் படுத்தினான்.

“சரிண்ணா, அம்மாவை நல்லா திட்டு. அப்ப தான் அது வாயை மூடும்”

“சாயங்காலம் கேக்குறேன் டா. இப்ப நீ இதை வாங்கிட்டு கிளாசுக்கு போ. நல்லா சாப்பிடு. எனக்கும் வேலைக்கு நேரம் ஆச்சு”, என்று சொன்னதும் பையை வாங்கிக் கொண்டு கிளாசுக்கு வந்தாள்.

தணிகாச்சலம் சுந்தரி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் மதன் இப்போது எல்.ஐசியில் பணி புரிகிறான். அவனுக்கு அடுத்து தான் சுஜிதா. அதற்கு அடுத்து ரகு. அடுத்து என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சுஜியும் ரகுவும் இரட்டைப் பிள்ளைகள். சுஜி நான்காம் வருடம் இன்ஜினியரிங் படிக்க ரகுவோ நான்காம் ஆண்டு மெடிக்கல் படித்துக் கொண்டிருந்தான்.

தணிகாச்சலம் ஒரு பிரைவேட் கம்பெனியில் தான் பணிபுரிகிறார். சிறு வயதில் இருந்து அங்கு பணி புரிவதால் சம்பளம் இப்போது அவருக்கு முப்பதாயிரம். பிள்ளைகள் மூவருமே நன்கு படித்ததால் அவர்கள் வீட்டில் பெரிய அளவில் கடன் எல்லாம் வாங்கியதில்லை. சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் அவ்வளவே.

வீட்டில் இருக்கும் அனைவருக்குமே சுஜிதா தான் செல்லம். அம்மாவுக்கும் மகளுக்கும் தான் எப்போதும் முட்டிக் கொள்ளும். சுஜிக்கு சப்போர்ட் செய்து தணிகாச்சலம், மதன், ரகு மூவருமே பேச சுந்தரி மகளை ஒரு வழி செய்வாள்.

“இங்க இப்படியே பண்ணிட்டு இரு. போற இடத்துல நல்லா படப் போற?”, என்று சொல்லிக் கொண்டே இருக்கும் சுந்தரியின் வாக்கு தான் பின்னாளில் பலித்ததோ என்னவோ?

வெண்ணிலா மற்றும் சுஜியின் குடும்பம் இப்படி என்றால் மைதிலி வீடு வேறு மாதிரி. அவள் அந்த வீட்டில் ஒரே பெண். அவளுக்கு தாய் கிடையாது. அவளது தந்தை பெயர் கேசவன். பெரிய அரசியல்வாதிகளுக்கு கையாள் அவர். கள்ளக் கடத்தல் முதல் கட்டப் பஞ்சாயத்து வரை அனைத்தையும் அசராமல் செய்வார்.

சரியான சந்தேகப் பேர்வழி. அவரது மனைவி ஜானகி. சந்தேகப் சந்தேகப் பட்டு அவளை ஒரு வழி செய்ததால் இந்த வாழ்க்கையை விட மரணமே மேல் என்று எண்ணி மகளை விட்டுவிட்டு தூக்கு போட்டுக் கொண்டாள்.

அதனால் மைதிலி சிறு வயதில் இருந்தே தனிமையில் தான் அதிகம் இருப்பாள். எப்போதும் தனிமை தனிமை. யாரிடமும் அவள் பேசி விட முடியாது. பள்ளியில் படிக்கும் போது ஒரு பையன் அவளிடம் பேசி விட்டான். அதைக் கேள்வி பட்டு வீட்டுக்கு வந்ததும் கேசவன் மைதிலியை அடித்த அடியை இப்போது நினைத்தாலும் அவள் உடல் விறைத்துக் கொள்ளும். கேசவன் அந்த அளவுக்கு கொடுமைக்காரர்.

அவருக்கு பயந்து அதற்கு பின் அவள் யாரிடமும் பேசியதில்லை. பெண் பிள்ளைகளிடம் கூட பேச மாட்டாள். அவள் அவளாக இருப்பது வெண்ணிலா மற்றும் சுஜியிடம் மட்டும் தான்.

காலேஜ் முடிந்து வீட்டுக்கு சென்றதும் அவளுக்கு நரகம் தான். தனியறையில் முடங்கிக் கொள்வாள். வேலைக்காரப் பெண் அவளுக்கு உணவு எடுத்துக் கொண்டு வருவாள்.

கேசவனைக் காண யார் யாரோ வருவார்கள். ஜன்னல் வழியே சில நேரம் கேசவன் வேறு வேறு பெண்களை தோளில் கை போட்டு அழைத்து வருவதைக் கூட பார்த்திருக்கிறாள்.

யாரும் வராத போது வேலைக்காரிகளிடம் கூட அவரது சில்மிஷம் இருக்கும். “இந்த கேடு கெட்டவன் என் அம்மாவை சந்தேகப் பட்டுருக்கான். சே”, என்று எண்ணி அழும் மைதிலிக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்காது.

ஆனால் அவள் இங்கிருந்து சென்றால் அவள் நிலைமை இன்னும் கேவலமாகி விடும் என்று அவளுக்கு தெரியும். அதனால் பல்லைக் கடித்துக் கொள்வாள். என்ன தான் பெண்களுக்கு சுதந்திரம் உண்டு என்றாலும் பெண் பிள்ளைகள் வீட்டில் இருப்பது போல வெளியே இருக்க முடியாதே? நரகம் என்றாலும் அந்த வீடு தான் அவளுக்கு பாதுகாப்பு என்று சகித்துக் கொண்டு இருக்கிறாள்.

சில நேரம் “நான் ஹாஸ்டல் போறேன்”, என்று சொல்லி கேசவனிடம் அடி வாங்குவாள். அடிக்கும் அடியை விட “ஏன் ஹாஸ்டல் போறேன்னு சொல்ற? உன் அம்மா மாதிரி காலேஜ் வாட்ச்மேனை மயக்க போறியா?”, என்று கேப்பார்.

பெற்ற தந்தையே அப்படிக் கேட்டதும் துடித்துப் போவாள். இப்படி பேசும் அவரால் இன்னும் எவ்வளவு சித்திரவதை அனுபவிக்கப் போகிறாளோ? கடவுளுக்கு தான் வெளிச்சம். ஆனால் வீட்டில் நடக்கும் அனைத்தையும் அவ்வப்போது தோழிகளிடம் சொல்லி விடுவாள். அவளுக்கு அவர்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? வெண்ணிலாவும் சுஜியும் சில நிமிடங்களிலேயே மைதிலியின் மனதை மாற்றி விடுவார்கள்.

அன்று கல்லூரி கடைசி நாள். மதியம் ஒரு மணிக்கு பரீட்சை எழுதி முடித்து விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்கள். மூவரின் முகமுமே உர்ரென்று தான் இருந்தது. யாராவது வாய் திறந்து பேசினாலே அழுது விடுவோம் என்பது போல இருந்தது அவளது முகம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. வெண்ணிலாவுக்கு தோழிகளை பிரிய வேண்டுமே என்று கவலை. அந்த கவலை மற்ற இருவருக்கும் இருந்தாலும் கூடுதலாக சுஜிக்கு இனி புவியை எப்படி பார்க்க என்று கவலை? மைதிலிக்கோ இனி வீட்டில் தான் என்ன ஆவோம் என்ற கவலை.

“ஏன் டி இப்படி அமைதியா இருந்து என்னைக் கொல்லுறீங்க? இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வீட்டுக்கு கிளம்பிருவீங்க. எங்க வீட்டுக்கு போனா நான் மெண்டல் ஆகிருவேனோன்னு எனக்கு பயமா இருக்கு. தினமும் உங்களைப் பாத்து சந்தோஷப் படுற நான் தினமும் இனி அந்த ரூம்குள்ள தான் இருக்கணும். என் அப்பன் என்னை என்ன டார்ச்சல் பண்ணப் போறானோ? கொஞ்ச நேரமாவது என் கிட்ட பேசிட்டு இருங்க டி?”, என்று ஏக்கமாக மைதிலி கேட்க “மைத்தி”, என்ற படி சுஜியும் வெண்ணிலாவும் அவளை அனைத்துக் கொண்டார்கள்.

மூன்று பேருமே ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அழ ஆங்காங்கே அமர்ந்திருந்த அனைவரும் அவர்கள் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாலும் அதை பெரியதாக நினைக்க வில்லை. ஏனென்றால் அவர்களும் அவர்களுடைய நண்பர்களுடன் பிரிவின் வலியைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!