Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 6 3

அவர்கள் வீட்டில் இருநூறு பவுன் போட்டிருக்கிறார்கள் என்ற விவரம் யாருக்குமே தெரியாமல் போகப் போகிறது என்றும் மகளை வேலைக்காரியாக தான் அவர்கள் வீட்டில் நடத்துவார்கள் என்றும் அவர்களுக்கு யார் சொல்வது?

அடுத்து வந்த நாட்களில் கல்யாண வேலைகள் சூடு பிடித்தது. அனைவருமே பம்பரமாக சுழன்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.



Advertisement

ஒரு வழியாக கல்யாண நாளும் வந்தது. புவியரசன் வெட்ஸ் சுஜிதா என்ற பெயர் பலகையை தாங்கியிருந்தது அந்த கல்யாண மண்டபம். வண்ண வண்ண விளக்குகள் அந்த இடத்துக்கு தனி அழகைக் கொடுத்தன.

Advertisement

வாயிலில் மாவிலைத் தோரணமும், வாழையிலைத் தோரணமும் அழகாக இருந்தது. உறவினர்கள் எல்லாம் வருகைத் தர சுஜியை அழைத்து வர வந்தார்கள் புவி வீட்டினர்.

Advertisement

இவர்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு போகும் போது மணமகன் அறையில் சிறு கூச்சத்துடன் தயாராகிக் கொண்டிருந்தான் புவி. பரணி தான் அவனைக் கிளப்பிக் கொண்டிருந்தான். ஐயர் அழைத்ததும் பரணி அவனை அழைத்து வந்தான்.

Advertisement

பட்டு வேஸ்டி சட்டையில் தமிழ் நாட்டுக்கே உரிய மாநிறத்தில் கம்பீரமாக மணமேடையில் அமர்ந்தான் புவி. கூர்மையான கண்களும் அடர்த்தியான புருவமும் சுளித்த அதரங்களும் அவனுக்கு கம்பீரத்தை அதிகமாகவே பரிசளித்தது. அதுவும் அந்த கூரான மூக்கின் மேல் அமைந்த முருக்கேறிய மீசை அவனுக்கு ஆண்மையின் இலக்கணத்தை பறைசாற்றியது.

அவன் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்த பரணி “ரொம்ப அழகா இருக்க மாப்பிள்ளை”, என்று சொல்லி சிரித்தான்.

“சும்மா காமெடி பண்ணாத மாமா”, என்று சொன்ன புவி சிறிது வெட்கப் பட்டது போலவே இருந்தது.

ஹோம குண்டம் வளர்த்துக் கொண்டிருந்த ஐயர் புவி கழுத்தில் மாலையை போட்டார்.

“நான் காமெடி பண்ணலை மாப்பிள்ளை. நிஜமாவே டாப் டக்கரா இருக்க”, என்றான் பரணி.

“அட போ மாமா, கடைக்கு சரக்கு எல்லாம் வந்துடுச்சான்னு கேட்டியா?”, என்று கேட்டான் புவி.

“டேய், மடசாம்பராணி, இப்ப நீ மணமேடைல உக்காந்துருக்க டா. இப்பவும் பொறுப்பா இருக்கியே?”

“பருப்பு விக்குறவன் பொறுப்பா இருக்க வேண்டாமா மாமா?”

“உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை மாப்பிள்ளை”, என்று சொன்னான் பரணி.

இருவரும் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார்கள். இது எப்போதுமே அவர்களுக்குள் நடக்கும் இயல்பான ஒரு நிகழ்வு தான்.

அவர்கள் இருவரும் புன்னகையுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்க அருகில் நின்று ஐயர் சொன்ன வேலைகளைச் செய்து கொண்டிருந்த மல்லிகாவுக்கு அவர்களின் புன்னகை சந்தோசத்தைக் கொடுத்தது. கூடவே ஒரு பெருமூச்சும் வந்தது.

மல்லிகாவுக்கு பரணிக்கு சரியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வில்லையோ என்ற கவலை இருந்தது.

அதே நேரம் மணப் பெண் அறையில் அழகான சிவப்பு நிற பட்டுச் சேலையை உடுத்தி தாயாராகிக் கொண்டிருந்தாள் சுஜிதா. அவள் சந்தன நிறத்துக்கு அந்த கலர் அழகாக பொருந்தியிருந்தது. திருமணத்திற்கு ஆகும் மொத்த செலவும் புவி வீட்டினரது தான்.

அவளுக்கு என்று வாங்கிக் கொடுத்திருக்கும் ஒரு சேஃப்டி பின் முதல் கொண்டு அழகு நிலைய பெண் வரை அனைத்தும் தயார் செய்தது மாப்பிள்ளை வீட்டினர் தான். அழகு நிலைய பெண் தன்னுடைய ஒப்பனையை தீவிரமாக செய்து கொண்டிருந்தாள். கவரிங் செட் போட்டிருந்ததால் யாரும் அன்று நகையைப் பற்றி கேட்க வில்லை.

மல்லிகாவும் மிஞ்சி மிஞ்சிப் போனா பத்து தான் போடுவாங்க என்று எண்ணி அதைப் பற்றி பேசாமல் இருந்து விட்டாள். அப்படி பேசக் கூடாது என்று பாரி வேறு சொல்லி இருந்ததால் அவள் எந்த வம்பும் செய்ய வில்லை.

தன்னுடைய முகத்தை அழகு நிலையப் பெண்ணிடம் கொடுத்து விட்டு அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தாள் சுஜி. அவளுடைய கை மற்றும் கால்களில் மருதாணி பளபளத்தது. அவள் முகத்தில் சந்தோஷம் நிறைந்திருந்தது. தன்னுடைய திருமணம் பெற்றவர்களுக்கு பிடிக்கவில்லையோ என்று அவள் கவலையில் இருந்த போது தணிகாச்சலம் மற்றும் சுந்தரி இருவரும் அவளிடம் நன்கு பேசவும் அவள் கவலை எல்லாம் அவளை விட்டுச் சென்று விட்டது.

அவளுக்கு துணையாக வெண்ணிலா நின்றிருந்தாள். மைதிலி மட்டும் இன்னும் வந்த பாடில்லை. அவளை தோழிகள் தேடினார்கள் தான். அதையும் விட மதன் அதிகம் அவளைத் தேடினான்.

“மைத்தி இன்னும் வரலையா டி?”, என்று கேட்டாள் சுஜி.

“இன்னும் வரலை டி. நிறைய தடவை கால் பண்ணிட்டேன். எடுக்கவே மாட்டிக்கா. இரு இப்ப வந்துட்டாளான்னு பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்த வெண்ணிலா வெள்ளை வேஷ்டி சட்டையில் இருந்த பரணியைக் கண்டு அசைவற்று நின்று விட்டாள்.

அவன் ஏதோ வேலை செய்வதற்காக சமையல் கட்டுப் பக்கம் நகர அவனைத் தேடிச் சென்றாள். “என்ன நிலா, ஏதாவது வேணுமா?”, என்று கேட்டான் பரணி.

“இந்த டிரஸ்ல அவ்வளவு சூப்பரா இருக்க மாமா”, என்று அவள் சொல்ல சிறிது வெட்கப் பட்டவன் “ஏய் போ டி, கிண்டல் பண்ணிக்கிட்டு”, என்று சொன்னான். அப்போது தான் அவளது உடையும் அவன் கண்ணில் விழுந்தது.

“ஏய் நிலா குட்டி, நீயும் சூப்பரா இருக்க? சேலை எல்லாம் கட்டி பெரிய பொண்ணு மாதிரி. ரொம்ப அழகா இருக்க டா”, என்றான்.

அவன் பாராட்டு மழையில் நனைந்தவள் “ரெண்டு பேரும் அழகா இருக்கோம்ல? வா ஒரு செல்பி எடுப்போம்”, என்று சொல்லி அவன் சட்டைக் காலரைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தாள்.

இருவர் முகமும் அருகருகே இருக்குமாறு அழகாக அவர்களின் பிம்பம் பதிவானது. “போட்டோ எடுத்தது போதும். நிறைய வேலை கிடக்கு”, என்று சொல்லி விட்டு அவன் செல்ல உதடுகளில் உறைந்த புன்னகையுடன் மைதிலியைத் தேடினாள். அவளோ இன்னும் வந்த பாடில்லை.

அப்போது கேசவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தாள் மைதிலி. அவர் அவளை அனுப்ப மறுக்க “இனி எங்கேயும் போக மாட்டேன். இந்த ஒரு தடவை மட்டும் தான். சந்தேகம் இருந்தா நீங்களும் வாங்க”, என்று அவள் கேட்க “சரி சரி போயிட்டு வா. ஆனா சீக்கிரம் வந்துறனும்”, என்று சொன்னதும் சந்தோஷமாக கிளம்பினாள்.

சேலை கட்டி அழகுத் தேர் என மண்டபத்துக்கு வந்தவளைக் கண்டு மூச்சு விட மறந்தான் மதன். காதலைச் சொன்ன பிறகு தினமும் அவர்கள் போனில் தான் குடும்பம் நடத்துகிறார்கள். அதுவும் காதலை வீட்டினரிடம் சொல்லி விட்டான் என்பதில் இருந்து அவன் மேல் உயிராகிப் போனாள் மைதிலி.

இரவெல்லாம் அவர்கள் பேச்சு சரளமாக இருக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை அழைத்து விடுவான். அதுவும் அவள் படும் துயரத்தை எல்லாம் கேட்கும் போது அவளை உடனடியாக அழைத்து வர வேண்டும் போல இருக்கும். அவளை வேறு ஏதாவது பேசி டைவர்ட் செய்து விடுவான்.

அவனால் மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இருவராலும் நேரில் இது வரை சந்திக்க முடிந்ததில்லை. வீடியோ காலைத் தவிர்த்து விட்டால் இது தான் அவர்களது இரண்டாவது சந்திப்பு.

வாசலில் நின்ற அவனைக் கண்ட மைதிலிக்கு நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது போல ஒரு உணர்வு. அவன் பார்வையைக் கண்டு அவள் முகம் சிவந்து போனது. எல்லாரும் மண்டபம் உள்ளே இருந்ததால் வெளியே யாருமே இல்லை. அதனால் விழுங்கி விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னவன் முன் சேலையில் நிற்பது ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது என்றால் அவன் பார்வை அவளையே கிறங்க வைத்தது. கால்கள் பின்ன தயக்கத்துடன் அவனை நெருங்கி வந்தாள் மைதிலி.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!