Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 8 2

வெண்ணிலாவும், மைதிலியின் போன் பேச்சும் இல்லாமல் போயிருந்தால் சுஜி கட்டாயம் மூச்சு முட்டி செத்துப் போயிருப்பாள்.

சமையல் வேலைக்கு பிறகு, அன்னம் இல்லாததால் அனைவரின் துணியையும் துவைக்கும் வேலையும் சுஜியிடம் தான் வந்தது. அதுவும் ரேணுகா மகேஷ் துணியும் அவள் துவைக்க வேண்டிய நிலை வர வீட்டில் அண்ணன் தம்பி துணிகளைக் கூட துவைக்காதவளுக்கு ரொம்பவே மனது வலித்தது.



Advertisement

வெண்ணிலா அதைக் கேட்க போகிறேன் என்று மல்லுக்கு நிற்க “விடு வெண்ணிலா”, என்று தடுத்து விட்டாள் சுஜி.

Advertisement

ஆனால் அவள் தன்னுடைய துணியை துவைப்பது மகேஷ்க்கு விருப்பம் இல்லை தான். நானே துவைத்துக் கொள்வேன் என்று அவன் சொன்னாலும் ரேணுகாவும் மல்லிகாவும் வேண்டும் என்றே அவன் துணியையும் சுஜி தான் துவைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

Advertisement

அதை அப்படியே வெண்ணிலா புவியிடம் சொல்ல அவன் தங்கையிடம் எரிந்து விழுந்தான். “வாஷிங் மிசினில் போட்டு எடுக்குறதுல என்ன கஷ்டம்? முடிஞ்சா இங்க இருக்கச் சொல்லு. இல்லைன்னா போகச் சொல்லு”, என்று அவன் சொல்ல அதற்கு பிறகு வெண்ணிலா அண்ணனிடம் எதுவும் சொல்வதில்லை. சொல்லி பயனில்லை என்று முடிவெடுத்து விட்டாள்.

Advertisement

ஆனால் வீட்டில் நடப்பதை அவள் பரணியிடம் புலம்ப அதை பரணி புவியிடம் கேட்பான். ஆனால் அவனிடம் இருந்து பதிலே வராது. உண்மையிலே அவனுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. எப்படியாவது இங்கிருந்து தன்னுடைய வாழ்க்கையை விட்டுப் போய் வேறு ஒரு வாழ்க்கையை அவள் ஏற்படுத்திக் கொள்ள மாட்டாளா என்று தான் ஆசைப் பட்டான்.

சுஜியாக வந்து அவனிடம் உங்க வீட்டில் இப்படி நடக்கிறது என்று சொன்னால் பெரிய சண்டையை இழுத்து அவளை இங்கிருந்து அனுப்பும் பிளானில் தான் இருந்தான். ஆனால் இது வரை சுஜி அவனிடம் ஒரு குறை கூட சொன்னது கிடையாது.

சுஜியின் நிலை அங்கே கொடுமையானது என்றால் புவியின் நிலையும் கொஞ்சம் பரிதாபம் தான். அவனால் சட்டென்று அவளுடன் ஒன்ற முடியவில்லை. இத்தனை நாள் தான் மட்டும் இருந்த அறையில் அவள் இருப்பது அவனுக்கு என்னவோ போல இருந்தது.

பள்ளிக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை சைட் அடித்திருந்தால், இல்லை உடன் படிக்கும் பெண்களிடம் நட்பாக பேசி இருந்தால் அவனுக்கு இந்த தயக்கம் வந்திருக்காதோ என்னவோ? அவன் பன்னிரெண்டு வரை படித்திருக்கிறான் என்று வீட்டில் சொன்னது கூட பொய் தான். அவன் படித்தது ஏழோ எட்டோ தான்.

அவனுக்கு தெரிந்த பெண்கள் என்றால் அவன் அன்னை மல்லிகா, அவன் தங்கைகள் வெண்ணிலா மற்றும் ரோஹினி தான். ரேணுகாவை கூட அவனுக்கு அதிகம் பழக்கம் இல்லை. அதனால் சுஜி தன்னுடன் இருப்பது அவனுக்கு சிறு சங்கடத்தை தான் கொடுத்தது. அவள் எப்படியாவது அங்கிருந்து போக வேண்டும் என்று தான் அவன் எதிர் பார்த்தான். அதனால் தான் அவளுக்கு என்ன அநியாயம் நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்தான்.

இப்படியே மூன்று மாதம் கடந்திருந்தது. தாமரை இலை தண்ணீர் போல அவர்கள் வாழ்க்கை இருந்தது. ஆனால் சுஜி இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று எண்ணிய புவி இப்போது அவள் போகக் கூடாது என்று நினைத்தான். அந்த அளவுக்கு அவனுக்கு அமைதியைக் கொடுத்தாள் சுஜி.

அவன் துணிகளை துவைப்பதாகட்டும், அவனுக்கு பிடித்த சமையல் செய்வதாகட்டும் அவள் செய்கைகள் அவனுக்கு பிடித்திருந்தது. அவர்களின் அறையில் கூட அவள் இருப்பு அவனுக்கு பழகி விட்டது. அவளிடம் எதுவும் பேச வில்லை என்றாலும் அவள் உடன் இருப்பதே புவிக்கு சிறு சந்தோஷத்தை தந்தது.

அவளது வாசனையும், அவளது கொலுசொலியும், கட்டிலில் மற்றொரு ஓரத்தில் அவள் படுத்திருக்கும் போது கிடைக்கும் அவள் அருகாமையும் இப்போதெல்லாம் அவனுக்கு பிடித்திருந்தது. இத்தனைக்கும் அவனுடைய உள்ளாடைகள் முதற்கொண்டு அவள் தான் துவைத்துப் போடுகிறாள். ஆனால் இன்னும் புவி அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை.

இப்போதெல்லாம் அந்த சூழலுக்கு அவள் பழகிக் கொண்டாள். மூன்று மாதம் முடிந்து நான்காம் மாதம் ஆரம்பிக்கும் போது ஒரு நாள் மாலை தன்னுடைய அறையில் இருந்தாள் சுஜி. மாலை ஆறு மணி ஆனதும் எப்போதும் சாமிக்கு தீபம் ஏற்றி விடுவாள். அன்று தலைக்கு குளித்திருந்ததால் அவள் சாமி அறைப் பக்கம் செல்ல வில்லை.

அதைக் கண்ட மல்லிகா “கல்யாணம் முடிஞ்சு மாசம் மூணாகுது. இன்னும் தலைக்கு ஊத்திட்டு இருந்தா நல்லாவா இருக்கு? என் பேரன் பேத்திகளை எல்லாம் பாக்க முடியாதா? சீக்காளியை என் மகனுக்கு கட்டி வச்சிட்டியா?”, என்று வெண்ணிலாவிடம் கேட்டாள். அதைக் கேட்டு சுஜிக்கு அவமானமாக இருந்தது.

மல்லிகா கேட்ட முறை தவறாக இருந்தாலும் அவள் கேட்ட கேள்வி சரி தானே? திருமணம் ஆன பெண்ணிடம் அனைவரும் கேட்கும் விஷயம் தானே? அவளுடைய அன்னை சுந்தரி கூட அதை தானே மாதம் மாதம் கேட்கிறாள். ஆனால் தன்னுடைய நிழலைக் கூட தொடாத கணவன் இருக்கும் போது எப்படி அவளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்? பார்வையாலே குழந்தை வரம் கிடைக்க அவன் என்ன குந்தி தேவியா?

மல்லிகா சொன்னதைக் கேட்டு கொதித்துப் போன வெண்ணிலா தோழிக்காக பேசப் போக அவளை கண்களால் கெஞ்சினாள் சுஜி. ஏனென்றால் இது சண்டை போடும் விஷயம் இல்லை. வீட்டில் தான் மகேஷும் ரேணுகாவும் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் இப்படி ஒரு வாக்குவாதம் நடப்பதில் சுஜிக்கு உடன்பாடில்லை.

அவள் மன உணர்வு புரியாத வெண்ணிலாவோ “அம்மா நீ ரொம்ப ஓவரா பேசுற? எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு சொல்லிட்டேன். கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் ஆனதை பெருசா சொல்ற? ரேணுகா கல்யாணம் முடிஞ்சு வந்து எவ்வளவு வருஷம் ஆகுது. உன் மக ரோஹினிக்கும் கல்யாணம் முடிஞ்சு ஏழு மாசம் ஆகுது. அவங்கல்லாம் சும்மா தானே இருக்காங்க. அப்புறம் எதுக்கு சுஜியை மட்டும் குறை சொல்ற? சும்மா வம்பு பண்ணணும்னு பேசாத மா”, என்று சொல்லி அம்மாவை அடக்கிய வெண்ணிலா சுஜியை அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்தாள்.

சுஜி கண்கள் கலங்கிய படி நிற்க “என்ன டி இதெல்லாம்? ஏதாவது பிரச்சனையா? எல்லாம் ஓகே தானே?”, என்று கேட்டாள் வெண்ணிலா.

ஏனென்றால் திருமணம் முடிந்து இத்தனை மாதங்களில் புவியும் அவளும் ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள் என்று தான் எண்ணியிருந்தாள் வெண்ணிலா. அப்படி ஒன்றாக இருந்தும் குழந்தை உருவாக வில்லை என்றால் உடலில் எதுவும் பிரச்சனையோ என்று எண்ணி தான் அவள் கேட்டது..

வெண்ணிலா அப்படிக் கேட்டதும் “எதுவுமே சரியாகலை டி. எல்லாம் அப்படியே தான் இருக்கு”, என்று கசப்புடன் சொன்னாள் சுஜி.

“என்ன சொல்ற நீ”

“என்ன சொல்ல? இப்பவும் உங்க அண்ணாவும் நானும் தனித் தனி தான். அப்புறம் எப்படி குழந்தை… எனக்கு என்ன பண்ணன்னு தெரியலை”, என்று சிறு சலிப்புடன் சொல்ல அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ரேணுகா அப்படியே ஓடி வந்து மல்லிகா அருகில் நின்றாள்.

“சுஜி அப்படின்னா இன்னும் அண்ணா அப்படி தான் இருக்கானா? நீயாவது அவனை நெருங்கிப் போகக் கூடாதா டி? அட்லீஸ்ட் பேசவாது செய்யலாம்ல”, என்று கேட்டாள் வெண்ணிலா.

“அவங்க என் முகம் பாத்து பேசினா புருசனுக்காக நான் இறங்கிப் போவேன் டி. அந்த ரூம்ல இருக்குற ஏதோ ஒரு பொருள் மாதிரி அவர் என்னைப் பாக்கும் போது நானா எப்படி அவரை நெருங்க முடியும்? அதுவும் இல்லாம நான் அவரை நெருங்கி.. அவர் ஏதாவது தப்பா சொல்லிட்டா அடுத்த நிமிஷம் என்னால உயிரோடவே இருக்க முடியாது”, என்று சொல்ல தோழியின் நிலைமையும் புரிந்தது. இந்த விசயத்தில் ஒரு பெண்ணாக அவள் என்ன செய்ய முடியும்? தோழியை எப்படி சமாதானப் படுத்த என்று தெரியாமல் விழித்தாள் வெண்ணிலா.

அப்போது “என்ன ரேணு இப்படி ஓடி வர?”, என்று கேட்டாள் மல்லிகா.

“அத்தை ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”

“என்ன ரேணு?”

“இவ்வளவு நாள் வரைக்கும் சுஜியும் புவி அத்தானும் வாழவே இல்லையாம். ரெண்டு பேரும் தனித் தனியா தான் இருக்காங்களாம். என்னன்னு கேளுங்க”, என்று பற்ற வைத்தாள்.

“என்ன சொல்ற நீ?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டாள் மல்லிகா.

“ஆமா அத்தை, ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வாழலை. அவளைக் கூப்பிட்டு என்னன்னு கேளுங்க”

“ஏய் சுஜிதா இங்க வாடி”, என்று அழைத்தாள் மல்லிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!