Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 7 1

அத்தியாயம் –7

அத்தனையும் சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டாலும் அதன் தாக்கம் சாகும் வரை இருக்கும் அல்லவா? கல்யாணம் ஆகி இந்த பத்து வருடங்களில் சுந்தரும் மல்லியும் ஒரு சண்டை கூட போட்டதில்லை. அப்படி இருக்க இந்த அளவுக்கு சுந்தர் மல்லியை மோசமாக நடத்த யார் அல்லது எது காரணம்?

எதுவாக அல்லது யாராக இருந்தாலும் சுந்தர், மல்லியின் திருமண வாழ்க்கையை இது புரட்டி போட்டது.

மல்லி விழுந்த வேகத்தில் அதிர்ச்சியில் மயங்கி விட்டாள். சுந்தர் வாசல் கதவை சாத்தி விட்டு நேராக தன் அறைக்கு போய் அங்கும் கதவை சாத்திக்கொண்டான். அவன் இருந்த மனநிலையில் யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. தலையைப்பிடித்து கொண்டு அமர்ந்தவன் அதுவும் முடியாமல் போக சற்று நேரம் வேக வேகமாக அங்கும் இங்கும் உலவினான். அதுவும் அமைதி தராமல் அவனுக்கு மண்டை வெடித்து விடும் போல இருக்க தன் கைப்பையில் இருந்து மது பாட்டிலை கையில் எடுத்தான்.



Advertisement

சில நாட்களாக அவன் மனஅழுத்தத்திற்கு அது தானே மருந்தாக இருக்கிறது? தன்னை மறக்க அதை குடிக்க ஆரம்பிக்க இந்த உலகமே அவனுக்கு மறந்து போனது.மனதில் இருந்த அழுத்தம் எல்லாம் மதுவின் மயக்கத்தில் மங்கிப்போக அந்த மயக்கத்திலேயே உறங்கிப் போனான்.

சுந்தர் மல்லியை வெளியே தள்ளி வாசல் கதவை சாத்துவதை குரூர திருப்தியுடன் பார்த்துக் கொண்டு இருந்தவர் சுந்தர் தன் அறைக்கு போய் கதவைத் தாளிடவும் வேகமாக போய் வாசல் கதவைத் தாளிட்டார்.

ப்ரியா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவே நடந்த சண்டையில் மிரண்டு போய் இருந்தாள். இப்போது அம்மா வேண்டும் போல் இருக்க வாசல் அருகே போய் கதவைத் திறக்க முயல காமாட்சி அவளை தடுத்தார்.

Advertisement

பிரியா அவர் செய்வதை பார்த்து அழுகையுடன்  “பாட்டி! ஏன் பாட்டி கதவை பூட்டறீங்க? அம்மா வெளிய இருக்காங்க..கதவைத் திறங்க பாட்டி…எனக்கு அம்மா கிட்ட போகணும்…திறங்க பாட்டி….!” என்று கதவைத் திறக்க முயல காமாட்சி  அவள் கையைப் பிடித்துக்கொண்டு “அம்மா சரியில்லை என்று அப்பா தானே அம்மாவை வெளிய தள்ளினான்? இப்ப நீ போய் கதவைத் திறந்தா உன்னையும் அடிச்சி வெளிய தள்ளிடுவான்..போ போய் பேசாம தூங்கு….!” என்று பயமுறுத்தினார்.

Advertisement

               காமாட்சியுமே கூட சண்டை இந்த அளவுக்கு போகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் எப்போது அவருக்கும் மல்லிக்கும் விரிசல் விழுந்ததோ இனி அவரைப் பொறுத்தவரை அவள் தேவையில்லை. மல்லி சுஷ்மிதா பற்றி சொன்னதெல்லாம் அவர் காதில் விழுந்தாலும் அதைப்பற்றி அவருக்கு ஒன்றும் இல்லை.

               மகன் செய்தது தப்பு என்று தட்டிக்கேட்டால் தான் அந்த வீட்டில் இருக்க முடியாது. தெருவில் தான் இருக்க வேண்டும் என்று மனசாட்சியை கொன்று விட்டார். அவர் கணவரும் எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாக இருந்தாரே தவிர எதையும் தட்டிக் கேட்கவில்லை.

               “பயமா இருக்கு பாட்டி…! அம்மா வேணும்…!”

Advertisement

ப்ரியா உதடு பிதுக்கி விசும்ப “பேசாம இப்ப பாட்டி மடியில படுத்து தூங்கு. இல்ல உங்க அப்பன் வந்தா உன்னையும் அடிப்பான்…” என்று காமாட்சி மிரட்டினாலும் அப்போதும் ப்ரியாவுக்கு அம்மா ஞாபகம் தான்.

“அம்மா பாவம்…அம்மா கிட்ட போகணும்..அம்மா கிட்ட…”ப்ரியா விசும்பியபடி அப்பா இருந்த அறையை ஏக்கத்துடன் பார்க்க காமாட்சி அதட்டி உருட்டி அவளைத் தூங்க வைத்தார்.

வாசலில் விழுந்து கிடந்த மல்லிக்கு சில நிமிடங்களில் சுய உணர்வு வர மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் எட்டிப்பார்த்த போதும் யாரும் வரவில்லை. மல்லியும் சரி சுந்தரும் சரி அதிகம் மற்றவர்களோடு பேசியதில்லை. சுந்தர் அதை விரும்பவில்லை என்று மல்லி எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொள்வாள்.

அதனால் யாரும் நெருங்கிய பழக்கம் இல்லை. மல்லி மூடியிருந்த கதவைப் பார்த்து கசப்பாக புன்னகைத்தாள்.

கோபத்தில் சுந்தர் வெளியே தள்ள அவளுக்கு என்ன ஆனது என்று அதன் பிறகு யாருமே எட்டிப் பார்க்கவில்லை. மூடியது கதவுகள் மட்டும் அல்ல அவர்கள் மனங்களும் தான்.

மூடியிருந்த கதவைத் தட்டி மறுபடி தனக்கு வாழ்க்கை கேட்க அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அங்கே உட்காரக் கூட பிடிக்காமல் தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்தாள். சுந்தர் அடித்த இடம் ஒரு பக்கம் விண்விண்ணென்று தெறிக்க விழுந்த வேகத்தில் நெற்றியில் பட்ட அடியும் சேர்த்து அதுவும் வலிக்க அதை விட மனம் அதிகம் வலித்தது.

மெல்ல எழுந்து வாசல் கேட்டுக்கு அருகே வர “ஹே வல்லி! என்ற குரலோடு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.

அதில் டிரைவர் இருக்கையில் இருந்தவளைப் பார்த்ததும் தான் மல்லிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தாங்கள் பேசிக் கொண்டது ஞாபகம் வந்தது.

காரில் இருந்து இறங்கிய வேம்பு சாவித்திரி மல்லிக்கு பள்ளியில் நெருங்கிய தோழி. கஷ்டப்படும் குடும்பம். அப்பா விவசாய கூலியாக மல்லியின் தோட்டத்தில் வேலை பார்த்தார். அவள் பெற்றோர் பையன் பிறக்க முயன்று வரிசையாக ஆறும் பெண்களாக பிறக்க வெறுத்துப்போய் ஆறாவது பெண்ணான அவளுக்கு வேம்பு என்ற அடைமொழி சேர்த்து சாவித்திரி என்று பெயர் வைத்தார்.

சிறு வயது முதல் இருவரும் ஒன்றாக படித்ததால் அந்தஸ்து வித்தியாசம் இல்லாமல் இருவரிடமும் நெருக்கமான நட்பு இருந்தது. பல நேரங்களில் மல்லி சாவித்திரிக்கு சாப்பாடு, படிப்புக்கு தேவையான பேனா, பென்சில், நோட்டு என அவளால் முடிந்த அளவு உதவி இருக்கிறாள். அதில் சாவித்திரி டீச்சரிடம் அடி வாங்காமல் பல முறை தப்பிக்க மல்லி மேல் அவளுக்கு அளவு கடந்த பிரியம்.

அதோடு அவளின் குடும்ப சூழலில் படிக்க முடியாது போய் விடுமோ என்று பயந்த போதெல்லாம் அவளுக்கு தைரியம் கொடுத்தது மல்லி தான்.

கடைசியாக பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு பணம் கட்ட முடியாமல் சாவித்திரி தவித்த போது தான் வைத்திருந்த உண்டியலை உடைத்து அவளுக்கு பணம் கொடுத்தது மல்லி தான்.சுந்தரை மல்லி காதலித்த போது அவர்கள் காதலைப் பற்றி தெரிந்த ஒரே ஆள் சாவித்திரி மட்டுமே.

மல்லி சென்னை வந்ததும் இருவருக்கும் தொடர்பு இல்லாமல் போனது. சுந்தர் மல்லியை முகநூலில் சேர்த்து விட தற்செயலாக சில நாட்களுக்கு முன் அவள் புகைப்படத்தைப் பார்த்து கண்டுபிடித்தது சாவித்திரி தான்.

சாவித்திரி பனிரண்டாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடிக்க அரசு பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியலில் சேர்ந்தாள். அங்கும் நன்கு படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல வேலை கிடைக்க ஏழு ஆண்டுகள் கடுமையாக உழைத்து அக்காக்கள் அனைவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தாள்.

சென்னையில் வீடு பார்த்து பெற்றவர்களையும் கூட கூட்டிக்கொண்டு வந்து வைத்திருந்தாள். அவள் பொறுப்புகள் எல்லாம் முடித்து விட்டதால் அவள் சிறு வயது கனவான சொந்த தொழில் தொடங்கும் ஆசையில் ஆறு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு விட்டு சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்று தொடங்கி இருந்தாள்.

சொந்தமாக இணைய வர்த்தகம் செய்ய விரும்புவோருக்கு வெப்சைட் வடிவமைத்துக் கொடுப்பது அதில் முக்கியமான வேலை. அவளோடு பொறியியல் படித்து விட்டு மேலே எம்பிஏ படித்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ராஜன் அவளோடு பார்ட்னராக சேர்ந்திருந்தான்.

ராஜனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே சாவித்திரியை மிகவும் பிடிக்கும். அவளது கடும் உழைப்பு, துணிவு,குடும்பத்தின் மேல் அவள் வைத்த பாசம் எல்லாம் பார்த்தவனுக்கு அவளை அவள் இயல்புக்காகவே மிகவும் பிடித்திருந்தது.

ஒரு முறை துணிந்து அவளிடம் தன் காதலை சொல்லியும் விட்டான். ஆனால் சாவித்திரி தன் குடும்பத்தை காரணம் காட்டி மறுத்து விட்டாள். அவனிடம் எப்போதுமே அவளுக்கு காதல் தோன்றியதில்லை என்று சொன்னவளை வெறுப்பதற்கு பதில் அவனுக்கு இன்னும் பிடித்துப் போனது.

அதனால் அவனுக்கு கிடைத்த பல நல்ல வேலைகளை ஒதுக்கி விட்டு அவள் தொழில் தொடங்கிய போது அவளோடு தொழிலில் இணைந்து இருந்தான். வாழ்க்கையில் தான் இணைய முடியவில்லை. தொழிலிலாவது அவளோடு இணைந்து இருக்கும் ஆசை அவனுக்கு.

சாவித்திரியின் இந்த பத்து வருட வாழ்க்கையில் இவ்வளவு நடந்திருக்க அதெல்லாம் படிப்பை பாதியில் நிறுத்திய மல்லிக்கு தெரியாதே?

இப்போது முகநூலில் அவளைக் கண்டு பிடிதததும் சாவித்திரி அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தான் யார் என்று சொல்ல தோழிகள் இருவரும் செல் பேசி எண்களை பரிமாறிக்கொண்டு அன்றே பேசினர்.

பல வருடங்கள் கழித்து தோழிகள் பேசியதில் இரண்டு மணி நேரம் போதாமல் போனது. சாவித்திரியே அவளை இன்று மாலை பார்க்க வருவதாக சொல்ல மல்லி நேற்றில் இருந்து அவள் வாழ்வில் நடந்த திருப்புமுனை சம்பவங்களில் அதை முற்றிலும் மறந்து விட்டாள்.

மல்லியை தேடி வந்தவளுக்கு மல்லி வாசலிலேயே நிற்பதை பார்த்து குஷியாகி விட “ஏய் வல்லி!” என்று சந்தோஷமாக அழைத்தபடி காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓடி வந்தாள்.

கிட்டே நெருங்கி வந்ததும் தான் மல்லியின் கன்னத்தில் கை விரல்களின் தடமும் நெற்றியில் விழுந்ததால் பட்ட அடியும் தெரிய “ஏய் வல்லி! என்னடி ஆச்சு? கீழே விழுந்திட்டியா? அண்ணா எங்க? உன்னை பார்க்காம என்ன பண்ணிட்டு இருக்கார்? கன்னத்தில யாரோ அடிச்ச மாதிரி இருக்கு? சொல்லுடி! என்ன ஆச்சு…?” என்று பதறிப்போய் கேட்டாள் சாவித்திரி.

“இதுக்கெல்லாம் காரணமே உங்க அண்ணா தான்…அடிச்சதும் இல்லாம கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளி கதவைப்பூட்டிட்டு உள்ள போயிட்டாரு…” என்று மல்லி சோக முறுவல் புரிய சாவித்திரி பொங்கி விட்டாள்.

“என்னடி சொல்றே? இரு இப்பவே போய் அண்ணா கிட்ட நான் கேக்கறேன். உனக்கு கேக்க ஆள் இல்லை என்று நினைச்சிட்டாரோ? நான் கேக்க்றேண்டி! என்ன பிரச்சனையா இருந்தாலும் இப்படியா அடிக்கிறது…?”

உணர்ச்சிவசத்தில் சாவித்திரியின் குரல் உயர அக்கம்பக்கம் வீட்டில் ஜன்னல் வழியே தலைகள் தெரிந்தன.

“ஏண்டி உன்னை அடிச்சு வெளிய தள்ளி இருக்காரு. இவங்க யாரும் என்னன்னே வந்து கேக்கலியா? என்ன மனுஷங்கடி இவங்க..? வம்புக்கு மட்டும் அலைஞ்சிட்டு எட்டிப் பார்க்கரதைப் பாரு…”

சாவித்திரி சத்தமாகவே பேச எல்லோர் தலையும் டக்கென்று மறைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!