Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 8 2

அவள் நம்பிய இரண்டு ஆண்களின் மற்றொரு முகத்தை தெரிந்து கொண்ட உமாவின் மனது இந்த உலக வாழ்வையே வெறுக்க வைத்திருந்தது. அவளுக்கு வாழ வேண்டும் என்று ஒரு சதவீதம் கூட ஆசை இல்லாமல் போனதின் விளைவு தான் இது என்று யாருக்கும் புரிய வில்லை.

“என்னங்க ஏதாவது செய்ங்க, இப்படியே விட்டா செத்துருவாங்க”, என்று கோதை சொல்ல “என்னை என்ன பண்ணச் சொல்ற? ஏதாவது சொன்னா புரிஞ்சிக்கலாம். ஒண்ணுமே பேசலைன்னா என்ன செய்ய? என் கூட வாங்க. கடைசியா அவ கிட்டயே கேட்டுப் பாக்கலாம்”, என்று சொல்லி அவள் அறைக்குச் சென்றார். மற்றவர்களும் சென்றார்கள்.



Advertisement

அவர்கள் போன போது சுருண்டு போய் படுத்திருந்தாள் உமா. அவள் வயிறு எல்லாம் ஒட்டிப் போய் இருந்தது.

“பாப்பா இங்க பாரு டா, எங்க மேல என்ன கோபம்னாலும் அதை சாப்பாடுல காட்டாதே டா”, என்று அவர் சொல்ல அவளிடம் இருந்து பதிலே இல்லை.

Advertisement

Advertisement

“இப்ப என்ன அந்த பையனை உனக்கு பிடிச்சிருக்கா? நான் போய் அவன் கிட்ட பேசுறேன். அவனுக்கே உன்னைக் கட்டி வைக்கிறேன்”, என்று அவர் சொல்ல “வேண்டாம்”, என்று ஈனசுரமாக முணங்கினாள். அதை விட அவளுக்கு அவமானம் வேறு இல்லையே?

“ஏன் மா, அவனை நீ விரும்புற தானே?”, என்று அவர் கேட்க “இல்லை… எனக்கு யாரும் வேண்டாம். பிளீஸ் எல்லாரும் வெளிய போங்க”, என்று சொன்னாள்.

Advertisement

“என்னப்பா இவ இப்படிச் சொல்றா? அவனை லவ் பண்ணுறான்னு தான் நினைச்சேன்”, என்றான் அருண்.

“எனக்கும் ஒண்ணும் புரியலை டா. அந்த ஸ்டூடியோ எங்க இருக்கு? காரை எடு. போய்ப் பேசிப் பாப்போம் அந்த பையன் கிட்ட”, என்று அவர் சொல்ல அவரையும் அழைத்துச் சென்றான் அருண்.

கடைக்கு வந்த அவர்களைக் கண்டு திகைத்துப் போனான் சிவன். வாங்க என்றும் சொல்ல வில்லை. ஏன் வந்தீங்க என்றும் கேட்க வில்லை. அமைதியாக நின்றான். ஆனால் ராதாகிருஷ்ணன் மேல் உள்ளுக்குள் கோபமாக வந்தது.

அவர்களாவே உள்ளே வந்து அங்கிருந்த சேரில் அமர்ந்து அவனைப் பார்த்தார்கள். அவர் அமைதியாக இருக்க “உனக்கும் என் தங்கச்சிக்கும் என்ன சம்பந்தம்?”, என்று கேட்டான் அருண்.

அதைக் கேட்டு புருவம் உயர்த்தியவன் “எனக்கு உங்க தங்கச்சி யாருன்னே தெரியாது”, என்றான்.

“ஏய் உமாவை உனக்கு தெரியாது?”

“ஓ உமா தான் உங்க தங்கச்சியா? நான் கூட வேற யாரோ தான் உங்க தங்கச்சியோன்னு நினைச்சேன்?”, என்று நக்கலாக உரைத்தான். அவன் நக்கலில் ஏதோ மறைபொருள் உள்ளது போல ராதாகிருஷ்ணனுக்கு தோன்றியது. ஆனால் அவருக்கும் புரிய வில்லை.

“என்ன டா நக்கலா? இந்த கடையை ஒண்ணும் இல்லாம செஞ்சிருவேன். பாக்குறியா?”, என்று கோபமாக கேட்டான் அருண்.

“செய் டா, செய். நான் பீனிக்ஸ் பறவை மாதிரி டா. திருப்பி என் வாழ்க்கையை எப்படி மாத்திக்கணும்னு எனக்கு தெரியும். பிள்ளைகளை நல்ல படியா வளக்க துப்பில்லை. இங்க வந்து பேசிக்கிட்டு?”, என்று இரு பொருள் பட பேசினான் சிவன்.

“தம்பி நாங்க இப்ப பிரச்சனை பண்ண வரலை”, என்றார் ராதாகிருஷ்ணன்.

“என்ன காரணத்துனாலயும் என்னை தேடி எதுக்கு வரணும்?”, என்று அவன் கோபமாக கேட்க “நீ உமாவை ஏதாவது சொன்னியா?”, என்று கேட்டார் அவர்.

“கடைக்கு திருப்பி திருப்பி வந்தா, வராதேன்னு சொன்னேன்”, என்றான் சிவன்.

“வேற என்ன சொன்ன?”

“அதை அவ கிட்ட கேளுங்க”

“அவ சொல்ல மாட்டிக்கா பா”

“அதுக்கு நான் என்ன பண்ணனும்?”, என்று அவன் திமிராக கேட்க அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என்று தெரியாமல் அருணை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

மகள் சரியாக இல்லாத போது அவனைச் சொல்லி என்ன செய்ய என்பது தான் அவரது எண்ணம்.

மீண்டும் இரண்டு நாட்களும் அப்படியே கடக்க ஏனோ அன்று ராதாகிருஷ்ணனுக்கு மனதுக்கு என்னவோ போல இருந்தது. அவசரமாக மகளின் அறைக் கதவை தட்டினார்.

எப்போதும் யாராவது வந்து கதவைத் தட்டினால் திறப்பாள். ஆனால் பேச மாட்டாள். ஆனால் இன்று திறக்கவே இல்லை என்றதும் அவருக்கு பயம் வந்தது.

உடனே அருணை அழைத்து கதவை உடைக்க வைத்தார்கள். அவள் எப்போதும் போல தான் சுருண்டு படுத்திருந்தாள். “உமா”, என்ற படி அவர் அவளை நெருங்க அவளிடம் எந்த அசைவும் இல்லை என்றதும் பயம் தொற்றிக் கொண்டது.

அருகில் சென்று அவளை உலுக்க அவளோ மயக்கத்தில் இருந்தாள். அதைக் கூட அவள் மூச்சை வைத்து தான் கண்டு கொண்டார்கள்.

“டேய் அருண், பாப்பா மயங்கிட்டா டா. காரை எடு”, என்று சொல்ல அடுத்த கால் மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள் உமா.

உள்ளே அவளுக்கு தீவிர சிகிச்சை மேற்க்கொள்ளப் பட்டது. அதே மருத்துவமனைக்கு தான் கண்மணியை செக்கப்க்காக அழைத்துக் கொண்டு வந்திருந்தான் சிவன்.

ஐ.சி.யு வெளியே இருந்த அனைவரையும் பார்த்து அவனுக்கு திகைப்பு தான். “யாருக்கு என்ன ஆச்சு? ஒரு வேளை உமாவுக்கு…”, என்ற பதட்டம் வந்தது சிவனுக்கு.

கண்மணிக்கு ஸ்கேன் எழுதிக் கொடுத்திருக்க அவளை அழைத்துச் சென்றவனின் மனம் முழுவதும் உமாவை நினைத்து பரபரப்பாகவே இருந்தது.

ஸ்கேன் எடுக்க பெரிய கூட்டமே இருக்க “கண்மணி இங்க உக்காந்துருக்கியா? நான் கொஞ்ச நேரத்துல வரேன்”, என்றான்.

“சரி சிவா, நீ போயிட்டு வா”, என்று அவள் சொன்னதும் அவசரமாக ஐ.சி.யுக்கு வந்தான்.

அங்கே டாக்டர் அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. அப்போது யாரோ வரும் அரவம் கேட்க சற்று மறைவில் நின்று கொண்டான்.

“என்ன ஆச்சு டா உமாவுக்கு? இந்த நிலைமைக்கு அவளை ஆக்கி வச்சிருக்கீங்க?”, என்று கேட்டார் மருத்துவர்.

“என்னன்னு ஒண்ணுமே புரியலை. அவளுக்கு யார் மேல கோபம்னு தெரியலை. ஆனா அவளையே வதைச்சிக்கிறா. கடந்த இருபது நாளா ஒரு வேளைக்கு மட்டும் சாப்பிட்டுட்டு இருந்தவ இப்ப நாலஞ்சு நாளா தண்ணியை தவிர வேற எதுவுமே சாப்பிடலை. எவ்வளவோ கெஞ்சி பாத்துட்டோம். கேக்கலை. என் மேல உயிரா இருப்பா. இப்ப என் கிட்டயும் பேச மாட்டிக்கா. என்ன ஆச்சு ஏதாவது சீரியஸா?”, என்று கேட்டார் ராதாகிருஷ்ணன்.

“ஆமா கொஞ்சம் சீரியஸ் தான். உயிருக்கு ஒண்ணும் இல்லை. சரி அவளுக்கு என்ன பிரச்சனை? ஏதாவது லவ் எதுவும்….”

“அதையும் கேட்டோமே? அப்படி ஒண்ணுமே இல்லைன்னு சொல்றா. சந்தேகப் பட்டு ஒரு பையனைப் பத்தி கேட்டதுக்கு அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு தான் சொல்றா. போனை உடைச்சிட்டா. இந்த ஒரு மாசமா ஜெயில்ல இருக்குறதை விட கேவலமான வாழ்க்கையை தான் வாழ்ந்துட்டு இருந்தா”

“அவ மனசு பாதிக்கப் படுற மாதிரி ஏதோ நடந்துருக்கு. அது அவளை வாழவே வேண்டாம் அப்படிங்குற நிலைமைக்கு தள்ளிருச்சு. அந்த விரக்தில வந்த டிப்ரசன் தான் இது. வயித்துல உணவே இல்லாம குடல் எல்லாம் சுருங்கிப் போச்சு. அது மட்டுமில்லாம அதிகமான அமிலம் சுரந்து எல்லாமே அரிச்சிருக்கு. இப்ப அவளுக்கு சின்ன காரம் கூட ஒத்துக்காது. புண்ணு ஆற கொஞ்ச நாள் ஆகும். இப்ப டிரிப்ஸ் ஏறிட்டு இருக்கு. இப்ப பிரச்சனை இல்லை. ஆனாலும் கொஞ்ச நாள் கவனமா பாத்துக்கணும். நேரா நேரத்துக்கு அவளை சாப்பிட வைக்கணும். சத்தான ஆகாரம், ஜூஸ் எல்லாம் கொடுக்கணும். ஆனா நாம என்ன தான் சாப்பிடக் கொடுத்தாலும் அவள் குடல் சுருங்கிப் போனதுனால அவளால கொஞ்சம் தான் சாப்பிட முடியும். அவளைப் பழைய படி கொண்டு வரது கொஞ்சம் கஷ்டம் தான்”

“சரி நாங்க அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா?”

“ஒரு ரெண்டு நாள் இங்க இருக்கட்டும் ஆர்கே. கொஞ்சம் அவளுக்கு புண் ஆறனும். சரி ஐ. சி. யு முன்னாடி நிக்க வேண்டாம். மேல வாங்க. ரூம் அளாட் பண்ணுறேன்”

“இல்லை டா, உமா கண் விழிக்கட்டும்”

“அவ மெடிசன் கொடுத்ததுனால நல்லா தூங்குறா. அவ எந்திக்க இன்னும் நாலு மணி நேரம் ஆகும். நீங்க வாங்க”, என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றார்.

கோதையும் ராதாகிருஷ்ணனும் டாக்டருடன் சொல்ல அருண் மட்டும் அலுவலகத்துக்கு பேசுவதற்கு வெளியே சென்றான்.

அவர்கள் அனைவரும் போன பின்பு கண்ணாடி வழியே உமாவை எட்டிப் பார்த்த சிவன் அதிர்ந்து தான் போனான். அவன் கண்கள் கூட கலங்கிப் போனது.

எப்போதும் கண்களில் மின்னலுடனும் உதட்டில் புன்னகையுடனும் முகம் முழுக்க திமிரருடனும் வளைய வரும் உமா வா இது என்று அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கன்னம் எல்லாம் ஒட்டி கழுத்து எலும்புகள் தெரிய அவள் தோற்றம் அவனுக்கு திகைப்பைத் தந்தது. முன்பிருந்த அழகு இப்போது அவளிடம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!