Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கன்னத்தில் முத்தத்தின் ஈரம்

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் – 1 (2)

ஒற்றை குஷன் செய்யப்பட்ட சோஃபாவில் சட்டமாக அமர்ந்து, கொண்டு வந்திருந்த கிண்ணத்தை மேஜையில் வைத்தவன் அருகே இருந்த ரீமோட்டில் டீவியை உயிர்ப்பித்து அலைவரிசையை மாற்றிக்கொண்டே, அங்கு அவனுக்கு எதிரில் இருந்த கண்ணாடி ஜன்னல் இடைவெளி ஊடாக வெளியே சுபஷ்வினியுடன் சலசலத்துக் கொண்டிருக்கும் அவள் தோழிகளை நோட்டம் விட,

ஒருவழியாக அவள் அனைவரையும் அனுப்பி வைத்து உள்ளே நுழைந்ததும் முதலில் இவனை கண்டு ஆச்சரியமாக புருவங்களை உயர்த்தினாள்‌.

“மழை வர மாதிரி இருக்கேன்னு நினைச்சிட்டே வந்தேன், இப்பதான் தெரியுது ஏன்னு” என்றாள் கிண்டலாக.

“உன்கிட்ட யாரும் கேட்டாங்களா மழை வருதா, புயல் வருதான்னு… வர்றதெல்லாம் அதுபாட்டுக்கு வந்து போகட்டும். இந்தா, வக்கனையா வந்து கொட்டிக்கோ” என்று கிண்ணத்தை நகர்த்த,



Advertisement

“என்னது” என திறந்து பார்த்தவள் பலகாரங்களை கண்டதும் நாக்கை வழித்து சப்புக்கொட்டினாள்.

“தேவாம்மா குடுத்தனுப்பினாங்களா?” ஆசையாக கேட்டுக்கொண்டே ஒரு துண்டை உடைத்து வாயில் போட சென்றவளின் கையை வாய்க்கும் கைக்கும் மில்லி மீட்டர் இடைவெளியில் பிடித்துக்கொண்டவன் 

“ஏய், ச்சீய்! வெளியே போய்ட்டு வந்திருக்கேல்ல. போ போய் முகம், கை அலம்பி ட்ரெஸை மாத்திட்டு வாடி. அழுக்கு வண்டி” தள்ளி விட

Advertisement

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத சோகத்தில் ரமணாவை, முகத்தை சுழித்து முறைப்புடன் பார்த்தவாறே தங்கு தங்கென நிலம் அதிர தனதறைக்குள் நுழைந்து கதவடைத்தவள் அடுத்த சில நிமிடங்களில் உடை மாற்றி, வீட்டில் அணியும் சாதா பாவாடை சட்டையில் முகம் கழுவி ஓடோடி வந்தவள் கிண்ணத்தை வெடுக்கென அவனிடமிருந்து பிடுங்கி மற்றொரு இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து, சன் ம்யூசிக்கில் ஒலித்த பாடலுக்கேற்ப தலையசைத்து கொண்டே பலகாரங்களை முழுங்கினாள்.

Advertisement

அவளை பார்ப்பதும் டீவியை பார்ப்பதுமாக ரமணா, ஏதோ கேட்க வருவதும் தலை கோதி சமாளிப்பதுமாக தயங்கிக் கொண்டிருக்க,

அவனை குறு குறுவென பார்த்த சுபஷ்வினி ‘என்னத்தை மென்னு முழுங்கிறான்? சரி அவனே ஆறுதலா சொல்லட்டும்’ பூனைக்குட்டி வெளியே வர காத்திருக்க,

ஒரு கட்டத்துக்கு மேல் அவன் வாயே திறக்க மாட்டான் என புரிந்து கொண்டு “அதான் வாய் வரை வருதில்ல, சொல்ல வேண்டியது தானே. நாங்களா தான் கேட்டு தெரிஞ்சிக்கனுமோ…” என்றாள் முறைப்புடன் சுபஷ்வினி.

Advertisement

குறும்பாக ஒற்றை கண்ணை சிமிட்டியவன் “மாமன் ஒத்தைல இருக்கான், நம்ம ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தியை செட் பண்ணி குடுப்போம்னுலாம் உன் மரமண்டைக்கு தோனாதுல” என்றான் கிண்டலாக.

சுபஷ்வினி வாயை பிளந்து அவனை பார்க்க, “என்ன சொல்லிட்டேன்னு இப்போ, நீ, உன் முட்டை கண்ணை விரிச்சு பார்த்து வெக்கிறவ?” எனவும்

“நான் உன் அக்கா மகடா மாமா, முறையை மாத்த பார்க்கிறேல்ல நீ” என்றவளுக்கு பக்கென சிரிப்பு வந்துவிட

அவன் முறைப்பில் உதட்டில் அடக்கியவள் “சீரியஸா தான் கேக்கிறியா…” என்றவள்

“பின்ன எவனாவது இந்த மேட்டர்ல ஜோக்கடிப்பானாடி” என்றவன் சிடு சிடுப்பில் “சரி சரி முறைக்காத” கைகளை உயர்த்தி சமாதானம் செய்தவாறே நெற்றியை தட்டி யோசித்த சுபஷ்வினி, ரமணாவை உற்றுப் பார்த்தவள் இதழ் தன்னால் புன்னகைத்தது.

அவளுக்கு குடும்பத்தில் மற்றவர்களை காட்டினும் ஒரு ஆணாகவும் சரி மனிதனாகவும் சரி உடன்பிறவா சகோதரனாக, தோழனாக அனைத்து விதத்திலும் ரமணாவை மிக, மிக பிடிக்கும். அவன் குணமும் அவன் சுபாவமும் அன்போடும் சில சமயங்களில் கண்டிப்போடும் அனைவரையும் அரவணைத்து செல்வதில் அவனை அடித்துக்கொள்ள ஆளில்லை என்றே சொல்லலாம்.

அந்த வகையில் “இவளுங்க யாரும் உனக்கு செட்டாகாதுடா மாமா” என சிறு இடைவெளி விட்டு “என் ஃப்ரெண்ட் ஒருத்தி இருக்கா, அழகுன்னா அழகு அப்பிடி ஒரு அழகு. சாஃப்ட் நேச்சர், நானெல்லாம் பேசுறதுன்னா எப்பிடி பேசுவேன், அவ இருக்காளே காசை அள்ளி அள்ளி குடுத்தாலும் அளந்து அளந்து தான் பேசுவாள். ரொம்ப கைன்ட். உனக்கு செம்ம பர்ஃபெக்ட் பெயார்னா அது அவளா தான் இருக்கும்” என்றவள் சொல்லும் போதே இருவரையும் அருகருகில் வைத்து கற்பனை செய்து 

கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து ‘சூப்பர்! ஜோடி பொருத்தம்!’ சைகையால் அவனுக்குள்ளும் ஆசையை தட்டி எழுப்பினாள்.

“யாரு டி அது?” அதுவரை விளையாட்டு பாவனையில் இருந்தவன் முகம் மிக, மிக அழகாக ஆவலை கட்டுக்கடங்காமல் வெளிப்படுத்தியது.

“கண்டிப்பா சொல்லியாகனுமா”

“ஏய், கொல்ல போறேன். சொல்லுடி யார்ரி அது?” என்றான் பட படப்பை அடக்க முடியாமல்.

“ஃபோட்டோ இருக்கா அவளது ஏதும்?” என்றும் கூடுதலாக கேட்க,

அதுவரை இருந்த உற்சாகம் வடிந்து அங்கு குறும்பு வந்து குத்தகை எடுக்க, அவன் புறம் கையை நீட்டினாள்.

“என்னடி?” என அவன் கேட்பதற்காகவே காத்திருந்த சுபஷ்வினி

“லஞ்சம் குடு டா, கையை தட்டி விட்டேல்ல… உடனே சொல்லிட்டா என்றாகிறது” வேண்டுமென்றே கிண்டலாக கேட்டாள்.

“ஏய் வெளாடாதடி, இப்போ சொல்லப்போறியா இல்லையா” கோபமாக கேட்க நினைத்தவனால் என்ன முயன்றும் குரலில் அதைக் கொண்டு வரமுடியவில்லை. அவள், அந்தப் பெண், யாராக இருக்கும் என்னும் கற்பனையே அவனுக்குள் மிதமிஞ்சி இருந்தது. மனம் அப்போதே ‘என்னை தாலாட்ட வருவாளா’ வில் தஞ்சமடைந்து விட்டது.

“முதல குடு, அப்பறம் வந்து கேளு, சொல்லலாமா வேணாமான்னு யோசிப்போம்” என்றவள் கையை நீட்டிக் கொண்டே இருக்க, 

“எனக்கொரு சான்ஸ் வராமலாடி போகும், அப்போ பார்த்துக்கிறேன்” கறுவிக் கொண்டே பர்ஸில் இருந்து சில நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்ட,

பிடுங்காத குறையாக அதை  பறித்தெடுத்து பத்திரப்படுத்திக் கொண்டே எழுந்து கொண்டவள் “அதை அப்பறம் பார்ப்போம், இப்போ எனக்கு தலைக்கு மேல ஹோம் வெர்க் இருக்கு. நாளைக்கு சயின்ஸ்ல டெஸ்ட் வேற இருக்கு. படிக்கனும், நாளைக்கு பார்ப்போம்” என்றவள் அவன் கூப்பிட கூப்பிட காதிலே வாங்காதவளாக அறைக்குள் சென்று அடைந்து விட,

“ஏய் சுபி, அவன்தான் கூப்பிடறான்ல… காதிலே வாங்காம போகுது பாரு கழுத!” திட்டிக்கொண்டே அங்கு வந்த பாரதி,

“எப்போடா வந்த” அவனுக்கெதிரில் அமர,

“நான் கிளம்புற நேரமே ஆச்சு. நீ, எப்போ வந்தேங்கற” என எழுந்தவன் கிளம்பத் தயாராக, “வெளில வேலையா இருந்தேன்டா. ஒன்னுமே சாப்பிடாம போகாத, இரு காபியாவது குடிச்சிட்டு போ. நிமிஷத்தில் கொண்டாறேன்” கிட்சனுக்குள் செல்ல விளைய,

ரமணா “இரு இரு, அதெல்லாம் ஒன்னும் வேணாம். உன் மக கொடுத்ததே வயிறும் மனசும் நிறைஞ்சு போச்சு. நான் நாளைக்கு வரேன்னு மட்டும் அவகிட்ட சொல்லி வையு. அது போதும். கிளம்பிறேன்” கட கடவென ஒப்பித்தவன் மேலும் பாரதி தூண்டி துருவுவதற்குள் கிளம்பி, சொன்னது போல் மறுநாள் மாலை சரியாக அவள் வகுப்பு முடியும் நேரம் வந்திருக்க, சுபஷ்வினி முகத்திலோ கிலோ கணக்கில் குறும்பு புன்னகை!

“என்ன மாமோய், காத்து இந்த பக்கம் வீசுது” நக்கலுடன் தான் வீட்டுக்குள்ளே நுழைந்தாள் சுபஷ்வினி.

“என் அக்கா பெத்த முக்காக்கொத்துக்கு நான் வர்றது எதுக்குன்னே தெரியாது, இதை நான் நம்பனும்” என ரமணாவும் அவளுக்கு குறையாத நையாண்டியுடன் சுபஷ்வினியை முறைக்க,

பொங்கி வந்த சிரிப்பை விழுங்கி “ம்ஹூம்! எனக்கென்ன தெரியும், இரு நான் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வர்றேன்” என்றவள் அறைக்குள் நுழைந்ததும், அவள் அறைக்குள் செலவழித்த ஐந்து நிமிடத்தையும் ஒரு நொடிக்கு மேல் கடத்த முடியாமல் அவன், பர பரப்புடன் கதிரையில் தாளமிட்டான். 

“ஏன்டி இவ்வளோ லேட்டு?” அவள் வந்ததும் வராததுமாக சீற,

“இவ்வளவு தூரத்துக்கு வந்தாச்சா? அடங்கு மாமே, எப்படியும் உன் காதலுக்கு நான் தான் உதவி பண்ணனும், ஞாபகம் இருக்குல்ல” என அவள் விளையாட்டு போல கேட்டாலும் அதில் இருக்கும் உண்மையில் ‘ரொம்ப ஓவராத்தான் போறோமோ’ என எண்ணிக் கொண்டவன் சற்றே அடக்கி வாசிக்க நினைத்து,‌”சரி இங்க வா, இப்பிடி வந்து உக்காருடிம்மா” என அழைக்க,

ராணி தோரணையில் பதவிசாக நடந்து வந்தவள் அவன் கைக்காட்டிய முன்னிருக்கையில் அசராமல் அமர்ந்து ‘சரி ஆரம்பி’ என்னும் ரீதியில் கெத்தாக ஒரு பார்வை பார்த்தாள்.

‘இருந்தாலும் ரொம்ப பண்றடி தக்காளி’ அடிக் கண்ணால் அவளை முறைத்த ரமணா, “அவ போட்டோவைத் தான் காமிக்கல, அட்லீஸ்ட் அவ பேரையாவது சொல்லி தொலை டி” நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“நாலே எழுத்து. ‘ர’ ல ஆரம்பிச்சு ‘த’ ல முடியுது. முடிஞ்சா கண்டுபிடி” 

“புதிர் போடுற நேரமாடி இது, என்னனு கண்டுபிடிக்கிறது” நெற்றியை பரபரவென தேய்த்து விட்டவன் முகம் யோசனையில் சுருங்க,

சில நொடிகளுக்கு மேல் அவனை தவிக்க விட விரும்பாத சுபஷ்வினி “அதான் நாளைக்கு நேர்லயே பார்க்க போறியே, அப்ப தெரிஞ்சிக்க… இப்போ இடத்தை காலி பண்ணு” என்க,

ஆயிரம் வாட்ஸ் பல்புகள் ஒன்றாக, இருட்டை விளக்கிய பிரகாசம் அவன் முகத்தில்!

“நிஜமாதான் சொல்றியாடி?” என்றான் ரமணா.

“நான் எதுக்கு பொய் சொல்ல போறேன். நாளைக்கு சாயந்திரம் ட்யூஷன் க்ளாஸ்க்கு வருவாள். கூட்டிட்டு வர்றேன், நீயே உன் ஆளை பாரு” என்க,

அதுவோ மேலும் அவன் முகத்தை பிரகாசமாக்கியது.

“டைமையும் லொகேஷனையும் மறக்காமல் மெசேஜ் பண்ணு, ஏமாத்திடாதடி” என்று தான் கிளம்பினான்.

மறுநாள் சொன்னதுபோல அவள் அனுப்பிய நேரத்திற்கு காத்திருக்க சொன்ன இடத்தில் சைக்கிளில் அமர்ந்திருந்தவன் கண்டதென்னவோ, ‘இவளையா எனக்கு மேட்ச்ன்னு அந்த பில்டப் குடுத்தது பக்கி’ என்று தான் கடு கடுத்தான் சுபஷ்வினிக்கு அருகில் நடந்து வந்தவளை கண்டதும்.

அவள் வீட்டுக்கு செல்லும் வரை காத்திருந்து பின்னோடு வந்தவன் பிலு பிலுவென பிடித்துக்கொள்ள “மாப்பு கேட்டுக்கறேன் மன்னிச்சு விட்டுடுடா. இன்றைக்கு வர்றேன்னு தான் சொன்னாள். வரல, நான் என்ன பண்ணட்டும். கால் போட்டு என்னனு கேக்கிறேன், நீ கிளம்பு மாமா” காலில் விழாத குறையாக சுபஷ்வினி கெஞ்ச,

“காத்திட்டு இருப்பேன்” என்று தான் ரமணா கிளம்பினான்.

சுபஷ்வினி, சொன்னது போலவே அவளிடம் கேட்டு ‘உடம்பு சரியில்லையாம், ரெண்டு நாள்ல அடுத்த க்ளாஸ் இருக்கு, கண்டிப்பா வருவேன்னாள். நீ அப்ப பார்த்துக்கோ’ என மறக்காமல் சிறு குறிப்பை அவனுக்கு அனுப்பி வைத்த பின்னரே, அவள் தன் பள்ளி வேலைகளில் ஈடுபட்டாள்.

இதோ, அடுத்த வந்த இரண்டு நாட்களை தவிப்போடும் துடிப்போடும், நண்பர்களின் ‘நீ இன்னும் அவளை பார்க்கவே இல்லைடா மச்சி, அதுக்குள்ள தேவதாஸாவே மாறிட்டான் பாரேன்’ கேலி கிண்டலோடும், இளையராஜாவின் தாலாட்ட வருவாளாவோடும் கழித்து, புத்துணர்ச்சியுடன் அவளைக் காண கிளம்பியிருந்தான்.

இன்று,

சுபஷ்வினி வீட்டு வாசலில் இன்ப பர பரப்புடன் காத்திருந்தான் ரமணா. 

பிரசவ வார்டில் மனைவியை அனுமதித்து வெளியே தவிப்புடன் காத்திருக்கும் கணவனை போல அவன் செல்கள் ஒவ்வொன்றிலும் ஆவலும் இனம்புரியாத பட படப்பும் உடலில் மெல்லிய நடுக்கமும் அதன் விளைவாக கை விரல்கள் பேன்ட் பாக்கெட்டில் தாளமிட, மறு கை உயர்ந்து பின்னந்தலையில் அழுந்த கோதியது.

குறுக்கும் நெடுக்குமாக, பைக்கில் இருந்து இறங்கியவன் நடை பயில, மேலும் அவனை சோதிக்காமல் சுபஷ்வினியும் அவளும் வீட்டை விட்டு வெளியே வர,  

கடவுளை, நேரில் கண்ட பக்தனை போலத் தான் பரவசத்தோடு அவளைப் பார்த்திருந்தான்.

அவளை முன்னால் செல்ல விட்டு சற்றே பின்தங்கிய சுபஷ்வினி, ரமணாவை கடக்கும் போது ‘ஆள் எப்படி?’ என்னும் விதமாக ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க,

‘வேற லெவல்!’ கண்களை விரித்து மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தான் அவன்.

அதிலே அவனது விருப்பத்தை புரிந்து கொண்டவள் “ராது, க்ளாஸ் வேர்க்ஸ் எல்லாம் முடிச்சாச்சா, நாளைக்கு பரிம்ஸ் ஃபர்ஸ்ட் பீரியடே வந்து நிக்கும்” சல சலத்தவாறு அவளோடு இணைந்து கொள்ள,

ரமணாவின் இதழ்கள் மெலிதாக உச்சரித்து கொண்டது, ‘ராது, ராதா!! இந்த ரமணாவோட ராதா’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!