Skip to content
Post Views: 2,233
மகள் சொன்னாலும் சுந்தர் தானாக வாங்கி இருப்பான் என்று தோன்றவில்லை. அதோடு அப்படி அவனே வாங்கி இருந்தாலும் அதை வாங்கிக் கொள்ள அவளுக்கு பிடிக்கவில்லை.
அப்பாவும் மகளும் குளித்து விட்டு வந்து இருவருமாக பிள்ளையாரை அலங்காரம் செய்தனர். இது எப்போதும் நடப்பது தான். மல்லி சமையல் செய்ய அப்பாவும் மகளுமாக தான் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்வர்.
பொதுவாக அவர்கள் வீடுகளில் நண்பகலில் தான் பூஜை செய்வது என்றாலும் சுந்தருக்கே எப்போதாவது தான் ஓய்வு கிடைக்கும் என்பதால் மல்லி காலையிலேயே பூஜையை செய்ய தயார் செய்து விடுவாள்.
காலையிலேயே சாப்பிட்டு விட்டு அவன் உறங்க அம்மாவும் மகளும் டிவி பார்த்து பொழுது போக்குவர். மாலையில் கோயில் அல்லது ப்ரியா ஆசைப்படி ஊரில் உள்ள பிள்ளையார்களை எல்லாம் பார்வையிட கிளம்பி விடுவார்கள்.
Advertisement
ப்ரியா மூஞ்சுறு செய்து அதற்கு கண் வைத்து தயார் செய்ய சுந்தர் பிள்ளையாரை எடுத்து வைத்து பூஜைக்கு தயார் செய்தான்.
மல்லி ஓரமாக அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்க்க பூஜை அமர்க்களமாக முடிந்தது.
ப்ரியாவின் முகத்திலும் பேச்சிலும் கூட அன்று சிரிப்பும் துள்ளலும் தெரிய பெற்றவர்கள் இருவரும் அவளைத்தான் கவனித்தனர்.
Advertisement
வழக்கமாக அவர்கள் மூவரும் ஒன்றாக தான் சாப்பிடுவது. ஆனால் மல்லிக்கு அதற்கான மனநிலை இல்லை. மகளுக்காக என்றாலும் கூட அவளால் சுந்தருடன் இயல்பாக பேச முடியவில்லை.
Advertisement
அதனால் அவர்கள் இருவரும் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடலாம் என்று நினைத்து “பாப்பா! நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க…அம்மா அப்புறம் சாப்பிடுறேன்…எல்லாம் மேஜை மேல எடுத்து வச்சிருக்கேன்…” என்று சொல்ல ப்ரியா விடவில்லை.
“அம்மா…! அப்ப நீ எனக்கு ஊட்டி விடு…” என்று சொல்லி அம்மாவை கையோடு இழுக்க வேறு வழியில்லாமல் மல்லி அவள் பின்னோடு போக வேண்டி இருந்தது. சுந்தரும் வந்து டைனிங் மேஜையில் அமர்ந்து கொள்ள மகளுக்கு ஊட்டும் சாக்கில் மல்லி அவளுக்கு மட்டும் எடுத்து வைக்க சுந்தர் இயல்பாக தானே தனக்கு பரிமாறி சாப்பிட ஆரம்பித்தான்.
மல்லியின் சமையல் ருசி ஒவ்வொரு பதார்தத்திலும் தெரிய ரசித்து சாப்பிட்டான். மல்லி மகளுக்கு ஊட்ட ஆரம்பிக்க பிரியா முகத்தில் இப்போதும் நினைத்ததை சாதித்த மகிழ்ச்சி. அதோடு அவள் பிறந்ததில் இருந்து பார்த்த சூழல் கிடைக்க நிம்மதி.
Advertisement
மாறி மாறி அம்மா அப்பாவிடம் கதைகள் பேசியபடி சாப்பிட்டவளுக்கு இருவரின் மனநிலையும் புரியவில்லை. மல்லிக்கும் அந்த சூழல் பழைய பசுமையான நினைவுகள் வந்தது தான் என்றாலும் அதை எல்லாம் கெடுத்தவனின் மேல் கோபமும் பெருகியது.
அதுவும் அவனை அந்த சம்பவத்திற்கு பிறகு அதிக நேரம் இன்று தான் அவள் பார்க்க அந்த இடத்தை விட்டு எப்போதடா போவோம் என்று முள்ளின் மேல் நிற்பது போல தவித்துக்கொண்டிருந்தாள்.
பழைய கதைகளை பேசிய ப்ரியாவுக்கு அம்மா இது போல அவளுக்கு ஊட்டும் தருணங்களில் அப்பாவுக்கும் ஊட்டுவது நினவு வந்து விட திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.
“அம்மா ! அப்பாவுக்கும் ஒரு வாய் சாப்பாடு ஊட்டி விடுமா…!” என்று பின்விளைவுகள் தெரியாமல் ஆரம்பிக்க சுந்தர் அதைக் கேட்டு என்னவென்று நிமிர்வதற்குள் மல்லி ப்ரியாவின் முதுகில் ஓங்கி இடது கையால் ஒரு அறை வைத்திருந்தாள் .
“வயசுக்கு மீறி என்ன பேச்சு உனக்கு….? பத்து வயசு ஆகுது கழுதை..! இன்னும் ஊட்டி விடுன்னு சொல்லிட்டு இருக்கே….! இதுல ஓவர் பேச்சு வேற…! இப்படி எல்லாம் பேசின ..பிச்சிடுவேன் பாத்துக்க…! நீ சாப்பிட்டா சாப்பிடு…! சாப்பிடலனா பட்டினி கிட….!” என்று உறுமி விட்டு சுந்தரையும் பார்த்து முறைத்தவள் கையை சாப்பாட்டு தட்டிலேயே உதறி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அடி வாங்கியதில் ப்ரியா வலி தாங்காமல் ஓவென்று அழ சுந்தர் அவனே அடி வாங்கியது போல அப்படியே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஒரே நொடியில் வீட்டில் இருந்த அமைதி சந்தோஷம் எல்லாம் தலைகீழாக மாறியிருந்தது.
சுந்தருக்கு அந்த நேரத்திலும் இத்தனை வருடங்களில் அவன் வீட்டில் இப்படி நடந்ததே இல்லை என்பது நினைவுக்கு வந்தது. எப்போதுமே அவன் வீட்டில் அமைதியும் நிம்மதியும் தான் அவன் அனுபவித்து இருக்கிறான்.
அவன் பெற்றோர் வந்த பிறகு அம்மா இப்படி ரகளையை செய்யும் போது கூட மல்லி பொறுத்து போய் சூழ்நிலையை சமாளித்ததை கவனித்தவனுக்கு இன்று முதல் முறையாக அவள் கோபத்தை பார்த்து மிரண்டு போய் இருந்தான்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று அவன் அனுபவத்தில் அறிய ஆரம்பித்த நேரம் அது.
சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றவன் மெல்ல எழுந்து தேம்பித் தேம்பி அழுத மகளை கண்ணைத் துடைத்து சமாதானம் செய்தவன் மீதி சாப்பாட்டை அவளுக்கு ஊட்டி முடித்தான்.
அதற்கு மேல் சாப்பிடும் மனநிலையும் பசியும் அவனுக்கும் போயிருக்க எல்லாம் எடுத்து மூடி விட்டு கூடத்திற்கு வந்தான். மல்லி அவள் அறையில் படுத்திருந்தாள். சில மாதங்களாக ஓரமாக நிறுத்தி வைத்திருந்த கண்ணீர் மறுபடி ஓயாமல் வழிய மறந்திருந்த ரணம் மீண்டும் மரணகாயம் பட்டு ரத்தம் வடிந்தது.
தெரியாமல் இங்கே வர ஒத்துக் கொண்டு விட்டோமோ? மகளிடம் எடுத்து சொல்லி தாங்கள் சட்டப்படி பிரிந்து இருக்க வேண்டுமோ என்று அவள் யோசனை நாலா பக்கமும் ஓட விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள்.
ப்ரியா அவள் அறை வாசலில் பயந்தபடி அம்மாவையே பார்த்துக் கொண்டு நிற்க அது கூட தெரியவில்லை அவளுக்கு..
அடி வாங்கினாலும் அம்மாவையே தேடும் மகளை வேதனையோடு பார்த்தான் சுந்தர். தான் செய்த வினை மகளை பாதிப்பதை பார்த்தபோது அவன் ரத்தம் துடித்தது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் அல்லவா?
மகளின் அழுது சிவந்த முகம் காலை முதல் அப்படி சிரிப்போடு இருந்தவளை மல்லி இப்படி ஆக்கி விட்டாள் என்று அவள் மேலும் கோபம் வந்தாலும் மல்லியின் கோபத்திற்கு காரணம் அவன் தான் என்று அவனுக்கும் உள்ளுக்குள் தெரியும் அல்லவா?
அதனால் மகளின் அருகில் மெதுவாக நடந்து போனவன் அவள் கண்ணில் துளிர்த்த நீரை மென்மையாக மறுபடி துடைத்து “அழாத பாப்பா! அம்மாக்கு உடம்பு சரியில்லை…அதான் உன்ன அடிச்சிட்டா…! நீ போய் சாரி கேட்டு சாப்பிட சொல்லு….” என்று சொல்லிக் கொடுக்க மறுபடி அம்மா அடிப்பாளோ என்று பயம் இருந்தாலும் அப்பா கொடுத்த தைரியத்தில் மெல்ல அடி எடுத்து வைத்து அம்மா அருகே போய் நின்றாள்.
மல்லி பக்கத்தில் ஆள் வருவதை உணர்த்து நிமிர்ந்து பார்க்க மகள் அழுத கண்களோடு கலங்கிப்போய் நின்றதை பார்த்து அவளுக்குமே குற்றவுணர்வு எழுந்தது. சுந்தர் மேலிருக்கும் கோபத்திற்கு மகளை போட்டு அடித்தது தப்பென்று அவளுக்குமே உறுத்தியது.
எழுந்து அமர்ந்தவள் மகளை அருகே இழுத்து அணைத்துக் கொண்டு “சாரிடா பாப்பா…! அம்மா பாப்பாவ நல்லா அடிச்சிட்டேன்….“என்று வருத்தமாக சொல்ல ப்ரியாவுக்கு துக்கம் அப்போது தான் பெரிதாக தெரிந்தது.
ஓவென்று அழ ஆரம்பிக்க மகளை அணைத்துக் கொண்டு சமாதானம் செய்ய முயன்ற மல்லிக்கும் கூட கண்ணீர் வழிந்தது.
சுந்தர் அதுவரை வெளியே நின்றபடி அவர்களை கவனித்தவன் கனத்த இதயத்தோடு தன் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தான். தான் செய்தது தவறோ என்று ஒரு உறுத்தல் உள்ளே…
ப்ரியா அழுது கொண்டே அம்மாவை அணைத்துக் கொண்டு தூங்கி விட மல்லியும் உறங்கிப் போனாள்.
அன்று சுந்தர் வாங்கி வந்த நாவற்பழங்கள் விளாம்பழம் எல்லாம் வீணாகி குப்பைக்கு தான் போனது.
error: Content is protected !!