Skip to content
Post Views: 12,703
நினைவுகள் யாவும் நீங்கி போனால்…
நான் யார் மறதியா அவதியா சகதியா…
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்…
நீ யார் ஜனனமா சலனமா மரணமா…
யாரடி யாரடி…
பாவி நீ யாரடி…
ஓர் துளி ஞாபகம்…
ஊறுதா பாரடி…
சிந்தும் மழையின் முதல் துளியில் எழும் மண் வாசம் போன்றது, அவளை பார்த்த முதல் நொடியின் நினைவுகளும்.
Advertisement
வேலையின் பொருட்டு குடும்பத்தை பிரிந்து, கேரளத்தில் தனிமையில் கழிவது பெரும் துயரமாக இருந்தது கஸ்டம்ஸில் பணிபுரியும் ஜெகன்நாதனின் தந்தை பிரகாஷிற்கு.
நண்பனிடம் அதை பற்றி பேச , தங்களின் தரவாடு வீடு காலியாக இருப்பதால் அதை வாடைக்கு எடுத்துக்கொள்ள கூறி வீட்டை பார்க்க அழைத்தார் சங்கரன் நாயர்.
வெயில் மண்டையை பிளக்கும் தமிழகத்தின் மே மாத நினைவுகளில் இருந்து மாறுபட்டு மழையில் எப்பொழுதும் குளித்துக் கிடந்தது கேரளம், “இங்க மே மாசம் கூட எவ்ளோ மழை பெய்யுது இல்லப்பா!” என்ற பனிரெண்டாம் வகுப்பு தேர்வை முடித்து நின்ற மகனை பார்த்து சிரித்தவர் “கடவுளின் சொந்த தேசம் அல்லவா அதான் எப்போதும் குளுமையா வெச்ருக்கார் போல” என்றார்.
Advertisement
ஒரு மாதமாக தந்தையுடன் கேரளத்தில் இருக்கிறான், ஆனால் சிறு சிறு தோணிகளில் வீட்டின் வாயிலிலே சென்று இறங்கும் குட்டநாடின் மக்களையும், அதன் அழகையும் இன்று தான் பார்க்கிறான், எங்கும் பசுமை.. குளுமை.. காணும் இடம் எல்லாம் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது, அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
Advertisement
“இங்க ரொம்ப அழகா இருக்குப்பா, வாஞ்சிக்கு ரொம்ப பிடிக்கும்” என்ற மகனை பார்த்தவர் முகம் கொஞ்சம் வருத்தத்தை காட்டியது.
வள்ளத்தில்(வள்ளம் – சிறு தோனி) இருந்து இறங்க அவர்களுக்கு உதவினார் சங்கரன் நாயர், வீட்டின் தோட்டத்தை கடந்து பத்து அடி நடந்ததும் காயலின் கரை, தோட்டத்தின் எல்லையை தொட்டுக்கொண்டு சென்றது காயல் நீர்.
அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டை சுற்றி முன்பக்கம் சென்றார், கேரள பாணி பழைய வீடு பழமை மாறாமல் பாதுகாத்து வைத்திருந்தனர், வீட்டின் பெரிய கேட்டை கடந்ததும் பல வகையான பூச்செடிகள்.
Advertisement
மா மரம், பாக்கு மரம், தேக்கு, பலா மரம் வீட்டின் முன்னே நின்றது கீழே வரை காய்கள் காய்த்து தொங்கிக்கொண்டு, வீட்டை சுற்றி எங்கும் மரங்கள் தென்னை, முந்திரி மரம் கூட அவன் பார்த்த வரை மூன்று இருந்தது.
இவர்களின் தரவாடு வீட்டோடு அந்த எல்லை முடிகிறது , இவர்களின் வீட்டின் பக்கவாட்டிலும் காயலின் கரை அங்கே கொஞ்சம் காடு போல கிடக்க அவனுக்கு பெயர் கூட தெரியாத பல வகை பூச்செடிகளின் மனம் எங்கும் நிறைந்து நின்றது.
மரத்தில் தக்காளி காய்த்திருப்பதை போல தோன்றியது அந்த பழங்களை பார்க்கையில், மஞ்சள் நிற பழம் தொங்கி கொண்டிருக்க, அதன் பெரிய கிளையில் கட்டிய ஊஞ்சலில் ஆடி கொண்டிருந்தாள் ஒரு கேரள தேவதை, மென் சாரலாக மழை பெய்து கொண்டிருந்தது.
குங்கும நிறத்தில் பாவாடை சட்டை அணிந்து, நனைந்த முடியை இரண்டு பக்கமும் சிறிதாக எடுத்து பின்னி, இடை வரை கிடந்த கூந்தல் காற்றில் ஆட, துளசிக்கதிர் சூடியிருந்தாள் ,அஞ்சனம் தீட்டிய பெரிய விழிகள் மேலே மரத்தில் நிலைத்திருந்தது, நெற்றியில் சந்தனக்கீற்று மட்டும்.
உயரத்தில் ஆடி அந்த மரத்தின் பழத்தை பறிக்க முயன்றுக் கொண்டிருந்தாள், அருகே அவளை விட சிறிய வாண்டுகள் சில நின்று “அம்மு சேச்சி கொறச்சுங்கூடி மேலே போ (கொஞ்சம் கூட மேல போ)” என்று அவளுக்கு அறிவுரை கூறி நின்றது.
சங்கரன் நாயரின் “டா” என்ற அதட்டலில் வாண்டுகள் அனைத்தும் சிதறி ஓட, அவள் ஊஞ்சலை வேகமாக நிறுத்தி விட்டு இறங்கி தலை குனிந்து நின்றாள் நிமிர்ந்து யாரையும் பார்க்க வில்லை.
பிரகாஷிற்கு அந்த குழந்தையின் முகம் வாடியது பொறுக்கவில்லை, அவருக்கும் அவர் மனைவி சீதா ராணிக்கும் பெண் குழந்தை வேண்டும் என்று அவ்வளவு ஆசை, ஆனால் இறைவனின் கணக்கு வேறாக இருக்க, இரண்டு குழந்தைகளுடன் நிறுத்தி விட்டனர்.
“ யார் அது?” என்றார் பிரகாஷ் சங்கரனிடம் “என் ரெண்டாவது அண்ணன் மகள்” என்றவர் வேறு ஒன்றும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்றார்.
அவர் உள்ளே செல்வதை அந்த பெரிய விழிகளை மட்டும் உயர்த்தி அவள் பார்க்க, பிரகாஷ் கை அசைத்து அவளை அருகில் அழைத்தார், அவள் விழிகள் பயத்தோடு உள்ளே நோக்கியது “இனியும் போய்ட்டில்லே(இன்னும் போகலையா) என்ற சத்தத்தில் உடல் ஒரு முறை நடுங்க, அந்த பெரிய விழிகளை நிறைத்த நீரில் அவன் மனம் வாடியது.
குனிந்த தலை நிமிராமல் அருகில் இருந்த அந்த பெரிய வீட்டிற்கு நடந்துவிட்டாள், “எப்போ பாத்தாலும் விளையாட்டு, இவ மனுஷனுக்கு பொறந்தாளா மழைக்கு பொறந்தாளான்னு தெரியல” என்ற சங்கரன் நாயரின் வெறுப்பின் வார்த்தைகள் தந்தை மகன் இருவருக்கும் ரசிக்கவில்லை.
பேச்சை மாற்ற “அது என்ன மரம்” என்று கேட்டான் அவன் தந்தையிடம், ஏனோ சங்கரனிடம் பேச அவன் விரும்பவில்லை “அது குடம்புளி மரம், நிறைய மருத்துவ குணம் நிறைந்தது, அது இல்லாமல் மலையாளிகள் மீன் குழம்பு வைப்பதில்லை” என்றார் சங்கரன் “அது பழுத்தவுடன் அறிந்து வெயிலில் காயவைத்து வைத்துவிடுவோம், வருடக்கணக்காக அப்படியே இருக்கும்” என்றார்.
இது அவர்களுடைய குடும்ப வீடு, மூன்று சகோதரர்களும் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கின்றனர், நான்கு வருடத்திற்கு முன்பு அருகிலே இருந்த அவர்கள் இடத்தில் புதிய மாளிகை ஒன்றை கட்டி குடி போனார்கள், இரண்டும் ஒரே காம்பௌண்ட் சுவற்றிற்குள் தான் இருக்கும், மிக பெரிய இடம், குடும்ப சொத்து பிரிக்காமல் அப்படியே வைத்திருந்தார்கள்.
தந்தை மகன் இருவருக்கும் வீடு மிகவும் பிடித்துவிட்டது, நாலுகெட்டு வீடு கீழே வரவேற்பு அறையோடு மூன்று படுக்கை அறை, இரண்டு விதமான சமையல் அறை, மேலே செல்ல மர படிக்கட்டுகள் அங்கேயும் மூன்று அறைகள், கேரள ஓடு வேயப்பட்டிருந்தது, காற்று அள்ளிக்கொண்டு போனது.
காயல் நீரில் விழுந்து சிதறும் மழை துளியை போல, தளும்பி நின்ற அந்த விழிகள் அவன் மனதை அசைத்தது, தன் தம்பியின் வயது தான் இருக்கும் என்று எண்ணியவன் எட்டிப்பார்க்க அவளை காணவில்லை.
டீ குடிக்க புதிய வீட்டிற்கு அவர்களை அழைத்து சென்றபோதும் அவளை தேடி சுழன்றது விழிகள், அவன் தேடியவள் மட்டும் அங்கில்லை, திரும்பி செல்ல படகில் ஏறியபோது கோழி குஞ்சுகளின் பின்னே ஓடிக் கொண்டிருந்தவளை கண்டான்.
அந்த முகத்தில் மீண்டும் புன்னகையை கண்ட போது அவன் இதழ்கள் கூட அழகாக விரிந்தது “காதலா” என்றால் நிச்சயம் இல்லை, அப்படி ஒரு கோணத்தில் அவன் யோசிக்கவே இல்லை.
அவள் சித்தப்பாவின் வார்த்தைகள் மீண்டும் அவன் செவிகளில் முழங்கியது, “மனிதனுக்கு பிறந்தாளா மழைக்கு பிறந்தாளா? ” உண்மையில் அவள் மழையின் மகள் தானே, அவள் கருவானதும் மழையாலே, பிறப்பதிற்கு நாட்கள் இன்னும் மீதம் இருக்க தாயின் பனிக்குடத்தை உடைத்துக்கொண்டு இந்த உலகில் கால்தடம் பதித்ததும் மழையாலே.
அறைக் கதவை யாரோ தட்டும் ஓசையில் நினைவுகளில் இருந்து கலைந்தவன் தன் அணைப்பில் இருப்பவளை பார்த்தான், அவளை கட்டிலில் நன்றாக கிடத்திவிட்டு சென்று கதவை திறக்க, அவன் மாமா மருத்துவருடன் நின்றிருந்தார் “இங்கேயே உக்காருங்க, வர வேண்டியவங்க இன்னும் வரல” என்றான் மீசையை முறுக்கிக்கொண்டே.
இதிலிருந்து தப்பும் வழி தெரியாமல் மிரண்டு அமர்ந்திருந்தார் மருத்துவர் , சிறிது நேரத்திலே அம்முவின் பெரியப்பா அப்பா மற்றும் சித்தப்பா அவர்களுடன் இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள், இரு பெண்காவலர்கள் வந்தனர்.
அனைவரையும் உள்ளே அழைத்தவன் அமர சொல்ல, “நாங்க உன்கூட விருந்து சாப்பிட வரல, எங்க பொண்ண அனுப்பு” என்றார் கிருஷ்ணன் நாயர்.
“உங்களுக்கு விருந்து குடுக்க நானும் தயாரா இல்ல” என்றவன் “என்ன சார் பிரச்னை” என்றான் இன்ஸ்பெக்டரை பார்த்து.
“மிஸ்டர். ஜெகன்நாதன்?” என்று அவர் கேள்வியாய் நிறுத்த.
அவரின் நேரே கையை நீட்டினான், அதை பற்றிக் குலுக்கியவர் மனதில் மிலிட்ரிக்காரனோ என்ற யோசனை ஓடியது, அந்த ஹேர் கட், நிற்கும் தோரணை கட்டுமஸ்தான உடல் என்று அவர் யோசனையாய் பார்க்க.
“எஸ், மைசெல்ப்…. வருண் ஜெகன்நாதன், கமாண்டர் இந்தியன் நேவி” என்றான் திமிராக பெருமையாக.
(குடம்புளி – புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது, பழத்தோலினின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாகும், கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகும். உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது.)
error: Content is protected !!