Skip to content
Post Views: 2,516

கானகமயில் -02
“ப்ச்ச்.. அண்ணா எவ்வளவு தடவை அண்ணா சொல்றது இது மாதிரி உட்காந்துட்டு கனவு காணாதீங்கன்னு. நானும் பார்த்துட்டே இருக்கேன் ரொம்ப நாளா நீங்க இப்படித்தான் பண்ணிட்டு இருக்கீங்க? என்னாச்சு அண்ணா உங்களுக்கு, எப்ப பாத்தாலும் ஏதாவது ஒரு வேலை செஞ்சுட்டு இருக்கும் போது சடனா அப்படியே ப்ரீஸ் ஆகி உட்கார்ந்திடுறீங்க?” என்று கவியழகனைத் தொட்டு உலுக்கினாள் அவனது தங்கை சங்கரி.
அதில் திடுக்கிட்டு விழித்த அழனோ, விழிகளைத் திறந்தவாறே கனவு கண்டு கொண்டு அமர்ந்திருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டான்.
Advertisement
பின்பு, “என்னம்மா?” என்று கேட்க,
“என்ணண்னா இப்படி இருக்கீங்க, வியாபாரத்தை கவனிக்காம நீங்க பாட்டுக்கு கனவு கண்டுட்டு இருந்தா யாராவது காய்களை அள்ளிட்டு போயிட்டா என்ன பண்ணுவீங்க சொல்லு பார்க்கலாம். இது நல்லாவா இருக்குது, கொஞ்சம் கவனமா வேலையை பார்க்க வேணாமா?” என்று பெரிய மனுஷியாய் தனக்கு புத்திமதி சொன்னவளை எப்போது போல் நெகிழ்வாய் பார்த்தான்.
“சரிமா இனிமே நான் கவனமா பார்த்துக்குறேன், நீ எதுக்கு இங்க வந்த காலேஜ்க்கு கிளம்பலையா?”
Advertisement
“கிளம்பணும். இன்னும் அரை மணி நேரம் டைம் இருக்குல்ல அதான் மதியத்துக்கு உங்களுக்கு ஏதாவது சமைச்சு வச்சுட்டு போலாம்னு பார்த்தேன், ஆனா வீட்டுல காய் இல்லண்ணா அதான் எடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்று சொன்னவள் அங்கே பரப்பி வைக்கப்பட்டிருந்த காய்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு, “அண்ணா?” என்றழைத்திட,
Advertisement
“என்னம்மா”
“இல்ல காலேஜ் ஃபீஸ் நீங்க கட்டிட்டிங்க. ஆனா கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டியது இருக்குதுன்னா கொஞ்சம் பணம் வேணும்” என்று தயங்கி கேட்டாள்.
“அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கமா கேட்குற, என்னோட ரூம்ல கபோர்டுல இருக்குது எடுத்துட்டு போ” என்று சொல்லி விட்டு காய் வாங்க வந்தவர்களை கவனித்தான் அழகன். அதற்குள் தேவையானதை எடுத்து வைத்திருந்த சங்கரி சைக்கிளில் அங்கிருந்து கிளம்பி விட்டாள். வந்திருந்தவர்களை அனுப்பி விட்டு தங்கையை பார்த்தவன், அவள் சென்று விட்டதை உணர்ந்து பெருமூச்செறிந்தான்.
Advertisement
தாய் தங்களை விட்டு விட்டு இறந்த பின்பு, தாயுக்கு தாயாய், தந்தைக்கு தந்தையாய் தங்களை வளர்த்தது தன் தந்தை தான் என்பதை அவனுமே அறிந்திருந்தான் தான். அதனால் தான் தந்தைக்கு தன்னாலான உதவிகளை செய்ய வேண்டும், தன்னாலான பணத்தை ஈட்ட வேண்டும் என்று நினைத்தான். பன்னிரண்டாவது முடித்து கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து, கல்லூரி முடித்து விட்டு வீட்டிற்கு வந்த பின் மீதம் இருக்கும் நேரத்தில் இதுபோல் ஏதேனும் பார்ட் டைம் ஜாப்பில் சேர்ந்து பணம் ஈட்ட ஆரம்பித்து இருந்தான்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பாக கல்லூரி படிப்பை முடித்து விட்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கி வேலை தேடியவன் சிபாரிசு இல்லாத ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டான். ஒன்று அவர்களுக்கு சிபாரிசு தேவைப்பட்டது, இல்லை எனில் அனுபவம் தேவைப்பட்டு இருந்தது. கல்லூரி முடித்து விட்டு வந்திருந்தவன் எங்கிருந்து அனுபவ சான்றிதழை கொண்டு சென்று கொடுப்பான், ஆகையால் கிடைத்த வேலையை செய்து குடும்பத்தின் நிதி நிலைமையை சரி செய்து கொண்டிருந்தவனுக்கு கல்லூரியில் படித்த ஒரு நண்பனின் மூலம் இன்னிசை பண்பலையில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவன் குரல் ஓரளவிற்கு கணிரென்றும், அதேபோல் மற்றவர்களைக் கவரும் விதமாகவும் இருந்ததால் அவனுக்கு அங்கே வேலையும் கிடைத்தது.
அதன் பிறகும் அவர்களது நிலை மாறவில்லை. அவன் அங்கு வேலை செய்யும் போது, முதல் தம்பி கல்லூரியில் நுழைந்திருக்க, மற்ற மூவரும் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்களாய் இருந்தார்கள். அவர்களுக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான். இதிலும் முதல் தம்பி இன்ஜினியரிங் தான் படிப்பேன் என்று அடம் பிடித்து சேர்ந்ததால் வேறு வழி இன்றி கீழையோ மேலையோ கடன் பட்டு தான் அவனையும் படிக்க வைத்திருந்தான்.
இப்போது முதல் தம்பி படிப்பை முடித்து விட்டு பெரும் பாடுபட்டு வேலையில் சேர்ந்து விட்டான், ஆனால் வேலையில் சேர்வதற்கு ஏகப்பட்ட சிபாரிசும் தேவைப்பட்டது, அதையெல்லாம் சிரம் மேற்கொண்டு செய்தது அழகன் தான். இரண்டாவது தம்பி டிப்ளமோ படித்து முடித்து விட்டு அதற்கான வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான்.
மூன்றாவது தம்பி கல்லூரியில் கடைசி வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறான்
அதேபோல் அவனது தங்கை சங்கரியும் இப்போது தான் கல்லூரியில் கால் பதித்திருந்தாள். அவனுக்கு இவற்றையெல்லாம் விட மிகப்பெரிய கவலை கல்லூரி படிக்கும் தன் தங்கை இன்னும் பெரிய பெண்ணாகவில்லை என்பது தான்.
அவ்வபோது தந்தை இதை சொல்லி புலம்பும் போதெல்லாம், “அதெல்லாம் நல்லதே நடக்கும் கவலப்படாதீங்கப்பா. டாக்டரை வேணா கன்சல்ட் பண்ணலாம் பயப்படாதீங்க. அம்மா இருந்திருந்தா இதெல்லாம் நமக்கு தெரியும், என்ன பண்றது சங்கரி பிறந்த ஒரு வருஷத்துலையே அம்மா தவறிட்டாங்க. அதுக்கப்புறம் நீங்க தான் எங்களை வளர்த்தீங்க, உங்களோட தைரியத்தை பார்த்து தான்பா நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்குள்ள தைரியத்தை வளர்த்துக்கிட்டு இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறோம். அப்படி இருக்கும் போது நீங்களே தளர்ந்து போலாமா? அதெல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும் பாப்பாவை நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்பா” என்று சொன்னவன் சொன்னது போல் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவர்களும் இயற்கையாக வரும் ஒரு நிகழ்வை செயற்கையாக நிகழ்த்த முடியாது என்பதால் ஏதேனும் வேறு பிரச்சினைகள் இருக்குமோ? என்று யோசித்து அதற்குண்டான சிகிச்சை முறைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
அதிலும் கூட தன் தங்கை மன சுணக்கம் கொள்வதை உணர்ந்தவனுக்கு சட்டென்று சிந்தையில் நின்றது அவ்வார்த்தைகள். “பருவம் அடையாத பெண்களுக்கு நான் சொல்ற பாட்டி பைத்தியம் யூஸ்புல்லா இருக்கும்னு நினைக்கிறேன், நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்களேன். எள்ளை லேசா வாசம் வர்ற அளவுக்கு வறுத்துக்கணும். வறுத்த எள்ளோட பனைவெல்லம் சேர்த்து மிக்ஸியில் நல்லா பொடி பண்ணிட்டு, அதோட நெய் சேர்த்து உருண்டையா பிடிச்சு அவங்களுக்கு சாப்பிட கொடுக்கணும். எள் ஒரு பங்குன்னா, இரண்டு பங்கு பனைவெல்லம் சேர்த்து அரைச்சு உருண்டை பிடிச்சு வச்சிக்கிட்டு இதை ஒரு மண்டலம் குடுத்துட்டு வந்தோம்னா அவங்க உடம்புல உஷ்ணம் அதிகரிக்கும், அதுக்கு ஏத்த மாதிரி தண்ணீரும் அதிகமா குடிக்கணும். இப்படியே தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டுட்டு வந்தா பருவமடையா பெண்கள் பருவமடைஞ்சிருவாங்க. இது எப்பவோ எனக்கு தெரிஞ்ச பாட்டி ஒருத்தர் சொன்ன நாட்டு வைத்தியம். நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்களேன்” என்று யாரோ அவன் செவியில் கூறியது இன்றும் அவன் நினைவில் வந்து சென்றது. ஆனால் அதை செய்து கொடுத்தால், எதற்கிது? என்று தங்கை கேட்டு விடுவாளோ என்பதாலும், தான் பருவமடையாததால் தான் அனைவரும் கவலைப்படுகிறார்களோ அல்லது தன்னை வித்தியாசமாக பார்க்கிறார்களோ என்று நினைத்து விடுவாளோ என்பதாலும் தான் இவ்வளவு நாளும் அதை செய்யாமல் இருந்தான்.
ஆனால் இதற்கு மேலும் தாமதிப்பது தவறோ என்ற எண்ணம் எழ, சில நாட்களுக்கு முன் தங்கை கல்லூரி சென்று இருக்கும் நேரம் வீட்டிற்கு சென்றவன், இதை தயாரித்து ஒரு பாக்ஸில் அடைத்து வைத்து விட்டான். அதை தன் தங்கைக்கு மட்டுமின்றி அனைவருக்கும் சேர்த்து கொடுத்து வர, யாரும் எந்த சந்தேகமும் கேட்காமல் அதை வாங்கி ஒரு இனிப்பு பண்டம் போல் சாப்பிட்டார்கள். இப்போதும் அதையே நினைத்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தான்.
கடந்த காலத்தில் ஆர்.ஜேவாக பணிக்கு சென்று கொண்டிருந்தவனது வாழ்வில் திடீர்னு ஏதோ ஒரு மாற்றம். ஒரு நாள் சோர்ந்து போன முகத்தோடு தந்தையிடம் வந்து நின்றவன், “எனக்கு அந்த வேலை செட்டாகலப்பா வேற வேலை பார்க்கலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்க,
“என்னப்பா புதுசா இருக்குது. இவ்வளவு நாள் இதை செய்யட்டுமாப்பான்னு கேட்டுட்டு வந்து நின்ன, அப்ப சின்ன பையனா இருந்த அதனால கேட்ட. ஆனா இப்ப நம்ம குடும்பத்தையே நீ தான் எடுத்து நடத்திட்டு இருக்கிற, அப்படி இருக்கும் போது இப்பவும் என்கிட்ட வந்து இப்படி அனுமதி கேட்டுட்டு இருக்கியேப்பா. உனக்கு என்ன தோணுதோ, அதை செய். என்னால முன்ன போல வேலைக்கு போக முடியல, உன்னை நம்பி தான் நாங்க இருக்கோம் இல்லன்னு சொல்லல, ஆனாலும் எது செய்யறதா இருந்தாலும் யோசிச்சு செய்யிப்பா. நீ செய்யிற வேலை உனக்கு பிடிச்சி இருக்கணும், பிடிக்காத வேலையை செய்யக்கூடாது புரியுதா” என்றதும் சரி என்று தலையை உருட்டியவன் முதலில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலைக்கு சேர்ந்திருந்தான்.
அதில் வருமானம் குறைவு தான் என்ற போதும் புதிதாக சில விஷயங்களை கற்றுக் கொண்டான். ஒவ்வொரு பொருட்களையும் விற்பனை செய்யும் நுட்பம் முதற்கண்டு சில முக்கியமான நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டவன், ஆறு மாதம் கழித்து அந்த வேலையை விட்டு விட்டு கையில் இருக்கும் பணத்தை வைத்து காய்கறி கடை ஒன்றை ஆரம்பத்தான். முதலில் இதிலிருந்து துவங்கி பின்பு பெரிய சூப்பர் மார்க்கெட்டாக வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தான். இன்னொருத்தரிடம் கைகட்டி நிற்பதற்கு பதிலாக தானே சுயமாக தொழில் செய்து சம்பாதித்தால் பரவாயில்லை என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியதால் தான் இந்த முடிவு, இந்த எண்ணத்தை அவனுள் யார் விதைத்தது என்பதை அவன் மட்டுமே அறிவான்.
அன்று ஆரம்பித்திருந்த அவனது இந்த காய்கறி கடை இந்த நான்கு வருடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதே போல் மூன்று கடைகளை வெவ்வேறு பகுதிகளில் ஆரம்பித்து, ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவரை நியமித்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும்படி உயர்ந்திருந்தாலும் கூட அவனது சூப்பர் மார்க்கெட் கனவு நினைவாவதற்கு இன்னும் பணம் தேவை என்பதால் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறான்.
அதிகாலையிலேயே காய்கறி கமிஷன் மண்டிக்கு சென்று தேவையான காய்களை கொள்முதல் செய்து அதை அனைத்து கடைகளுக்கும் அனுப்பி வைத்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு சென்று குளித்து முடித்து அவசரமாக இந்த கடையை வந்து திறப்பதற்குள்ளாகவே அவனுக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். அதேபோல் பகல் பொழுது முழுவதும் ஓய்வெடுப்பதற்கு கூட நேரமில்லாமல் வேலை அவனை படுத்தி எடுக்கும், போதாக்குறைக்கு இவன் கடையில் இருக்கும் காய்கறிகளின் தரமும் சரி, விலையும் சரி அனைவருக்கும் கட்டுப்படியான வகையில் தருவதால் கூட்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.
மதியம் சாப்பிடும் நேரம் கூட 4 மணியைத் தொட்டு விடும், அந்த அளவிற்கு சற்று பிஸியான கடை தான். அதுமட்டுமின்றி வார நாட்களில் அருகில் இருக்கும் ஊர்களில் எல்லாம் சந்தை நடக்கும் வேளையில் அதற்கும் காய்களை லோடு ஏற்றி அனுப்பி வைப்பவன், அன்று ஒரு நாள் மட்டும் தம்பிகளில் யாரையாவது ஒருவனை கடையில் விட்டு விட்டு அங்கே சென்று விடுவான்.
இப்படி ஓயாது உழைத்துக் கொண்டிருப்பவனைக் கண்டு குமரேசனுக்கு பெருமை வருவதற்கு பதிலாக ஒரு வித கவலை தான் வந்தது. தலைக்கு மேல் வளர்ந்து நிற்கும் மகனுக்கு ஒரு திருமணம் செய்து அழகு பார்க்க அவரால் முடியவில்லை. திருமண பேச்சு எடுத்தாலே அப்பா – மகன் இருவருக்கும் சண்டையில் தான் வந்து முடிகிறது. திருமண பேச்சை அவர் எடுக்கும் போதெல்லாம் வீட்டில் சாப்பிடாமல் கோபம் கொண்டு கடையில் சென்று படுத்துக் கொள்வான். அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களால் கணிக்க முடியவில்லை. திருமண பேச்சை எடுத்தாலே அந்த அளவிற்கு இறுக்கமாகக் காணப்பட்டான்.
முன்பு அவனிடம் இருந்த இறுக்கம் இப்போது இரு மடங்காக அதிகரித்து இருந்ததே தவிர சிறிதும் குறையவில்லை. அனைவரிடம் பாசம் காட்டுவான் ஆனால் அந்த பாசத்துடன் ஒரு கண்டிப்பும் கலந்தே இருக்கும்..
ஏதேதோ எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தான் அழகன். வழக்கமாக காய் வாங்க வரும் ஒரு பெண்மணி தக்காளி ஒரு கிலோ கேட்டார்.
தக்காளியை எடுத்துக் கொடுப்பதற்கு பதிலாக கத்திரிக்காயை அள்ளி ஒரு கிலோ எடை போட்டவனை விசித்திரமாக பார்த்த அந்த அக்கா, “தம்பி, என்ன ஆச்சு தம்பி ஏதாவது பிரச்சனையா? நான் கத்தரிக்கா கேட்கலையே, தக்காளி தான் கேட்டேன்” என்றார்.
அதில் அதிர்ந்து விழித்தான், “ஒண்ணும் இல்லக்கா ஏதோ நினைப்புல போட்டுட்டேன்” என்று சொல்லி விட்டு மீண்டும் அவர் கேட்டதை போட்டுக் கொடுத்தவனுக்கு தன்னை நினைத்து கோபமாக வந்தது. எத்தனை முறை மறக்க முயற்சித்தும் கூட ஒவ்வொரு நினைவும், அவன் நினைவில் இருந்து மேலெழுந்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை மறக்க செய்திருந்தது. அன்றைய நாள் பொழுது முழுவதும் இப்படியே தான் சொதப்பி வைத்தான். கடையை மூடிவிட்டு அவன் வீட்டிற்கு செல்லும் போது மணி பத்தைத் தாண்டி இருந்தது.
ஏற்கனவே இருந்த வாடகை வீட்டை மாற்றிக் கொண்டு இப்போதுதான் புதிதாக கட்டி இருந்த வீட்டிற்கு வந்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறை வைத்துக் கட்டி இருந்தான். இதற்கே அவன் சேமித்து வைத்திருந்த பணமெல்லாம் அதிகமாக செலவாகி இருந்தது. தம்பிகள் அனைவரும் தலைக்கு மேல் வளர்ந்து விட்டார்கள், ஒவ்வொருவருக்கும் பிரைவசி என்பது தேவைப்படும், இதில் ஒரே அறையில் அனைவரும் இருப்பது சரி வருமா? பெண்பிள்ளை வேற இருக்கிறாள் என்பதால் தான் சேமித்து வைத்திருந்த பணத்தோடு, மேலும் சிலவற்றை விற்று வந்த பணத்தையும் சேர்த்து, சூப்பர் மார்க்கெட் ஓப்பன் செய்வதற்கு பதிலாக சிறுக சிறுக வீடு கட்ட ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட இரண்டு வருடமாக சிறுக சிறுக வீட்டின் வேலை செய்து இப்போது தான் கிரகப்பிரகாசம் நடத்தி முடித்திருந்தார்கள். வீடு கட்டும் வேலையும் முடிந்து விட்டது என்பதால் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தார் குமரேசன்.
தாயின் பாசம் அறியாதவன் மனைவி வந்த பிறகாவது அந்த பாசத்தை அறிந்து கொள்ளட்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் அவனோ அவர் எண்ணத்திற்கு ஒப்புதல் சொல்லாமல் வேறு ஒரு எண்ணத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்.
கடையை அடைத்து விட்டு கடையின் முன்பு சூடத்தை வைத்து கொளுத்தியவன் சிறிது நேரம் கண்மூடி நின்று கடவுளை வணங்கி விட்டு தன இரு சக்கர வாகனத்தில் வீடு வந்து சேர்க்கையில் அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தார் குமரேசன்.
தந்தையைக் கண்டுவிட்டு, “என்னாச்சுப்பா நீங்க இன்னும் தூங்காம நின்னுட்டு இருக்கீங்க?” என்று கேட்க,
“இல்லப்பா பாப்பா ஒரு விஷயம் சொல்லுச்சு அதான் உனக்கு போன் பண்ணாம நேர்லையே சொல்லிக்கலாம்னு நின்னுக்கிட்டு இருக்கேன்”
“என்ன விஷயம்பா” என்றதும்,
“பாப்பா பெரிய மனுஷி ஆகிட்டா தம்பி” என்று சொன்னதும் மகிழ்வில் திக்கு முக்காடிப்போனான்.
அதில் அவனுக்கு மகிழ்வாக இருந்தாலும் இந்த நேரத்தில் யாரிடம் போய் உதவி கேட்பது என்று தெரியாமல் அவன் தயங்கி நிற்கையிலேயே, வாடிக்கையாக தன் கடைக்கு காய் வாங்க வரும் பெண்கள் சிலரின் நினைவு வந்தது.
“பாப்பா எங்கப்பா?”
“வெளியில போர்டிகோ வாசல்ல உட்கார வச்சு இருக்கேன்பா” என்றார் அவர்.
“சரிங்கப்பா நீங்க பாப்பாக்கிட்ட இருங்க இதோ வந்துடறேன்” என்று சொல்லி விட்டு அக்கம் பக்கமிருந்த வீடுகளுக்கு ஓடியவன் விஷயத்தை கூறி நொடியில் 15 பெண்களோடு வந்து விட்டான்.
அது மட்டும் இன்றி அகிலனை வெளியே அனுப்பி அவர்கள் சொன்னதை எல்லாம் வாங்கிக் கொண்டு வர சொன்னான். பெண் இல்லாத வீடு என்பதாலும், ஆண்களுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என்பதாலும் அருகில் இருந்த பெண்களே அந்த இரவு நேரத்தில் அவசரமாக சங்கரிக்கு தலைக்கு தண்ணீர் ஊற்றி அவளை போர்ட்டிகோவில் அமர வைத்தவர்கள், அவள் பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து முடித்தார்கள்.
சில சாங்கியங்களை செய்து முடித்து அவளை குளிக்க வைத்து வேருடை மாற்றி அமர வைக்கிலேயே மணி பனிரெண்டைத் தொட்டிருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் செய்த அந்த உதவி பெறும் பேருதவியாக தெரிந்தது அழகனுக்கு.
“ரொம்ப நன்றி அக்கா, நீங்க எல்லாரும் இந்த உதவி செய்யாம இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பன்னே தெரியல. அம்மா இருந்திருந்தா பரவால்ல, ஆனா அவங்க இல்லாம இந்த நேரத்துல என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப தவிச்சு போயிட்டோம்” என்று நெகழ்வோடு கூறியவனை பார்த்து புன்னகைத்தார் அருகில் இருக்கும் விமலா.
அவன் பக்கத்து வீட்டில் வசிக்கும் விமலாவோ, “இதுல என்ன இருக்குது தம்பி, இதுவே உங்க அம்மா இருந்திருந்தா அவங்களே எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சுருப்பாங்க. அவங்க இல்லாததுனால தானே நீங்க எங்களை கூப்பிட்டீங்க பரவால்ல. சொந்தக்காரங்க யாராவது இருந்தா சொல்லி அனுப்பலாமே, நாளைக்கு குடிசை கட்டணும்ல” என்று அவர் கேட்டதும் திரும்பி குமரேசனைப் பார்த்தான் அழகன்.
ஏனெனில் விவரம் தெரிந்ததிலிருந்து இவர்கள் எந்த ஒரு சொந்தக்காரர் வீட்டிற்கும் சென்றதில்லை. அதேபோல் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு யாரும் இவர்கள் வீட்டுக்கு வந்ததில்லை. அதனால் தான் அவரைப் பார்த்து வைத்தான்.
அவரோ, “எங்களுக்கும் சொந்தபந்தம், மாமன் மச்சான், அங்காளி பங்காளின்னு நெறைய பேர் இருந்தாங்கம்மா, ஆனா எங்க நாங்கலாம் உதவி கேட்டுருவமோன்னு எல்லாரும் ஒதுங்கிட்டாங்க. அப்படி இருக்கும் போது இப்ப போய் அவங்க கிட்ட உதவி கேட்கணும்னு எனக்கு தோணல. பொண்ணுக்கு இப்ப தண்ணி ஊத்தியாச்சு, இன்னும் என்ன குடிசை மட்டும் கட்டணும் இல்லையா வேற யாரையாவது கூப்பிடுறேன். எனக்கு தெரிஞ்சு என் மனைவியோட அண்ணா ஒருத்தரு இருக்காரு, ரொம்ப நல்லவர் தான் ஆனா கூப்பிட்டா வருவாரான்னு தெரியல எதுக்கும் கூப்பிட்டு பார்க்கிறேன்” என்று சொன்னார்.
“அப்படி அவர் வரலன்னா என்னப்பா பண்றது?”
“இதுல என்ன தம்பி இருக்குது அக்கம் பக்கத்துல இருக்கிற பெரியவங்க யாரையாவது கட்ட சொல்லாம். இதை தாய்மாமா தான் செய்யணுமா என்ன? தாய்மாமா இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க. போய் படுங்க மத்ததை நாளைக்கு பாத்துக்கலாம்” என்றார் விமலா.
வந்திருந்தவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லி அனுப்பி வைத்த குமரேசன் மகளுக்கு துணையாக வெளியே கட்டில் போட்டு படுத்து விட்டார்.
குளித்து முடித்து விட்டு சாப்பிட அமர்ந்த அழகனுக்கு உணவு பரிமாறிய இளம்பரிதி, “அண்ணா” என்றிட,
“என்ன பரிதி உனக்கு கூட தூக்கம் வரலையா.? நான் போட்டு சாப்பிட்டுக்கிறேன் நீ போய் படு” என்றான்.
“இல்லண்ணா ஒரு விஷயம் சொல்லணும்?”
“என்ன விஷயம்?”
“எதேச்சையா அகில் அண்ணாவைப் பாக்குறதுக்காக அவரோட ரூமுக்கு போனேன். அப்ப அவரு யார்கிட்டையோ கொஞ்சி கொஞ்சி பேசிக்கிட்டு இருந்தாருண்ணா” என்றதும் சிறிது சோற்றை அள்ளி வாயில் வைக்க போனவன், அப்படியே சாதத்தை தட்டில் போட்டவாறு அதிர்ந்து போய் தம்பியை பார்த்தான். அவன் சொன்னதை வைத்து, விஷயம் என்ன என்பதை யூகித்தவனுக்கு அதிர்ச்சியையும் மீறி இயலாமை தான் முன் வந்து நின்றது..
– கானகமயில் கவிபாடும்…
error: Content is protected !!