Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – இறுதி அத்தியாயம் (1)

இறுதி அத்தியாயம்‌ (1)

 



Advertisement

சோர்வாய் இல்லத்திற்குள் நுழைந்தான் சேரல். நான்கு நாட்களாய் ஓய்வில்லாத அலைச்சல். வருகின்ற மூன்று தினங்களில் தீபாவளி. அதற்கான ஆயத்த பணிகள் தான் நடந்து கொண்டிருந்தது.

Advertisement

இன்னும் மனைவிக்கும் மகனிற்கும் கூட உடை எடுக்கவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பே தமிழிடம் பணம் கொடுத்து, “மூணு பேருக்கும் டிரஸ் எடுத்திட்டு வந்திடுமா..” என உரைத்து இருந்தான்‌‌.‌ ஆனால் அவளோ, “நீங்களும் வாங்க அத்தான், ஒண்ணா சேர்ந்துப் போய் வாங்கலாம்!” என்று ஆசையோடு கேட்டிட, மறுக்க இயலாது தலையசைத்து விட்டான்.

Advertisement

இன்று கடைக்கு அழைத்துச் செல்லலாம் என எண்ணியிருந்தான். ஆனால் உடலோ ஓய்விற்கு ஏங்கியது.

Advertisement

“தமிழ்மா, துணி கடைக்குப் போறதுக்கு எல்லாம் நேரம் இல்ல.‌ என்ன செய்யலாம்.?‌” என்றிட, “தீபாவளி முடிஞ்ச பின்னாடி வாங்கிக்கலாம்‌ அத்தான். அம்மா, அண்ணி வாங்கித் தந்தது இருக்கு.‌ ஏதாவது ஒண்ணைப் போட்டுக்கலாம். மோகன் அண்ணே, உங்க மகனுக்கு ஆறு செட்டு டிரஸ் எடுத்து வச்சிருக்காரு. இதுக்கு மேலயா வேணும்.?” எனச் சிரித்து, சூழலை ஒரு நொடியில் இலகுவாய் மாற்றி விட்டாள்.

திருமணமான பின்பு, இது இரண்டாம் தீபாவளி. முதல் வருட பண்டிகையின் போது, மகனை ஈன்றெடுத்து பதின்நான்கு நாட்கள். அதனால் வெறும் பலகாரம் மட்டுமே. புத்தாடை எதுவும் அணியவில்லை.‌

அதுவும் சேரலைப் பற்றி எல்லாம் சொல்லவே வேண்டியது இல்லை. தீபாவளி‌ என்றாலே, கறிக்கடை தான். மற்றவர்கள் பிடித்ததை உண்டு, உடை உடுத்தி, சொந்தங்களிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர் என்றால், இவனிற்கு அன்று உடல் வலிதான் பரிசு. உறக்கம் மட்டுமே தேவையாய் இருக்கும், ஆனால் கிட்டாது. அனைவரும் விடியலில் குளிப்பர், இவனோ மாலை மன்னவன் மங்கிய பின்புதான் தலையில் நீரை ஊற்றுவான்.

கறிக்கடைக்காரன்! ஆனால் அன்றைய தின அவனின் உணவு, பகல் முழுவதும் பத்து தேநீரைக் கடந்து செல்லும். மாலையில் தயிரில் கரைத்த, இரண்டு டம்ளர் கஞ்சி. அவ்வளவு தான், வயிறு ஏற்கும். இதுபோல் பண்டிகை என்று வந்தாலே, ரெத்தத்தில் குளித்து எழும், வேற்று கிரகவாசியைப் போல் மாறி விடுவான்.

கடந்த வருடம் தலை தீபாவளிக்கு, மாலையில் தான் மாமியாரின் இல்லத்திற்குச் சென்றான்‌. அதுவும் மனைவியின் மனம் நோகக்கூடாது என்பதற்காக.

“போன வருசம், பிள்ள பிறந்து இருந்ததால முறை செய்ய முடியல.‌ அதுனால இந்த வருசம் வந்திடுங்க!” என்று பத்து நாட்களிற்கு முன்பே நேரில் வந்து தாம்பூலம் வைத்து அழைத்திருந்தார் சவிதா.

“உங்களுக்கே, என்னோட நிலைமை தெரியும் அத்தை. தீபாவளி அன்னைக்கு வர முடியாது. அது முடியவும், இடையில ஒரு நாளு தமிழையும் பிள்ளையையும் கூட்டிட்டு வர்றேன்!” என அப்பொழுதே பதில் உரைத்து விட்டான் சேரல்.

சமையல் அறையில் இருந்து வெளியே வந்த தமிழ், “அத்தான், காபியா டீயா?”

“இல்லமா. சுக்குக்காபி போடு, தலை வலிக்கிது.”

“என்னாச்சு.?”

“சரியான தூக்கம் இல்லேல.?”

“அதான் ஏன்னு தெரியிதே, அப்ப ரெஸ்ட் எடுக்கலாம்ல?”

“அதுசரி, ரெஸ்ட் எடுத்தா வேலை எல்லாம் தானா நடந்திடுமா.?”

“ஆரோக்கியம் போனா, திரும்ப மீட்டு எடுக்கிறது ரொம்பக் கஷ்டம்!”

அவன் புன்னகைக்க, சுக்குக் காபியைக் கொடுத்தாள் தமிழ். இரு மிடறு அருந்தியவன்,‌ “எங்க, உன்னோட மகனைக் காணோம்.?”

உள்ளறையைப் பார்வையால் காட்டியவள், “பாருப்பா, என்னோட மகனா.? அப்ப, உங்களுக்குப் பிள்ளை இல்லையா?”

தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மகனைப் பார்த்துவிட்டு வந்த சேரல், “அவன், எங்க என்னை மாதிரி இருக்கான்? உன்னையே அச்சுல வார்த்த மாதிரி இல்ல, பிறந்திருக்கான். என்ன கோவம் வருது, இப்பவே? சொல்ல மறந்திட்டேனே.. ஞாயித்துக் கிழமை, மாமா அவனைக் கடைக்குக் கூட்டிட்டு வந்திருந்தாரு.”

“அதான் நாலு நாளா, தக்குத் தக்குனு சத்தம் கொடுத்து கையை ஆட்டிக்கிட்டு இருக்கானா.? நான் கூட, ஏதோ புதுசா விளையாடுறானு இல்ல நினைச்சேன்? ஜூனியர் சேரல், கறி வெட்டுறாராக்கும்?”

அவளை வியப்பாய்ப் பார்த்தவன், “உனக்கு, ஒருமாதிரி இல்லயா தமிழ்மா.?”

“ஏன் அத்தான், இதுல என்ன இருக்கு.?”

“இல்ல.. உனக்கு‍, நானு கறிக்கடை வச்சிருக்கிறதே பிடிக்கல. நம்ம பிள்ளையும் அதுமாதிரி எதுவும் விளையாட்டுக்குச் செஞ்சாக்கூட, மனசு சங்கடப் படும்ல?” என அன்று மோகனிடம் உரைத்ததையே மனைவியிடமும் உரைக்க,

“உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு உங்களோட தொழில் பிடிக்கல தான். அதுக்காகச் செய்யாதீங்கனு சொல்ல முடியாது.‌ அப்படி நானு சொன்னாலும், கேட்கிற ஆள் இல்லயே நீங்க? முதல்ல, அந்த வாடையை என்னால சகிச்சிக்க முடியல. குழந்தை பிறக்கிற வரைக்குமே அப்படிதான் இருந்துச்சு.‌

பாலன் பிறந்தப்ப.. வீட்டுக்குள்ள மருந்து, பால், பத்திய சாப்பாடுனு எல்லாம் சேர்ந்து எப்பவும் ஒரு கவுச்சி வாடை அடிக்கும்‌. அதுவும் ஒருமாதிரியா தான் இருந்திச்சு‌. பிள்ளைக்காகப் பொறுத்துதான் ஆகணும்னு ஆச்சி சொல்லிட்டாங்க. பிள்ளைக்காகச் செய்யும் போது, புருஷனுக்காகவும் பொறுத்துக்க முடியும்ல.? ரெண்டு வருசம் ஆச்சு, இன்னும் பழகலேனா எப்படி.?

பிள்ளைக்கு, அது ஒரு விளையாட்டு. மோகன் அண்ணே சொன்னது, சரிதான். அவன் வளர்ந்து, அவனோட வாழ்க்கையைத் தீர்மானிச்சுக்குவான். நீங்க என்ன, கறி மட்டுமா வெட்டுறீங்க? விவசாயமும் செய்யிறீங்க தான.? அதைப் பார்த்துச் செய்ய ஆசைப்பட்டா, செய்யட்டுமே? இப்ப என்ன.? விடுங்க அத்தான், பார்த்துக்கலாம்.”

சின்னதாய்ச் சிரித்தவன், “எனக்கு.. அவனை விட உன்னை நினைச்சுதான் கவலையா இருந்துச்சு, என்ன சொல்லுவியோனு..”

அவள் சிரித்துவிட்டு நகர, சாரங்கன் வந்தான்.

“அண்ணே..”

“வாப்பா..”

“இந்தாங்க அண்ணே, தொழுவோட சாவி‌. மாமா, ஆறு ஆடுகளைத் தூக்கி விட்டாரு. எல்லாத்தையும் அடைச்சு கீரையைக் கட்டி, தண்ணியும் பிடிச்சு வச்சிட்டேன். நாளைக்கு வெள்ளிக்கிழமை, லீவு தான கடை.?”

“இல்ல ரங்கா, ஒரு குட்டியை மட்டும் அறுக்கலாம்னு இருக்கேன். திங்கட்கிழமை தீபாவளி. சனி ஞாயிறுனு சேர்ந்த மாதிரி லீவு வருது. அதுனால வேலைக்காக வெளியூர் போன ஜனங்க எல்லாம், முன்னாடியோ பின்னாடியோ ஒண்ணு ரெண்டு நாள் லீவுப் போட்டு ஊருக்கு வந்து சேர்ந்திடுவாங்க‌. நமக்கு நாளையில இருந்தே வியாபாரம் ஆரம்பிச்சிடும். அதுனால ஆறுமணி போல வந்திடு.

ஜக்கையன் மாமாக்கிட்டப் பேசிட்டேன். ஞாயிறும் திங்களும், கடைக்கு வர்றேனு சொல்லி இருக்காரு‌. நீயும் ஒரு வார்த்தை, உன்னோட மாமனாருக்கு ஞாபகப் படுத்திடு‌!”

“சரிங்கண்ணே..”

“இந்தா பணம், பதினஞ்சு ரூபா இருக்கு. மாமாக்கிட்ட, ஆட்டுக்குக் கொடுத்திடு. மீதி எழுபத்தாறு ரூபாயை வியாபாரம் முடிஞ்சதும் தர்றேன். எடப்பட்டியில, நாலு குட்டி இருக்குனு சொன்னாங்க. ஒரு ஐயாயிரம் ரூபா அட்வான்ஸை கொடுத்திட்டு, நானு அடுத்த வாரம் வந்து மிச்சத்தைத் தருவேன்னு சொல்லி நாளைக்குத் தூக்கிட்டு வந்திடு.”

அவன் பணத்தை எண்ணியபடி தலையசைக்க, “எத்தனை குட்டி இருக்கு.?”

“இப்ப‌ நீங்க சொன்னதையும் சேர்த்து, மொத்தமா முப்பத்திரண்டு! போதுமா அண்ணே.?”

“சந்தேகம் தான். ஒரு வாரத்துக்கு ஆடு‍, குட்டி வாங்க பட்டிப்பக்கம் போக முடியாது. கடையிலயே, வேலை சரியா போகும்‌. இன்னும் நாலஞ்சு குட்டி இருந்தா நல்லது. நானு ஆட்டுக்காரவங்களுக்கு ஃபோன் போட்டு விசாரிக்கிறேன். நீயும் கொஞ்சம் பாரு ரங்கா!”

“சரிண்ணே..‌ கோழி.?”

“நாளைக்கு, பத்துப் பன்னெண்டை உரிச்சு வை. அப்புறம் வியாபாரம் ஆகுறதைப் பார்த்து உரிச்சிக்கிலாம்‌. நாலு நாளைக்கு வேலை பார்க்க ஆள் வேணும்‌ ரங்கா. நம்பிக்கையான ஆள் யாரும் இருந்தா, கூட்டிட்டு வா‌. சம்பளத்தோட புதுத்துணியும் எடுத்துக் கொடுத்திடலாம்!” என்றிட, தலையசைத்து விட்டுக் கிளம்பினான் அவன்‌.

மோகன் உட்பட மேலும் இரண்டு ஆட்களுடன், ஞாயிறன்று இரவு ஏழு மணிக்கே பணியைத் துவங்கி விட்டனர். சேரலின் வாடிக்கையாளர்கள் பலர் முதல்நாள் மதியமே தங்களுக்குத் தேவையானதைக் கைப்பேசி வழியாய் உரைத்திருந்தனர். நோட்டுப் போட்டு எழுதி வைத்திருந்தான்‌. அதன்படி எடைப் போட்டு, தனித்தனியே பெயர் எழுதி எடுத்து வைத்து விட்டாள் கீதா.

குறைந்தபட்சம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிலோவேனும் வாங்குவர் என்பதால்.. அந்த எடையில் பத்து, அரைக் கிலோவில் ஏழு எனப் பிளாஸ்டிக் பைகளில் தயாராய் எடுத்து வைத்திருந்தாள். இனி கேட்பவரின் எடைக்குத் தக்கபடி, சேர்த்தோ குறைத்தோ தருவதற்கு வசதியாய் இருக்கும்‌. கல்லாவில் அமர்ந்து இருந்தான் மோகன்.

கொத்துக்கறி, பிரியாணி, சுக்கா என எந்த வகையும் கிடையாது தீபாவளி நாளில், மொத்தமாய் எலும்புக்கறி மட்டும் தான். முன்பே சொல்லி விடுவான் சேரல். அதனால் பெரும்பாலானோர் அவன் தருவதை வாங்கிச் சென்று, இல்லத்தில் தேவையான வகையில் கத்தியிலோ அரிவாள் மனையிலோ வெட்டிக் கொள்வர்‌.

கடையில் இருந்து, விடியலில் கிளம்பி விட்டாள் கீதா. இல்லத்திற்கு வந்து குளித்து, விளக்கேற்றி வைத்து வணங்க.. பரமசிவமும் மோகனும் வந்து சேர்ந்தனர்.‌ தனது இல்லத்தில் அதிகாலையே அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, உணவு மற்றும் பலகாரங்களோடு நாத்தனாரைப் பார்ப்பதற்கு வந்தாள் செந்தமிழ்.

பாலனுக்கு அத்தை மாமாவுடன் விளையாடவே நேரம் போதவில்லை‌. குழந்தைக்காகத் தாங்கள் வாங்கி வைத்திருத்த உடையை, ஒவ்வொன்றாய் அணிவித்து அழகு பார்த்தனர்‌‌ இருவரும். சிறு சிறு பட்டாசுகளை வெடித்து, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து விளையாடினான் சேரலின் மகன்.

“குழந்தை இங்கேயே இருக்கட்டும்.” எனக் கீதா கேட்டுக் கொள்ள, மதிய உணவை முடித்துவிட்டு இரண்டு மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினாள் தமிழ். மூன்றரை மணிக்கு, கையில் பெரிய தூக்குவாளியுடன் வந்தான் சேரல்.

அவள் கேள்வியாய்ப் பார்த்திட, “இதுல, கல்லா ரூபா இருக்கு தமிழ்மா.‌ எவ்வளவுனு எண்ணி வை, நாளைக்குக் கணக்குப் பார்த்துக்கலாம்!” என்றவன் உடையை மட்டும் மாற்றிவிட்டுப் படுக்கையில் விழுந்தான்.

அவன் மொத்தக்கறி கொடுக்கும் பொழுது.. பார்த்துப் பழக்கம் என்பதால், கணவனின் உடல்நிலை, அவளிற்கு நன்றாகவே புரிந்தது.

பணத்தை எண்ணிப் பத்திரப் படுத்திவிட்டு, அவனை எழுப்பிக் கஞ்சியைக் குடிக்க வைத்தவள், வலிக்கான மாத்திரையையும் கொடுத்தாள்‌.

“குளிச்சிட்டுப் படுக்கலாம்ல? பாருங்க, பெட்சீட்டை இப்பத் துவைக்கணும் நானு. எல்லாத்தையும் நேத்து தான் மாத்தினேன்!” என்றபடி அவள் அருகில் அமர, “பாத்ரூம்ல நிக்கிறதுக்கு எல்லாம் தெம்பில்ல. அவ்வளவு கிறக்கமா இருக்கு. இப்ப‌‌ என்ன, பெட்சீட்டைத் தூக்கி ஓரமா வையி. நானு துவைச்சிடுறேன்.”

“ஆமா.. வெள்ளிக்கிழமை வரைக்கும், இந்த நாத்தம் பிடிச்சதை வச்சுக்கிட்டே இருப்பாங்க?”

அவன் சிரிக்க, “ரொம்ப வலிக்கிதா அத்தான்.?”

“ம்ம்..” என்றபடி அவன் படுக்க, “இப்பதான சாப்பிட்டீங்க, கொஞ்ச நேரம் கழிச்சுப் படுங்க.”

“உட்கார முடியலமா. முதுகு எல்லாம் கடுக்குது!” என்றவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. கைக்கால்களைப் பிடித்து விட்டாள் தமிழ்.

“போதும் மா, தேங்க்ஸ்.‌” எனச் சிறிது நேரத்திலேயே அவளைத் தடுத்துவிட.. குப்புற கவுந்தபடி இருந்தவனை நோக்கியவள், “அத்தான், உங்க முதுகுல படுக்கவா‌?”

“எலும்பை உடைச்சு, மொத்தமா படுக்க வைக்கப் பிளான் போடுறியா?”

“ஆளைப் பாரு! எலும்பை உடைக்கிறாங்களாம்.? உங்களோட நல்லா பேசியே, ரொம்ப நாள் ஆனமாதிரி இருக்கு.”

“என்ன செய்ய? உனக்குப் பிள்ளையையும் ஊரையும் பார்க்கவும், எனக்குக் கடையைப் பார்க்கவுமே நேரம் சரியா இருக்கு. அதுவும் தீபாவளி வந்தாலும் வந்திச்சு‌, பத்து நாளா பிள்ளைய ஆசையா தூக்கிக் கொஞ்சக்கூட நேரம் இல்ல.”

“என்னையும் தான்!”

“ஏது ஏது, உன்னையும் கொஞ்சணுமா.?”

“பின்ன.. பொண்டாட்டியைக் கொஞ்ச வேண்டாமா? இப்ப எல்லாம், என்னோட மூஞ்சியைப் பார்த்துக்கூட நீங்க பேசுறது இல்ல!” என்றவள், கணவனின் மீது படுத்துக் கொண்டாள்.

“வெயிட் கூடிட்ட தமிழ்மா.”

அவள் சிரிக்க, “நாத்தம் அடிக்கலயா என்மேல.?”

“பரவாயில்ல.”

“ம்ம்.. இப்ப எல்லாம், நீயி நிறையவே மாறிட்ட.”

“மாற்றம் ஒன்றே மாறாதது. சரி, எப்படி இருக்கு உடம்பு வலி?”

“எலும்புக்கு எதுவும் சேதாரம் இல்லனு தான் நினைக்கிறேன்.”

“ஆளைப்பாரு! நானு பக்கத்துல இருந்தா, வலியை மறந்திடுவீங்கனு மேலப் படுத்தா.. வாய் வாயி!”

உண்மைதான்! வலியினைக் கடந்து, அவளின் நெருக்கத்தில் உடல் நெகிழ்ந்தது. அதில் சிலிர்த்தவன் குரலில் கேலியைத் தேக்கி, “பாருடா.. வைத்தியமா இது.?”

“ம்ம்.. கல்யாணம் ஆன புதுசுல காய்ச்சல் வந்து படுத்தீங்களே, அப்ப கண்டுபிடிச்சது!”

“நல்லா கண்டுபிடிச்ச.” எனச் சிரித்தவனின் பின்னந்தலை குழலைக் கோதியவள் முதுகில் இதழ் பதிக்க.‌. சட்டென்று உடலைத் திருப்பித் தனது கரத்தைப் பின்னால் கொண்டு சென்று, மனைவியை இழுத்துப் படுக்கையில் தன்னருகே கிடத்தினான் சேரல்.

திகைப்புடன் அவனை நோக்கிய தமிழ், “சொல்லீட்டுத் திரும்பக் கூடாது? சோ.. பயந்திட்டேன் அத்தான்.”

“அப்படியா உன்னைக் கீழ தள்ளீடுவேன்? வீட்டுக்காரன் மேல நம்பிக்கை இல்ல, அப்படித்தான?”

அவள் பொய்யாய் முறைக்க, “அம்மாடி, எவ்வளவு பயம்? பாரு, நெஞ்செல்லாம் அடிச்சிக்குது. உன்னோட இதயம் துடிக்கிறது, எனக்குக் கேட்குது!”

“வர வர.. சேட்டைக் கூடிப் போச்சு உங்களுக்கு.”

“உன்கிட்ட சேட்டை பண்ணாம, வேற யார்க்கிட்ட செய்யிறதாம்.?”

“இப்ப, உங்களுக்கு வலி தெரியாதுல அத்தான்.?” எனக் கேலியாய் கேட்டவளின் இடையில் கரம் கோர்த்து அழுத்தியவன்,

“மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே..

ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே.‌.

மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே..

கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே..”

“ம்ம்.. பாட்டு எல்லாம் பலமா இருக்கு. கல்யாணத்தப்ப பாடினது தான.? நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கைப் பேரும் என்னடி? எனக்குச் சொல்லடி..”

“செந்தமிழ்!” எனப் புன்னகைத்தவன் மனையாளின் நுதலில் இதழ்பதிக்க, “போதும், மிச்சத்தை ராத்திரிக்குப் பார்த்துக்கலாம். இப்ப, எழுந்திரிச்சு குளிங்க. போயி அண்ணியைப் பார்த்திட்டு, அப்படியே குழந்தையைத் தூக்கிட்டுக் கோவிலுக்குப் போயிட்டு வரலாம்!” என்று விலகி..‌ கணவனது ஆசையைத் தூண்டி அதற்கு நேரத்தையும் குறித்து, எழுப்பி விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!