Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 34

அத்தியாயம் 34

 



Advertisement

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இருந்தது. செந்தமிழே வெற்றி பெற்றாள். ஆதிக்குடிலின் முதல் பெண் ஊராட்சி மன்ற தலைவர். வேட்பு மனு தாக்கலின் போது நேரில் சென்று கையெழுத்து இட்டதோடு சரி, தேர்தல் சம்பந்தமாய் அதன் பின்னர் ஒரு துரும்பையும் நகர்த்தவில்லை அவள்.

செய்தது அனைத்தும் சேரல் தான். வீடு தவறாமல் நேரில் சென்று உரைத்து, துண்டு பிரசுரம் கொடுத்து, ஒரே ஒருமுறை மட்டும் ஊரிற்கு நடுவே கூட்டத்தைக் கூட்டிப் பேசினான். கடைக்கு வரும் வாடிக்கையாளரின் செவிகளில், செய்தியாய்ப் போட்டு வைத்தான். அவ்வளவே‌! இதைத் தவிர்த்து, வேறு எதுவும் செய்யவில்லை.

Advertisement

Advertisement

செந்தமிழின் வெற்றிக்கு, அவள் இளஞ்சேரலின் மனைவி என்பது மட்டுமே போதுமானதாய் இருந்தது.‌

இருபது வருடங்களிற்கு முன் ரத்ன சபாபதி ஊராட்சி மன்றத் தலைவராய் இருந்து நலத்திட்டங்கள் யாவும் மக்களை அடைய வழிவகைச் செய்ததும், ஒன்றரை வருடங்களிற்கு முன்னர்ச் சேரல் கல்யாண சுந்தரர் கோவில் குளத்தைத் தூர்வாரி சுத்தம் செய்ததும், சாலை அமைப்பதற்காக முன்னரே மக்களிடம் பணம் வசூல் செய்து வைத்திருப்பதும் என மேலும் அவளின் பக்கம் பலம் சேர்த்திருந்தன.

Advertisement

அறிவிப்பு வந்ததும், எவ்வித ஆரவாரமும் இல்லை. அருகே நின்றிருந்த சேரல், தமிழின் கைப்பற்றிக் குலுக்கி, “வாழ்த்துகள் மேடம்!” என்றான். சிரிப்பைப் பதிலாகக் கொடுத்தவளிற்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் செய்திட பல இருந்தன.

சேரலிற்கு நெருக்கமானவர்கள் அவனிடம் பேசிக் கொண்டிருக்க, தமிழ் சுற்றுப் புறத்தை நின்ற இடத்தில் இருந்தே பார்வை இட்டாள்.

“சாதாரண ஆடு மேய்க்கிறவன், ஜெயிக்க வச்சிட்டாண்டா. நீங்க எல்லாம் ஒண்ணத்துக்கும் லாயக்கு இல்ல!” எனத் தோற்ற ஒருவன், தன்னுடன் இருந்த ஆட்களைத் திட்டியபடி கடந்து செல்ல, ஏனோ அவளிற்குச் சட்டென்று சினம் துளிர்த்து விட்டது.

“ஹலோ.. மிஸ்டர்..”

அவன் திரும்பிப் பார்க்க, “ஆடு மேய்க்கிறது என்ன அவ்வளவு கேவலமா.? முன்னாடி எல்லாம் படிக்கலேனா, எருமை மாடத்தான் மேய்க்கணும்னு சொல்லுவாங்க. இன்னைக்கு ஒரு மாடோட விலை, ஒண்ணுல இருந்து ஒன்றரை லட்சம். பத்து மாடு வச்சிருந்தா, அவன் இலட்சாதிபதி. என்னோட புருஷன் இதுவரைக்கும் குத்து மதிப்பா ஒரு எழுநூறு ஆடு அறுத்துருப்பாரு கறிக்காக. இந்தக் கணக்குக் குறைவு தான். இப்பச் சொல்லுங்க, அவரு யாருனு!”

அவனும் உடனிருந்த ஆட்களும் பேச்சின்றி நிற்க.. சின்னதாய்ச் சிரித்தவள், “ஆனா பாருங்களேன், ஆடு மேய்க்கிற அவருக்கு இந்த ஊரைப் பத்தி இருக்கிற கவலையும் அக்கறையும் கூட, வெள்ளையும் சொள்ளையுமா வருசக்கணக்குல கட்சிப் பேரைச் சொல்லிக்கிட்டுக் கவர்மெண்ட் காசைத் திங்கிற உங்களை மாதிரி ஆளுங்களுக்கு இல்லையே.? நீங்க முழுங்கினதுல ஒரு பர்சண்ட்ல அடிப்படை வசதியைச் செஞ்சிருந்தாலும், இந்நேரம் ஊரு நல்லா இருந்திருக்கும்‌‌. அதுக்குக் கூட, மனசு வர மாட்டிது‌. உங்களை எல்லாம் எந்தக் கணக்குல சேர்கிறது?”

மனையாள் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவரிடம் பேசுவதைப் பார்த்த சேரல்.. சட்டென்று அருகே வந்து, “என்ன தமிழ்மா.?” என விசாரிக்க, “இந்தா பாருப்பா! உன்னோட வீட்டுக்காரம்மா கிட்டச் சொல்லி வையி.‌ வரைமுறை இல்லாம பேசுது. இது நல்லது இல்ல!” என்றுவிட்டுச் சென்றனர் அவர்கள்.

அவன் கேள்வியாய்ப் பார்க்க, நடந்ததை உரைத்தாள் தமிழ்.

“அவனுங்க ஏதோ தோத்த கடுப்புலயும், நாம ஜெயிச்ச பொறாமையிலயும் பேசி இருக்கானுங்க. அதுக்குப் போயி பதில் சொல்லிக்கிட்டு இருக்க.?”

“அதுக்குனு ஆடு மேய்கிறவன்னு இளக்காரமா சொல்லுவாங்களா.?”

“இப்ப இல்லனாலும், முன்னாடி ஆடுதான மேய்ச்சிட்டு இருந்தேன்? நீயிக்கூட ரெண்டு தடவைச் சொல்லி இருக்க. அவனுங்க சொன்னதுக்குச் சண்டைக்குப் போற.?”

“நானு சொல்லுவேன் தான். ஆனா அது உங்களைக் காயப்படுத்துற மாதிரி இருக்காது. ஆனா அவங்க உங்களை அசிங்கப்படுத்தணும்னே சொல்லுறாங்க அத்தான்.”

“முதுகுக்குப் பின்னாடி பேசுறவனைத் திரும்பிப் பார்த்துப் பதில் சொல்லி‍, நேரத்தை வீணாக்காத தமிழ்மா. ஆகுற வேலையைப் பார்ப்போம்!” என அழைத்துச் சென்றான்.

அதன்பிறகு இருவருக்குமே நேரம் என்பதே கிட்டவில்லை. மகனைக் கவனிக்கும் வேலையோடு, தற்போது பொதுப்பணியும் சேர்ந்து கொண்டது தமிழிற்கு. சேரல்.. கடை, தொழுவம், கோழிப்பண்ணை எனச் சுற்றிக் கொண்டிருந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை மூன்று மணிக்கே சென்று விட்டான் ஆடவன். அவனிற்கான உணவை, வாங்கிச் செல்வதற்காக வந்திருந்தான் மோகன்.

“என்ன தமிழ் டிஃபன் ரெடியா.?”

“ஹான்.. ஆச்சு அண்ணா. இதோ கொண்டு வர்றேன்.”

“என்ன சத்தத்தையே காணோம், பிள்ள எங்க.?”

“டேபிள்கு அடியில உட்கார்ந்திருக்கான் பாருங்க.”

அருகே சென்று தூக்கிக் கொண்டவன், “ஏன்டா இப்படி வந்து உட்கார்ந்திருக்க.?”

“என்மேல கோவம். அதான் கோவிச்சிட்டு உட்கார்ந்திருக்கான்.”

“அடேயப்பா.‌. இன்னும் ஒருவயசு முழுசா முடியல, அதுக்குள்ள கோவம் எல்லாம் வருது உனக்கு.?”

“மாமா.. அம்மா பிச்சு, அம்மா பிச்சு!” என அன்னையின் மீது புகார் வாசிக்க.. மோகன் சிரித்து, “என்னமா சொல்லுறான்.?”

“பேனாவை வாயில வச்சுக் கடிச்சிட்டான். அது என்ன‍, திங்கிற பொருளானு கேட்டுப் பிடிங்கிட்டேன். அதைத்தான் சொல்லுறான்.”

“சரி சரி, அப்பாக்கிட்ட சொல்லித் தந்திடலாம் அம்மாவை. இப்படி எல்லாம் கோவிச்சிட்டு, ஓரமா போயி உட்காரக் கூடாது!” எனத் தனது வாகனத்தின் சாவியைக் கொடுத்துச் சமாதானம் செய்ய, உணவைக் கொண்டு வந்தாள் தமிழ்.

“கீயை எதுக்கு அண்ணே கொடுத்தீங்க? வண்டியில போகணும்னு அடம் பிடிப்பானே!” என்றிட, “டுரூ டுரூ..” எனக் குரல் எழுப்பி, கைகளால் சைகைக் காட்டத் துவங்கி இருந்தான் பாலன்.

சிரித்த மோகன், “சரி! டுரூ போகலாம்.‌ மாமா, கூட்டிட்டுப் போறேன்.” என்றுவிட்டுத் தமிழிடம், “பால் கொடுத்திட்டியா மா.?”

“கொடுத்திட்டேன் அண்ணே..”

“அப்ப சரி, நானு குழந்தையைத் தூக்கிட்டுப் போறேன். இன்னைக்கு அங்கேயே இருக்கட்டும். சேரல் வந்ததும், வந்து விடுறேன். நீயி அதுவரைக்கும், கொஞ்சம் ரெஸ்ட் எடு!”‌‌ என்றவன் குழந்தையுடன் கிளம்ப, தமிழ் பாதியில் விட்டு வந்த பணியைக் கவனிக்கச் சென்றாள்.

கடைக்கு மகனுடன் வந்த மோகனைக் கண்டதும், அவசரமாய்‌ எழுந்து ஓடி வந்தான் சேரல்.

“மாப்ள மெதுவா..‌ என்ன அவசரம்.?”

தந்தையைக் கண்டதும், “ப்பா.. ப்பா.‌.‌” என ஆர்வ மிகுதியில் தாவிய மழலை, அவனிடம் இருந்து வந்த அறிமுகமற்ற வாசத்திலும் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டும் சட்டென்று அமைதியாகி விட்டான்.

அதனை உணர்ந்த சேரல், “பிள்ளைய எதுக்கு மாமா தூக்கிட்டு வந்தீங்க..?”

அவன் நடந்ததை விவரிக்க, “நானு என்ன செய்யிறேன், தமிழ்‌ என்ன செய்யிறான்னு கவனிச்சு அதே மாதிரி செய்யிறான் மாமா. ஏதோ என்னோட தேவைக்குனு, உசுரைக் கொன்னு பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்கேன். அதைப் பார்த்து, இவனும் இந்தப் பக்கம் வந்திடக் கூடாது இல்ல? அப்பன் தொழில் தான், பிள்ளைக்குனு சொல்லுவாங்க.‌

இதை, நானு தான் ஆரம்பிச்சேன்.‌ அது, அப்படியே என்கூடவே முடிஞ்சுப் போயிடணும். இவன், நானு கறி வெட்டுறதை எல்லாம் பார்க்கவே கூடாதுனு,‌ இவ்வளவு நாளும்‌ இங்க வரவிடாம வச்சிருந்தேன் மாமா. நீங்க தூக்கிட்டு வரவும்‌, ஒருமாதிரி ஆகிடுச்சு!” என்றவனின் சொற்களில், மகனின் எதிர்காலத்தைப் பற்றிய தந்தையின் பரிதவிப்பு அப்பட்டமாய்த் தெரிந்தது.

ஆதரவாய் அவனது தோளில் தட்டிக் கொடுத்த மோகன், “பாலனோட வாழ்க்கைப் பாதையை, நீயி தேர்ந்தெடுக்க முடியாது சேரா. என்ன செய்யணும் செய்யக்கூடாது, எது வேணும் வேணாம்னு அவன் முடிவெடுப்பான்.. உனக்கு வேணும்கிறதை நீயே செஞ்சிக்கிறது மாதிரி. அதுனால இதைப் பத்தி எல்லாம் யோசிக்காம, சாப்பிட்டு வேலையைப் பாரு!” என்று கொடுத்துவிட்டுச் செல்ல, காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் குரலிற்கு ஓடினான் சேரல்.

குழந்தை கீதாவுடன் இருக்க, தமிழிற்குப் பணிகளைச் செய்ய வசதியாய்ப் போயிற்று. காலையிலேயே வெளியே கிளம்பியவள், ஊரார்களை எல்லாம் சந்தித்துப் பேசிவிட்டு, மதியம் தான் இல்லம் வந்து சேர்ந்தாள்‌. சிறிது நேரத்திலேயே, கறியைக் கொடுத்துச் சென்றான் சாரங்கன்.

சமையலை முடித்தவள் அடுத்தப் பணியைத் துவங்க, மதியம் மூன்று மணியளவில் மகனோடு வந்தான் சேரல்.

“ம்மா.. ம்மா..” என அன்னையைக் கண்டதும் பாலன் ஓட, “அண்ணி வீட்டுக்கு, போயிட்டு வர்றீங்களா அத்தான்.?”

“ஆமா.. காலையில மாமா வந்தப்ப சரியா பேச முடியல. அதான்..”

“சாப்பிட்டீங்களா?”

“இல்லமா. இங்க நீயி செஞ்சு வச்சிருப்ப. அங்க சாப்பிட்டா, திட்டுவியே.?”

“ஆமாமா.. அப்படியே பொண்டாட்டிச் சொல்லைத் தட்டாத புருஷன்தான். வருசத்துல முக்கால்வாசி நாளு இங்கேயும் அங்கேயும் தூக்குவாளியும் டிஃபன் பாக்ஸும் டிராவல் பண்ணிக்கிட்டு தான இருக்கு? அதுசரி, அது என்ன பையி.?” என வாயிலில் நிறுத்தியிருந்த அவனது வாகனத்தைப் பார்த்து வினவ, “அச்சச்சோ.. அக்கா உனக்கு ரெத்தப் பொரியல் கொடுத்து விட்டுச்சு! நல்லவேளை, நானு உள்ள வந்த கேப்ல நாய் கவ்வீட்டுப் போகல.” என்று எடுத்து வந்து தந்தான்.

அவள் கேலியாய்ச் சிரித்து, “உண்மைய சொல்லுங்க பார்ப்போம், கொஞ்சமா சாப்பிட்டு தான வந்தீங்க?”

பாவமாய்ப் பார்த்தவன், “என்ன தமிழ்மா, இப்படிக் கண்டுபிடிச்சா எப்படி.?”

“செருப்பைக் கழட்டும் போதே, தமிழ்மா பசிக்கிது ஏலம் விட்டுக்கிட்டே வருவீங்க. இன்னைக்கு மூச்சுப் பேச்சு இல்லாம வந்து நிக்கிறீங்களே! இதுல நானு கண்டுபிடிக்கிறேனாம்?”

அவன், “மண்டையில இருக்கக் கொண்டைய மறந்த கதை ஆகிடுச்சே?” எனச் சிரிக்க.. அவளும் சிரித்து, “பாலாவுக்கு ஃபீட் பண்ணீட்டு தர்றேன். தூங்க வச்சிடுங்க அத்தான். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு!” என்று மகனின் வயிற்றை நிறைத்துக் கொடுத்தாள்.

தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்த சேரல் தொட்டிலில் போட்டுவிட்டு, “என்ன செய்யிற, தமிழ்மா.?” என வினவியவாறே அருகில் வந்தான்.

“கலெக்டருக்கு மனு எழுதுறேன்.”

அவன் கேள்வியாய் நோக்க, “நம்ம ஊருக்கு, ரோடு போடுறது சம்பந்தமா அத்தான். கவர்மெண்ட்ல பேசி, அவங்க பட்ஜெட்ல பணம் ஒதுக்கி, இங்க வேலை நடக்குறதுக்கு எல்லாம் ரொம்ப நாளாகும். கிராம தன்னிறைவு திட்டம்னு ஒண்ணு இருக்கு. நமக்குத் தேவையானதை நாமளே செஞ்சிக்கிறது. அதுக்குக் கவர்மெண்ட்ல இருந்து பணம் கொடுப்பாங்க. நூத்துக்கு முப்பத்திநாலு பர்சண்ட் நம்ம பணம். மீதி அறுபத்தாறு அவங்களோடது. இது மூலமா ரோடு, ஸ்கூல் காலேஜ் ஹாஸ்பிடல் சீரமைப்பு, லைப்ரரி அங்கன்வாடிக்குக் கட்டிடம், தண்ணி வசதி, தெருவிளக்குப் போடுறது, அவசியம்னா சின்னப் பாலம், பார்க், விளையாடுறதுக்கு க்ரௌண்ட், குப்பையை உரமா மாத்துறது, சுகாதாரம் சம்பந்தமான வேலைனு எல்லாமே செஞ்சிக்கலாம்.”

அவன் வியப்பாய், “இப்படி ஒண்ணு இருக்கா.?”

“ம்ம்.. நீங்கதான் ஏற்கனவே ஊர்க்காரவங்கக்கிட்ட பணம் வசூல் பண்ணி வச்சிருக்கீங்க இல்ல.? அதையே யூஸ் பண்ணிக்கலாம். நமக்கு என்னென்ன தேவை இருக்கோ அதை எல்லாம் மென்சன் பண்ணி, மொத்தம் ஆகுற செலவுல மூணுல ஒரு பங்கு காசை பேங்க்ல டிடியா எடுத்து கலெக்டர் ஆஃபிஸ்ல கொடுத்தோம்னா.. மீதி பணத்தை அவங்க போட்டு வேலை நடக்க ஏற்பாடு செய்யிவாங்க.”

“இது, காண்டிராக்ட் மாதிரி ஏலத்துக்கு விட்டுச் செய்யிறது தான.?”

“ஆமா அத்தான்.”

“அதுமாதிரி இல்லாம, நாமளே ஆள்வச்சுச் செய்ய முடியுமா தமிழ்மா.?”

“ஏன், இப்படிக் கேட்கிறீங்க.?”

“காண்டிராக்ட் காரனுங்களை நம்ப முடியாது‌. ஆறே மாசத்துல, ரோடு பேந்திரும். தார் எல்லாம் உருகிட்டு வந்திடும்‌. நாமளே செய்யிறதா இருந்தா, பக்கத்துல இருந்து கவனிக்கலாம். ஏதாவது தப்பு செஞ்சாலும், சட்டையைப் பிடிச்சுக் கேள்விக் கேட்கலாம்ல.?

அப்பா சொல்லுவாரு, ‘நாலு பேரு நம்மளால வாழ்ந்தாங்கனு இருக்கணுமே தவிர.. நாம செய்யிற ஒரு வேலையால மத்தவன் கஷ்டப்பட்டான்னு பேரு வந்திடக் கூடாது’னு‌.‌ செய்யிறது செய்யிறோம், அதைத் திருந்த செய்யிவோம். நாம போன பின்னாடியும்.. செஞ்ச வேலை, நம்ம பேர் சொல்லணும்.”

கணவனை அன்பொழுக பார்த்தவள், “அப்படி நாமளே செய்யிறதா இருந்தா, செலவுல பாதிப்பணம் கொடுக்கணும்.”

“ம்ம்.‌. கொடுப்போம். இப்போதைக்கு ரோடு முக்கியம். பஸ்ஸு ஊருக்குள்ள வரணும்.‌ இதுக்கு எவ்வளவு செலவு ஆகும், என்னென்ன வழிமுறைனு பாரு.”

“சரி. வாங்க முதல்ல சாப்பிடுவோம்.”

“நீயி வேலையைப் பாரு தமிழ்மா. நானு எடுத்துட்டு வர்றேன் ரெண்டு பேருக்கும்!” என எழுந்து சென்றான் சேரல்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!