Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எனைச் சுற்றி ஏகாந்தம்

அத்தியாயம் 1-2 : எனைச் சுற்றி ஏகாந்தம்

தென்காசி மாவட்டத்தில் அமைந்த சோலையூர் என்ற அழகான கிராமம் தான் அவனுடைய ஊர், அழகும் குளிர்ச்சியும் கொண்ட பூமி தான். தமிழின் தந்தை கதிரேசன் தாய் சரோஜா. அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவன் தான் தமிழரசன். அவனுக்கு அடுத்து ஜெயா, அடுத்து அமுதா, கடைசியாக தேவி.

 

இப்போது அவன் தந்தை உயிருடன் இல்லை. அவன் வெளிநாட்டுக்கு வருவதற்கு முன்பே அவர் இறந்து விட்டார். முதல் இரண்டு தங்கைகளை திருமணம் செய்து கொடுத்து விட்டான். ஒரு வீட்டைக் கட்டி விட்டான். இன்னொரு வீட்டை வாங்க முடிவு எடுத்து விட்டான். மூன்றாவது தங்கைக்கு திருமணத்துக்கு என்று நகையும் சேர்த்து விட்டான். அவனுடைய எல்லா கடமையையும் முடித்து விட்டான். அவன் இங்கே வந்து பத்து வருடங்கள் முடியப் போகிறது.

 



Advertisement

இன்னும் இரண்டு மாதத்தில் அவனுக்கு காண்ட்ராக்ட் முடிகிறது. அவன் இந்தியா செல்ல வேண்டும். முன்பெல்லாம் தாய்நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற வெறியே இருந்தது. ஆனால் இப்போது போகப் பிடிக்க வில்லை. ஆனால் இங்கே இருக்கவும் பிடிக்க வில்லை.

 

அவன் வெளிநாட்டுக்கு வருவதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவன் மனக் கண்ணில் படமாக ஓடியது. உள்ளம் வேதனையில் கசங்கியது. ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் அவன் கண்கள் கண்ணீரைப் பொழிந்தது.

Advertisement

 

Advertisement

பதினொரு வருடங்களுக்கு முன்பு….

 

தமிழ் ஐ.டி.ஐ படித்து விட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருந்த சிப்காட்டில் இருந்த ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான். மாதம் பன்னிரெண்டாயிரம் வருமானம் அவ்வளவே. அப்போது அவனுக்கு வயது இருபத்தி இரண்டு.

Advertisement

 

அவனது தந்தை அப்போது உயிரோடு இருந்தார் ஆனால் குடிக்காரனாக. தாயும் பீடி சுற்றும் வேலை தான். மூத்தவள் ஜெயா பன்னிரெண்டாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டாள். அமுதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். கடைசி பிள்ளையான தேவி பத்தாம் வகுப்பில் இருந்தாள்.

 

தன்னுடைய குடும்ப சூழ்நிலை தமிழுக்கு தெரியும் தான். ஆனால் அவன் படிப்புக்கு வேறு என்ன செய்ய என்று தெரிய வில்லை. அவனுக்கு அந்த வேலை கிடைத்ததே கொஞ்சம் பெரியது தான்.

 

விடுமுறை நாட்களில் எலெக்ட்ரிசியன் வேலைக்கும் போவான். மற்ற படி அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவன் தந்தையைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ தண்ணி அடிப்பது, தம் அடிப்பது என அனைத்தையும் வெறுத்தான். குடும்பத்துக்கு மூத்த மகனாக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது தான். ஆனால் அதற்கு வழி தான் தெரியவில்லை.

 

அப்போதெல்லாம் அவனுக்கு ஆதரவு அவனுடைய அத்தை குடும்பம் தான். கதிரேசனின் உடன் பிறந்த தங்கை மீனாட்சியின் குடும்பம் தமிழுக்கு பக்க பலமாக இருந்தது. மீனாட்சி அவளுடைய கணவன் சிதம்பரம் மகள் வைஷ்ணவியுடன் அதே ஊரில் தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். வைஷ்ணவி தமிழை விட ஆறு மாதம் மூத்தவள். ஆனால் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

 

தினமும் ஒரு முறையாவது தமிழ் அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டு தான் வருவான். சொந்த அத்தையான மீனாட்சியிடம் ஒட்டுவதை விட அவன் அதிகம் தேடுவது சிதம்பரத்தை தான். சிறு வயதில் இருந்து அவனுக்கு வழிகாட்டி, தோழன் அனைத்தும் அவர் தான். தமிழுக்கு தந்தை இருந்தும் இல்லாத நிலையில் அவனுக்கு தந்தையாக இருந்தது சிதம்பரம் தான். அவன் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்ததும் அவன் கல்லூரிப் படிப்பை தேர்ந்தெடுக்க அவனை தொழிற்கல்வி படிக்க சொன்னது அவர் தான். சில நேரம் அல்ல பல நேரம் அவனுக்கு பீஸ் கட்டுவதும் அவர் தான்.

 

சிதம்பரம் விவசாயி தான். அதனால் அவரால் முடிந்த அளவுக்கு மட்டுமே தமிழின் குடும்பத்துக்கு உதவ முடிந்தது. அதுவுமே சரோஜாவுக்கு தெரியாமல் தான். சரோஜாவுக்கு இவர்களை கண்டாலே ஆகாது. ஏனோ கதிரேசனால் தன்னுடைய வாழ்க்கை பாழாகி இருக்க தன்னுடைய நாத்தனாரான மீனாட்சி மட்டும் நன்றாக இருக்கிறாளே என்ற வயித்தெரிச்சல் சரோஜாவுக்கு உண்டு.

தமிழின் தந்தை மொடாக் குடிக்காரர். பகலில் ஏதாவது வேலை செய்து சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தாலும் இரவு முழுக்க குடித்து விட்டே வருவார். குடிக்கே அவர் சம்பளம் போனது. சரோஜா பீடி சுற்றுவாள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூப்பிட்டால் தோட்ட வேலைக்கு போவாள். தமிழின் அன்னை சரோஜாவுக்கு கணவர் குடித்து விட்டு வந்தாலே பிடிக்காது. மகள்களை சாப்பாடு போடச் சொல்லி ஒதுங்கி விடுவாள்.

 

கதிரேசனும் சரோஜாவும் பேசியே பல வருடங்கள் ஆகி விட்டது என்று சொல்லலாம். எண்ணற்ற கனவுகளுடன் கதிரேசனை கை பிடித்த சரோஜாவின் வாழ்க்கை திசை மாறியது அவளுக்கு பிடிக்க வில்லை. விதியே என்று சகித்துக் கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். அதுவும் கணவரும் சரி இல்லாமல், பணமும் இல்லாமல் கிடைத்ததை வைத்து, கடன் வாங்கி நான்கு பிள்ளைகளை வளர்ப்பது கடினம் தானே?

 

கணவரால் அவள் பட்ட அவமானங்கள் பல. அதனால் அவள் மனதுக்குள் எப்போதும் ஒரு வெறுமை இருக்கவே செய்யும். பிள்ளைகளிடம் கூட சரோஜா சிரித்து பேச மாட்டாள். எப்போதும் கடுகடுவென்று இருக்கும் அன்னையும், குடித்தே சீரழியும் தந்தையும் இருந்தால் அந்த பிள்ளைகள் நிலை எப்படி இருக்கும்?

 

ஓரளவுக்கு தாய் தந்தையைப் பற்றி புரிந்து கொண்ட தமிழ் மூன்று தங்கைகளுக்கும் தாய் ஆனான். ஆனால் சில நேரம் அவனுக்கே சாய்ந்து கொள்ள தோள் தேவைப்படும். அவன் சாயும் தூண்கள் அவனுடைய அத்தை குடும்பம் தான்.

 

சரோஜாவுக்கு மீனாட்சியைக் கண்டாலே பிடிக்காது. பிள்ளைகளையும் அவர்களுடன் அதிகம் ஒட்ட விட மாட்டாள். பெண் பிள்ளைகள் மூவரும் அத்தை குடும்பத்துடன் அன்னைக்காக ஒட்டாமல் போனாலும் தமிழ் அன்னை சொல்வதை காதிலே வாங்கிக் கொள்ள மாட்டான்.

 

குடும்ப சூழ்நிலை இப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் கதிரேசன் இறந்து போனார். குடித்து குடித்தே செத்துப் போனார் என்று தான் சொல்ல வேண்டும். தந்தை இறந்ததும் தமிழுக்கு அனைத்தும் ஸ்தம்பித்த நிலை. கதிரேசன் குடி குடி என்று இருந்தாலும் இத்தனை நாள் தந்தை என்று ஒருவர் இருந்ததே பெரிய விஷயம் தானே?

 

அவர் குடித்து விட்டு வரும் போதெல்லாம் அவன் அவரை வெறுத்தாலும் மற்ற நேரங்களில் எல்லாம் “ராசா சாப்பிட்டியா?”, என்று அவ்வளவு ஆசையாக கேட்பார். அதுவும் குடித்து விட்டால் போதும்… “நீ தான் யா என் குலசாமி. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் யா? ஆனா இந்த அப்பாவை உனக்கு பிடிக்காதுல்ல?”, என்று புலம்புவார்.

 

குடி போதையில் அவர் புலம்புகிறார் என்று எண்ணினாலும் அவர் அன்பு அவனுக்கு புரியும். அவர் மேல் அவன் அன்பு வைக்க காரணமே வைஷ்ணவி தான். அவளுக்கு சிறு வயதில் இருந்தே கதிரேசன் மாமாவை பிடிக்கும்.

 

குடியை தவிர அவரிடம் வேறு என்ன கெட்ட பழக்கம் இருக்கிறது என்று எண்ணுவாள்? அப்படி பேசி பேசியே தான் தமிழின் மனதில் தந்தை மீது பாசத்தை வளர்த்திருந்தாள். அதனால் தந்தையின் இறப்பு தமிழை அதிகம் பாதித்தது.

 

“உன்  மேல நான் பாசம் வைக்காமலே இருந்துருக்கலாம் பா?”, என்று எண்ணியவன் கண்கள் கலங்க அவனை ஆதரவாக அனைத்துக் கொண்டார் சிதம்பரம்.

 

இத்தனை நாள் உயிருடன் நடமாடிக் கொண்டிருந்த கதிரேசன் நடு வீட்டில் உயிரற்ற உடலாக படுத்திருக்க பெண் பிள்ளைகள் மூவரும் ஒரு ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாலும் கதிரேசனின் கையைப் பற்றி அழுது கொண்டிருந்தது வைஷ்ணவி தான். அவள் அருகே மீனாட்சி அண்ணனை எண்ணி அழுது கொண்டிருந்தாள். சரோஜா முகமோ கலங்கி இருந்தாலும் ஏங்கி ஏங்கியெல்லாம் அழ வில்லை.

 

அந்த அளவுக்கு கணவர் மேல் அவளுக்கு பாசம் இல்லை என்று சொன்னால் கூட சரியாக தான் இருக்கும். சிதம்பரம் தான் முன்னே இருந்து எல்லாம் பார்த்துக் கொண்டார்.

 

பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும் அனைவரையும் அடுத்த அதிர்ச்சி தாக்கியது கடன்காரன் ரூபத்தில். வீட்டை அடமானம் வைத்து குடித்தே அழித்திருந்தார் கதிரேசன்.

 

“பாவி பய இருந்து தான் கொன்னான்னா செத்தும் இப்படி பண்ணிட்டு போய்ட்டானே?”, என்று கதறிக் கொண்டிருந்தாள் சரோஜா. இது தான் அவளது கணவரைப் பற்றிய அவளது மதிப்பீடு.

 

என்ன செய்ய ஏது செய்ய என்று தெரியாமல் திணறிய தமிழை அணைத்துக் கொண்ட சிதம்பரம் “இப்போதைக்கு கடன் அடைக்கிற அளவுக்கு என் கிட்ட பணம் இல்லை தமிழு. வீட்டைக் கொடுத்துரு. வேற வழி இல்லை. எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்துருங்க. எங்க கூட உங்க அம்மா ஒட்ட மாட்டா. பக்கத்து வீடு சும்மா தானே இருக்கு. அங்க வந்துருங்க”, என்று அழைத்தார்.

 

மீனாட்சியும் சரோஜாவின் மீதிருக்கும் கோபதாபங்களை விட்டுவிட்டு அவளை அழைத்தாள். அவர்களுக்கும் வேறு வழி இல்லையே. அதனால் சம்மதித்தாள். அடுத்த இரண்டு நாளில் இருந்த ஒரே சொத்தான வீடும் கையை விட்டுப் போய் சிதம்பரத்தின் வீட்டுக்கு வந்தார்கள்.

 

தமிழ் மாமாவிடம் வாடகை கொடுப்பேன் என்று தான் சொல்லி இருந்தான். ஆனால் அவனால் அது முடியாமலே போனது. சிதம்பரமும் அதை எதிர் பார்க்கவே இல்லை.

 

இது வரை வீட்டுக் கவலை இருந்தாலும் இப்போது தங்கைகளைப் பற்றிய கடமை தமிழை வெகுவாக அலைக்களித்தது. மூன்று தங்கைகளை எப்படி கரை சேர்ப்பேன் என்று தெரியாமல் கலங்கினான்.

 

“விடு டா, எல்லாரும் இருக்கோம் தானே பாத்துக்கலாம்”, என்று அவனைத் தேற்றினாள் வைஷ்ணவி.

 

“முதல்ல கவலையை மறந்து இந்த சோத்தை சாப்பிடு. உனக்கு பிடிச்ச கெண்டைமீன் குழம்பு வச்சிருக்கேன்”, என்று சாப்பிடக் கொடுத்தாள் மீனாட்சி.

 

சிதம்பரமோ யோசனையில் ஆழ்ந்தார். அவனை சரியான பாதையில் வழி காட்ட வேண்டியது அவரது கடமை என்று அந்த நிமிடம் புரிந்தது. தன்னுடைய நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு அங்கே இங்கே என்று விசாரித்து அவனை பாரினுக்கு அனுப்ப முடிவு செய்தார்.

 

அவனைக் கூட்டிக் கொண்டு எங்கெங்கோ அலைந்தார். அவனுக்கு பாஸ்போர்ட் எடுத்து, விசா எடுத்து, அதற்கான பணத்தைக் கட்டி என அவர் செய்த உதவிகள் ஏராளம்.

 

முதலில் ஒரு பெரிய கம்பெனியில் எலெக்ட்ரிசியன் வேலை தான் கிடைத்தது. அவன் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என சம்மதித்தான். அவன் பாரின் போவது தெரிந்து சரோஜாவுக்கு அவ்வளவு சந்தோஷம். இனி தங்கள் நிலை மாறும் என்று உறுதியாக நம்பினாள். ஆனால் இதற்காக உதவிய சிதம்பரத்துக்கு ஒரு நன்றி கூட அவள் சொல்ல வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது இருப்பதே அவர் வீட்டில் தான் என்ற நன்றி உணர்வு கூட அவளுக்கு கிடையாது என்பது தான் வேதனையான விஷயம்.

 

ஆனால் அவள் நன்றியை சிதம்பரம் எதிர் பார்க்க வில்லை. அவர் எல்லாம் செய்தது தமிழுக்காக மட்டுமே. ஒரு வழியாக அவன் வெளிநாடு செல்ல வேண்டிய நாளும் வந்தது.

 

அவனுக்கு என உடைகள் சூட்கேஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்தது கூட வைஷ்ணவியும் சிதம்பரமும் தான். அவனுக்கு என ஊறுகாய் மற்ற பொருள்கள் என எல்லாம் எடுத்து வைத்தது மீனாட்சி தான். சரோஜா தெரிந்தவர்களிடம் என் மகன் பாரின் போறான் என்று பெருமை பேச மட்டுமே செய்தாள்.

 

அனைவரிடமும் சொல்லி விட்டு வீட்டில் இருந்து கிளம்பினான். சொந்த ஊரை விட்டு பழகியவர்களை விட்டு கிளம்புவது கஷ்டமாக இருந்தது. ஆனால் சரோஜா ஆறுதலாக ஒரு வார்த்தை பேசவே இல்லை. அவள் முகம் சந்தோஷமாக இருந்தது. தங்கைகள் மூவரும் தான் அவனை பிரியப் போவதை நினைத்து அழுதார்கள்.

 

வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்க முதலில் ஏறி அமர்ந்தது சரோஜா தான். அதற்கு அடுத்து ஜெயா அமுதா தேவி மூவரும் ஏற திகைத்தான் தமிழரசன். ஏனென்றால் அவனுடன் சிதம்பரம் மற்றும் வைஷ்ணவி இருவரும் தான் வருவது என்று பேசி இருந்தார்கள்.

 

“என்ன மா நீங்க எல்லாம் வரீங்க?”, என்று கேட்டான் தமிழ்.

 

“பின்ன? என் பிள்ளையை நாங்க வழி அனுப்ப வராம யார் வழி அனுப்புவா? சீக்கிரம் ஏறு, நேரம் ஆகிருச்சு”, என்று சரோஜா கேட்க தமிழ் தர்மசங்கடமாக சிதம்பரத்தைப் பார்த்தான்.

 

“பரவால்ல மாப்பிள்ளை. பத்திரமா போயிட்டு வா. அங்க போயிட்டு கேசவன் கிட்ட எல்லா உதவியும் கேளு. எங்களுக்கு போன் பண்ணு. உடம்பைப் பாத்துக்கோ. இங்க கவலைப் படாதே. நாங்க பாத்துக்குறோம்”, என்றார் சிதம்பரம்.

 

“நல்லா சாப்பிடு தங்கம். உடம்பைப் பாத்துக்கோ கண்ணப்பா. இந்த அத்தையை மறந்துறாத”, என்று சொல்லி அவனை கட்டிக் கொண்டாள் மீனாட்சி. அவனும் அத்தையை அன்பாக அணைத்துக் கொண்டான்.

 

அவன் வைஷ்ணவி புறம் திரும்ப அவள் கண்களில் அவனுடன் ஏர்போர்ட் வரைக்கும் செல்ல ஆசை தெரிந்தது. அது அவனுக்கு புரிந்தது. ஆனால் அழைக்கவா வேண்டாமா என்று அவன் குளம்ப மகள் மனது புரிந்து “அம்மாடி வைஷு, நீ வேணுன்னா அவங்க கூட போயிட்டு வா. ஆட்டோல ஏறிக்கோ டா”, என்றார் சிதம்பரம்.

 

“சரிப்பா”, என்ற படி அவள் ஏறப் போகும் போது “நீ எதுக்கு வைஷ்ணவி வர? ஆட்டோல நாங்க நாலு பேர் உக்காருதே இடைஞ்சலா இருக்கு. நீ வீட்லயே இரு. நாங்க தமிழை பிளைட் ஏத்தி விட்டுட்டு வரோம்”, என்று சொன்னாள் சரோஜா.

 

அதைக் கேட்டு வைஷ்ணவி முகம் கூம்பிப் போனது. சரோஜா அவளுக்கு சொந்த தாய் மாமாவின் மனைவி தான். அப்படி இருந்தும் சரோஜா அந்த பாசத்தை அவளிடம் காட்டியது இல்லை. பெற்ற பிள்ளைகளிடமே அப்படி இருப்பவள் வைஷ்ணவி மேல் பாசம் வைத்து விடுவாளா என்ன?

 

சரோஜா சொன்னதைக் கேட்டு வாடியது தமிழின் முகமும் தான். “சரிங்க அத்தை நான் வரலை”, என்று சரோஜாவிடம் சொல்லி விட்டு “நீ பாத்து போயிட்டு வா தமிழ். அப்பா நம்பருக்கு கால் பண்ணு. வேலை கஷ்டமா இருந்தா திரும்பி வந்துரு டா”, என்று அவனிடம் சொன்னாள் வைஷ்ணவி.

 

அவளை பார்த்து மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் “சரி டி, போய்ட்டு வரேன். வரேன் மாமா. போயிட்டு வரேன் அத்தை”, என்று அனைவரிடமும் சொல்லி விட்டு ஆட்டோவில் டிரைவருடன் முன் பக்கம் ஏறி அமர்ந்தான். ஆட்டோ கிளம்பியது. மூவரையும் பார்த்துக் கொண்டே சென்றான் தமிழ்.

 

ஆட்டோ சென்றதும் “வைஷ்ணவி முகம் ஒரு மாதிரி இருக்க “உன் அத்தையைப் பத்தி தான் உனக்கு தெரியுமே டா? விடு”, என்று அவளுக்கு சமாதானம் சொன்னார் சிதம்பரம்.

 

இருந்தாலும் சிறு வயதில் இருந்து ஒன்றாக இருந்த நண்பனின் பிரிவு அவளை பாதிக்கவே செய்தது. ஆட்டோவில் சென்று கொண்டிருந்த தமிழுக்கோ வைஷ்ணவி முகமே நினைவில் வந்தது.

 

அன்னையும் தங்கைகளும் எதை எதையோ பேசிய படி வர அவன் மனதில் எதுவுமே பதிய வில்லை. ஆனால் ஏதோ ஒரு எரிச்சல் மட்டும் அவனை ஆட்கொண்டது. “அவளும் வந்தால் தான் என்னவாம்? இந்த அம்மா ஏன் இப்படிச் செய்றாங்க?”, என்று எண்ணிக் கொண்டான்.

 

ஏர்போர்ட்டில் சென்று இறங்கியதும் அந்த இடத்தை அனைவரும் ஆர்வமாக சுற்றிப் பார்க்க ஏர்போர்ட் வாசலில் வைத்தே “சரி மா நான் கிளம்புறேன்”, என்று சொன்ன தமிழ் மூன்று தங்கைகளிடமும் தனித்தனியாக விடை பெற்றான்.

 

“என்ன டா இங்க இருந்தே விரட்டுற? எங்களையும் உள்ள கூட்டிட்டு போ”, என்றாள் சரோஜா.

 

அன்னை தங்கைகளை உள்ளே அழைத்துச் செல்லலாம் தான். ஆனால் வைஷ்ணவி காயப் பட்ட கோபத்தில் “உள்ள போனா ஒவ்வொருத்தருக்கும் டிக்கட் எடுக்கணும் மா. அதுக்கு ரொம்ப பணம் ஆகும். இப்போதைக்கு ஏற்கனவே நிறைய செலவு. இதுல இது வேறயா? அடுத்த தடவை கூட்டிட்டு போறேன்“, என்று சொல்லி விட்டு அவர்களை ஆட்டோவில் அவர்களை ஏற்றி அனுப்பி விட்டு உள்ளே சென்றான். மனம் மட்டும் கனத்து கிடந்தது.

 

அதற்கு பின் முதல் விமானப் பயணமும், புது இடமும், முதன் முதலில் பார்த்த வேலையும், கிடைத்த சம்பளமும் நினைவில் வந்தது. வீட்டுக்கு அழைத்து பேசியது, வைஷ்ணவியை அழைத்து பேசியது, மொழி தெரியாமல் திணறியது என அனைத்தும் நினைவில் வந்தது. அதற்கடுத்தும் அவன் வாழ்க்கையில் என்ன எல்லாமோ நடந்து விட்டது. இப்போது அதை நினைத்தால் மனம் இன்னும் வேதனை படும் என்பதால் அமைதியாக இருக்க முயன்றான். அருகில் படுத்திருந்த செந்திலை திரும்பிப் பார்த்தான். அவனோ நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.

 

செந்திலின் வேலை கடினமாக இருக்கும். முன்பு தமிழும் அந்த வேலையைப் பார்த்திருக்கிறானே? உடல் அசதியில் அவன் உறங்குவது நன்கு புரிந்தது. தமிழும் தாவும் மனதுக்கு கடிவாளம் போட்டு விட்டு தூங்க ஆரம்பித்தான்.

 

அடுத்த நாள் இருவருக்கும் விடுமுறை என்பதால் கொஞ்சம் நேரம் கழித்தே எழுந்தார்கள். அவர்கள் காலை உணவை முடித்து விட்டு அறைக்குள் வந்ததுமே அவனுக்கு வைஷ்ணவியிடம் இருந்து அழைப்பு வந்தது. வைஷ்ணவிக்கு அவர்கள் ஊரைச் சேர்ந்த சேகர் என்பவனுடன் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இப்போது அவர்களுக்கு இரண்டு வயதில் நிரஞ்சனா என்ற பெண் குழந்தை இருக்கிறது.

 

வைஷ்ணவியின் அழைப்பை பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது. சந்தோஷமாக அவள் அழைப்பை எடுத்தான். அவன் எடுத்ததும்  “சாரி டா, தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”, என்று கேட்டாள்.

 

“இல்லை வைஷு. இப்ப தான் சாப்பிட்டு வந்தேன். நீ சாப்பிட்டியா? சேகர் என்ன பண்ணுறார்? பாப்பா எப்படி இருக்கா? அம்மா எப்படி இருக்காங்க”, என்று அவர்களின் நலனையும் சேகரின் தாயையும் கேட்டான்.

 

“எல்லாரும் நல்லா இருக்காங்க டா. பாப்பா தூங்குறா. அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை”

 

“ஐயோ, என்ன ஆச்சு குட்டிக்கு?”

 

“லேசா பீவர் தான் டா. இப்ப சரியாகிட்டா. நீ நல்லா இருக்கியா? சேகர் அத்தான் தான் இன்னைக்கு தமிழுக்கு லீவ் தானே? கால் பண்ணுன்னு சொன்னாங்க. அதான் பண்ணுனேன். அப்புறமா வேணா பேசவா டா? நீ வேணும்னா தூங்குறியா?”

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை வைஷு, இப்ப தான் சாப்பிட்டு வந்தேன்”, என்று சொன்னவன் சிறிது நேரம் வைஷ்ணவியிடம் பேசி விட்டு சேகரிடமும் பேசி விட்டு போனை வைத்தான். பின் சிதம்பரத்துக்கு அழைத்து பேசியவன் அத்தையிடமும் பேசினான். பின் ஜெயா மற்றும் அமுதாவுக்கு அழைத்து அவர்களின் பிள்ளைகளிடமும் பேசினான்.

 

ஆனால் மறந்தும் சரோஜாவுக்கும் தேவிக்கும் அழைக்க வில்லை. சரோஜாவிடம் அவன் பேச்சை நிறுத்தி ஐந்து வருடம் ஆகிறது. அன்னை வீட்டில் இல்லாத நேரம் தேவியே அவனை அழைத்து பேசுவாள். செந்தில் அவனுடைய மனைவியிடம் பேசிக் கொண்டிருக்க தமிழுக்கு மீண்டும் பழைய நினைவுகள் அணிவகுத்தது. அதெல்லாம் அவன் தாயைப் பற்றி அவன் அறிந்து கொண்ட நிகழ்வுகள். மனம் கனத்துப் போனது.

 

தொடரும்…..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!