Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கவிபாடும் கானகமயிலே

கானகமயில் -19

கானகமயில் -19



Advertisement

“இவன் எப்படி இங்கு வந்தான்?” என்ற கேள்வியை தனக்குள் தாங்கிக் கொண்டு நின்றிருந்த பெண்ணவளை அழகன், மகேஷ் சாகர் மூன்று பேருமே கவனிக்கவில்லை.

அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை ஒற்றை வார்த்தை ஒலியிலேயே கண்டு கொண்ட அழகனோ அவள் முகம் காண ஆவலாய் வாயிலையே பார்த்திருக்க, உள்ளே இருப்பர்களது பேச்சு குரலும், வாக்குவாதமும் வெளியில் இருப்போருக்கும் கேட்டது.

Advertisement

அகண்டனோ, “மலர் விரைந்து சமைத்திடு, வந்திருக்கும் விருந்தினர்களுக்கு நம் இல்லத்தில் இருந்து தான் உணவு கொடுக்க வேண்டும் என்று அப்பர் கூறச் சொன்னார் ” என்றான்.

Advertisement

அதற்கு தென்மலரோ, “இல்லை நான் சமைக்கவில்லை. வேண்டுமென்றால் தென்றலைச் சமைத்திட கூறலாம் அவள் சமைத்தால் சுவையாக இருக்கும். நான் சமைத்தால் தங்களைத் தவிர்த்து யாரும் நன்றாக இருக்கிறது என்று கூறுவதில்லை. அவ்வாறு இருக்கையில் விருந்தினர்களுக்கு என்னை சமைக்க கூறுகிறீர்களே இது சரிவருமென்று தோன்றவில்லை மாமகனே.”

(மாமகன்- தாயுடன் பிறந்தவன்..)

“என்னால் மட்டும் என்ன செய்திட இயலும். அப்பரே கூறியதற்கு பிறகு அவர் வார்த்தைகளை மறுத்து பேசுவதற்கு எனக்கு நா எழவில்லை. தெரிந்த வரை சமைத்திடு வேண்டுமென்றால், நான் உதவி செய்திடவா” என்று அவன் கேட்ட சில மணித்துளிகளிலேயே குழந்தையின் அழுகுரல் இவர்கள் இருவரைது செவியையும் தீண்டியது.

Advertisement

“பாருங்கள் இதற்கு மேல் நானே நினைத்தாலும் கூட சமைத்திட இயலாது. அகலிகை எழுந்து விட்டாள். நான் அவளை பார்க்கிறேன் இன்னும் சில மணித்தியாலங்களில் தென்றல் வந்துவிடுவாள் அவளிடம் கூறுங்கள் நன்றாகவே சமைத்து வைப்பாள்” என்று கூறிவிட்டு உள்ளே தடுப்பு போல் இருந்த பகுதிக்குள் நுழைந்தவள் தொட்டிலில் எழுந்து அமர்ந்து சிணுங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி இடையில் இறுத்திக் கொண்டு வெளியே வந்தவள்,

“என்னவாயிற்று என் தங்க பெண்ணுக்கு. ஏன் அழுகிறாய், தாயின் இடையிலேயே அமர்ந்துக் கொண்டிருக்க வேண்டுமோ? மற்ற வேலைகளை செய்யாது எப்பொழுதும் உன்னுடனே சுற்றிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? என்னைக் காணவில்லை என்றாலோ, உறக்கம் களைந்து எழுந்தாலோ அழுகிறாயே, அத்துனை பிரியமா என் மீது. என் செல்ல பெண்ணுக்கு தாயின் மீது அலாதி பிரியம் போலவே” என்று கொஞ்சி பேச, குழந்தையோ அவளைக் கண்டு புன்னகைத்தவாறு எச்சில் ஒழுக அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளைப் பார்த்து மீண்டும் சிரித்திட, நெஞ்சோடு குழந்தையை பொத்தி வைத்துக் கொண்டவளுக்கு ஏனோ இனம் புரியாத உணர்வு ஒன்று உள்ளமெங்கும் பரவிச் சென்றது. அதிலும் காலையில் புதிதாய் கண்ட ஆடவனைக் காண்கையில் தோன்றிய அதே உணர்வு மீண்டும் தோன்றிட, சட்டென்று முதுகை துளைக்கும் ஊசி பார்வையில் உடல் விரைத்தவள் இடதுபுறம் திரும்பி பார்த்து விட்டு அதிர்ந்து நின்றாள்.

ஏனெனில் காலையில் பார்த்த அந்நிய ஆடவன் இப்போது இங்கே அமர்ந்து இருப்பதைக் கண்டவளுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவளை விட அதிக அளவு நடுக்கத்தோடு அமர்ந்திருந்தான் மகேஷ். அவன் அருகில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த அழகனுக்கு அவள் கையில் இருந்த குழந்தையும் அவளும் சிறிதும் அன்னியமாக தெரியவில்லை. ஏதோ பல நாட்கள் கழித்து தன் உயிரைக் கண்ட உணர்வு. அவர்களைத் தன்னுள் ஆழப்புதைத்துக் கொள்ள ஆவல் பரபரத்தது. ஆனால் விழிகளால் மட்டுமே அவளை ஆரத்தழுவி தன் உயிருக்குள் நிரப்பிக் கொண்டு அமர்ந்திருந்தான்..

இதையெல்லாம் இன்னும் விறகு கட்டை தலையில் சுமந்தவாறு பார்த்துக் கொண்டிருந்த தென்றலோ, நாலு பக்கமும் குச்சி ஊன்றி மேலே பெரிய அளவினால் இலைகளைக் கொண்டு கூடாரம் அமைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் போட்டுவிட்டு மலரை நெருங்கியவள், “யார் இவர்கள் எதற்காக இங்கு வந்துள்ளார்கள்?” என்று வினவிட,

“எ.. எனக்கும் தெரியாது தென்றல்.‌ மாமகன் தான் அழைத்து வந்தாரென்று எண்ணுகிறேன். இவர்களுக்கு நம் இல்லதிலிருந்து தான் இன்று உணவு கொடுக்க வேண்டும் என்று அப்பர் கூறிவிட்டாராம். நீ சமைத்துக் கொடுத்துவிடேன் அகலிகை அழுது கொண்டே இருக்கிறாள் என்னவென்று தெரியவில்லை..”

“உனக்கும் தெரியாதா. ஆமாம், இவர்களை எங்கேயாவது பார்த்தது போல் நினைவிருக்கிறதா என்ன?” என்றதும் சட்டென்று மலரின் முகம் மாறியது.

நொடியில் அதை சீர்படுத்திக் கொண்டவள், “இல்லை இப்பொழுது தான் முதல் முறை காண்கிறேன். இதற்கு முன் நீ எங்கேனும் கண்டிருக்கிறாயா என்ன?”

“இல்லை எனக்கும் இவர்களைப் பார்த்தது போல் நினைவில் இல்லை. உனக்கு நினைவிருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காக கேட்டேன். சரி அந்நிய ஆடவர்கள் இருக்கும் இடத்தில் நீ இருக்க வேண்டாம். நீ செம்பட்டியின் இல்லத்திற்கு செல், நான் சமைத்து முடித்து இவர்களை அவர்களுக்கு உண்டான குடிலுக்கு அனுப்பி வைத்த பிறகு வந்து அழைத்துக் கொள்கிறேன். ஏனெனில் புதியவர்களைக் கண்டு அகலிகை மீண்டும் அழுவாள், அவளை சமாதானப் படுத்துவதற்குள் நமக்கு தான் போதும் போதும் என்றாகி விடும். விரைந்து செல்” என்று அவளை வலது புறம் இருந்த சந்து வழியாக செம்பட்டியின் இல்லத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு நகர்ந்த தென்றலின் பார்வை அவ்வப்போது அழகன் மீது அழுத்தமாய் படிந்து மீண்டது. ஆனால் அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. தொலைதூரத்தில் அச்சு அசலாக கவியின் சாயல் கொண்டு செல்லும் பெண்ணையே விழி விரித்துக் கண்டு கொண்டிருந்தான்..

உள்ளே நுழைந்த தென்றல் சமைப்பதற்கான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அகண்டனை நெருங்கியவள் சிறுகுரலில், “உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் மாமகனே” என்றாள்.

“என்ன கேட்க வேண்டும் விரைந்து கேள். விருந்தினர்களுக்கு தேவையான உணவை சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பர் கூறிவிட்டார். குழந்தை அழுததால் மலர் எடுத்து கொண்டு இங்கிருந்து சென்று விட்டபடியால் நீயும் நானும் தான் இணைந்து சமைத்தாக வேண்டும். எதுவாயினும் விரைந்து கூறு” என்றவாறு தன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தவன் சில கணங்களாகியும் அவளிடமிருந்து பதில் வராது போகவும் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க அவள் முகம் எதையோ கண்டு அச்சம் கொண்டது போல் இருந்தது.

எப்போதும் ஆண்களுக்கு நிகராக துடுப்புடன் இருப்பவள் இப்போது எதையோ கண்டு விட்டு அச்சம் கொண்டிருப்பது அவனுக்கு ஒரு வித நெருடலையே கொடுத்தது. அவள் கரம்பிடித்து இழுத்துக்கொண்டு பின்புற வாயில் வழியாக வெளியே வந்தவன், “இப்போது கூறு இங்கு நாம் பேசுவது அவர்களுக்கு கேட்காது. என்னவாயிற்று இசை, எதைக் கண்டு விட்டு உன் முகம் இப்படி அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறது.”

“அச்சம் என்று சொல்வதை விட குழப்பம் என்றே கூறலாம் ”

“என்ன குழப்பம்?”

“வந்திருக்கும் மூவரில் ஒருவரை நான் அறிவேன்”

“எவ்வாறு? வரும் வழியில் கண்டாயா அல்லது சுள்ளி பொறுக்க சென்ற இடத்தில் கண்டாயா?”

“இங்கு இல்லை. மலரை அழைத்து வந்தோம் இல்லையா அந்த ஊரில் கண்டேன்”

“என்ன அந்த ஊரிலா? அப்படியானால் அவனுக்கும் மலருக்கும் ஏதேனும்..?”

“தெரியவில்லை ஆனால் இவனது புகைப்படத்தை மலர் மறைத்து வைத்திருந்தாள் அதை நான் கண்டிருக்கிறேன்.”

“அப்படியானால் அகலிகை இவனது குழந்தையாக இருக்கும் என்று ஐயப்படுகிறாயா”

“உறுதியாக தெரியவில்லை. ஆனால் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.”

“அப்படியானால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து விடலாமா” என்று கேட்ட அகண்டனின் குரலிலும், முகத்திலும் தான் எத்தனை மகிழ்வு.

“அது அத்தனை எளிது கிடையாது. அனைத்தையும் மறக்கச் செய்து அவளை இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களது கடந்த கால நினைவுகள் ஒன்று கூட அவள் நினைவுகளில் இல்லை. அவ்வாறு இருக்கையில் இவரைப் பற்றி எப்படி அவள் அறிந்து கொள்வாள், இவரது நினைவுகளை தெரிந்து கொள்வாள்..”

“அவளுக்கு தான் தெரியாது. ஆனால் வந்திருக்கும் அவனுக்கு தெரிய வாய்ப்புள்ளதே. இங்கேயே தங்குவதற்காக வந்திருக்கிறார்கள், நிச்சயம் அவன் தான் அகலிகையின் தந்தை என்றால் தான் நேசித்த பெண்ணை எப்படி விட்டுக் கொடுப்பான்?”

“ஏன் நீங்கள் விட்டுக் கொடுக்க தயாராகவில்லையா?” என்று கேட்ட தென்றலிசையின் விழிகளில் நொடியில் நீர் கோர்த்துக் கொண்டது.

அதை துடைத்து விட அவனுக்கு ஆவல் இருந்தாலும், வெளியில் நின்று அதை செய்யத் துணிவின்றி மீண்டும் அவள் கரம் பற்றி இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன், உறங்குவதற்கென்று மறைத்தால் போல் தடுக்கப்பட்டிருந்த தடுப்புக்குள் அவளை இழுத்துச் சென்றவன், அவளை இறுகத் தழுவிக் கொண்டான்.

“என் நேசத்தை நான் தியாகம் செய்யவில்லை, அது ஒருபோதும் நிகழாது. எப்படி உன்னை கரம் பற்ற வேண்டும் என்று அனுதினமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அத்தனை எளிதில் உன்னை விட்டுக் கொடுப்பேன் என்று எண்ணாதே இசை. அப்படி உன்னை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் இந்த உடலில் உயிர் இருக்காது. அப்படி ஒன்று நிகழ்ந்தால் மரணத்தை விரும்பி ஏற்றிருப்பேன், என் உடல் மண்ணுக்கு உரமாகியிருக்கும் அதை நினைவில் கொள்” என்றவன் அவளை இன்னும் இறுகத் தழுவி அவள் பிறைநுதலில் முத்தமிட்டு விலகியவன்,

“இது நம் இருவரது திருமணத்திற்கான ஒப்பந்தம் நினைவில் கொள். நிச்சியம் நான் மலரின் கரம் பற்ற மாட்டேன், அப்பர் வேண்டுமென்றால் அவளை திருமணம் செய்து கொள் என்று என்னிடம் கூறியிருக்கலாம். மலரை தவிர அனைவரும் அந்த எண்ணத்தில் உள்ளார்கள். ஆனால் என் மனதில் நீ மட்டும் தான் உள்ளாய், உன்னை மட்டும் தான் என் மனைவியாக என்னால் வரிவடித்திட இயலும். உன்னுடன் மட்டும் தான் எனக்கான அனைத்தும் நிகழ வேண்டும் என்று பேராவல் என்னுள் உள்ளது. ஆகையால் எந்நிலையிலும் நீ கலங்கவும் கூடாது, அதேபோல் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சந்தேகிக்கலாகாது. என் மீது நீ கொண்ட நம்பிக்கை உயிர் உள்ளவரை நிலைத்திருக்க வேண்டும் புரிகின்றதா” என்று அவன் பொறுமையாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி சிறு குரலில் சொல்ல சரி என்பது போல் தலையசைத்தவளது, நெற்றியில் முத்தமிட்டு அடுத்து கன்னத்திலும் அழுத்தமாய் இதழ் பதித்து விலகியவன், “வா சமைப்போம்” என்று கூறி அவளை அழைத்துச் சென்றான்.

இருவரும் உணவுகளை சமைத்து முடித்து ‘அப்பாடா’ என்று மூச்செறிகையில், “குடிக்க தண்ணீர் கிடைக்குமா” என்று வெளியில் இருந்து குரல் கொடுத்தான் மகேஷ்.

அவர்கள் பேக்கில் இருந்த நீர் எப்போதோ தீர்ந்து விட்டிருந்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அவர்கள் மூவரும் அந்த இடத்தை விட்டு அசையாது அமர்ந்திருந்தார்கள். ஆனால் அழகனோ எப்போது மகேஷ் தன் கரத்தை விடுவிப்பான், கவி போல் தோற்றம் கொண்ட பெண் சென்ற திசையில் ஓடலாம் என்று காத்திருந்தான்.

அவன் எண்ணம் புரிந்ததாலோ என்னவோ அழுத்தமாக அவன் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் மகேஷ். அந்த பெண் கவி தானா என்று மகேஷூக்கும் சந்தேகம் எழுந்தது தான். ஆனால் அது உறுதியாக தெரியாமல் எந்த பிரச்சினையையும் கொண்டு வரக்கூடாது என்பதாலேயே அமைதி காத்தான். முதலில் குரலை அடையாளம் தெரியவில்லை என்றாலும், கவித்தாராவைப் போல் முகச்சாயல் கொண்டவளைக் கண்டு அதிர்ந்து போனான்.

அந்த அதிர்ச்சியில் சில நிமிடங்கள் கூட நீடிக்காமல் திரும்பி அழகனைப் பார்த்தான். முகம் முழுவதும் மகிழ்ச்சி தூறலை தாங்கிக் கொண்டு அந்த பெண்ணையே அவன் பார்த்திருப்பதைக் கண்டவனுக்கு திக்கென்று இருந்தது. ஏற்கனவே தவசீலன் வேறு படித்து படித்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ‘இங்க இருக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால் நிச்சயம் அதற்கான தண்டனையும் கடுமையானதாக தான் இருக்கும் என்று’ அப்படி இருக்கையில் வந்து சில மணி நேரங்கள் கூட ஆகாத நிலையில் இந்த இடத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இப்படி வெறிக்க வெறிக்க பார்க்கிறானே என்று உள்ளுக்குள் பயப்பந்து உருள, அக்கணமே எட்டி அழகனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். இல்லையேல் நிச்சயம் அந்த மலரின் பின்னால் சென்று இருப்பான் அழகன்..

தென்றலுடன் சேர்ந்த சமைத்து முடித்துவிட்டு வெளியில் வந்து அகண்டன் அவர்களுக்கு பருக நீர் கொணர்ந்து கொடுத்தான். அதை வாங்கி மூவரும் தாகத்தை தீர்த்துக் கொண்டார்கள். மூவரிடமும், “உங்களுக்கான குடிலை சுத்தப்படுத்த ஆட்களை அனுப்பி இருந்தேன் எதற்கும் ஒருமுறை நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன். அதுவரை நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று கூறிவிட்டு மலர் சென்ற அதே திசையில் சென்றவன் சில மணித்துளிகளில் மீண்டும் திரும்பி வந்தான்.

“உங்களுக்கான குடில் தயாராகிவிட்டது வாருங்கள் செல்வோம்” என்று இவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு செல்ல, அழகனோ அகண்டனை தாண்டி கொண்டு முன்னே செல்ல முயன்றான். ஆனால் அவன் கையை இழுத்துப் பிடித்த மகேஷ், “கொஞ்சம் பொறுமையா இருடா. வந்த அன்னைக்கே எதுவும் பண்ணி வச்சிடாத. ஒருவேளை அந்த பொண்ணு கவியா இருந்தா நிச்சியம் நம்மளை யாரோ மாதிரி பார்த்துருக்க மாட்டா.

ஆனா அந்த பொண்ணு கவியா இல்லாம வேற பொண்ணா இருந்து நாம எதாவது பேசி வச்சா, அதுக்கும் நமக்கு தான் பிரச்சனை வரும். கொஞ்சம் பொறுமையா இரு, உன்னோட ஆர்வம் எனக்கும் புரியுது. ஆனாலும் கொஞ்சம் பொறுமையா இரு” என்று சிறுகுரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னதால் அழகன் தன் பரபரப்பை சிறிது நேரம் மட்டும் விலக்கி வைக்க முடிவு செய்தான்.

சாகரோ இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. வழிநெடுகிலும் அந்த இடத்தை தான் சுற்றி பார்த்து கொண்டே வந்தான். வரிசையாக அதே போல் நேர்த்தியாக ஒரே போல் கட்டப்பட்டிருந்த குடிகள் அவனது கருத்தைக் கவர்ந்தன. அதிலும் சுற்றுச்சுவர்கள் ஒரு வகை கற்களால் கட்டமைக்கப்பட்டிருக்க, அவற்றின் மேற்கூரை மட்டும் வாழை இலை போல் நீளமாக இருக்கும் இலைகளால் அடுக்காக நேர்த்தியாக வேயப்பட்டு இருப்பதை கண்டு சிலாகித்து போனான்.

ஒரு சொட்டு மழைநீர் உள்ளே இறங்காத அளவுக்கு அடர்த்தியாக வேயப்பட்டிருந்தன அங்கிருந்த குடில்களின் மேற்கூரைகள். ‘எவ்வளவோ இன்ஜினியர்ஸ் வெளியே இருக்காங்க, எத்தனையோ கட்டிடங்கள் கட்டப்படுது. ஆனா அதையெல்லாம் விட இவங்க எவ்வளவு நேர்த்தியாக ஒவ்வொன்னையும் பண்ணி இருக்காங்க, பார்க்கவே ரொம்ப அழகா இருக்குது’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்..

இவர்களுக்கான குடிலுக்கு அகண்டன் அழைத்து வந்த போதே மரங்களின் இடையே தெரிந்த இடைவெளியில் நிலத்தை ஆக்கிரமித்திருந்த வெளிச்சம் மெல்ல உள்வாங்கிட, லேசாக இருள் கவிழ ஆரம்பித்தது. அதை பார்த்த மகேஷ், “அதுக்குள்ள இரவாகிருச்சா, இருட்டிக்கிட்டு வர்ற மாதிரி இருக்குது” என்று கேட்க,

அதற்கு அகண்டானோ, “இரவுப் பொழுது வருவதற்கு இன்னும் மணித்தியாலங்கள் இருக்கிறது. ஆனால் வெயிலின் தாக்கம் சற்றே குறைந்து இருக்கிறது. எனது கணப்பின் படி நிச்சியம் மழை வரும் போல்தான் தெரிகிறது. இதுதான் நீங்கள் தங்க வேண்டிய குடில்” என்று குடில் புறம் கரம் நீட்டி காட்டியவன்,

மீண்டும் உள்ளே நுழைந்து அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு வெளியே வந்தவன், “உங்களுக்கு தேவையான அனைத்தும் உள்ளே இருக்கிறது. சிறிது நேரத்தில் உணவோடு வருகிறேன். கூடவே இன்னொன்றையும் கூற விரும்புகிறேன்” என்றவனது விழிகள் அவ்வப்போது அழகனை தான் தொட்டு தழுவியது.

அதை மகேஷ் மட்டும் தான் கண்டு கொண்டான். அழகனோ விழிகளை நாலா திசையிலும் சுழல விட்டு அவளைத்தான் தேடிக் கொண்டிருந்தான்.

“சொல்லுங்க என்ன விஷயம்” என்று சாகர் கேட்டதும்,

“இங்கு நீங்கள் தங்குவது பெரிதல்ல. ஆனால் நாங்கள் கடைபிடிக்கும் சில சம்பிரதாயங்களை, பழக்க வழக்கங்களை, கலாச்சாரங்களை கண்டும் காணாமல் இருந்து கொள்வது நல்லது. நான் கூற வருவதைப் புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்” என்று கூறிவிட்டு சென்றான்.

சாகர், மகேஷ் இருவரும், ‘மறைமுகமா மிரட்டிட்டு போறான்’ என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைய, அழகனோ முன்புறம் இருந்த திண்ணையில் அமர்ந்து இன்னும் விழிகளை நாலாபுறமும் சுழல விட்ட நிலையில் தான் இருந்தான்.

அழகனுக்கோ அவனது நெருக்கமான உறவு இங்கு அருகில் இருப்பது போலான பிரம்மை தோன்றியது. அதே நினைவில் அமர்ந்திருந்தவன் எதிர் குடிலில் இருந்து இடையில் குழந்தையோட வெளியில் வந்த மலரைக் கண்டு அப்படியே எழுந்து நிற்க, அவளோ எதேச்சையாக இவன் இருந்த திசையைப் பார்த்தவள் ஆடாது ஆசையாது அப்படியே சிலையென சமைந்து நின்று விட்டாள். கையில் இருந்த குழந்தையோ இவனைக் கண்டதும் கைநீட்டி தூக்கச் சொல்வது போல் அழைத்திட, இவனுக்கு தான் உள்ளமெங்கும் இனம் புரியா உணர்வும், உடலெங்கும் புல்லரிப்பும் தோன்றி அவனை இம்சித்தது..

கரம் நீட்டி அழைக்கும் மழலையையும்
அம்மழலையை மடிதாங்கிய மங்கையும் மனதிற்குள்
மகிழ்வென்ற மலரை
மலரச் செய்வதேனோ?

மாற்றான் மனைவியென்ற எண்ணமில்லை.
வேற்றாள் பிள்ளையென்ற
உறுத்தலில்லை.
உயிரோடு பிணைந்திட்ட
உயிர்களென்றே எண்ணம் கொண்டேன்..

– கானகமயில் கவிபாடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!