Skip to content
Post Views: 12,727
அந்த மண்டபம் மொத்தமும் ஆட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் நிச்சயதார்த்தம். நாளை காலை திருமணம்.
மொத்தமும் மதுரையில் தான் ஏற்பாடாகி இருந்தது. சொந்தபந்தங்கள் நட்புக்கள் எல்லோரும் சேர்ந்து, ஆளுக்கொரு வேலையாக விழாவை கவனித்துக் கொண்டிருந்தனர்.
அந்த ஆர்பாட்டங்களை வெறுப்பாக பார்த்தபடி உள்ளே நுழைந்தான் மாதவன்.
திருமணத்தை நிறுத்தியே தீருவேன் என்று முடிவு செய்து சென்றவனை, எந்த வேலையும் செய்ய விடாமல் கட்டிப்போட்டது அவனுடைய தந்தையின் உடல் நிலை.
Advertisement
ஆனால் இன்று நிச்சயதார்த்தம். நாளை திருமணம் என்பதால் ஓடோடி வந்திருந்தான்.
முன்னால் இருந்த பெண்களும் ஆண்களும் அவனை வரவேற்றனர்.
“வாங்க தம்பி உட்காருங்க” என்று உபசரிக்க, “நான் உட்கார வரல” என்று எரிச்சலாகக் கூறினான்.
Advertisement
அவனது முகத்தில் தெரிந்த அதீத எரிச்சலை பார்த்த பெண்மணி, “நீங்க எல்லாரும் போய் மத்த வேலைய பாருங்க” என்று மற்றவர்களல அனுப்பி வைத்தார்.
Advertisement
“நீங்க யாரு தம்பி? அரசனுக்கு ஃப்ரண்டா?” என்று கேட்டு வைக்க, மாதவன் பல்லைக்கடித்தான்.
“இல்ல.. நான் வைசாலியோட லவ்வர். எனக்கும் அவளுக்கும் தான் கல்யாணம் நிச்சயமாச்சு” என்று கூற, அவர் அதிர்ந்தாலும், “கொஞ்சம் பொறு பா. வர்ரேன்” என்று வேகமாக சென்று விட்டார்.
அப்போது தான் மாதவனின் கோபம் மட்டுப்பட்டது. இந்த விசயம் பரவினால், நிச்சயமாக திருமணத்தில் குளறுபடி ஏற்படும். அதை வைத்து, தான் நினைத்ததை சாதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
Advertisement
அவனிடம் விசயத்தை கேட்டு விட்டு சென்றவர், ஒரு பெரியவரை அழைத்து வந்தார்.
“இந்த பையன் தான்” என்று காட்ட, அவர் தோளில் இருந்த துண்டை உதறி போட்ட படி, வேகமாக மாதவனிடம் வந்தார்.
“தம்பி.. கொஞ்சம் இப்படி வாங்க”
“யார் நீங்க?”
“வாங்க தம்பி சொல்லுறேன். அரசனுக்கு தாத்தா தான் நானு. வாங்க” என்று மாதவனை வழுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, அந்த மண்டபத்தின் மேல் தளத்துக்குச் சென்றார்.
அங்கு சில அறைகள் தங்குவதற்கு இருந்தது. அதில் ஒரு அறைக்குள் நுழைந்தனர்.
“இப்ப சொல்லுங்க தம்பி.. என்ன விசயம்?”
மாதவன் சொன்னதையே திருப்பி சொல்ல, “முன்னாடி நிச்சயமாகி இருந்துச்சு.. இப்ப இல்ல அதான பா? அத ஏன் இப்ப வந்து சொல்லுற?” என்று கேட்டு வைத்தார்.
இந்த கேள்வியை மாதவன் எதிர் பார்க்காமல் தடுமாறி விட்டான். திருமண வீட்டில், எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்று நினைத்து விட்டான் போலும். இது சினிமாவோ நாடகமோ அல்ல. யார் வந்து எதைச்சொன்னாலும் நம்பி, உடனே பிரச்சனையை கிளப்புவதற்கு. நான்கையும் ஆராயாமல் பேசுவது இல்லை என்று புரியவில்லை அவனுக்கு.
உடனே சுதாரித்து, “நானும் வைசாலியும் லவ் பண்ணோம் சார். கல்யாணம் நிச்சயமாகிடுச்சு. எதோ பிரச்சனையால நின்னு போச்சு. இப்ப அவளுக்காக வந்துருக்கேன். அதுக்குள்ள அந்த அரசன் அவள ஏமாத்தி கல்யாணம் பண்ண பார்க்குறான்” என்று பல்லைக் கடித்தான்.
அரசன் ஏமாற்றுகிறான் என்று சொன்னதும், அவருக்கு கோபம் வந்து விட்டது. சிறுவயதிலிருந்து அரசனை பார்த்து வருகிறார். அவரும் அரசனின் தாத்தாவும் மிக நெருங்கிய சொந்தம். தன் வீட்டுப்பிள்ளையை இப்படிப்பேசுகிறானே என்று கோபம் வந்தது.
மீசையை முறுக்கிக் கொண்டு, “தம்பி பார்த்துப்பேசு. அரசன் அந்த பொண்ண ஏமாத்தல. பொண்ணோட சம்மதத்துல தான் இந்த கல்யாணம் நடக்குது” என்று அதட்டினார்.
எதிர்பார்த்த திசையை விட்டு விசயம் வேறு பக்கம் திரும்பவது போல் இருக்க, மாதவனுக்கு எரிச்சலாக வந்தது.
அவன் சொல்வதை உடனே நம்பிக் கொண்டு, இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் எதிர்பார்த்தான். நடக்கவில்லை.
“சார்.. இப்ப இந்த கல்யாணம் நிக்கலனா.. நான் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுப்பேன். என் கிட்ட நாங்க நிச்சயம் பண்ணிக்கிட்ட போட்டோ இருக்கு.” என்று பயமுறுத்த, அவர் உக்கிரமாக பார்த்து வைத்தார்.
“எங்க அரசனே பெரிய போலீஸ் தான் தம்பி. இந்த போலீஸ் பூச்சாண்டி எல்லாம் என் கிட்ட காட்டாத.” என்று எச்சரித்தவர், “இரு.. உன் கிட்ட பேச வேற ஆள கூப்பிடுறேன். நான் இன்னும் கொஞ்சம் பேசுனா நீ அடி வாங்காம போக மாட்ட” என்றார்.
மாதவன் அதிர்ந்து நிற்க, தன்னிடமிருந்த கைபேசியில் அமுதவல்லியை அழைத்து அங்கு வர வைத்தார்.
“என்னங்க பெரியப்பா?” என்று உள்ளே வந்தவர், மாதவனை பார்த்து ஆச்சரியபட்டார். ஆனாலும் அவன் பக்கம் திரும்பாமல் நின்று கொண்டார்.
“இந்த தம்பி என்னென்னவோ பேசுது அமுதா. என்னனு கேளு”
“நான் பேசுறேன். நீங்க போங்க”
“இல்லமா.. நான் இருக்கேன்”
“இருக்கட்டும் பெரியப்பா”
மாதவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, “அப்ப நான் வாசல்ல நிக்கிறேன். எதுனாலும் சத்தம் கொடு” என்றவர் மீசையை முறுக்கிபடி மாதவனை முறைத்துக் கொண்டே சென்று விட்டார்.
“சொல்லுபா டாக்டர் தான நீ?” என்று அமுதவல்லி கேட்க, மாதவனுக்கு அவரை தெரியவில்லை.
“என்னை தெரியுமா?”
“தெரியும். என்ன விசயமா வந்த?”
“இங்க பாருங்க.. இந்த கல்யாணம் நடக்க கூடாது. வைசாலி எனக்கு நிச்சயமான பொண்ணு”
“அந்த கல்யாணம் தான் நின்னுடுச்சே பா. அது முடிஞ்சு ஒரு வருசத்துக்கு மேல ஆகுதே. இப்ப ஏன் அதைச்சொல்லுற?”
மாதவன் அவரை அதிர்ச்சியாக பார்த்து விட்டு, “நீங்க யாரு?” என்று கேட்டான்.
“நான் அரசனோட அம்மா. நீ இங்க வருவனு சொன்னான் என் மகன். நீயும் வந்துருக்க”
‘அம்மாவா! சொன்னானா?’ என்று அவன் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக பார்த்தான்.
“பழசை ஏன் தூக்கிட்டு அலையுற? விட வேண்டியது தான?” என்று அமுதவல்லி அமைதியாக கேட்டதும், மாதவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“முடியாது. உங்க மகன் என் வாழ்க்கைய பறிப்பான். நான் சும்மா வேடிக்கை பார்ப்பனா?”
மாதவன் கோபத்தில் கத்த, அமுதவல்லி அவனை பாவமாக பார்த்தார்.
“உன் அப்பாவுக்கு உடம்பு முடியலனு வந்தியாமே. இப்போ எப்படி இருக்கார்?” என்று விசாரிக்க, மாதவன் குழம்பி விட்டான்.
அவன் ஒன்றை பேசுகிறான். அவர் ஒன்றே கேட்கிறாரே?
“இங்க பாருங்க.. விசயத்தை டைவர்ட் பண்ணாதீங்க. வைசு என் காதலி. எனக்கு மனைவி. உங்க பையன் நடுவுல வந்து தட்டி பறிக்கிறான். இதுக்கு நான் விட மாட்டேன்”
“இன்னும் பத்து நிமிசத்துல பொண்ணு வீட்டுக்காரவங்க வந்துடுவாங்க. வைசாலிய நானே இங்க கூட்டிட்டு வரேன். பேசி முடிவுக்கு வரலாம். சரினா இங்கயே உட்காரு” என்று கூறி விட்டு, அமுதவல்லி கிளம்பி விட்டார்.
மாதவனுக்கு அவரது அணுகுமுறை புரியவே இல்லை. சரியாகத்தான் பேசுகிறோமா? என்று குழம்பி விட்டான்.
பத்து நிமிடங்களில், வைசாலி தன் குடும்பத்தோடு அங்கே வந்து சேர்ந்தாள். வரவேற்பு உபசரிப்பு எல்லாம் முடித்து விட்டு, வைசாலியை அமுதவல்லி கையோடு அழைத்துக் கொண்டு சென்றார்.
மாதவனை விட்டு வந்த அறைக்கு முன் அரசன் ஏற்கனவே நிற்க, வைசாலி புரியாமல் பார்த்தாள்.
“என்னாச்சு?” என்று கண்ணால் அரசனை வினவ, “உள்ள வா” என்று அழைத்துச் சென்றான்.
உள்ளே அமர்ந்து இருந்த மாதவன் நிமிர்ந்து பார்த்தான்.
‘வந்துட்டானா!’ என்று வைசாலி அவனை ஆச்சரியமாக பார்க்க, “ஹாய் மாதவன்” என்றான் அரசன்.
மாதவன் அரசனை கவனிக்கவில்லை. மணப்பெண் கோலத்தில் இருந்த வைசாலியை தான் பார்த்தான். அதீத அலங்காரம் என்று தோன்றியது.
அவனோடு நடந்த நிச்சயத்தின் போது, வைசாலி மிகவும் சாதாரணமான மேக்அப் தான் போட்டு இருந்தாள். இப்போது முகமெல்லாம் பளிச்சென மின்னியது. அது சந்தோசம் ஆர்பரிப்பு என்று உணராமல், மேக்அப் என்று தான் மாதவன் நினைத்தான்.
“நீங்க பேசுங்க” என்று கூறி விட்டு, அமுதவல்லி கதவுக்கு வெளியே நின்று விட்டார்.
மாதவன் வைசாலியை பார்த்துக் கொண்டே எழுந்து நிற்க, அவள் அரசன் அருகே சென்று நின்றாள்.
“எனக்கு வைசு கிட்ட பேசனும். தனியா” என்று கூறிய மாதவனின் பார்வை மொத்தமும் அவள் மீது தான் இருந்தது.
அரசன் வைசாலியை திரும்பிப் பார்க்க, அவள் அரசனின் கையைப்பிடித்து விரல்களை கோர்த்துக் கொண்டாள்.
“எப்படியும் நீங்க பேசி முடிச்சதும் எல்லாத்தையும் இவர் கிட்ட சொல்லிட தான் போறேன் மாதவன். அதனால இப்படியே பேசுங்க” என்று அமைதியாக பதிலளித்தாள்.
மாதவனின் பார்வை அவர்களது இணைந்த கைகளை வெறித்துப் பார்த்தது. அவனை பொறுத்தவரை நடக்கும் திருமணம், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதுவும் அரசனால் ஏற்பாடாகி இருக்கிறது.
வைசாலிக்கு அரசன் வெறும் நண்பன் மட்டுமே. அதையும் மாதவன் அறிந்து இருந்தான். தோண்டித்துருவி கேட்காமல், வைசாலிக்கே சந்தேகம் வராமல் விசாரித்து இருந்தான்.
அன்று மாதவனோடு மேடையில் நிற்கும் போது, அரசன் திரும்பிச் செல்வதை வைசாலி புருவம் சுருங்க கவனித்துக் கொண்டிருந்தாள். அரசனின் முகமாறுதல்களை வைசாலி யோசனையோடு பார்த்திருக்க, அதை மாதவன் குறித்துக் கொண்டான்.
அதன் பின்பு நாசுக்காய் அரசனை பற்றி விசாரித்தான். வைசாலி அவனை நல்ல நண்பனாக மட்டுமே கூற, அப்போது தான் மாதவனுக்கு நிம்மதி வந்தது.
இப்போது தந்தையின் உடல்நிலைக்காக வெளியே வந்தவனுக்கு, வைசாலி அரசனின் திருமண ஏற்பாடு தெரிய அதிர்ந்து போனான்.
அப்போதும் வைசாலியை அவன் சந்தேகப்படவில்லை. அரசன் தான் விருப்பப்பட்டு இருக்க வேண்டும். தங்களது திருமணத்தை வேண்டுமென்றே பிரித்து, வைசாலியை ஏமாற்றி, திருமணம் செய்ய கிளம்பி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
வைசாலி தன் மீது கோபமாக இருப்பாள். அவள் கோபம் மட்டும் தணிந்து விட்டால், நிச்சயமாய் தனக்காக காத்திருப்பாள் என்றே நம்பினான்.
ஆனால் இங்கு கையை கோர்த்துக் கொண்டு நிற்கிறாள். வைசாலிக்கு மோதிரம் அணிவித்த நேரத்தை தவிர, மாதவனின் விரல் கூட வைசாலியை தீண்டவில்லை. அவர்களது பேச்சும் கூட காதலாக இருக்காது. முக்கியமாக பேச நேரமும் கிடைக்காது.
தன்னிடம் அத்தனை தூரம் கண்ணியம் காத்தவள், இன்று அரசனின் கையை பிடித்துக் கொண்டு நிற்கிறாள்.
‘ஏன் வைசு?’ என்று மாதவன் மனம் கதறியது.
கண்ணை மூடி ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டவன், “ஒரே ஒரு கேள்வி தான் வைசு.. ஒரு வேளை இந்த விசயமெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுருந்தா, எனக்காக காத்திருப்ப தான?” என்று கேட்டான் மாதவன்.
வைசாலி அரசனை திரும்பிப் பார்த்தாள். அவன் அமைதியாகவே நின்று இருந்தான்.
மாதவன் பக்கம் திரும்பியவள், “இல்ல” என்றாள்.
ஒரே வார்த்தையில் மாதவனை உடைத்து இருந்தாள்.
“நீங்க என்ன நினைக்கிறீங்க மாதவன்? நீங்க ஜெயிலுக்கு போனதால தான் அந்த கல்யாணம் நின்னுடுச்சுனா? உங்களுக்கு விசயம் தெரியுறதுக்கு முன்னாடியே, அரசன் என் கிட்ட வந்து சொன்னாரு. நடந்தத எல்லாம் சொல்லி முடிச்சதுமே, நான் அந்த நிமிஷமே கல்யாணத்த நிறுத்த முடிவு பண்ணிட்டேன்.”
மாதவன் வலியோடு பார்க்க, வைசாலி அதை கருத்தில் எடுக்காமல் பேசினாள்.
“அன்னைக்கு நீங்க பொறுமையா பேசி இருந்தா, நானும் இதெல்லாம் சொல்லிருப்பேன். எடுத்த எடுப்புல எங்க கல்யாணத்த நிறுத்த பார்க்குறீங்க. அதான் நானும் கோபமா பேசிட்டேன். இப்ப நேரம் கிடைச்சுருக்கு. இதோட பேசி முடிச்சுருவோம்.” என்று ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டாள்.
“நீங்க கேட்ட இதே கேள்விய அரசனும் அன்னைக்கு கேட்டார். இப்படி சட்டுனு கல்யாணத்தையே நிறுத்திறியே.. நடந்து முடிஞ்சுருந்தா என்ன செய்வனு? அப்போ அவருக்கு பெருசா நான் பதில் சொல்லல. ஆனா என்ன நினைச்சேன் தெரியுமா? நல்ல வேளை நடக்கலனு நினைச்சேன். அப்படி நடந்துருந்தாலும் அது சக்ஸஸ் ஆகியிருக்காது. ஃபெயிலாகி இருக்கும்”
ஒரு நொடி நிறுத்தி மாதவனை பார்த்தவள், “உங்க தங்கச்சி விசயத்துல நீங்க பொய் சொன்னதுக்கு ஆயிரம் காரணம் இருக்கட்டும். ஆனா அந்த பொண்ணு செத்ததுக்கு? அதை மறைச்சதுக்கு? எந்த காரணமும் சொல்ல முடியாது. நாம எல்லாம் டாக்டர்ஸ் மாதவன். ஒரு உயிரோட வேல்யூ மத்த எல்லார விடவும் நமக்கு நல்லா தெரியும்.
தியோட்டர்ல சின்ன மிஸ்டேக்ல எல்லாம் உயிர் போகும் போது மனசளவுல எவ்வளவு பாதிக்க பட்டுருப்போம்? ஒரு உயிர காப்பாத்த எவ்வளவு போராடி இருப்போம்? ரெண்டு உயிரா இருந்த பொண்ணு.. உங்க எல்லாரோட சுயநலத்துல செத்துட்டா.
அத மறந்து உங்க கூட இயல்பா ஒரு வாழ்க்கைய வாழுற அளவுக்கு, என் மனசாட்சி இன்னும் சாகல. கண்டிப்பா அந்த கல்யாணம் நடந்து இருந்தா பிரிஞ்சுருப்போம்.” என்று முடித்தாள்.
கேட்டதை எல்லாம் ஜீரணிக்க முடியாமல் மாதவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அரசன் வைசாலியும் வேறு எதுவும் பேசாமல் நிற்க, சில நிமிடங்கள் அமைதியில் கடந்தது.
மாதவன் மெல்ல நிமிர்ந்து பார்த்தான். இன்னும் இருவரின் கையும் பிணைந்த நிலையில் தான் இருந்தது.
“ஒரு வேளை.. ஒரு வேளை.. அரசன் இப்படி ஒரு தப்பு பண்ணா?” என்று மாதவன் கேட்க, “பண்ண மாட்டாரு” என்று சற்றும் தாமதிக்காமல் பதில் வந்தது வைசாலியிடம்.
வைசாலி அரசனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே, “நான் நம்புறேன். இவர் எப்பவும் நேர்மையா இருப்பாரு. இன்னைக்கு நேத்து இல்ல.. கிட்டத்தட்ட என்னோட அஞ்சு வயசுல இருந்து இவர் எப்படினு பார்த்து தான் வளர்ந்தேன்” என்று புன்னகைத்தாள்.
அவளது வார்த்தைகளிலும் கண்ணிலும் வழிந்த காதல், மாதவன் உயிரை குடிக்க போதுமானதாக இருந்தது. இந்த பார்வை மாதவனை பார்த்து இருக்கிறாளா? ம்ஹும். நினைவடுக்கில் எங்குமே இல்லை.
அரசனும் அவளுக்கு சளைக்காத பார்வை பார்த்து வைக்க, மாதவன் வேகமாக எழுந்து விட்டான்.
இருவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்ப, “தாங்க்ஸ். பதில் சொன்னதுக்கு” என்றவன் வேகமாக வெளியேறி விட்டான்.
அதன் பிறகு, எந்த பிரச்சனையும் இல்லாமல் நிச்சயதார்த்தம் ஆரம்பித்தது. ஒவ்வொரு நிகழ்வும் சந்தோசமும் சிரிப்புமாக கடந்து, அன்றைய நாளை நிறைவு செய்தனர்.
error: Content is protected !!