Skip to content
Post Views: 1,033
சனா பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும், அவன் மீது வீசப்பட்ட கற்களைப் போன்று அருவமாய் தோன்றியது சக்ராவிற்கு.
கற்களாவது உயிரை மட்டும் தான் கொல்லும். ஆனால் அவள் பேசிய சொற்கள் அவனை உயிரோடு கொல்ல ஆரம்பித்தது.
அதில் இருந்து விடுபட நீண்ட நேரமாக நீச்சல் குளத்திலையே நீந்திக்கொண்டிருந்தான்.
என்ன செய்தும் அவன் மனதில் அடித்த அலைகள் மட்டும் ஓய்வதாகவே இல்லை.
Advertisement
பின் ஒரு முடிவோடு நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்தவன், திரும்பவும் சனாவின் அலைபேசிக்கு முயற்சித்தான்.
இப்போது அவள் இந்த எண்களை ப்ளாக் செய்யாமல் தான் வைத்திருந்தாள்.
அவளும் அவனிடம் பேசிவிட்டு, ஒரு வித மன அழுத்தத்தில் இருந்தவள், அவன் அழைத்ததைப் பார்த்து உடனே இணைப்பை எடுத்து தன் காதில் வைத்தாள்.
Advertisement
இருபக்கமும் ஒரே அமைதி. பின் மூச்சை இழுத்துவிட்ட சக்ரா, அவளிடம் பேச ஆரம்பித்தான், “உன்னிடம் நான் பேச வேண்டும். அதுவும் இன்றே.” என்றான் இறுகிய குரலில்.
Advertisement
அவனிடம் இருந்து அவள் வேறு வார்த்தைகளை எதிர்பார்க்க, இப்போது அவனிடம் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு, “சரி.” என்றதோடு முடித்துக்கொண்டாள் சனா.
ஆனால் அவள் மனதிலோ ஆயிரம் கேள்விகள், ‘நான் பேசிய பேச்சுகளுக்கு இவனிடம் இருந்து ஆக்ரோஷத்தை எதிர்பார்த்தேன். ஆனால் இவனோ, மிகவும் சாதாரணமாக பேசுகின்றான்.’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டவள், தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
சனாவும் அவனுடன் பேச வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தாள். இப்போது அவனே அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தர, பேசவேண்டியது எல்லாம் பேசிவிட முடிவெடுத்துக் கொண்டாள்.
Advertisement
அந்த பகல் நேரம் தகிக்கும் வெயிலில் வீட்டிற்கு வந்தாள் சனா. மாலினி விடாமல் வீட்டிற்கு அழைக்கவே, அவளை புறக்கணிக்க முடியாமல், தன் வீட்டிற்கு தயாராக வந்தாள்.
அப்போது அமலாவும் வீட்டில் தான் இருந்தார். சனா வருவதைப் பார்த்தவர், “என்ன சனா? இந்த நேரத்தில் நீ வரமாட்டடாயே! உடம்பு எதுவும் சரியில்லையா?.” என்று கேட்டுக் கொண்டே அவள் கழுத்தில் கைவைத்துப் பார்த்தார்.
அதற்குள், “அதெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா. இன்று மாலிக்கு நிச்சயதார்த்தம். அங்கு செல்வதற்காகவே நான் இங்கு வந்தேன்.” என்றதும் அமலாவின் முகம் மாற ஆரம்பித்தது.
முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு, “நீ அங்கு செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன் சனா.” என்றார் அழுத்தமாக.
அவர் சொன்னதும் கேட்பவள் அல்லவே சனா. “தாத்தா என்னை அழைத்திருக்கின்றார். நான் கட்டாயம் போக தான் போகின்றேன்.” என்றாள் அடமாக.
தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, அவளைப் பார்த்து முறைத்தவர், “நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகின்றாய் சனா?. உன்னை விட சிறியவர்கள் எல்லாம் திருமணம் செய்கின்றார்கள்.” அமைதியாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் கேட்டார் அமலா.
சனாவின் முகத்தில் அப்போது ஒரு அதிசயமான மாறுதல் காணப்பட்டது. ஆங்காரத்தினால் ஏற்பட்ட கிளர்ச்சி அந்த அழகிய முகத்தை சிவக்க வைத்தது.
“அம்மா! யார் வேண்டுமானலும் திருமணம் செய்துகொள்ளட்டும். அல்லது திருமணம் செய்துகொள்ளாமலும் இருக்கட்டும். நான் என்னவோ திருமணம் செய்துகொள்ளப்போவது இல்லை.” என்றாள் தன் பிடியில்.
இவர்கள் சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டிருந்த ஆண்டாள், சனாவின் பேச்சில், “அதெப்படி முடியும்?. எங்களுக்குப் பிறகு உனக்கு ஒரு துணை வேண்டாமா?. நாலு பேர் கேட்டால், நாங்கள் என்ன சொல்வது?.” என்றார் ஆற்றாமையாக.
“எனக்கு தேவை இல்லை பாட்டி. யாரோ நாலு பேருக்காக என் வாழ்க்கையை பகடைக்காய்களாக மாற்ற எண்ணாதீர்கள்.” என்றாள்.
அவள் இவ்விதம் சொல்லி வாய்முடிய அதே சமயத்தில், அவள் கன்னத்தில் தன் ஐந்து விரல்களையும் பதித்தார் அமலா.
அடிவாங்கிக் கொண்டு அவள் அமைதியாக, ஒரு சொட்டு கண்ணீர் கூட வராமல் நிற்க, பதறிய ஆண்டாள் தான், அமலாவைக் கண்டித்தார்.
“என்ன செய்துவிட்டாய் அமலா!. பிள்ளைகள் என்றால் அப்படி தான் இருப்பர். நாம் தான் அவர்களிடம் பேசும் விதத்தில் பேச வேண்டும். இருந்தாலும் நீ கைநீட்டியது தவறு தான்.” என்று சொல்லிக் கொண்டிருக்க, வேகமாக தன் அறைக்கு சென்ற சனா அடித்து கதவை சாற்றினாள்.
“உன் மகளுக்கு கோபம் வந்துவிட்டது. போ… போய் அவளை சமாதனாம் செய். முதலில் நாம் பையனை பார்க்கலாம். அதன் பிறகு வரன் கூடி வந்தபிறகு, அவளிடம் பேசும் விதத்தில் நானே பேசுகின்றேன்.” என்று கூறி தன் மகளை அனுப்பி வைத்தார்.
அமலாவிற்கு மனது கேட்கவே இல்லை. சனாவைப் போல ஒரு பொறுப்பான பெண்ணை பார்க்கவே முடியாது. இப்படி அறிவான பெண்ணை பெற்றதற்கு எப்பொழுதும் அவருக்கு ஒரு கர்வம் இருக்கும்.
சனா அந்த அளவு புத்திசாலி பெண். அவள் மனதால் யாருக்கும் துரோகம் நினைத்தது இல்லை. இப்போது தனது மகளை மாலினி தன் லாபத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளவே அவருக்கு கோபம் வந்துவிட்டது.
ஆம் நேற்று அவள் மாலினிக்கு செலவு செய்த தொகையை அவரும் அறிவார். அதனால் வந்த கோபத்தை தான் அவர் அப்படியே சனாவிடம் காட்டிவிட்டார்.
தன் கைப்பையில் தனக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சனா, அப்போது தான் வாசலில் தன் தாய் நிற்பதை கவனித்தாள்.
“அம்மா! அங்கே நின்று என்ன யோசனை செய்கின்றீர்கள்?.” என்று அவர் அடித்ததையும் மறந்து மிகவும் சாதாரணமாகவே அவரிடம் பேசினாள்.
அவள் அருகே வந்தவர், அவளின் வெண்டை விரல்களை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு, “அம்மா மேல் உனக்கு கோபமா சனா?.” என்றார் கருணை மிகுந்த குரலில்.
“இல்லை என்று சொல்லமாட்டேன்.” என்று சொல்லிக் கொண்டு, அவர் கையில் இருந்து விலகி திரும்பிக்கொண்டாள்.
“சரி இனி நான் திருமணத்தைப் பற்றி பேசவில்லை. ஆனால் என் பேச்சுக்கு நீ மதிப்பு கொடுக்க வேண்டும் சனா.” என்று அவர் சொல்ல, அவளோ அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
தன் கண்களுக்கு மையை தீட்டிக்கொண்டிருந்தவளைப் பார்த்தவர், “சனா! நான் உன்னிடம் தான் பேசுகின்றேன். நேற்று எதற்காக அந்த பெண்ணிற்கு அவ்வளவு லட்ச ரூபாய்களை செலவழித்தாய்?.” என்று கேட்டவர் கண்களில் கனல் தெரித்தது.
தான் செய்த வேலைகளை அப்படியே விட்டுவிட்டு தன் அன்னையை தீர்க்கமாக பார்த்தவள், “அதான் சொன்னேனே அம்மா! அவள் எனக்கு தங்கை…..” என்று அவள் எதுவோ சொல்ல வருவதற்குள், கோபமாக கத்தினார் அமலா.
“போதும் நிறுத்து சனா!. உன்னை பெற்று வளர்த்தது நான். உன்னைப் பற்றி முற்றிலும் நான் அறிவேன். நீ இதுபோல் ஒரு பெண்ணிற்கு பணத்தை செலவழிப்பவள் அல்ல. ஏன் நீ இதுபோல் உனக்கே செலவழிக்க மாட்டாய்! அப்படி இருக்க இந்த பெண்ணிற்கு எதற்கு?.” என்று கேட்டவர், அவள் தோள்களைத் தொட்டு தன்பக்கமாக திருப்பினார்.
“சொல். எனக்கு தெரியாமல் ஏதாவது செய்கின்றாயா?.” என்று ஆதங்கமாக கேட்டார்.
அதற்கு அமைதியாக இருந்தவள், தன் தாயின் கதறலைக் கேட்டு மெல்ல தன் இதழைப் பிரித்து, “என் உரிமைக்காக போராடுகின்றேன் அம்மா.” என்றாள் ஒற்றை வாக்கியத்தில்.
அதைக் கேட்டவருக்கு பகீரென்றது. அவள் முன்பு அடிக்கடி சொல்லும் அந்த உரிமை அல்ல. அவள் இப்போது சொல்வது வேறு என்பதை உணர்ந்தவர், இருந்தும் தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள வேண்டி, “நீ எந்த உரிமையைப் பற்றி பேசுகின்றாய் சனா?. அதான் தேவி நிறுவனத்தில் உனக்கும் உரிமை உள்ளதே!. இப்போது என்ன புதியதாக இன்னொரு உரிமை.” என்றார் தீர்க்கமான குரலில்.
“என் லட்சியத்தை அடைய வேண்டும்.” என்றாள் வெற்றுக் குரலில்.
அவள் பேச்சைக் கேட்ட அமலாவிற்கு தான் தலை சுற்ற ஆரம்பித்தது. “என்ன பேசுகின்றாய் சனா?. அந்த பெண்ணிற்கு எதற்காக அவ்வளவு செலவழித்தாய் என்று கேட்டால் நீ ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கின்றாய். அந்த பெண் உன்னை நன்றாக ஏமாற்றி, பாசம் இருப்பது போல் நடிக்கின்றாள்.”
அதற்கு புன்னகை முகமாக தன் தாயை ஏறிட்டவள், “மாலினியிடம் நான் ஏமாறவில்லை அம்மா. அவள் தான் என்னிடம் ஏமாறுகின்றாள்.” என்று சொல்லி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்தாள்.
“என்ன…. என்ன பேசுகின்றாய் சனா?.” என்று திக்கித் திணறிய குரலில், தன் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி விலகாமல் கேட்டார்.
தன் கையை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு தெனாவட்டாக பார்த்தவள், “ஒரு வரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரின் ஆசைகளை தூண்ட வேண்டும்.” என்றதும் தன் நெஞ்சை பிடித்துவிட்டார் அமலா.
அந்த நேரம் பார்த்து, தன் மாமனார் அருணகிரி மீது அவருக்கு அவ்வளவு கோபம் வந்தது.
“இதற்க்கெல்லாம் அவர் மட்டும் தான் காரணம். உங்கள் குடும்ப சங்காத்தமே எனக்கும் என் பெண்ணிற்கும் வேண்டாம் என்று தலைப்பாடாக அடித்துக்கொண்டேன். ஆனால் கேட்டாரா அந்த பெரியவர். இப்போது அது உன்னிடம் வந்து நிற்கின்றது.” என்று சொன்னவருக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
ஆனால் சனாவோ தன் முடிவில் உறுதியாக இருந்தவள், தன் அன்னையை சிறிதும் கண்டுகொள்ளாமல், “என்னால் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் வராது. நான் வருகின்றேன் அம்மா.” என்றவள், அவர் தடுப்பதற்குள் வெளியேறிவிட்டாள்.
அவள் சொல்லியபடியே அவளால் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் வராது தான். ஆனால் அவள் அடைய துடிக்கும் உரிமையை மற்றவர்கள் அறிந்து கொண்டால், அவள் உயிர் போவது நிச்சயம்.
அவளது உரிமையை அடைவாளா சனா?. அப்படி என்ன ரகசியம் ஒளிந்திருக்கின்றது?. அவள் உரிமை என்று எதை சொல்கின்றாள்?. அது காலத்தால் வெளிப்படுமா?. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உரிமைக்காக இவள் போராட, சக்ராவோ, இவளிடம் தோன்றிய தன் காதலுக்காக போராடிக்கொண்டு இருகின்றான்.
மகிழுந்தை எடுக்காமல் தன் இரு சக்கர வாகனத்தை எடுத்து வெளியேறினாள் சனா.
அங்கிருந்து இடப்பக்கமாக இருந்த சந்தில் அவள் திரும்ப அங்கே நடுநயமாக தன் மகிழுந்தில் சாய்ந்தபடி நின்றிருந்தான் சக்ரா.
அவனைப் பார்த்தவளின் உதடுகள் கேலியாக வளைந்து கொண்டது.
தன் வண்டியை நிறுத்திவிட்டு அவன் முன்னே சென்று நின்றவள், “என் தங்கைக்கு கணவனாக போகின்றாய்! இனி என்னிடம் தேவை இல்லாத பேச்சுக்கள் வேண்டாம்.” என்றாள் அழுத்தமாக.
அவனின் அதிகப்படியான பேச்சுகளை தடை செய்யவே அவசரமாக இதை சொல்லிவைத்தாள் சனா.
தன் கண்களில் அணிந்திருந்த குளிர் கண்ணாடியை கழட்டிவிட்டு அவளை ஏறிட்டவன், “உன்னை எதற்காக இங்கு வர சொன்னேன் தெரியுமா?.” என்றவன் கண்கள் அவள் முகத்தை நோக்கின.
சனாவின் கண்களும் முதன்முதலாக சக்ராவின் ஆவல் ததும்பிய கண்களைத் தான் சந்தித்தன.
அவள் பார்த்ததும் வாடியிருந்த ருத்ராவின் முகத்தில் புதுமலர்ச்சி உண்டானது. ஆனால் அவள் அடுத்து பேசிய பேச்சில் அது காணாமல் சென்றது.
“எனக்கு அதற்கு அவசியம் இல்லை சக்ரா. என் தங்கையின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும். அதற்கு நீ நமக்குள் நடந்த அனைத்து விஷயங்களையும் மறக்க வேண்டும்.” என்றாள் நேர்பார்வையோடு.
தன் நெற்றியை நீவிவிட்டவன், “உன் தங்கை நன்றாக அவன் விரும்பியவனோடு வாழ்வாள் சனா. நான் இப்போது தான் அவளை அவன் விரும்பியவனோடு அனுப்பிவிட்டு வந்தேன்.” என்றதும் அவள் முகம் காளியின் கோப முகம் போலானது.
அவள் நடத்தும் சதுரங்கத்தில், அவன் காய்களை மாற்றிவைத்துவிட்டால், அவளுக்கு கோபம் வருவது நியாயம் தானே!.
(மாலினியிடம் இருந்து சனாவிற்கு என்ன காரியம் ஆகவேண்டும்?. சனா எந்த உரிமையை அடைய துடிக்கின்றாள்?. சக்ராவிற்கும், சனாவிற்கும் நடுவில் என்ன ரகசியம் உள்ளது?. என்பதை யோசித்துக் கொண்டே இருங்கள். நான் நாளை யூடியுடன் வருகின்றேன் டியர்ஸ்.)
error: Content is protected !!