Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் சுவாசம் என் மூச்சில்

உன் சுவாசம் என் மூச்சில் 17

உன் சுவாசம் என் மூச்சில் 17

 

  எழில்விழிக்கு ஐந்தாம்  மாதம் ஆரம்பித்து இப்பொழுது ஓரளவிற்கு வாந்தி நின்றுவிட்டது. இருந்தாலும், வீட்டில் கணவன் இருக்கும்பொழுது உணவை  ஊட்டும் முறை மட்டும் மாறவில்லை.

   அதனாலோ  இல்லை எழில்விழியின் உடல் அமைப்பாலோ ஐந்து மாதம் வயிறு பார்க்க ஏழுமாதம் போல் இருந்தது. இரட்டை பிள்ளையா என கேட்பது போல் இருந்ததால் அதிகம் எழிலை கதிரவன் வெளியே அழைத்து செல்வது இல்லை.



Advertisement

   இன்று தான் அவனின் ஊருக்கு  அழைத்து  செல்கிறான். ஆளப்பிறந்தான் கிராமத்தில் இருக்கும் அந்த மாரியம்மன் கோவில் சிறு கோவில். அதில் வருடம் ஒரு முறை கதிரவனின் அங்காளி பங்காளி குடுமபத்தினர்  ஒருவர் பொங்கல் வைக்க வேண்டும். இந்த முறை கதிரவன் குடும்பத்திற்கான முறை அதனால் ஊருக்கு செல்கின்றனர்.

    இங்க தனியே வந்த பின் இன்று தான் ரொம்ப நாள் கழித்து அவளின் புகுந்த வீட்டிற்கு செல்கிறாள் எழில்விழி.

      பேருந்திலிருந்து கதிரவன் பையுடன் இறங்க மெதுவாக இறங்கிய எழில்விழி   கதிரவன் கையிலிருந்து பையை வாங்க முற்பட அதனை உணர்ந்து,

Advertisement

“  என்ன செய்ற??.. ”  என கோபத்துடன் கேட்ட கதிரவனிடம் 

Advertisement

“ இல்லைங்க பைய நான்  தூக்கிக்குறேன்” என  மெதுவாக பழைய நினைவில்  கூற  அதில் அவளை முறைத்துக்கொண்டு,

“  என்ன சொல்லிகாட்றியா எங்களுக்கு  தெரியும்.  பேசாம வா. ஒழுங்கா பார்த்து  நடந்து வா. எங்கையாவது விழுந்து  வச்சுராம இவ நடக்குறதே தத்தக்க  புத்தகன்னு. இதுல பைய தரவாம்ல எல்லாம்  ஏத்தம் உனக்கு. என்னைய என்ன மனச்சாட்சி   இல்லாதவன்னு நினைச்சியா” என கடுப்புடன்  கேட்ட கதிரவனிடம் 

“ இல்லங்க எதுக்கு உங்களுக்கு சிரமம்ன்னு ”  என இழுத்தவளிடம்

Advertisement

“ எது!!… இந்த ஒத்த பைய தூக்குறது சிரமமா??… பேசாம வாயை மூடிக்கிட்டு வா ”  என  எரிந்து விழுந்துவிட்டு நடக்க  எழில்விழிக்கோ  மனதில் கணவன்  மீது  எரிச்சல்  வந்தது.

“  இவரு தான் சொன்னாரு பை தூக்க  வைக்குற வேலை எல்லாம் என்கிட்டே  வச்சுகாதான்னு. இப்போ இப்படி சொல்றாரு  இத சொன்னா மேற்கொண்டு நம்மளதான்  திட்டுவாரு ”  என  முணங்கிக் கொண்டு   மெதுவாக  கதிரவனை  பின்  தொடர்ந்தாள்.  

    வீட்டிற்கு சென்றவுடன் ஸ்வாமிநாதன் கணேசன் விஜயன் என அனைவரும்  எழிலை  நலம் விசாரிக்க, சாரதா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அறைக்கு  சென்றுவிட்டாள். தெய்வானையோ,

“ இன்னைக்கு நம்ம பொங்கல். ஆனா என்னமோ விருந்தாளி மாதிரி வர. ஏன் ஒரு  ரெண்டு நாள் முன்னுக்கு வர கூடாது?… ” என கதிரவனிடம் கேட்டவர்  எழில்விழியிடம்,

“ நீயாவது சொல்லி அவனை கூப்பிட்டு வந்துருக்கலாம்ல” என  கேட்க வந்தவுடன் குடிக்க தண்ணீர் கூட கொடுக்காது கேள்வி கேட்கும் அன்னையை கண்டு எரிச்சல் ஆன கதிரவன்,

“ இப்போ என்ன நாங்க போயிட்டு அடுத்த  கோவில் பொங்கலுக்கு ரெண்டு நாள் முன்னாடி வரட்டுமா??… ”  என் கேட்க

   அதில்  தெய்வானை, “ இவன் செஞ்சாலும் செய்வான் ” என முனங்க ஸ்வாமிநாதனோ,

“ ஏய்!!… அவன் லீவு இல்ல வே லை இருக்குன்னு சொல்லி சமளிக்காம இப்போ வந்ததே பெரிசு. போ… போய்… குடிக்க  என்னாவது  கொண்டு வா கோவிலுக்கு போணும்ல இப்பவே மணி எட்டு ஆச்சு. எழிலுக்கு சாப்பிட எதாவது குடு ” என சத்தமிட

   தெய்வானையும்  வாயும் வயிறுமாக இருப்பவளிடம் எதுவும் பேசாது அவளுக்கு உண்ண இட்லியும் கதிரவனுக்கு சாப்பாடு வேண்டாம் என  கூறியதால்  நீராகாரம் மட்டும் குடுத்து விட்டு  தெய்வானை  கிளம்ப  அனைவரும்  மாரியம்மன்  கோவிலுக்கு  சென்றனர்.

   அங்கு  ஏற்கனவே  பூஜைக்கு  ஸ்வாமிநாதன்  அங்காளி  பங்காளிகள்  வருகை தந்துருக்க வாணியும் ஜெயாவும்  தத்தம்  குடும்பத்தோடு நேரடியாக  கோவிலுக்கு வந்திருந்தனர். அங்கே எல்லாரின் நலன்  விசாரிப்புகளுக்கு பின் எழில்விழியின் அருகில் வாணியும் ஜெயாவும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். 

  அப்பொழுது பங்காளிகளில்  ஒருவர்,

“ அப்புறம் என்ன ஸ்வாமி அண்ணே  பொங்கலை ஆரம்பிச்சுரலாம்ல. இந்த தடவை உங்க பொங்கல் தானே. எப்போதும்  புதுசா கல்யாணம் ஆனா புது மருமகதான்  வைக்கணும். ஆனா உங்க ரெண்டாவது  மருமக மாசமால இருக்கு. யாரு அண்ணே பொங்கல் வைக்க போறா  தெய்வா அண்ணியா??… ” என கேட்டவரிடம்

“ ஹ்ம்ம்  ஆமாண்டா தம்பி….. ”  என எதோ கூறவந்த ஸ்வாமிநாதனிடம்

“ அது எல்லாம் நான் வைக்கல. உங்க புது மருமகளையே வைக்க சொல்லுங்க ” என தெய்வானை கூற அதில் கடுப்புடன் ஸ்வாமிநாதன் தெய்வானையை முறைத்தார்.

   அதற்கு இன்னொரு பெண்மணியோ,

“ ஏன் தெய்வா அக்கா  அதான் அந்த பிள்ளை மாசமா இருக்குல்ல.  பாவம் அது எப்பிடி வெயில்ல நின்னு வைக்கும் ” என கேட்க அதற்கு தெய்வானை பதில் கூறும் முன்னே ,

“ அது எல்லாம் வச்சுதான் ஆகணும். எங்க அத்தைக்கே மூட்டு வலி ரெண்டு நாளா. அவுங்க இப்படி கீழ குனிஞ்சு பொங்கல் வைக்க முடியுமா??… ” என சாரதா கேட்ட நிலையே தெரிந்தது யாரு சொல்லி தெய்வானை பொங்கல் வைக்க மாட்டேன் என  கூறினார் என்று.

   எனவே அந்த பெண்மணியும்,

“ என்னம்மா மூத்த மருமகளே அப்போ நீ வைக்குறது பொங்கலை ” என கேட்க

“ ஏன்??… என்னத்துக்குங்குறேன்??.. எனக்கு என்ன தலை எழுத்தா??… அது எல்லாம் என் முறைக்கு நான் பொங்கல் வச்சாச்சு ” என சாரதா கூறிக்கொண்டிருக்கையில் ஸ்வாமிநாதன் கோபத்துடன் எழுந்துவிட்டார்.

     வேகமாக தெய்வானையிடம் சென்றவர்,

“ ஏய்!!… இங்கபாருடி இதை வீட்லையே சொல்லிருந்தா இந்த முறை யாருக்காவது குடுத்துருக்கலாம்ல இங்க வந்து அசிங்கப்படுத்துறியா??… ” என கேட்க

   தெய்வானைக்கோ என்ன சொல்வது என புரியவில்லை. அவர் பொங்கல் வைக்கத்தான் எண்ணி இருந்தார். ஆனால் எழிலுக்கு பதிலாக வைத்தால் அவள் உங்களை மதிக்க மாட்டாள் என சாரதாதான் என்ன என்னவோகூறி ஏற்றிவிட்டுருக்க அதில் தெய்வானை மறுப்பு தெரிவித்துவிட்டார்.

    இப்பொழுது நானே வைக்குறேன் என கூறவும் மனது வரவில்லை. அதனால் ஸ்வாமிநாதனுக்கு என்ன பதில் கூற பயந்துகொண்டு அமைதியாக நிற்க, அதில் ஸ்வாமிநாதன் இன்னும் முறைத்தபடி நிற்க,

    அதற்குள்  வழக்கம் போல தன்னால் எதற்கு பிரச்சனை  என  எண்ணி கோவில் முன் இருந்த பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்ற எழில்விழி அங்கு சிறு குழி பறித்து மூன்று கல் வைத்து இருந்த அடுப்பில்,

   சிறு சிறு சுள்ளிகளை எடுத்து அந்த அடுப்புகள் வைத்து பற்ற வைக்க போன எழில்விழியின் கையை பிடித்தான் கதிரவன். கதிரவனின் தொடுதலில் திரும்பி பார்த்த எழில்விழி,

“ என்னங்க எதுவும் தப்பா பண்ணுறேனா??? ” என புரியாது கேட்க

“ நீ பண்ணுறதே தப்புதான் ” என கடுப்புடன் கூற

“ நா…. நான் என்னங்க பண்ணுனே. பொங்கல் வைக்கத்தான் வந்தேன் ” என  எழில்விழி கூறிக்கொண்டிருக்கையில் ஸ்வாமிநாதனோ,

“ ஏம்மா!!… மருமகளே உனக்கு இதே வேலையா போச்சு.  நாங்க பேசிகிட்டு இருக்கையில நீவாட்டுக்கு வேலைய பார்க்க போற. அன்னைக்கு அப்பிடித்தான் தண்ணி குடம்,  இன்னைக்கு பொங்கலா??…   உன்னால முடியுமா முடியாதுன்னு பார்க்க மாட்ட. உனக்கத்தானே பேசுறேன் ” என என்றும் இல்லாது ஸ்வாமிநாதனும் ஆதங்கப்பட

“ இல்ல மாமா என்னால எதுக்கு பிரச்சனை அதான் பொங்கல் வைக்கலாம்ன்னு…. ” என எழில்விழி இழுக்க

“ என்ன பிரச்சனை வரபோது. பேசாம கொஞ்சம் நேரம் சும்மா இரு. எங்க வீட்டு வாரிசை வேற வயித்துக்குள்ள வச்சுகிட்டு போமா போய் உட்காரு. இந்த முறை நம்ம பொங்கலை என் தம்பி குடும்பத்துல வைக்கட்டும் ” என ஸ்வாமிநாதன் கூறிக்கொண்டிருக்கையில் கதிரவனோ,

“ ஒன்னும் தேவை இல்ல என் பொண்டாட்டி சார்பா நானே பொங்கல் வைக்குறேன். போங்க எல்லாரும் ” என கூற

“ என்னது நீயா??…. அது எல்லாம் வேணாம் நானே வைக்குறேன் ” என தெய்வானை மகனை கஷ்டப்படுத்த வேண்டாமென நினைத்து கூற

“ ஒன்னும் தேவை இல்ல உங்க மூட்டு வலிக்கு உங்க மூத்த மருமகளை மருந்து தேய்க்க சொல்லுங்க. முடியாதுன்னு சொல்லிட்டு இங்க வந்து கரிசனை காட்றிங்களோ. ஏன் நான் நம்ம ஐயனார்  கோவில்ல பொங்கல் வச்சது இல்ல. சும்மா போமா ” என கதிரவன் கத்திவிட்டு எழில்விழியிடம் தனது சட்டை கழற்றி குடுத்துவிட்டு வேட்டியை மடிச்சு கட்டி அடுப்பின் அருகில் போய் நின்றான். பின் திரும்பி எழில்விழியிடம்,

“ விழி ” என அழைக்க

“ என்னங்க எதுவும் வேணுமா??… ” என கேட்டவளிடம்

“ நீ போய் சும்மா உட்கார்ந்தா போதும். அரிசி போடுறப்போ வா போதும் ”  என கூறி  கதிரவன் பொங்கல் வைக்கும் வேலையை ஆரம்பிக்க எழில்விழியை வாணியும் ஜெயாவும் அழைத்து தங்கள் அருகில் அமர வைத்தனர்.

   கதிரவன் பொங்கல் வைக்க ஆரம்பிக்கவும் விஜயனும் கணேசனும் அவனுக்கு உதவ செல்ல அவர்களை கண்டவன்,

“ என்ன இங்க நிக்குறீங்க ரெண்டு பேரும் ” என கேட்டுக்கொண்டே பானையை அடுப்பில் வைத்து அரிசி கலைந்த தண்ணீரை அந்த பெரிய வெண்கல பொங்கல் பானையில் ஊற்ற விஜயனோ,

“  அண்ணா உங்களுக்கு உதவத்தான் நானும் பெரிய அண்ணனும் வந்தோம் ” என கூற

“ உதவவா?… அது எல்லாம் ஒன்னும் தேவை இல்ல பொங்கல் வைக்குறது என்ன அவ்வளவு கஸ்டமான வேலையாக்கும் போடா அங்குட்டு. நானே பார்த்துக்கறேன். அரிசி பருப்பை போட்டு வெந்தவுடன் வெல்லத்தையும்  நெய்யையும் போட்டு இறக்கணும் அது ஒரு வேலை அதுக்கு ரெண்டு அப்ரன்ட்டிஸ் வேற போங்க ரெண்டு பேரும் ” என கதிரவன் கூற

“ இல்ல அண்ணா வெயிலு வேற அதோட இவ்வளவு பெரிய பானையை கிண்டணும்ல அதான் ”

“ என் வாயை கிண்டாம போங்க அங்குட்டு…. ” என கதிரவன் பேசிக்கொண்டிருக்கையில் அப்பொழுதுதான் கோவிலுக்கு வந்த வீரநாயகத்தை பார்த்த கதிரவன்,

“ என்ன சித்தப்பு எப்பிடி இருக்கீங்க. இந்த பக்கம் கொஞ்சம் வரது ”  என  கத்த

   அவன் சத்தத்தில் கதிரவனை கண்டவர்,

“ இவனா!!…. அய்யயோ!!…. இவன் கிட்ட மனுஷன் பேசுவானா. உயிரே… உயிரே… தப்பிச்சு எப்பிடியாவது ஓடி விடு ” என மனதில் எண்ணிக்கொண்டு

“ நீ பொங்கல் வேலைய பாருப்பா நாம சாமிய கும்புட்டு பேசுவோம் ” என நழுவ பார்த்த வீரநாயத்திடம்

“ ஏன் நீங்க வந்தா அரிசி வேகாதா ” என கதிரவன் கேட்க ஸ்வாமிநாதனோ,

“ ஏன் நாயகம் நீதான் போய் அவன் கிட்ட பேசேன் பிள்ளை வெயில்ல நிக்குறான் பேச்சு துணையா இருக்கும்ல ” என கூற

   வேற வழி இல்லாது  கதிரவன் அருகில் செல்ல அவனோ,

“ என்ன சித்தப்பு  பேசகூட யோசிக்குறீங்க. நாம இப்போ ஒரே ஊருல பொண்ணை எடுத்துருக்கோம் ” என கதிரவன் கூற

“ ஹ்ம்ம் ஆமா ஆமப்பா ”

“ என்ன ஆமப்பா??… சரி எப்பிடி போது வாழ்க்கை ” என கதிரவன் கேட்க வீரநாயகமோ

“ ஏன் கதிரு நீதானே புதுசா கல்யாணம் ஆனவன் அப்போ நான்தானே கேட்கணும். நீ என்னப்பா என்னைய கேட்குற ”

“ அப்போ நீங்க கேளுங்க ”

“ எப்பிடி போது கல்யாண வாழ்க்கை??… ” என கேட்ட வீரநாயகத்திடம்

“ ஏன் கோணலா போனா  நிமித்த போறிங்களா?? ”  என எகத்தாளமாக  கதிரவன் பதில் கூற அதில் பல்லை கடித்த வீரநாயகம்

“ என்னப்பா நீ தானே கேட்க சொன்ன ”

“ அது நான் கேட்க்குறதுக்கு முன்னாடி கேட்டிருந்தா ஒழுங்கா பதில் சொல்லிருப்பேன் ” என கூறிய கதிரவனிடம் எதுவும் கூறாது

“ சரிப்பா மருமக பொண்ணு நல்லா இருக்கா. நீ நல்லா பார்த்துக்குறியா??…”  என கேட்கணுமே என்று கேள்வி கேட்க

கதிரவனோ, “ உங்க மருமக எப்பிடி இருக்கான்னு அவகிட்ட தான் கேட்கணும் என்கிட்டே கேட்டா??… ” என கதிரவன் கூறிக்கொண்டே விறகுகளை தள்ளி நெருப்பை சற்றே குறைக்க வீரநாயகமும்,

“ கதிரு நீ வேலைய பாருப்பா  எனக்கு வெயிலு ஒத்துக்கல அப்பிடி ஓரமா உட்கார்ந்துக்குறேன் ” என கூறி வீரநாயகம் நகர

“ ஆமா சித்தப்பு ஓரமா உட்காருங்க இல்ல கோவில் மாடு முட்டிரும் ” என கூற அவனிடம் எதுவும் பேச முடியாத கடுப்பில் வேக நடையுடன் சென்று ஸ்வாமிநாதன் அருகில் உட்கார்ந்து கொண்டார்.

    இவர்கள் சம்பாஷணையை  கேட்ட விஜயன்,

“ ஏன் அண்ணே அவரை வம்பிழுக்குறீங்க??…

“ பின்ன சும்மா வெள்ளை சொள்ளையுமா சுத்துனா  போதுமா பொண்டாட்டி வீட்டுல காசு கேட்டு குடுகலன்னு அந்த சித்திய அவுங்க அம்மா வீட்டுக்கு அனுப்பபாம வச்சுருக்காரு இதுவே சட்டப்படி தப்பு.

  வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துறதா சொல்லி கனகு சித்தி ஒரு கம்பளைண்ட் குடுத்தா போதும் இதோ இப்படி ஒய்யாரமா சுத்த முடியாது. அதான் என் திருப்திக்கு வம்பிழுத்துக்குறேன் ” என  கூறி  எழில்விழியை தேடியவன் அங்கு தூரத்தில் தனது அக்காக்கள் பக்கத்தில் சத்தமாக சிரித்துகொண்டு  அமர்ந்திருந்தவளை கண்டு விஜயனிடம்,

“ நீ போய் விழியை வர சொல்லு பொங்க பானை பொங்கபோது  அரிசி போடணும் நீங்க ரெண்டு பேரும் போய் உட்காருங்க எல்லா முடிஞ்சவுடனே சாமிய கும்பிடலாம் ” என கூற விஜயனும் எழில்விழியிடம் கதிரவன் அழைத்ததை கூறிவிட்டு கணேசனோடு அமர்ந்து விட்டான்.

  கணவன் அழைத்தான் என கூறியவுடன்  கதிரவனை நோக்கி நடந்து வந்தாள் எழில்விழி. கருநீல வண்ண காட்டன் புடவையில் கையில் கண்ணாடி வளையல் குலுங்க மேடிட்ட வயிற்றை சேலை முந்தானை கொண்டு மூடி தேர்போல் நடந்து வந்த அழகை அங்கு சுற்றி இருந்த ஜனமே ஆவென பார்க்க கதிரவனோ கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

  ஆனால் எழில்விழியோ தனக்காக  பொங்கல் வைக்கும் கணவனை எண்ணி   சந்தோசமான மனநிலையுடனும்,  வெள்ளை பனியனில் வேட்டியை மடித்துக்கட்டி மீசை முறுக்கி சவரம் செய்த கன்னம் முறுக்கேறிய கைகள் வலது கையில் வெள்ளி காப்பு என அழகிலும் ஊரில் அவனின் வார்த்தைக்கு மறுவார்த்தை யாரையும் பேசவிடாது செய்யும் கணவனின் வீரத்திலும் என அவனை ரசித்துக்கொண்டே கதிரவனின் அருகில் வந்தவுடன்,

“ என்னங்க கூப்பிட்டீங்களாமே???.. ” என கேட்க

“ ஹ்ம் ஆமா மகாராணியை கூப்டுத்தானே ஆகணும். இங்க சேவகம் பண்ணதான்  உங்க அடிமை நான் இங்க நிக்குறேனே. அப்புறம் என்ன நீங்க கதை அடிச்சு சிரிச்சுக்கிட்டு இருப்பிங்க. நான் கூப்டா கேட்குமா??… அதான்  என் தம்பியை விட்டு கூப்பிட சொன்னேன் ” என கதிரவன் வார்த்தைகளை கடித்து துப்ப

  அதில் அதுவரை இருந்த சந்தோச மனநிலை மாறி கலக்கத்துடன்,

 “ இல்லங்க அண்ணிங்ககூட பேசிகிட்டு இருந்தேன் உங்க சின்ன வயசு சேட்டை பத்தி  சொல்லிக்கிட்டு இருந்தாங்க அதான்….. ”

“ அப்போ என்னைய நக்கல் பண்ணி தான் சிரிச்சுருக்க ”

“ இல்லங்க ”  என எழில்விழி எதோ கூற வர

“ நீ ஒன்னும் சொல்ல வேணாம் பானை பொங்க போது நீ சாமிய கும்பிட்டு அரிசியை போடு ” என கூறி அரிசி சட்டியை அவளின் கையில் கொடுத்தவன்

“ ஹ்ம்ம் அப்புறம் பொங்கும் போது எதாவது தூசி தண்ணீல இருந்தா அந்த நுரையோட வரும். அதனால அரிசி சட்டியை வச்சு பொங்குனவுடன் நுரையை தள்ளிவிட்டு அரிசியை போடு ” என கூற எழில்விழியும் பொங்கல் பொங்கியவுடன் சட்டியவைத்து  நுரையை தள்ளி அரிசியை எழில்விழி போட கதிரவனோ,

“ அறிவு கெட்டவளே கொஞ்சமாது அறிவு இருக்கா??… தூசியை தள்ள சொன்னே. அரிசி சட்டி மண்ணுல தானே இருந்துச்சு அத  துடைக்காம அப்பிடியே வச்சு தள்ளுற அந்த தூசி பானைல விழுந்திருக்காது ” என திட்டிக்கொண்டே அந்த தூசியை கரண்டியை வச்சு எடுத்துவிட்டு எழில்விழியையும் போக சொல்லி விட்டு பொங்கலை செய்து கோவிலுக்குள் கொண்டு வந்தான்.

   எழில்விழிக்கோ மனது சோர்ந்து விட்டது இருந்தாலும் முகத்தில் ஏதும் காட்டாது சாமியை கும்பிட பொங்கல் சுவையில் அனைவரும் கதிரை புகழ அவனோ,

“ வெல்லமும் நெய்யும் சேர்ந்த எந்த சாப்பாடும் நல்லா தான் இருக்கும் ” என கூறி நகர்ந்து விட அதில் பொங்கலை புகழ்ந்தவர்கள்தான் ‘ ங்கே ’ என முழித்தனர்.

      ஸ்வாமிநாதன் குடும்பம் வீட்டிற்கு  வந்தவுடன்  அனைவரும் உறங்கி ஓய்வெடுத்து பின்  சிறுது நேரம் மாலை பேசிக்கொண்டிருக்க, தெய்வானை கதிரவனிடம், “ கதிரு” என அழைக்க

“ என்னமா??”

“ இல்ல நம்ம எழிலுக்கு எப்போ வளைகாப்பு வைக்கலாம்??..” என கேட்க

“ என்ன வளைக்காப்பா??..” என எழில்விழியை ஓர் பார்வைபார்த்துவிட்டு

“ ஹ்ம்ம் ஒன்பதாம் மாதம் வைக்கலாம்மா” என கூறியவனிடம்

“ ஏன்டா ஒன்பது ஏழுல வச்சா அவுங்க மகளை அவுங்க பாத்துக்குவாங்கல்ல உனக்கு சிரமம் இருக்காது” என தெய்வானை கூற

“ நான் உன்கிட்ட சொன்னேனம்மா என் பொண்டாட்டிய பார்த்துக்க கஷ்டமா இருக்குன்னு” என அழுத்தமாக கேட்ட கதிரவனிடம் ஒன்றும் கூறாது ஸ்வாமிநாதனிடம்,

“ என்னங்க அப்போ இன்னும் மூணு மாசம் தான் இருக்கு.  அதுக்குள்ள வீட்டை கொஞ்சம் சுத்தம் பண்ணிடுவோம். உங்க அண்ணன் தம்பிங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க நல்ல நாளு வேற பார்க்கணும்” என   கூறிக்கொண்டிருக்க  சாராதாவோ,

“ ஏன் அத்தை இன்னும் மூணு மாசம்தானே இருக்கு அப்போ எதுக்கு எழிலு இங்கயும் அங்கையுமா அலையனும் பேசாம இங்கையே இருக்கட்டுமே” என கூற தெய்வானையும்

“ அதானே” என கதிரிடம்,

“ கதிரு சாரதா சொல்றாப்புல எழிலு இங்கையே இருக்கட்டுமே” என கூற கதிரவன் ஒன்றும் கூறாது அவனது விழியை காண அவளின் விழியில்,

‘ என்னை விட்டு சென்றுவிடுவாயா’ என்ற பரிதவிப்பும் கலக்கமும் தெரிய அதனை உணர்ந்தானோ இல்லை அவன் மனதை உணர்ந்தானோ ஆனால் முடியாது என  மறுத்துவிட்டான். அதில் ஸ்வாமிநாதனுக்கும் சிறு வருத்தம்.

“ ஏன் கதிரு அம்மா  சொல்றது சரிதானே ஏன் அலைவானே??” என கேட்க

“ என்ன அலைச்சல் ப்பா. நான் வளைகாப்பே புதுக்கோட்டைல அங்க எங்க வீட்டுல தான் வைக்க போறேன்” என கூற அனைவரும்  என்ன என அதிர  சாரதாதான்,

“  ஏன்??… ஏன்??.. கொழுந்தனாரே எல்லா விசேஷமும் இங்கதான நடக்கும். அது என்ன நீங்க மட்டும் உங்க இஷ்டத்துக்கு பண்ணுறீங்க” என கேட்க அனைவரின் பார்வையும் அதே கேள்வியையே கேட்டது.

   சாரதாவுக்கு ஏக கடுப்பு ஒரே வீட்டில் வாக்கப்பட்டு எழில்விழி மட்டும்  தனியாக புருஷனோடு சந்தோசமாக இருப்பது ஒரு வித பொறாமையை குடுக்க அதனால் எழிலை எப்பிடியாவது திரும்ப இங்கேயே இருக்க வைக்க தெய்வானை மூலம் காரியம் சாதிக்க கதிரவனோ  அனைத்தையும் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறான்.

“ என்ன கேட்டீங்க என் இஷ்டமா??… ஆமா என் இஷ்டம் தான். என் பொண்டாட்டி பிள்ளைக்கு எது நல்லதோ அத செய்வேன். ஒன்பதாம் மாசம் இந்த ரோட்டுல நான் கூட்டிட்டு வந்து அப்புறம் இங்கே இருந்து மதுரைக்கு  கூட்டிட்டு போறதுக்கு அங்க இருந்து போறது ரொம்ப சுலபம்.

   அவளுக்கு எது வசதியோ அதான்  செய்வேன் இந்த பழக்கம் வழக்கத்துக்கு எல்லாம் இந்த கதிரு அடங்கமாட்டான் சரியா??…” என கடுமையுடன் கூற

   தெய்வானையோ கதிரவனை விட்டுவிட்டு எழில்விழியிடம்,

“ ஏன் நீ சொல்ல கூடாது ஒரு வார்த்தை இங்கே இருக்கேங்கன்னு. வாயை திறக்காம கம்முன்னு நிக்குறியே. ஒரு வேளை நீதான் சொல்லிகுடுத்தியா இவன் கிட்ட” என எழில்விழியிடம் எகிற

  அதற்கு “ இல்லை” என பயத்தில் தலையை ஆட்டிய எழில்விழியை,

“ ஏய்!!… உள்ள போய் நாளைக்கு போக எல்லாத்தையும் எடுத்துவை நான் பேசிட்டுவரேன்” என கதிரவன் கூற அதில் எழில்விழி,

“ இல்லங்க அத்தை…..” என இழுக்க

“ ஏன் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது. போடி போய் எல்லாத்தையும் எடுத்துவை. உன் மாத்திரை எல்லாம் சரியா எடுத்துவச்சுடு”  என கூறி அவளை அறைக்கு அனுப்பிவிட்டு தெய்வானையிடம் திரும்பிய கதிரவன்,

“ என்ன சொன்னமா அவ பேச்சை கேட்குறேனா??…” என அழுத்தமாக கேட்க அவன் குரலில் அதிர்ந்த தெய்வானை

“ இல்லடா அவ ஒரு வார்த்தை உன்கிட்ட சொல்லலாம்ல”

“ என்ன சொல்லணும். இல்ல அவ சொன்னாலும் நான் கேட்பேனா??…. என்னைய பார்த்தா என்ன பொண்டாட்டி பின்னாடியே வால் பிடிச்சு போற மாதிரி இருக்கா??… காலைல அப்பிடித்தான் நீ ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்லன்னு அவளை கேட்குற. இப்பையும் அதேதான் கேட்குற.

   என்னைய பத்தி நீ என்னம்மா நினைக்குற. மூளை இல்லாதவன்னா. என் குடும்பத்துல நான் தான் முடிவு எடுப்பேன் நான் சொல்றதுதான் அவ கேட்கணும். அவ சொல்றத கேட்க நான் இங்க இல்ல. வளைகாப்பு அங்க என் வீட்டுல தான் நடக்கும் முடிஞ்சா  சொந்தக்கரவங்கள கூட்டிட்டு வாங்க.  இல்லைனாலும் வளைகாப்பு நடக்கும். நாளைக்கு கார்  சொல்லிருக்கேன்  நாளைக்கு காலைல சீக்கிரமா கிளம்பிடுவோம்” என கூறிவிட்டு அறைக்கு செல்ல திரும்பியவன்,

   மீண்டும் திரும்பி தெய்வானையையும் சாரதாவையும்  கண்டு,

“ உங்க அக்கறை எந்த அளவுலன்னு இன்னைக்கு கோவில்ல பார்த்துட்டேன்.  அதனால் வெட்டி சீன  போடாம வேலைய பாருங்க” என கூறி சென்றுவிட்டான்.

  அவனை எதிர்த்து  யாரும் பேசாது முணுமுணுப்புடன் சென்றுவிட மறுநாள் காரில் பின்னிருக்கையில் சந்தோசமாக கதிரவனின் தோளில் சாய்ந்து உறங்கிக்கொண்டு வந்தாள் எழில்விழி.

  அவள் மனமுழுதும் நேற்று கணவன் கோவிலில் திட்டியதால் சோர்ந்திருந்தது. இன்று உல்லாசமாக இருந்தது. அதுவும் அவனின் குடும்பத்தை எதிர்த்து பேசி தன்னை அழைத்து செல்வதால் கணவனின் மீது இருந்த காதல் பெருகியது.

 

நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு ……..
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு ……….
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது

நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது….
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்

 உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்…… 
நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை காதலோடு பேதம் இல்லை
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான்………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!