Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் -26.1

வீட்டில் லக்ஷ்மியம்மாவின் குரல் இப்பொழுது கொஞ்சம் ஓங்கி ஒலிக்க தொடங்கியது , பாதி நேரமும் ப்ரகாஷுடன் அமர்ந்து கதைகளை பேசிக்கொண்டிருந்தார்.

இப்பொழுது எல்லாம் பிரகாஷ் அனைவருடனும் ஒன்றாக அமர்ந்தே உணவு எடுத்துக் கொள்கிறார்

அங்கே இங்கே சொல்லி வைத்ததில் நிறைய இடங்களில் இருந்து சம்பந்தம் வந்தது , ராஜீவின் குடும்பத்தை பற்றி கேள்விப்பட்ட உடன் வேண்டாம் என்று மறுத்து விடுகிறார்கள்.

அதைப்பற்றிய கவலையே இல்லமால் சுற்றிக் கொண்டிருந்தான் ராஜீவ்,  இன்று ஒரு பெண்ணின் தந்தை தங்களுக்கு திருமணத்திற்கு சம்மதம் என்று கூறி துரைசெல்வத்திடம் பேச அனுமதி கேட்டிருந்தார்.



Advertisement

அவரை தோப்பு வீட்டிற்கு வர சொல்லியிருந்தார் அவர்,  தென்னந்தோப்பில் காற்றாட அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் ரூபாவும் அம்முவும் , ராஜீவிடம் பேசிக்கொண்டே வந்த கிஷோர் இவர்களை பார்த்தவுடன் அவர்களை நெருங்கினான்.

“என்ன அண்ணி பாக்கவே முடியல” என்றான் அம்முவிடம் , அவனை பார்த்து புன்னகைத்தவள்  “எப்படி இருக்கீங்க” என்றாள்.

“நல்லா இருக்கேன் அண்ணி” என்றவன்  “அன்னைக்கு குடுத்தீங்களே  பொதிச்சோறு… சான்ஸே இல்லைண்ணி , இப்போவும் டேஸ்ட் அப்படியே நாக்குல நிக்குது” என்றான் ரசனையாக.

Advertisement

அவனை கேவலமாக ஒரு லுக்கில் பார்த்தாள் ரூபா , அதை பார்க்காதவன்  போல  “இனிமே பொதிச்சோறு செஞ்சா எனக்கு ரெண்டு பொட்டலம் குடுத்துடுங்க அண்ணி , ஒன்னு பத்தலை” என்றான்.

Advertisement

“ரெண்டு என்ன நாலு கூட கொடுக்குறேன்” என்றவள் ராஜீவின் அழைப்பில்  “இருங்க வரேன்” என்று அவனை நோக்கி சென்றாள்.

“ஏய் ராங்கி என்ன ரொம்ப சிலுத்துக்குற” என்றான் ரூபாவிடம் .

“இங்க பாருங்க ரங்கினு கூப்பிடாதீங்கன்னு சொல்லியிருக்கேன்”.

Advertisement

“நீ அப்படி தான நடந்துக்குற வேற எப்படி கூப்பிட” என்றான் நக்கலாக.

“அதுசரி எதுக்கு பச்சை தாவணி போட்டிருக்க” என்க .

“இது என்ன கேள்வி , என்கிட்டே எல்லா கலரும் இருக்கு டெய்லி ஒன்னு போடுறேன் நீங்க இன்னைக்கு பாத்துட்டு பச்சை ஏன் போட்டிருக்கனு கேட்ட நா என்ன சொல்ல , நேத்து கூடத்தான் மஞ்சள் போட்டிருந்தேன்” என்றாள் படபடவென்று.

“ஓஹ்” என்றவன் “ஆனா பாரு எல்லா சனிக்கிழமையும் நீ பச்சை தாவணி தான் போடுற” என்றான் உன்னை நான் கண்டுகொண்டேன் என்று.

அவனுக்கு பிடித்த நிறம் பச்சை என்று ஒருமுறை சொல்லியிருந்தான், மற்ற நாட்களில் தோப்புக்கு எப்பொழுது வருவான் என்று தெரியாது, அனால் சனிக்கிழமை சம்பளம் வழங்க ராஜீவுடன் நிச்சயம் வருவான்.

அதனால் முடங்காமல் சனிக்கிழமைகளில் அங்கு வந்துவிடுவாள் , இது சரியாக வருமா என்ற சிந்தனை பல சமயங்களில் எழுவதுண்டு, தந்தை சம்மதிப்பாரா என்ற எண்ணம் இருந்தாலும் ஜெகனிடம் கூறினால் ஒரு வழி பிறக்கும் என்ற அசாத்திய நம்பிக்கை இருந்தது.

இருவருமே விருப்பத்தை நேரடியாக சொல்லிக் கொள்ளவில்லை  இதுவரை.

“இந்த பாரு வைக்கோலு உன்ன அக்கு அக்கா பிரிச்சு எங்க வீட்டு  மாட்டுக்கு போட்ருவேன்” என்றாள் வீம்பாக.

“அடிங்க” என்று அவள் அருகில் நெருங்கியவன்  “பிரிச்சு மாட்டுக்கு போடுறியா உன் மடில போடுறியானது நானும் பாக்குறேன் டி” என்றவன் , கோபத்தில் சிவக்கும் அவள் முகத்தை  ரசனையாக பார்த்திருந்து.

“ஏய் ராங்கி அண்ணிய பாரு எவ்ளோ அழகா  அமைதியா யார் மனசும் நோகாம பொறுமையா நடந்துக்குறாங்க  , அவங்க கூடவே இருக்கியே அதுல கால்வாசியாவது உனக்கு இருக்கா , எப்போ பாரு சண்டக்கோழி மாதிரி கொதிக்கிட்டே இருக்க” என்றவனை முறைத்தவள்.

“என் மாமா அவங்கள தங்கமா தாங்குறாரு , அவரு உசுரே அவங்க கிட்ட தான் இருக்கு அக்கா குணம் மாதிரி வாழ்க்கையும் அழகா போகுது”.

“இந்தமாதிரி இல்லாம வாயிலேயே வட சுடுற எவனாவது எனக்கு மாப்பிள்ளையா வந்துட்டா , அவனை பேசி ஜெயிக்க எனக்கும் கொஞ்சம் சாமர்த்தியம் வேணும்ல”.

“சண்டை கோழி கிட்ட  நீங்க எதுக்கு பேசுறீங்க போய்உங்க வேலைய பாருங்க” என்றாள்.

“என்ன பண்றது இந்த சண்டை கோழி கிட்ட கொத்து வாங்கலானா அன்னைக்கு நாளே ஓட மாட்டுதே” என்றான் அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே , அவள் விழிகள் மெல்ல தாழ்ந்தது.

“அப்படினு சொல்லுவேன்னு நெனச்சியா சும்மா சொன்னேன் , உன் கிட்ட பேசினா அந்த நாளே எனக்கு நாசமா போச்சு” என்று அவளை வெறியேற்ற.

அவன் கையை நன்றாக கிள்ளி வைத்தவள் , கையை அவன் கழுத்தை நெறிப்பதை போல கொண்டு சென்றுவிட்டு காலை மண்ணில் அழுத்தமாக மிதித்துக் கொண்டு முன்னே சென்றாள்.

“ஐயோ செல்லக்குட்டி அழகா இருக்க” என்று கொஞ்சிக் கொண்டவன் திரும்ப அங்கு இவனையே பார்த்து நின்றிருந்தான் ராஜீவ்.

“என்ன மாப்ள தங்கச்சி கிரீன் சிக்னல் குடுத்துடுச்சா” என்றான் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே.

“எங்க?? பிடிச்சுருக்கு ஆனா சொல்ல மாட்டா , நான் சொல்லப்போய் சப்புன்னு கன்னத்துல குடுத்துட்டானா” என்று கன்னத்தை பிடித்துக்கொண்டவன்  “ஜெகன் அண்ணாத்தே சீக்கிரம் வாங்க உங்கள நம்பித்தான் என் காதலே இருக்கு” என்றான் கைகூப்பி.

“வக்கீலா இருந்து பிரோயோஜனம் இல்ல மாப்ள என் தங்கச்சிய கட்டணும்னா  அவகிட்ட உன் வாயை அடக்கணும் , இல்ல வாழ்க்கைல வாய்தா வாங்கிட்டே இருக்க வேணிடியது தான்” என்றான் அவன் தோளில் கையிட்டு ராஜீவ்.

யோசனையிலே நடந்து கொண்டிருந்த ரூபாவை பார்த்த அம்மு “என்னாச்சு ஏதோ யோசிச்சுட்டே இருக்க” என்றாள் அவளை பார்த்து.

“எப்படி கேட்க  , கேட்டால் எதற்கு என்று யோசிப்பார்களோ?? உடனே கேட்கலாமா இல்லை நாளை கேட்கலாமா” என்று பலவாறாக அந்த நொடி நேரத்தில் அவள் மண்டைக்குள் சிந்தனை ஓடியது.

“ரெண்டு பொதிச்சோறு குடுங்க” என்றவனின் கூற்றை கேட்ட பிறகு அதை ருசியாக செய்ய கற்றுக்கொள்ள ஆசை பிறந்தது பெண்ணிற்கு.

“ஏய் ரூபா…. என்னாச்சு” என்று அவளை உலுக்கினாள் அம்மு.

“அஹ்.. ஒன்னும்  இல்ல அம்முக்கா எனக்கும் அந்த பொதிச்சோறு செய்ய சொல்லிக்குடுங்களேன் , கல்யாணம் ஆகி போய்ட்டா சாப்பிடணும்னு தோணும் போது செஞ்சு சாப்பிடலாம்ல” என்றாள் ஆசையாக.

“அதுக்கா  இவ்ளோநேரம் யோசிச்ச” என்ற அம்மு.

“அது ரொம்ப சுலபம் சாதம் வடிச்சு வெச்சுக்கணும் , துவையலுக்கு தேவையான அளவு தேங்காய் , காரத்துக்கு ஏத்தமாதிரி வரமிளகாய், இஞ்சி  சின்ன துண்டு , உப்பு கொஞ்சம் கருவேப்பிலை, புளி கொஞ்சமா ஆனா அதுக்கு பதில் மாங்கா போட்டா வாசமும் ருசியும் நல்லா இருக்கும்”.

“எல்லாம் சேர்த்து தண்ணி சேர்க்காம அரைச்சு வெச்சுக்கணும், வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நல்ல ஒரு ஆம்லெட்  கட்டாயம் வேணும் , ஏதாவது ஒரு ஊறுகாய் , நமக்கு பிடிச்ச  காய்  ஒரு பொறியாலோ வருவலோ”.

“அப்புறம் மீன் புடிக்கும்னா மீன் வறுவல் , இல்லையா சிக்கன் கிரேவி கொஞ்சம் ட்ரையா , எல்லாத்தையும் செஞ்சுவெச்சுட்டு நல்ல வாழையிலை எடுத்து கழுகி அடுப்புல வாட்டனும்”.

“அந்த இலை சூட்டோட சாதத்தை நடுவுல வெச்சு அத சுத்தி துவையல் ஊறுகாய் ஆம்லெட் வறுவல் பொரியல் எல்லாத்தையும் சாதத்துல கொஞ்சம் அழுத்தி வெச்சு , இலையை நாலா மடிச்சு மூடி கட்டி வெச்சுடணும் “.

“சாப்பிடறதுக்கு ஒரு ரெண்டு.. மூணு மணிநேரம் முன்னாடி செஞ்சு வெச்சுட்டு திறந்து பார்த்தா” என்று முன்னே பொதிச்சோறு  இருப்பதை போல ஆழ்ந்து வாசம் பிடித்தாள் அம்மு.

அப்படியே  கண்களை மூடி ரசனையாக  “நந்தேட்டனுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றவள் குரலில் கூட அவ்வளவு மெண்மை.

வந்திருந்த பெரியவரை யோசனையாக பார்த்துக்கொண்டே தோப்பு வீட்டிற்குள் நுழைந்தான் ராஜீவ் கிஷோருடன் , அவரும் அவனை ஆராய்ச்சியாய் பார்த்தார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த துரைசெல்வம்  “வாங்க வாங்க கொஞ்சம் வேலை அதான் நேரம் ஆயிடுச்சு” என்றார்.

அங்கிருந்த ஒருவனுக்கு கண் காண்பிக்க இளநீர் வெட்டி எடுத்துவந்தான் அவன் , நன்றி சொல்லி வாங்கி குடித்தவர்.

 “அய்யா நான் சுத்தி வளச்சு பேசவிரும்பல தரகர் மூலமா தம்பி விவரம் வந்துச்சு , எல்லா விஷயத்தையும் தரகர் சொன்னார்”.

“எங்களுக்கு கொஞ்சம் யோசனையாதான் இருந்தது , ஆனா எங்க மக உறுதியா இருக்கா , உங்க வீட்டு பிள்ளைக்கு சம்மதம்னா எங்களுக்கும் சம்மதம்” என்றார்.

ராஜீவுக்கு ஆச்சர்யத்தில் விழிகள் விரிந்து விட்டது கிஷோரின் காதிற்குள் “ஏண்டா ஒருவேளை அந்த பொண்ணு டூ.கே கிட்டா இருக்குமோ!! அவங்க தான எல்லாத்தையும் புதுமையா பண்றவங்க” என்றான் சீரியஸாக.

அவனை திரும்பி பார்த்த கிஷோர் “இவ்ளோ மாசத்துல இவர் ஒருத்தர் தான் வந்துருக்கார் , இந்த மாதிரி பேசி அவரையும் ஓட விட்டீங்க நானே காவி வாங்கி கட்டி உட்டுருவேன்” என்றவன் அவர்களின் பேச்சை கவனிக்க.

“பொண்ணு பேரு” என்றார்  துரைசெல்வம்.

“பாரதிங்க , இங்க நம்ம பொன்மணி நகை கடைல சூப்பர்வைசர்ங்க” என்க.

“சந்தோஷம்… பாரதி ஏன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிச்சுன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா” என்றார் துரைசெல்வம்.

“அது வந்துங்க….” என்று ஒரு நொடி தயங்கியவர்  “எங்களுக்கு ஒரு பையன் இருந்தான் , குடி போதை மருந்துனு கூத்தடிச்சு ஒரு பொண்ண….. அதுல ஜெயிலுக்கு போனான் , ஆனா திரும்ப வரல அவன் பொணம்தான் வந்துச்சு , எந்த தப்பும் பண்ணாம இத்தனை வருஷமா எல்லார் வாயிலையும் விழுந்து எழுந்துட்டோம்”.

“ஒரு குடும்பத்துல ஒருத்தரோ ரெண்டு பேரோ பண்ற தப்பு அந்த குடும்பத்தோட ஒட்டு  மொத்த  நிம்மதியையும் அழிச்சுடுது,  இவங்களுக்கும் அப்படி ஒரு நிலைமைன்னு தெரியவும் பேச சொல்லி சொன்னுச்சு”.

“ஆனா பாருங்க தம்பி நீங்க யோசிச்சு உங்க முடிவு என்னவோ அத தரகர் கிட்ட சொல்லிடுங்க , பரிதாபத்துல வாழ்க்கை அமைஞ்சா நல்லா இருக்காது , ஒரே மாதிரி சூழல் ரெண்டு பக்கமும் அதால புரிஞ்சுக்க முடியும்னு தான் நாங்க யோசிச்சிச்சோம்”.

“பொண்ண பெத்தவன் பாருங்க உங்கள பத்தி விசாரிச்சுட்டேன், அய்யாவே உங்களுக்கு பொண்ணு தேடுறார் , அப்போ உங்க குணம் நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கு “.

“போதாக்குறைக்கு நம்ம ஜெகன் தம்பி மச்சான் வேற அதான் நேர்லயே எங்க சம்மதத்தை சொல்ல வந்தேன் , உங்க முடிவை நீங்க சொல்லி அனுப்புங்க தம்பி” என்றவர் அனைவரிடமும்  விடை பெற்றார்.

சில அடிகள் நடந்தவர்  “பொண்ணு போட்டோ கொண்டு வரலைங்க, உங்க போட்டவ பாரதி கிட்டயும் காமிக்கலங்க , உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க போட்டோ அனுப்பி விடுறேன் இல்லனா அப்படியே விட்டுடலாம் பாருங்க” என்று வெளியேற.

மிக எதார்த்தவாதியான அந்த மனிதரை அவ்வளவு பிடித்தது ராஜீவுக்கு, அவன் திரும்பி துரைசெல்வதை பார்க்க “உன் முடிவுதான் நல்லா யோசிச்சு சொல்லு” என்றவர் அடுத்த வேலை பார்க்க சென்றுவிட்டார்.

“ஏதோ ஒரு மானஸ்தன் எனக்கு கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு தரைல கிடந்து உருண்டுட்டு இருந்தான் , இன்னைக்கு என்னடானா நான்தான் மாப்பிள கொண்டு வாங்கடா அம்பாரியனு உச்சியில ஏறி ஒக்காந்திருக்கான் , இந்த எயிட்டீஸ் கிட்ஸ் பேச்சை நம்ப கூடாதுடா கிஷோர்” என்று புலம்பிக்கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

“டேய் பொலம்பாம வா , இப்போ என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ குதிக்குற நீ” என்றான் ராஜீவ்.

“அடேங்கப்பா இது உலகமகா நடிப்புடா சாமி , என்ன பண்ணாராம் இப்போ எதுக்கு அந்த கடைக்கு போறோம்” என்றான் கிஷோர்.

“ரூபாவுக்கும் அம்முவுக்கும் நகை வாங்கடா , எனக்கு என் மச்சான் நல்ல சம்பளம் குடுக்குறார் அதுல என் தங்கச்சிகளுக்கு ஏதாவது வாங்கணும்னு நெனைக்கிறேன்” என்றவனை நக்கலாக பார்த்த கிஷோர்.

“மாப்பு எங்க அண்ணன் உங்களுக்கு ஆறு மாசமா சம்பளம் குடுக்குறார்,  அதோட பொன்மணி நகைக்கடை இங்க முப்பது வருஷமா இருக்காம்” என்றான் நீட்டி முழக்கி.

அவன் சொல்லுவதை எல்லாம் காற்றில் விட்டவன் கடை வந்தவுடன் இறங்கிவிட்டான்.

“அவங்க பேரு மட்டும்தான் தெரியும் அங்க போய் பாரதி யாருனு கேட்டா அவங்களுக்கு சந்தேகம் வராதா” என்க ராஜீவும் நிதானித்தான்.

“நான் அத யோசிக்கலையே” என்றவன் நெற்றியில் தட்டி யோசிக்க.

“இப்படியே தட்டி யோசிச்சுட்டு இருந்தா பாரதியே இங்க வருவாங்களா” என்ற குரலில் இருவரும் பதறி திரும்ப , முகம் கொள்ளா புன்னகையோடு நின்றிருந்தான் ஜெகன்நாதன்.

“அண்ணே” என்று கட்டிக்கொண்டான் கிஷோர் ஆரவாரமாக , அவன் கையை பிடித்த ராஜீவ் “எப்போ வந்த” என்றான் ஆச்சர்யமாக.

“அரைமணி நேரமா இங்க நிக்குறேன்” என்றான் குறும்பாக , ராஜீவ் அசடு வழிய  “எப்படி தெரியும்” என்றான்.

“அதுக்கெல்லாம் ஸ்பை வெச்சுருக்கோம்” என்றவன்  “வாங்க போய் பொண்ணு பார்ப்போம்”  என்று முன்னே நடந்தான்.

அவன் முகத்தில் பயண களைப்பையும் மீறி ஒரு உற்சாகம் அது அவனின் தும்பியை காணப் போகும் மலர்ச்சி என்று புரிந்தது.

உள்ளே சென்றவன் கொலுசு பார்க்க வேண்டும் என்க வெள்ளி செக்க்ஷன் அழைத்து சென்றனர் “இல்லை வேண்டாம் , தங்கத்தில் வேண்டும்” என்றான்.

இப்பொழுதும் அந்த ஒற்றை பாத கொலுசைதான் அணிந்திருக்கிறாள், நேராக தங்க பாதஸ்வரங்கள் பகுதிக்கு சென்றவன் பொறுமையாக பார்த்திருந்தான்.

விற்பனை பெண்களின் பார்வை அவனை தொட்டு தொட்டு மீண்டது, வெள்ளை நிற லினன் காட்டனில் மடித்து விடப்பட்ட முழுக்கை ஷர்ட், அடர் நீல நிற ஜீன் , டைடன் பாட்ரியாட் கருப்பு வண்ண வாட்ச் அவன் கையில் மிளிர்ந்தது.

புன்னகை மாறாமல் ரசித்து ரசித்து பார்த்திருந்தவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை , ஒரு கமாண்டர் மிடுக்கோடு கம்பீரத்தின் மொத்த உருவமாக அமர்ந்திருந்தான்.

“யாருக்காக பார்க்கிறான்” என்ற ஆர்வமும் அவர்களை தொற்றிக்கொண்டது , ராஜீவ் ஒரே மாதிரி இருந்த இரண்டு ஜோடி ஜிமிக்கிகளை வாங்கியிருந்தான் .

கொலுசை தேர்ந்தெடுத்தவன் அதை கையில் வைத்து அழகு பார்த்துவிட்டு  “இத பேக் பண்ணிடுங்க” என்றவன் பார்வை சாதாரணமாக பார்ப்பதை போல சுழல , நேவியின் லேசர் கண்களில் அவள் நேம்பேட்ச்  தப்பாமல் விழுந்தது.

கிஷோரிடம் கண் காண்பித்தான் ஜெகன் , அதை புரிந்துகொண்டவன் ராஜீவை அவள் புறம் திருப்பி அவன் காதில் விஷயத்தை கூற பெண்ணை பார்த்துவிட்டான்.

நிறம் கொஞ்சம் குறைவு , பார்க்க கலையாக இருந்தாள் இருபத்து எட்டு வயது என்று சொன்னதை போல் அல்லாமல் கொஞ்சம் வயது குறைவாக தெரிந்தாள் , அவன் பார்வையிலே அவனுக்கு பிடித்திருப்பதை அறிந்து கொண்டார்கள் இருவரும் , வாங்கிய பொருட்களோடு வீடு வந்து சேர்ந்தனர்.

இந்த நாளில் வருகிறேன் என்ற எந்த முன்னறிவிப்பும்  இன்றி வந்து நின்றிருந்தான் , கிஷோர் மற்றும் ராஜீவிடம் அவன் வந்திருப்பதை யாரிடமும்  சொல்ல கூடாது என்று சொல்லிவிட்டான்.

வாசலில் வந்து நின்றவனை பார்த்து அனைவரும் விழி விரித்தனர், “மாப்ள என்னையா இப்படி திடீர்னு வந்து நிக்குற” என்று ஆர்ப்பாட்டமாக வந்து கட்டிக் கொண்டார் துரைசெல்வம்.

முக்கியமான ஆளை மட்டும் காணவில்லை , அவன் தேடலை பார்த்த ஷ்யாமா மேலே அவன் அறையை காண்பித்தார் தூங்குகிறாள் என்று, சட்டென்று எழுந்தவன் “என்ன ஆச்சு உடம்பு சரி இல்லையா” என்க.

“ஒன்னும் இல்லை , மூலிகை டீ குடிச்சுட்டு படுத்திருக்கா”  என்க அவனுக்கு புரிந்தது.

“சரிய்யா நீ ரூமுக்கு போ , கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு நான் மத்தியானம் வரேன்” என்று மாமனும் விடைபெற , வேகமாக தன் அறைக்கு சென்றான் தாழிடப்படாமல் வெறுமனே சாற்றப் பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!