Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனதிலோர் மோகன ராகம்

மனதிலோர் மோகன ராகம் – 2

மனதிலோர் மோகன ராகம்

அத்தியாயம் – 2

சில மாதங்களுக்கு முன்பு

பெங்களூர் நகரத்தின் அந்த மூன்றடுக்கு மாடி கண்ணாடிக் கட்டிடம் இளவெயிலில் பளபளப்பாக மின்னியது. வெளியே ஒற்றை தங்க நிறத் தகட்டில் “ஷ்ருஷ்டீஸ்” என்று எழுதப்பட்டிருந்த அந்த கட்டடத்தின் வாயிலில் நின்றிருந்த பிங்க் ப்ளாசம் மரம் தாராளமாக தன் பூக்களைச் சிந்தி வாசலை வண்ணமயமாக்கியது.



Advertisement

“ஷ்ருஷ்டீஸ்” என்ன மாதிரியான குழுமம் என்று சட்டென கண்டு கொண்டுவிட முடியாதபடிக்கு நிர்மலமான முகப்புடன் அசட்டையாகத் தென்பட்டது. இப்போது இது தானே செல்நெறி. “ஷ்ருஷ்டீஸ் ஒரு கணினி நிறுவனமாகவோ, பொடிக்காகவோ, ரெஸ்டரெண்டாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னவென்று தெரியாத போது ஏற்படும் ஈர்ப்பும் தேடலும் அதிக அளவினது.

அதனால் தானோ என்னவோ மக்களின் க்யூரியாசிட்டியைத் தூண்டும் விதமாகவே இப்போது நிறுவனங்கள் யோசிக்க துவங்கியிருக்கின்றன. “உள்ள என்னவா இருக்கும்?” என்ற மனிதனின் இயற்கையான அறிவைத் தூண்டிவிட்டு, அதில் குளிர்காய்கின்றன.

அதே போன்றதொரு நிறுவனம் தான் “ஷ்ருஷ்டீஸும். உள்ளே நடக்கும் ஆரவாரங்கள் எதுவுமே வெளிப்பார்வைக்குத் தென்படாமல் மிகவும் அமைதியாக வீற்றிருந்தது. ஏனென்றால் அந்த கம்பெனியின் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் அந்த நொடி கட்டிடத்தின் உள்ளே நடந்தேறிக் கொண்டிருந்தன. “ஸ்ருஷ்டீஸின்” சி.ஈ.ஒ “நட்ஸ்” என்று அழைக்கப்படும் நடாஷா அந்தச் சுழலும் நாற்காலி மேஜையின் மீது ஆத்திரமாகத் தன் கைப்பேசியில் கத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

Advertisement

அவள் எதிரில் டிசைன் டீமைச் சேர்ந்த மைக்கிலும், வனிஷாவும் நின்றிருக்க, அவர்களைக் கண்டு கொள்ளாமல், “நிம்மகே அர்தவாகுதில்லா? நங்கே இது ஒந்து கடே ஒலகே பேக்கு” என்று கன்னடத்தில் வசை பாடிக் கொண்டிருந்தாள். இன்னமும் கொஞ்சம் திட்டிவிட்டு, கைப்பேசியை ஆத்திரமாக அருகே வைத்தாள்.

Advertisement

“சச் இர்ரெஸ்பான்சிபிள் பீபிள். உங்களையும் சேர்த்தி தான் சொல்லறேன். எக்ஸ்போர்ட் டிலே, ஷிப்மெண்ட் மிஸ்ஸிங்க்னு அவன் ஆயிரம் ரீசன் சொல்லலாம். அதே மாதிரி நாம சொல்ல முடியுமா? நாளைக்கு ஈவெண்டுக்கு வேணும்னு நாம டிசைட் பண்ணா, அதை எப்படியாவது கொண்டு வந்து குடுக்கறது தானே உங்க வேலை? அதுக்கு தானே சம்பளம் வாங்கறீங்க” என்று மைக்கிலையும், வனிஷாவையும் பார்வையால் கடித்து துப்பியபடிக்கே கர்ஜித்தாள்.

இருவரும் நட்ஸின் கோபம் அறிந்து மௌனமாக நின்றிருந்தனர். “வேர் இஸ் ராகா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்ட நடாஷா, எதிரில் நின்றிருந்த இருவரின் மீதும் ஓர் அசூசையான பார்வையை விடுத்தாள். பதிலளிக்க இயலாமல் திருதிருவென விழித்த மைக்கிலும், வனிஷாவும் நடாஷாவிற்குப் பதில் சொல்லும் முன்னர், நட்ஸ்ஸின் கைப்பேசி அலறியது.

“ஹலோ” என்று தன் எரிச்சலைக் கைப்பேசியில் கொட்ட ஆயத்தமான நடாஷாவின் முகம், மறுமுனையில் சொல்லப்பட்ட விஷயம் கேட்டதும் சட்டென அமைதியாயிற்று.

Advertisement

“கம் அகெயின்” என்று மீண்டுமாய் அச்செய்தியை உள்வாங்கிக் கொண்ட நடாஷா, “ஐம் ஆன் த வே. இன்னும் பத்து நிமிஷத்தில அங்க இருப்பேன்” என்று சொல்லிக் கொண்டே, பல ஆயிரங்கள் மதிப்புள்ள தன் லூயிஸ் வுட்டான் கைப்பையினைத் தூக்கிக் கொண்டு அந்த அறையிலிருந்து வேகமாக நடக்கலானாள். அவள் வேக நடைக்கு ஈடு கொடுத்துக் கொண்டே அவளைத் தொடர்ந்தனர் மைக்கிலும், வனிஷாவும்

“வனி! நீ நாளைக்கு ஈவண்டுக்கு தேவையான சவுண்ட் டிராக் சரியா இருக்கான்னு டெஸ்ட் பண்ணிடு. தென், அந்த மாடல்ஸ் எல்லாரும் அவைலவிள் தானேன்னு கன்பார்ம் பண்ணிக்கோ. அவங்க வந்து போக டாக்ஸி ரெடி பண்ணனும். டேக் கேர் ஆஃப் தட் ஆல்சோ! மைக், யூ கம் வித் மீ” என்று சொல்லிய நடாஷாவின் முகம் யோசனையினூடே சின்ன புன்முறுவலை வெளியிட்டது.

“எவ்ரிதிங்க் ஆல்ரைட் நட்ஸ்? ராகா ஃபோன் ஸ்விச் ஆஃப்னு வருது” என வனிஷா தயக்கத்துடன் கேட்க, நடாஷாவின் புன்னகை இன்னமுகாக விரிந்தது.

“ராகா இஸ் அரெஸ்டட். ஏ5 ஸ்டேஷன்ல ரிமாண்ட் பண்ணியிருக்காங்க” என்று சொல்லும் போதே வனிஷாவும் மைக்கிலும் பதட்டப்பட்டனர்.

“வாட் இஸ் திஸ் நட்ஸ்? ராகாவை ஏன் அரெஸ்ட் பண்ணாங்க? இஸ் ஷீ ஒ.கே?” என்று சரமாரியாக கேள்விகள் கேட்கத் துவங்கிய வனிஷாவின் பதட்டம், நடாஷாவின் புன்னகை முகத்தின் முன்னால் குழப்பத்துடன் தேங்கி நின்றது.

“திஸ் ராகா! ஐயோ! இவளை என்ன பண்ண? ஷி இஸ் ரியலி க்ரேஸி யு நோ!” என்று கூறிய நடாஷாவின் குரலில் அத்தனை பெருமை ததும்பி வழிந்தது.

“ஷாப் லிஃப்டிங்ன்னு சொல்லறாங்க. என்னன்னு போய் பார்த்தா தான் தெரியும். மைக், டூ ஒன் திங். கம்பெனி லாயர் ஷர்மா சாருக்கு இன்ஃபார்ம் பண்ணி, இம்மீடியட்டா ஏ5 ஸ்டேஷன் வர சொல்லிடு. நாம கிளம்பலாம்” என்று நடாஷா அடுத்தடுத்து உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டே, பேஸ்மெண்டில் நின்றிருந்த தன் கியா காரினுள் ஏறி எஞ்சினை உயிர்ப்பித்தாள்.

மைக்கில் முதலில் வழக்கறிஞருக்கு அழைத்துக் காவல் நிலையம் வருமாறு பணிந்துவிட்டு, தன் கீழ் பணிபுரியும் டிசைனர்களுக்கு அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொல்லி, வனிஷாவை மேற்பார்வை பார்த்துக் கொள்ளும் படிக்கு ஏற்பாடு செய்தான்.

“நட்ஸ், இந்த ராகாவுக்கு ஏதாவது பைத்தியம் பிடிச்சிருக்கா? ஷாப் லிஃப்டிங்க் பண்ணற அளவுக்கு என்ன குறையாம் அவளுக்கு?” என்று காரினை பெங்களூரின் பிரசித்தி பெற்ற டிராஃபிக்கில் இன்ச் இன்சாக செலுத்திக் கொண்டிருந்த நடாஷாவிடம் வினவினான்.

நடாஷா, தார் ரோட்டில் நீந்தி கொண்டிருந்த கார்களின் ஊடே லாவகமாக தன் வாகனத்தை உருட்டியபடிக்கே மைக்கிலின் கேள்விக்கு பதிலளித்தாள். “அவ பைத்தியம்லாம் இல்ல! விட்ட நம்மளை பைத்தியம் ஆக்கிடுவா! காரியக்காரி! ஷி இஸ் ஜஸ்ட் க்ரேஸி அபவுட் ஹர் ஜாப் மைக். அவளோட வேலை நடக்க, என்ன வேணா செய்வா ராகான்னு உனக்கு தெரியும் தானே!”

“தெரியும் நட்ஸ். பட், போலீஸ் ஸ்டேஷன் போற அளவுக்கு என்ன நடந்திருக்கும்” என்று குழப்பமாக வினவினான் மைக்கில்.

“வில் சீ” என்று கூறிய நடாஷாவிற்கும் அதே ஆர்வம் தான். இந்த ராகமாலிகா என்ன சிக்கல் செய்து வைத்திருக்கிறாளோ என்ற கவலையுடன் காவல் நிலையம் விரைந்தாள்.

இவர்கள் சென்று சேரும் முன்பே இவர்களது கம்பெனி வழக்கறிஞர் மிஸ்டர்.ஷர்மா வந்துவிட்டிருந்தார். நடாஷாவிடம் விவரங்களைச் சொல்லிக் கொண்டே ஸ்டேஷனுள் அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மர இருக்கையில் ஆயாசமாக அமர்ந்திருந்த ராகாவின் முகத்தில் கொஞ்சமும் கவலையோ, டென்ஷனோ தென்படவில்லை.

நடாஷாவைக் கண்டதும், மெல்லமாய் “ஹாய் நட்ஸ்” என்று கையசைத்த ராகா, தன் முதுகுக்குப் பின்னால் சுற்றி வைத்திருந்த அந்தத் துணி பண்டிலை இறுக்கமாகவே பற்றியிருந்தாள். பண்டிலில் இருந்து நீட்டிக் கொண்டிருந்த அந்த பச்சை வண்ண அனிமல் பிரிண்ட்டையும், அதை ராகா இறுக்கமாகப் பிடித்திருந்த விதத்தையும் பார்த்தவுடனேயே நடாஷாவிற்கு விஷயம் இன்னதென்று புரிந்து போயிற்று.

“யு சில்லி கேர்ள்” என்று ராகாவை செல்லமாக மனதினுள் திட்டிக் கொண்டே, அந்த சர்கிள் இன்ஸ்பெக்டரின் அறைக்குள் வழக்கறிஞருடன் சென்றாள் நடாஷா. ராகாவின் அருகே பதற்றத்துடன் வந்த மைக்கில், அவள் கையில் பிடித்திருந்த வஸ்துவைக் கண்டு, “இந்த துணி பண்டிலைத் தான் திருடினியா?” என்று கேட்க, ராகா சிரிப்பு மாறாமல் தலையை அசைத்தாள்.

“மெண்டலா ராகா நீ!” என்று மைக்கில் எகிற,

“பாப்பாவை ஏம்பா திட்டற” என்றூ கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் ராகாவின் காலடியில் குத்த வைத்து அமர்ந்திருந்த லுங்கி திருடன் வக்காலத்து வாங்கினான். அவனைக் கண்டு கொள்ளாமல், மைக்கில், “ஏ உன்னைத்தான் அறிவிருக்கா உனக்கு? எதுக்கு இந்த பண்டிலை திருடின?” என்று மீண்டுமாய் வினவினான்.

“ஏப்பா! நீயும் பாப்பா கம்பெனில தானே வேலை பார்க்கற? உனக்கு தெரியாதா நாளைக்கு உங்க ஷோவுக்கு இந்த துணி முக்கியமா வேணும்னு” என்று இதற்கும் அந்த லுங்கி திருடனே பதிலளிக்க, மைக்கில் கொதித்துப் போனான்.

“ஏய்யா நீ வேற, கொஞ்சம் அமைதியா இருய்யா! நா  என் ஃப்ரெண்டு கிட்ட தானே கேள்வி கேட்டுட்டு இருக்கேன். நீ ஏன் நடு நடுவுல பதில் சொல்லிட்டு இருக்க”

“ம்ம்ம் நானும் என் ஃப்ரெண்டுக்காக தான் பதில் சொல்லறேன். ராகா மை ஃப்ரெண்டும் தான்” என்றானே பார்க்கலாம், மைக்கிலின் முகம் போன போக்கைக் காண சகிக்கவில்லை.

“ஏன்யா படுத்தற? கொஞ்சம் அமைதியா தான் இருய்யா! உன்னை ஜெயிலுக்குள்ல உட்கார வைக்காம, இங்க ஏன் உட்கார வச்சிருகாங்க.” என்று முணுமுணுத்த மைக்கில், தன் குரலை வெகுவாகத் தாழ்த்திக் கொண்டு ராகாவிடம் பேசினான்.

“ இந்த அனிமல் ப்ரிண்ட் நம்ம ஷோவுக்கு நாளைக்கு தேவையான ஒன்னு தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா அதுக்காக ஷாப் லிஃப்டிங் பண்ணற அளவுக்கு போகணுமா? அவளோ இம்பார்டெண்டா இந்த பண்டில்” என்று மைக்கில் ஆயாசத்துடன் வினவ, ராகா “நாளைக்கு ஷோவுக்கு வேணும்ல. அப்போ இம்பார்டெண்ட் தான்” என்று கண்களைச் சிமிட்டிக் கொண்டு சிரித்து வைத்தாள்.

மைக்கிலின் இந்த கேள்வியும் லுங்கி திருடனுக்குக் கேட்டிருக்க வேண்டும். “சும்மா சும்மா முக்கியமான்னு கேட்காதப்பா. பாப்பாவும் என்னை மாதிரி தான். அதுக்கு ஸ்பெஷலா சில ஐயிட்டம்ஸ் மட்டும் திருட பிடிக்குது. தோ நான் கூட கொடியில காயற சங்கு மார்க் லுங்கி, ஜாக்கி ஜட்டின்னு பிராண்ட் ஐயிட்டம்ஸ் மட்டும் தான் திருடுவேன். ஆனா, மத்த உடுப்பெல்லாம் கை வைக்க மாட்டேன்பா. ஒன்லி பிராண்ட்ஸ்” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டே ராகாவைப் பார்த்து சிரித்து வைத்தான்.

“இப்போலாம் பிராண்ட் அயிட்டம்ஸ் குவாலிட்டி கொஞ்சம் கம்மி ஆகிட்டே தான் வருது இல்ல” என்று ராகா அந்த லுங்கி திருடனிடம் கேட்க, அவனும் ஆமோதிப்பாய் உச் கொட்டத் துவங்க, மைக்கில் ராகாவின் தலையில் பலமாகத் தட்டினான்.

“கருமம்.  அவன் உன்னையும் தன் திருட்டுக் கூட்டத்தில ஒருத்தின்னு வச்சு பேசிட்டு இருக்கான். நீயும் கம்பெனி குடுத்துட்டு இருக்க. கொஞ்சம் நேரம் அமைதியா இரு” என்று சொல்லிய மைக்கில், காவல் ஆணையர் அறையில் இருந்து நடாஷா வருகிறாளா என்று நோட்டம் விட்டான்.

அந்நேரம், காக்கி காவலாளி ஒருவர் வேகமாக உள்ளிருந்து வெளிபட்டார். “இந்தா பொண்ணு! உள்ள வா! ஐயா கூப்பிடறாங்க!” என்று சொல்லி ராகாவை உள்ளே அழைத்தார். அறையினுள் நடாஷாவும் வழக்கறிஞரும் அமர்ந்திருக்க, சர்கிள் இன்ஸ்பெக்டர் எதிரில் அமர்ந்திருந்தார்.

“பார்த்த டீசண்டா இருக்கீங்க. படிச்ச பொண்ணா தெரியறீங்க. நீங்க பண்ணற காரியமா இது? இனி இப்படியெல்லாம் நியுசென்ஸ் க்ரியேட் பண்ணாதீங்க” என்று ராகாவை மிரட்டிவிட்டு, ஒரு கோப்பையில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

அப்போதும் ராகாவிற்கு மனம் தாங்கவில்லை, “சார். அந்த பண்டிலை நான் எடுத்துட்டு போகலாமில்ல? காசைக் கூட நான் ஜிபே பண்ணிட்டேன். அப்போவே” என்று தன் காரியமே கண்ணாக வினவ, அதுவரையிலும் கடுகடு வென்றிருந்த இன்ஸ்பெக்டரின் முகத்தில் சிரிப்பு ரேகைகள் மலர்ந்தன.

“மிஸ் நடாஷா! கொஞ்சம் சொல்லி புரிய வைங்க. கூட்டிட்டிப் போங்க” என்று சிரிப்பு மாறாமல் கூறிய இன்ஸ்பெக்டருக்கு தலையசைத்து, ராகாவை காவல் நிலையத்தில் இருந்து வேகமாக இழுத்து வந்தாள் நடாஷா.

“பை ஃப்ரெண்ட். எனக்கு அந்த பண்டில் துணியில லுங்கி தச்சு தர்றேன்னு சொல்லியிருக்கீங்க. மறந்துடாதீங்க. நான் இந்த ஸ்டேஷனுக்கு அடிக்கடி வருவேன். ஏட்டுகிட்ட என் நம்பர் இருக்கு” என்று ராகாவிடம் கத்திய லுங்கி திருடன் காலிலேயே ஒரு போடு போட்டு, “வாய வச்சுகிட்டு சும்மாவே இருக்க மாட்டியா நீ” என்று அவன் வாயைக் கட்டினார் ஏட்டய்யா.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு செய்வதறியாது உடன் வந்த மைக்கில், “என்ன ராகா பண்ணி வச்ச?” என்று வினவினான்.

“என்ன கேட்டா, அந்த லயன் கார்மெண்ட்ஸ் கடைக்காரன் கிட்ட போய் கேளு. நானே பாம்பே ஷிப்மெண்ட் டிலே ஆகிடுச்சே, நம்ம ஷோவுக்கு இன்னும் ஒரு டிரஸ் பாக்கி இருக்கே என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டே சிக்பெட் மார்கெட்ல நடந்துட்டு இருந்தேன். அப்போன்னு பார்த்து, நாம பாம்பே ஷிப்மெண்ட்ல ஆடர் பண்ண அதே பிரிண்ட், அதே கலர் துணி , லயன் கார்மெண்ட்ல இருந்துச்சு.”

“உள்ள பேய் விலை விசாரிச்சு எவளோ மீட்டர் வேணுமோ வாங்கிட்டு வர வேண்டியது தானே! அதுக்கு எதுக்கு பண்டிலை திருடின?”

“அது எனக்கு தெரியாதா? நான் என்ன வேணும்னா திருடினேன்! நான் விலை விசாரிச்சப்போ, “நாட் ஃபார் சேல்னு” சொல்லறான். சேலுக்கு இல்லைன்னா அப்பறம் ஏன் கடையில் தொங்க விடணும். நானும் அசராம பேசிப் பார்த்தேன். அவன் கொஞ்சமும் அசைஞ்சு குடுக்கலை. அதனால”

“அதனால?”

“அதனால பண்டிலைத் தூக்கிட்டு வெளிய ஓடி வரப் பார்த்தேன். வெளிய வந்துட்டு ஜிபே பண்ணி அமெளண்டை அனுப்பிடலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள புடிச்சுட்டாங்க படுபாவிக. அதும், என்னா ஒற்றுமைங்கற. செகெண்ட்ல எல்லா கடைக்காரனும் ஒண்ணு கூடிட்டாங்க” என்று வடிவேலு பாணியில் சிரிப்பு மாறாமல் ராகா சொல்லச் சொல்ல, மைக்கிலுக்கு சிரிப்பும், கோபமும் ஒன்று சேர எழுந்தது.

“உன்னை! என்ன சொல்லறதுன்னே தெரியல மாலி! இப்படி தான் லூசுத்தனமா பண்ணுவியா? எல்லா கடைக்காரனும் சேர்ந்து அடி சாத்தியிருந்தா தெரிஞ்சிருக்கும்”

“அதெப்படி அடிப்பானுக? நான் தான் தெளிவா தமிழ் பேசறனேனே! என் மேல கை வச்சா, கன்னடக்காரன் தமிழனை அடிச்சுட்டான்னு கதறி ஒரு சண்டையை இழுத்திருக்க மாட்டேன்” என்று சிரிப்பு போலவே உண்மையாகப் பேசினாள் ராகா.

“அடிப்பாவி! ஒரு சின்ன பிட்டு துணிக்காக, ஜாதி கலவரத்தை உண்டாக்க பார்த்திருக்கியே நீ” என்று கூறிய மைக்கில் மிரட்சியுடன் ராகாவை ஏறிட, அவளோ தனது பிரத்தியேக, சூனியக்காரி சிரிப்பினை சிந்தினாள். ராகாவின் இந்த ஈவில் விட்ச் புன்னகை அவள் நண்பர்கள் மத்தியில் வெகு பிரபலம். கண்களை இலேசாகக் குறுக்கி, பற்களைக் காட்டாமல், இதழ் ஓரம் மட்டும் மடித்து, சற்றே சைக்கோத்தனமாய் இருக்கும் அவளது இந்த சிரிப்பு.

இந்த சிரிப்பைச் சிந்தினாள் என்றால் ஏதோ வம்பு வளர்த்து யாரையோ வசமாக மாட்டி வைத்திருக்கிறாள் என்று அர்த்தம். மைக்கில், ராகாவையே பாவமாக பார்க்க, இதற்குள் வண்டியை செலுத்திக் கொண்டிருந்த நடாஷா பேசலானாள். “லீவ் இட் மைக். அவளைப் பத்தி தெரியாதா உனக்கு? தனக்கு ஒரு வேலை நடக்கணும்னா எந்த லெவல் வேணா இறங்கிப் போவான்னு!” என்று சமாளித்தாள்.

“அதுக்காக போலீஸ் ஸ்டேஷன்லாம் ரொம்ப டூ மச் நட்ஸ். இவ கூட இருக்கறதுல கம்பெனி வேலை கத்துக்கறனோ இல்லையோ, இந்த தகிடுதத்த வேலை எல்லாம் கத்துக்கறேன்” என்றான் சலிப்புடன்.

“மைக். இந்த காலகட்டத்துல, போலீஸ் ஸ்டேஷன்ல எப்படி நடந்துக்கணும், ஒரு எமர்ஜென்ஸின்னா எப்படி ரியாக்ட் பண்ணனும், இதெல்லாம் கத்துகறது தான் இம்பார்டெண்ட். சரி, இந்த விஷயத்தை விடு.. சில்..” என்று தன் நண்பனைச் சமாதானம் செய்த ராகா,

“அனிமல் பிரிண்ட் ஸ்கர்ட் டிசைன் ஃபைனலைஸ் பண்ணிடீங்களா நட்ஸ்?மூணு மெயில் அனுப்பியிருந்தேன். நீங்க ஃபைனலைஸ் பண்ணா ஸ்டிச்சிங் போயிடலாம்” என்று தன் வேலையில் ராகா முனைப்பாகிவிட, நடாஷாவும் ராகாவும் அடுத்த தினம் நடக்கவிருந்த ஈவண்ட் குறித்து கலந்தாலோசனை செய்வதில் மூழ்கிப் போயினர்.

நடாஷா, “ஸ்ருஷ்டீஸின்” முதலாளி. தண்ணீராய் காசு செலவழித்து அலுவலகம், சிப்பந்திகள், டிசைனர்ஸ் எனத் தொழில் தொடங்கியது என்னவோ நடாஷா தான். வெளி வேலைகள் எல்லாமே நடாஷாவின் பார்வையில் நடந்தேறும். ஆனால் அலுவலகத்தினுள் வேலைகள் தோய்வின்றி நடக்கக் காரணம் ராகா.

நடாஷா கொண்டு வரும் ஆடர்களை சீர் பார்த்து, எவற்றை ஏற்றுக் கொள்ள, எவற்றை வெளிதள்ள, எவை எந்த நேரத்தில் முடிவு பெறும் என்றெல்லாம் திட்டமிட்டு, அதை சரி வரச் செய்து முடிப்பது ராகாவின் திறமை. “ஸ்ருஷ்டீஸ் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்” கம்பெனிக்கு என்று பெங்களூரில் ஒரு தரம் இருந்தது. சிறிய அளவிலான வேலை என்றாலும் கூட, அதைச் சிரமேற்கொண்டு வாய்பிளக்கும் அளவிற்கு சிறப்பாகச் செய்து முடிக்கும் என்று பெயர் பெற்றிருந்தது.

பிறந்த நாள் விழாக்கள், கார்பரேட் அலுவலக பார்டிகள் என்று சிறிய அளவில் வரத் துவங்கிய ஆடர்கள், இன்று, மேபலீன், சேனல், வெர்சாஸ் என்று பன்னாட்டு நிறுவனங்களின் ஃபேஷன் ப்ராடெக்ட் லான்ச், பொடிக் ஓபனிங் விழாக்கள், ஃபேஷன் ஸ்டூடியோ, திருமண நிகழ்வுகள் என்று பன்மடங்காக பெருகியிருந்தது.

தன் மேனேஜ்மெண்ட் திறமையை, மக்களைக் கையாண்டு வேலை வாங்கும் பணியை சிறப்பாகச் செய்து வந்தது ஷ்ருஷ்டீஸ்.

இந்த குறுகிய கால அசுர வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், ராகாவும் அவள் குழுவும் என நடாஷா நன்கு அறிவாள். என்ன தான் மைக்கிலும், வனிஷாவும் ராகாவுடன் வாய்த்தகராறு செய்து கொண்டே இருக்கும் போதும், மூவருமாகத் தத்தமது வேலையைச் சிரத்தையாகச் செய்து முடிப்பர் என்று நடாஷா பூரணமாக நம்பினாள்.

இதையெல்லாம் மனதில் எண்ணி கொண்டே, ராகா கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு தன் வாகனத்தை அலுவலகம் நோக்கிச் செலுத்தினாள் நடாஷா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!