Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சுதர்சன சக்கரம்

சுதர்சன் சக்கரம் – 10

தன் கையில் ஒரு சாவி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், தன் அடுத்த திட்டத்தை யோசித்துக் கொண்டே சனா நின்றிருந்த போது தான், திடீரென்று மின்சாரம் தடைபட்டது.

திடீரென்று ஏற்பட்ட இருட்டில் அனைவரும் கூச்சலிட, சனாவும் அதிர்ந்து விழிக்க, எதிர்பாராத விதமாய் வெடிபடும் இடியுடன் வேகமாய் தன் கைகளில் இருந்த மோதிரத்தை, சனாவின் வெண்டை விரலில் அணிந்துவிட்டான் சக்ரா.

நீர் உயர நெல்லும் சேர்ந்து உயருவது போல், இருந்தது அவன் புன்னகை.

இதை சனா சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகத்திலையே தெரிந்தது.



Advertisement

அவள் என்னவென்று உணர்வதற்குள் சென்றிருந்த மின்சாரமும் திரும்பி வந்தது. உடனே சக்ரா தன் மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டு இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டான்.

அப்போது அனைவரும் பார்த்தது, சனாவின் விரலில் மோதிரத்தை அணிந்துவிட்டு, நிமிர்ந்து நின்ற சக்ராவைத்தான்.

அதிர்ச்சியில் அனைவரும் உறைந்துபோய் நின்றிருந்தனர். அதில் இருந்து முதலில் விடுபட்ட வேதா தான், வேகமாக சனாவின் கையில் இருந்து அவளுக்கு வலிக்க வலிக்க மோதிரத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கினார்.

Advertisement

அவர் தன் கரத்தைப் பற்றியதும் தான் அவள் ஒரு நிலைக்கு திரும்பினாள்.

Advertisement

எவ்வளவு வேகமாக மோதிரம் அவள் வெண்டை விரலில் ஏறியதோ, அதே வேகத்தில், அது அவளிடம் இருந்து பறிக்கவும் பட்டது.

“அம்மா…..” என்ற சத்ததுடன், வலியை வெளியே கட்டாமல் இருக்க பெரிதும் முயன்றாள்.

உடனே அவள் கரங்களைப் பற்ற சென்ற சக்ராவின் கைகளை பிடித்துக்கொண்டார் வேதா.

Advertisement

தன் அன்னையின் செயலைக் கண்ட சக்ரா, “அம்மா! என்ன செய்கின்றீர்கள்?. சனா பாவம்…” என்று மொழிய.

அவனை முறைத்துப் பார்த்தவர், சனாவிடம் திரும்பி, “உன்னை இங்கு பார்க்கும் போதே, ஏதோ கலங்கம் செய்ய வந்திருக்கின்றாய் என்று என் உள்ளம் கூறியது. ஆனால் அதை நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போதோ, உன் தங்கையின் கையில் ஏற வேண்டிய மோதிரத்தை நீ போட்டுக்கொண்டு நிற்கின்றாய்!.” என்றார் தாடை எலும்புகள் எல்லாம் இறுக.

“இல்லை ஆண்ட்டி….” என்று அவள் ஏதோ சொல்ல வருவதற்குள், “போதும் நிறுத்து!. உன்னை இந்த வீட்டிற்குள் வரவிட்டதே என் தவறு தான்.” என்ற வார்த்தைகள் இப்போது ரவியிடம் இருந்து வந்தது.

நடந்த குழப்பத்தால் சில நிமிடங்கள் வேதாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்தவள், எப்போது தன் தந்தை பேச ஆரம்பித்தாரோ, அப்போதே வீறு கொண்டே வேங்கை போல சிலிர்த்து எழுந்தாள்.

தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டவள், “நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் மிஸ்டர் ரவி…. நீங்கள் போனால் போகட்டும் என்று என்னை வீட்டிற்குள் விட்டீர்களா?.” என்று வார்த்தைகளை தன் பற்களுக்குள் கடித்து துப்பியவள், “இங்கே வர, எனக்கு யாரும் அனுமதி தரவேண்டும் என்ற அவசியம் இல்லை.” என்று அவள் சொல்லும் போதே, அங்கே வந்துவிட்டார் அருணகிரி.

வந்திருந்த உறவுகள் அனைவரும் வேடிக்கை பார்க்க, தங்கள் குடும்ப விவகாரம் கத்திரிக்காய் போல் சந்தையில் விற்பனையாவதை அவர் விரும்பவில்லை.

சனாவின் அருகே வந்துவிட்டவர், “இந்த சொத்துகள் அனைத்திற்கும் மூத்த வாரிசு சனா தான். அவளை யாரும் எதுவும் பேசக்கூடாது.” என்று தன் மகன் மற்றும் மகளுக்கு எச்சரித்தார்.

அருணகிரி சொன்னதும் அங்கே மறுபேச்சு ஏது?. ஆனால் இந்த பிரச்சனையை அவ்வளவு சீக்கிரம் விடுபவர் இல்லையே உமா.

சனாவிடம் வந்தவர், “உன்னை பேச எங்களுக்கு உரிமை இல்லை தான். ஆனால் என் மகள் விஷேசத்தில் இப்படி அபசகுணமாக செய்துவிட்டாயே!.” என்று வாயைப் பொத்திக் கொண்டு அழுதார்.

எவ்வளவு தான் உள்ளுக்குள் அதிக விஷத்தை வைத்துக் கொண்டு திரிந்தாலும், அதை அப்படியே வெளியே கொட்டிவிடும் ரகம் அல்ல உமா.

“என்ன ஆண்ட்டி ஆளாளுக்கு என்னை குற்றவாளி போல் பேசுகின்றீர்கள். உண்மையான குற்றவாளி இவன் தான். மோதிரத்தை தவறாக போட்டது இவன் தானே!.” என்று சக்ராவை சுட்டிக் காட்டினாள் சனா.

இப்போது அனைவரது பார்வையும் சக்ராவை நோக்கி தான் சென்றது. அவனோ சாவகாசமாக நின்றுகொண்டிருந்தவன், “தவறு என் மேலும் கிடையாது. தவறு எல்லாம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது தான்.” என்று சொல்லி தன் தோள்களைக் குலுக்கினான்.

அவனது நக்கல் வழிந்த பேச்சில் அவனது திட்டத்தினை உணர்ந்தவள், “தவறு நடப்பது சகஜம் தான். இப்போது நீ மாலினியின் கரத்தில் மோதிரத்தை அணியலாமே!.” என்றாள், தன் வில் போன்று வளைந்திருந்த புருவத்தை தூக்கி உயர்த்தியபடி.

தான் கொளுத்தி போட்ட நெருப்பு, திரும்பவும் காற்றுக்கு தன் பக்கம் வருவதை உணர்ந்தவன், தன் தந்தையைப் பார்த்து, “அப்பா! இன்று என் மனதுக்கு சரியில்லை. அதனால் இந்த நிச்சயதார்த்தம் வேண்டாம்.” என்றான் ஒரே முடிவாக.

உடனே உமாவின் கண்களில் கண்ணீர் பிரவாகம்.

“அப்படி சொல்லாதே சக்ரா. ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது.” என்று உமாவின் துணைக்கு வந்தார் வேதா.

மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டவன், “என்னை ப்ரீயா விடுங்கள் அம்மா.” கோபத்தை தாங்கி பிடித்தபடி சொன்னவன் வேகமாக மேடையில் இருந்து கீழே இறங்கி சென்றான்.

அவனைப் பின் தொடர்ந்து செல்லப்போன வேதாவை தடுத்த சுந்தர், “அவன் சொன்னது உனக்கு கேட்கவில்லையா?.” என்று உரும்பலுடன் கூற, கப்சிப் என்றானார்.

ரவிக்கும் உமாவுக்கும் தன் மகளின் விசேஷம் தடைபட்டதில் அவ்வளவு மனத்தாங்கலாக இருந்தது. ஆனால் மாலினியோ எந்த வித உணர்வுகளையும் தன் முகத்தில் கட்டாமல் நின்றிருந்தாள்.

ரவியின் கோபம் முழுவதும் சனாவின் மேல் தான் இருந்தது. “உன் அம்மாவை மாதிரி நீயும்.” என்று எதுவோ சொல்ல வருவதற்குள், “நிறுத்துடா…. உன் முதல் பெண் சனாவுக்கு திருமணம் செய்யாமல், உன் இரண்டாவது பெண்ணிற்கு ஏற்பாடு செய்ததால் தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்துவிட்டது.” என்று கூற. அதற்குள் அங்கிருந்து சென்றிருந்தார் ரவி.

தன் கணவன் செல்வதைப் பார்த்துவிட்டு தன் மாமனாரைப் பார்த்த உமா, “சனாவையும் நான் பெற்ற பிள்ளை போல தான் பார்க்கின்றேன் மாமா. அனைவரும் எனக்கு ஒன்று தான். சனா இடத்தில் மாலினி இருந்திருந்தாலும் நான் இப்படி தான் பேசி இருப்பேன்.” என்று பசப்பு வார்த்தைகளைக் கூறினார்.

பின், “ஐயோ மாலினி….” என்று உமா ஒப்பாரி வைக்க.

“அம்மா! எனக்கு ஒன்னும் இல்லை. என்னவோ என் வாழ்க்கையே வீணாகிவிட்டது போல் அழாதீர்கள். முதலில் வீட்டிக்குள் செல்லுங்கள்.” என்றதும் அவரும் சென்றார்.

அருணகிரி, வீட்டிற்கு பெரிய மனிதராக அங்கிருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு, “கண்டிப்பாக அனைவரும் உண்டுவிட்டு தான்  செல்லவேண்டும்.” என்று சொல்லிவிட்டு சென்றார்.

இப்போது சனாவும், மாலினியும் மட்டுமே அங்கிருந்தனர். மாலினியின் தோளில் தன் கையை வைத்த சனா, “என்னை மன்னித்துவிடு மாலி.” என்று நிஜமாகவே மனமுருகி மன்னிப்பு வேண்ட.

“என்ன அக்கா பேசுகின்றாய்? நல்லவேளை அவர் மோதிரத்தை என் கையில் போடவில்லை. சக்ராவுடன் எல்லாம் என்னால் வாழமுடியாது.” என்று சொல்லிக்கொண்டே சாப்பிடும் இடத்திற்கு சென்றவளை பின் தொடர்ந்தாள் சனா.

அங்கே ஏற்பாடு செய்திருந்த உணவை தன் தட்டில் அடுக்கிக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்த மாலினியின் அருகே வந்து அமர்ந்து கொண்டவள், “நீ இன்னும் வீட்டை விட்டு ஓடும் நினைப்பில் தான் இருக்கின்றாயா?” என்று சனா கேட்க.

தன் வாயில் இட்லி பிய்த்து போட்டபடியே, “அதெல்லாம் இருக்கட்டும். உனக்கும் சக்ராவிற்க்கும் நடுவில் என்ன ஓடுகின்றது?” என்று அவளை நேர்பார்வை பார்த்தபடி கேட்டாள் மாலினி.

அதற்கு சோர்வாய் முகத்தை வைத்தவள், “அதெல்லாம் உன் கற்பனையாக இருக்கலாம்.” என்றவள் நினைவு சக்ராவை சுற்றி வந்தது.

அதை வேகமாக ஒதுக்கி வைத்த சனா, “சரி. நான் கேட்டதற்கு பதில் சொல்.” என்றாள் தன் பிடியில் நின்றபடி.

“எனக்கு தெரியவில்லை. நான் திரும்பவும் ரோஷனிடம் பேசவேண்டும். இங்கிருந்தால் இந்த சக்ராவை என் தலைமேல் கட்டிவைத்துவிடுவார்கள். இந்த சக்ராவுடன் எல்லாம் என்னால் வாழவே முடியாது அக்கா.” என்று திரும்பும் அதில் வந்து நின்றாள்.

“ஏன் அப்படி சொல்கின்றாய் மாலி. அவனை திருமணம் செய்ய பலர் போட்டி போடுகின்றனர்.” என்று தன்னை அறியாமல் வார்த்தைகள் வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள் சனா.

“நானும் அப்படி தான் நினைத்தேன் அக்கா. ஆனால் சக்ரா, நம் தாத்தாவை விட கஞ்சம். ஆனால் என் ரோஷன் அப்படி கிடையாது. ராஜஸ்தானில் உள்ள மன்னர் பரம்பரை அவன்.” என்று காதலோடு பேச.

அவள் பேச்சில் சிரிக்காமல் இருக்க மிகவும் பெரும்பாடுபட்டாள் சனா.

தொடர்ந்து பேசிய மாலினி, “நான் கேட்டால் எதுவும் மறுக்காமல், ரோஷன் எனக்காக வாங்கி தருவான் தெரியுமா!.” என்றாள் அலட்டலாக.

‘ரோஷனைப் பற்றி விசாரிக்க வேண்டும்.’ என்று தன் மனதினுள் குறித்துக்கொண்டாள் சனா. தன் உரிமைகளைப் பெற சில வேலைகளை செய்திருந்தாலும், மாலினியின் மேல் அவள் பாசமாக தான் இருந்தாள்.

****************************************

இங்கே தன் அறையில், ஆக்ரோஷமாக கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தான் சக்ரா.

அப்போது அங்கே வந்த சிவா, “சனாவின் கையில் மோதிரம் போடுவதற்கு தான், மெயினை ஆப் பண்ண சொன்னியா.” என்று கேட்க.

இசைப்பதை நிறுத்திய சக்ரா, “என்னை அனுதினமும் கொன்றுகொண்டிருக்கின்றாள் சிவா. அவளைப் பற்றி அனைத்தையும் அறிந்த நான். இப்போது, அவளுக்கு என்னதான் தேவை என்று அறியாமல் தவிக்கின்றேன்.” என்றதும், தன் வாயில் விரல் வைத்துக் கொண்டான் சிவா.

“ஹேய் ப்ரோ! உனக்கு இப்படி எல்லாம் பேச வருமா?. நீ இவ்வளவு நீளமாக பேசி நான் இன்று தான் பார்க்கின்றேன்.” என்று ஆச்சரியப்பட்டான்.

“ஆனால் ஒன்று அண்ணா! நடந்த நிகழ்வுகளை என் யூடியூப் சேனலில் போட்டிருந்தால், நான் பிரபலம் ஆகிருப்பேன். ஆனால் மிஸ் பண்ணிட்டேன்.” என்று சோகமாக முடித்தான் சிவா.

அவனை முறைத்துப் பார்த்தவன் திரும்பவும் இசைக்க ஆரம்பித்தான். அவன் அதை இசைக்கும் போது, அவன் கழுத்தில் இருந்த சாவி பெண்டன்ட், அவனது இசைக்கு நடமாடியது போல் அவன் அசைவிற்கு ஆடியது.

அதே பெண்டன்ட் சிவாவின் கழுத்திலும் தொங்கிக்கொண்டிருந்தது. அவனைப் பார்த்து தன் தலையை ஆட்டிக்கொண்ட சிவா, தன் அறைக்குள் வந்தான்.

தன் மடிக்கணினியை எடுத்தவன், “ஒரு நல்ல கதை கிடைத்திருகின்றது.” என்று சொல்லிக் கொண்டே, அதில் ‘சுதர்சன சக்கரம்.’ என்று தட்டச்சு செய்தான்.

இங்கே சக்ரா அவளின் நிலை புரியாமல் குழம்ப, சனாவோ தனது அன்னையை எவ்வாறு சமாதானம் செய்வது என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.

அவள் தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்க, ‘இனி அடுத்த இலக்கு சிவா தான்.’ என்று தன் மனதினுள் நினைத்துக் கொண்டே வந்தவளின் உயிரைப் பறிக்க லாரி ரூபத்தில் காலன் வந்துகொண்டிருந்தான்.

காலன் தானாக வரவில்லை, வரவைக்கப்பட்டிருந்தான். இங்கு இசைக்கருவியை மீட்டுக்கொண்டிருந்த சக்ராவின், நடுவிரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!