Skip to content
Post Views: 6,537
மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் 4
Advertisement
பத்தாவது முறையாகத் தன் வலதுகை மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான் சத்யா. என்ன தான் ஸ்விஸ் வாட்ச்சே என்ற போதிலும், அவன் அவசரம் புரிந்து வேகமாகச் சென்றுவிடாமல், தன் போக்கில் தன் முட்களை நகர்த்தி கொண்டிருந்தது.
“என்னை பத்து மணிக்கு ஷார்ப்பா வான்னு அத்தனை தடவை சொல்லிட்டு அவ இன்னும் காணோம் ” என்று கருவி கொண்டவன், மீண்டுமாய் ஒரு முறை மணி பார்த்துவிட்டு, தன் கைப்பேசியில் மிருதுவின் எண்ணைத் தொடர்பு கொண்டான்.
Advertisement
Advertisement
“ஹே சாரி சாரி பேபி. தீப்திய பிக்கப் பண்ணிட்டு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. ஹெல்ட் அப் இன் டிராஃபிக். வந்துட்டே இருக்கோம் ஒ.கேவா. ப்ளீஸ் டோண்ட் கெட் டென்ஸ்ட்” என்று எடுத்த எடுப்பிலேயே ஐஸ்க்ரீம் குளிர்ச்சியாய் பேசினாள் மிருதுளா.
இதற்கு மேல் என்ன வாதாட முடியும் அவளிடம்? எப்படியும் இன்றைய தினம் முழுக்க அவளுடன் ஊர் சுற்றவென ஒதுக்கியாகிவிட்டது. அதில் முன்னே பின்னே காலதாமதம் ஆனால் என்னவாம் இப்போது? என்ற எண்ணம் தோன்றியது.
Advertisement
“இட்ஸ் ஒ.கே பேப், பார்த்து வா! சீ யூ சூன்” என்று மட்டுமாய் கூறிவிட்டு கைப்பேசியை அணைத்த சத்யா, வாகனத்தினை விட்டு இறங்காமல் தன் கைப்பேசியில் அன்றைய தினம் முடிக்க வேண்டிய சில அலுவல்கள் குறித்து தன் காரியதரிசிக்கு கட்டளைகளைச் சொல்லிமுடித்தான்.
சிறிது நேரம் வெறுமனே கைப்பேசியை நோண்டி கொண்டிருக்க, அவன் தமக்கை ஹரிணியிடமிருந்து வாட்ஸ்ஸப் அழைப்பு வந்தது. அமெரிக்காவில் இது நள்ளிரவு நேரம் என்பதை உணர்ந்தவன், “ஏ! என்ன இந்த நேரத்தில கூப்பிட்டிருக்க? என்ன பண்ணிட்டு இருக்க? இன்னும் தூங்கலையா?” என்று மூன்று மாதம் வாயும் வயிறுமாக இருப்பவளிடம் வினவினான்.
“இல்லடா. கொஞ்சம் ஒமட்டலா இருந்தது. அதான்.”
“வாந்தி எடுத்தியா என்ன? ஆர் யூ ஒ,கே” என்று கேட்கும் போதே அவன் குரல் வெகுவாகத் தளைந்து போய் கம்மியது.
“ம்ம்ம். எடுத்தேன். பிரதாப் டீ போட்டுத் தர்றேன்னு அடுப்பில நிக்கறார்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஹரிணியின் கணவன் பிரதாப் கைப்பேசி திரையில் தென்பட்டான். “என்ன மாமா! வில்லி செமயா டார்ச்சர் பண்ணறாளா?” என்று சிரிப்புடன் வினவ, பிரதாப், “வந்து, இப்ப நான் என்ன சொல்லறது?” என்று தடுமாற்றத்துடன் ஒருவிதமாய் தலையை மட்டும் அசைத்தான்.
“அட சும்மா தைரியமா சொல்லுங்க. நீங்க தான் எதுக்கும் துணிஞ்ச தைரியசாலி ஆச்சே” என்று பிரதாப்பின் திணறல் கண்டு ஹரிணி சிரிப்புடன் கேட்க, இம்முறையும் பிரதாப் சுதாரிப்புடன், “நீ எப்படி டிசைன் டிசைனா கேள்வி கேட்டாலும், உன் அடிக்கு நான் சிக்க மாட்டேன்டீ” என்ற தோரணையில் மீண்டுமாய் தலையை மட்டும் அசைத்தான்.
“ நேத்து பேசினப்போ பொண்டாட்டியை அடிக்கி ஆள்வது எப்படின்னு எனக்கு சொல்லித் தர்றேன்னு சொன்னீங்களே மாமா! அந்த செஷன் எப்போ வச்சுக்கலாம்?” என்று சத்யா வீம்பாக வினவ,
“மாரியாத்தா, மாரியாத்தா! எப்படியாவது இவங்கிட்ட வாய் குடுத்து மாட்டிகாம என்னைய காப்பாத்தீரு.” என்று தெளிவாக முணுமுணுத்த பிரதாப், “நான் போய் வாந்திய க்ளீன் பண்ணிட்டு வர்றேன் ஷரிணிம்மா. நீ தம்பி கூட பேசிட்டு இருடா” என்று நைசாக நழுவிக் கொண்டான் பிரதாப்.
கணவரின் செய்கைக் கண்டு சிரிப்பு மூண்டது ஹரிணிக்கு. நகர்ந்து செல்லும் கணவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஹரிணியிடம், “நல்லா பார்த்துக்கறார் இல்ல” என்று கரிசனமாக பிரதாப் பார்த்துக் கொள்ளும் பாங்கு கண்டு சத்யா வினவ, ஹரிணி கண்ணில் ஒரு நிறைவுடன் தலையசைத்தாள். பிரதாப் கவனித்துக் கொள்ளும் விதத்தில் ஒரு குறையும் சொல்லிவிட இயலாது.
“ஏ!போதும்டீ, மாமாவ சைட் அடிச்சது! போயி நேரங்காலமா தூங்கு.” என்று செல்லமாகக் கூற, ஹரிணி புன்னகைத்தாள்.
“எங்க கதை இருக்கட்டும். நீ என்ன இந்த நேரத்தில ஆபீஸ்ல இல்லாம, எங்க ஊர் சுத்திட்டு இருக்க? மிருது கூட இருக்காளா?”
“இல்லக்கா. இன்னைக்கு கொஞ்சம் வர்க் கம்மி தான். ரெண்டு மூணு மீட்டிங் மட்டும் தான் இருக்கு. மதியத்துக்கு மேல தான் ஆபீஸ் போணும்.”
“மிருது கூட தான் இருக்கியா?”
“அவ இன்னும் வரலை. அவளுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”
“சோ, ஐய்யா, ஃபியான்சி கூட ஊர் சுத்த கிளம்பிட்டன்னு சொல்லு”
“ஏ ஊர்லாம் சுத்தலக்கா! நேத்து ஈவினிங் ரெண்டு மூணு ஈவெண்ட் மானேஜ்மெண்ட் கம்பெனி விசாரிச்சோம். மிருது ஃப்ரெண்ட் தீப்தி இருக்காள்ல”
“யாரு அந்த நார்த் இந்தியன் பொண்ணா?”
“ம்ம் அவ தான். தீப்தி இன்னொரு கம்பெனி சஜஸ்ட் பண்ணியிருக்கா. அவளோட கசின் வெட்டிங் இவங்க தான் செஞ்சாங்களாம். ரொம்ப நல்ல ஃபீட்பேக் குடுத்தா.”
“ஓ. சரி சரி. கம்பெனி பேர் என்ன சொன்ன? நான் என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட விசாரிக்கறேன்.”
“ஷ்ருஷ்டீஸ்”னு. HSRலே அவுட்ல இருக்கு. இன்னைக்கு இவங்க கிட்ட பேசப் போறோம். அப்பறமா மிருதுக்கு எது ஒ.கேன்னு பார்த்துட்டு மேல ப்ரொசீட் பண்ணணும்”
“ஓ. உங்க வுட்பீ டெஸ்டினேஷன் வெட்டிங்கே தான் வேணும்னு அடம்பிடிக்கறதா கேள்விபட்டேன். அப்படியா என்ன?”
“ஆமா ஆமா! ஏதோ சின்ன வயசில இருந்தே இப்படி தான் வெட்டிங் இருக்கணும்னு ரொம்ப கனவு கண்டாளாம். பீச் வெட்டிங் தான் வேணுமாம்” என்று சத்யா கூற, அவன் குரல் வைத்து அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை ஹரிணியால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
சத்யாவிற்கு பெங்களூர் மிகவும் பிடித்தம். அதிலும் நந்தி ஹில்ஸ் அவன் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஓர் இடம். தன் சோகம், மகிழ்ச்சி, துக்கம், தோய்வு என எல்லாவற்றையும் அவன் கொண்டு போய் சேர்க்கும் ஒரு இடம் அந்த நந்தி ஹில்ஸ் தான்.
சத்யாவின் இந்த பிடிப்பிற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இறந்து போன அவர்களது தாய் மாலதி கடைசி கடைசியாகச் சிரிப்புடன், மகிழ்ச்சியுடன் ஓடி ஆடி விளையாடிய இடம் அது. அதனால் தன் தாயின் மடி போன்றே அந்தக் குன்றையும், கோவிலையும் பாவிப்பான் சத்யா. ஹரிணியின் திருமணத்தைக் கூட யோக நந்தீஸ்வரரின் கோவில் தான் வைக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டான்.
ஆனால், ஹரிணியின் தந்தையின் திட்டம் வேறாக இருந்த காரணத்தினால் அக்காவின் திருமணத்தை நந்தி ஹில்சில் நடத்த இயலாமல் போனது. “சத்யா, வேணும்னா கல்யாணம் முடிச்ச கையோட நீ, அக்கா, மாமான்னு நாம எல்லாருமா கோவிலுக்குப் போயிட்டு வரலாம்பா. பட், அங்க மேரேஜ் வைக்கறது ரொம்ப கஷ்டம். இத்தனை ரிலேட்டிவ்ஸை மேல கீழன்னு இழுத்துட்டு போகணும்.”
“அப்பா கொஞ்சம் மேனேஜ் பண்ணா அங்கையே வைக்கலாம்ப்பா”
“அப்படிமேனேஜ் பண்ணறதுன்னா நாம கல்யாண விஷயத்தில நிறைய காம்பிரமைஸ் பண்ண வேண்டியிருக்கும் சத்யா. புரிஞ்சுக்கோ. இது உன் அக்கா கல்யாணம் மட்டுமில்ல. நம்ம கம்பெனியோட கெளரவம். இன்னார் வீட்டு கல்யாணம் இங்க நடக்குதுன்னு அந்த நாள் பெங்களூர்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்.”
“அப்பா, ஆனா” என்று தன் வாதத்தை சொல்ல சத்யாவிற்கு வாய்ப்பில்லாமலேயே போய்விட்டது.
“ சத்யா! 2000 ஃபேமலிக்கு கல்யாண பத்திரிக்கை செண்ட் பண்ணியிருக்கோம். எவளோ கூட்டி குறைச்சாலும் 3000 பேர் நிச்சயமா கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணுவாங்க. இவளோ ஆளுங்கள ஹில்ஸ்ல தங்க வைக்க, போக்குவரத்துன்னு ரொம்ப சிரமம் சத்யா. பிராக்டிகலி ரொம்ப கஷ்டம். ப்ளீஸ் டோண்ட் டேக் எமோஷ்னல் டெஷிசன்ஸ்”
“அதுவுமில்லாம, நாம காசுக்கு கஞ்சத் தனம் பண்ணிட்டு, ஹரிணிக்கு ஏப்ப சோப்பையா கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்னு சொந்த பந்தமெல்லாம் பேசும். இதெல்லாம் தேவையா சொல்லு” என்று சத்யா மறுப்பே கூற முடியாத அளவிற்கு விளக்கம் சொல்லி மறுத்துவிட்டார் அவன் தந்தை நடராஜ்.
அந்த நேரம் தோன்றிய ஏமாற்றத்தை ஓரம் தள்ளிவிட்டு, யோசித்த போது. தந்தையின் பேச்சில் இருந்த நியாயம் அவனுக்கும் புரிபடவே செய்தது. வீட்டின் முதல் திருமணம். அதிலும் அவன் அன்னையின் மறைவிற்குப் பின்னர் நடக்கப் போகும் முதல் சுப நிகழ்வு. அதை விமரிசையாக, கொண்டாட்டம் போல நடத்த வேண்டும் என்று ஒரு தந்தை ஆசைப்படத் தானே செய்வார். இவற்றையெல்லாம் சொல்லி தன் மனதைத் தேற்றிக் கொண்டான் சத்யா.
தன் திருமணத்தையாவது யோக நந்தீஸ்வரனின் முன்பு நடத்த வேண்டும் என ஆவல் கொண்டிருக்க, அவன் கொஞ்சமும் எதிர்பாரா வண்ணம் மிருதுளா டெஸ்டினேஷன் வெட்டிங் தான் வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டிருந்தாள். முதலில் ஏதோ விளையாட்டாய் சொல்கிறாள், எடுத்துக் கூறினால் மாறிவிடுவாள் என்றே நினைத்த சத்யாவின் மனம் மிருதுவின் எண்ணத்தைக் கொஞ்சமும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டதும் ஏமாற்றம் அடைந்தது.
இன்று தன் தமக்கை அந்த பேச்சை எடுக்க, சத்யா கொஞ்சமாய் சங்கடப்பட்டான். “உனக்கு டெஷ்டினேஷன் வெட்டிங் ஒ.கேவா சத்யா? இங்கையே மேரேஜ் வச்சா பெட்டரா இருக்கும்ணு நினைக்கறியா? உன் எண்ணம் என்ன?” என்று தம்பியின் மனதை அறிந்து கொள்ளும் விதமாகக் கேட்டாள்.
“அது, அதெல்லாம் ஒண்ணும் பிராப்ளம் இல்ல ஹரிணி. மிருது ரொம்ப ஆசைப்படறா. அவ கண்டிஷன்னு சொன்ன ஒரே ஒரு விஷயம் இது மட்டும் தான்”
“அவ எண்ணம் தான் ஏற்கனவே சொல்லிட்டியே! நான் உன் மனசில என்ன இருக்குன்னு தான் கேட்கறேன். உனக்கு இந்த டெஸ்டினேஷன் வெட்டிங் ஒ.கேவா சொல்லு. இல்லைன்னா, நான் வேணும்னா மிருதுகிட்டேயும், அவ அப்பாகிட்டயும் பேசறேன்”
“ஏ, வேண்டாம் வேண்டாம்.” என்று அவசரமாக மறுத்தவன், “அவ ஆசைபட்டபடியே நடக்கட்டுமே! என்ன இப்போ ஹரிணி. எவளோ ப்ளான்ஸ் பண்ணறா ஹரிணி. ஒண்ணு ஒண்ணும் அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்னு நூறு கனவு வச்சிருக்கா. அவளோ பேஷனோட ப்ளான் பண்ணறா. அதோட பேஸே அந்த பீச் வெட்டிங் தான். அதை கலைக்க வேண்டாமே”
“அதுக்காக நீ ஏண்டா இவளோ இறங்கிப் போகணும்? அப்படி அட்ஜெஸ்ட் பண்ணிக்க, அவங்க சொல்லற மாதிரியெல்லாம் கேட்டு தலையை ஆட்ட நமக்கு என்ன வந்துச்சு? மிருது ஃபேமிலி பரம்பரை பணக்காரங்களா இருக்கலாம். நாம ஒண்ணும் அவங்களை விட எந்த விதத்திலேயும் வசதில குறைங்கவங்க இல்லை! நம்ம தாத்தா, அப்பா, இப்போ நீன்னு இந்த தொழிலை சிறப்பா நடத்தறதுனால தான் அவங்களா தேடி வந்து கல்யாணம் பேசினாங்க! அதை மனசில வச்சுக்கோ!”
“ஐய்யோ அக்கா! எதுக்கு இப்போ நீ வசதி பத்திலாம் பேசற! நான் மிருதுவோட இண்டிரெஸ்ட்ஸை பக்கத்தில இருந்து பார்க்கறேன். எவளோ ஆசை ஆசையா ப்ளான் பண்ணறா! அதை கெடுக்க எனக்கு மனசு வரலை. அவளோ தான்.”
“அவளோட ஆசையும், இண்டிரெஸ்டும் மட்டும் தான் முக்கியமா உனக்கு? நீ என்ன நினைக்கறன்னு அவளும் தான் யோசிக்கணும். அவ “பார்ன் வித் சில்வர் ஸ்பூனா” இருக்கலாம். எதுவுமே மத்தவங்களை பாதிக்காத வரைக்கும் தான் நல்லது. நமக்கு ஒரு சங்கடம்னா அதை நாம சொல்லித் தான் ஆகணும் சத்யா”
“அக்கா எனக்கு இதில எந்த சங்கடமும் இல்லை! நிஜம்மா தான் சொல்லறேன். எனக்கு இந்த டெஸ்டினேஷன் வெட்டிங் சம்மதம் தான். ப்ளீஸ் இந்த பேச்சை விடு. இனி இதுபத்தி பேச வேண்டாமே ப்ளீஸ்” என்று நிதானமாக அதே நேரம் தீர்க்கமாகவும் பேசி ஹரிணியின் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டிருந்தான்.
அவன் வார்த்தையை மீறி, மிருதுவிடமோ, அவள் தந்தையிடமோ பேசும் துணிவு ஹரிணிக்கு வரவில்லை. “என்னம்மோ பண்ணு” என்ற ஒற்றை வார்த்தையுடன் ஹரிணியும் தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
“சரி, நீ போய் தூங்கு. ரொம்ப டைமாச்சு” என்று ஹரிணியிடம் விடை பெற்றவன், காரிலில் இருந்து இறங்கி அந்தக் கட்டிடத்தின் வாயிலில் ஆயாசமாக நின்றான். ஹரிணி சொல்ல வருவது அவனுக்குப் புரியாமல் இல்லை.
ஆனால் இதை ஒரு விஷயம் என்று பெரிசு படுத்த சத்யா விரும்பவில்லை. அதுவுமில்லாமல், மிருது ஆசையுடன் கேட்ட ஒரே விஷயம் இது மட்டும்தான் எனும் போது, அதிலும், தானும் அவள் கேட்ட போது தன் சம்மதத்தை தெரிவித்துவிட்ட போது, மீண்டும் குழப்புவானேன் என்று நினைத்தான்.
மிருதுளா இன்னமும் வந்துசேரவில்லையே என்ற அயற்சியுடன் அமர்ந்திருந்த வாகனத்தில் இருந்து இறங்கி, சாலையின் ஓரமாக நின்று பக்கவாட்டில் அண்ணாந்து அந்தக் கட்டிடத்தைப் பார்த்தான். பெரிய அளவிலான அலங்காரங்கள் ஏதுமின்றி, அமைதியாகத் தோற்றமளித்தது “ஷ்ருஷ்டீஸ்”.
தங்கள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளைக் கையாள வேண்டி, பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனிகளைப் பற்றி அலசியதில், அனேகமாக இந்தக் குழுமத்தின் பெயரை உச்சரிக்காதவரே இல்லை எனலாம்.
“அப்படி என்னத்த அவ்வளவு நல்லா மேனேஜ் பண்ணற வேலை? எங்க காசை வாங்கி, அதை எங்க கண்ணு முன்னாலையே தண்ணியா செலவழிச்சு, எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கறீங்க. நீங்க என்ன வாய் வித்தை வச்சிருக்கீங்கன்னு பார்க்கலாம்” என்றே எண்ணம் கொண்டிருந்தான் சத்யா.
அவன் அந்தக் கட்டிடத்தின் முன்பு நின்றிருந்த அந்த வேளையில் கட்டிடத்தினுள் இருந்து அவள் வெளிப்பட்டாள். Beige நிறத்தில் வயிற்றிலிருந்து துவங்கிய கால் சராயும், சற்றே லூசான அடர் மெஜந்தா வண்ண ஷர்ட்டும், கால் சராயை இறுக்கமாக அதனிடத்தில் வைத்திருக்க தோதாய் ஒரு பெல்ட்டும் அணிந்திருந்தாள். முதுகின் பாதி வரை அலையடித்த கூந்தல், “நானெல்லாம் யாருக்கும் அடங்க மாட்டேன்” என்று சபதமெடுத்திருந்தது போல் காற்றில் கலைந்தோடியது.
அலட்சியமாகக் கூந்தலை அவிழ்த்தே விட்டிருந்தாள். தன் ஒப்பனைக்காக வெகுவாய் மெனக்கெடல் எதுவும் தென்படவில்லை. கழுத்தில் தொங்கிய கண்ணுக்கும் புலப்படாத சங்கிலியில் கோர்க்கப்பட்டிருந்த ஒற்றை வைரக்கல் டாலரும், வலது கை மணிக்கட்டில் ஓர் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சும் மட்டுமே ஆபரணம். காதுகளில் கூட எதுவும் அணிந்திருக்கவில்லை.
பார்த்த சில நொடிகளிலேயே அவளின் பிம்பத்தை இத்தனை தூரம் மனதில் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? எதற்காக அவளைப் பற்றி இத்தனை சிந்திக்கிறேன் என்ற கேள்விக்கு அப்பாற்பட்டவளாய் அவனருகில் வந்து கைகளை நீட்டினாள் ராகா.
“ஹாய் மிஸ்டர்.சத்யசாய்ராம். வெல்கம் டு “ஷ்ருஷ்டீஸ்”. ஐம் ராகா” என்ற படிக்கே கைகுலுக்கினாள். அதற்கு மேல் அவள் பேசியது எதுவுமே அவன் காதுகளில் விழவில்லை என்பது போல அவன் காதுகள் சட்டென அடைத்து கொண்டன. “இவளை எங்கோ முன்னமே சந்தித்திருக்கிறேனே! எங்கே?” என்று பலத்த யோசனை எழுந்தது. ஒரு நொடி சுதாரித்து, தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், மீண்டும் அவள் பேச்சை கவனிக்கலானான்.
ராகா இன்னமும் பேசிக் கொண்டு தானிருந்தாள். “மிருதுளா மேடம் இப்போ தான் ஃபோன் பண்ணாங்க. டிராபிக்ல மாட்டிகிட்டிருக்காங்க போல. நீங்க கீழே வெயிட் பண்ணறீங்கன்னு சொன்னாங்க. அதான் ரீசீவ் பண்ண வந்தேன், மேடம் வர்ற வரைக்கும் மேலேயே வெயிட் பண்ணலாம் மிஸ்டர்.சத்யா” என்று சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்து கட்டிடத்தின் இரண்டாம் தளத்திற்கு அழைத்து வந்து விட்டிருந்தாள்.
“ப்ளீஸ்” என்று சொல்லி, ஒரு கண்ணாடி அறையினுள் அவனை அமரவைத்துவிட்டு, புன்னகையுடன் கதவை மூடிச் சென்றாள். கண்ணாடி தடுப்புகளின் வழியாக அந்தத் தளத்தில் நடந்து கொண்டிருந்த வேலை ஆயத்தங்களை சத்யா பார்வையிட்டான்.
அதாவது, தளத்தை வேடிக்கை பார்ப்பவன் போலச் சுற்றி சுழலும் பார்வை வீச்சில் தவறாது அந்த ராகாவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டான். கணினி முன்பு அமர்ந்திருந்த ஓர் ஆடவனின் தோளில் கை வைத்து ஏதோ சொன்னாள், அவளிடம் வந்து ஃபைலைக் காட்டி கேள்வி கேட்ட பெண்ணிடம் கண்களைக் குறுக்கிக் கொண்டு கைகளை வீசிய படிக்குப் பதிலளித்தாள்,
சற்றே இறங்கிவிட்டிருந்த அவள் கால் சராயை பேசிக் கொண்ட லாவகமாக மேலே இழுத்து விட்டாள், இவளிடம் காபி கோப்பையை நீட்டிவிட்டுச் சென்ற பெண்ணிடம் புன்முறுவல் மாறாமல் நன்றி சொல்லி கோப்பையை பெற்றுக் கொண்டாள்.
இதையெல்லாம் கண்ணாடித் தடுப்பின் பின்னால் அமர்ந்து சத்யா அவனையும் அறியாமல் பார்வையால் அளந்து கொண்டிருந்தான். “டேய் என்னடா மிட்டாய் கடையைப் பார்த்த பாப்பா மாதிரி பிஹேவ் பண்ணற!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், கதவினை இலேசாகத் தட்டிவிட்டு, உள்ளே அவன் எதிரில் பிரசன்னமானாள்.
அவனையும் மீறி அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து கொள்ளப் போனவனைக் கண்டு கண்கள் ஓரத்தில் மெல்லமாகப் பூத்த குறும்புப் புன்னகையை முகத்தில் படறவிடாமல் கண்களுடனேயே நாகரீகமாக நிறுத்திவிட்டிருந்தாள்.
“ப்ளீஸ் ஹேவ் சம் ஹாட் சாக்லேட் மிஸ்டர்.சத்யா. எங்க ஆபீஸோட ஸ்பெஷல் ட்ரிங்.” என்று சொல்லிக் கொண்டே, அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் முன்னால் ஹார்சாக்லேட் அடங்கிய கோப்பையை நாசூக்காக வைத்தவள், அலமாரியில் இருந்து சில மாத இதழ்களை எடுத்து அவன் முன்னால் வைத்தாள்.
“ப்ளீஸ் பீல் அட் ஈஸ்.” என்று சொல்லிவிட்டு சிரிப்பு மாறாமல் அவ்விடம் விட்டு சென்றுவிட்டாள். சத்யாவிற்குத் தான் மிகுந்த சங்கடமாக இருந்தது. “சே! என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பா? கல்யாணத்துக்காக ஈவெண்ட் மானேஜ்மெண்ட் பண்ண வந்திருக்கோம்னு கொஞ்சம் கூட எண்ணம் இல்லாம, இப்படி அப்பட்டமா சைட் அடிக்கறது? சரியான பொம்பளை பொறுக்கி, லோஃபர், பர்வேர்ட்னு நினைச்சிருக்க மாட்டா!” என்று தன்னை நொந்து கொண்டவன், வேண்டுமென்றே கண்ணாடி தடுப்பிற்கு முதுகு காட்டிக் கொண்டு அமர்ந்தான்.
சத்யா அமர்ந்திருந்த அறையிலிருந்து வெளிப்பட்ட ராகாவும் சற்றே அசவுகரியமாகவே உணர்ந்தாள். அவளுக்கு ஆண்களின் அப்பட்டமான ஆளை விழுங்கும் பார்வைகள் ஒன்றும் புதிதல்ல. இதையெல்லாம் எண்ணி பயந்து போய் ஒடிங்கிக் கொள்ளும் ரகமும் அவளல்ல. “பார்த்தா பார்த்துட்டு போ! என்கிட்ட வந்து வம்பு வளர்க்காத வரைக்கும் நான் உன்னைக் கண்டுக்கவே மாட்டேன்” என்று அசால்டாக லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்பவள் தான்.
அதனால் வெளியே மற்ற ஆண்களின் பார்வை அவ்வளவாக அவளை எதுவும் செய்துவிடாது. இங்கானால் திருமணத்திற்காகப் பதிவு செய்ய வந்திருக்கும் இவன், இந்தப் பார்வை பார்ப்பானேன். “சைட் அடிக்கறது கூட ஒ.கே! ஆனா அது எனக்குத் தெரியற அளவு அடிக்கறதை கொஞ்சம் குறைச்சுக்க கூடாதா? என்ன பாஸ் நீங்க? உங்க கல்யாணத்துக்கு தான் எங்களை புக் பண்ண வந்திருக்கீங்கற மண்ட மேல இருக்கற கொண்டைய மறந்துட்டு சைட் அடிக்கறீங்களே! “என்று தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டாள்.
சத்யாவின் இந்த வெயிட்டிங்கின் போது சைட்டிங்கை வனிஷாவும் கவனித்திருந்தாள். ராகா அவளைக் கடக்கும் சமயம், “ஏ, என்ன கண்ணாடிய தாண்டி காதல் பார்வைகள் வயித்துல அம்பு மாதிரி பாயுது? கல்யாண பொண்ணு கூட இல்லைங்கற தைரியமா? இவனையெல்லாம் நம்பி கழுத்தை நீட்ட ஒருத்தி சரின்னு சொல்லியிருக்கா பாரேன் ராகா!” என்று ராகாவை இழுத்து வைத்துக் கூறினாள்.
ராகா தோளை மட்டும் குலுக்கிக் கொண்டு, “வசனமாடா நமக்கு முக்கியம்! படம் தானே முக்கியம்! நமக்கு ஈவெண்ட் கிடைச்சா மட்டும் போதும்ம்.” என்று கொஞ்சமும் நக்கல் குறையாமல் இரட்டை அர்த்தத்தில் கூறக் கேட்ட வனிஷா நகைக்க, ராகாவும் உடன் சிரித்தாள்.
ஏனென்றால் அவள் மனதில் அந்த நொடி, “இந்த ஈவெண்ட் நமக்கு கிடைக்க வேண்டும். அதற்காக இவனிடம் கொஞ்சம் போல வழிந்தால் கூட தவறில்லை. ஜஸ்ட் எ ஹார்ம்லெஸ் ஃப்ளர்ட்(flirt). கொஞ்சம் சிரித்து வைத்தால் ஈவெண்ட் நமக்குக் கிடைக்கும்” என்ற எண்ணம் தான் பிரதானமாக இருந்தது.
அதனாலேயே அவன் பார்க்கிறான் என்பது தெரிந்தும், அவன் கவனிக்கும் படியாகவே அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
error: Content is protected !!