Skip to content
Post Views: 12,340
விஷ்ணு கிளம்பிய சில நிமிடங்களிலேயே வாசலில் கார் வந்து நிற்க முகம் கொள்ளா புன்னகையுடன் இறங்கினர் அதிர்துடியனின் பெற்றோர்.
பட்டுபுடவையில் தயாராகி சுகமதியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தன் அறையில் செல்பி எடுத்து கொண்டு இருந்த யாழி வாசலில் கார் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள்.
அங்கு எதிர்பாராமல் மரகதத்தை கண்டதும் உடனே ஓடி சென்றவள் பெற்றோரை முந்தி கொண்டு புன்னகையுடன் அவர்களை எதிர்கொண்டு, ‘ஹாய் ஆன்ட்டி எப்படி இருக்கீங்க..?? நீங்க எப்படி இங்க..??’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டவள் அருகே இருந்த சுந்தரலிங்கத்திடம்,
‘சார் உங்களை ஸ்கூல்ல கடைசியா பார்த்தது எப்படி இருக்கீங்க..?? உள்ள வாங்க சார்’ என்று இருவரையும் வரவேற்றவள் மரகதத்துடன் இணைந்து நடக்க சுகமதியோ ஒன்று புரியாமல் யாழியின் கையை சுரண்ட,
Advertisement
‘ம்மா சார் எங்க ஸ்கூல் கரெஸ்பாண்டென்ட் மறந்துட்டியா..??’ என்றவள் திரும்பி,
“ஆன்ட்டி உங்களுக்கு எப்படி எங்க வீடு தெரியும்..?? யார் சொன்னா..?? சார் நீங்க தான் கூட்டிட்டு வந்தீங்களா..??” என்று கேட்டவாறே உள்ளே சென்றவள் ‘உட்காருங்க’ என்று அவர்களை அமர்த்தி விட்டு உடனே சமையலறைக்கு சென்று திரும்பியவள் இயல்பாக அவர்களுக்கு குடிக்க தண்ணீரை கொடுத்து,
‘என்ன ஆன்ட்டி உங்க பையனுக்கு பொண்ணு கிடைச்சதா அதான் என்னை கல்யாணத்துக்கு கூப்பிட வந்தீங்களா..??’ என்றவள் அவர் பதிலளிக்கும் முன்,
Advertisement
‘அப்பா உங்க கிட்ட சொன்னேனே அது இவங்க தான்..!! இந்த ஆன்ட்டியை தான் நான் திருவண்ணாமலையில் பார்த்தேன்’ என்று கூற,
Advertisement
வாஞ்சையோடு அவளை பார்த்து கொண்டிருந்த மரகதம் கணவரிடம், ‘பார்த்தீங்களா..?? நான் சொன்னப்போ நம்பலையே’ என்று கேட்க புன்னகையுடன் யாழி புறம் திரும்பியவர்,
‘ஆமா யாழி என் பையனுக்கு கல்யாணம் முடிவு பண்ண தான் வந்திருக்கேன், எப்படி இருக்கான் பாரு’ என்று அதிர்துடியனின் புகைப்படத்தை காண்பிக்க,
‘என்ன சார் சொல்றீங்க..?? என்கிட்டே எதுக்கு..’ என்று அவள் கைபேசியை வாங்காமல் அவரை பார்க்க,
Advertisement
‘யாழி உன்னை பெண் பார்க்க வந்ததே இவங்க தான்’ என்று மகேஷ்வரன் கூற இதை எதிர்பாராது சட்டென மரகதத்தின் அருகே அமர்ந்திருந்தவள் எழுந்து நின்று கொண்டாள்.
பின்னே நேற்று முழுக்க சுகமதி கூறிய அறிவுரை படி அவர் அழைக்காமல் யாழி வெளியே வந்திருக்க கூடாது ஆனால் இப்போது வந்ததோடு அல்லாமல் நேர்மாறாக அவர் அருகே அமர்ந்ததில் என்ன சொல்வாரோ என்று அன்னையை பார்க்க,
அவரோ மணமகன் வீட்டார் வந்ததில் இருந்து அவர்களை கவனிக்கும் மகளின் பண்பை வியந்து பார்த்து கொண்டிருந்தார்.
‘என்ன யாழி இது..?? எதுக்கு எந்திரிச்ச..?? எந்த பார்மாலிட்டியும் வேண்டாம் வா உட்காரு’ என்று அவள் கைபிடித்து அருகே அமர்த்திய மரகதம் ,
‘புடவையில ரொம்ப அழகா இருக்கம்மா’ என்றவர் சுகமதியிடம் மறக்காம சுத்தி போடுங்க என்றார்.
‘எங்க பையனுக்கு கல்யாணம் முடிவாகிடுச்சான்னு கேட்டியே.., நீ ஓகே சொன்னா அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிக்கலாம் ‘ என்று கூற யாழி எத்தகைய உணர்வை கொண்டாள் என்று அவளாலேயே கணிக்க முடியவில்லை.
“இது எங்க மூத்த பையன் அதிர்துடியன்..!! எம்.பி.ஏ முடிச்சிட்டு சொந்தமா தொழில் செஞ்சிட்டு இருக்கான், உனக்கு அவனை பத்தி வேற ஏதாவது தெரியனும்ன்னா எங்க பையனை பத்தி நாங்க சொல்றதை விட உன் அப்பா கிட்ட கேளும்மா அவரே சொல்வார்” என்று சுந்தரலிங்கம் கூற,
மரகதமோ “அவன் வெளியூர் போயிருக்கான் யாழி அதான் இன்னைக்கு எங்க கூட வரலை ஆனா அவன் வந்த பிறகு உன்னை பார்க்க வர அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல.., நேத்து தரகர் உன் போட்டோவை காட்டினதும் எப்போடா உன்னை பார்ப்போம்ன்னு துடிச்சிட்டு இருந்தேன் இன்னைக்கு நல்ல நேரத்துல ஓடி வந்துட்டேன் ” என்றவர் அதிரின் புகைபடத்தை யாழியிடம் காட்டி,
‘உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு’ என்றார்.
***********************************************
‘அதெல்லாம் எங்கே யாழிக்கு கேட்டது..??
‘அதிர்துடியன்’ என்ற பெயரே அவள் மனதில் அதிர்வலைகளை தோற்றுவித்து பெண்ணவளை ஆழியாய் சுருட்டி கொண்டதே..!!
‘அதிர்துடியன்’ என்று மீண்டும் மீண்டும் மனதினுள் அதை சொல்லி பார்த்து கொண்டு இருந்தவளுக்கு இறுதியில் “பேரே சும்மா அதிருதே, செம மாஸா இருக்கே” என்று தோன்ற மீண்டும் ஒரு முறை அதிர்துடியன் என்று சத்தமின்றி அவள் சொல்லி பார்க்க,
“யாழி என்ன யோசனை, போட்டோ பாருமா உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு’ என்றார் மரகதம் மீண்டும் அவளை உலுக்கினார்.
அதில் நினைவுலகிற்கு வந்தவள் கைபேசியை வாங்கி விழிகளை அதிரின் படத்தில் நிலைக்கவிட்டாள்.
ஆனால் அடுத்த சில கணங்களிலேயே ஏதோ மாய சுழலில் சிக்கி இழுத்து செல்லபடுவது போல உணர்ந்த பெண்ணின் மனம் நிழற்படத்தில் இருந்தவனின் தோற்றத்தில், கம்பீரத்தில், வசீகரத்தில் என்று மொத்தமாக அவன் வசத்தில் கிறங்கி அவனில் தஞ்சம் புகுந்திருந்தது.
ஆம் அவள் ஆழ்மன எண்ணத்திற்கு வடிவம் கொடுத்தது போல புகைப்படத்தில் புன்னகைத்து கொண்டிருந்த அதிர்துடியனை பார்த்த நொடியே அவள் விழி வழி நுழைந்து பெண்ணவள் மனதை ஆர்ப்பாட்டமின்றி ஆக்கிரமித்து அதில் சிம்மாசனமே போட்டு அமர்ந்து விட்டான்.
யாழியின் விழிகளில் ரசனை நிரம்பி வழிய அதியின் முகத்தில் இருந்து பார்வையை நகர்த்த முடியாமல் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது பெண் மனம்..!!
ஆம் எங்கோ மூலையில் கேட்ட ஒரு பெண்ணின் குரலுக்கு கட்டுப்பட சொல்லி மூளை இட்ட கட்டளைக்கு எதிராக அவள் மனமே போர்கொடி ஏந்தி போராட, பார்வையை அகற்ற முடியாமல் ஒரு கட்டத்தில் தோய்ந்து போய் அதை மீட்டெடுக்கும் எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்தாள் பாவை.
‘என் பையனை பிடிச்சிருக்காம்மா..??’ என்று அவர் கேட்க, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல அவன் முகத்தை பார்த்தவாறே ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
‘நிஜமாவா யாழி ..??’ என்று அவள் நாடி பிடித்து மரகதம் தன் புறம் திருப்ப,
அவளோ தனக்குள் நிகழும் ரசாயன மாற்றங்களை உணரவும் முடியாத நிலையில் மயக்கத்தில் இருந்து விடுபட்டவள் போல அவரை விழித்து பார்த்தாள்..,
‘என் பையனை பார்த்துட்டே இருந்தா எப்படி சொல்லும்மா அதியை உனக்கு பிடிச்சிருக்கா..??’ என்று கேட்க,
மின்னல் கீற்றாக பெண்ணவள் முகம் மின்னி ஜொலிக்க சட்டென தோன்றிய வெட்கப்புன்னகை அவள் இதழ்களை நிறைக்க, வேறு எந்த சிந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் அதியின் பிம்பம் மட்டுமே நிறைந்த மனதுடன் அவரை பார்த்து லேசாக தலையசைத்து ‘பிடிச்சிருக்கு ஆன்ட்டி’ என்றாள் மென்குரலில்.
அதை கேட்ட சுந்தரம் மரகதம் தம்பதிகளின் மகிழ்வை சொல்லவும் வேண்டுமா..??
ஆனால் மகள் எதையும் யோசிக்காமல், ஆராயாமல் எடுத்ததும் சம்மதம் சொல்லி விட்டதில் மாப்பிள்ளை வீட்டாருக்கு என்ன பதில் சொல்வது.. என்று புரியாத நிலை மகேஷ்வரனுக்கு.
யாழி சம்மதிப்பாள் என்பதை எதிர்பாராத சுகமதி முகத்தில் அதிர்ச்சி.
“என்னங்க அப்போ நாம இன்னைக்கே யாழிக்கு பூ வைச்சி உறுதி பண்ணிடலாம்” என்ற மரகதம் வெளியே செல்ல,
‘சரி’ என்று தலை அசைத்த சுந்தரலிங்கம் மகேஷ்வரன் புறம் திரும்பி, “அப்புறம் என்ன மகேஷ் உன் பெண்ணுக்கும் என் பையனை பிடிச்சிடுச்சு இப்போ நாள் பார்க்கலாம் தானே இல்ல உனக்கு ஏதாவது என் பையனை பத்தி குடும்பம் பத்தி தெரியனுமா..??
‘அய்யய்யோ என்ன சார் இது..?? எனக்கு தான் அதி சாரை பத்தி நல்லாவே தெரியுமே அவரை மாதிரி பையன் மாப்பிள்ளையா கிடைக்கிறது எங்களோட அதிர்ஷ்டம்..’
‘அப்போ உங்களுக்கு சம்மதம் அப்படிதானே..?? அப்புறம் இன்னும் என்ன சார்னு சொல்லிட்டு இருக்கீங்க…?? அதின்னே சொல்லுங்க’ என்று சுந்தரலிங்கம் கூற,
“அப்படி இல்ல சார் எனக்கு அப்படியே பழகிடுச்சி அதோட அவருக்கு என் பெண்ணை பிடிச்சி இருக்கான்னு தெரியாம..??” என்றவரை இடை நிறுத்திய சுந்தரலிங்கம்,
“யாழியை யாருக்கு பிடிக்காம போகும், அதிக்கு நேத்தே போட்டோ அனுப்பிட்டேன் இன்னைக்கு அவனுக்கு டைட் ஸ்கெட்யுல்” என்று அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே அதிர்துடியனிடம் இருந்து மகேஷிற்கு அழைப்பு வந்தது.
‘சார் தான் கூப்பிடுறாங்க’ என்று கூறிவிட்டு மகேஷ்வரன் உடனே அழைப்பை ஏற்று,
‘ஹலோ சார் திருப்பதிக்கு அனுப்ப வேண்டிய லோட் நேத்து நைட்டே அனுப்பிட்டேன், ஓசூர்க்கு போக வேண்டிய ப்ளாக் எல்லாம் காலையே கிளம்பிடுச்சு அப்புறம் மொத்தம் ஒன்பது பேர் செல்போன் இல்லாம வேலை பார்க்க முடியாதுன்னு சொன்னங்க அவங்க கணக்கை கழிச்சி அனுப்பிட்டேன் அடுத்து உங்க மெயிலுக்கு..” என்று அவர் பேசிக்கொண்டே செல்ல,
“ஹலோ.. ஹலோ மிஸ்டர் மகேஷ் ரிலாக்ஸ், இப்போ நான் அதை கேட்க கால் பண்ணலை வேற முக்கியமான விஷயம் பேசணும்” என்றான் கைபேசியில் இருந்த யாழியின் புகைபடத்தை பார்த்தவாறே,
‘சொல்லுங்க சார்’ என்றார் எங்கே அவர் வேலையில் ஏதேனும் குறை கண்டு அழைத்திருக்கிறானோ என்ற சஞ்சலத்துடனே,
***********************************************
அதியோ குரலை செருமி , ‘எனக்கு சுத்தி வளைச்சு பேச வராது நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் மிஸ்டர் மகேஷ்’ என்று அவன் பீடிகையோடு ஆரம்பிக்க,
‘எனக்கு தெரியும் சார் சொல்லுங்க’
‘உங்க பெண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிஸ்டர் மகேஷ் யாழிக்கும் நான் ஓகேன்னா நெகட்ஸ் ப்ரோசீட் பண்ணலாம்’ என்றான் அப்போது தான் கைபேசியை எடுத்து தனக்கு வந்திருந்த தகவல்களை சரி பார்த்து வந்தவன் சுந்தரலிங்கம் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜையும் திறந்து பார்த்த மறுநொடியே அவருக்கு அழைத்து விட்டான்.
‘சார்..’
‘எஸ் ஐ மீன் அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் வச்சிக்கலாம்ன்னு சொன்னேன் உங்களுக்கு புரியுதா..??’
‘புரியுது சார்’
‘அப்பாவும் அம்மாவும் உங்ககிட்ட பேசுறன்னு சொன்னாங்க யாழி போட்டோ பார்த்ததும் அவங்களுக்கு கூட சொல்லாம டைரெக்ட்டா உங்களுக்கு கூப்பிட்டுட்டேன், அனேகமா இப்போ அங்க தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன் உங்களுக்கு இந்த கல்யாணம் ஓகே தானே..? என்று அவன் கேள்வியாய் நிறுத்த,
மகேஷ்வரனும் வழக்கம் போல அவன் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல், “எனக்கும் ஓகே சார்…!! நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடலாம்” என்று கூற.
“சம்பந்தி யார் அதியா லைன்ல..??” என்றார் மரகதம் காரில் இருந்து தாம்பாள தட்டோடு உள்ளே நுழைந்து கொண்டே,
“ஆமாம்மா அதி சார் தான் யாழியை பிடிச்சி இருக்குன்னு சொன்னார் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிக்க சொல்லிட்டார்”
அதை கேட்டவரின் முகத்தில் கொள்ளை மகிழ்ச்சி பின்னே நேற்றே புகைப்படம் அனுப்பிவிட்ட போதும் மகன் பிடிகொடுக்காமல் இருந்தானே..!!
மறுபுறம் இருந்த அதிர்துடியன் ஏதோ கேட்க மகேஷும் அவனிடம் ‘ஆமா சார் அம்மா தான்’ என்றார்.
“என்ன சம்பந்தி இது இன்னும் சார்ன்னு சொல்லிட்டு ஒன்னு அதின்னு சொல்லுங்க இல்ல மாப்பிள்ளைன்னு சொல்லுங்க”
“இல்லமா அப்படியே பழகிடுச்சி திடீர்ன்னு மாத்தினா அது மரியாதையா இருக்காது.., பரவால்ல” என்று அவர் கூற,
மறுபுறம் இருந்த அதிரனுக்குமே சங்கடமான நிலை தான்..!! இத்தனை வருடங்களான அழைப்பை சட்டென மாற்ற முடியாது அதையே தொடர்ந்திருந்தான்.
‘சார் யாழிகிட்ட நீங்க ஏதாவது பேசணுமா..??’
‘ஆமா நிச்சயம் அவகிட்ட பேசணும் ஆனா இப்போ இல்ல நான் நாளைக்கு நேர்ல வந்து பேசுறேன்’ என்று அவன் அழைப்பை துண்டித்து இருந்தான்.
அதிரின் சம்மதத்தை அறிந்த மரகதம் மகன் கல்யாணம் குறித்த கனவை அவர்களிடம் விவரிக்க தொடங்கி விட்டார்.
“எங்களோட புது கல்யாண மண்டபம் வேலை முடிஞ்சி நாலு மாசம் கிட்ட ஆகுது ஆனா அதுல என் பையன் கல்யாணத்தை தான் முதல்ல நடத்தனும்னு இன்னும் திறக்காம வச்சிருக்கோம் … அதுல தான் அதி யாழியோட கல்யாணம்” என்று கூற,
மகேஸ்வரன் சுகமதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.., தொடர்ந்து அவர் திருமணம் அவர்கள் செலவு நீங்க பெண்ணை கூட்டிட்டு வந்தா மட்டும் போதும் அவளுக்கு என்ன செய்ய நினைக்கிறீங்களோ அவ விருப்பப்படி செய்யலாம் எங்களோட எதிர்பார்ப்புன்னு எதுவும் இல்லை என்று பேசிவிட்டு கிளம்பி வெளியில் வர,
‘அம்மா உங்க கிட்ட பேசணும்’ என்றார் மகேஷ் சிறு தயக்கத்துடனே,
‘சொல்லுங்க சம்மந்தி’
‘அது வந்தும்மா யாழி சின்ன பொண்ணு காலேஜ் முடிஞ்சி ஒரு வருஷம் தான் ஆகுது இப்போ ஜாதகம் கொடுத்தா தான் ரெண்டு வருஷம் கழிச்சி கல்யாணம் பண்ண தோதா இருக்கும்ன்னு கொடுத்தேன் ஆனா நானே எதிர்பாராம அடுத்த நாளே அவளுக்கு அமையும்ன்னு நினைக்கலை…’ என்று அவர் பார்க்க,
‘அதுக்கென்னப்பா நேரம் கூடி வந்தா எல்லாம் தானா அமையும் நம்ம கையில் ஒன்னும் இல்லை இன்னார்க்கு இன்னார்ன்னு ஆண்டவன் போடுற முடிச்சை நாம தடுக்க முடியுமா..??’
‘அதுக்கில்லம்மா இந்த சம்பந்தத்துல எனக்கும் ரொம்ப சந்தோசம் ஆனா உங்க வீட்டுக்கு மூத்த மருமகளாக வரக்கூடிய அளவு என் பொண்ணுக்கு பொறுப்பு, நிதானம் இருக்குமான்னு தெரியலை அவ ஏதாவது தப்பு பண்ணினா நீங்க தான் கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைக்கணும் ‘ என்றார் காலையில் நடந்த கூத்தை மனைவி மூலம் அறிந்தவராக..
‘என்ன இப்படி சொல்றீங்க..??’ என்ற மரகதம்,
‘கோவில்ல பார்த்தப்பவே உங்க பெண்ணோட பொறுமை , நிதானம், பேசுற விதம், குணம் எல்லாமே பிடிச்சி போய் தான் என் மகனை கூட கேட்காம அவளை என் மருமகளா முடிவு பண்ணினவ நான்.., நீங்க கவலையே பட தேவை இல்ல என் மருமகளை நான் தங்கமா பார்த்துப்பேன்’ என்றவர்,
யாழியை நெட்டி முறித்து அவள் அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு
‘அதி போட்டோவை உனக்கு அனுப்பி இருக்கேன் பாரு யாழி முன்ன அவசரமா நான் போன் வாங்கிட்டேன் போல இப்போ பொறுமையா நிதானமா என் பையனை பாரு இதோ அவன் நம்பரும் அனுப்புறேன் வேணும்ன்னா பேசிக்கோ’ என்றிட யாழியோ முகத்தில் படர்ந்த செம்மையை அரும்பாடுபட்டு மறைத்தவாறே அவருக்கு தலை அசைத்து விடை கொடுத்தாள்.
***********************
அதியின் பெற்றோர் கிளம்பவும் தன் அறைக்கு திரும்பி அவன் போட்டோவை பார்த்தவாறு இருந்தவளுக்கு அப்போது தான் விஷ்ணு அனுப்ப சொன்னதே நினைவு வர உடனே அவசரமாக அவனுக்கு அதிர்துடியனின் புகைப்படத்தை அனுப்பினாள்,
அதே நேரம் ‘யாழிம்மா’ என்றழைத்து வந்த சுகமதி அவள் அருகே அமர்ந்தவர்,
‘உனக்கு நிஜமாவே கல்யாணத்துல சம்மதமா..??’ என்றார்.
“என்னம்மா கேள்வி இது..?? அதுதான் அவங்க கிட்டேயே ஓகே சொல்லிட்டேனே..” என்றவளின் பார்வை இப்போதும் துடியன் மீதே,
“அப்படி இல்லடா இது முதல் வரன் தான், இதுக்கே ஓகே சொல்லனும்ன்னு எந்த அவசியமும் இல்ல உன் மனசுக்கு பிடிச்சா மட்டும் சொல்லு மாப்பிள்ளையை பத்தியும் குடும்பத்தை பத்தியும் விசாரிக்கவே தேவை இல்ல உங்க அப்பாக்கு முழு திருப்தி ஆனா அவருக்காகவோ, அந்த அம்மா உனக்கு தெரிஞ்சவங்க என்ற காரணத்துக்காகவோ ஓகே சொல்லாத இது வாழ்க்கை..”
‘ம்மா என்னம்மா வேணும் உனக்கு..?? நான் உன்னை ஏதாவது கேட்டேனா..?? எதுக்கு இப்படி வந்து உட்காந்து போர் அடிக்கிற’ என்று சலித்து கொள்ள,
‘அப்படி இல்லடா நீ சின்ன பொண்ணு உனக்கு பல விஷயம் தெரியாது கல்யாணத்தையும் விளையாட்டா எடுத்துக்க கூடாதேன்னு சொல்ல வரேன், வேணும்ன்னா மாப்பிள்ளை போன் நம்பர் வாங்கி தரேன் அவர் கிட்ட பேசிட்டு கூட முடிவை சொல்லு ஒன்னும் அவசரமில்லை’ என்று மகளுக்கு புரிய வைக்க முயல,
முதலில் இங்கிருந்து தப்பிக்க தான் திருமணத்தை தேர்ந்தெடுத்தாள் யாழி ஆனால் அதிரனின் புகைப்படத்தை பார்த்ததில் இருந்து அவள் மனதில் வேறு எந்த நினைவும் இல்லையே.., நிழற்படத்தில் இருந்தவன் பெண்ணவளின் மனதில் சத்தமின்றி நுழைந்து அவளை அவன் பால் கட்டி இழுத்து தன் போக்கில் சஞ்சலம் ஏற்படுத்தி கலகம் செய்து கொண்டிருகிறான்.
மனமெங்கும் சுகவலி பரவ அதை அனுபவித்து கொண்டிருந்தவளுக்கு இடையூறாக தாய் இருக்க உடனே அவரிடம்,
‘ம்மா அதெல்லாம் ஆன்ட்டி அப்பவே எனக்கு கொடுத்துட்டாங்க தேவைன்னா பேசிப்பேன் இப்போ என்னை கொஞ்சம் ப்ரீயா விடு இப்படி பேசி ப்ளேட் போடாத’ என்று கைபேசியை பார்க்க அதிரின் முகம் அவளை வசீகரித்து மெல்ல மெல்ல வசியபடுத்தி கொண்டிருந்தது.
அதே நேரம் கல்லூரியில் வகுப்பை கட் அடித்து விட்டு வெளியில் வந்து நண்பர்களுடன் டீ குடித்து கொண்டிருந்த விஷ்ணு யாழியின் மெசேஜ் வரவும் ஆவலோடு அதை திறக்க மறுநொடியே அதிர்ச்சியில் கையில் இருந்த கண்ணாடி குவளை அவன் கை நழவி கீழே விழுந்து நொறுங்க குடித்து கொண்டிருந்த டீ புரைக்கேறி முகமெங்கும் சிதறி இருக்க புகைபடத்தை விட்டு அகல மறுத்த விஷ்ணுவின் முகமோ பேயறைந்தது போலானது.
உலகமே தட்டாமாலையாக சுழல ஸ்தம்பித்து போய் நின்றவனிடம் அசைவில்லை.
“மச்சி என்னடா ஆச்சு..?? ஏன் உன் கை இப்படி நடுங்குது..??” என்று நண்பர்கள் கேட்கவும் தான் அவன் கையில் இருந்த கைபேசி கரகாட்டமே ஆடிக்கொண்டு இருப்பதை உணர்ந்தவன் மறுகையால் அதை அழுத்தி பிடித்து காப்பாற்றி மெசேஜை அனுப்ப முயன்று தோற்று உடனே யாழிக்கு அழைத்தான்.
ஆனால் அதிரின் முகத்தை அழைப்புகள் மறைக்கவும் அவள் தொடர்ந்து தம்பியின் அழைப்பை துண்டித்து கொண்டிருந்தாள்.
அவள் எடுக்காமல் போகவும் “யாழி ஓகே சொல்லாத.., ப்ளீஸ் சொல்லாத சொல்லிடாதடி” என்று உள்ளுக்குள் கதறிக்கொண்டே ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களுக்கும் நேர்ந்து கொண்டே பதறி அடித்து கொண்டு பைக்கை எடுக்கவும் மறந்தவனாக வீட்டிற்கு ஓடி கொண்டு இருந்தான்.
error: Content is protected !!