Skip to content
Post Views: 825
அவர்கள் அடுத்ததாக தன் திருமணத்தில் தான் வந்து நிற்பார்கள் என்று நினைத்தே, ஒரு பெண்மணியைப் பார்த்து, “ஏன் ஆண்ட்டி?. அங்கிள் பிசினஸ் நஷ்டமாகி விட்டதாமே! உங்கள் நகைகளும் அதில் போய்விட்டதாமே!. நீங்களாவது படித்திருக்கலாம் ஆண்ட்டி. பாவம் நீங்களும் என்னதான் செய்வீர்கள்?” என்று அவர்கள் போலவே பேசி, அவரை கதிகலங்க வைத்தாள்.
அவள் பேச்சுக்கு பதில் கூறாமல், “நான் வருகின்றேன் சனா… எனக்கு வேறு வேலை இருகின்றது.” என்று அவள் கூப்பிட கூப்பிட கண்டுகொள்ளாமல், வராத அலைபேசியை தன் காதில் வைத்தபடி, “இதோ நான் வருகின்றேன்.” என்று பேசிக்கொண்டே சென்றார்.
அதைப் பார்த்த சனாவிற்கு தான் தன் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது தன்னைப் பேசிய மற்றொரு பெண்மணியின் முகத்தை அவள் பார்க்க, அவரோ எதுவும் பேசாமல் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்.
அதைப் பார்த்த சனாவின் முகத்தில் மென்புன்னகை. ‘இவங்கள மாதிரியான ஆட்களிடம் இப்படி தான் பேசவேண்டும் சனா. இவர்களின் பிள்ளைகளை நினைத்தால் தான் கவலையாக இருக்கின்றது.’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றாள்.
Advertisement
சரியாக அவள் தன் மகிழுந்து நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வரும் போது அங்கு வந்து சேர்ந்தான் சக்ரா.
பனை மரத்தின் பாதி உயரத்திற்கு இருந்தவன் நடந்து வருவதைப் பார்த்து, ‘மறுபடியும் வந்துவிட்டானா…’ என்று நினைத்தவளுக்கு, ஐயோ என்றானது.
அவள் அருகே வந்தவன், “உன் மகிழுந்து இங்கே இருக்கட்டும். என்னுடன் வா…” என்றபடி முன்னே சென்றான். பேச்சு என்னவோ கட்டளையாக தான் வந்தது.
Advertisement
வேறு நேரமாக இருந்திருந்தால், அவனுக்கு சூடாக பதில் அளித்து இருந்திருப்பாள். ஆனால் சாவி அவனிடம் இருப்பதால் மறுபேச்சு பேசாமல், அவளும் அவனுடன் சென்றாள்.
Advertisement
அவன் தன் மகிழுந்தில் சென்று ஏற, அவளது கால்களும் தன்னால், அவன் பக்கத்து இருக்கையில் சென்று ஏறியது.
எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தான். பொட்டல் கடந்து, புழுதி கடந்து அவனது வாகனம் சென்று கொண்டிருந்தது.
அந்த அரைமணி நேரமும் இருவரிடமும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை.
Advertisement
ஆனால் சனா தான் அவன் முகத்தைப் பார்ப்பதும், சாலையைப் பார்ப்பதுமாய் வந்தாள். ஒரு அளவுக்கு மேல் தன் பொறுமையை இழந்தவள், “இப்போது நாம் எங்கே செல்கின்றோம் சக்ரா?.” என்று கேட்க.
“சிறிது நேரம் அமைதியாக வா….” என்று கூறி அவளது வாயை அடைத்தான்.
சாவி தன் கையில் வரும் வரை அமைதியாக இருப்பது என்று முடிவெடுத்துக்கொண்டாள் பெண்.
அவனது மகிழுந்தோ, யாரும் இல்லாத சாலையில் சீறிப்பாய்ந்தது. பின் பண்ணை வீடு போல் இருந்த ஒரு வீட்டினுள் சக்ராவின் மகிழுந்து நுழைந்தது.
வீட்டை சுற்றி செண்பக மரங்கள் செழித்து வளர்ந்து வானோங்கி நின்றன. அதில் செண்பக மலர்கள் பூத்துக்குலுங்கி அந்த இடத்தையே நறுமணத்துடன் வைத்திருந்தது.
அதைப்பார்த்த சனாவின் மனதில் பரவசம் குடிகொண்டது. அவளுக்கு மிகவும் விருப்பமான மலர்கள் அவை.
அவள் முகத்தின் பொலிவை கண்டுகொண்டவனின் மனதிலும் மென்புன்னகை. நேரே உள்ளே சென்று தன் வண்டியை நிறுத்தி அதில் இருந்து இறங்கினான்.
புரியாமல் சக்ராவின் முகத்தைப் பார்த்த சனாவிடம், “நம்பி வா… உன்னை கடத்தி எல்லாம் கூட்டி வரவில்லை.” என்று சொல்லி தன் கையை நீட்டினான்.
அவன் நீட்டிய கையை தட்டிவிட்டு, தானே இறங்கி வந்தாள். உதிர்ந்த செண்பக மலர்கள் பூமியில் ஆங்காங்கே புஷ்பக் கம்பளம் விரித்தது போல் இருந்தன. அந்த மலரின் நறுமணம் நாலாபுறமும் நிறைந்து இருந்தது.
அது அனைத்தையும் ஆசையுடன் பார்த்தவள், கீழே விழுந்திருந்த செண்பக மலர்களை, தன் கைகளால் சேகரிக்க ஆரம்பித்தாள்.
அந்த இடத்தில் அவளது மனது மிகவும் புத்துணர்வாக இருந்தது.
அழகிய கூந்தல் அவள் முதுகில் புரள, கண்கள் மின்ன, நாசியோ செண்பக மலரை முகர, அவள் அங்கிட்டும் இங்கிட்டும் செல்லும் போதும் அவள் அணிந்திருந்த ஜல் ஜல் சதங்கைகள் சிணுங்க, ரவி வர்மாவின் ஓவியம் ஒன்று உயிர்பெற்று வந்தது போல் ஆடவனின் கண்களுக்கு தெரிந்தது.
இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள், அவள் இடையில், சேலை மறைக்காத பகுதியில் வந்து நின்றது.
பளீரென்று தெரிந்த இடையில் சொக்கிப்போனவன், பெண்ணவளின் குரலில் தான் சுயத்திற்கு திரும்பினான்.
“சக்ரா… சக்ரா….”
“ஆ…. என்ன சனா….” என்று அவன் வார்த்தைகள் தந்தியடிக்க.
“இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. அதுவும் எனக்கு மிகவும் பிடித்த செண்பகப்பூ என் மனதை கவர்ந்துவிட்டது. இப்போது தான் முதன்முதலாக இவ்வளவு மலர்களை ஒரே இடத்தில் நான் பார்க்கின்றேன்.” என்று ஒரு செண்பகப்பூவை முகர்ந்தபடியே சில்லாகித்தாள்.
அவளுடைய அழகு முகத்தில் இருந்த மீனைப்போன்ற கருவிழியோ, அந்த செண்பக மலரை மொய்க்கும் அழகிய கருவண்டுகளை ஒத்திருந்தன.
அந்த அழகை ரசித்தவன், “உனக்கு பிடிக்கும் என்று தான் இந்த இடத்தை வாங்கினேன்.” என்ற வார்த்தைகள் தன்னைப்போல அவன் வாயில் இருந்து வந்தன.
“நீ என்ன ஜீனியா?. நான் மனதில் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றுகின்றாய்?.” என்று புன்னகையுடன் கேட்டாள்.
இருவருமே தங்களை மறந்து தான் பேசிக் கொண்டு இருந்தனர். அந்த இடத்தில் இருந்த பசுமையும், இயற்கையும் அவர்கள் மனதை குளுமை அடைய செய்திருந்தன.
“ஜீனியா அது யாரு?.” என்று புரியாமல் முழித்தான்.
“அது தான் அலாவுதீன் படத்தில் வருமே….” என்று நக்கல் தொணிக்கும் குரலில் கூற.
“ஓ… அந்த பூதமா?.” என்று கேட்டு சிரிக்க.
முகமலர்ச்சியுடன், “ஆம். அந்த ஜீனி நாம் கேட்டதை எல்லாம் நிறைவேற்றும்.” என்றாள்.
“அந்த பூதம் கேட்டால் தானே தரும். ஆனால், நான் உன் கணவன் என்பதனால், நீ கேட்காமலையே நிறைவேற்றுகின்றேன். நான் அந்த பூதத்தை விட சிறந்தவன் தான்…” என்று மார்பின் குறுக்கே கையைக்கட்டிக் கொண்டபடி மொழிந்தான்.
அவன் வாயில் இருந்து உதித்த கணவன் என்ற சொல், அவளின் முகத்தை இறுக வைத்தது.
அதுவரை அவளிடம் இருந்த அந்த குளுமை சென்று, “ஆனால் ஜீனி பூதம், தன்னை காதலிக்க சொல்லி யாரையும் துன்புறுத்தாது சக்ரா…” என சூடாக வந்தன அவள் பதில்கள்.
பெருமூச்சு ஒன்றை விட்டவன், “நான் உன்னிடம் சில விஷயங்களைப் பற்றி பேசவே உன்னை இங்கு அழைத்து வந்தேன். உள்ளே செல்லலாம்.” என்று அவனும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
அவளும் தனது தோள்களை குலுக்கிவிட்டு, அவனை பின் தொடர ஆரம்பித்தாள்.
அந்த வீடு அப்படி ஒன்றும் பிரம்மாண்டமாய் இல்லை. ஆனால் அதன் அழகு பார்ப்பவரை பிரம்மிக்க வைத்தது.
ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து வடிவமைத்து இருந்தான் சக்ரா. இரண்டே இரண்டு படுக்கையறை கொண்ட அந்த வீட்டில், பூஜை அறையின் வாயிலில் மரத்தால் ஆன யாழி இரண்டு கம்பீரமாக காட்சியளித்தது.
வரவேற்பு அறையிலும் தேக்கால் செதுக்கப்பட்ட அலங்கார பொம்மைகள், சனாவின் மனதை கவர்ந்தன.
ஆனால் அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சோபாவில் வந்து அமர்ந்தாள்.
“இந்த வீட்டை நான் தான் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன். உனக்கு பிடித்திருக்கின்றதா சனா…” சக்ராவும் சோபாவில் சென்று அமர்ந்தவாறு கேட்டான்.
“இதை கேட்கத்தான் அழைத்து வந்தாய் என்றால், நான் இப்போதே இங்கிருந்து செல்கின்றேன்…” என்றாள் கண்களில் கோபத்தைக் காட்டி.
“ஹேய் கூல்…. நான் நேற்று நடந்த விபத்தைப் பற்றி பேசவே உன்னை அழைத்தேன்.” என்றதும், சனாவின் முகத்தில் ஆழ்ந்த சிந்தனை.
“உன் மனதில் யாரையேனும் சந்தேகம் கொள்கின்றாயா சனா…” என்று அவன் கேட்டதும், அவள் பார்வை அவன் மீது நக்கலாக பதிந்தது.
அதைப் புரிந்தவன் போல, “மறுபடியும் என்னை பார்க்காதே!. உன்னை காப்பாற்றியது நான் தான்.” என்றான் கடுமையாக.
“ஆம். நான் இல்லை என்று கூறவில்லையே! என்னை காப்பாற்றியது நீ தான். அதனால் இது உன் நாடகமாக இருக்கலாம்.” என்று அவள் கூறி முடிக்கவில்லை, இருக்கையில் இருந்து விருட்டென்று கோபத்துடன் எழுந்தவன், “அப்படி நாடகம் ஆட வேண்டும் என்று எனக்கு அவசியம் இல்லை.” என்று கோபமாக மொழிந்தான்,
பின், அமர்ந்து இருந்தவளின் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், வஜுராயுதத்தை ஒத்த தன் இன்னொரு கையால் பெண்ணவளின் வெற்று இடையைப்பற்றி, அவளின் இதழில் வன்மையாக தன் இதழைப்பதித்தான்.
சில கணங்கள் நடந்த அவனின் தாக்குதல், ஒருவழியாக முடிவுக்கு வர, அவளை விட்டு விலகியவன், “அது போல் கேவலமாக நாடகமாடி தான், உன் அன்பை பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.” என்று சொல்லிக் கொண்டே, தன் கீழ் இதழை தன் கட்டை விரலால், அவளைப் பார்த்துக் கொண்டே, ரசனையுடன் துடைத்தான்.
அவன் இதழ் தாக்குதலில் இருந்து வெளிவர பெண்ணவளுக்கு சிறிது நேரம் தென்பட்டது போல, நார்த்போல் பனிப்புயலில் மாட்டிக்கொண்ட சாகச வீரனைப் போல் உறைந்து போய் நின்றாள்.
**************************************************
தன் அண்ணன் சொன்ன வேலைகளை எல்லாம் முடித்தவன், தன் மகிழுந்தில் ஏறி, தன் நிறுவனம் இருக்கும் இடத்திற்கு தானே வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான் சிவா.
அவனுள் பல யோசனைகள் வளம் வந்தபடி இருந்தன. ‘சொத்து கைவிட்டுப்போகக்கூடாது என்ற நினைப்பில் உமா அத்தை தான் சனாவை கொலை செய்ய ஆள் அனுப்பி இருப்பாரா!.’ என்று யோசித்தவன், பின் அவனே, “ச்சே….. ச்சே…. அப்படி எல்லாம் இருக்காது…. உப்பை அள்ளி குழம்பில் கோட்டுவது, நகையை எடுத்து ஒழித்து வைத்துவிட்டு, பொய் பழி போடுவது…. என்று சீரியல் வில்லி போல் மட்டும் தான் யோசிப்பார்.’ என்று அந்த நினைப்பை கைவிட்டான்.
கதை எழுதுவதனால், தான் பார்க்கும் ஒவ்வொரு மனிதர்களின் உணர்வுகளையும் கூர்மையாக ஆராய்ந்துவைத்திருந்தான் சிவா.
அவன் ஒரு டிராபிக் சிக்னலில் நிற்கும் போது, தன் எதிர் திசையில் செல்லும் லாரியைப் பார்த்து அதிர்ந்தான்.
வாகன நெரிசல் காரணமாக மெதுவாக சென்ற அந்த லாரி, சிவாவின் கண்களுக்கு நன்றாகவே புலப்பட்டது. அவன் கண்கள் கீழ் இறங்கி, வண்டியின் நம்பர் ப்ளேட்டைப் பார்க்க, அதில் நம்பர் இல்லாமல் மொட்டையாய் இருந்தது.
வேகமாக தன் அலைபேசியை எடுத்து, அதில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, அது அதே வண்டி தானா என்பதை உறுதி செய்வதற்குள் அந்த லாரி அங்கிருந்து சென்றிருந்தது.
உடனே போலீசாருக்கு அழைத்தவன், “தாம்பரம் சிக்னலில் இப்போது தான் அந்த லாரி சென்றது. அந்தப்பக்கம் இருந்து வந்தால் அதை பிடித்து விடலாம்.” என்றவன், பச்சை விளக்கு வரும் வரை பல்லைக்கடித்துக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தான்.
error: Content is protected !!