Skip to content
Post Views: 9,499
அன்பில் இணைந்த இதயங்கள்….25(Final 2)
புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவமனையில் இருந்தனர் சத்யாவும்,கயலும்.கயலிற்கு பதட்டமாக இருந்தது நேற்றில் இருந்தே அவளுக்கு தலைசுற்றலும் வாந்தியும் அதிகமாகவே இருந்தது.அதனால் காலை எழுந்தவுடன் சத்யா வீட்டில் உள்ளவர்களிடம் கயலிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அழைத்து வந்திருந்தான்.
“ப்ச்….ஓய் கயலு….இப்ப எதுக்கு இப்படி நடுங்குகிட்டு இருக்க…”என்று அவளின் நடுங்கும் கைகளை தனது கைகளுக்குள் வைத்து இறுக்கி கொள்ள,அவனின் தோள்களில் சாய்ந்த கயல்,
“பயமா இருக்கு சத்யா….நேத்து நைட்லேந்து என்னவோ பண்ணுது….ரொம்ப சோர்வா இருக்கு….இத்தனை நாளா இப்படி எல்லாம் இல்லை அதான்…”என்று படபடவென அவள் பேச,சத்யாவிற்கும் உள்ளுக்குள் பயம் தான் இருந்தும்,
Advertisement
“ஒண்ணுமில்லடீ…நீ பயப்படாத….நான் இருக்கேன்ல…”என்று அவளை தேற்றிக் கொண்டிருந்த சமயம் அவர்களை மருத்துவர் அழைப்பதாக நர்ஸ் கூற இருவரும் உள்ளே சென்றனர்.மருத்துவரிடம் கயல்விழி அனைத்து விபரங்களையும் கூற,அவர் அவளை பரிசோதனை செய்துவிட்டு கயல்விழியை ஸ்கேன் எடுக்கும்படி கூற,
“டாக்டர் எந்த பிரச்சனையும் இல்லல…”என்று கயல் பரிதவிப்பாக கேட்க,
“ம்ம்…இந்த ஸ்கேன் பார்த்துட்டு சொல்லுறேன்மா….நீ டென்ஷன் இல்லாம இரு….”என்றுவிட்டு செல்ல,
Advertisement
“என்ன சத்யா இப்படி சொல்லுறாங்க…”என்று மேலும் நடுங்க,
Advertisement
“அடியே நீ பயந்து என்னையும் பயமுறுத்தாத….எதுவும் இருக்காது…எனக்கு நம்பிக்கை இருக்கு…நீ பயப்படாம வா…”என்று அவளை ஸ்கேன் ரூமில் படுக்க வைத்துவிட்டு இவன் வெளியில் நின்று கொண்டான்.சற்று நேரத்திற்கு பின் கயல் ஸ்கேன் செய்துவிட்டு வர,அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் மருத்துவர் இருந்த அறைக்குள் இருவரும் நுழைய,
“வாங்க சத்யா…வாமா கயல்…”என்றவர் அவளின் ரிப்போட்டை பார்த்துவிட்டு,
“வாழ்த்துக்கள்….உங்களுக்கு இரட்டை குழந்தை உருவாகியிருக்கு…”என்று கூற அதுவரை பயந்து கொண்டிருந்தவர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி,
Advertisement
“டாக்டர் இப்ப கயல்,குழந்தை எல்லாம் எப்படி இருக்காங்க…”என்று சத்யா கேட்க,
“எல்லாரும் நலம்….இனி தான் நீங்க ரொம்ப கவனமா இருக்கனும் கயல் சாப்பாட்டு விஷயத்துல கவனமா இருக்கனும்….”என்றவர் அவர்களுக்கு சில அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தார்.வீடு வரும் வரை இருவருமே ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.நேராக தங்களின் வீட்டிற்குள் வர,இவர்களுக்காகவே காத்திருந்ததை போல அமிர்தா ஓடி வந்தார்.ஓடி வந்தவரை தூக்கி சுத்திய சத்யா,
“அம்மூ மீ….நீ பாட்டி ஆகிட்ட…..அதுவும் ஒரு குட்டீஸ்க்கு இல்ல இரண்டு குட்டீஸ்க்கு….”என்று சுத்தியபடி கத்த,
“அடேய் விடுடா…விடுடா…தலைசுத்துது….”என்று அவர் சத்தமிடவும் தான் அவரை இறக்கிவிட்டான்.
“என்ன என்னடா சொன்ன…பாட்டியா….”என்றவர்,
“என்ன கயலம்மா…நிஜமா….”என்று கயலிடம் கேட்க அவளோ ஆம் என்று தலையாட்டிவிட்டு தலைகுனிந்து கொள்ள,
“ஒரு குட்டீஸ் இல்ல…இரண்டுமா….ட்வின்ஸ்னு டாக்டர் சொன்னாங்க….”என்று சத்யா கூற அவனின் மலர்ந்த முகத்தை கண்ணீர் மல்க பார்த்தவர்,
“இருடா…இப்படியே இரு….”என்றுவிட்டு வேகமாக சமையல் அறைக்கு சென்று உப்பு மிளகா எடுத்து வந்து,
“நீயும் வாடா கயல்….”என்று அவளையும் மகனுடன் இணைத்து சுற்றிபோட்டார்.
“அம்மூ மீ…இப்ப எதுக்கு கலங்கிட்டு இருக்க….ஆமா அப்பா எங்க….எப்போதும் உன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பாரு…”
“படவா…அவரு மாமாவை அழைக்க போயிருக்காரு….”
“ஓ….மாம்ஸ் இன்னைக்கு வராரா…வரட்டும் வரட்டும்….”என்றவன் பக்கத்தில் நின்றிருந்த கயலை அலேக்காக தூக்க,அதில் பதறியவள்,
“சத்யா விடுங்க…”என்று அவள் கத்த,அவனோ அதெல்லாம் காதில் வாங்கவில்லை,
“மீ…நான் என் பொண்டாட்டியை தூங்க வச்சிட்டு வரேன்….நீ மதிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணு…”என்றுவிட்டு அவர்களின் அறைக்குள் நுழைந்து அவளை படுக்கையில் அலுங்காமல் படுக்க வைத்தவன்,
“ஒழுங்கா தூங்கு….நேத்து நைட்லேந்து நீ சரியாவே தூங்கலை….”என்றுவிட்டு அவளின் தலையை மெல்ல வருடிவிட,அவனையும் இழுத்து தன் பக்கத்தில் படுக்க வைத்தவள் அவனின் மார்பில் தலை வைத்து படுத்து கண்மூடினாள்.இருவருமே தங்கள் மனதில் இருந்த சுமைகள் இறங்கி நல்ல உறக்கத்திற்கு சென்றனர்.
“சத்யா….சத்யா….”என்று யாரோ அழைக்கும் சத்தம் வெகு தொலைவில் கேட்டது போல் இருந்தது சத்யாவிற்கு,ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் மெல்ல விழிக்க,
“சத்யா…கயல்….”என்று அமிர்தாவின் குரல் கேட்க,
“ம்ம்….மீ….வரேன்….”என்று குரல் கொடுத்தவன்,தன் நெஞ்சின் மீது துயிலும் அழகியை பார்த்தான்,கயலோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.நேற்றைய இரவு முழுவதும் அவள் உறங்கவேயில்லை மனதில் சஞ்சலத்துடன் இருந்தாள் இன்று அவளின் மன சஞ்சலங்கள் அனைத்தும் நீங்கியிருக்க மனதும்,உடலும் ஓய்வெடுத்து கொண்டிருந்தது.அவளின் கலைந்த முடியை ஒதுக்கி விட்டவன்,
“ரொம்ப அழுதுட்ட….இனி உனக்கு எல்லாம் நல்லது மட்டும் தான் நடக்கும்….என்ன வந்தாலும் நான் உன் கூடவே இருப்பேன்…”என்றவன் அவளின் நெற்றியில் அதரத்தை பதித்துவிட்டு எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வர,கலைவாணனும்,லிங்காவும் சாப்பிட அமர்ந்திருந்தனர்.
“மாம்ஸ்….எப்ப வந்த….”என்று கேட்டபடி அவரின் அருகே அமர,
“சத்யா கயல் எங்க…”என்று அமிர்தா கேட்க,
“அவ தூங்குறாமா…டிஸ்டரப் பண்ணவேண்டாம்…அவளா எழுந்துகட்டும்….நேத்து நைட்டும் சரியா தூங்கலை….”என்று கூற அமிர்தாவும் சரி என்று விட்டுவிட்டார்.
சத்யாவின் தோள்களில் கை போட்டுக் கொண்ட கலைவாணன்.
“டேய் மகனே நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா…..நம்ம வீட்டுக்கு புது வரவு வரப்போகுது அதுவும் இரண்டு….”என்று அவர் சிறுபிள்ளை போல குதுகலிக்க,
“ம்ம்….நீ தான் டெல்லி போயிடுவியே….அப்புறம் எதுக்கு பேசிக்கிட்டு இருக்க…”என்று சத்யா முகத்தை தூக்கினான்.அவனும் பலமுறை கூறிவிட்டான் கலையை தங்களுடன் தங்கும் படி ஆனால் அவர் கேட்டபாடில்லை.
“அப்படி சொல்லுடா….எப்ப பாரு வந்துட்டு உடனே ஓடிட வேண்டியது…”என்று லிங்கா கூற,
“சரிடா…இனி போகலை…இங்கேயே இருக்கேன் போதுமா….”என்று கலை கூற,
“செல்லாது செல்லாது….நீ நாளைக்கே டெல்லி கிளம்பு…அப்பு உன் மச்சானை கிளம்ப சொல்லு…இந்த வீட்டுல இடமில்ல….”என்று அவன் விடாமல் வம்பு வளர்க்க வெகு நாட்களுக்கு பிறகு வீட்டில் செல்ல சண்டையும் சிரிப்புமாக வீடு நிறைந்திருந்தது.கயலின் வீட்டிற்கு சத்யா கயல் கருத்தரித்த விஷயத்தை கூறியிருக்க அவர்களும் மாலை வந்துவிட்டனர்.
குருவிற்கு சந்தோஷம் தாளவில்லை தன் செல்ல பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் என்று சத்யா கூறியவுடன் உடனே மாலை வருவதாக கூறிவிட்டார்.கயல்விழி அப்போது தான் எழுந்திருந்தாள்.அறையின் வெளியில் பல குரல்கள் கேட்க,
“அச்சோ ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல….”என்று தன்னை கடிந்து கொண்டு அவள் குளியல் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வெளியில் வர,சத்யா அவளுக்காக கையில் எதையோ ஆவி பரக்க ஆத்திக் கொண்டிருந்தான்.அவனை பின்னிருந்து கட்டிக் கொண்டவள்,
“சத்து மாத்திரை….என்ன பண்ணுற…”என்று கேட்க,
“ம்ம்….உனக்கு தான் கஞ்சி ஆத்திக் கிட்டு இருக்கேன்…வா சாப்பிடு…மதியமும் சாப்பிடல….”என்று அவளை இழுத்து முன்னே விட்டு அவள் கையில் டம்பளரை திணிக்க,அவளோ டம்பளரையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஓய்…என்னடீ…திருதிருனு முழிக்கிற…குடி…”என்று கூற,
“ம்ம்…நீ போ நான் குடிச்சிட்டு எடுத்துட்டு வரேன்….”என்று கூற,
“பாதி குடிச்சிட்டு பாதியை ஊத்திட்டு வரவா…”என்று கேட்க,
“இவனுக்கு எப்படி இது தெரிஞ்சிது…”என்று அவள் முழித்து கொண்டிருக்க,
“ம்ம்…எல்லாம் என் மாமியார் உபயம்…”என்றவன்,அவளின் பக்கத்தில் சட்டமாக உட்கார்ந்து கொண்டு,
“ம்ம்…குடி…”என்று கூற,
“இந்த பாரூ இருக்கே…”என்று தன் தாயை கடிந்தவள் கஞ்சியை குடித்து அவனிடம் டம்பளரை நீட்ட,
“ம்ம் குட்….இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு….இன்னொரு டம்பளர் குடிக்கனும்…இப்பவா அத்தை,மாமா வந்திருகாங்க…”என்று கூறி எழ,
“என்னது….இன்னொரு டம்ளரா…”என்று அவள் வாய்பிளக்க,
“ரொம்ப பிளக்காதடீ…இரண்டு குட்டீஸ்க்கு இரண்டு டம்பளர்….வா…”என்று அவளின் கைபிடித்து அழைத்து செல்ல வரவேற்பறையில் குரு,லிங்கத்துடனும்,கலைவாணனுடனும் பேசிக் கொண்டிருந்தார்.மகளை கண்டவுடன் வேகமாக அவளின் அருகே வந்து,
“என்னடா கயல் எப்படி இருக்க…உடம்புக்கு இப்ப பராவாயில்லையா….”என்று அவளின் தலை வருடி கேட்க,
“ம்ம்…பரவாயில்லைப்பா…ம்மா எங்க…”என்று கேட்க,
“உள்ள தான் இருக்கா போமா…”என்று மகளை அனுப்பி வைத்தார்.
சமையல் அறையில் அமிர்தாவிடம் பார்வதி,
“எனக்கு சந்தேகம் தான் மதனி எத்தனை தடவை கேட்டேன்….இவ சொல்லவே இல்லை…”என்று கூறிக் கொண்டிருக்க,
“ம்ம்மா….என்ன என் மாமியார் கிட்ட புகார் சொல்லிக்கிட்டு இருக்க…”என்றபடி வந்தாள் கயல்,
“வாடி….இப்ப உடம்பு எப்படி இருக்கு….”என்று கேட்க,
“நல்லாயிருக்குமா…”என்றுவிட்டு அவர்களுடன் அரட்டை அடிக்க தொடங்கினாள்.
நாட்கள் அதன் போக்கில் வேகமாக நகர்ந்து இதோ கயலிற்கு ஏழாம் மாதம் வளைகாப்பு முடிந்திருந்தது.அவள் தனது பெரிய வயிற்றை பிடித்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தாள்.பார்வதி கைகளை பிசைந்தபடி நிற்க அவளின் அருகே வர,
“என்னம்மா…ஏன் ஒருமாதிரி இருக்க…”
“உங்க அப்பா இருக்காரே…அவரை வச்சிக்கிட்டு….எனக்கு….”என்று தலையில் அடித்து கொள்ள,கயலிற்கு ஒன்றும் புரியவில்லை அப்போது அவளிடம் வந்த வேகமாக வந்த குரு,
“கயலம்மா….இப்ப மாப்பிள்ளை வந்து உன்கிட்ட ஏதாவது கேட்டா அப்பா சொன்னது தான் சரினு நீ சொல்லு புரியுதா….”என்று கூற,
“உங்களுக்கு கொஞ்சமாச்சு அறிவு இருக்கா……விவஸ்தை கேட்ட மனுஷன்….மாப்பிள்ளைகிட்ட எதுக்கு சண்டை போடுறீங்க….”என்று பார்வதி கணவனிடம் பாய,
“நான் என்னடீ பண்ணேன்…நான் என் பொண்ணை பார்த்துக்க மாட்டேனா…..”என்று அவரும் பதிலுக்கு கத்த கயலோ,
“நீங்க இரண்டு பேரும் எதுக்கு இப்படி சண்டை போடுறீங்க…”என்று கேட்க,
“அதை நான் சொல்லுறேன் கயலம்மா….”என்றபடி வந்தான் சத்யா.
“உட்காரு…..பதட்டப்படக்கூடாதுனு டாக்டர் சொல்லியிருக்காங்கல்்ல….”
“நான் எங்க பதட்டப்பட்டேன்….நான் நல்லா தான் இருக்கேன்….சத்யா….”
“ம்மா என்ன பிரச்சனை….”என்று தாயிடம் கேட்க,
“உன்னை உங்க அப்பா கூட்டிக்கிட்டு போறாராம்…..நான் என் பொண்டாட்டியை அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டேன்….”என்று மாமனாரை முறைக்க அவரும் இவனை சளைக்காமல் முறைத்துக் கொண்டு,
“கயலு….நீ வாமா….முதல் குழந்தைக்கு நாங்க தான் மாப்பிள்ளை பார்க்கனும்…..”என்று கூற,
“அதான் மாமா நானும் சொல்லுறேன்…என் பொண்டாட்டியை நான் தான் பார்த்துப்பேன்.,….”என்று கூற,கயலும் இருவரிடமும் பேசி பார்க்க அவர்களோ தங்களின் முடிவில் மாறாமல் இருக்க கயல் அமைதியாகிவிட்டாள்.ஒருகட்டத்தில் சத்யா தன் பிடியில் தீவிரமாக நிற்பதைக் கண்டு குரு தான் விட்டுக் கொடுக்க வேண்டியதாகிற்று.இருந்தாலும் தன் செல்ல மகளை பக்கத்தில் வைத்து பார்க்க முடியவில்லையே என்ற மனசுணக்கம் இருந்தது.
“எப்படியா இருந்தாலும் இன்னைக்கு இங்க தங்க கூடாது…அதனால் கயல் அவங்க அம்மா வீட்டுல இருக்கட்டும்….இரண்டு நாள் கழிச்சி நாம கூப்பிட்டுக்கலாம்….”என்று அமிர்தா கூற,
“அம்மு மீ…..நீ ஏன் இப்படி புது விதிமுறையெல்லாம் சொல்லுற….அதான் மாமா ஓகே சொல்லிட்டாங்கள்ல….”என்று சத்யா முகத்தை தூக்க,
“இல்லை சத்யா அது முறை கிடையாது….உனக்கு இதெல்லாம் புரியாது….நீ சும்மா இரு….”என்று அமிர்தா அவனை அடக்கிவிட்டார்.கயல் அவளின் அம்மா வீட்டிற்குள் நுழைந்த அடுத்த அரைமணி நேரத்திற்கு எல்லாம் சத்யாவும் வந்திருந்தான்.
“நீ தான அங்க தங்க கூடாது….நான் இங்க தங்கலாம் தானே….”என்று கேட்க,பார்வதிக்கும்,குருவிற்கும் மனம் நெகிழ்ந்துவிட்டது மகளை தாங்கும் மருமகனை யாருக்கு தான் பிடிக்காது.
error: Content is protected !!