Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராகம் – 14.1

அதி அவளை அறையில் விடவும் ஓடி வந்து மகளை கட்டிக்கொண்ட சுகமதியின் கண்களில் கண்ணீர் பெருக்கு. கணவர் மூலமாக மகள் செத்து பிழைத்திருப்பதை அறிந்தவருக்கு அவள் வீடு வந்து சேரும் வரை நிலை கொள்ளவில்லை. மகேஷ் யாழி தலையை வருடியவாறு மெளனமாக அமர்ந்திருந்தார் ஆனால் தாய் மனம் அத்தனை எளிதில் சமாதானமாகாமல் மகளிடம் மேலும் மேலும் கேள்வி கேட்டு தெளிவுபடுத்தி கொண்டிருந்தது.

‘போதும் மதி இன்னும் எவ்ளோ கேள்வி கேட்ப  நீ போய் சூடா பால் எடுத்துட்டு வா என்று மனைவியை அனுப்பியவர் பின் மகளை பால் குடிக்க செய்து மாத்திரைகளையும் விழுங்க செய்தவர் அவளை உறங்க வைத்த  பின் வெளியில் வந்தார்.

சுகமதி அதிர்துடியனை வரவேற்று அவனுக்கு காபி கொடுத்தவர் ‘என்ன பேசுவது’ என்று புரியாமல் நின்றிருக்க அவனோ எந்த தயக்கமும் இன்றி அவர் உடல் நலன் குறித்து விசாரித்தவன் பின் திருமணம் தொடர்பாக அவரிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தான். 



Advertisement

அதிக்கு உணவு தயாரிக்க வேண்டி சுகமதி சமையலறைக்கு செல்ல மகேஷும் உடன் சென்றார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் ப்ரித்வியுடன் வீட்டினுள் நுழைந்த விஷ்ணுவை ‘ராஸ்கல்’ என்று கோபத்தோடு நெருங்கிய அதி அடித்த அடியில் சுழன்று சுவரில் மோதி தடுமாறி கீழே விழுந்திருந்தான்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த சுகமதி அதை கண்டு அதிர்ந்து, ‘என்னங்க என்ன இது..??’ என்று கணவரை பார்க்க அவரோ மனைவியை தன் கை வளைவில் நிறுத்தி,

Advertisement

‘எப்பவும் சொல்லுவாங்களே வீட்டுல அடங்காத பிள்ளையை  ஊருல அடக்குவாங்கன்னு இப்போ உன் மகனுக்கு இந்த அடி  தேவை’ என்றார்.

Advertisement

ஆனால் சுகமதியோ ‘என்ன பேசுறீங்க..?? அவன் நம்ம பிள்ளை’ என்றவாறு அதியை நெருங்கி,

“அவன் என்ன தப்பு பண்ணான் எதுக்கு அடிக்கிறீங்க..?? ப்ளீஸ் அடிக்காதீங்க தம்பி” என்ற மனைவியை அழைத்து தனியே வந்த மகேஷ் விஷ்ணுவின் அஜாக்கிரதையே யாழியை ஆபத்தில் தள்ளியது என்று நடந்ததை விளக்கமாக எடுத்து கூறி அவனும் எத்தகைய ஆபத்தில் சிக்கி மீண்டிருக்கிறான் என்று கூற கண்களில் வழிந்த கண்ணீருடன் மகனை பார்த்திருந்தார்.

அங்கு அதிர்துடியனோ கீழே  விழுந்தவன் எழுந்து நிற்கும் முன்  அவனை விடாமல் சட்டையை பிடித்து இழுத்து தன் முன் நிறுத்தி மேலும் இரண்டு அறை வைக்க மகன் வாயில் இருந்து வழிந்த ரத்தத்தை பார்த்த சுகமதியோ பதறிபோனார்.

Advertisement

‘சொல்லுடா யாழியை தனியா விட்டு எங்க போயிருந்த..??’ 

‘அதை கேட்க நீங்க யார்..?? கை இருந்..தா நீட்டிடுவீங்..களா..?? ‘ என்று திக்கி திணறியவன் வரும் வழி முழுக்க யாழியை பற்றி கேட்டதற்கு ப்ரித்வி எந்த பதிலும் சொல்லாததாலும்  ஹாலிலும் அவள் இல்லாததில்  ‘யாழி, யாழி’ என்று சத்தமாக அழைத்தான்.

உறங்கி கொண்டிருந்தவள் விஷ்ணுவின் இரண்டாம் அழைப்பில் உடனே வெளியில் ஓடி வந்தாள். 

அவன் தலையில் இருந்த கட்டை பார்த்து பதறிக்கொண்டு, ‘என்னடா ஆச்சு உனக்கு..?? எங்க விழுந்த..?’ என்று அவன் உதட்டில் வழிந்த குருதியை துடைக்க,

அவரோ ‘விடு யாழி அவனுக்கு இது தேவை தான்’ என்று மகனை உயிர்பற்ற விழிகளுடன் பார்த்தார்.,

‘என்னப்பா பேசுறீங்க..??’ 

‘நீ நகரு யாழி ‘ என்றான் அதி கட்டளையாக,

“என்னது..?? என்ன பேசுகிறான் இவன்..??” என்று புரியாமல் பார்க்க அதியோ விஷ்ணுவிடம்,

‘கோவில்ல இவளை தனியா விட்டுட்டு எங்க போன..??’ என்று  குறையாத ஆவேசத்துடன் கேட்க அவன் குரலில்  யாழிக்கு அன்னிச்சையாக உடல் நடுங்கியது.

ப்ரித்வியோ, ‘அண்ணா கொஞ்சம் பொறுமையா பேசுங்க’ என்று அதியை  தடுக்க முயல  அவனை  தீப்பார்வை பார்த்தவன் விஷ்ணுவிடம் ‘கேள்விக்கு பதில்’ என்றான் இளக்கமற்ற குரலில்.

விஷ்ணுவோ  ‘நான் எங்க போனா இவருக்கு என்ன…??  என்னை அடிக்க இவருக்கு என்ன உரிமை இருக்கு..??’ என்று யாழியிடம் கேட்க அவளோ என்ன பதிலளிப்பது என்று புரியாமல் நின்றாள்.

‘ஏன்டி இவரை தான் நீ வே..’ என்று தொடங்கும் போதே, 

‘வாயை மூடுடா’ என்ற கர்ஜனையுடன் அவனிடம் வந்த மகேஷ்.., 

‘அவர் இல்லைன்னா நீயும் இல்ல உன் அக்கா இல்லை, அதுவும் என் பெண்ணை..,’ என்றவர் குறையாத வலியோடு இருவருக்கும் நடந்ததை கூறி முடிக்க விஷ்ணுவின் முகம் உச்சபட்ச திகைப்பில் அமிழ்ந்து  போனது.

அதை ஆமோதிப்பது போல யாழியும் அவனை பார்க்க அசைவற்று நின்றவனின் கண்களில் இருந்து அவனையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்க ‘யாழி’ என்று நடுங்கும் கரங்களால் அவள் கையை பிடித்தவனுக்கு தொண்டை குழி அடைத்து கொள்ள வார்த்தை வரவில்லை.

எத்தனை பெரிய ஆபத்தில் அவளை சிக்க வைத்திருக்கிறான் அதி இல்லையெனில் நீச்சல் தெரியாதவள் என்னவாகி இருப்பாள் என்று  அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 

‘இப்போ சொல்றியா அவளை விட்டுட்டு எங்க போன..??’ என்று அதி,

‘அத… த்.. அது வந்து சார்.. ‘ என்று அவனை பார்த்தவனுக்கு கொண்டிருந்த வலியை மீறிய அச்சத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள வார்த்தைகள் உடைய தொடங்கியது.

‘நா… வி.. வீ … வீடி ..’ என்றவனுக்கு குற்ற உணர்ச்சி அதிகரித்து வார்த்தைகளை தடை செய்திருந்தது.

அதி கோபத்தோடு விஷ்ணுவை நெருங்குவதை  கண்ட யாழி சட்டென அவனை மறைத்தவாறு  நின்றுகொண்டு ‘அவ… அவனை அடிக்காதீங்க அவன் மேல எந்த தப்பும் இல்ல ந.. நான் தான் அவன் பிரெண்ட் கிட்ட பேச அனுப்பி வச்சேன்’ என்று சமாளிக்க பார்க்க,

அதியின் பார்வை இப்போது கூர்மையாக அவள் மீது படிய அவன் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் ஒரு நொடி தடுமாற்றம் பெண்ணவளிடம், 

அதே நேரம் ‘நான் சொல்..றேன் சார்..’ என்ற தம்பி பேசும் முன்னமே இடைபுகுந்தவள்,

“அவன் பிரென்ட் வி.. விவேக் வந்திருந்தான் அவன் கூட பேசிட்டு வர சொல்லி நான் தான் அனுப்பினேன்” என்று தம்பிக்கு அமைதியாக இருக்குமாறு கண் ஜாடை காண்பிக்க, நொடி நேரத்தில் இருவருக்கும் இடையிலான பார்வை பரிமாற்றத்தை கண்டு கொண்டிருந்தான் அதிர்துடியன்.

“அவனுக்கு எதுவும் தெரியாது, நான் சொல்லி தான் அவன் போனான்” என்று மீண்டும் கூற இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டான்.

*************************************************************

நெஞ்சம் வெதும்ப நிலை குத்திய விழிகளுடன் உதட்டை அழுந்த கடித்து யாழியை பார்த்து கொண்டிருந்தவனின் கண்களில் இருந்து நீர்மணிகள் உருண்டோடியது.

‘ப்ச் விடுடா எவ்ளோ நேரம் அழுவ’ என்று அவன் கண்ணீரை துடைத்து விட்டவள், ‘உனக்கென்ன நான் விழப்போறேன்னு ஜோசியமா தெரியும்’ என்று அவனை சமாதானபடுத்த முயன்றவளின் குரலும் உடைந்து போயிருந்தது அவன் காயங்களை கண்டு.

“ரொம்ப வலிக்குதாடா.., என்னால தானே உனக்கு இப்படி அடிபட்டது…” 

“இல்லடி என்னால தான் நீ..” என்றவனுக்கு இத்தனை நேரம் யாழி தண்ணீரில் தத்தளித்து பட்ட பாட்டையும் ஒரு நேரம் இறந்தே போய் விட்டோமோ என்ற அவள் மனவோட்டத்தையும் விவரித்ததை கேட்டதில் இருந்து குற்ற உணர்ச்சி அதிகரித்து அவனை கொன்று தின்று கொண்டிருந்தது…

” சாரி யாழி..!! அவர் இன்னும் என்னை எத்தனை அடினாலும் அடிச்சி இருக்கலாம்.., ஐ டிசெர்வ்” என்றான்.

“டேய் விஷ்ணு அப்படி சொல்லாத அவர் இன்னும் அடிச்சா நீ தாங்க மாட்ட இங்க பாரு ரெண்டு மூணு அடிக்கே உதடு கிழிஞ்சி முகம் வீங்கி போயிருச்சி, இந்த மூஞ்சியை வச்சிட்டு நாளைக்கு வெளியே போக முடியாது.., இவ்ளோ ஏன்டா ஒரு செல்பி கூட எடுக்க முடியாது” என்றாள் கிழிந்த அவன் உதட்டிற்கு ஒத்தடம் கொடுத்து கொண்டு.

“அப்படி இல்ல யாழி, அப்பா சொன்ன மாதிரி இப்போ அவர் இல்லைன்னா எங்களுக்கு நீ இல்ல அதானே நிஜம்.., அது மாறாதே, நீ இல்லாம நாங்க எப்படி..??? ப்ச் போடி எல்லாமே என்னால தானே..!!” என்றவனுக்கு தானே தன் தமக்கைக்கு எமனாகி போயிருப்போமே என்ற நிஜத்தை ஏற்க முடியவில்லை.

“நீ அப்பவே ஆத்துல தனியா நிற்க  பயந்த ஆனா நான் என்னென்னமோ பேசி.. என்று நிறுத்தியவன், என்ன சமாதானம் சொன்னாலும் நான் உன்னை விட்டுட்டு போனது தப்பு யாழி நான் செஞ்சிருக்க கூடாது..”

‘நீ இல்லாம என்னால ஒரு லைப் நெனச்சு கூட பார்க்க முடியாதுடி உன்கிட்ட சொல்லலைனாலும் எனக்கு நீ உயிர் யாழி..!! என் பிரெண்ட்ஸ் கூட கிண்டல் பண்ணுவாங்க எப்பபாரு அக்கா கூட சுத்துறியேன்னு எனக்கு நீ அக்கா மட்டும் இல்ல பிரஸ்ட் அண்ட் பெஸ்ட் பிரென்ட் யாழி.., உனக்கு அப்புறம் தான் என் பிரெண்ட்ஸ் கூட எனக்கு” என்றவன்

‘ப்ளீஸ்டி சாரி, இனி இப்படி உன்னை தனியா விட மாட்டேன் மன்னிச்சிடு, உனக்கு கோபம் இல்லையே..??’

கண்ணீருடன் தம்பியை பார்த்து கொண்டிருந்தவள், ‘டேய் என்னடா இது லூசு மாதிரி சாரி சொல்ற நீ அங்க மேல ஏறி போனதும் விழுந்து அடிப்பட்டதும்  என்னோட சேனலுக்கு ஹெல்ப் பண்ண தானே..!! எத்தனை பேருக்கு இப்படி ஒரு சப்போர்ட்டிவ்வான தம்பி கிடைப்பாங்க நான் தான்டா லக்கி எனக்கு எந்த கோபமும் இல்லை’ என்று மேலும் அவனை சமாதனபடுத்தி, வம்பிழுத்து சகஜமாக்க முயற்சி செய்து வெற்றியும் கண்டாள்.

வெளியில் சென்றவள் சிப்ஸ், பாப்கார்னோடு திரும்பி வந்து கொறித்து கொண்டே, ‘நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்’ என்றாள்.

‘என்ன..??’

‘விஷ்ணு நா.. நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன்டா’ 

‘ஏன் திடீர்ன்னு இப்படி ஒரு முடிவு..??’ 

‘நானும் யோசிச்சி பார்த்தேன் விஷ்ணு நீ சொல்ற மாதிரி சிங்கிளா சுத்துறது எனக்கு செட் ஆகும்ன்னு தோணலை அதோட லிவிங் எல்லாம் வேண்டாம்டா அது ஏதோ கெட்ட வார்த்தை போல அதான் அப்பா நாம அப்படி சொன்னதும் அடிச்சிட்டாரு அதோட எனக்கு இப்பவே அவரை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுது’ என்றவளின் மனகண்ணில் பிரஷாந்தியின் முகம்.

‘யாழி அப்போ நீ லவ் பண்றியா ..??’

‘தெரியலடா ஆனா அப்படி தான் நினைக்கிறேன்’

‘எப்படிடி ..?? ஒருவேளை அவரும் உன்னை லவ் பண்றாரா..??’

‘தெரியலைடா, எனக்காக  கவிதை சொல்லலை, பொக்கே கொடுக்கலை, சர்ப்ரைஸ் கிபிட் கொடுத்து ப்ரோபோஸ் பண்ணல, எவ்ளோ பேர் பிரஸ்ட் மீட்டிங்ல எத்தனை கேண்டிட் பிக்ஸ் எடுக்குறாங்க அவர் என் கூட ஒரு செல்பி கூட எடுக்கலை விஷ்ணு இவ்ளோ ஏன்டா நான் என்னை பிடிக்குமான்னு கேட்டதுக்கு கூட எந்த பதிலும் சொல்லலை’ என்றாள் அதியின் விழிகளில் செயல்களில் வழிந்த காதலை, உயிர்நேசத்தை இனம் காண முடியாமல்.

பின்னே அவர்கள் பார்த்து வளர்ந்த காதல் வேறு அல்லவா..??

ஆடம்பர பொருட்செலவில் கூட்டம் கூட்டி அனைவர் முன்னிலையில் வெளிபடுத்தி அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விளம்பரபடுத்துவது  தான் காதல் என்ற புரிதலை கொண்டிருக்கும் பெண்ணவளுக்குக்கு தெரியவில்லை வார்த்தை கூட தேவை இல்லை உயிர்காதலை புரிந்து கொள்ள விழிமொழி போதும் என்பது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!