Skip to content
Post Views: 4,666
மனதிலோர் மோகன ராகம்
Advertisement
அத்தியாயம் 11
தன் மீது தவறில்லை என்னும் இடத்தில் ராகா எப்போதுமே சற்று துடுக்காகப் பேசுவாள் என்று வனிஷாவிற்குத் தெரியும். நடாஷா போன்றோ, ராகா போன்றோ தனக்கு உடனே மறுமொழி சொல்ல வராது என்றும் தோன்றும்.
Advertisement
Advertisement
அதை விட, பேச்சு வார்த்தை முடிந்த பின்னர் தான், “இந்த இடத்தில இப்படி பேசியிருக்கலாமே! நல்ல பாயிண்டா இருக்கே! அப்போ தோணாம போச்சே” என்றெல்லாம் நிறைய முறை எண்ணுவாள் வனிஷா.
அந்த வனிஷாவிற்கு இன்று ராகா சத்யசாய்ராமிடம் கொஞ்சம் தளைந்து போய் பேசியது அப்பட்டமாய்த் தெரிந்தது. “பெரிய இடத்து கல்யாணம்னு இவளோ இறங்கிப் போகற ஆள் இல்லையே இது!” என்று கடைக்கண்ணால் ராகாவை ஏறிட்ட படிக்கு வந்த வனிஷாவின் பார்வை ராகாவின் பக்கம் சென்று சென்று மீண்டது.
Advertisement
அதிலும், சத்யாவின் அறையிலிருந்து வெளியே வந்த உடனே, லாபியில் சொல்லி, “ரூம் நம்பர் 1253க்கு ஒரு காபி கொண்டு போக சொல்லுங்க” என்று சொல்லியவளை ஆச்சர்யமாகத் தான் பார்த்தாள்.
“என்ன?” என்று கண்களாலேயே வினவிய ராகாவிடம், “காபி யாருக்கு?” என்று கேட்டாள் வனிஷா. “அதான் சொன்னேனே, ரூம் நம்பர் 1253ன்னு.” என்றாள் ராகா சின்ன தோள் குலுக்கலுடன்.
“ஆனா சத்யா சார் காபி வேணும்னு கேட்கவே இல்லையே!” என்று வம்பாக வனிஷா மீண்டும் கேள்வி எழுப்பினாள்.
“என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி தோண்டித் தோண்டிக் கேள்வி கேட்கற? அவங்க ரூம்ல டீபாய் மேல வச்சிருந்த காபி ஏடு படிஞ்சு இருந்துச்சு, அதனால ஆடர் பண்ணேன். வாட்ஸ் ராங் இன் திஸ்”
“ம்ம்ம் எனக்கு ஒண்ணும் ஆகலை. உனக்கு என்னாச்சுன்னு தான் எனக்கு தெரியலை. அந்த ரூம்ல உன்னை விட நான் தான் ரொம்ப நேரம் நின்னுட்டு இருந்தேன். ஆனா என் கண்ணுல அந்த ஏடு பிடிச்ச காபி படவேயில்ல. ஆனா நீ அதை நோட் பண்ணியிருக்க. பலே பலே!” என்று கண்களைக் குறுக்கிக் கொண்டு வனிஷா கேட்க,
“ஸ்டூபிட் மாதிரி பேசாத! எதார்த்தமா கண்ணுல பட்டுச்சு. டோண்ட் ஃபைண்ட் ரீசன்ஸ்! ஏடு படிஞ்ச காபிய யார் குடிப்பா. அதனால வேற ஆடர் பண்ணேன். இது ஒரு தப்பா? உன் கூட வெட்டி அரட்டை அடிக்க எனக்கு டைம் இல்ல. மைக்கில் மாதிரி உன் கூட வெட்டி அரட்டை அடிக்க என்னால முடியாது. கோ அண்ட் மேக் யுவர்செல்ஃப் யூஸ்ஃபுல்” என்று சொல்லிவிட்டு அங்கே நின்றால் வனியின் கேள்விகளுக்கு பதிலளிக்க நேருமோ என்ற பயத்தில் நிற்காமல் நழுவினாள்.
வனிஷா தன் கேள்விகளுடன் நேரே மைக்கிலிடம் சென்றவள் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் ஒப்பித்துவிட்டுத் தான் திருப்தியானாள்.
மைக்கிலுக்கு மிருதுவின் பின்னால் சுற்றவே நேரம் சரியாக இருக்க, வனிஷா வந்து சொன்ன விஷயம் அவ்வளவு ரசிக்கவில்லை. “ம்ம், சரி சரி.” என்று பொத்தம் பொதுவில் கேட்டுக் கொண்டான். அவனுக்கு மிருதுவை சமாளிப்பதை காட்டிலும் அவள் அடிப்பொடிகளான தீப்தியையும், மின்னியையும் சரிக்கட்டுவதற்குள் விழி பிதுங்கியது.
“இந்த மணப்பெண் தோழிகளை எல்லாம் மொதல்ல கல்யாணத்தை விட்டு ஒழிக்கணும்.இவங்க கூட சேர்ந்து பல்ல பல்ல காட்டி சிரிச்சுட்டு ஃபோட்டோக்கு போஸ் மட்டும் தான் குடுக்கணும், இடையில கருத்து சொல்லக் கூடாதுன்னு ஆடர் போடணும். இதுகளை சமாளிக்கவே தனியா ஒரு டீம் போடணும் போல இருக்கு” என்று குமுறிக் கொண்டிருந்தான்.
மிருது ஒருவழியாக தன் உடையைத் தேர்ந்தெடுத்திருந்தாள். அதே கலர் ஷேட் உடைகளை உடுத்துமாறு சத்யாவிடம் சென்று சொல்லி வந்திருந்தாள் வனிஷா. இம்முறை வனிஷாவிடம் முகம் சுழிக்காமல், “இந்த டிரஸ் தானே! மாற்றம் இல்லையே” என்று மையமாய் புன்னகைத்தே பேசியிருந்தான் சத்யா.
மிருதுவிற்கு தலை அலங்காரம் நடந்து கொண்டிருக்க, அவள் அணிந்திருந்த பர்ண்ட் ஆரஞ்சு வண்ண சிஃபான் கவுனுக்குப் பொருத்தமாய் மெல்லிய சந்தனமும், ஆரஞ்சும் கலந்த பைஜாமா குர்த்தா அணிந்து தயாராகி நேரே படப்பிடிப்பு நடக்கவிருக்கும் இடத்திற்கு வந்துவிட்டான் சத்யா. படப்பிடிப்பு தளத்தின் அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து, எதார்த்தமாய் வேடிக்கை பார்ப்பவன் போலக் கண்களை இங்குமங்கும் உருட்டினான்.
ரிஷி தன் கைப்பேசியில் மும்முரமாகிவிட, சத்யாவின் கண்கள் அவ்விடத்தை அளந்தன. “ராகாவையா தேடற?” என்று அறிவு கேள்வி கேட்கவும், “சே, சே, அவளை நான் எதுக்கு தேடப் போறேன்! மிருது வந்துட்டாளான்னு பார்த்தேன்” என்று அவன் நினைத்தது அப்பட்டமான பொய் என்று அவனுக்கே தெரிந்திருந்தது.
“மிருதுவைப் பார்க்கணும்னா நேரா அவ மேக்கப் பண்ணிட்டு இருக்க ரூமுக்குத் தானே போயிருக்கணும் நீ? இங்க வந்துட்டு மிருதுவ தேடினேன்னு அபாண்டமா நாகூசாம பொய் சொல்லறியேடா” முழுதாய் சில மூச்சுகள் எடுத்துக் கொண்டு நிதானித்தான்.
“இப்போ நடக்கப் போறது, உன்னோட வெட்டிங் ஷூட். புரியுதா? அதுவும் இந்தியா முழுக்க சர்குலேட் ஆகப் போற ப்ரைடல் மேகஜீனுக்கு போட்டோ எடுக்க வந்து உட்கார்ந்திருக்க. அந்த எண்ணத்தை மனசில நிரப்பிக்கோ. இப்போ போய் டீனேஜ் பையன் மாதிரி அந்த பொண்ணைப் பாரு, இந்த பொண்ணைப் பாருன்னு மனசை அலைபாயவிடாம அமைதியா டிக்னிஃபைடா நடந்துக்கோ” என்று தெம்பூட்டினான்.
அவன் வார்த்தைகள் எல்லாம் அவளைக் காணும் வரையிலும் தான் நினைவில் நின்றது. பரிட்சை அறையினுள் செல்லும் சமயம் மூளையில் எதுவுமே இல்லாதது போல் ஓர் உணர்வு ஏற்படுமே அது போல, ராகா அங்கே நடமாடத் துவங்கியதும் அனைத்தும் மறந்து போய்விட்டிருந்தன.
“இதென்ன இப்படியெல்லாம் யோசனை செல்கிறது? யாருக்காவது நான் இப்படி நினைக்கிறேன் என்று கொஞ்சம் தெரிந்தாலும் எவ்வளவு அசிங்கமாய் இருக்கும்? சே! என்ன நான்” என்று கவனத்தைத் தன் கைப்பேசியில் குவித்துவிட்டான்.
சற்று நேரத்தில் மிருது வந்துவிட்டிருக்க, அப்பாடா என்று சற்றே நிம்மதி தான் எழுந்தது. “சீக்கரம் நாலு ஃபோட்டோ எடுங்க, நான் வீட்டுக்குப் போறேன்” என்ற அவன் ஆசைக்குப் பெரிய முக்காடு போட்டு மூடப்படவிருக்கிறது என்று பாவம் சத்யா அறிந்திருக்கவில்லை.
“ஏ ஒரு ஃபோட்டோ தானே மேகஜீனுக்கு குடுக்க போறீங்க. அப்பறம் எதுக்குடா ஆயிரம் ஃபோட்டோ எடுக்கறீங்க? தலைய இப்படி திருப்பு, இங்க பாரு, ஷோல்டர் இறக்காத, கொஞ்சமா சிரி, கண்ணுக்கு சிரிப்பு போகலை” டேய் என்னலாம் சொல்லறீங்கடா?கண்ணுக்கு எப்படிடா சிரிப்பு போகவைக்கறது? தெரியலையே” என்று படாத பாடுபடுத்தி முதல் உடையில் ஒரு மணி நேரம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.
சத்யாவிற்கு இந்த புகைப்பட பிடிப்பு எல்லாம் மிகவும் புதிய அனுபவம். பளீர் வெளிச்சம் சிந்திய இரு ஃபோகஸ் விளக்குகள், வெள்ளை ஒளிக்கென தனியான குடைகள் என அந்த அமைப்பில் நின்று சாதாரணமாய் சிரிக்க அவனால் முடியவில்லை. வெகுவாகத் திணறினான்.
“ஸார், சின் டவுன்.. அவளோ இல்ல. கொஞ்சம் கொஞ்சம் மட்டும். இன்னும் கொஞ்சம் மேல தலையை மட்டும் தூக்குங்க. ரைட் ஷோல்டரை ரெண்டு இன்ச் கிழ இறக்குங்க. இன்னும் கொஞ்சம். அவளோ இறக்காதீங்க. ரெண்டு இன்ச் மேல ஏத்துங்க. மேடம் டிரஸை மிதிச்சுட்டு இருக்கீங்க பாருங்க” என்று பத்து புகைப்படம் எடுப்பதற்குள் பத்தாயிரம் அறிவுரைகளை வழங்கியிருந்தார் புகைப்படக் கலைஞர்.
போதா குறைக்கு மிருது வேறு அவன் செவிகளில் ஓதிக் கொண்டே இருந்தாள். “அவங்க சொல்லற மாதிரி நில்லுங்க. சிரிங்க. அவளோ ஏன் சிரிக்கறீங்க. கொஞ்சம் கம்மியா லிப்ஸ்ஸோட கார்னர்ல மட்டும் சிரிங்க போதும்” என்று கண்ட மாத இதழ்களைப் படித்து வந்து, தன் அறிவுத் திறனை வெளிபடுத்திக் கொண்டிருந்தாள்.
“இவ வேற! சரி ஆசைப்படறாளே கொஞ்சம் நாம அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு நினைச்சா, ஓவரா தான் போறா! கோவப்படக் கூடாது அமைதியா இருக்கணும்னு நினைக்கறவனை அப்படி இருக்க விடாம, என் பொறுமையை சோதிச்சுட்டு” என்று முகம் கடுகடுக்க,
“சார், கண்ணை சுருக்கறீங்க. எதுவும் திங் பண்ணாம கேமரா பாருங்க” என்று பக்கவாட்டில் இருந்து குரல் கொடுத்தார் புகைப்படக்காரர்.
“இவன் வேற! எங்க இருந்து என்னை நோட் பண்ணறான்னே தெரியலை. சும்மா செவுத்து பல்லி மாதிரி ச்ச்ச் கொட்டிட்டே இருக்கான்” என்று எண்ணினான்.
அவன் திணறலையும், மிருதுவின் மிரட்டல்களையும், அவன் தடுமாற்றத்தையும் என அனைத்தையுமே ராகா, ஃபோட்டோகிராஃபரின் அருகில் நாற்காலியிட்டு அமர்ந்து ரசித்துக் கொண்டுதானிருந்தாள்.
அவளுக்கு சத்யாவின் தடுமாற்றத்தைக் காண அழகாய் இருந்தது. “அச்சோ! பாவம்ல.. சோ ஸ்வீட்! எப்படி திணர்றான். நான் வேணா பக்கத்தில போய் ரிலாக்ஸ் சத்யா. ஜஸ்ட் எ பிக் தானே! கூலா இருங்கன்னு சொல்லவா? வேண்டாம்! நமக்கு என்ன வந்துச்சு. இந்த ஆறுதல் வேலையெல்லாம் பார்க்கவேண்டிய மிருதுவே அவனை முறைச்சுகிட்டு நிக்கறா!”
“ஆனாலும் பாவமா இருக்கே! கம்ஃபர்டபிளாவே இல்ல பாரு அவன். ஷோல்டர்ஸ் எவளோ ஸ்டிஃபா வச்சிருக்கான். ரிலாக்ஸ்டா இருந்தா ஸ்னாப்ஸ் இன்னும் நல்லா வரும்” என்று அவன் மீது அளவுக்கு அதிகமாய் கரிசனம் பொத்துக் கொண்டு கொட்டியது.
பொதுவாக மற்ற மணமக்களின் ஷூட் போது, ராகா மணமக்களின் கெமிஸ்டரி, ஹிஸ்டரி பற்றியெல்லாம் கருத்தில் பதித்துக் கொள்ளவே மாட்டாள். “அவங்க ஜோடிப் பொருத்தமெல்லாம் எப்படி இருந்தா எனக்கென்ன, கல்யாணம் வரைக்கும் அவங்களை கொண்டு போய் தள்ள வேண்டியது நம்ம பொறுப்பு. அதுக்கப்பறம் அவங்க லைஃப் அவங்க டெசிஷன்ஸ்” என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாய் இருக்கும்.
இத்தனைக்கும் அவர்கள் முன்னர் வேலை செய்த ஒரு தம்பதியின் திருமணம் சிற்சில காரணங்களினால் தடைபட்டுப் போனது. “கல்யாணம் நடக்குதா இல்லையாங்கறது நம்ம பிரச்சனையா? அவங்க கேட்ட மாதிரி டெகரேஷன்ஸ் பண்ணியாச்சு. அதுக்கு பேமெண்ட் வந்துட்டா போதும்.” என்று பிசினஸ் மட்டுமே முக்கியமாகத் தோன்றியதுண்டு.
ஆனால் சத்யா- மிருதுளா தம்பதியிடம் அப்படி தள்ளி வைத்து, தன் வேலையை மட்டுமாய் பார்க்க மனம் வரவில்லை. அதிலும் சத்யாவின் திணறலைக் காண பாவமாக இருந்தது. அதனால் அடிக்கடி வனிஷாவை சத்யாவிடம் ஏவிக் கொண்டே இருந்தாள்.
“வனி, கோ அண்ட் சீ இஃப் ஹி இஸ் கம்ஃபர்டபுள்” “எல்லாம் ஒ.கேவான்னு பாரு வனி. எதாவது வேணுமான்னு கேளு” என்று கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தால் வனிஷாவிற்கு எரிச்சல் வரத்தானே செய்யும்.
“அவளோ அக்கறை இருந்தா நீயே போய் சொல்லலாம்ல. என்னை ஏன் விரட்டிட்டே இருக்க!” என்று சற்றே சடைத்துக் கொண்டு வனிஷா கேட்ட பின்பு தான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு புகைப்படக்கலைஞருடன் அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.
இந்தக் கலவரத்தின் ஊடே புகைப்படங்கள் எடுத்து முடிக்கவும், “அப்பாடா முடிச்சுட்டானுக” என்று சத்யா பெரிய மூச்சாக விட்டான். அந்த நேரம் அவன் மூச்சே நின்றுவிடும் அளவிற்கு, “ஒ.கே, இந்த டிரஸ்ல ஸ்னாப்ஸ் போதும். டிரஸ் சேஞ்ச்!” என்று ஃபோட்டோகிராஃபர் சொல்லிவிட, சத்யா நிஜமான அதிர்ச்சியுடன் விழித்தான். அவன் முகம் போன போக்கைக் காண வேடிக்கையாக இருந்த போதும், உண்மையில் ராகாவின் மனதினுள் அவனுக்காக வருத்தமே கொண்டாள்.
அதைவிடவும் அனைவரின் காதுபட, “சத்யா! நெக்ஸ்ட் டிரஸ் ஷூட்லையாவது கொஞ்சம் ஒழுங்கா போஸ் குடுங்க.” என்று கூறிய மிருதுளாவைக் காண்கையில், “என்ன இப்படி பேசறா! டென்ஷனா இருந்தா அவனைக் கூல் பண்ண வேண்டியது அவ கடமை தானே! இந்த அளவுக்கு கூட ஹெல்ஃபுல்லா இல்லாம இருந்தா எப்படி” என்ற சிறிய கோபம் எட்டிப்பார்த்தது ராகாவிற்கு.
அவன் நண்பன் ரிஷியும் அவ்வளவாய் உதவிகரமாய் இருக்கவில்லை. புகைப்படங்கள் எடுக்கத் துவங்கியதுமே, ஓரமாய் ஒரு நாற்காலியை பிடித்து கால்களை மற்றொரு இருக்கையில் நீட்டி, அவன் எப்போதோ கும்பகர்ணசேவை செய்ய துவங்கியிருந்தான்.
மிருதுவின் வார்த்தை நிச்சயமாக அவனை காயப்படுத்தியிருக்க வேண்டும். “நான் என்ன ஒரு நாளைக்கு நூறு செல்ஃபியும், நூறாயிரம் ஃபோட்டோசுமா எடுத்துட்டு இருக்கேன்.! வேற வேலை இல்லயா எனக்கு?” என்று ஆத்திரம் ஏற்படக் கால்களைத் தரையில் அழுந்தி நடந்து தன் அயற்சியைக் கட்டுப்படுத்தி கொண்டு உடை மாற்றச் செல்லும் சத்யாவை உடனே சமாதானம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் எங்கிருந்து அவளை ஆட்கொண்டது என்று தெரியவில்லை. ரொம்பவும் யோசனைக்கு இடமளிக்காமல் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள் ராகா.
சத்யா தன் அறையினுள் நுழைய எத்தனிக்கவும், பின்னுடே காலடி சப்தம் கேட்டுத் திரும்பினான். கொஞ்சம் மூச்சிரைக்க, அவன் பால் ஓட்டமும் நடையுமாக வந்த ராகாவைக் கண்டு தயக்கத்துடன் அறை வாயிலில் தேங்கி நின்றான்.
கொஞ்சம் தயக்கத்துடன், “உங்களுக்கு ஷூட் ஒ.கேவா. எந்த டிஸ்டர்பென்சும் இல்லையே!” என வினவ, அவள் அக்கறையுடன் கேட்ட விதம் கண்டு உள்ளூர தோன்றிய நிம்மதி அவன் முகத்திலும் படர்ந்தது.
“எஸ்.. ஆல் ஒ.கே” என்றான் ஒற்றை வார்த்தையாய். அவன் மேலே எதாவது சொன்னால் தானே இப்படி இப்படி செய், இப்படி பதட்டம் கொள்ளாதே என்றெல்லாம் சொற்பொழிவு ஆற்ற முடியும்? அவனானால் எதுவுமே சொல்லாமல் “ஆல் ஒ.கே” என்கிறானே! இப்போது என்ன பேச?
“இல்ல, ஷூட் அப்போ கொஞ்சம் நெர்வஸ்ஸா இருந்த மாதிரி இருந்துச்சு”
“அப்படியா? நானா?”
“எஸ். ஃபர்ஸ்ட் டைம் ஷூட் அப்படித்தான் எல்லாருக்குமே இருக்கும்” என்று ராகா பேசத் துவங்கவுமே, “ஐம் நாட் நர்வஸ். அப்படியெல்லாம் இல்லையே!” என்று அவளைப் பேசவிடாமல் நிறுத்தியிருந்தது அவன் வார்த்தைகள்.
“ஷோல்டர்ஸ் ஸ்டிஃபா வச்சிருந்தீங்க..”
“அவளோ நோட் பண்ணீங்களா? ஐ மீன் என் ஸ்டிஃப் ஷோல்டரை” என்றான் நக்கல் சிரிப்புடன். அவன் கேட்ட கேள்வி ராகாவிற்கு நன்றாகவே விளங்கியது. “என்னை அந்த அளவிற்கு நோட்டம் விட்டிருக்கிறாயா?” என்ற அர்த்தத்தில் தான் வினவினான். ராகாவோ அவன் கேள்வி புரிந்தது போல இஞ்சித்தும் காட்டி கொள்ளவில்லை.
“ஐ மீன், ஷோல்டர் ஸ்டிஃபா இருக்குன்னு ஃபோட்டோகிராஃபர் சொல்லிட்டே இருந்தார்.” என்றாள் சமாளிப்பாக. “இவன் டென்ஷனா போறானே, கொஞ்சம் பேசி கூல் பண்ணலாம்னு வந்தா, இவன் என்ன ரெண்டு வார்த்தை பேசறதுக்கு ஐநூறு ரூபாய் வாங்கியிருக்கேன். அதுக்கு மேல பேச, ரெண்டாயிரம் குடுன்னு எதிர்பார்க்கறவன் மாதிரி ஒன் வேர்ட் ஆன்ஸராவே சொல்லி மனுஷன சோதிக்கறான்”
“ஐ.சீ. எனக்கு தெரிஞ்சு நான் நார்மலா தான் இருந்தேன்.” என்றவனுக்கு ராகாவின் முகத்தில் படர்ந்த பாவனைகளைக் காண ஆர்வமாக இருந்தது. அவள் முகத்தில் அவனிடம் பேச வேண்டுமே என்ற ஆர்வமும், அவன் பதில் பேசும் வார்த்தைகளிலிருந்து மேலே எப்படிப் பேச்சைக் கொண்டு செல்வது என்று தெரியாமல் திணறிய எரிச்சலும் காண அவனுக்குப் பிடித்திருந்தது. ஏனோ அவளைச் சீண்டிப் பார்க்க மனம் மேலும் தூண்டியது.
“இதைக் கேட்கத் தான் என் பின்னால வந்தீங்களா?” என்று முகத்தில் கொஞ்சம் புன்னகையை வரவழைத்துக் கொண்டு மறவாமல் வினவியிருந்தான்.
ராகாவிற்கு சற்றே அவமானமாக இருந்தது. “சே! இவன் ஃபோட்டோவுக்கு எப்படி நின்னா என்ன? இதெல்லாம் அந்த பொண்ணு மிருதுளா கவலைப்படவேண்டிய விஷயம். இவனை கூலாக்க நான் எதுக்கு வேலைமெனக்கெட்டு ஓடி வந்தேன். இதுக்காகத் தான் வந்தீங்களான்னு வேற நக்கலா கேட்கறான்.
“என்னாச்சு ஏன் ஓடி வர்றீங்க?” என்று அவன் வினவுவான் என ராகா எதிர்பார்க்கவில்லை. “அது, அது வந்து .. ரெஸ்ட் ரூம் போக” என்று சமாளிக்க வேண்டி என்னவோ உளறினாள்.
“ஓ” என்றவன் அவன் அறையின் கதவைத் திறக்க, இவள், ஷ்ருஷ்டீஸுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் கதவருகே சென்றாள். இரண்டும் நேரெதிர் அறைகள் தான். இவள் அறையின் சாவி வனிஷாவிடம் இருந்தது. தான் சொன்னதை மெய்பிக்கும் பொருட்டு, தன் ஜீன் பாக்கெட்டில் சாவியைத் தேடுவது போல பாவ்லா காட்டினாள்.
அவள் தடுமாற்றம் கண்ட சத்யாவிடம், “சாவி, வனிகிட்ட இருக்கு” என்று அசட்டுத்தனமாய் சிரிக்க, அவனும் இதழ் பிரிக்காமல் புன்னகைத்தான். “என் வாஷ் ரூம் வேணா யூஸ் பண்ணிக்கோங்க. ஐ டோண்ட் மைண்ட்” என்று பெருந்தன்மையாக அவன் கூற, ராகா மறுப்பாக தலையசைத்தாள்.
“இல்ல, இட்ஸ் ஒ.கே.” என்றவள், திரும்பிச் சென்றுவிடுவாள் என்றே நினைத்தான் சத்யா. கொஞ்சம் யோசனையுடன் அவள் தடுமாற்றமாய் நிற்பதைக் காணவும், “ப்ளீஸ் யூஸ் மை ரெஸ்ட் ரூம். ஐ டோண்ட் மைண்ட் ரியலி” என்று தன் அறையின் கதவினைத் திறந்து அவள் உள்ளே செல்ல வழிவிட்டான்.
ராகா அதிகம் யோசிக்காமல் அவன் அறைக்குள் சென்று குளியலறைக்குள் சென்று கதவைத் தாளிட்டாள். முகக் கண்ணாடியில் அசடு வழியும் அவள் பிம்பத்தைக் காண அவளுக்கே சிரிப்பு வந்தது. “ச் தூ! நீயெல்லாம் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்ல வேற வேலை பார்க்கற! அப்படியே முகத்தில் நீ நினைக்கறதை எழுதி ஒட்ட வச்சிடுற” என்று மீண்டும் ஒரு முறை தன் முகத்தைப் பார்த்து சீராகத் துப்பிக் கொண்டு, முகத்தில் தண்ணீர் தெளித்து முடிகளைச் சீராக்கினாள்.
சில நிமிடத்தில் ராகா வெளியே வரவும், அறையினுள் நின்றிருந்த சத்யாவைப் பார்த்து சினேகமாய் சிரிக்க முயன்றாள். அவள் மெனக்கெட்டு சாதாரணமாகச் சிரிக்க முயல்வதைக் கண்ட அவனுக்கும் புன்னகை பூத்தது.
“தேங்க்யூ. ஐம் ஆல்ரைட் நவ்” என்று அவள் முன்னர் கேட்ட கேள்விக்கெல்லாம் சேர்த்து வைத்து ஒற்றை பதிலாய் சொல்லியிருக்க, ராகா, “எதற்காக தேங்கியூ” என்றெல்லாம் வினவவில்லை. அவளுக்கு அவன் கூறிய நன்றியின் பொருள் புரிந்தது. அவனைச் சமாதானாம் செய்யவே அவள் வந்தாள் என்பது உணர்ந்து தான் அவன் நன்றி சொல்லியிருக்கிறான் என்பது புரிந்து, சின்ன தலையசைப்புடன் அவன் அறையில் இருந்து வெளிபட்டாள்.
வெளியே வந்ததுமே ராகாவின் புன்னகை இன்னமுமாக விரிந்தது. அவள் நடையில் ஒரு சின்ன துள்ளல் சேர்ந்து கொண்டது. உதட்டுடன் சேர்த்து கண்களும் புன்னகைக்க, லாபியில் நடந்தவளை எதிர் கொண்டாள் வனிஷா.
“என்ன சத்யா சார் ரூம்ல இருந்து வர்ற?” என்று கேள்வியாய் கேட்காமல் ஸ்டேட்மெண்ட் போலவே கூறினாள் வனிஷா.
“அது, அது வந்து, பாத்ரூம்!”
“என்னது?”
“பாத்ரூம் போக நம்ம ரூமுக்கு வந்தேன். ரூம் பூட்டியிருந்தது.”
“அதனால?”
“சத்யா சார் அவங்க பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோங்கன்னு சொன்னாரு. அதான்.” என்று கூறிய ராகாவை ஆச்சர்யமாய் பார்த்தாள் வனிஷா. ”என்ன லுக்கு? பாத்ரூம் போகத் தான் வந்தேன் வனி.”
“நீ தான் இப்படியெல்லாம் நடந்துக்கறியா? என்னால நம்பவே முடியலை. க்ளையண்ட் காலி பண்ணிட்டு போனதுக்கு அப்பறம் அந்த ரூம யூஸ் பண்ணா கூட திட்டற ஆளு நீ! க்ளையண்ட் உள்ள இருக்கறப்போவே அவங்க பாத்ரூமை யூஸ் பண்ணியிருக்க!” என்று குற்றம் சாட்டும் பார்வையுடன் வினவினாள் வனிஷா.
வனியின் நியாயமான கேள்விக்கு பதில் சொல்லும் திறம் அப்போதைக்கு ராகாவிடம் இருக்கவில்லை. “சில் அவுட் வனி! எதுக்கு இவளோ யோசிக்கற?” என்று ஏதோ சமாளிப்பாய் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகரவே முற்ப்பட்டாள். வனியின் பார்வை தன் முதுகைத் துளைப்பதை உணர்ந்த போதிலும், இயல்பாக இருக்க மிகவும் பிரயத்தனப்பட்ட ராகா, இலகுவான மனநிலையுடன் மீதி படப்பிடிப்பில் பங்குகொண்டாள்.
error: Content is protected !!