Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 5

?கண்ணுக்கு புலப்பட்ட எழுத்து பிழைகளை நீக்கி உள்ளேன்… என்னையும் அறியாமல் சில பிழைகள் வந்திருக்கலாம் மன்னிக்கவும்? 

அத்தியாயம் 5

“டேய் மாமே, சுவத்துக்கு அந்த பக்கம் உங்க மேடம் போட்டோ ஏதாவது ஒட்டி வைச்சு இருக்காங்களா?…” என்றதும்

“எதே…” என்பதைப் போல் சுவற்றை தாண்டி அந்த பக்கம் பார்த்தான். அங்கு ஆர்யா தான் நின்றுக் கொண்டிருந்தாள்.



Advertisement

“அடேய் வெண்ணை மேடம் தான் டா நிக்கறாங்க…” சற்றே பதட்டமாகக் கூறியவன் தயங்கிக் கொண்டே ஆர்யாவின் முன் நின்றான்.

காசியை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது  கண்களை சுருக்கி அவனை அழுத்தமாகப் பார்த்தப் பார்வையேக் கூறியது. தவறு செய்த பிள்ளைப் போல  அவளின் முன் தயங்கி தயங்கி நின்றான் காசி

“என்ன பண்ணலான்னு இருக்கீங்க காசிநாதன்…” எனக் கேட்டாள்.

Advertisement

“வேற வழியில்லை மேம்  இடிச்சு தான் கட்டணும்…” உள்ளே சென்ற குரலில் கூறினான்.

Advertisement

கண்களை இறுக மூடித் திறந்தவள் “அந்த மிஸ்டேக்கை சரி பண்ணிடுவீங்க  இப்படி கண்ட இடத்தில மெட்டீரியல் கிடக்குதே அதுக்கு என்னப் பண்ண போறீங்க? அதுக்கானப் பேமெண்ட்டை  உங்க சேலரில  இருந்து எடுத்துக்கட்டுமா?…” என்றதும்  தலைக் குனிந்தான் காசி.

அவன் தலைக் குனிவைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை  “கொஞ்சம் கூட ஒரு சைட் எப்படி இருக்கணுன்னு தெரியல உங்களுக்கு. கீழ இருந்து மேல வரதுக்கே போதும் போதுன்னு ஆயிடுச்சு… சென்டரீங் பிரிச்சு மாசக் கணக்காகுது இன்னும் எதுக்கு அந்த பலகையெல்லாம் இங்கேயே இருக்கு…” சும்மாவே கத்தி தான் பேசுவாள் இப்போது கோபத்தில் வேறு இருக்கிறாள் சொல்லவா வேண்டும் அந்தக் கட்டிடம் முழுவதும் ஒலித்தது அவளின் குரல்.

காசிக்கு பேச்சே வரவில்லை நாவு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. அவனின் நிலையைத் துளிக் கூடக் கண்டுகொள்ளவில்லை

Advertisement

“அங்க அங்க கலவைக் கலக்கி அப்படியே செட்டாகி கிடைக்குது. அந்தளவுக்கு ஒரு மெத்தனத்துல வேலைப் பார்த்துட்டு இருக்கீங்க. நீங்க இங்க இருக்கீங்க  இதெல்லாம் பார்த்துப்பீங்கன்னு நினைச்சு விட்டது தப்பா போச்சு. சைட்  மைண்ட்டெனன்ஸ் சுத்தமாயில்லை. குப்பைக் கூடை மாதிரி வைச்சு இருக்கீங்க.  கிளைன்ட் கேட்கறான்னா ஏன் கேட்க மாட்டான். மானங்கெடப் பேசறான். உங்களை நம்பி தான் கொடுத்தேன்.  என் காசு கரியா போகுதுன்னு சொல்றான். அவனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.  நெக்ஸ்ட் வீக் பேமெண்ட் தாங்கன்னு கேட்க முடியுமா? எந்த மூஞ்சியை வைச்சுட்டு பேமெண்ட் தாங்கன்னுக் கேட்க முடியும் சொல்லுங்க… எனக்கு ஓவ்வொரு க்ளைன்ட்டும் முக்கியம் அவன் தான் சோறு போடறவன். அவனை எதிர்த்து ஏதாவது பண்ண முடியுமா? இல்லை அவன் இப்படி பேசறான்னு கையிலெடுத்த புராஜக்ட்டை  விட்டுட்டுப் போக தான் முடியுமா? அப்படி பண்ணா தான் நல்லா இருக்குமா?…” என்றவள் மேலும் குரலை உயர்த்தி

“உங்களால இந்த புராஜக்ட்டைப் பார்த்துக்க முடியாதுன்னா ஓபனா சொல்லிடுங்க நானே பாத்துக்குறேன்…” என்றாள்.

“இனிமே இப்படி நடக்காம பாத்துக்கிறேன் மேம்…” என உள்ளே சென்ற குரலில் கூறினான் காசி.

“ஹ்ம்ம்…” சிங்கம் போல் கர்ஜித்து விட்டு  “இன்னும் டூ ஹார்ஸ்ல மொத்த பில்டிங்கும் க்ளீன் ஆயிருக்கணும் இல்லை எல்லாரையும் தூக்கிட்டுப் புது ஆளுங்களை வேலைக்கு எடுக்க வேண்டி வரும்… ” என்றவள் அங்கிருந்து மேல் மாடியை நோக்கி நடந்தாள். பின் என்ன நினைத்தாளோத் திரும்பி காசியைப் பார்த்தவள்

“இம்மிடியட்டா  மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க எல்லா சைட் என்ஜினீயரும் வந்து இருக்கும் இன்க்ளுடிங் புராஜெக்ட் மேனேஜர் அண்ட் யூ ஆல் சோ..” என நடந்தவள் சட்டென நின்று காசியின் பின் நின்ற கலையைப் பார்த்தாள்.

நேற்று பார்த்ததும் அவளின் அழகையும், திறமையையும் ரசித்தவன்  இன்று காரிகையின் ஆளுமையைக் கண்டு வியந்தான். பெண்ணின் ஆளுமையானப் பேச்சில் அவனின் இதழ்கள் தன்னாலயே “வாவ் க்யூள்ளே ஃபைல்லே…” என முணுமுணுத்தான். கலையின் இதழ் அசைவைக் குறுகுறுவெனப் பார்த்தவள்  எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்தாள்.

பின்னாலிருந்து பார்த்தால் அவளின் இதழ்கள் புன்னகைப் பூசிக் கொண்டதைப் போல் தோன்றியது கலைக்கு. அந்த மர்ம புன்னகை இவனின் இதழ்களிலும் தவழ அதே புன்னகையோடு காசியின் அருகில் சென்றவன் “அவங்கப் போயாச்சு…” என்றான்.

“ஹ்ம்ம்…” என்றவன் பெருமூச்சுடன் கலையைப் பார்த்தான்.

அவனோ காசியின் தோள் மீது கைப்போட்டு  “என்ன மாமே… அடி பலமோ?…” எனப் புன்னகையுடன் கேட்டான்.

கலையின் புன்னகை இவனுக்கும் தொற்றிக் கொள்ள “லைட்டா…”  என்றான்.  “விடு மாமே இதெல்லாம் வாழ்க்கையில சாதாரணம்…” எனக் கூற

“நீயும் வாங்குவ பீ ரெடி…” எனக் காசி சொல்லவும்

கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தவன் “நானா? வாய்ப்பேயில்லை. என் வேலையை சரியா செஞ்சா உன் மேடம் எதுக்கு என்னை திட்டப் போறாங்க… வேணும்னா பாரு இனிமே ஐயாவோட ஆட்டமே தனி…” என்றான் இல்லாத காலரைத் தூக்கி விட்டப்படி

“அதையும் தான் பார்ப்போமே…” எனக் கூறி காசி முன்னால் நடந்தான்.

கலையோ பின்னால் திரும்பிப் பார்த்தபடி நடந்தான்.அவனுக்கு ஏதோ சரியில்லை என மனம் கூறிக் கொண்டேயிருந்தது. “மாமே நீ போயிட்டு இரு நான் வந்துடறேன்…” என்றவன் அவசரமாக ஆர்யா சென்ற இடத்தை நோக்கி நடந்தான்.

“என்னாச்சு மச்சி…” எனக் காசி கேட்டு அவனின் பின்னாலயே போக

“தெரியல, என்னமோ சரியில்லைன்னு தோணுது. நீ இங்கேயே இரு. இரண்டு பேரும் போக வேண்டாம்…” என்றவன் அவசரமாக மேல சென்றான்.

இரண்டு மாடி  ஏறியதுமே மது  பாட்டில் நடு ஹாலில் கிடந்தது. மனம் படபடவென அடித்துக் கொள்ள மெல்ல பூனை நடைப்போட்டு நடந்தவன் ஆர்யாவைத் தேடினான். அவள் எங்கே தேடியும் இல்லாமல் போக மேலும் முன்னேறி நடந்தான்.

சிலர் நடக்கும் சத்தம் கேட்டது அவனைத் தவிர வேறு யாரோ இருப்பதுப் போல் தோன்றியது. பின்னால் திரும்பிப் பார்த்தப்படி நடந்தவன் யாரோ ஒருவரின் மேல் மோதி நின்றான்.  “ஹாவுச்…” என்ற குரலில் அவன் மோதிய நபர் யாரென அறிந்துக் கொண்டவன் சட்டென அவளின் இதழ்களில் கை வைத்து “ஷ்ஷ்…” என்றான்.

“இதெல்லாம் பார்த்துக் கூடவா உனக்கு இங்க வேற யாரோ இருக்காங்கன்னு தெரியல…” எனக் கீழிருந்த பாட்டிலைக் காட்டியபடி கண்களைக் சுருக்கி அவளை முறைத்துக் கொண்டே கேட்டான்.

கலையின் பேச்சில் அவனை முறைத்தவள் கண்களால் அவனின் கையைக் காட்டி எடுக்க சொல்ல சட்டென அவளின் இதழ்களில் பதிந்திருந்தக் கையை எடுத்தான்.

அடுத்து அவள் பேசும் முன்பே “இங்க இருக்க வேண்டாம் வாங்கப் போகலாம்…” என அழைத்தான். அவளோ கலையைத் அழுத்தமாக பார்த்தப்படி நின்றாள்.

இப்போது நடமாடும் சத்தம் இவர்களை நெருங்கி இருந்தது. “இங்க யாரோ இருக்காங்க. எனக்கு இங்க இருக்கறது சரியாப் படலை. முதல்ல இங்கிருந்துப் போகலாம் வாங்க…” மெல்லிய குரலில் மீண்டும் கூற அவனை மேலும் முறைத்தாள் பெண்.

‘இவ இன்னைக்கு வர மாட்டா. இழுத்துட்டு தான் போகணும் போல…’ என நினைத்தப்படியே பின்னால் திரும்பினான்.

அங்கு வட மாநிலத்தவர்கள் நான்கு பேர்  நின்றிருந்தனர். நால்வரும் ஆர்யாவைக் கண்டுப் பயந்து ஒருவரின் பின்னால் ஒருவர் பதுங்கியப்படி நின்றனர்

‘அடப் பாவிங்களா…நீங்களா டா…’ என நினைத்தவன் ஆர்யாவை ப்பார்த்தான். அவளோ இவனின் பார்வையை கண்டுகொள்ளாமல்

“என்ன இன்னும் போதை மயக்கம் போகலயா…” என ஹிந்தியில் அதிகாரக் குரலில் கேட்டாள்.

காரிகையின் குரலில் அங்கு நின்ற அனைவரும் தலையைத் தொங்கப்போட்டுக் கொள்ள அனைவரையும் தீப் பார்வை பார்த்தாள். தமிழில் காசிக்கு விழுந்தத் திட்டை விட பல மடங்கு ஹிந்தியில் இவர்களுக்கும் பாரபட்சமின்றி விழுந்தது.

“ஏப்பா பொண்ணு மாதிரியா பேசுது பே*..” என ஏதோ சொல்ல வந்தவன் சட்டென நேற்றைய நினைவுத் தாக்க “பொண்ணா இது? ஹிந்தி பேசற தேவதை…” என மாற்றிக் கூற “த்து…” எனத் துப்பியது கலையின் மனம்.  அதற்குள் காசியும் அவ்விடம் வந்திருந்தான்.

“காசிநாதன்…இனிமே சைட்ல செட் போட்டு யாரும் வேலை செஞ்சுக் கிழிக்க வேண்டாம். எல்லாருக்கும் வெளியில ரூம் அரேஞ்ச் பண்ணுங்க…” என்றவள் நால்வரிடமும் திரும்பி

“ரிடர்ன் நான் இங்க வரும் போது எல்லாமே க்ளீனா இருக்கணும். காசிநாதன் வேற எந்த ஆளும் வேண்டாம். மொத்த பில்டிங்கும் இவங்களே க்ளீன் பண்ணட்டும்…” என நல்வரிடமும் ஆரம்பித்து காசியின் முடித்தவள் கலையை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு  நகர்ந்தாள்.

“உன்னை எதுக்கு டா இப்படி பார்த்திட்டுப் போறாங்க…” என காசி சந்தேகமா கேட்க அவனோ

அசட்டு சிரிப்பை உதிர்த்து “ஒன்னுமில்லையே…” என்றான்.

கலையை ஒரு பார்வைப் பார்த்தவன் நால்வரிடமும் வேலைகளை கூறிவிட்டு கலையுடன் நடந்தான்.  “ஏன் டா இந்த மேடம் எப்பவுமே இப்படி தானா? இல்லை கோபம் வந்தா மட்டும் தான் இப்படியா?…” ஓரக்கண்ணால் காசியைப் பார்த்தபடியேக் கேட்டான்.

“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும்…” என காசி ஆரம்பிக்க “தெரிஞ்ச வரைக்கும்…” என இடையிட்டான் கலை.

அவனை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு “எப்பவும் இப்படி தான்…” என்றான் சிறு தோள் குலுக்களோடு

“போச்சு டா…” எனக் தலையில் கைவைத்து பதற “ஏன் என்னாச்சு…” கலையை ஏறயிறங்கப் பார்த்தபடிக் கேட்டான் காசி.

“ஒன்னுமில்லை வருங்காலத்தை நினைச்சேன். கொஞ்சம் கவலைக்கிடம் தான் போல…” எனப் பாவம் போல் கூறினான்.

காசியோ கலை கூறியதை  வேறு மாதிரி எடுத்துக் கொண்டான். நேற்றைய பேச்சு, இன்றைய பேச்சு என அனைத்தும் சேர்ந்து காசிக்கு எல்லை கடந்த கோபத்தை கொடுக்க அது சுடும் வார்த்தைகளாக வெளிவந்தது…

“எக்ஸாக்ட்லி,உன்னை மாதிரி ஒரு  பூமர்  அந்த பொண்ணுக்கு வாழ்க்கை துணையாக் கிடைச்சா  அவளோட வாழ்க்கைக் கவலைக்கிடம் தான்…” என்றான் கோபமாக.

சட்டென திரும்பிக் காசியைப் பார்த்தான் கலை. அவனின் பார்த்தப் பார்வையின் அர்த்தம் துளிக் கூட காசிக்கு புரியவில்லை..

“என்னப் பாக்குற உண்மையைத் தானே சொல்றேன். உன்னை மாதிரி ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிட்டா  அந்த பொண்ணு என்ன பண்ணாலும் பெண்ணியம், பெரியாரிசம்  பேசறயான்னு அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காம பண்ணிடுவீங்க. ஒரு பொண்ணு நீ வெளியப் போகக் கூடாது. ஒரு பொண்ணு நீ இப்படி எல்லாம் செய்யலாமா? ஒரு  பொண்ணு நீ எப்படி ஆம்பளையை எதிர்த்துப் பேசலாம்? இப்படி ஒவ்வொண்ணுக்கும் பேசி பேசியே அந்த பொண்ணை நிமிரக் கூட விடாமப் பண்ணிடுவீங்க. சரியான ஆணாதிக்க கும்பல் டா நீயும், உங்கப்பாவும்.

உங்களை மாதிரி ஒரு கேரக்டர் இந்த மாதிரி நிமிர்வான பொண்ணுக்கு வாழ்க்கைத் துணையாக் கிடைச்சா அவ வாழ்க்கை நரகம் தான்…” என்றவன் தன்னையேத் தீர்க்கமாகப் பார்த்தபடி நின்ற கலையிடம்

“தெரியாம தான் கேட்கறேன் நீங்க எல்லாம் என்ன நினைக்கிறீங்க? பொண்ணுங்க எப்பவும் உங்க  வாலைப் பிடிச்சுட்டேச் சுத்திட்டு இருக்கணும் நினைக்கிறீங்களா?…” எனக் கலையை கோபமாகப் பார்த்தபடிக் கேட்டான் காசிநாதன்.

கைகட்டி அவனையேத் அழுத்தமாக பார்த்தவன்  “சரி பேசி முடிச்சிட்டியா போகலாமா?…” எனக் கேட்க  இன்னும் கோபம்  எகிறியது காசிக்கு…

“எனக்கு தெரியும் டா உன்னால  நான் கேட்ட எதுக்கும் பதில் சொல்ல முடியாதுன்னு…”  எனக் காசி  கோபமாகக் கத்த  அப்படியா என்பதைப் போல்  பார்த்தவன்   “என்னை உனக்கு எத்தனை நாளாத் தெரியும்…” எனக் கேட்டான்.

அதற்கு காசி பதில் கூறும் முன்பே “காலேஜ் படிக்கறதுல இருந்தே என்னை உனக்கு நல்லா தெரியும் அப்படி தானே. இதுநாள் வரைக்கும் நீ சொல்றதுப் போல ஏதாவது ஒரு பொண்ணுகிட்ட நடந்து இருக்கானா? இல்லை  பேசி இருக்கானா?…” எனக் கேட்டான் அதற்கு காசி தன்னாலேயே  இல்லையெனத் தலையாட்டினான்.

“சரி அதை விடு, இப்ப ஒரு பொண்ணு தானே இங்க எம்.டி? எனக்கு ஒரு பொண்ணு எம்.டி.யா இருக்கா எனக்கு இந்த வேலை வேண்டான்னு சொல்லிட்டு போனேனா? இல்லை அவக்கிட்ட என்னோட ஆணுங்கற திமிரைக் காட்டினேனா? இல்லை ஒரு பொம்பளை இந்தளவுக்கு வளர்ந்து இருக்கா நான் அவளை இப்படியே வளர விடக் கூடாது ஏதாவது பண்ணி இவளை முடக்கி போடணும் சொல்லிட்டு இருந்தானா…” என்றவன் சிறு அமைதிக்கு பிறகு  “நேத்து அவங்களைப் பத்தி உன்கிட்ட சொன்னது கூட எனக்கு மனசுல பட்டதை தான் சொன்னேன். மத்தபடி வேற எந்த எண்ணத்துலயும் சொல்லல…” எனத்  தீவிரக் குரலில்  கூறினான்.

“உனக்கும் இன்னும் புரியல கலை.இவங்க எல்லாம் உன் வீட்டு பொண்ணுங்கில்லை. அவங்க கிட்ட இந்த மாதிரி ஆம்பளைத் திமிரைக் காட்டினா அறுத்து விட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. நான் அதைப் பத்தி பேசல.

உன் வீட்டுல நீயும்,உன் அப்பாவும் பண்ணிட்டு இருக்கீங்க பாரு அதுதான் ஆணாதிக்கம்…ஒரு ஆம்பளை இல்லாம பொம்பளையால எதுவுமே முடியாதுன்னு நிருபீக்க உங்கப்பா உங்களை விட்டுப் போனாரு.  இப்ப நீயும் அதே ரீசன் சொல்லி தான் உங்கப்பாவை உன் வீட்டுக்கு அனுப்பியிருக்க… ஏன் இத்தனை வருஷமா தனியா உங்களைப் பார்த்துகிட்டது உங்கம்மா தானே.. அவங்கனால அவங்க பெத்த பிள்ளையை பார்த்துக்க முடியாதா?  என்னவோ ஆம்பளைத் துணை இல்லாம எதுவும் ஒரு பொம்பளையால பண்ண முடியாதுங்கற மாதிரி நேத்து பேசன. இதுல நான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணா கூலைக் கும்பிடுப் போடறேன்னு சொல்ற. ஏன் பொண்ணுங்களுக்கு சப்போர்ட் பண்ற எல்லாருமே அவங்க…” என அடுத்து கூறும் முன்பே காசியின் முன் கரத்தை நீட்டி பேச வேண்டாம் என்பதைப் போல் தடுத்தவன் அடுத்த நிமிடம் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!