Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மகன்றில் ஒத்தாள் – 8

*8*

எது நடந்துவிடக் கூடாது என்று தவித்தானோ அது நடந்துவிட, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் மணிகண்டனுக்கு. இதை யாரிடம் பகிர்ந்து தீர்வு காண்பது என்றும் புரியவில்லை அவனுக்கு. அவளைப் போலன்றி இவனுக்கு நண்பர்கள் சிலர் இருக்க அவர்களிடம் நடந்ததை விலக்கி இதை எப்படி சமாளிப்பது என்று யோசனை கேட்கலாமா என்றும் ஒருபுறம் சிந்தனை ஓட, அவளை பற்றி அவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற சஞ்சலம் வேறு.

‘அந்த துணை ஏன் என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட நீங்களா இருக்க கூடாது MK? உங்களை விட என்னை யாரு பெட்டரா ஹேண்டில் பண்ண முடியும்? யோசிச்சு சொல்லுங்க.’ என்று அவள் சொல்லிச் சென்றது இக்கணம் வரை அவன் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது கூடவே சுலோவின் புலம்பலும்தான்.

“வேலையை விட்டுட்டு வந்து விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தே இருந்தா கூரையில இருந்து பணம் பிச்சிகிட்டா கொட்டப் போகுது? அடுத்த வேலையை பார்க்க போகாம முட்டை போட்ட கோழியாட்டம் வீட்டுக்குள்ள அடைகாத்துட்டு இருக்க? எவ்வளவு நாளைக்கு ரவி காசுல ஓசி சோறு சாப்பிடலாம்னு இருக்க?” 



Advertisement

ஒரு வாரமாய் எங்கும் செல்லாது வீட்டிலே அடைபட்டு யோசனையில் மூழ்கி இருப்பவனை அப்படியே விட்டால் அவர் அவனை பெற்றவர் இல்லையே. வலிக்கட்டும் என்று நினைத்து சுலோ கொட்ட, வாங்கி வாங்கி பழித்து வடுவாய் மாறிய பின் எதுவும் வலிக்கவில்லை அவனுக்கு. 

“இங்க ஒருத்தி கத்திட்டு இருக்கேன் நீ எனக்கென்னனு படுத்திருக்க?” என்று சுலோ அவனை உசுப்ப, எதற்கும் எழவில்லை அவன். பொறுத்து பொறுத்து பார்த்தவர் இரவு ரவி வேலை முடித்து வந்ததும் அவனிடம் ஆடித்தீர்த்துவிட்டார்.

“இவன் என்ன முடிவுல இருக்கான்னு நீயே கேளு.” என்று ரவியை தூண்ட, அவன் கேள்வியாய் தம்பியை பார்த்தான்.

Advertisement

மணியும் பதிலுக்கு பார்த்தானே தவிர வேறேதும் சொல்லாமல் இரவு உணவை தட்டில் எடுத்து வந்து உண்டான்.

Advertisement

“அந்த வேலையை விட்ட வரைக்கும் நல்லதுதான். வேற ஏதாவது பாப்போம்.” என்றான் அண்ணன் தம்பிக்கு ஆதரவாய்.

“நீயும் அவனை கண்டுக்காம கண்டிக்காம ஒவ்வொரு முறையும் விடுறதாலதான் இவன் வேலையை விட்டுட்டு வர்றதையே ஒரு வேலையா வச்சிருக்கான்.” என்ற புலம்பல் அன்னையிடம்.

“கண்டிச்சா மட்டும் கேட்டுறவா போறான்? ஏதாவது காரணம் சொல்லுவான்.” என்று ரவி மறுத்தான் தம்பியை புரிந்தவனாய்.

Advertisement

“அப்போ இவன் காலம் பூரா இப்படியே தண்டச்சோறு சாப்பிடப் போறானா? இந்த வீட்டை விட்டு வெளில போனா இவனைக் கேட்க நாதி கிடையாது.” என்று சுலோ குரலை உயர்த்த, உணவு தொண்டையில் சிக்கிக்கொண்டது மணிகண்டனுக்கு. 

ரவி எதுவும் சொல்லாது அறைக்குச் சென்றுவிட, மணிகண்டன் உணவை அரக்க பறக்க வாயில் திணித்து மென்றானோ விழுங்கினானோ என்று அவனுக்கே தெரியாவண்ணம் தட்டில் இருந்தவற்றை காலி செய்து தட்டை கழுவி அடுக்கி வீட்டை விட்டு கிளம்பினான்.

பாதங்கள் பயணப்பாதை அறியாமல் அடிகளை வேகமாய் எடுத்து வைக்க உளம் முழுதும் தவிப்பும் குழப்பமும். வேலை இல்லாமல் அன்னையிடம் திட்டு வாங்கி அவ்வப்போது கோபம் கொண்டு வீட்டை வெறுப்பது பின் வீட்டிற்கு வருவது என்பதெல்லாம் இவனுக்கு சாதாரண நிகழ்வு தான். 

ஆனால் யாழினி! அவளிடம் பேசியது போல் இதுவரை எந்த பெண்ணிடமும் அவ்வளவு விளாவாரியாக பேசியதில்லை. எந்த பெண்ணும் அவனை மனதளவில் தாக்கியதுமில்லை. இது மாதிரியான சூழ்நிலையை இதுவரை சந்திக்காததால் முன்அனுபவமும் இல்லை. எதுவும் செய்யவும் விருப்பமில்லை. புது வேலை தேடும் எண்ணமும் இன்னும் வரவில்லை. 

வெளியே சென்றால் அவள் கண்ணில் சிக்கிவிடுவோம் என்று பயந்தே வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கவில்லை. இன்று சுலோவின் பேச்சு அவனை காயப்படுத்த, வெளியே வந்துவிட்டான். செல்ல நாதி இருக்கிறதுதான், நண்பர்கள் சிலர் இவனுக்கு இன்னும் உதவ தயாராய் இருக்கிறார்கள் ஆனால் இவனுக்கு எப்போதும் அவர்களிடம் கேட்டு பழக்கமில்லை.

கால் அதன் போக்கில் செல்ல அவனது எண்ணவோட்டங்களை கத்தரிக்கும் விதமாய் அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தால் யாழினியே… அன்று அவள் கால் செய்யவும் நம்பரை உடனே பதிந்து கொண்டான். அவள் விருப்பம் சொன்ன பிறகு அவள் அலைபேசி எண்ணை முடக்கலாம் என்றுதான் பார்த்தான் ஆனால் அப்படி செய்தால் இரண்டொரு நாளில் வீட்டு வாசலில் வந்து நின்றாலும் நின்றுவிடுவாள் என்ற அச்சம் அதை செய்யவிடவில்லை. 

அதிசயிக்கும் விதமாய் அவளும் விருப்பம் வெளிப்படுத்திய பிறகு இந்த ஒரு வாரமாய் அவனை தொடர்பு கொள்ளவில்லை. இவன் யோசிக்கட்டும் என்று நேரம் கொடுத்தாலோ என்னவனோ? இன்று மட்டும் எதற்கு அழைப்பு? எடுக்காமல் இருந்தால் வீட்டுக்கு சென்றுவிடுவாளே என்று பயந்து அவள் அழைப்பை ஏற்றான்.

“ஒரு வாரம் போதலையா யோசிக்க?” என்ற கேள்விதான் முந்திவந்து விழுந்தது அவளிடமிருந்து.

என்ன சொல்வான் இவன்? அவளை வேண்டாம் என்று இவன் புறந்தள்ள காரணம் ஏதுமில்லாமல் இருக்க, இவனை வேண்டாம் என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் அவள்முன் இருக்கும் போது இப்படி மறவாமல் மனதை கொள்ளையடிக்க காத்திருக்கிறாளே என்ற ஆதங்கம் வந்தது மணிகண்டனுக்கு.

“என்ன பேச்சையே காணோம்? நீங்க யோசிக்க எவ்வளவு நாள் வேணும்னாலும் டைம் கொடுக்க நான் ரெடி ஆனா எங்க அப்பா நிச்சயத்துக்கு நாள் குறிச்சிட்டாரு. சீக்கிரம் பதில் சொல்லுங்க MK, அப்போதான் வீட்ல பேச முடியும்.” என்றாள் மீண்டும்.

அனைத்துக்கும் அவசரப்படும் பெண் எனக்கு யோசிக்க தாராளமாய் அவகாசம் கொடுக்கிறாளாமே என்று அவன் மனம் முன்னும் பின்னும் அவளது பேச்சுக்கு பதிலடி கொடுத்த வண்ணம் இருந்தது. ஆனால் உஷாராய் அவன் நா தப்பியும் வார்த்தையை விடவில்லை.

“பேசமாடீங்களா?”

“எவ்வளவு நேரம் அமைதியா இருப்பீங்க MK?”

“நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு நீங்க வெளில கூட போகாம இப்படி வீட்டுக்குள்ள அடஞ்சி கிடந்து உங்க அம்மாகிட்ட இப்படி திட்டு வாங்கிட்டு இருக்கீங்க? இதெல்லாம் தேவையா?”

ம்கூம்… அவனின் மூச்சுக்காற்று கூட அவளுக்கு கேட்டுவிடக்கூடாது என்பதில் திண்ணமாய் இருந்தவன் மூச்சை பிடித்து நின்றான்.

“மூச்சு விடுங்க MK. எனக்கு மூச்சு முட்டுது.” என்று அவள் பேசிக்கொண்டே செல்ல, இவன் சினம் அவளது கடைசி பேச்சில் மெல்ல ஏறியது.

“ஒரு நாலு நாள் பேசி இருப்போமா அதுக்கே மூச்சு முட்டுதா யாழினி உனக்கு?” என்று இவன் கசப்பை கக்க,

“நாள் நாலு பேசுனவளை நினைச்சி நீ ஏன் ஒரு வாரமா அடைஞ்சி கிடக்க? பிடிக்கலைன்னா விருப்பமில்லை செட்டாகாதுனு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான? எதுக்கு இப்படி வேலைக்கு போகாம வீட்டுல திட்டு வாங்கிட்டு அடைஞ்சி கிடைக்கணும்?” எதிர்வாதம் செய்தாள் பெண்.

“எனக்கு வேலை பிடிக்கலை விட்டேன். புது வேலை இன்னும் கிடைக்கல அதான் வீட்டுல இருக்கேன். உனக்கு பயந்து எல்லாம் ஒன்னும் இல்லை.” என்று மணிகண்டனும் குரல் உயர்த்தினான்.

“அப்போ விருப்பமில்லைன்னு சொல்லு நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்று யாழினி வலை வீச, பிடிவலை என்று தெரியாமல் தலை கொடுத்தான் மணிகண்டன்.

“விருப்பமில்லை.” என்று அலைபேசியில் இவன் சொல்லிய கணம்,

“இப்போ சொல்லு MK. என்னை பிடிக்கலைனு இப்போ சொல்லு.” என்று திடுமென அவன் முன் வந்து நின்று அவன் விழி நோக்கினாள் யாழினி. 

அதிர்வில் மணியின் விழிமணிகள் விரிந்து வாய் லேசாய் பிளந்து பேயடித்தது போல் மாறியது அவன் முகம்.

“என்னை பிடிக்கலைனு இப்போ சொல்லு.” என்றாள் மீண்டும் பிடிவாதமாய்.

எப்படி சொல்லுவான் அவளை பிடிக்கவில்லையென்று? அவளை பிடிக்கத் துவங்கியதாலே வேலையை விட்டான். அவளை சந்திக்கும் சூழ்நிலைகளை அறவே தவிர்த்தான். முகத்திற்கு நேராய் சொல்லவும் முடியாது மறைக்கவும் முடியாது என்ற எண்ணமே அவனை ஒரு வாரமாய் வீட்டுக்குள் அடைந்து கிடக்க வைக்க, இப்போது சொல் சொல் என்றால் எப்படி சொல்லுவான்?

“அவ்ளோ பேசுவீங்க இப்போ என்ன பேச்சையே காணோம்?”

“வேணும்னா பஸ் ஸ்டாப்புக்கு போவோமா? அங்க போனாலாவது பேச்சு வருதான்னு பாப்போம்.” என்று வம்பு செய்தாள் யாழினி.

அதிர்வில் என்ன பேச, எப்படி அவளை தவிர்க்க என்ற சிந்தையெல்லாம் ஒரு ஓரமாய் பாயிட்டு படுத்திருக்க, அவளது தொடர் வம்பும் உசுப்பலும் அவனை எழுப்பிவிட்டது. 

“தேவையில்லாம பேசிட்டு இருக்க நீ. எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு நிச்சயத்துக்கு தயாராகுது. கல்யாண தேதி குறிச்சதும் சொல்லு வரேன். அவ்ளோதான் நமக்குள்ள.” என்று விரலால் அவளையும் அவனையும் சுட்டிக்காட்டி சொல்ல, மசியவில்லை அவள்.

“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே MK.”

“அதான் ஒன்னும் இல்லைனு சொல்லிட்டேனே அப்புறம் என்னதான் வேணும் உனக்கு?” என்று சலித்து தலைசிலுப்பினான் மணி. 

“பிடிச்சிருக்கா இல்லையான்னு சொன்னாதான் நமக்குள்ள ஒன்னு இருக்கா இல்லை ரெண்டு இருக்கானு முடிவே பண்ணமுடியும். அதை சொல்லாம ஒன்னும் இல்லைனா என்ன அர்த்தம்?” என்று உடும்புப்பிடியாய் தனக்கான பதில் வேண்டி மறித்து நின்றாள்.

“நடுரோட்டுல நின்னு என்ன பேச்சு இதெல்லாம்? உங்க வீட்டுல சொல்றது சரிதான், உனக்கு விவரம் பத்தலை யாழினி. உனக்கு ஒன்னும் தெரியல.” என்று அவன் அழுத்திச் சொல்ல, யாழி இரண்டடி பின்வைத்தாள்.

“இப்போ நீங்களும் எனக்கு ஒன்னும் தெரியலைனு முடிவு பண்ணிட்டீங்கல்ல? எனக்கு ஒரு பதில் சொல்லுங்க, இப்போ நீங்க எல்லாம் சொல்ற மாதிரி பிடிக்காத வாழ்க்கையை ஏத்துக்கிட்டு தினம் தினம் ஏமாற்றத்தோட நான் வாழ்ந்தா உங்களுக்கெல்லாம் சந்தோஷமா? என் நிம்மதியை கொன்னுட்டு நீங்க எல்லாம் நிம்மதியா இருந்துடுவீங்களா?” இவனும் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்றுவிட, உணர்ச்சி மிகுதியில் வார்த்தைகளை ஏவுகணைகளாய் வீசினாள்.

“எனக்கும் பதில் வேணும் யாழினி… உங்க அப்பா பார்த்திருக்கிற அந்த வாழ்க்கையை உதறி தள்ளிட்டு என்கூட இருந்தா நிம்மதியா இருப்பேனு எப்படி முடிவு பண்ண நீ? என்னை பத்தி, என் குடும்பத்தை பத்தி என்ன தெரியும் உனக்கு? எந்த தைரியத்துல நீ என்கிட்ட இப்படியெல்லாம் வந்து பேசிட்டு இருக்க?”

“ஒருத்தவங்களை பார்த்து பேசி பழகுனா அவங்க எப்படினு புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாளில்லை.”

“நான் தண்ணியடிப்பேன் தம்மடிப்பேன். புரியுதா உனக்கு?” வார்த்தைகளில் மட்டுமல்ல விழிகளிலும் ஒரு அழுத்தம் வந்து ஒட்டியது மணிகண்டனுக்கு.

அந்த அழுத்தம் அவளையும் தாக்க, புயலென போக்கு காட்டியவள் பம்மினாள், “தண்ணி அடிப்பீங்களா?”

“ஆமாம். அடிப்பேன். தண்ணியடிச்சி மட்டையாகி ரோட்டுல கூட விழுந்து கிடப்பேன்.” என்றவன் ஒரு நொடி எச்சில் கூட்டி விழுங்கி கண்மூடி திறந்து மூச்சை சரி செய்தபின் சீரான குரலில், “ஒருத்தவங்க நல்லா பேசுறதால அவங்க நல்ல பழக்கங்களோட நல்லவங்களா இருந்துட மாட்டாங்க புரிஞ்சிக்க…” என்று அங்கிருந்து நகர்ந்தான். அவன் சொல்லிச் சென்றதில் அவன் கிளம்பியதை கூட கவனியாமல் அதிர்ந்து நின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!