Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viswakarma

Viswakarma 10 1

 

10

 

சென்னை வடபழனி முருகன் கோவில் அன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் அதிகமிருந்தது கோவிலில். மனிதத்தலைகள் மட்டுமே தெரிந்தது.



Advertisement

 

எந்த எண் தூணின் அருகில் யாருக்கு திருமணம் நடக்கிறது என்பதே தெரியவில்லை. உறவினர்கள் தேடி தேடி சென்றுக் கொண்டிருந்தார்கள்.

 

Advertisement

அந்த தூணின் அருகே மட்டும் கூட்டம் அதிகமிருக்கவில்லை. விஸ்வா, காஞ்சனா, பாட்டி, அமுதன், விஸ்வாவின் தங்கை ரேகா மற்றும் அமுதனின் இரு நண்பர்கள் அவ்வளவு தான் கூட்டமே.

Advertisement

 

விஸ்வா எங்கோ வெறித்துக் கொண்டு மணவறையில் அமர்ந்திருக்க காஞ்சனா அவனருகில் வந்து அமர்ந்தாள்.

 

Advertisement

அவளும் ஒன்றும் மகிழ்வோடு வந்து அமர்ந்திருக்கவில்லை. ஆனாலும் இருவர் மனதிலுமே ஏதோவொரு அமைதி ஏற்படத்தான் செய்தது.

 

அய்யர் சொல்லும் மந்திரங்களை ஏதோ மந்திரத்துக்குட்டப்பட்டவன்  போலவே செய்தான். இதோ அவன் கையில் திருமாங்கல்யம் கொடுக்கப்பட்டிருந்தது.

 

அதை அருகில் இருந்தவளின் கழுத்தில் கட்டாது அவளை திரும்பிப் பார்த்தான், பார்த்துக் கொண்டேயிருந்தான்.

அந்த கயிற்றை கொண்டே அவள் கழுத்தை இறுக்கிவிட எண்ணியிருப்பானோ என்னவோ அவன் முகத்தில் அப்படியொரு கனல் வீசியது.

 

அதையெல்லாம் ஊதித் தள்ளும் காற்றாய் இருந்தாள் அவள் இப்போது. நிர்மலமாய் அவன் பார்வையை சலிக்காமல் எதிர்க்கொண்டாள் அவள்.

 

அமுதன் தான் அவர்களை பார்த்து இப்போது குரல் கொடுத்தான். “மாமா என்ன பார்க்கறீங்க கட்டுங்க…” என்றான்.

 

அவனை துச்சமாய் பார்த்தவன் அருகிருந்தவளை பார்த்தான். எல்லாம் உன்னால் தான் என்று, அவனின் அந்த பார்வையில் ரேகா தலை குனிந்தாள்.

அதன்பின் நொடியும் தாமதிக்காது மாங்கல்யத்தை காஞ்சனாவின் கழுத்தில் கட்டி முடிந்திருந்தான்.

 

“கிளம்பு போகலாம்…” என்று அவளைப் பார்த்து சொல்லி எழுந்து நின்றிருந்தான் இப்போது.

 

“கோவிலுக்கு போய் சாமி தரிசனம் பண்ணிட்டு போகலாம்” என்றாள் அவள்.

 

பல்லைக்கடித்து நின்றவன் எதுவும் பேசவில்லை. அவர்களுடனே கோவிலுக்கு சென்று கடவுளை தொழுதான்.

 

‘ஏன் முருகா இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு. நான் என்ன பாவம் பண்ணேன். ஒரு அமைதியான வாழ்க்கையை எனக்கு நீ கொடுத்திருக்க கூடாதா… என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு புரியலை முருகா…’

 

‘எல்லாத்துக்கு ஒரு நல்ல வழி காட்டுப்பா…’ என்று அவன் வேண்டி முடிக்கும் தருவாயில் மணி அடிக்க மனம் கொஞ்சம் சமன்பட்டது அவனுக்கு.

 

அங்கிருந்து வெளியில் வந்தனர். காரின் கதவை திறந்து ரேகாவை முறைத்துக் கொண்டே “உள்ளே போ…” என்றான்.

 

“அண்…” என்று அவள் ஆரம்பிக்க இதுவரை அவளிடம் அதிகம் பேசிக்கூடயிராதவன் அவளை ஓங்கி அடித்திருந்தான் இப்போது.

“மரியாதையா உள்ள போ”

 

“என் மேல இருக்க கோவத்தை எதுக்கு அவ மேல காட்டறீங்க??” என்று எகிறினான் அமுதன்.

 

“ஆமாடா உன்னை அடிக்க முடியலை அதான் அவளை அடிச்சேன், இப்போ என்ன??” என்றான்.

 

“உனக்கு வேற தனியா சொல்லணுமா, உள்ள போ…” என்று இப்போது காஞ்சனாவை பார்த்து சொன்னான்.

 

அவளோ உள்ளே செல்லாமல் தன் பாட்டியை பார்த்தாள். அவளின் பார்வை சென்ற திக்கை பார்த்தவன் அவரை நோக்கி வந்தான்.

 

“நீங்க பெரியவங்க தானே… உங்க பேரன் பேத்திகளுக்கு நல்லது சொல்லிக் கொடுத்து நீங்க ஏன் வளர்க்கலை…” என்று சொல்ல “விஷ்வா…” “மாமா…” என்ற குரல் அடுத்தடுத்து கேட்டது.

 

பாட்டிக்கு கண்ணீர் அருவியாய் பொழிந்தது. என்ன நினைத்தானோ “என்னை மன்னிச்சிடுங்க பாட்டி… நீங்க எனக்கும் பாட்டி மாதிரி தான், உங்களை இப்படி பேசியிருக்கக் கூடாது தான்…”

 

“ஆனாலும் மனசு கேட்காம பேசிட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க…” என்று அவர் காலில் விழுந்தான்.

 

“எழுந்திருய்யா… எழுந்திரு…. நீ சொன்னதுல எந்த தப்பும் இல்லை, ஆனா ஒண்ணு சொல்றேன். அதை நீ எப்பவும் மனசுல வைச்சுக்கோ…”

 

“ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க, அவங்களை நான் நல்லாத்தான் வளர்ந்திருக்கேன். அதை நீ ஒரு நாள் புரிஞ்சுக்குவ, அவங்க கெட்டவங்க இல்லை…” என்று யாருக்கும் கேட்காது மெதுவான குரலில் சொன்னவர் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

 

“நீ விரும்பின வாழ்க்கையை உன் தம்பி அமைச்சு கொடுத்திட்டான். அதை இனியாச்சும் நல்லபடியா வாழப்பாரு… எனக்கு நீ நிம்மதியான சாவை கொடுக்கணும்ன்னு நினைச்சா அதை செய்…” என்றார் அவர்.

 

“பாட்டி கோவில்ல வைச்சு என்ன பேச்சு இது…” என்று கண்கள் கலங்க சொன்னவள் “இது என் வாழ்க்கை பாட்டி, அதை நான் நல்லபடியா மாத்திக்குவேன்… நீங்க என்னைப்பத்தி கவலைப்பட வேணாம்…”

 

“உங்க பேரன் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கப் போய் தானே நீங்க எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டீங்க… அதே நம்பிக்கை அப்படியே இருக்கட்டும்…” என்றுவிட்டு தன் தம்பியின் அருகில் வந்தாள்.

 

அவனை கன்னத்தில் ஒரு அறைவிட்டாள். அவன் கன்னத்தை பிடித்துக் கொண்டாலும் அவளை தடுக்கவில்லை.

 

“த்தூ… உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கலை அமுதா… இப்படியொரு காரியத்தை பண்ணுவேன்னு நான் கனவிலையும் நினைக்கலை அமுதா…”

 

“ஒரு பொண்ணோட வாழ்க்கைன்னா உனக்கு அவ்வளவு லேசா போச்சா… நான் என் வாழ்க்கையை தான் பணயம் வைச்சேன். ஆனா நீ அந்த பொண்ணு வாழ்க்கையை பணயம் வைச்சிருக்கே”

 

“எனக்கு அதை பத்தி எல்லாம் கவலையில்லை. உன் வாழ்க்கை எனக்கு முக்கியம், நீ கேட்டதை செய்யணும் அதுக்கு என்ன வேணும்னாலும் நான் செய்வேன்…” என்றான் அமுதன்.

 

“ச்சீய் இதைச் சொல்ல உனக்கு அசிங்கமாயில்லை… இனிமே நீ என் முகத்திலேயே முழிக்காத அமுதா…” என்றவள் விஸ்வாவின் காரில் ஏறினாள்.

 

விஸ்வா இப்போது அமுதன் அருகில் வந்தான். “நான் உங்க அக்கா பண்ணதை கூட மன்னிச்சிடுவேன்டா. ஆனா நீ பண்ணதை எப்பவும் மன்னிக்கவே மாட்டேன்டா, இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப…”

 

“நான் அனுபவிச்சா கூடவே உங்க தங்கச்சியும் தான் மாமா கஷ்டப்படுவா…” என்றவனை கொன்றுவிடும் ஆத்திரம் தான் வந்தது விஸ்வாவிற்கு.

 

எதுவும் சொல்லாமல் அவன் காரில் ஏறப்போக “மாமா எங்க கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சா நல்லது. இல்லைன்னா நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை” என்று அவன் மேலும் பேச அமுதன் அருகே வந்தவன் கொத்தாய் அவன் சட்டைக் காலரை பற்றினான்.

 

பின் “ச்சே…” என்று சொல்லிவிட்டு அவனும் காரில் ஏற கார் கிளம்பியது.

 

ஏர்போர்ட் வரும்வரை காரில் அமைதி மட்டுமே. ரேகாவும் காஞ்சனாவும் அருகருகே அமர்ந்திருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

 

ஏர்போர்ட்டுக்குள் நுழைந்து டிக்கெட் வாங்கிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவ விஸ்வா தலையை பின்னே சாய்த்து கண்ணை மூடிக்கொண்டான்.

 

காஞ்சனாவும் ரேகாவும் அவனுக்கு இருபுறமும் வந்து அமர்ந்துக் கொண்டனர்.

 

விஸ்வா இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சென்ற வாரம் அவனுக்கு என்றும் இல்லா அதிசயமாய் ரேகாவிடமிருந்து அழைப்பு.

 

சென்னையில் உள்ள பேஷன் டிசைனிங் கல்லூரியில் தான் படிப்பேன் என்று அடம்பிடித்து வந்து சேர்ந்திருந்தாள் அவள்.

 

இது அவளின் கடைசி வருடம். இன்னும் சில தினங்களில் அவளுக்கு தேர்வு முடிந்து விடும். அப்படியிருக்க அவள் அவனுக்கு அழைத்திருக்கிறாள்.

 

அவனிடம் எப்போதுமே ஒரு ஒதுக்கம் காட்டும் அவள், அவனாய் வலிய சென்று பேசினாலும் அதை கண்டுக்கொள்ளாமல் செல்லும் அவள் இப்போது அவனை எதற்கு அழைத்திருப்பாள் என்ற யோசனை முடிச்சுவிழ அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

 

“அண்ணா…” என்றாள்.

 

அவள் ஆசையாய் அண்ணாவென்று அழைக்க மாட்டாளா என்று அவன் ஏங்கிய காலம் உண்டு. சிறுவயதில் அப்படி அழைத்தவள் தான் சில வருடங்களாய் தான் காணாமல் போயிருந்தது.

இப்போது தான் அழைக்கிறாள் அப்படி. “சொல்லும்மா ரேகா…” என்றான் அவன்.

 

“நீ உடனே சென்னை வர்றியா அண்ணா…” என்றாள் பதட்டமான குரலில்.

 

“என்னாச்சு ரேகா எதுவும் பிரச்சனையா??” என்றேன்.

 

“ஆமாண்ணா உன்கிட்ட நேர்ல தான் சொல்ல முடியும். வீட்டில யாருக்கும் சொல்லாதேண்ணா ப்ளீஸ், உடனே கிளம்பி வாயேன்…” என்றாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!