Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எண்ணமெல்லாம் உன் வண்ணமே

வண்ணம் – 5.1

கார்மேகங்கள் வானத்தை சூழ்ந்து தூரத்தில் மட்டுமே மஞ்சள் பூசும் வானம் தெரிந்தது. மாலை நேரம் அவ்விடம் சிறுக சிறுக கூட்டத்தை தன் பக்கம் ஈர்த்திருந்தது.

தங்களை கடந்து செல்லும் எந்த ஒரு மனிதனின் நடமாட்டமும் இருவருக்கும் தெரியவில்லை. ரகுவின் எண்ணங்களில் பல சிந்தனைகள். அந்த சிந்தனை ஒவ்வொன்றிலும் வண்ண வண்ணமாய் பறந்துகொண்டிருந்தது திவ்யா மட்டும் தான்.

நட்பாய் பழகி, விருப்பம் என்னும் பலகையை தூக்கி நிற்கும் விஜி மீதும் கோவ வார்த்தைகள் வைத்து பேசவோ, கண்டித்து பேசவோ எண்ணம் வரவில்லை.

சிலையாய் தன்னை பார்ப்பவன் சிந்தனை இங்கில்லை என்று மட்டும் அவளுக்கு தெரிந்தது. ஏதோதோ காலத்திற்கு நினைவலைகளாலே சென்று வந்தவன் நெற்றி பொட்டில் அடித்து இழுத்து வந்தது இன்று தன்னை பார்த்தவாறே சென்ற திவ்யாவின் முகம்.



Advertisement

தலை சிலுப்பி சிகையை கோதியவன் உடனே எழுந்து நிற்க அவன் கை பிடித்து, “ரகு” என்றாள் தயக்கமாக விஜி.

அப்பொழுது தான் அவளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வந்தது. தன்னை ஆசுவாசப்படுத்தி மீண்டும் அமர்ந்தான்.

அவளை திரும்பி அமர்ந்தவன் பேசாது, கைகளை பார்த்தே பார்வையை வைத்தவன் பேசுவான் என விஜயலக்ஷ்மி காத்திருக்க, நீண்ட நேரம் எடுத்துக்கொண்டவன் முகத்தை கைகள் கொண்டு தேய்த்து,

Advertisement

“இந்த பேச்ச இனிமேல் எடுக்காத விஜி. உன் மேல ஒரு நல்ல எண்ணம் வச்சிருக்கேன்” என்றான் உணர்வுகளை அடக்கி.

Advertisement

“நான் தப்பா எதுவும் கேக்கலயே ரகு. என்னைக்கு இருந்தாலும் ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்க போற அந்த நாள் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ எனக்கு கவலை இல்ல. வெயிட் பண்ணுவேன், எத்தனை வருஷம் ஆனாலும் காத்திருப்பேன்”

“என் மேல இருக்க அன்பா இல்ல, வேற எதுவும்…”

“லவ்-னு ஆணித்தரமா சொல்ல முடியாது ரகு. ஆனா எனக்கு இந்த ரகு புடிச்சிருக்கு”

Advertisement

அவளையே உன்னிப்பாக பார்த்தவன், “என்ன பாத்தா மரத்துக்கு மரம் ஈஸியா தாவுற குரங்குனு நினைச்சிட்டியா விஜி” ரகுவின் பேச்சில் இருந்த உஷ்ணத்தை கண்டவள் கைகள் நடுங்க துவங்கியது.

“இல்லடா நான் என்னோட விருப்பத்தை சொல்றேன்…”

“என்ன பேசுனாலும் யோசிச்சு பேசணும்”

“யோசிக்காம பேசுறேன்னு நினைக்கிறியா ரகு? திவ்யாவை நீ டிவோர்ஸ் பண்ண போற. இன்னும் என்ன யோசனை?”

“நம்ம கம்போர்ட் ஸ்ளோன்ல இருக்கணும்னு ஆசைப்பட்டு அடுத்தவங்களை அன்கம்ஃபர்ட்டப்பிலா பீல் பண்ண வைக்க கூடாது விஜி”

“நான் இருக்குறது உனக்கு அசௌகர்யமா இருக்காடா?”

“அப்டி இருந்தா எங்க டிவோர்ஸ் பத்தியே நான் உன்கிட்ட சொல்லிருக்க மாட்டேன். ஆனா இனி அதே உணர்வு இருக்குமா தெரியல” என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்.

“பிடிவாதம் தானே ரகு இது? நான் ஒன்னும் நீயும் திவ்யாவும் ஒண்ணா இருக்குற நேரத்துல உன்னோட வாழ்க்கைல இடம் குடுனு கேக்கலையே, வேற வேற பாதைல போகணும்னு ரெண்டு பேரும் மெச்சூர்டா முடிவு பண்ணி விலகி போற நேரத்துல தான் கேக்குறேன்”

“சந்தர்ப்பம் கிடைக்க காத்துட்டு இருந்த மாதிரி இருக்கு நீ பேசுறது”

குற்றம் சாட்டும் அவன் பார்வையில் உள்ளம் உடைந்தது விஜிக்கு, “இதெல்லாம் தப்புனு என் மூளைக்கு புரியிது ரகு, ஆனா மனசுக்கு புரியலையே. ஒரு வருசமா ரெண்டு வருசமா என்னைக்கோ ஒரு நாள் உன் வீட்டுல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்க போற நீ, ஏன் என்ன புரிஞ்சுக்க மாட்டிக்கிறனு கேக்குறேன்”

அவளை நோக்கி வசமாக அமர்ந்தவன் முகம் கோவத்தில் சிவந்திருந்தது, “எனக்கு என்னோட திவ்யாவை தவற வேற ஒருத்திய யோசிச்சு கூட பாக்க முடியலடி. போதுமா?”

அழுத்தி மிக அழுத்தமாக வார்த்தைகளை வைத்தான். அவனிடமிருந்து அதனை எதிர்பாராதவள், “ஆனா… ஆனா நீ போன மாசம் கூட அவளை திட்டிட்டு, அவ போனதுக்கு சந்தோசமா தானே ரகு இருந்த?”

“தெரியல, அது என்னோட பாடு. இப்பயும் அவ வேணாம் தான், அதே சமயம் எனக்கு வேணும். என்ன விட்டு போறேன்னு அவ விரும்புனா சந்தோசமா அனுப்பி வைப்பேன். அதுக்காக அவளை விட்டு ஈஸியா மூவ் ஆன் ஆகி, இன்னொரு வாழ்க்கையை தேடிக்க முடியாது. ஏமாற்றத்தை ஏத்துக்கிட்ட என்னால வலிய அவ்வளவு சுலபமா கடந்து வந்துட முடியாது”

“உன்ன வேணாம்னு சொல்லிட்டு போற பொண்ண எதுக்கு ரகு திருவிழால அடம் பிடிக்கிற குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிச்சு இழுத்து வக்கிர?”

எழுந்து நின்றான் ரகு அவளை முறைத்து, “என்னோட குடும்பத்து விசயத்தை இவ்ளோ தூரம் உன்கிட்ட சொன்னது எவ்ளோ பெரிய தப்புனு யோசிக்க வச்சிடாத விஜி.

நூறு பிரிவு, ஆயிரம் பிரச்சனை பாத்த காதல் தான் உங்களோடது. சேரணும்னு விதி இருந்தா கண்டிப்பா அவ என்கிட்ட வந்தே தீருவா, அதுக்கு என்னோட இந்த பிடிவாதம் கூட ஒரு வழியா இருக்கலாம்” இரண்டடி அவளை விட்டு விறுவிறுவென நடந்தவன் நின்று திரும்பி பார்த்தான்.

பச்சை புல்வெளியில் கண்களை பதித்து அழுதுவிடும் நிலையில் உறைந்திருந்தாள், “இனிமேல் என்ன பிக்அப் பண்ண நீ வர வேணாம். நான் வந்துக்குவேன்” அவ்விடத்தை விட்டு அவன் அகன்றதும் விழுக்கென கண்ணீர் கோடுகள் கன்னத்தில் இறங்க துவங்கியது பெண்ணுக்கு.

பேருந்தின் மூலம் வீட்டிற்கு வந்த ரகுவுக்கு திவ்யா வீட்டில் இல்லை என்று தெரியவும் பால்கனி வந்து எட்டி பார்த்தான். தரை தலத்தில் இருந்த ஒரு கல் மேடையில் அமர்ந்து தூரத்தில் விளையாடும் சிறுவர்களை பார்த்திருந்தாள்.

என்ன தான் அவள் மனதில் ஓடுகின்றதென தெரியாமல் தவித்தவன் அவளுக்கு தனிமை கொடுக்க எண்ணி விலகி அறைக்குள் முடங்கி போனான்.

இரவு உணவு உண்ண வேண்டும் என வயிறு நினைவுபடுத்த கதவை திறந்தவன் முன்னே நின்றாள் திவ்யா.

“சாப்பிட வா” அவள் பின்னே அமைதியாக சென்றவன் உணவை முடித்து எழுந்து செல்ல மனமில்லாமல் அமர்ந்திருந்தான்.

சலனம் மனம் எங்கும் ஆக்ரமித்திருக்க அவனை கண்டுக்கொள்ளாமல் எழுந்தவள் கை பிடித்து நிறுத்தி வைத்தான். கேள்வியாக தன்னை பார்ப்பவள் கன்னத்தை கவனித்தவன் மெல்ல அவளை தனக்கு அருகே அமர்த்தினான்.

திமிராமல் அவன் கைகளில் அடங்கியவள் தானாக முதலில் பேசவே இல்லை. அவன் கைகள் தன்னுடைய கன்னத்திற்கு வர விழிகள் விரித்து பின்னால் தலையை தள்ளி அவனை ஆராய்ந்தாள்.

அவளது பார்வையின் வித்யாசத்தை உணர்ந்தவன், “சாரி திவ்யா ஏதோ ஒரு கோவத்துல கை வச்சிட்டேன்” அவன் பார்வை எல்லாம் அவளது சற்று சிவந்த கன்னத்தில் நிலைத்திருந்தது.

அதனை வருடி, மருந்திட்டு சற்று வேதனையை குறைக்க வேண்டும் என தோன்றினாலும் அவள் தான் விட மாட்டாளே என்று அவளையே திட்டவும் செய்தான்.

“நான் அப்டி பேசுனது அதை விட தப்புல?” கலக்கம் வளர்ந்து நின்ற அவன் கண்களை பார்த்து அவள் உள்ளமும் இளகியது.

ஆமாம் என தலையை ஆட்டினான், “எதுக்கு திவ்யா உனக்கு அந்த வேலை அவ்வளவு முக்கியமா? கொஞ்ச நாள் பொறுத்து போகலாம்ல?” அவள் பேசியதை மீண்டும் எடுத்து கட்டி கூட பேச விரும்பாமல் இலகுவாக கேட்டான்.

“எத்தனை நாள் பொறுத்து போறது? எனக்குன்னு சில தேவைகள் இருக்கு ரகு. அது பணத்தேவையாவும் இருக்கலாம், சுதந்திரத்துக்கான தேவையாவும் இருக்கலாம். அந்த தேவைக்கு இந்த அவசரம் அவசியமானது-னு தோணுச்சு” என்றாள் நிதானமும் தெளிவுமாக.

“இதையே நீ பாத்துட்டு இருந்தா உன்னோட கெரீயர் என்னாகுறது, கேப் விழுந்து படிப்பு பாழாகிடாதா?” அக்கறை மட்டுமே அவனிடம் இருந்தது.

“விடேன் ரகு, எத்தனை நாள் தான் என்னோட ஒவ்வொரு செயலுக்கும் திருத்தம் சொல்லிட்டே கூட நிப்ப, எனக்கான வாழ்க்கை பாதையை நான் தப்பு செஞ்சு அதுல இருந்து கத்துக்குறேனே” சலித்துக்கொண்டவள் பேச்சை கேட்டு பேச்சற்று அமைதியானான் ரகு.

“நான் உன்ன டாமினேட் பண்ணனும் நினைக்கல திவ்யா, ஒரு கைட் மாதிரி நினைச்சுக்கோயேன் ம்மா”

“நானும் நீ சொன்னதை தப்பான பார்வைல புரிஞ்சுக்கல ரகு, பொறந்ததுல இருந்து அப்பா, அம்மா, அண்ணனுங்கனு ஒரு குடைக்குள்ளையே இருந்து, எது சரி எது தப்புனு தெரியாமலேயே போச்சு. இப்ப மறுபடியும் உன் பாதுகாப்புல இருக்க விரும்பல நான். விடுங்க என்ன, தப்போ சரியோ அது என்னோட முடிவால என்னோடையே போகட்டும்”

“நீ முடிவு எடுக்க வேணாம், உனக்கு புடிச்சதையோ, உனக்கு சரினு படுறதையோ இங்க யாரும் தடுக்கல. அதுக்குன்னு கருத்து எதையும் கேக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறது சரியா?”

கூறிய விடயத்தையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதங்களில் பறைசாற்றியவள் சொல்லில் கோவம் துளிர்க்க அவளை முறைத்தான்.

“சரி. அட்வைஸ் தான? எவ்வளவு வேணுமோ பண்ணிக்கோ. அதை கேக்குறதும், தூக்கி எரிஞ்சு போறதும் என் விருப்பம்”

“இது பேர் சுயமா நிக்கிறது இல்ல திவ்யா, பிடிவாதம், அகங்காரம்” நேரடியாக அவளை குற்றம் சாட்டாமல் நிதானமாக பேசி புரிய வைக்க எண்ணியவன் மனநிலையை மொத்தமாய் சோதிக்க வடிவமெடுத்து நின்றாள் பெண்ணவள்.

அவளுக்கோ அவன் மேல் கோவம், வேண்டாம் என்று தானே சென்றான் அவன் பேச்சை இனி எதற்கு கேட்க வேண்டுமென அவன் கூறிய அதே பிடிவாதத்தை விடவில்லை,

“அகங்காரத்தை பத்தி நீ பேசாத ரகு. அதுக்கான மொத்த அர்த்தத்தை கத்து கொடுத்ததே நீ தான்” என்றாள் அவளும்.

“தோ அங்க தொட்டு இங்க தொட்டு கடைசில என்கிட்டையே வந்து நீ நில்லு. ஏன்டி உனக்கு என்ன தவற வேற எதுவுமே தெரியாதா?”

“பின்ன நல்லதை தவற எல்லாம் நீ தான் எனக்கு சொல்லி குடுத்த”

“என்னத்த கெட்டதை சொல்லி குடுத்துட்டேனாம் இவளுக்கு?” உரிமையாய் அவளை பார்த்து கேள்வியோடு முறைத்தான்.

“ரக ரகமா கெட்ட வார்த்தை தெரியிது இப்போலாம், பேச கூட சில நேரம் வருது” அவள் கூறியதில் கோவம் மறந்து வாய் விட்டு சத்தமாக சிரித்தான்.

சிரித்தவன் கையை கிள்ளி, “சிரிக்காத, கெட்ட வார்தைன்னா என்னன்னே தெரியாத குடும்பத்துல இருந்து வந்த என்ன அதை இவ்ளோ ஈஸியா பேச வச்சிட்ட நீ” ஓரக்கண்ணால் முறைத்து குற்றம் சாட்டினாள்.

“எது உன் குடும்பமா? போடி போ. வறிஞ்சு கட்டி வளச்சு வளச்சு அசிங்க அசிங்கமா திட்டுனாய்ங்க”

“சும்மா கதை அளக்காத சரியா? என் அப்பா அண்ணன் பத்தி எனக்கு தெரியும், ஒரு நாள் ஒரு பொழுது கூட மயிறுனு கூட சொன்னது இல்ல, அவ்வளவு வார்த்தை சுத்தம் இருக்கும் அவங்ககிட்ட” என்றாள் ஆணித்தரமான நம்பிக்கையோடு.

“அது எப்படி இவ்ளோ நம்பிக்கை அவங்க மேல?”

“எத்தனை வருஷம் அவங்க கூட தான இருந்தேன், எனக்கு தெரியாதா? என் முன்னாடி ஒரு நாள் தெரியாம கூட பேசுனது இல்ல” இலகுவான பேச்சு வார்த்தைகள் நீள துவங்கியது.

“வீட்டுக்கு ஒரே செல்ல பொண்ணு உன் முன்னாடி எப்படி பேசுவாங்க? உன் அம்மாகிட்டயும் உன் அண்ணி கிட்டையும் கேளு”

“ம்ம்ஹ்ம் நான் நம்ப மாட்டேன் ப்பா”

“சரி இவ்ளோ பேசுற நான், நாளைக்கு நமக்கே பொண்ணு பொறந்தா அது இருக்…” யோசிக்காமல் பேசியவன் நொடியில் சுதாரித்து வார்த்தைகளுக்கு தடை போட, அவனை விட அதிகம் ஆச்சிரியம் அடைந்தவள் விழிகள் அவனை இமை கொட்டாமல் பார்த்தது.

தலையில் கை வைத்தவன் வேறு பக்கம் திரும்பிட அவனையே பார்த்தவள் மனம் அதிக வேதனையுற்றது. பிடிமானம் இல்லாத உறவில் எந்த நம்பிக்கையில் நம்பிக்கை வைப்பது?

தெரியாமல் பேசிவிட்டான் எனவும் விட மனம் இல்லை, அவன் கூறியதை மனம் அசைபோட்டு கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!