Skip to content
Post Views: 4,366
அத்தியாயம் 3
ஆறுதல் தேடி தவிக்கிறது
காயம் சுமந்து கொண்டு
திரியும் எந்தன் இதயம்!!!
Advertisement
தங்கையின் கண்களை சந்திக்க முடியாமல் எங்கோ பார்த்த ராகவன் “அது அவளோட அப்பா வந்துட்டாங்க போல? அதான் உன்னை வெயிட் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டா”, என்று தடுமாற்றத்துடன் சொன்னான்.
Advertisement
அது உண்மை என்று நம்பினாள் தேன்மொழி. ஸ்ருதியின் அப்பா வந்திருக்க வேண்டும். அதை தன்னிடம் சொல்லச் சொல்ல தான் ஸ்ருதி ராகவன் அருகில் சென்றிருக்க வேண்டும். அதைச் சொல்ல வந்தவளைத் தான் ராகவன் அப்படி செய்து விட்டான் என்று எண்ணிய தேன்மொழி அதன் பிறகு எதுவும் பேசாமல் அவனுடன் சென்றாள். நாளை பள்ளிக்கு வந்த பிறகு அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணி அவனுடன் நடந்தாள்.
Advertisement
ஆனால் ராகவனின் கண்களோ அவளைத் தேடி அலை பாய்ந்தது. “அழுதுட்டே போனாளே, எங்க போயிருப்பா? ஒரு வேளை அவங்க அப்பா கூட போயிருப்பா போல?”, என்று எண்ணி தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்.
Advertisement
இங்கே ஸ்ருதியோ பள்ளியை விட்டு வெளியே செல்லாமல் ஒரு மரத்தடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளை நண்பன் முத்தமிட்டதையும் அவள் அழுத படி ஓடி வந்ததையும் பார்த்த வாசு அவளைத் தேடினான். அவள் ஒரு இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருக்கவும் அவளை நெருங்கினான்.
காலில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தாள் ஸ்ருதி. சுற்றிலும் இருள் கவிழ்ந்து விட்டதே, தந்தை பள்ளிக்கு வெளியே நின்றிருப்பாரே என்று கூட அவள் மனதை எட்ட வில்லை.
அப்போது “ஸ்ருதி”, என்று அழைத்தான் வாசு. கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ராகவனின் ஃபிரண்ட் தானே இவங்க என்று எண்ணி அவள் அவனைப் பார்க்க “என்னை மன்னிச்சிரு மா”, என்றான் வாசு.
“எதுக்கு அண்ணா நீங்க மன்னிப்பு கேக்குறீங்க?”
“உன் மனசுல இருக்குறது எனக்கு தெரியும் மா. உனக்கு ராகவனை ரொம்ப பிடிக்கும் தானே?”
“அண்ணா”
“எனக்கு தெரியும் மா. அதான் அவ கிட்ட ஒரு வார்த்தை பேசுன்னு சொன்னேன். ஆனா இவன் இப்படிச் செய்வான்னு எனக்கு தெரியாது. உன் கிட்ட அப்படி நடந்துக்க அவனுக்கு எப்படி மா மனசு வந்தது? ஒரு சின்ன பொண்ணுக்கு போய் முத்தம் கொடுத்து…”
“நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு இல்லை”, என்று முறைத்த படி சொன்னாள்.
“சரி பெரிய பொண்ணு தான் போதுமா? அதுக்காக அவன் இப்படி பண்ணலாமா?”
“அதுக்காக தான் நான் அழுறேன்னு நினைக்கிறீங்களா அண்ணா?”, என்று வெட்கத்துடன் கேட்டாள் ஸ்ருதி.
“ஸ்ருதி”
“அவங்க என்னைப் பாக்க மாட்டாங்களானு எத்தனையோ நாள் ஏங்கிருக்கேன். ஒரு வார்த்தை பேச மாட்டாங்களான்னு ரொம்ப ஆசை பட்டிருக்கேன். அப்படி இருக்க இந்த முத்தம் எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட் இல்லையாண்ணா?”
“அப்புறம் ஏன் மா அழுற?”
“அந்த முத்தத்தை அவங்க அன்புல கொடுக்கலை. அதுக்கப்புறம் என்னல்லாமோ பேசிட்டாங்க”
“என்ன சொன்னான் மா?”
அவனை விட்டுக் கொடுக்க மனதில்லாமல் “அதை விடுங்க. எல்லாம் என் விதி”, என்றாள்.
“அவன் என்ன சொன்னான்னு எனக்கு தெரியாது மா. ஆனா அவனுக்கு உன்னைப் பிடிக்கும்”
“இல்லைண்ணா, அப்படி எல்லாம் இல்லை”
“இல்லை மா, நிஜமா தான் சொல்றேன். உன்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். நீ பாட்டுப் பாடினப்ப அவன் அவ்வளவு ரசிச்சான். அது மட்டும் இல்ல. நான் நீ அழகா இருக்கேன்னு சொன்னா அவனுக்கு அவ்வளவு கோபம் வரும். எல்லாம் பொறாமை தான் காரணம். அவனுக்கு உன்னைப் பிடிக்கும் மா. ஆனா அவன் அதை உணரலை”
“எனக்காக சொல்லாதீங்க அண்ணா. அவர் என்னை திரும்பிக் கூட பாக்க மாட்டார். இன்னைக்கு கூட கோபத்துல…”
“கண்டிப்பா அவன் மனசு மாறுவான் மா”
“நடக்குறது நடக்கட்டும் அண்ணா. நீங்க இங்க நடந்தது தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க. அவருக்கு தான் வீணா மனசு சங்கடப் படும். சரி அப்பா வந்துருவாங்க. நான் போறேன். அப்புறம் தேங்க்ஸ். என்னைப் புரிஞ்சிக்கிட்டு அவங்களை என் கிட்ட பேசச் சொன்னதுக்கு. ஆனா அவங்க கொஞ்சம் ஓவரா பேசிட்டாங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றாள். அந்த நிலையிலும் ராகவனுக்காக பேசி விட்டு செல்லும் அவளையே பார்ததவன் வீட்டுக்கு கிளம்பினான்.
ஸ்ருதி வெளியே சென்ற போது அங்கே நின்றிருந்த தேவேந்திரன் அவளைப் பார்த்து விட்டு “என்ன டா முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு?”, என்று கேட்டார்.
“ஒண்ணும் இல்லைப்பா. பங்ஷன்ல ஜிகுணா எல்லாம் தூவினாங்க பா. அது என்னோட கண்ணுல பட்டுருச்சு. அதான் வேற ஒண்ணும் இல்லை”, என்று சமாளித்தாள்.
“சரி வண்டில ஏறு. வீட்டுக்கு போகலாம்”, என்று சொன்னதும் அவர் பின்னே ஏறி அமர்ந்தவள் ராகவனைப் பற்றி தான் எண்ணிக் கொண்டாள்.
வீட்டுக்கு சென்ற பின்னரும் இரவு உணவை வேண்டாம் என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள். ஸ்கூல் பங்க்சனில் ஏதாவது சாப்பிட்டு இருப்பாள் என்று எண்ணிய வேணியும் அவளை கண்டு கொள்ள வில்லை.
உடை கூட மாற்றாமல் போர்வையை இழுத்து மூடிப் படுத்தவளுக்கு ராகவனின் நினைவு தான்.
நடந்த அனைத்தும் நினைவில் வந்து அவளை நிம்மதியாக தூங்க விட வில்லை. அவன் பேசிய பேச்சு அவளை அந்த அளவுக்கு ஆக்கி இருந்தது. அவன் சொன்னது அனைத்தும் அவளுக்கு தெளிவாக புரிய வில்லை என்றாலும் அவன் தன்னை தவறாக சொன்னான் என்று மட்டும் புரிந்தது.
உலக அறிவு எல்லாம் தெரியாத சின்னப் பெண் தானே? அதனால் அவன் பேசியதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை. கூடவே அவன் தந்த முத்தத்தை எண்ணி அவள் முகம் மட்டும் அல்லாமல் அவளது மொத்த உடலுமே சிலிர்த்தது. அவனுடைய உதடு பட்ட தன்னுடைய உதடுகளை விரலால் வருடினாள்.
அவன் நினைவால் எழுந்த தாபம் அவளை வதைக்க “ஏன் டா இப்படி பேசின?”, என்று எண்ணி அழுது அழுது அன்று இரவே காய்ச்சலை வர வைத்துக் கொண்டாள்.
அவளுக்கு திடீரென்று எதனால் காச்சல் வந்தது என்று பெற்றவர்களுக்கு எதுவுமே புரிய வில்லை. அடுத்த நாள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்பதால் பள்ளிக்கு லீவ் போட வேண்டும் என்று வேணியும் தேவேந்திரனும் பேசிக் கொண்டார்கள். அது கூட தெரியாமல் அரை மயக்க நிலையில் கிடந்தாள் ஸ்ருதி.
அதே நேரம் டைனிங் டேபிளில் பிள்ளைகள் மூவரும் அமர்ந்திருக்க அவர்களுக்கு இட்லியைப் பரிமாறிக் கொண்டிருந்தாள் ராஜி. மதனும் அப்போது வந்து விட அவருக்கும் பரிமாறினாள்.
எப்போதும் கலகலவென்று இருக்கும் சாப்பாட்டு மேஜை இன்று அமைதியாக இருந்தது. தட்டில் இருந்த இட்லியைப் பிய்த்து வாயில் வைக்காமல் கையாலேயே பிசைத்து கொண்டிருந்தான் ராகவன்.
அவன் மனது குற்ற உணர்வில் திளைத்தது. தான் ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான். ஒரு மனதோ அவன் செய்தது தப்பு என்று சொல்லிக் கொண்டிருக்க மற்றொரு மனதோ “நீ பேசினது சரி தான். அப்படி பேசினா தான் இனி அவ உன்னை நினைக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவா. ஆனா நீ ஏன் அவளுக்கு முத்தம் கொடுத்த? உன்னால எப்படி அந்த பொண்ணை முத்தம் கொடுக்குற அளவுக்கு குளோஸ்ன்னு நினைக்க முடிஞ்சது?”, என்று அவனையே கேள்வி கேட்டது.
தேன்மொழிக்கோ தோழியை எப்படி சந்திக்க என்று தயக்கமாக இருந்தது. கூடவே அண்ணனையும் ஆராய்ச்சி செய்தாள். “ஒரு வேளை அண்ணனுக்கு அவளைப் பிடிச்சிருக்கோ? அதனால தான் அப்படி பண்ணிட்டானா? ஒரு வேளை அண்ணனுக்கு ஸ்ருதியை பிடிச்சிருந்தா கண்டிப்பா அவனுக்காக நாம ஸ்ருதி கிட்ட பேசணும். ஆனா ஸ்ருதிக்கு இவனைப் பிடிக்கலைன்னா இவனுக்காக நான் அவ கிட்ட மன்னிப்பு கேக்கணும். ஆனா அவ மன்னிப்பாளா? இல்லை இவன் மனசை புரிஞ்சிக்குவாளான்னு தெரியலை”, என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
“இன்னைக்கு ஏன் ரெண்டு பேரும் இவ்வளவு அமைதியா இருக்கீங்க?”, என்று கேட்டார் மதன்.
“அதானே? தேனு, என்ன டி ஆச்சு?”
“ஒண்ணும் இல்ல மா, நாளைக்கு பரீட்சை இருக்கு. அதான்”, என்று சமாளித்தாள் தேன்மொழி.
“அப்படின்னா சீக்கிரம் சாப்பிட்டு போய் படி”
“சரி மா”, என்றவள் இரண்டு இட்லியை உண்டு விட்டு படிக்கச் சென்றாள். அவள் பின்னே வால் பிடித்துக் கொண்டு அமரும் ஓடி விட்டான்.
“ராகவன் உனக்கு என்ன ஆச்சி டா?”, என்று கேட்டாள் ராஜி.
“ஒரே தலை வலி மா”
“ஸ்கூல்ல மைக் சத்தம் அதிகமா இருந்துருக்கும். அதான் தலை வலி வந்திருக்கும் டா”
“அப்படி தான் போல மா? எனக்கு சாப்பாடு வேண்டாம்”, என்று சொன்னவன் கை கழுவி விட்டுச் சென்று விட்டான்.
“அவனுக்கு அப்புறமா ஒரு டம்ளர் பால் கொடு ராஜி. சரி நீயும் வந்து சாப்பிடு’, என்று சொல்லி விட்டு சாப்பிட அமர்ந்தார் மதன்.
அறைக்குள் சென்ற தேன்மொழி அமருடன் பேசிய படியே அன்றைய நிகழ்வுகளில் இருந்து வெளியே வந்து விட்டாள். ஆனால் ராகவனால் வெளிய வர முடியவில்லை. அவனால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
இன்னும் பரீட்சைக்கு சிறிது நாட்கள் இருப்பதால் வேறு வழியில்லாமல் படிக்க ஆரம்பித்தான். அவனுடைய கனவு நிறைவேற படிப்பும் அவசியம் என்பதால் சிறிது நேரத்தில் படிப்பில் ஒன்று விட்டான். ஸ்ருதியைப் பற்றிய நினைவுகள் அவனுடைய அடி மனதில் பதிந்தது.
அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. “அம்மா எனக்கு இன்னைக்கு சீக்கிரம் போகணும்”, என்று சொன்ன ராகவன் சீக்கிரமே சென்று விட்டான். அவனால் தங்கையை எதிர்கொள்ள முடியவில்லை என்பதால் தான் சென்று விட்டான். தேன்மொழி எப்போதும் போல தாமதமாக தான் பள்ளிக்கு வந்தாள்.
சைக்கிளை நிறுத்தி விட்டு தோழியைக் காண அவசரமாக கிளாசுக்கு சென்றாள். ஆனால் ஸ்ருதி பள்ளிக்கு வரவில்லை. முதல் வகுப்புக்கான நேரம் ஆன பிறகும் அவள் வராததால் தேன்மொழி தவித்து போனாள். அது தன்னுடைய அண்ணனால் தான் என்று அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.
கூடவே அவளுடைய போன் நம்பரைக் கூட வாங்கி வைக்காத தன்னுடைய மடத்தனத்தை நொந்து கொண்டாள்.
அதே நேரம் வாசு ஒரு மாதிரி அமர்ந்திருக்க வெகு நேரம் கழித்து தான் அவனைக் கவனித்தான் ராகவன்.
“என்ன டா ஒரு மாதிரி இருக்க?”, என்று ராகவன் கேட்டதும் “நானா? இல்லையே?”, என்றான் வாசு.
“இல்லை, உன் கிட்ட வித்தியாசம் தெரியுது வாசு”
“சில விஷயங்களை நினைச்சு பாத்தேன். அதான் மனசு ஒரு மாதிரி இருக்கு. வேற ஒண்ணும் இல்லை”
“என்ன ஆச்சு டா? வீட்ல ஏதாவது பிரச்சனையா?”
“இல்லை நேத்து நைட் என் கண்ணுல சில விஷயம் பட்டது? அதை தான் நினைச்சிட்டு இருக்கேன்”, என்று சொல்லி நண்பனை ஆழம் பார்த்தான் வாசு.
அவன் பார்வையே சொன்னது நேற்று நடந்ததை அவன் பார்த்து விட்டான் என்று.
error: Content is protected !!