Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 4 1

அத்தியாயம் 4

அன்பு என்ற விதை

தூவி விரிட்சமாகிறது

நம் காதல்!!!



Advertisement

“அது… அது வந்து… அன்னைக்கு உனக்காக தான் வெயிட் பண்ணினேன். அப்புறம் அப்பா வர நேரம் ஆச்சுன்னு அவங்க கிட்ட சொல்லிட்டு போயிட்டேன்”, என்று தடுமாற்றத்துடன் சொன்னாள் ஸ்ருதி.

Advertisement

அவள் தடுமாற்றத்தை ரசித்த தேன்மொழி “அவங்களா? அவங்கன்னா யாரு?”, என்று கேட்டாள்.

Advertisement

“அவங்க தான் டி. உன் அண்ணன்”, என்று தயக்கத்துடன் அவள் சொல்ல தன்னுடைய அன்னை தன்னுடைய தந்தையை பக்கத்து வீட்டினரிடம் “அவங்க இப்படி சொன்னாங்க, அவங்க போயிட்டாங்க”, என்று சொல்வது போல இருந்தது தேன்மொழிக்கு.

Advertisement

தோழியைப் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பமாக இருந்தது. “அன்னைக்கு அவன் இவ கிட்ட என்ன சொன்னான்? எதுக்கு முத்தம் கொடுத்தான்? இவ ஏன் அழுதுட்டு ஓடினா? அப்புறம் ஏன் அவன் மேல இவளுக்கு கோபமே வரலை? அது மட்டுமில்லாம என்னோட அம்மா அப்பாவைச் சொல்ற மாதிரி இவ அண்ணனைச் சொல்றா? இவ மனசுல என்ன தான் இருக்கு?”, என்று குழப்பமாக வந்தது. ஆனால் அதை ஸ்ருதியே காட்டிக் கொள்ளாத போது தானாக கேட்க மனதில்லாமல் அந்த பேச்சை விட்டாள். பின் அவளுடைய போன் நம்பர் எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டாள்.

அன்றைய பள்ளி முடிந்ததும் ஸ்ருதியும் தேன்மொழியுடன் சைக்கிள் ஸ்டாண்ட் வந்தாள். வந்தவள் ராகவனுடைய சைக்கிளைத் தேட அது அங்கே இல்லை.

“என்ன டி அவங்களைக் காணும்? அவங்க சைக்கிள் கூட இங்க இல்லை”, என்று கேட்டாள் ஸ்ருதி.

“அண்ணனைக் கேக்குறியா?”

“ம்ம்”

“அவனுக்கு அடுத்த வாரம் பரீட்சை ஆரம்பிக்குதுள்ள? அதனால ஸ்பெஷல் கிளாஸ் இருக்காம்? நைட் ஏழு மணிக்கு தான் வீட்டுக்கு வருவான்”

“அப்ப சைக்கிள்?”

“அது அவங்க கிளாஸ் முன்னாடி விட்டுருப்பான் போல? சரி வா நாம போகலாம்”, என்று சொல்லி நடந்தாள். அவனைக் காண முடியவில்லையே என்ற வருத்தமும் அதே நேரம் அவனைப் பார்த்தால் தன்னால் இயல்பாக இருக்க முடியாது என்றும் புரிய அமைதியாக வந்தாள்.

ஸ்ருதியின் அமைதியைப் பார்த்த தேன்மொழிக்கு அவள் புதிராக தான் தெரிந்தாள். அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கேட் அருகே வந்ததும் “சரி டி நாளைக்கு பாப்போம். நான் கிளம்புறேன்”, என்று சொன்னாள் தேன்மொழி.

“சரி தேனு, அப்புறம் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”

“என்ன ஸ்ருதி?”

“எனக்கு ஒரு டவுட்?”

“என்ன?”

“அந்த காலைக் காற்றேன்னு ஒரு பாட்டு இருக்குல்ல? அது உன் அண்ணன் தானே பாடினது?”

“என்ன சொல்ற நீ?”

“அந்த பாட்டை உன் அண்ணா தான் பாடிருக்காங்க டி. ரெண்டு பேர் குரலும் அப்படியே ஒண்ணு போல தான் இருக்கு”

“என் அண்ணன் நல்லா பாடுவான் தான். ஆனா அவனுக்கு இது வரை படத்துல பாட எல்லாம் சான்ஸ் கிடைக்கலை. உனக்கு எந்த வாய்ஸ் கேட்டாலும் என் அண்ணன் வாய்ஸ் போல இருக்கு போல?”, என்று தேன்மொழி கேட்க ஸ்ருதி அழகாக வெட்கப் பட்டாள்.

அவளைக் குழப்பமாக பார்த்த தேன்மொழி “சரி டி நான் வரேன்”, என்று சொல்லி விட்டுக்குச் சென்று விட்டாள்.

தேன்மொழி அங்கிருந்து சென்றதும் அவசரமாக ஸ்ருதி அருகில் வந்தான் வாசு.

அவனைக் கண்டதும் “அண்ணா நீங்களா? அவங்க எங்க?”, என்று கேட்ட ஸ்ருதி ராகவனைத் தேடினாள்.

“அவன் கிளாஸ்ல இருக்கான் மா. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதான் சார் கிட்ட பிரேக் கேட்டுட்டு வந்துருக்கேன்”

“என்ன விஷயம் அண்ணா? அவங்க ஏதாவது சொல்லி விட்டாங்களா?”

“இல்லை மா, நேத்து நடந்ததைப் பத்தி அவன் கிட்ட விசாரிச்சேன். அவன் மனசுல நீ இல்லவே இல்லை மா”

“அண்ணா”

“ஆமா மா, அவன் எப்பவுமே காதல்ன்னு ஒண்ணைப் பண்ணவே மாட்டான். நீ தேவையில்லாம ஆசையை வளத்துக்காத. அதைச் சொல்லத் தான் வந்தேன்”, என்று சொல்ல அவள் கண்கள் கலங்கியது.

“இங்க பாரு ஸ்ருதி, நீ என் தங்கச்சி மாதிரி. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். தேவையில்லாம உன் மனசுல ஆசையை வளத்துக்காத. இது காதலிக்கிற வயசும் கிடையாது. ராகவன் அதுக்கான ஆளும் கிடையாது. ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு”

“அவங்க என்ன சொன்னாங்க அண்ணா? தெளிவா சொல்றீங்களா?”, என்று அவள் கண்ணீருடன் கேட்க அவன் பேசியதை அப்படியே சொன்னான். அதைக் கேட்டு அவள் முகம் மலர்ந்தது.

அதைக் குழப்பமாக பார்த்த வாசு “உன் நல்லதுக்கு தான் சொல்றேன் ஸ்ருதி. தேவையில்லாம படிக்கிற வயசுல மனசை அலைபாய விட்டுட்டு வாழ்க்கையை தொலைச்சிறாத. அவன் பண்ணினதும் பேசினதும் தப்பு தான். அது கூட உன் வாழ்க்கை வீணாகக் கூடாதுன்னு தான் அவன் பண்ணிருக்கான். அவனை நீ தப்பா நினைக்காத”, என்று அவன் சொல்ல அவளோ கனவில் மிதந்தாள்.

தன் மீதான ராகவனின் அக்கறை தான் ஸ்ருதிக்கு புரிந்தது. அவள் முகம் காட்டும் உணர்வுகள் புரியாமல் “என்ன புரிஞ்சதா ஸ்ருதி?”, என்று கேட்டான் வாசு.

“ஆன் ஆமாண்ணா. எல்லாமே புரிஞ்சிருச்சு”

“என்ன புரிஞ்சது?”

“இது காதலிக்கிற வயசு கிடையாதுன்னு”

“அப்புறம்?”

“நல்லா படிக்கணும்?”

“அப்புறம்?”

“அண்ணா கவலைப்படாதீங்க, நான் தப்பான பாதைல எல்லாம் போக மாட்டேன். நல்லா படிப்பேன். நல்ல வேலைக்கு போவேன்”

“ராகவனை….”

“கண்டிப்பா அவரை மறக்க மாட்டேன். அவர லவ் பண்ணுறதையும் விட மாட்டேன்”

“ஸ்ருதி, லூசா நீ?”

“நானே நினைச்சாலும் என்னால அவரை மறக்க முடியாதுண்ணா”

“இதெல்லாம் ஒரு ஈர்ப்பு மா. அவன் இன்னும் ஒரு மாசத்துல ஸ்கூல் விட்டு போயிருவான். அப்புறம் உன் கண்ணுல கூட பட மாட்டான்”

“தெரியும் அண்ணா. ஆனா எத்தனை வருஷம் ஆனாலும் என் மனசுல அவர் தான் இருப்பார்”

“அப்பவும் அவன் உன்னை ஏத்துக்க மாட்டான்”

“பரவால்ல?”

“ஸ்ருதி”

“அவருக்கு பிடிக்கலைன்னா என்ன? எனக்கு பிடிச்சிருக்கு. அது போதும்”

“அதுக்கு மேல உன் விருப்பம்”

“தேங்க்ஸ் அண்ணா, ஆனா அவர் கிட்ட போய்ச் சொல்லுங்க. அவங்க என் கண்ணை விட்டு மறைஞ்சா கூட என் மனசு இன்னொரு ஆளைத் தேடி போகாதுன்னு. எனக்கு அவங்களை அவ்வளவு பிடிக்கும். இது காதலா கவர்ச்சியான்னு எல்லாம் எனக்கு தெரியாது. அதை என்னால சரியா யோசிக்கவும் முடியலை. ஆனா நான் நல்லா படிப்பேன்”, என்று சொல்ல அவளை புரிந்து கொள்ள முடியாமல் அங்கிருந்து சென்றான்.

வாசு கிளாசுக்கு வந்ததும் “எங்க டா போன?”, என்று கேட்டான் ராகவன்.

ஸ்ருதியைப் பார்க்கச் சென்றதைச் சொன்னால் நண்பன் அடித்தே விடுவான் என்பதால் “பாத்ரூம் போனேன்”, என்றான்.

“சரி சீக்கிரம் இதை படிச்சு சார் கிட்ட ஒப்பி. வீட்டுக்கு போவோம்”

“ஹிம் சரி. அப்புறம் ராகவா”

“என்ன டா?”

“ஸ்ருதி”

“ப்ச் இப்ப ஏன் தேவையில்லாம அந்த பொண்ணு பத்தி பேசுற?”

“ஒரு வேளை உங்க வீட்ல பாக்குற பொண்ணா ஸ்ருதியா இருந்தா என்ன டா பண்ணுவ?”

“ஆன்…”, என்று திணறியவன் “எதுக்கு இப்படி கேக்குற?”, என்று கேட்டான்.

“சும்மா தெரிஞ்சிக்க தான்”

“அதெல்லாம் நடக்காது டா. அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போவுது சொல்லு? ஸ்கூல் முடிஞ்சதும் அவ வழி வேற,. என் வழி வேற. ரெண்டு பேரும் பாத்துக்க கூட முடியாது”

“ஒரு வேளை ஏதாவது ஒரு சக்தி வந்து உங்களுக்குள்ள தொடர்பை ஏற்படுத்திக்கிட்டே இருந்தா?”

“அப்படி ஒரு சக்தி வந்தா பாக்கலாம். அது மட்டுமில்லாம எனக்கு கல்யாண வயசு வரப்ப ஸ்ருதிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கூட கல்யாணமே முடிஞ்சிருக்கும். அதனால அதைப் பத்தி யோசிக்காம இப்ப படிக்கிற வழியைப் பாரு”, என்று சொன்ன ராகவன் மனதில் “ஆமா அப்படி தான் நடக்கும். கண்டிப்பா அவ என்னை மறந்துருவா. நான் தான்…. என்னால தான்…. சில விஷயங்களை மறக்க முடியுமான்னு தெரியலை. இதுல ஏதோ ஒரு சக்தி வந்து எங்களை இணைக்குமாம்? அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை”, என்று எண்ணிக் கொண்டான்.

அவன் அப்படி நினைத்தாலும் வாசு சொன்ன அப்படி ஒரு சக்தி இருக்கும் என்றும் இருவருக்கும் இடையே எப்போதும் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்றும் அந்த சக்தி அவனது தங்கை தான் என்றும் அவன் அப்போது உணர வில்லை.

வீட்டுக்கு வந்ததும் ஸ்ருதி இயல்பாக இருந்தாள். அவளுடைய மனதில் ஒரு தெளிவு இருந்தது. காதலையும் படிப்பையும் அவள் குழப்பிக் கொள்ள வில்லை. ராகவனை அவளுக்கு பிடித்திருந்தது. அதுவும் அந்த ஒற்றை முத்தத்தில் அவன் தான் உலகம் என்று அவளுக்கு தெளிவாக புரிந்தது.

அவனைப் பற்றி நினைத்ததால் தான் அவளது படிப்பு கெட்டு விட்டது என்று சொல்லி அவனுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்க கூடாது என்ற எண்ணி படிக்க முடிவு எடுத்தாள். அந்த அளவுக்கு அவனை பைத்தியமாக அவளுக்கு பிடித்தது.

வேணி கொடுத்த டீயைப் பருகி விட்டு அன்றைய பாடங்களைப் படிக்க அமர்ந்தாள். இத்தனை நாட்களை விட இன்று தான் அதிக நேரம் படித்தாள்.

அதே நேரம் தேன்மொழியோ குழப்பத்தில் இருந்தாள். ராகவனுக்கும் ஸ்ருதிக்கும் இடையே இருக்கும் உறவுக்கு என்ன பெயர் என்று அவளுக்கு தெளிவாக தெரிய வில்லை.

அவனை ஸ்ருதிக்கு பிடித்திருக்கிறது என்ற அளவுக்கு புரிந்தது. ஆனால் ராகவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அதை அவனிடமே கேட்டு விட வேண்டும் என்ற முடிவில் அவனுடைய அறைக்கே சென்றாள். அமரும் அவள் பின்னாடியே சென்றான்.

தங்கையும் தம்பியும் தன் முன் வந்து நிற்கவும் “என்ன ரெண்டு பேரும் அதிசயமா இங்க வந்து நிக்குறீங்க? ஏதாவது எழுதிக் கொடுக்கணுமா? ஆனா அதுக்கு வாய்ப்பே இல்லை. ஐயா பிசியா இருக்கேன்”, என்றான் ராகவன்.

அதற்கு பதில் சொல்லாமல் தேன்மொழி அமைதியாக இருக்க “அமர் என்ன டா? எதுக்கு வந்தீங்க?”, என்று கேட்டான் ராகவன்.

“அக்கா வந்தா, அதான் நானும் வந்தேன்”, என்று அமர் சொல்ல அவன் பதிலில் சிரிப்பு வந்தது ராகவனுக்கு. தேன்மொழி மீது இருக்கும் அமரின் அன்பின் மேல் ராகவனுக்கு பொறாமை கூட வந்தது.

“நீ என்ன அவளுக்கு வாலா? எப்ப பாத்தாலும் அவ பின்னாடியே திரியுற? ஓடு டா”, என்று ராகவன் தம்பியை மிரட்ட அவனோ போக மாட்டேன் என்னும் விதமாய் மண்டையை ஆட்டினான்.

“ஏய் தேனு, என்ன அமைதியா இருக்க? என்னன்னு சொல்லு”, என்றான் ராகவன்.

“உன் கிட்ட ஒரு காமெடி சொல்லணும்”

“என்ன காமெடி?”

“இல்லை, என் பிரண்டு ஸ்ருதி இருக்காளே?”, என்று அவள் ஆரம்பிக்க ராகவனுக்கு பக் பக்கென்று இருந்தது. “அந்த அரை லூசு ஏதாவது உளறி வச்சிருச்சா?”, என்று எண்ணியவனுக்கு உள்ளுக்குள் ஸ்ருதி மீது கோபமாக வந்தது.

“என்னன்னு சொல்லித் தொலை”, என்று தங்கையிடம் எரிந்து விழுந்தான்

“நீ ஏதோ பெரிய சிங்கர் மாதிரி சீன் போடுறல்ல? அதைப் பாத்துட்டு ஏதோ ஒரு சினிமா பாட்டைச் சொல்லி அதை நீ தான் பாடினேன்னு சொல்றா. அதைப் பாடினவர் எவ்வளவு பெரிய ஆளா இருப்பார். அவ போயும் போயும் உன்னைச் சொல்லிருக்கா பாரேன். அது மட்டுமில்லாம அவளுக்கு….”, என்று அவள் ஆரம்பிக்க “ஏய் வாயை மூடு”, என்று கத்தினான் ராகவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!