Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 6 1

அத்தியாயம் 6

ஒற்றைப் பார்வையிலே

காதல் கணை வீசிச் செல்கிறது

உந்தன் கண்கள்!!!



Advertisement

“ஆமா டா, வேற ஸ்கூல் போயிட்டா நான் அவ கிட்ட பேச மாட்டேன்னு பயப்படுறா. நான் பேசலைன்னா அவளுக்கும் ராகவனுக்கும் இடைல இருக்குற தொடர்பு அந்துரும்னு பயப்படுறா”, என்றாள் தேன்மொழி. 

Advertisement

“படத்துல மாதிரி கிஸ்ஸ் அடிக்கிறான். அப்ப இவனுக்கும் பிடிச்சிருக்கு தானே அர்த்தம்?”

Advertisement

“நாம அப்படி தான் நினைப்போம். ஆனா அவன் ஸ்ருதியை எதிரி மாதிரி பாப்பான் பாரேன். சரி வா அம்மா வருவாங்க. நாம இங்க எதையுமே பாக்கலை சரியா?”, என்று கேட்டு அவனை அழைத்துச் சென்றாள்.

Advertisement

ஸ்ருதி மெய் மறந்து நிற்கவும் “ஸ்ருதி என்ன டி பண்ணுற?”, என்று கேட்ட படி அவளை நெருங்க “ஆன் பல்லி..”, என்று உளறினாள் ஸ்ருதி. 

“சரி வா”, என்று சொல்லி அவளை வெளியே அழைத்துச் செல்ல தடதடத்த மனதுடன் அங்கே சென்றாள். அங்கே ராகவன் இல்லாதது நிம்மதியாக கூட இருந்தது. ஆனால் அவன் எங்கே என்று தேடி அவள் கண்கள் அலை பாய்ந்தது. 

“என்ன நீங்க மட்டும் வறீங்க? ராகவன் எங்க?”, என்று கேட்டார் மதன்.

“தண்ணீ குடிச்சிட்டு அவன் ரூமுக்கு போய்ட்டான் பா. ஏதோ போன் வந்துருக்கும்னு நினைக்கிறேன்”, என்று சொல்லி சமாளித்தாள் தேன்மொழி.

அவன் குடித்த தண்ணீர் எது என்று புரிந்த ஸ்ருதிக்கு அப்படியே உடல் எல்லாம் புல்லரித்தது. 

அறைக்குள் சென்ற ராகவனோ தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டான். அவளிடம் மட்டும் அவன் மனம் அலைபாய்ந்து  தடுமாறுகிறது என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டான்.

“அவ உதட்டை கடிக்க எப்படா சந்தர்பம் கிடைக்கும்னு பாத்துட்டு இருப்பியா டா?”, என்று அவன் மனசாட்சியே கேள்வி கேட்க அவன் முகம் வெட்கத்தில் சிவந்தது.

ஆனாலும் தப்பு செய்து விட்டோம்? ஏற்கனவே தன் மீது பைத்தியமாகி இருக்கும் அவளின் ஆசையை மேலும் தூண்டி விட்டோம் என்று குற்ற உணர்ச்சியாக இருந்தது. இனி கோபமாக கூட அவள் புறம் திரும்பக் கூடாது என்று எண்ணிக் கொண்டு வெளியே வந்தான்.

ஸ்ருதியின் கண்கள் அவனையே பார்க்க அவனோ அவள் புறம் திரும்பவே இல்லை. “நான் கத்தக் கூடாதுன்னு தான் இப்படி பண்ணினானா? இவனுக்கு என் மேல அன்பே வராதா?”, என்று எண்ணி அவள் முகம் சோர்ந்து போனது.

“ஸ்ருதி அக்கா பாவம் தேனு. கண்டிப்பா நாம தான் அவங்களை நம்ம அண்ணன் கூட ஒண்ணு சேக்கணும்”, என்று தேன்மொழியின் காதில் சொன்னான் அமர். 

“கண்டிப்பா டா, என்ன செஞ்சினாலும் அவங்களை ஒண்ணு சேத்து வைப்பேன். இவன் இல்லைன்னா அவ ஒண்ணும் இல்லாம ஆகிருவா டா”, என்று சொன்னாள் தேன்மொழி.

அதன் பிறகு ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்த உணவு வர அனைவரும் உண்டார்கள். ஸ்ருதியால் மட்டும் அதிகம் உண்ண முடியவில்லை. 

அவளுடைய கைகள் சாப்பாட்டில் அலைந்து கொண்டிருப்பதைக் கண்ட ராகவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் உதடுகள் சிவந்து போய் இருக்க பழைய நினைவில் குப்பென்று அவனுக்கு வியர்த்தது. அவளுடைய உதடுகளின் மென்மை மீண்டும் வேண்டும் என்று மனது ஏங்க அவளைப் பார்க்காமல் தலை குனிந்து கொண்டான். 

“என்ன ஆச்சு ஸ்ருதி? சாப்பிடு மா. வீட்டு நினைவா? நாளைக்கு போய்றலாம் சரியா?”, என்று கேட்டாள் ராஜி.

“ம்ம்”, என்று சொன்ன ஸ்ருதியால் என்ன முயன்றும் ஓரளவுக்கு மேல் உண்ண முடியவில்லை. 

“எனக்கு தலை வலிக்குது ஆண்ட்டி, நான் போய்த் தூங்குறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள். அப்போது தான் அவள் வாங்கிய கிஃப்ட் நினைவுக்கு வந்தது. 

அனைவரும் அங்கே இருக்கிறார்கள், இது தான் சரியான சந்தர்பம் என்று தெரிந்து அவசரமாக தான் அவனுக்காக வாங்கிய கிஃப்டை அவனுடைய அறைக்குள் சென்று அவனுடைய பையில் வைத்து விட்டு கூடவே தனக்கு தேவையான சில பொருள்களை அங்கிருந்து எடுத்துக் கொண்டு வந்து தன்னுடைய பேகில் வைத்து விட்டு படுத்துக் கொண்டாள். 

அதை அவன் பார்ப்பானா இல்லையா என்று அவளுக்கு படபடப்பாக இருந்தது. அதன் பின் அறைக்குள் வந்த தேன்மொழி ஏதேதோ பேச பேருக்கு பேசிக் கொண்டிருந்தாலும் அவள் நினைவுகள் எல்லாம் அவன் மட்டுமே. 

ராகவன் அறைக்குச் சென்று படுத்து விட்டதால் அவனுடைய பேகை எல்லாம் எடுக்க வில்லை. அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. ராகவன் ஏதாவது சொல்லுவான் என்று அவள் எதிர் பார்க்க அவனோ அவளைக் கண்டாலே விலகி ஓடினான். 

காலை டிபனை முடித்து விட்டு எல்லாரும் வெளியே செல்லலாம் என்று முடிவு எடுத்து கிளம்பினார்கள். ஸ்ருதிக்கு அவனுடன் நேரத்தை செலவழிப்பது அவ்வளவு பிடித்திருந்தது. 

கோவில், மலைக்கோட்டை என்று சுற்றினார்கள். திரும்பி வீட்டுக்கு வரும் போது மாலை நான்கு மணி ஆகியது. அனைவருக்கும் டீ போட்டுக் கொடுத்தாள் ராஜி. மாலை ஆறு மணிக்கு “அம்மா, ஸ்ருதியை அவ வீட்ல விடணும். நான் போயிட்டு வரட்டா?”, என்று கேட்டாள் தேன்மொழி.

“நீ அவளை விட்டுட்டு லேட்டா வருவ தேனு? நம்ம ராகவன் கிட்ட சொல்லலாம். வண்டில அஞ்சு நிமிசத்துல விட்டுட்டு வந்துடுவான். அவன் கிட்ட சொல்லு டி”, என்றாள் ராஜி.

மனதுக்குள்ளே அன்னைக்கு நன்றி சொன்ன தேன்மொழி “அதை நீயே சொல்லு மா. நான் சொன்னா கேக்க மாட்டான்”, என்று கழண்டு கொண்டாள்.

“ராகவா இங்க வா”, என்றாள் ராஜி.

“என்ன மா?”

“உனக்கு எத்தனை மணிக்கு டா பஸ்?”

“ஒன்பது மணிக்கு மா”

“சரி நீ ஒண்ணு பண்ணு. அப்பா வண்டியை எடுத்துட்டு போய் ஸ்ருதியை அவ வீட்ல விட்டுட்டு வந்துரு”

“என்னது நானா?”, என்று உண்மையிலே அலறினான் மகன். 

“என்ன டா?”

“நான் போகலை. நீ அப்பாவை போகச் சொல்லு மா”

“அவர் இன்னைக்கு உங்க கூட ஆடின ஆட்டத்துல இடுப்பு பிடிச்சிருக்குன்னு படுத்துருக்கார் டா பாவம்”

“அம்மா, பிளீஸ் மா, நான் போகலை”

“இங்க இருக்குற ரயில்வே குவாட்ரஸ் தான் டா. பிளீஸ் கண்ணா. இந்த நேரம் தேனை அனுப்ப முடியாது. நான் எல்லாருக்கும் டிபன் செய்யணும். ஸ்ருதி கிளம்பி தான் இருக்கா டா”

“அம்மா”, என்று அவன் தயங்க “அம்மா சொன்னா கேப்பியா மாட்டியா?”, என்று கேட்டாள் ராஜி. 

“சரி போறேன்”, என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு அறைக்குள் சென்று உடை மாற்றப் போனான். 

அவன் கண்கள் எல்லோ கலர் டிடிசர்ட்டை தேட அது அவன் கண்ணில் படவே இல்லை. “எங்க போச்சு? ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு போகலையே? அப்பா ரூம்ல இருக்கும் போல?”, என்று எண்ணிக் கொண்டு வேறு ஒரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு கிளம்பினான். 

“ஸ்ருதி கிளம்பிட்டியா டி?”, என்று கேட்டாள் தேன்மொழி.

“ஆன்… கிளம்பிட்டேன் டி”

“சரி வா, அண்ணா கொண்டு போய் விடுவான். டிரஸ் மாத்திட்டு இருக்கான். இப்ப வந்திருவான்”, என்று சொல்ல “என்ன அவங்களா?”, என்று அதிர்ந்து போனாள் ஸ்ருதி.

அவள் அதிர்ச்சியைக் கவனிக்காதது போல அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். மதன் மற்றும் அமரிடம் போயிட்டு வரேன் என்று சொன்ன ஸ்ருதி அதன் பிறகு ராஜியிடம் சொன்னாள். 

“அடிக்கடி வரணும் சரியா டா? ஹாஸ்டல் போனதும் சொல்லு. நான் உன்னை பாக்க வரேன். ரெண்டு நாள் லீவ் இருந்தா தேனு கிட்ட சொல்லி விடு. நான் வந்து கூட்டிட்டு வரேன். அப்புறம் இந்தா. இந்த பாக்ஸ்ல ஸ்வீட், கேக் எல்லாம் இருக்கு”, என்று சொல்லி ஒரு கவரைக் கொடுத்தாள் ராஜி. 

ராகவன் கிளம்பி வந்ததும் தயக்கமாக அவனைப் பார்த்தாள். அவள் பார்வையை எல்லாம் கவனிக்காமல் “அம்மா கிளம்பியாச்சா?”, என்று கேட்டான் ராகவன். 

“கிளம்பிட்டா டா, இதோ. நீ வண்டியை ஸ்டார்ட் பண்ணு”, என்று ராஜி சொல்ல அவன் வண்டியை எடுத்தான்.

“போய் ஏறிக்கோ டா”, என்று ராஜி ஸ்ருதியிடம் சொல்ல தேன்மொழிக்கு ஏதோ அவர்களை இப்பவே சேர்த்த நிம்மதி வந்தது. சந்தோஷமாக அமருடன் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். 

வண்டி அருகில் வந்து அவள் தயக்கத்துடன் நிற்க “ஏறு மா, நேரம் ஆச்சு பாரு”, என்றாள் ராஜி.

அவள் அப்போதும் தயங்கி நிற்க அவனுக்கு எரிச்சல் வந்தது. அவள் அப்போதும் தயங்கவும் “அம்மா எனக்கு நிறைய வேலை இருக்கு”, என்றான். 

தயங்கிய படியே அவன் தோளில் கை வைத்து அவன் பின்னே ஏறி அமர்ந்தாள். அவளுடைய தொடுகையில் அவனுக்கே உடல் சிலிர்த்தது என்றால் அவளைச் சொல்லவும் வேண்டுமோ?

காதல் வாகனம் புறப்பட்டது. ஸ்ருதி வானத்தில் மிதந்தாள். ராகவனோ அவளைப் பற்றி தான் எண்ணிக் கொண்டு வண்டியை செலுத்தினான். தன்னுடைய தாய் தங்கையை தவிர வேறு ஒரு பெண் அவன் வண்டியில் ஏறுகிறாள் என்றால் அது இவள் தான் என்று அவன் மனம் எண்ணியது.  

ஒரு திருப்பத்தில் அவன் பிரேக் அடிக்க அவன் மீது மோதி விலகினாள் ஸ்ருதி. அவள் அதிர்ந்து அவன் ஏதாவது சொல்வானோ என்று பயந்தாள்.

அவனோ அவள் தன் மீது மோதிய போது வந்த புது விதமான இன்ப அவஸ்தையை அனுபவிக்க முடியாமல் திணறினான். இந்த அனுபவம் அவனுக்கு புதியது. 

மனதில் எழும் உணர்வுகளை அடக்க முடியாமல் “ஒழுங்கா உக்கார மாட்டியா?”, என்று கேட்டு எரிந்து விழுந்தான். 

ரயில்வே குவாட்ரஸ் வெளியே அவன் வண்டியை நிறுத்தியதும் மனதே இல்லாமல் அவன் வண்டியில் இருந்து இறங்கினாள். அவள் அவனை நிமிர்ந்து பார்க்க “என்ன பாக்குற? உள்ள போ”, என்றான் ராகவன்.

“நீங்க கிளம்புங்க. நான் போய்க்கிறேன்”, என்றாள் ஸ்ருதி.

“இல்லை நீ முதல்ல உள்ள போ. அப்புறம் நான் போறேன்”, என்று அவன் சொல்ல அவள் முகம் மலர்ந்தது. 

அவளது புன்னகை முதன் முதலாக ஒரு மெல்லிய இறகை கொண்டு அவன் மனதை வருடியது போன்ற உணர்வைக் கொடுத்தது. அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது. எவ்வளவோ அவன் மனதை கட்டுப் படுத்த நினைத்தாலும் அது மட்டும் அவன் பேச்சைக் கேட்கவே இல்லை.

அவனைத் திரும்பிப் பார்த்த படியே வீட்டை நோக்கி நடந்தாள். கேட் உள்ளே சென்றதும் ராகவனும் அங்கிருந்து கிளம்பினான். 

அவனைப் பற்றி எண்ணிக் கொண்டே ஸ்ருதி வீட்டுக்குள் அடி எடுத்து வைக்க அவளைப் முறைத்துப் பார்த்த படி அமர்ந்திருந்தான் நவீன். 

“அண்ணா”, என்ற ஆனந்த கூச்சலுடன் அவள் அவனை நெருங்க ஒற்றை முறைப்பில் அவளை தள்ளி வைத்தான் அவளது அண்ணன். அவள் சத்தத்தில் வேணியும் தேவேந்திரனும் அங்கு வந்தார்கள். 

“அண்ணா எப்ப வந்த?”, என்று ஸ்ருதி சந்தோஷமாக கேட்க “நான் வரது இருக்கட்டும்? ஆமா இது என்ன?”, என்று அவள் கையைக் காண்பித்துக் கேட்டான்.

என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திணறி தலை குனிந்தாள். “தற்கொலை பண்ணுற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்ட அப்படி தானே?”

“அண்ணா சாரி”

“என்ன சாரி? கொஞ்சம் ஆழமா கீறி இருந்தா இந்நேரம் எங்க கண்ணு முன்னாடி இருந்துருக்க மாட்ட. தெரியுமா?”, என்று சொன்னவனின் கண்கள் கலங்க “என்னை மன்னிச்சிரு அண்ணா”, என்று கதறிய படி அவனை அனைத்துக் கொண்டாள் ஸ்ருதி. 

அவளை அனைத்துக் கொண்டவனின் கண்களிலும் கண்ணீர் வந்தது. “நீ இல்லைனா நாங்க என்ன ஆவோம்னு நினைச்சுப் பாத்தியா பாப்பா?”, என்று கேட்க மீண்டும் மீண்டும் மன்னிப்பை கேட்டு அவனை சரி செய்தாள் ஸ்ருதி. 

அதே நேரம் ராகவன் ஊருக்கு செல்ல கிளம்பினான். அவனுடன் சேர்ந்து அவள் வைத்த கிஃப்டும் சென்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!