Skip to content
Post Views: 9,520
நகரம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த அதிகாலை நேரம். கல்லூரி பேருந்துகள், பள்ளி வாகனங்கள் பெரும் நிறுவனங்களின் பேருந்துகள் எல்லாம் பரபரப்பாக சாலை முழுக்க ஓடிக்கொண்டிருந்தது.
எங்கெங்கிலும் மனிதர்களின் பரக்க பரக்க ஓடும் ஆத்திரமும் அவசரமும் தான் தட்டுப்பட்டது.
ட்ராபிக் நிறைந்த சாலையில் சிக்னலில் வண்டி நிறுத்தியதும் நல்லா இருக்குல்ல கேட்டு சிரித்தாள் பூமிகா. அவள் உற்சாகம் அளவறியாதது. ‘உன்ன காலேஜ்க்கு என் புது ஜீப்ல கொண்டுபோய் விடுவேன் பார்’ என்றவள் அதை சாதித்துவிட்டாள். சொல்லவும் வேண்டுமா அவள் குதூகல கொண்டாட்டத்தை.
“இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு” இவள் சொல்ல
Advertisement
“தம்மு பேபி… இந்த சிக்னல்ல திரும்பனா கேட் டாமா ஏன் டென்ஷன் ஆகுற” கேட்டுக்கொண்டே எஃப்.எம்மில் காலை உற்சாக பாடல் ஓட பூமிகா அதனுடன் உற்சாகமாக சேர்ந்து பாட; தமயந்தி படபடப்பு நெஞ்சம் முழுக்க சூழ்ந்து இருக்க சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். விதவிதமான கார்களை சாலையில் கண்டு இது அந்த கம்பெனி கார் இது இந்த வகை காரென அடையாளம் கண்டுகொண்டு சொல்வது பூமிகாவின் பொழுதுபோக்கு. அவள் சொல்லித்தான் நிறைய கார் பெயர்களே இவளுக்கு தெரியும். தமயந்தி எதிர் சாலையில் உயர்வகை காரை கண்டு பூமியை அழைத்து சொல்வதற்குள் அது அவர்கள் போகவிருக்கும் கல்லூரி வளாகத்துள் நுழைந்துவிட்டிருந்தது.
அங்கே எதிர்சாலையில் உயர்வகை காரை ஓட்டிக் கொண்டிருந்தவனோ ‘அடடே! பிளாக் தார் நிக்குது அங்க, நல்லா சகுனம்தான் போ’ என்றான்.பக்கத்தில் முன் சீட்டில் அமர்ந்திருந்தவன் அவன் சொன்ன தார் ஜீப் எங்கென்று பார்த்து முகம் மலர்ந்தான்.
பூமிகா அவள் ஜீப் கொண்டு சென்று கல்லூரி பார்க்கிங்கில் நிறுத்தினாள்.
Advertisement
ஜீப் விட்டு இறங்கியவளை அந்த இடத்தில் இருந்தவர்கள் எல்லோருமே கணநிமிடம் பார்த்துவிட்டு தத்தமது வேலையை தொடர்ந்தனர். தமயந்திக்கு இது புதிதல்ல. அவள் உயரம் அவள் எங்கே சென்றாலும் அவளை திரும்ப பார்க்க வைக்கும். ஐந்தேமுக்காலாடி உயரம் யாரையும் கழுத்தை உயர்த்தி பார்க்க வைக்கத் தானே செய்யும். அவளது நேர் பார்வை நிமிர்ந்த நடை எங்குமே ஈர்க்கும் விசை கொண்டது. அவளது உயரத்திற்கு அந்த ஜீப்பில்லிருந்து அவள் இறங்கிய பாங்கு அதிரடி கவிதையாக இருக்க கவனம் விழாமல் போகுமா என்ன?
Advertisement
“ஆல் தி பெஸ்ட் தம்மு பேபி” என்று சொல்லிக்கொண்டே ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி வந்தவள் அவள் தோழியை கைகுலுக்க கை நீட்டினாள்.
நீட்டிய கையை பிடித்துக்கொண்டே தமயந்தி “ப்ச் மீபூ… நீயும் என் கூட படிக்க வந்து இருக்கலாம் மீபூ” என்றாள் ஏக்கமாக.
சிரித்தாள் பூமிகா. “அடியே அங்க அம்பிகா ஸ்வாமிநாதன் எனக்காக ரொம்ப பெரிய சாம்ராஜ்யம் கட்டி வச்சிருக்காங்க அதை நான் தானே பார்த்தாகணும் உன் அளவுக்கு லக் எனக்கு இல்லடி தங்கம்” என்று கொஞ்சினாள்.
Advertisement
“எனக்கு போகவே ஒரு மாதிரி இருக்கு பூமி” சினுங்கினாள் தமயந்தி
“அடியே இந்த டிகிரி இந்த காலேஜ்ல படிக்கிறதுக்காக ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு இருக்க இப்ப வந்து வெட்கமா இருக்குன்னு சிணுங்குற”
“எனக்கு லோன்லியா இருக்கு பூமி நீயும் என்கூட வா”
“நீ என்ன எல்.கே.ஜி பாப்பாவா தம்மு. கிளம்பு கிளம்பு இதெல்லாம் வேலைக்கே ஆவாது”
தமயந்தி அவள் அசௌகர்யத்தை புலம்பி கொண்டிருந்தாள் “நீ இல்லாம நான் எங்குமே போனதே இல்ல மீபூ”
“பொய் சொல்லாதடி புளுகு மூட்ட போன வாரம் ஃபோட்டோ ஷூட் போனேல்ல போய் அங்க ‘மேல்’ மாடல நல்ல சைட் அடிச்சிட்டு வந்தல்ல” பூமி அப்படி சொல்லவும் அசடு போல் சிரித்தாள் தமயந்தி.
பூமிகா “குட் இப்போ இப்படி சிரிச்சுக்கிட்டே உள்ள போவியாம்”
சட்டென சோக பாவம் திரும்பியவள் “சரி போ நான் உள்ள போறேன்” என்றாள் இல்லாத கண்ணீரை துடைத்துக்கொண்டே
இவர்கள் சம்பாஷனையை நிறுத்தி இவர்களை திரும்பி பார்க்க வைத்தது அங்கே மிகவும் மெதுவாக இவர்களை கடந்து சென்ற கார்.
பூமிகா கார் லோகோ பார்த்து “மசராட்டி கார்” என்று ஆச்சரியமாக அதையே பார்த்துக்கொண்டு நிற்க
இவர்களை கடந்து சென்ற கார் கொஞ்சம் தூரம் தள்ளி அந்த பக்கம் நின்றது அதிலிருந்து மூவர் இறங்கினர்.
தமயந்தி ஆச்சரியமாக நெட்டையாக நின்றிருந்தவனை பார்த்துக்கொண்டு நிற்க பூமி “ஆஹா இந்த மூவர் கூட்டணி இங்க வந்துருக்கா” என்று யோசனையாக அவளுக்குள் பேசிக்கொள்ள…
தமயந்தி “என்ன” என்று புரியாமல் கேட்டாள்
பூமி “தம்மு பேபி நீ யார் கூட வேணா பிரண்ட்ஸா இரு ஆனா இந்த மூணு பேர அவாய்ட் பண்ணு” உணர்ச்சிவசமாக ஆணையிட்டாள்.
அந்த மூன்று பேரும் இவர்களையே பார்த்துக் கொண்டு கல்லூரி கட்டிட வளாகத்திற்குள் நுழைந்தனர்.
மூவர் நடந்து செல்வது என்னமோ கிரேக்க நாட்டு சிற்பம் மூன்று உயிர் பெற்றுக்கொண்டு அங்கே நடந்து வந்தது போல இருந்தது. மூவரும் கண்டீப்பாக தமயந்தியை விட உயரம். ‘கொரியன் ட்ராமா ஹீரோ போல போறானுங்க’ என்றெண்ணி இவள் கண்கொட்டாமல் அவர்களையே பார்க்க பூமிகா எரிச்சலாக “தம்மு.., அவனுங்களுக்கு அட்டென்ஷன் குடுக்காத” என்றாள் அவர்களுக்கு முதுகு காட்டி நின்றுக்கொண்டு
‘ஓ சாரி’ என்று இவள் புறம் திரும்பிய தமயந்தி “கூல் ரி அவனுங்க ஏதோ இந்திரலோகம் சந்திர லோகத்தில இருந்து இறங்கி வந்த மாதிரி நடந்து போறானுங்க நான் எப்டிரி அவங்களோட எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் ஆவேன் சொல்லு” கேட்டாள்
“நீ அவங்க பக்கம் கூட திரும்பக்கூட கூடாது சொல்லிட்டேன் சரியா” இவள் இன்னமும் அதிகாரமாக பேச
தமயந்தி “அடியே உனக்கே என்ன பத்தி தெரியும்ல்ல. நான் பொண்ணுங்களோட பேசி பிரெண்ட்ஸ் ஆகறதே பெரிய காரியம் இதுல பசங்களோட ஃப்ரெண்ட் ஆறது எல்லாம் நடக்குற காரியமா” கேட்டாள்
அதுவும் சரிதான் என்றாலும் கறாராக பூமி “ஆனா அவனுங்கள நீ மதிக்கவே கூடாது சரியா” கேட்டாள்.
எதையும் பேசாமல் தமயந்தி குழப்பமாக எதையோ யோசிப்பதாக தெரிய ‘இவ விட்டா எல்.கே.ஜி போகுற பாப்பா போல நான் இன்னிக்கு போல நாளைக்கு போறேன் சொல்லி நம்மளோடவே வந்துருவாளோ’என்றெண்ணிக்கொண்ட பூமிகா “ சரி சரி நீ எம்பி எம்பி எம்.பி.ஏ படிப்பியாம் நான் போய் என் பாட்டு வாத்தியார் கிட்ட குட்டு குட்டு வாங்குவேனாம்” என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறினாள்.
தமயந்தி “சாயந்திரம் நானே ஹாஸ்டெல் போய்க்கிறேன் நீ வராத” என்றாள்
“உன் வண்டி வர ஒன் வீக் ஆகும் தானே. நானே வரேன் தம்மு”
“நடந்து போறேன் பூமி. நீ உன் ஒர்க் எல்லாம் முடி சரியா”
“ம்ம் சரி என்னமோ பண்ணு. ஏதாச்சும் ஹெல்ப்ன்ன உடனே கால் பண்ணு. யோசிச்சிட்டு நின்னுட்டு இருக்காத”
“சரி சரி கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்”
தமயந்தி நேராக மெஸ் சென்று காலை உணவை உண்டு முடித்து வகுப்பறைக்கு சென்றது கடைசியாளாகத்தான்.
மாணவர்களுக்கு காலை உணவு, நண்பகல் டீ ஸ்நாக்ஸ், மதிய உணவு, மாலை டி ஸ்னாக்ஸ் இவர்களே கொடுத்து விடுவார்கள். அதற்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலித்து இருக்கிறார்கள்.
வகுப்பறையா அது? சொர்க்க லோகம். இந்த கல்லூரியே ஒரு நவீன சொர்க்கலோகம்தான்.காலை பார்கிங்கில் இருந்து அவளுக்கென ஒதுக்கி இருக்கும் வகுப்பறை வருவதற்குள் வாய் பிளந்து வாவ்வென நிறைய வசதிகளை பார்த்துவிட்டாள். இந்த கல்லூரியின் உள்கட்டமைப்பில் ஐடி கம்பெனி எல்லாம் தோற்றுவிடும். பறந்து விரிந்த காம்பஸ், சுத்தமான சூழல், உயர்வகை மனிதர்கள் அவர்கள் நடக்கும் விதம் அவர்கள் கார்கள் எங்கு பார்த்தாலும் அழகை அழகாக காட்டும் அழகியல்.
வெறும் முப்பதே மாணவர்களுக்கான வகுப்பறை அது. பெரிய ஹாலில் அரைவட்ட வடிவில் மேஜைகள் இருக்கைகள் இருக்க மேஜை மீது லேப்டாப் வைத்துக் கொள்ளும் வசதி.
சாதரணமாய் வகுப்பில் ஒரு கருப்பு போர்டு இருக்கும். இந்த வகுப்பறையிலோ மூன்று பக்க சுவர்களில் ஒவ்வொரு விதமான போர்டு இருந்தது. நேராக பார்க்கும் திசையில் கருப்பு போர்டும், அதற்கு நேர் எதிரான சுவற்றில் பெரிய சினிமா தேட்டர் ஸ்கிரீன் இருந்தது, இன்னொரு பக்கம் மார்கரில் எழுதும் வெள்ளை போர்டு பெரிதாக இருந்தது.
இவள் இன்னொரு முறை வாய் பிளந்து கொண்டே வகுப்பறையை பார்க்க மேஜைகள் மீது மாணவர் பெயர் பலகை பார்த்ததும் புரிந்துவிட்டது பெயர் பலகை இருக்கும் இடத்தில்தான் அமர வேண்டுமென.
அவள் பெயர் கடைசி வரிசையில் இடதுபுரத்தில் இருந்து நான்காவது இடத்தில் இருந்தது.
‘இது என்ன இங்கேயும் கடைசியா’ என்று இவள் சலித்துக் கொண்டு இருக்கையில் அமர வரும்போது ‘குட் மார்னிங் காய்ஸ்’ என்று ஒருவர் வகுப்பறையுள் உள்ளே நுழைய எல்லோரும் கும்பலாக அங்கங்கே நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் அவரவர் இடத்துக்கு வந்து அமர்ந்தனர்.
அந்த மூவர் கூட்டணி இவள் பக்கம் வந்து இவளைக் கடந்து இவளுக்கு முந்திய மூன்று இடத்தில் சென்று அமர்ந்தனர்.
நடந்து வந்தார்களா,மிதந்து வந்தார்களா என்பதை போலொரு நடை. நடையில் ஆளுமைக்கும் ஆணவத்திற்கும் குறைவே இல்லை. தூண் போல இருவர் அவர்களுக்கு நடுவே வருபவனை பார்த்து ‘ஆஹ் இவன் க்ராண்ட் மாஸ்டர் இல்ல’ என்று இவள் எண்ணிக்கொண்டே மூவரையும் பார்த்து இது என்ன இது என்று ஆச்சரிய பட்டுக்கொண்டே ஸ்தம்பித்து நிற்க
கோட் சூட் அணிந்திருந்த ப்ரோபஸர் பின் இப்போது கும்பலாக பல டீச்சர்ஸ் மற்றும் வெள்ளை சட்டை வேட்டியுடன் ஒருவர் வந்தார். அவரே பேசவும் தொடங்கினார். “பசங்களா எல்லோருக்கும் வணக்கம் கிரேட் பிசினஸ் ஸ்கூல் மற்றும் எம்.கே.வி கல்வி குழுமம் சார்பாக எல்லோரையும் வரவேற்கிறோம். நிறைய நேரம் எடுத்துக்க விரும்பல ஜஸ்ட் பியூ மினிட்ஸ். நல்லா படிங்க நம்ம நாட்டோட வளர்ச்சி எதிர்காலம் உங்களைப் போல பிசினஸ் கிராட்ஸ் கைல தான் நிறைவே இருக்கு. இங்கே உங்க வசதிக்கு நிறைய சோர்ஸ் இருக்கு அதையெல்லாம் பயன்படுத்தி நல்ல நிலைமைக்கு வாங்க. உங்க பிளேஸ்மென்ட்க்கு நாங்க கேரன்டி ஆல் தி பெஸ்ட்” என்று பேச்சை முடித்துக் கொண்டு வகுப்பறையின் கடைசிக்கு இவள் பக்கம் வந்து நின்றார்.
இவள் பக்கம் அமர்ந்திருப்பவனை பார்த்து “தம்பி சௌக்கியமா எல்லாம் வசதிபடுதா” கேட்டார். இவள் இன்னுமும் அதிர்ந்து போக பக்கம் இருந்தவன் நாக்கலாக ஒரு கோண வாய் சிரிப்பு சிரித்துக்கொண்டு “எல்லாம் ஓகே” என்றான்.
இவள் மனமோ “டேய் அவர் எதோ பெரிய மனுஷன் டா. எந்த்ரிச்சு நில்லேன்டா ”’ என்று சொல்ல கொண்டிருக்க
‘நல்லது ஆல் த பெஸ்ட் தம்பி’ என்று மூவருக்கும் மூன்று முறை சொல்லிவிட்டு அகன்றார்.
மற்ற ப்ரொபசர் எல்லாம் அவரவர் பற்றி அறிமுகம் செய்துக்கொண்டு வெளியேற அதிர்ச்சி ஆச்சரியம் கலந்த உணர்வில் இருந்தவள் ‘ஒரு மனுஷனுக்கு இவ்ளோ ஆட்டிட்யூட் ஆவாது டா சாமி’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு தலை சிலுப்பி கொண்டாள்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவனோ “ஹாய் ஐ ம் சிரஞ்சீவி” என்று கைகுலுக்க கை நீட்டினான்.
தமயந்தி என்ற இவள் பெயரை சொல்லிக்கொண்டு இவளும் கைகுலுக்கினாள்.
சிரஞ்சீவி பக்கம் இருந்தவன் “ஹாய் புவன் ஹியர்” என்றான்
இவள் “ஹாங் தெரியும் உங்க செஸ் மேட்ச் எல்லாம் லைவ்வே பார்த்திருக்கேன்” என்றாள்.
“ஓ அப்படியா” என்று அவளை அவன் ஆச்சரியமாக கேட்க
“ எனக்கும் ஸ்போர்ட்ஸ்ல இண்ட்ரெஸ்ட் இருக்கு. ப்ளஸ் உங்க கேம் எல்லாம் இன்டெரெஸ்ட்டிங்கா இருக்கும்” என்றாள்
புவனுக்கு அந்த பக்கம் இருந்தவன் அந்த கறார் கடுகடு முகத்தில் கொஞ்சம் கொஞ்சமே புன்னகை பூசிக்கொண்டு “அருண்” என்று சொல்ல இவள் அவனை பார்த்து சிரித்தாள். சிற்பி அக்கறை எடுத்து செதுக்கிய முகத்தில் என்ன உணர்வென்றே அவளால் அறிய முடியவில்லை.
பட்டாம்பூச்சி ஒன்று அவள் தோளில் வந்தமர்ந்து ரொம்ப சைட் அடிக்காத கள்ளி என்றது. பூமிக்கு தெரிந்தால் என்ன ஆகும்? கேட்டு பறந்தது சென்றது.
சிரஞ்சீவி “என்ன ப்ளேயர் நீங்க”
தமயந்தி “ வாலிபால் ப்ளேயர்”
“நான் பாஸ்கெட் பால் ப்ளேயரோ நெனச்சேன்” என்றான்
இவள் “ பாஸ்கெட் பாலும் விளையாடுவேன், பாஸ்கெட் பால் கோச் பண்றேன் ” என்றாள்.
அவர்களுக்கு இணையாக அதே உயரத்தில் இருந்தவளுக்கு ஒல்லி தேகம், நீண்ட கூந்தல், நடைபாவனையில் தன்னம்பிக்கை,பேச்சில்,முகத்தில் மாசற்ற அப்பாவித்தனம். பார்க்க பார்க்க அழகு திகட்டவே இல்லை.
error: Content is protected !!