Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 9.1

வீட்டினுள் பார்த்திபன் நுழையும் பொழுதே அவனுடைய காலை கட்டிக்கொண்டாள் பார்த்திபன் மகள்.

“ப்பா… ப்பா… தூக்கு தூக்கு…” இரு கைகளையும் நீட்டி தலையை தலையை ஆட்ட, சோர்வு துறந்து மகளின் அடிமை ஆனான் தந்தை.

அழகு பொக்கிஷத்தை கைகளில் அள்ளி அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன், “என்னடா அதிசயம்! இன்னைக்கு என் பொண்ணுக்கு சித்தப்பாவை தாண்டி நான் தெரியுறேன்…” வசந்த்தைப் பார்த்தபடியே அவன் அருகில் பார்த்திபன் அமர்ந்தான்.

“என்னனு தெரியலடா, இன்னைக்கு உன்னதான் தேடிட்டே இருந்தா குட்டி.” மகளைப் பார்த்தவன், “அப்டியாடா?” என்ற கேள்வியோடு, தன்னுடைய பையிலிருந்து ஒரு கவரை சகோதரன் முன்பு வைத்தான்.



Advertisement

“ஒரு வரன் வந்துச்சு வசந்த். பாரு அம்மா, அப்பாகிட்டயும் காட்டு. நான் வந்து விவரம் சொல்றேன், புடிச்சா மேல பேசலாம்.”

தகவலைக் கொடுத்து சமையலறையைப் பார்த்தவன் மனைவி அங்கில்லாமல் போக, குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

அறைக்குள் நுழையும் பொழுதே தந்தை கையில் இருந்து தடதடக்க ஓடி சென்ற பூர்வி, அன்னை கையில் டேப் (Tab) இருப்பதைப் பார்த்து உற்சாகத்தில் ஆரபியை நோக்கி வேகமாக சென்றாள்.

Advertisement

“டேய் பாத்து மெதுவா…” தகப்பன் பேசி முடிக்கும் முன்பே குழந்தை அன்னையின் மடியில் இருந்தாள்.

Advertisement

“ஏன்டிமா… நான் வேலை பாக்க ஆரம்பிச்சா போதும், ஒடனே வந்துடுவியே நீ…” செல்ல சலிப்போடு தான் செய்த வேலையை கணவனிடம் காட்டினாள்.

மகளோ தந்தையிடம் காட்ட விடாமல் தன் பக்கம் இழுத்து, “ம்மா லைத் லைத்…” என்றாள்.

“ஓ லைட் போடலையா நான்…” என்றபடியே அங்கு தீட்டப்பட்டிருந்த டிசைனுக்கு விளக்கொளி கொடுத்து, “இப்ப ஓகேவா?” கேட்க,

Advertisement

மகள் அருமை என்னும் விதமாய் சைகை செய்து அன்னையைப் பார்த்து சிரிக்க, மகளது கன்னத்தில் அழுத்தமாய் அதரம் பதித்து கணவனிடம் பெருமையாக,

“உங்கள மாதிரியே இருக்கா ன்னா… எல்லாத்துலயும் பெர்பக்சன் எதிர்பாக்குறா. பாருங்கோ, இன்னும் அஞ்சு வருசத்துல உங்களுக்கே அட்வைஸ் பண்ணிடுவா.”

சட்டையைக் கலைத்து துண்டை எடுத்து மனைவி அருகே வந்து, மனைவி செய்திருந்த மேடை அலங்காரத்தைப் பார்த்தபடியே குனிந்து மனைவியின் இடையில் கை வைத்து,

“நல்லது தானே ஆராமா… என் பொண்ணு என் வேலைய பாத்தா என் வேலைய நான் பாப்பேன்.” கள்ள சிரிப்போடு காதோரம் அவன் கிசுகிசுக்க, செவியோர ரோமங்கள் சிலிர்த்து எழுந்துவிட்டன.

“பார்த்தி…” தவிப்போடு மனைவி, கணவனை தள்ளி நிறுத்தி மீண்டும் தான் செய்த வேலையைக் காட்டி, “இதுக்கு பதில் சொல்லுங்க.” என்றாள்.

பார்த்திபன் பார்க்கும் வெட்டிங் பிளானர்ஸ் தொழிலானது அதிகம் கற்பனை திறனை சார்ந்தே இருப்பதால், மேடை அலங்காரம், நுழைவாயில் அலங்காரம் என பல வேலைகளுக்கு டிசைனர் தேவைப்பட்டனர்.

இயற்கையிலே அலங்காரத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆரபிக்கு இது தெரியவர, அந்த அலங்காரங்களை கணினியில் செய்வதற்கு ஆறு மாதங்கள் பயிற்சி சென்று கற்றுக்கொண்டாள். அதன்பிறகு பார்த்திபனுக்கு புதிய டிசைன்கள் தேவைப்படும் நேரமெல்லாம், மனைவிதான் தன்னுடைய திறமையின் மூலம் உதவுவாள். அதற்கு ஏற்ற சன்மானத்தையும் பார்த்திபன் வழங்க,

“நம்ம கடைக்கு எதுக்கு நான் பணம் வாங்கணும்?” என்பாள் கோவமாக.

“வெளிய குடுத்தா சம்பளம் குடுப்பேன்ல ஆரா, அது மாதிரி வச்சுக்கோ. என்ன நம்பியே நீயும் இருக்க வேணாம்.” என்றிடுவான்.

எதார்த்தமும் அதுவே, இதுபோன்ற வேலைகளைப் பார்க்கும் முன்பு சிறு தேவை என்றாலும் பார்த்திபன் பணம்தான். மனைவி கேட்குமளவு இருக்காது பார்த்திபன் செயல், அவள் கையிருப்பு சற்று வற்றிவிட்டாலும் அவள் கேளாமல் கையில் பெரிய தொகையைக் கொடுத்துவிடுவான். இருந்தாலும் தன்னுடைய பணம் என இருப்பது அவளுக்கு ஏதோ பலம் வந்தது போலிருந்தது.

“நல்லா இருக்கு மாமி, ஆனா கம்ப்ளீட்டா ஆர்டிஃபிஷியலா இருக்கு.” என்றான் யோசனையாக.

கணவன் கூறவும் தானும் யோசித்தவள், “அப்போ ஏதாவது மாத்த சொல்றேளா?”

“ஆமா கொஞ்சம் ஃப்ளவர்ஸ் ஆட் பண்ண முடியுமான்னு பாரு.” என்றவன் குளித்து மீண்டும் வரும் பொழுது செய்த திருத்தங்களைக் காட்டினாள்.

“அடடே! என் மாமி அசத்திட்டா… ம்ம்ம்… பூ வைக்கிறதை விட இது வித்தியாசமா இருக்கு.”

“ஆமா… ஏற்கனவே வொய்ட், எல்லோ கலர்லதான் லைட் குடுக்குறோம், இப்போ பூவையும் அதையே குடுத்தா நல்லா இல்ல. அதான் கொஞ்சம் ஆத்தன்டிக் லுக் குடுக்க செடி, வாழையிலை இப்டி வித்தியாசமா அலங்காரம் பண்ணலாம்னு தோனுச்சு.”

யோசிக்காமல் குனிந்து மனைவியின் கன்னத்தில் இதழ் பதித்து, “நீ எப்பவும் டக்கர் தான்டி என் அழகு மாமி!” எப்பொழுதும் கன்னத்து முத்தத்திற்கே முறைப்பவள், இப்பொழுது இத்தனை நெருக்கத்தில் வந்து நின்றும் எதுவும் பேசாமலிருக்க அறையை முழுதாய் பார்த்தான்.

மகள் இல்லை, “இது தெரிஞ்சிருந்தா பலமா கவனிச்சிருக்கலாமே…” கிறக்கத்தோடு மனைவியை நெருங்கியவனை சிரிப்போடு தள்ளி நிறுத்தினாள்.

“பசிக்கிது நேக்கு, வாங்கோ சாப்பிட போகணும்.” என்றாள்.

“ம்ம் போகலாம்…” டீஷர்ட் அணிந்து வந்தவன், “வசந்த்துக்கு ஒரு வரன் வந்துருக்கு ஆராமா, அதைபத்தி அப்பாகிட்ட பேசணும்.” என்றான்.

“அவருக்கு இருபத்து ஆறு வயசு தானே ன்னா ஆகுது. இன்னும் கொஞ்சம் ஸ்டேபிள் ஆகட்டும். கையிருப்பு கொஞ்சம் வச்சுக்கட்டுமே…”

“இல்ல ஆரா, அவன் நடவடிக்கை எனக்கு சரியா படல. கல்யாணம் பண்ணி வச்சிடலாம், அதான் அவனுக்கும் நல்லது, வீட்டுக்கும் நல்லது.” பார்த்திபன்.

“அவர் நடவடிக்கை அப்டி எல்லாம்…” ஆரபி.

“நான் சொன்னா ஏதாவது அர்த்தம் இருக்கும் மாமி, வா போகலாம்.” பார்த்திபன்.

மனைவியைப் பிடித்து இழுத்து வந்தவன் குடும்பத்தினரோடு இரவு உணவை முடித்து, வீட்டினர் முன்பு அந்த பெண்ணின் குடும்பத்தைப் பற்றிய தகவலை வைத்தான்.

“பொண்ணு பேர் பூஜா, பிஈ படிச்சிருக்காங்க. அப்பா தமிழ்நாடு பார்மசி ஓனர். ரெண்டு தலைமுறையா இதே மெடிக்கல் தான் வச்சிருக்காங்க. நல்ல பேர் உள்ள மெடிக்கல். எந்த நேரமும் வியாபாரம் ஓடிட்டேதான் இருக்கும். மெடிக்கல் பக்கத்துல இருக்க பெரிய காம்ப்ளக்ஸ் இவங்களோடது தான். நல்ல வசதிதான், அந்த பொண்ணு அவங்க அப்பாகூட பிஸ்னஸ் பண்ணணும்னு ஆசைப்படுது போல. அதான் உள்ளூர்ல மாப்பிள்ளை தேடுறாங்க. பொண்ணு கூட பொறந்தது ஒரு அக்காதான்.

கரூர்ல கல்யாணம் பண்ணி குடுத்துருக்காங்க. நம்ம ஆஃபீஸ்ல தான் ஐடி ஃபைல் பண்ணுவாங்க. நல்ல மனுஷன், அடக்கமானவர். அந்த பொண்ண கூட நான் நேர்ல பாத்துருக்கேன் ம்மா. நல்ல பொண்ணு, நல்ல குடும்பம், யோசிக்காம பொண்ணு எடுக்கலாம்.”

மகன் கூறுவதைக் கேட்ட பெற்றோர் இருவரும் வசந்த்தைப் பார்க்க அவன் முகத்தில் திருப்தி இல்லாத பாவனை.

“என்னடா யோசனை?” என்றான் பார்த்திபன்.

“அதான, பொண்ணு நல்ல பொண்ணா தான் இருக்கா. என்னடா யோசிக்கிற?” என்றான் கிரிதரனும்.

கமலவல்லியும் பெண்ணைப் பார்த்து புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட, ஆரபியும் அப்பொழுதுதான் பார்த்தவள், “பொண்ணு லட்சணமா இருக்காங்கல்ல க்கா?” கமலவல்லியிடம் கேட்டாள்.

“ஆமா தம்பி யோசிக்காதிங்க, நல்ல பேக் கிரௌண்ட், குடும்பத்து பொண்ணு மாதிரி லட்சணமா இருக்கா.” தங்கையை ஆமோதித்து வசந்த்திடம் புதிய தங்கைக்காக பரிந்து பேசினாள் கமலவல்லி.

“எல்லாம் ஓகேதான் அண்ணி, ஆனா பொண்ணு கொஞ்சம் கலர் கம்மியா தெரியிறாளே…” என்றான் வசந்த் நாடியைத் தேய்த்து.

“சார் என்ன தீ கலரோ?”

கிரி சகோதரனைப் பார்த்து கோவமாக கேட்க, “அதான… அந்த பொண்ணு உன்னை பாத்து அதே சொன்னா என்னடா பண்ணுவ?” என்றார் அன்னையும்.

“அவளை விட நான் கலராதான் இருக்கேன். இல்லனா என்ன, கொஞ்ச நாள் சும்மா விட்டுடுங்க. இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்.”

“இந்த போட்டோ எல்லாம் எடுத்துட்டு வந்தது உன்கிட்ட காமிக்க மட்டும்தான் வசந்த். உங்கிட்ட பெர்மிஷன் கேக்க இல்ல. எனக்கு வீட்டுல இருக்கவங்க அனுமதி மட்டும்தான் தேவை.” பார்த்திபன்.

“டேய் இது என் கல்யாணம். நான் முடிவெடுக்காம நீயா என்னமோ பண்ணிட்டு இருக்க…” வசந்த் கோவமாக எகிறினான் சகோதரனிடம்.

“உனக்கு நல்லது செய்றேன், புரிஞ்சுப்ப நீ.” பார்த்திபன்.

“என்ன புரிஞ்சிப்பேன்? ஆ…? என்ன புரிஞ்சுக்கணும்? உனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கையை நீ செலக்ட் பண்ணிக்குவ, எனக்கு அந்த உரிமை இல்லையா?” வசந்த்.

“வசந்த்…!” வித்யா

“சும்மா என்ன அதட்டுற வேலை வேணாம் ம்மா. அது என்ன அவனுக்கு ஒரு ரூல்ஸ் எனக்கு ஒரு ரூல்ஸ்?” வசந்த்.

ராஜேந்திரன், “உனக்கு எது வேணுமோ அதை மட்டும் பேசு வசந்த், தேவையில்லாம பார்த்திபனை இழுக்காத. நீ பேசுறது மருமகளுக்கு மனசு கஷ்டமாகும்.”

உடனே ஆரபியைப் பார்த்து, “சாரி அண்ணி!” என்றுவிட்டான் வசந்த்.

“இருக்கட்டும் தம்பி.” என்ற ஆரபி கணவனிடம், “அவருக்கு விருப்பமானதை செய்யலாம், நீங்க ஃபோர்ஸ் பண்ணாதீங்கோ ன்னா.” கண்களாலே கெஞ்சினாள் கணவனிடம்.

“அப்டிலாம் விட முடியாது ஆரா. அவனுக்கு என்ன தெரியும்? நாமதான் பேசி புரிய வைக்கணும்.” மனைவியையும் அமைதிப்படுத்தி, பெற்றோரைப் பார்த்தான் சகோதரனுக்கு புரியவைக்கும்படி.

மகனின் கண்ணசைவை புரிந்த ராஜேந்திரன், “சரிடா… பொண்ணு கலர் கம்மினு நீ சொல்றதெல்லாம் நொண்டி சாக்குனு எனக்கு தெரியிது. சரியா ஒரு காரணம் சொல்லு வேணாம்னு, நானே சொல்றேன்.”

“குறை எதுவும் இல்ல ப்பா, ஆனாலும்…” வசந்த்.

“ஆனா என்னடா, லவ் பண்றியா யாரையும்?” வித்யா.

உடனே, “இல்லை…” என்றான்.

“அப்றம் என்ன? ஜாதகம் பாக்கலாம், பொருத்தம் இருந்தா பேசிடலாம். முதல்ல விரும்பி கேக்குற இடத்தை தட்டி கழிச்சா அடுத்தது தள்ளி போய்கிட்டே இருக்கும்.” தந்தை.

“நான் பாத்துட்டு தான்ப்பா வீட்டுக்கு வந்தேன். எல்லாம் நல்லா இருக்கு, தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்லிட்டார் ஜோசியர். இனி நாமதான் பொண்ணு வீட்டுல பேசணும்.” பார்த்திபன்.

“வசந்த் என் மேல கோவம் எதுவும் இல்லையே…?” சகோதரன் முகம் பார்த்து பார்த்திபன் கேட்க,

கிரி, “அவன் எதுக்குடா கோவப்பட போறான்? அவன் நல்லதுக்கு தான செய்றோம், புரிஞ்சுக்குவான்.”

சகோதரர்கள் பேசிக்கொண்டிருக்க வசந்த் முகம் இன்னும் தெளிச்சியாகவில்லை. எழுந்து அண்ணிகளின் உதவியை நாட சமையலறை அருகே இருந்த உணவு மேஜைக்கு வந்துவிட்டான்.

ஆரபி பால் காய்ச்சிக் கொண்டிருக்க, கமலவல்லி திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை யோசித்து ஆரபியிடம் பட்டிலியலிட்டுக் கொண்டிருந்தாள்.

தனக்கு எதிரே வந்து அமர்ந்த கொழுந்தனின் முகத்தைப் பார்த்தே புரிந்துகொண்ட கமலவல்லி, “என்ன தம்பி இன்னும் யோசனைலயே தான் இருக்கீங்க போல?”

இப்பொழுது தன்னுடைய அமைதியை உடைத்து, “உங்களுக்கு அண்ணன் இருக்காங்க, ஆரபி அண்ணிக்கு தம்பி இருக்கான். நாள பின்ன ஒரு சப்போர்ட்க்கு வந்து நிப்பாங்க. உங்க பசங்களுக்கு தாய் மாமா சீர் செய்ய… சரி, சீர் கூட வேணாம். சபைல வந்து நிக்க ஆள் இருக்காங்க. ஆனா இந்த பொண்ணுக்கு அக்காதான இருக்காங்க.”

வசந்த் பேசுவதை கேட்ட கமலவல்லி அதிர்ந்து ஆரபியைப் பார்க்க, அவளும் தான் கேட்டது எல்லாம் உண்மையா என்னும் சந்தேகத்தில் கமலவல்லியை தான் பார்த்து நின்றாள்.

வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது முக்கியமாக பேசிக்கொண்டிருந்தால் கூட, எதிலும் பங்கு கொள்ளாமல் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருப்பான். வித்யா கூட பலமுறை இவன் எப்பொழுது தான் விளையாட்டு தனத்தை விட்டு பொறுப்பாக வருவானோ என புலம்பியது உண்டு. ஆனால் இப்பொழுது நிற்பவன் முற்றிலும் மாறுபட்டு தெரிகிறான்.

வீட்டின் பெரியவர்கள் கூட இதனை யோசிக்கவில்லை. மகனின் வாழ்க்கையைப் பற்றி யோசித்து நடக்கப்போவதை பார்க்க ஆயத்தமாகிவிட்டனர். இவன் என்ன இத்தனை ஆழமாய் யோசிக்கிறான், இப்படி எல்லாம் யோசிக்க தெரியுமா என்கிற அதிர்ச்சி வந்தது பெண்கள் இருவருக்கும்.

“இத்தனை நாள் நீங்க எதுவும் யோசிக்கலனு ஃபீல் பண்ணிட்டு இருந்தோம், இப்போ ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்கனு ஃபீல் பண்ண வச்சிடாதீங்க தம்பி.” சிரித்தவள், “இப்டி எல்லாம் கூட உங்களுக்கு யோசிக்க தெரியுமா தம்பி?” கமலவல்லி அதிர்ந்து கேட்க,

“அண்ணி உலகமே தெரியாம தான் இருப்பேன்னு நினைக்கிறீங்களா?” என்றான் வசந்த்.

“உலகம் தெரிஞ்சா இப்டி எல்லாம் யோசிக்க மாட்டிங்க தம்பி. பொதுவாவே ஒரு பொண்ணு ஆத்துகார்கிட்ட இருந்து அன்பை தாண்டி தன்னோட பெத்தவா மேல அக்கறை காட்டணும்னு அதிகம் எதிர்பாப்பா… இதுல யோசிங்க, ஆண் குழந்தை இல்லாத வீட்டுல அந்த பொண்ணோட எதிர்பார்ப்பு எந்த அளவு இருக்கும்னு. அவாளை மாமனார், மாமியார்னு நினைக்காம அம்மா, அப்பாவா யோசிச்சு மரியாதையா உரிமையா நடந்துக்கோங்கோ. அவ்வளவுதான், அந்த பொண்ணோட மனசு மொத்தமும் உங்ககிட்ட வந்துடும்.”

கமலவல்லி, “ஆரபி சொல்றது சரிதான் தம்பி. பொதுவாவே பொண்ணுங்க மட்டும் இருக்க வீட்டுல அந்த பொண்ணோட மனசுல ஒரு விதமான பயம் இருந்துட்டே இருக்கும். தன்னோட புகுந்த வீட்டுல எப்படி இருப்பாங்களோ, அம்மா, அப்பாவுக்கு ஒரு ஹெல்ப் பண்ண விடுவாங்களா, அவங்களுக்கு எதுவும் தேவைனா கணக்கு பாக்காம செய்வாங்களானு இப்டி ஏகப்பட்ட குழப்பம். இப்டிபட்ட நிலமைல நான் உன் அம்மா, அப்பாக்கு ஒரு பையன்தான்.

பையன் இல்லாத குறைய நான் தீத்து வைக்கிறேன்னு நம்பிக்கையை உன் ஆக்டிவிட்டீஸ்ல காட்டு. அப்றம் பாரு, உலகத்துல உன்ன மாதிரி சந்தோசமான ஆள் இருக்க முடியாது. அந்த பொன்னும் உன் மேல அவ்ளோ பிரியத்தை வைப்பா… இத விட வேற என்ன வேணும் ஒருத்தருக்கு சொல்லு?”

வசந்த்தின் முகத்தில் இருந்த யோசனையைப் பார்த்த ஆரபி, “சரியா சொன்னேள் க்கா… ஆண் துணை அதிகமில்லாத இடத்துல உரிமையா நான் இருக்கேன்னு சொல்றது எவ்ளோ பெரிய விசயம்னு தெரியுமோன்னோ… அதுவும் அவா அவாளோட கடைல இருக்குறதுக்கான காரணமும், அவா தோப்பனாரை நினைச்சுதான். இதுவே போதும், அந்த பொண்ணோட மனசை புரிஞ்சுக்க. சீர் செய்ய அவா வீட்டுக்கு என்ன குறைச்சல்?

அப்டியே சீர் செய்யலனாலும் என்ன? அதை நம்பிதான் நீங்க இருக்கேளா? இல்ல, அவாளோட வீட்டுல இருந்து வர்ற காசை நம்பிதான் நீங்க இருக்க போறேளா? தாய் மாமன் முறைக்கு அக்காவோட அண்ணா இருக்கா, என் தம்பி இருக்கான். உங்கள கல்யாணம் கட்டிண்டா அவா எங்க தங்கச்சிதான். ஏன் அந்த பொண்ணுக்கு தம்பி இருந்தாதான் உங்களுக்கு சப்போர்ட் வருமா? ரெண்டு பெரிய அண்ணன் பயில்வான் மாதிரி இருக்கா. ஒரு செகண்ட் கண்ண மூடிண்டு யோசிச்சா கண்ணு முன்னாடி வந்து நிக்க போறா என்ன க்கா?”

கமலவல்லி, “ஐயோ! உங்க அண்ணா என் காலை அமுக்கிவிட்டுட்டு இருக்கும் போது, நீங்க நினைச்சா நான் விட மாட்டேன் ப்பா.” கேலியாக கமலவல்லி கூற, மற்ற இருவரும் சிரித்துவிட்டனர்.

“ம்ம்ம்… இன்னோன்னு யோசிச்சியா வசந்த், எங்க வீட்டுல எல்லாம் எங்களுக்கு போனா போகுதுனு கொஞ்சம் நகை குடுப்பாங்க. ஆனா உங்களுக்கு சரி பாதியான சொத்தும் பங்கா வருது, டபுள் தமாக்காதான்.”

விளையாட்டாக பெரியவள் கூற, “பணம் எல்லாம் நான் யோசிக்கல அண்ணி, எப்டியோ என்னை பேசி பேசியே சமாளிச்சிடுங்க நீங்க…”

சலிப்போடு அவன் கூறி குழந்தைகளைத் தேடி ஓடிவிட, ஆரபி முகம் எல்லாம் சிரிப்போடு, “அக்கா, தம்பி ஓகே சொல்லிட்டா…”

அத்தனை ஆர்ப்பரிப்பு பெண்ணிடம், “நீங்க ஷாப்பிங் பிளான் போடுங்க, நாம வேகமா கிளம்ப வேண்டி வரும் போல…” வசந்த்தின் சம்மதத்தை வீட்டினரிடம் சென்று கூற, அப்பொழுதுதான் பார்த்திபன் முகத்தில் இருந்த இறுக்கம் அகன்றது.

திருமணத்தைப் பற்றிய பேச்சுகள் முழு வீச்சில் இருக்க, அன்று அனைவருக்கும் பொழுது போனதே தெரியவில்லை.

“புரட்டாசி முடியட்டும் ப்பா, போய் உறுதி பண்ண பூ வச்சிட்டு வந்துடலாம். கையோட அவங்க விருப்பத்தை கேட்டு கல்யாண நாளையும் குறிச்சிடலாம்.”

அனைவரும் ஆமோதிக்க, குழந்தைகள் இருவரும் பெரியவர்கள் மடியிலே தூங்கிவிட, இருவரையும் தங்களோடு வைத்துக் கொள்வதாக கூறி வித்யா, ராஜேந்திரன் குழந்தைகளை தங்களது அறைக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!