Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedசிறகு நீட்டும் நேரம்

சிறகு நீட்டும் நேரம் – 1

சிறகு நீட்டும் நேரம்

 

 

அத்தியாயம் 1



Advertisement

               பாம்… என்று ரயில் வண்டி சத்தம் அருகில் இருக்கும் ரயில் நிலையத்தில் இருந்து வந்து அவன் காதை எட்டினாலும் அவன் எழுந்தபாடில்லை, அதற்கு காரணம் அவன் அந்த ரயில்வே காலனியில் பல ஆண்டுகள் குடியிருந்ததால் இந்த மாதிரியான சத்தங்களுக்கு அவன் காதுகள் பழக்கப்பட்டு விட்டது, அதனால் இந்த பெரும் சத்தத்திற்கு எல்லாம் எழுந்திரிக்க வேண்டும் என்று அவன் மூளை செய்தி அனுப்பாது.

 

      ஆனால் தனம், “மாமா எந்திரிங்க பாப்பாக்கு ஸ்கூலுக்கு நேரம் ஆகுது நீங்க தான் கொண்டு போய் விடணும் எந்திரிங்க… விட்டா தூங்கிட்டே இருப்பாரு மனுஷன்” என்று அவன் மனைவி அடித்தொண்டையில் கத்திய கத்தில் அவன் மூளை செயல்புரிய தொடங்கியது, குப்புறப் படுத்திருந்த ராஜ் தடாலடியாக எழுந்தான்.

Advertisement

 

Advertisement

          “ஏண்டி இப்படி காட்டு கத்து கத்துற உன்னால புள்ள பயபடலாம் நான் பயப்படலாமா, வர வர எங்கம்மா மாதிரியே மாறிட்டு வர்ற எனக்கு என் சைல்ட்ஹூட ஞாபகப்படுத்துற சரியில்ல பாத்துக்கோ” என்று அவன் சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியே வர அவன் சொன்னதை கேட்டு புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி, தனலட்சுமி. 

 

         “என்ன பாத்தா உங்களுக்கு பயமா மாமா ஏன் மாமா காலைலயே காமெடி பண்ணிக்கிட்டு போங்க மூஞ்ச கழுவிட்டு போய் புள்ளைய ஸ்கூல்ல விட்டுட்டு வாங்க” என்று அவளும் காலை வேளையின் அந்த பரபரப்பு மறந்து இயல்பானாள். அவனும் அவள் சிரிப்பில் கரைந்து இயல்பாய் அவன் பணியை செய்யத் தொடங்கினான், அந்த ரயில்வே ஊழியன், ராஜ்குமார்.

Advertisement

 

            ராஜ்குமார் தனலட்சுமி  தம்பதி திருமணம் முடிந்து 6 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்தவர்கள், அதற்கான காரணத்தை இப்போதே பார்த்தோமே… இருப்பினும் அவர்களின் வாழ்வை வெற்றி என்று அறிவிக்க சுற்றத்தாருக்கு ஏதேனும் வேண்டுமே இல்லை தம்பதியின் நிம்மதியை குலைத்தது விடுவார்களே… ஆகா அதற்கும் பதில் சொல்லி விட்டார்கள் 5 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும் இருக்கிறாள். ராஜ்குமார்க்கு  ரயில்வே பட்டறையில் வேலை மத்திய அரசு சம்பளம் அது போதாதா குடும்பம் நடத்த என்று தனமும் இல்லத்தரசியாக சந்தோஷமாக இருந்துவிட்டாள். உண்மையில் அவள் அந்த வீட்டின் அரசி தான் ஒரு அரசி தன் நாட்டு மக்களை கவனிப்பது போன்று இவளும் தன புகுந்த வீட்டாரை கவனித்து கொள்வதால் அவளும் அந்த வீட்டின் அரசியாகவே ஆனாள்.  

 

***

           “ஹலோ… ஹலோ… கேக்குதா… ஹலோ ஹலோ… கேக்குதா… என்னடா போன் இது, முன்னாடி ஒரு போன் வச்சிருந்தேன் அது நல்லா வேலை பாத்துச்சி இவன் குடுத்த பழைய போன் கொஞ்சம் கூட வேலை செய்ய மாட்டேங்குது” என்று வீட்டு வாசற்படியில் அனமர்ந்து டச் சிகிரீன் போனை தட்டி குலுக்கி அந்த சிக்னல் இல்லாத தொலைபேசியை உயிர்ப்பித்து கொண்டிருந்தார் செல்லம்மா. இவரே ராஜ்குமாரின் தாய் இவர் தனியாக ராஜ் வளர்ந்த ஊரிலேயே வசிக்கிறார். அது ஒரு விவசாயம் செய்யும் மக்கள் வாழும் ஊர் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த, நகரத்தை போல் மாற முயற்சி செய்து கொண்டிருக்கும் கிராமமும் கூட, அதனாலே வயதானவர்கள் கையிலும் ஆண்ட்ராய்டு மொபைல்.

            அதே சமயம் அவரை காண வந்தான் ஒரு இளைஞன், “என்ன அம்மா போன போட்டு தட்டிகிட்டே இருக்கீங்க என்ன ஆச்சி” என்றபடி அருகில் வந்தான். தெரிந்த குரல் கேட்டதும் போன்னிலிருந்து கண்ணை அகற்றி எதிரில் நின்றிருந்தவனை பார்த்தார் அந்த கிட்டத்தட்ட அறுபது வயதான பெண்மணி.

            “வா… வேலு… உள்ள வா… எப்படி இருக்க? என்னப்பா அதிசயமா இந்த பக்கம்? ராஜ் கூட ஊருக்கு வரலையே” என்று இன்முகத்தோடு வரவேற்றார் செல்லம்மா. அவர் கேட்டுக்கொண்டதால் அவனும் வீட்டினுள் சென்றான், அவரும் விரைந்து அடுக்களை ஓடி மோருடன் வந்தார்.

         பழக்கப்பட்ட வீடு என்பதால் எந்த தயக்கமும் இன்றி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் அவர் கையில் இருந்த குவளையை கண்டு, “எதுக்குமா இது எல்லாம் வேத்து ஆள் மாதிரி எனக்கு இதை எல்லாம் கொண்டுவர்றீங்க… நான் உங்களுக்கு ராஜ் மாதிரி தான…” என்று சிரித்துக் கொண்டுதான் கேட்டான்.

செல்லம்மாவும் சற்றும் யோசிக்காமல், “அதே தான் என் மகன் மாதிரி தான் நீயும்… அவனும் வெயில்ல போயிட்டு வந்தா குடிக்க ஏதாவது குடுக்க மாட்டேனா… அது தான இதுவும்… சரி இதை முதல்ல குடிச்சிட்டு வந்த விஷயத்தை அப்பறம் பேசு இந்தா” என்று அவன் கையில் அந்த மோர் குவளையை திணித்தே விட்டார்.

“அதான யாருக்கு எப்படி பதில் தரணும்ன்னு உங்களுக்கு தெரியாதா என்ன” என்றுவிட்டு குடிக்க தொடங்கினான்.

“அட ஏன்பா நீ வேற” என்று அந்த பெரிய மனிதியும் சிரித்துவிட்டார். மேலும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து அவர்கள் இல்லத்தார் பற்றியும் விசாரித்து முடிந்தாகி விட்டது. அடுத்து அவன் வந்த விஷயத்துக்கு வந்தான்.

“அம்மா நான் கேக்குறேன் மறுக்க கூடாது… என் பொண்டாட்டிக்கு வளைகாப்பு வச்சிருக்கேன் நீங்க கட்டாயம் வரணும், வந்து எங்க ரெண்டு பேரையும் ஆசிர்வாதம் பண்ணனும், கல்யாணத்துக்கு கூப்பிட்டேன் வரலை ராஜை  மட்டும் குடும்பத்தோட அனுப்பி இருந்தீங்க குடும்பம்நா நீங்களும் தான அம்மா வரணும் ஆனா வரலை சரி அடுத்த விசேஷத்துல பாத்துப்போம்ன்னு விட்டுட்டேன்”  

உங்கள நான் எவ்வளவு உயர்வா நினைச்சி வச்சுருக்கேன் ஆனா நீங்க என் வீட்டு விசேஷத்துக்கு வர மாட்டேங்குறீங்க எங்க அப்பாரு போன பிறகு நான் செஞ்ச விவசாயத்தால குடும்பத்துக்கு நஷ்டம் வந்தப்போ நீங்க தான் ராஜ்கிட்ட பணம் கொடுத்து எனக்கு உதவ சொன்னீங்க எனக்கு விவசாயமும் சொல்லிக் கொடுத்து என்ன இப்ப நல்ல நிலைமைக்கு வர வச்சுருக்கீங்க… நான் கஷ்டப்பட்டப்போ ஒரு சொந்தக்கார பய கூட எட்டி பாக்கல இப்ப என் வீட்டு விசேஷத்துக்கு என் சொந்தம் தான் என் வீட்டு முன்னாடி வந்து கிடப்பான்… சரி அது அவன் பாடு அவங்க வந்தாலும் வரலைனாலும் எனக்கு கவலை இல்ல ஆனா நீங்க வரலைநா நான் ரொம்ப வருத்தப்படுவேன்… இப்ப சொல்லுங்க வருவீங்க தானே”

 

“அட என்னப்பா நீ என்ன இப்படி தர்மசங்கடமாக்குற… நான் ஏன் வரமாட்டேங்குறேன்ன்னு உனக்கு தெரியாதா? ஊரும் உறவும் என் காதுப்படவே என் கோலம் பத்தி பேசும்… பழசு எல்லாம் நியாபகம் வரும், உன் அம்மா, அக்கா, பொண்டாட்டி கூட உன்ன மாதிரி யோசிக்க மாட்டாங்க, சந்தோசமான இடத்துல இவை எதுக்கு வந்தான்னு தான் நினைப்பாங்க. நீ இதை புரிஞ்சிக்கணும்… நீ என்ன இவ்வளவு தூரம் தூக்கி வச்சி பேசுறது சந்தோசம் ராஜ் கூட இப்ப என்ன மதிச்சு பேசமாட்டான் நீ இப்படி இருக்குறது எனக்கு பெரும் ஆறுதல் கட்டாயம் வளைகாப்புக்கு ராஜையும் தனத்தையும் வர சொல்றேன் அதுக்கு மேல என்னை வற்புறுத்தாதே” என்று அவர் முடிக்க அவன் வாடிய முகத்துடன் எழுந்து கொண்டான்.

 

அப்போது ஒரு நடுத்தர வயது மதிக்கதக்க நபர் அந்த முன் அறைக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்த வாசலை அடைத்துப்படி வந்து நின்றார். ‘யாரது வெளிச்சத்தை மறைக்கிறது’ என்பது போல இருவரும் திரும்பிப் பார்க்க… அந்த நபரோ, “நல்லாஇருக்கீங்களா… என்ன தெரியுதா நான் பாஸ்கர்” என்று சொன்னதும் தான் செல்லம்மாவுக்கு அந்த மனிதரை அடையாளம் தெரிந்துவிட்டது. யாரால் அவர் வாழ்வு அழிந்ததோ அவரையே கண்முன் கண்டதும் அதிர்ந்து நின்றார்.         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!