Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மகரந்தம் தாங்கும் மலரவள்

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 14

அத்தியாயம்-14

நேத்ராவுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நந்தகுமாருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி. அந்த சந்தோஷத்தில் வந்தவனிடம்,



Advertisement

“என்ன அண்ணா ரொம்ப அமைதியா வர்ற, உனக்கு பிடிச்சிருக்கு தானே” என்றாள் நேத்ரா.

“ம்ம் ஏன் பிடிக்கலைன்னா, உடனே பிரேக் அப் பண்ணிப்பியா என்ன?” என்ற நந்தனிடம் அமைதி காத்தவள், “அண்ணா நெஜமாவே உனக்கு பிடிக்கலையா” என்றாள் பயத்துடன்.

Advertisement

Advertisement

“ஹே குட்டி பிசாசு, அதெல்லாம் ரொம்ப நல்ல மாதிரியா தெரியுறாரு, உன் மேல ரொம்ப பாசமா இருக்காரு, விட்டா இப்போவே உன்னை தூக்கீட்டு போயிடுவாரு போல” என்ற நந்தனிடம்,

“பின்ன ஏண்ணா, அமைதியா வர்ற” என்றாள்.

Advertisement

“அப்பா அம்மா கிட்ட பேச வேண்டாமா, அது தான் எப்படி பேசுறதுன்னு யோசிச்சுகிட்டே வரேன், மச்சான் வேற இன்னைக்கே பேச சொல்லீருக்காங்க” என்றவனிடம்,

“இன்னைக்கே வா” என்று வாய் பிளந்தாள் நேத்ரா.

வீட்டிற்கு வர நேரம் இரவு ஒன்பது மணியை தொட்டிருந்தது. வீட்டில் ரேணுகாவும் ஈஸ்வரமூர்த்தியும்   இவர்கள் இருவரையும் எதிர்பார்த்துக் காத்திருக்க, வீட்டினுள் நுழைந்த இருவரையும் ஈஸ்வரமூர்த்தி,

“என்ன நந்தா எங்க போனீங்க ரெண்டு பேரும், என்றவர் இருவரும் மௌனம் காக்கவும் சரி ரெண்டு பேரும் போயி தூங்குங்க, காலையில வேலைக்கு போகணும்ல” என்றவர் பேசிக்கொண்டே அவர் அறைக்கு செல்லத் திரும்பினார்.

ஈஸ்வரமூர்த்தி உறங்கப் போவதை உணர்ந்த நந்தன் “அப்பா உங்க கூட கொஞ்சம் பேசணும், அம்மா நீங்களும் வாங்க, ரெண்டு பேரும் உக்காருங்க” என்றவன் நேத்ராவைப் பார்த்தான்.

நேத்ரா அமைதியாக நந்தன் பின்னால் வந்து நிற்கவும், தொண்டையைச் செறுமியவன்,”அப்பா நம்ம நேத்ராவுக்கு எப்போ கல்யாணம் பண்றதா இருக்கீங்க” என்றான்.

ஈஸ்வரமூர்த்தி பதில் சொல்லும் முன் ரேணுகா,”என்ன கல்யாணமா? இப்போ தான் படிப்பை முடிச்சு ஆறு மாசம் ஆகுது, அதுக்குள்ளே என்ன அவசரம்.

என்னோட பொண்ணு அவளோட கையாள சம்பாரிச்சு அவளுக்குன்னு ஒரு பெரிய தொகையை கையில வச்சுக்கிட்டு தான் கல்யாணம் பண்ணுவா, அப்போ தான் அவளுக்கு போற வீட்ல மரியாதை இருக்கும்” என்றார்.

“அம்மா நீ சொல்றதெல்லாம் செய்யணும்னா அவளுக்கு இன்னும் அஞ்சு இல்லன்னா ஆறு வருஷம் தேவைப்படும், அதுக்குள்ளே அவளுக்கு வயசாகிடும், அப்புறம் கிழவனை தான் புடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்றான் நந்தன் பொங்கி வந்த கோபத்துடன்.

“அதுனால என்ன…” என்று மேலும் ஏதோ சொல்ல வந்த ரேணுகாவின் பேச்சை நிறுத்திய ஈஸ்வரமூர்த்தி,

 “ரேணுகா நீ கொஞ்சம் பேசாம இரு, நந்தா நீ சொல்லு பா, நேத்ராவுக்கு ஏதாவது மாப்பிள்ளை பாத்திருக்கியா?” என்றார்.

“ஆமாம்ப்பா… அது…. நம்ம நேத்ரா படிச்ச காலேஜ் இருக்குல்ல அதோட சேர்மன் பையன்…” எனவும்,

“என்னப்பா சொல்ற… பெரிய இடமா சொல்ற மாதிரி இருக்கு, அதுக்கெல்லாம் எனக்கு சக்தி இல்லப்பா, ஏதோ நம்ம சக்திக்கு முடிஞ்ச மாதிரி இடமா இருந்தா பரவாயில்லை, அவங்க அதிகமா எதிர்பாத்தா என்னால முடியாது நந்தா, உனக்கே தெரியும்ல  ” என்றார்.

ரேணுகாவும் “ஆமாமா, அதுவும் பெரிய இடம்னா அவங்க சொல்றத தான் நாம கடைசி வரைக்கும் கேக்கணும், நமக்கு சுத்தமா மரியாதையே இருக்காது” என்றார்.

ரேணுகாவின் பேச்சில் கோபமுற்ற நந்தன் “அம்மா, வாழப் போறது நேத்ரா…. அவளுக்கும் வயசாகுது அவளுக்கு என்ன வேணுன்னு அவளை முடிவு பண்ண விடுங்க, அவள் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல,

 சும்மா நீங்களே அவளோட வாழ்க்கையை முடிவு பண்ணாதீங்க என்றவன் நிறுத்தி அப்பா நேத்ராவும் காலேஜ் சேர்மன் பையன் நளனும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க” என்றான்.

நந்தன் கூறியதும் ஈஸ்வரமூர்த்தியும் ரேணுகாவும் நேத்ராவின் முகத்தைப் பார்க்க, ரேணுகாவை பார்த்து நேத்ராவோ லேசாக தலையை மேலும் கீழும் ஆட்டினாள் தலை குனிந்தபடி.

ஈஸ்வரமூர்த்தி ஒன்றும் காதலுக்கு வில்லன் கிடையாது, ஆனால் விரும்புகிறேன் என்றதும் விசாரிக்காமல் பெண்ணை தூக்கிக் கொடுத்துவிட முடியாதே…

தொண்டையை செறுமியவர், “சரி நந்தா நீ சொல்றதும் சரிதான், இது அவளோட வாழ்க்கை நேத்ரா தான் முடிவு பண்ணனும், மொதல்ல பையன பத்தி விசாரிக்கணும், அப்புறம் அவங்க குடும்பம் எப்படின்னு விசாரிக்கணும், நம்ம தரப்புல இருந்து நாம சரியா இருக்கணும்ல, உடனே எப்படி முடிவு சொல்ல முடியும்” என்றார்.

தந்தை கூறுவதை பொறுமையுடன் கேட்ட நந்தன் “அப்பா இந்த விஷயம் நேத்துதான் எனக்குத் தெரியும், தெரிஞ்ச உடனே நானும் எனக்கு தெரிஞ்ச பிரெண்ட்ஸ் மூலமாவும் அவங்க கம்பெனில வேலை செய்யிற ஆளுக மூலமாவும் இன்னைக்கு முழுக்க விசாரிச்சுட்டேன், ரொம்ப நல்ல விதமா தான் சொல்றாங்க,

இப்போ கூட மச்சான்…. என்று நிறுத்தியவன் நளன் கூட பேசீட்டு தான் வரேன், நேத்ரா மேல உயிரையே வச்சிருக்காரு, நேத்ராவ நல்லா பத்துப்பாரு, எனக்கு அவர் மேல முழு நம்பிக்கை இருக்கு,

நீங்களும் கூட விசாரிச்சுக்கோங்க, ஆனா கல்யாணத்த சீக்கிரம் வைக்கணும்னு சொல்லறாரு…” என்ற நந்தனிடம்,

நந்தன் கூறியதில் சற்று தெளிவு பெற்றிருந்த ஈஸ்வரமூர்த்தி, கல்யாணத்த சீக்கிரம் வைக்கணும் என்ற நந்தனின் கூற்றில் “ஏன் நந்தா அவ்வளவு அவசரம்?” என்றார் சிந்தனை முடிச்சுடன்.

“இல்லப்பா அவங்களுக்கு ஆன்சைட் போற மாதிரி வரும் போல, அதுக்கான விசா ப்ராசஸ் எல்லாம் பண்ணணும்ல, அதுவும் போகும் போதே நேத்ராவையும் கூட்டீட்டு போகணும்னு நினைக்கிறாங்க, அதான் சீக்கிரம் கல்யாணத்த வைக்க சொல்றாங்க” என்றான்.

ரேணுகாவுக்கும் இதில் உடன்பாடு இருந்தது, ஏனென்றால் பெரிய இடம், ஒரே மகன் பிக்கல் பிடுங்கல் இல்லை, மகள் சவுகரியமாக நிறைவாக வாழ்வாள், அதனால் அமைதியாக இருந்தார் ரேணுகா.

நெற்றியை நீவி யோசித்தவர் பின் ரேணுகாவின் முகம் தெளிவு பெற்றிருப்பதைக் கண்டு “சரி நந்தா, எனக்கும் சரின்னு தான் படுது” என்ன ரேணுகா உனக்கு இதுல சம்மதம் தானே என்று ரேணுகாவிடம் வினவியவர்,

 ரேணுகா சரி என்றதும் “நாளைக்கு சாயங்காலம் விநாயகர் கோவில்ல ஒரு தடவை முறையா ரெண்டு குடும்பத்தோட பொண்ணு பாக்குற மாதிரி பாத்துரலாம், நீயே மாப்பிள்ளை கிட்ட சொல்லீடு” என்றவரின் மாப்பிள்ளை என்ற உரிமையான அழைப்பில்,

அமைதியாக நந்தனின் பின்னே நின்றிருந்த நேத்ரா “தேங்க்ஸ் பா” என்று ஈஸ்வரமூர்த்தியிடம் வந்தாள்.

நேத்ராவின் தலையை வாஞ்சையுடன் கோதியவாறு “சந்தோசமா இரு டா, உன்னோட சந்தோசம் தானே எங்களுக்கு முக்கியம்” என்றவர் அவர் அறைக்குள் சென்றுவிட்டார்.

நந்தனும் எழுந்து அவன் படுக்கையறைக்கு சென்றுவிட ரேணுகா எதுவும் பேசாமல் அடுப்பறைக்குள் புகுந்தார்.

ரேணுகாவை பின் தொடர்ந்த நேத்ரா “அம்மா என் மேல கோபமா?” என்றாள் தாயின் முகமறிந்து.

“ச்சா ச்ச கோபமெல்லாம் இல்ல டா தங்கம், என்ன… இன்னும் ஒரு மூணு நாலு வருஷம் போனா உனக்கு ஒரு மெச்சூரிட்டி வந்திரும், இப்போ எல்லாமே உடனே நடக்கணும்… கல்யாணம், குழந்தை…” என்று பேசிக் கொண்டே போனவர் பின் நிறுத்தி, “தங்கம் அம்மா ஒன்னு சொன்னா கேப்பியா? என்றார் நேத்ராவின் நாடி பிடித்து,

“சொல்லுங்கம்மா நீங்க சொல்றதைத்தான் நான் இப்போ வரைக்கும் கேட்டு நடந்திருக்கேன், இப்போ வரை நல்லா தானே இருக்கேன், இனிமேலும் நீங்க சொல்றதைத்தான் கேப்பேன் ” என்றாள் நேத்ரா.

ஒரு பெருமூச்சை வெளியிட்ட ரேணுகா “அது ஒன்னும் இல்ல டா, கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா உங்களுக்காக வேலைக்கு போகாம இருந்த மாதிரி, நீ எந்த சூழ்நிலையிலும் வேலைக்கு போறத நிறுத்தக் கூடாது” என்ற ரேணுகா நேத்ராவின் முகத்தை நோட்டமிடவும்,

“கண்டிப்பா மா, இது தான் உன்னோட பிரச்சனையா? நளன் அந்த மாதிரியெல்லம் இல்ல மா, ரொம்ப நல்ல கேரக்டர், நீ ஒரு தடவை அவங்களை பாத்தா நீயே புரிஞ்சுப்ப” என்றாள் நேத்ரா.

“உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்குல்ல… போ போயி சந்தோசமா இரு, அம்மா நான் பாத்துக்கிறேன் எல்லாத்தையும்” என்றார்.

“என் செல்ல அம்மா” என்று ரேணுகாவின் கன்னம் பிடித்து ஆட்டி முத்தமிட்ட நேத்ரா அவலறைக்குள் ஓடி மறைந்தாள்.

நந்தனுடன் பேசிவிட்டுச் சென்ற நளன், அவன் காரில் செல்லும்போதே வினோத்திடம் விஷயத்தைக் கூறினான்.

பத்து பேர் அமருமளவு விசாலமான டைனிங் டேபிளில் நளன், வினோத், கார்த்திகேயன் அமர்ந்து இரவு உணவை உண்டு கொண்டிருக்க, நந்தினி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.

உணவில் கவனமாக இருந்த நளனின் கைகளை தட்டியவன் கண்களால் பேசுமாறு சைகை செய்தான் வினோத்.

நளன் உச்சுக்கொட்டவும், “அம்மா நீங்க இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொருத்தருக்கும் சேத்து சமைக்கிற மாதிரி வரும்” என்றான் வினோத்.

“யாரு பா அந்த இன்னொருத்தரு” என்ற கார்திகேயனிடம்,

வினோத்தை முறைத்த நளன் “நீ ஆணியே புடுங்க வேண்டாம்” என்று வினோத்தின் காதில் கிசுகிசுத்தவன்

 கார்திகேயனிடம் “அப்பா நான் ஒரு பொண்ண விரும்புறேன்” என்றான் குரலில் சிறு பிசிறில்லாமல், கார்த்திகேயனின் முகத்தை நேராக பார்த்து.

பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்த நளனை “அடப்பாவி, சொல்றதுக்கு தயங்குவான் நாம எதாவது ஹெல்ப் பண்ணலாம்னு பாத்தா, இப்படி பட்டுன்னு போட்டு ஒடைச்சுட்டானே” என்று மனதினுள் நினைத்தான் வினோத்.

மகனின் பதிலில் கார்த்திகேயன் அமைதி காக்கவும், நந்தினி “அப்படியா நளா யாரு என்னோட மருமக” என்றார் மகிழ்ச்சியாக.

“ஹக்கும், என்ற வினோத் அம்மா அவன் ஒரு பொண்ண விரும்புறேன்னு சொல்றான், நீங்க அவன் கூட சண்டை போடாம இப்படி ஜாலியா பேசீட்டு இருக்கீங்க” என்றான் சலிப்புடன்.

மனதார புன்னகைத்த நந்தினி “டேய் என்னைக்கு இருந்தாலும் அவனுக்கு ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வைக்க போறோம், அது அவனுக்கு பிடிச்ச பொண்ணா இருந்தா இன்னும் நமக்கு சந்தோசம் தானே” என்ற ரேணுகா “என்னங்க நான் சொல்றது சரி தானே” என்றார் கார்திகேயனிடம்.

“ம்ம் ஆமா வினோத், அதுவுமில்லாம நளனுக்கு நான் எதுவும் சொல்ல தேவையில்லை, அவனோட முடிவு சரியா தான் இருக்கும்” என்றவர்,

நளனிடம் “யாருப்பா நம்ம வீட்டு மருமக” என்றார்.

தன் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியவன் “அப்பா நாளைக்கு சாயங்காலம் கோவில்ல நாம பொண்ணு பாக்க போற மாதிரி இருக்கும், கொஞ்சம் முன்னாடி தான் நந்தன் கால் பண்ணான்” என்றான்.

Link 👉குட்டி கவிதை

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக,👇👇👇

Please Subscribe & Support🙏

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!