Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 11

நாட்கள் மிகவும் வேகமாக நகர்ந்தது.  பூர்ணிமாவும்  தமயந்தியும் நெருங்கிய தோழிகளாக மாறியிருந்தார்கள். பூர்ணிமா தமயந்தியுடன் சேர்ந்து பூமிகா எப்போது சென்னை திரும்பி வருவாள் என்றும் அவளுடன் சேர்ந்து சென்னையை சுற்றிப்பார்க்க ஆர்வமாக காத்திருந்தாள். 

அருண் படிப்பு தொழில் இரண்டையும் கையாள்வது எப்படி என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். இருந்தாலும் அது சுவாரசியமாக சென்றுக்கொண்டிருந்தது. கல்லூரிக்கு தினமும் சென்றாக வேண்டும்.  அதே சமயம் ப்ரொடக்ஷன் ஆபீஸ் என்று இருந்தால் அதை திறந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா, ஆபிஸ் நிர்வாகம்  செய்ய ஒருவரை அமர்த்தி புது படங்களை தியேட்டர்களுக்கு டிஸ்ட்ரிபியூட் செய்ய தொடங்கினான். 

தமயந்தியின் போட்டி போடும் குணம், முடிவெடுக்க தெரியாத  நேரம் சட்டென அடுத்தவர் சொல்வதை கேட்டு அதுபடி நடக்கும் குணம், பேச தயங்கும் குணம் எல்லாம் அத்துபடி ஆனது. நண்பர்களுக்காக, தங்கைக்காக பார்த்து பார்த்து தேர்வு செய்பவள் அவளுக்கென்று வரும்போது கண்டுகொள்ளாமல் செல்கிறாள். பண விஷயத்தில் சில நேரம் இறுக்கமாக இருப்பவள் நண்பர்களுக்கு செலவு செய்வது என  வரும்போது கணக்கே பார்ப்பதில்லை. தமயந்தி காலை வேளைகளில்  பாஸ்கெட்  பால் சொல்லிக்கொடுக்கும் கிரவுண்ட் சென்று பார்த்தான்.  சின்ன பையன்களுக்கு எக்ஸர்சைஸ் சொல்லிக் கொடுத்துக்கொண்டு  கிரவுண்டை ஓடவிட்டு பறந்து வரும் பாலை  எப்படி பிடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தாள்.காதல் மயக்கம் கூடியது. இவனைப் பார்த்தவள் சிரித்தாள், எதற்கு வந்தாய்? ஏன் வந்தாய்? என்றெல்லாம் கேட்கவில்லை. அப்படி அவள் கேட்டால்  என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவனாக வாய்க்கு வந்ததை பேசி வைத்தான். 

 “தூக்கமே வரல, அதான் வாக்கிங் போலாம்,  உன்னையும் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்” என்றான். அவள் கோச்சிங்  முடித்துக்கொண்டு அங்கே  பக்கத்திலேயே இருக்கும் டீக்கடை சென்று டீ வாங்கி கொடுத்தாள். அங்கே பிடித்த பிடிக்காத விஷயங்களை பற்றி எல்லாம் பேசினாள். இவனுக்கு அது சுவாரசியமாக இருந்தது. அவள் எதார்த்தமாக பழகும் விதம் சில சமயம் நமக்கு மட்டும் தான் இவ்வளவு பொங்கி வழியும் ஈர்ப்பு இருக்கிறதோ என்கிற கேள்வியை எழுப்பும். அப்படி எழும் போதெல்லாம் அவனை அவள் முதல் முறை ஸ்டுடியோவில் பார்த்த போது விரிந்த கண்களுடன் பார்த்தது நினைவுக்கு வரும். 



Advertisement

அன்று ஸ்டுடியோவிற்கு அரைமணிநேரம் தாமதமாக சென்று சேர்ந்தான் அருண். மேக் அப் ஆர்டிஸ்ட், ஃபோட்டோகிராப்பர், மேனேஜர் எல்லோருக்கும் இவன் மேல் எரிச்சல் உண்டானது. அது அவர்கள்  முகத்திலும் தெரிந்தது. இவன் அவர்களை கடந்து நடந்து உள்ளே வந்தபோது ஒல்லி பெண் ஒருத்தி அவனை பார்த்த நிமிடம் கண்கள் விரித்து பார்த்தாள். இவனும் சூழலை கூலாக்க நினைத்தவன் அவளை போலவே கண்களை விரித்து காட்டி கிண்டல் செய்துவிட்டு தயாராக சென்றான். 

ஃபோட்டோ ஷூட் தொடங்கிய பின்னும் தமயந்தியின் கண்களிலோ  முகத்திலோ கொஞ்சமும் அந்த பிரமிப்பு  குறையவில்லை. பேச பேச, நேரம்  போக போக அருண்  யாரென்றே அவளுக்கு தெரியவில்லை என்பது புரிந்தது. அவளாகவே அவளை பற்றி மேற்படிப்பு படிக்க காசு வேண்டும் அதனால் மாடலிங் செய்கிறேன் என்றாள். அவன் பெயர் தவிர அவளுக்கு வேறு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவளிடம் அதிகம் இல்லை. அவன் பின்னணி தெரிந்துகொள்ள எத்தனிக்காமல் அவனை தெரிந்த கொள்ள அவள் நினைப்பது அவள் உடல்மொழியிலேயே தெரிந்தது. “இந்த கலர் பிடிக்குமா, இத பிடிக்கலையா” என்றே கேட்டாளே  தவிர எதிலுமே அவனை கவர அவள் நினைக்கவில்லை. 

ஃபோட்டோ ஷூட்க்கு உடைகள் அலங்காரம் மாற்றி மாற்றி அணியும்போது கிரிக்கெட் விளையாட்டுக்கு ஏற்றது போல அவன் உடை அணிந்து  வந்தபோது “அழகா இருக்கு உங்களுக்கு இது ரொம்ப நல்லா மேட்ச் ஆகுது” என்றாள். இவனுக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது. அவள் பாஸ்கேட் பால் எரியும் விதம் பார்த்து மயங்கி போனான். அதிலும் போட்டோகிராபர் அவளை ஜம்ப் செய்து அந்தரத்தில் காற்றில் உடம்பை சுற்ற முடியுமா என்று கேட்க அவளும் அவர்  சொன்னது போலவே செய்தாள். பெரிய திரையில் அவள் அணிந்திருக்கும் ஷூ, கையில் இருந்து பறந்து செல்லும் பால், தூரத்தில் பந்து விழ ஏதுவான கூடை மற்றும் அவள் முகம் முழுக்க அவள்  விரிந்த கூந்தலால் மறைத்து இருக்க அவள் டி ஷர்ட்டில் அவர்கள் மாடலிங் செய்யும்  பிராண்ட் பெயர்  நியான் கலரில் மின்னுவது அழகாக தெரிந்தது. அங்கே அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலை அவளை ஆச்சிரியமாக பார்க்கவேண்டும். ஈஸியான வேலை, அவனையும் அறியாமல் அவன் அவளை அப்படிதான் பார்த்துக் கொண்டிருந்தான். மதிய உணவிற்கு இருவருக்கும் ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி, ஒரு பாக்ஸ் நிறைய வெள்ளரிக்காய் துண்டுகள் கொடுத்தார்கள். அருணுக்கு பசி, தமயந்தி  அவனிடம் “நீ சாப்பிடு எனக்கு வேணாம். திரும்பி ஜம்ப் எல்லாம் பண்ண சொன்னா நான் வாந்தி எடுத்துட்டா கஷ்டம்” என்றாள். அவன் சாப்பிட இவள் பேசிக்கொண்டே இருந்தாள். அருணுக்கு ஆச்சரியம் உண்டானது. சும்மாவே அருணிடம் பெர்சனல் தொடாமல் காசு பணம் பற்றி பேசாமல் பொதுவாக பேசும் ஆட்கள் மிகவும் கம்மி. அதிலும் பெண்கள், அரிதிலும் அரிது. இதில் இவள் அவளுக்கு பிடித்த கிரிக்கெட் பிளேயர் பற்றியும், போட்டோகிராஃபர் அவருக்கு பிடித்தது போல ஷாட் வந்தால் முகம் எப்படி மாற்றுவார் என்றும் கிண்டல் செய்து பேசிக்கொண்டிருந்தாள். நாள் முடியக்கூடாது என்றெண்ணும் அளவுக்கு அவள் மேல் ஈர்ப்பு உண்டானது. அவளிடம் எங்கு படிக்கப்போகிறாள் என்று விசாரித்து தெரிந்துகொண்டவன் 

Advertisement

நானும் அந்த காலேஜ்லதான் படிக்க போகிறேன் என்றெல்லாம் சொல்ல ஆசை வந்தாலும், கல்லூரியில் நம்மை பார்த்து இவள் ‘சர்ப்ரைஸ்’  ஆகட்டும் என்றெண்ணி அமைதி காத்தான். மனதளவில் அடுத்த இரண்டு வருடம் காலேஜில் காதல் கதை ஓட்டவும் தயாராகிவிட்டான். போட்டோஷூட்டில் இருவரும் விதவிதமாக போஸ் கொடுத்துகொண்டிருந்தாலும் மனதில் நண்பர்களிடம் தமயந்தி பற்றி எப்படி சொல்லலாம் என்றெல்லாம் யோசிக்க தொடங்கிவிட்டான். போட்டோஷூட் முடிவதர்க்கு இரவு பத்து மணி ஆனது. “இன்னும் நாலு மாசம் கழிச்சு செகண்ட் சீசன் ஷூட்டிங் இருக்கு அப்போ பார்க்கலாம்” என்று அவள் விடைபெறும் நேரம் இவனும் “ஆமா மீட் பண்ணலாம். அதுக்குள்ள கொஞ்சம் வெய்ட் போடு இல்லன்னா உன்னை ஈஸியா ஒரே கைல என்னால தூக்க முடியும்” என்று கிண்டல் செய்தான். “என் எலும்பு  வெய்ட் அதிகம் சாரே, உங்க கைதான் உடைஞ்சு போகும்” என்று பதில் சொன்னாள். இருவருக்குள் விகற்பமில்லா நட்பு உருவாகுவதை எண்ணி அவனுக்குள் வியப்பு.

Advertisement

அவள் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அவன் வண்டியில் ஏற்றிக்கொண்டு அவள் ஹாஸ்டலில் கொண்டு சென்று இறக்கிவிட்டான். 

கபிலன் வீட்டிற்கு திரும்பியவன் அடுத்து எப்போது  கல்லூரிக்கு செல்வோம் என்று காத்திருந்தான். சிரஞ்சீவியிடம் அவனுக்கு ஒரு பெண் பிடித்திருக்கிறது என்று மட்டும் தெரிவித்திருந்தான்.

கல்லூரிக்கு வந்த முதல் நாளே அவன் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் மாபெரும் இடி விழுந்தது. தமயந்தி பூமிகாவின் தோழி!! அதிலும் பூமி பழகக் கூடாது என்று சொன்னதும் சரி பழகமாட்டேன் என்று ஒதுங்கிப் போகும் நேர்மையான தோழி!!  இப்படியா இது முடிய வேண்டும் என்று நொந்து கொண்டான். ஒரு வேளை தமயந்தியுடன் அவன் நெருங்கினால் அவன் நண்பனின் பழைய காதலும் உயிர் பெறலாம் தானே!! அதை மனதில் வைத்துக்கொண்டு முன்னேறலாம் என்றால் தமயந்தியின் ‘இன்ட்ரோவர்ட்’ குணம் மாபெரும் தடையாக அமைந்தது. போட்டோ ஷூட்டில்  ஸ்டுடியோவில் தயங்கினாலும் சிரித்து சிரித்து பேசிய பெண்ணா இவள் என்று ஆச்சரியம் மிகுந்தது. 

Advertisement

அருணுக்குமே உள்ளுக்குள் ஒரு விதமான சந்தகமும் தயக்கமும் இருந்தது. அருண் ஸ்டூடியோவில் தமயந்தியை  பார்த்ததும் அவளைப் பிடித்திருக்கிறது என்று உணர்ந்ததும் அதன் மீதொரு சந்தேகமும்  உண்டானது. ஏராளாமான அழகிகளை அவன் கண்டிருக்கிறான், சிலர் மீது ஓர் பிடித்தம் வந்திருக்கிறதுதான். ஆனால் காலம் அவர்களது அசிங்கமான பக்கங்களை அவன் கண் முன் விரித்து காட்டியிருக்கிறது. தமயந்தி மீதும் வந்திருக்கும் இந்த ஈர்ப்பு பழகும்போது குறையலாம், சலித்து போகலாம் என்றே எண்ணினான். பழகிப் பார்க்கத்தான் கல்லூரி இருக்கிறதே என்று தைரியத்தில் இருந்தான். கல்லூரி வந்து அவள் பேசுவது பழகுவது பார்க்க பார்க்க  ஈர்ப்பு கூடிக்கொண்டே போனதுதான்  ஆச்சரியம்.  அவனாக இந்த பெண் கொஞ்சம் முசுடு, பேசவே பிகு பண்றா, சுற்றி இருக்கிற ஆட்களை எடை போடவே தெரியலை, சரியான கிராமத்து பொண்ணு என்று எண்ணி தவிர்க்க போனாலும் சிரஞ்சீவி அவளை கிண்டல் செய்யும்போதெல்லாம் நண்பனே ஆனாலும் அவனை பழிவாங்க துடிக்கிறது நெஞ்சம்.  தமயந்தி அவன் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கிறாள் என்பது பிடிக்கவில்லை, ஆனாலும் அவளை பற்றிய தேடலும் நிற்கவில்லை.  

சிரஞ்சீவிக்கும் அவனுக்கும் உள்ளுக்குள் எப்போதும் ஒரு போட்டி நடந்து கொண்டே இருக்கும்.கபிலனிடம் யார் பலசாலி, புத்திசாலி என்று பெயர் வாங்குவது என்று  பாக்ஸிங்கில் அடித்துக் கொள்வது தொடங்கி,ஸ்கூல் நாட்களில் சைக்கிள் ரேஸ் என்று பலதும் இருவரும் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டே இருப்பார்கள். அருணுக்கு சிரஞ்சீவியை கையாள்வது மிகவும் சுலபம். சிரஞ்சீவிக்கு பிடித்த விஷயத்தை பற்றி அருண் பேசினால் அவனுக்கு கோபம் வரும், அதேபோல் அருணுக்கு பிடித்த விஷயத்தை பற்றி சிரஞ்சீவி பேசினால் இவனுக்கும் கோபம் வரும். இரண்டுபேரும்  இருவருக்கும் பிடித்த விஷயத்தை தனக்கும் பிடிக்கும் என்று பேசி ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி உசுப்பி விட்டுக்கொண்டே இருப்பார்கள். பொழுதுபோக்கென தொடங்கியது கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்துகொண்டே போகிறது. தமயந்தி விஷயத்தில் சிரஞ்சீவி செய்வது அருணை எரிச்சல் ஆக்குகிறது. அது தன்னை பாதிக்கவில்லை என்று காட்டிக்கொள்ள அருண் பாடுபடுவதும் சிரஞ்சீவி இன்னமும் அவனை தீவிரமாக எரிச்சல்படுத்த தமயந்தியை கிண்டல் செய்வதும் பேச தூண்டுவதும் என யார் கண்ணுக்கும் தெரியாமல் போரே நடத்துகிறான். 

வழக்கம் போல கல்லூரி முடிந்து அருண் ஆபிஸிற்கு மூவரும் சென்றனர். அங்கே அடுத்து வரவிருக்கும் படங்களை பற்றியும் அவைகளின்  மார்க்கெட் பற்றியும் புவனும் அருணும்  மேனேஜரிடம் பேசிக்கொண்டிருக்க சிரஞ்சீவி அவன் போனில் விளையாடிக்கொண்டிருந்தான். இரண்டு மணிநேரம் பிஸ்னஸ் பேச்சு முடியவும் அருணும் புவனும் கிளம்பவும் அருண் சிரஞ்சீவியை பார்த்து “நீ கார் ட்ரைவ் பண்ணு நான் பின்னாடி உட்கார்ந்து வரேன்”

சிரஞ்சீவி “ஏனாம், நீயே ஓட்டு. நான் இன்னும் என் மேட்ச் முடிக்கல”

அருண் “அடிங்க.. இது உனக்கு பிடிச்ச கார் தானடா நீ ஓட்டு”

சிரஞ்சீவி “அதெல்லாம் முடியாது, ட்ராபிக்ல இந்த கார ஓட்டுறதுக்கு சும்மா இருக்கலாம்”

புவன் “யாரோ ஒருத்தர் ஓட்டுங்க.எனக்கு எட்டு மணிக்கு ஆன்லைன்ல ஸ்பெயின் பிளேயர் கூட மேட்ச்  இருக்கு அதுக்குள்ள நான் வீட்டுக்கு போகணும்”

அருண் ‘மச்சி ஓட்டுடா’ என்று சிரஞ்சீவியை வற்புறுத்தினான்.

சிரஞ்சீவி “சரியான ஆள்றா நீ. எப்படினாலும் அவளைதான் ஜெயிக்க விட போற. அதுக்கு எதுக்குடா கேம் விளையாடனும்” 

தமயந்தி கல்லூரி முடிந்து சிறிதுநேரம் தூங்கிவிட்டு அருணுடன் விளையாடிவிட்டு தான் அவள் படிப்பை கவனிப்பாள். ஏழு மணிக்கு மேல் இரண்டு மணிநேரம் அசைன்மென்ட், தெரியாத பாடத்தை பற்றி பார்த்து படித்து பத்து மணிக்கு படுத்தால்தான் அடுத்த நாள் காலை ஐந்துமணிக்கு முழிப்பு வரும். அவள் டைம் டேபிள் தெரிந்தபின் அருண், தமயந்தி விளையாட்டிற்கு ஒதுக்கி இருக்கும் நேரம் எப்படியேனும் ஃப்ரீயாக வைத்துக்கொள்வான். தமயந்தியுடனான அவனுக்கான நேரம் என்பது சளி பிடிக்குமென தெரிந்தும் மழையில் நனைந்துகொண்டே நீச்சல் குளத்தில் நீந்துவது போல, அதிலும் இடையில் எழுந்துவந்து ஐஸ் க்ரீம் சாப்பிட்டு பார்ப்பது போல இருந்தது. அது ஒரு தனி வகையான  பிடித்தம். எங்கேயோ ஆப்பு வைக்க போகிறது என்று தெரிகிறது ஆனாலும் மனம் ஏங்குகிறது. 

புவனும் அவன் கைபேசியில் செஸ் விளையாட, அருண் தமயந்தியுடன் கேம் விளையாட  தொடங்க காரை ஓட்டும் சிரஞ்சீவி எரிச்சல் ஆனான். 

சிரஞ்சீவி “இதெல்லாம் ஓவர்ரா”

புவன் “விடு மச்சான் கண்டுக்காத அவன் என்னமோ பண்ணிட்டு போறான் ”

சிரஞ்சீவி “நீ ஏன் சொல்லமாட்ட…இந்த பொண்ணுங்கள எல்லாம் நம்பாதீங்கடா வுட்டுட்டு போயிருவாளுக”

புவன் “டேய் வண்டிய மட்டும் ஓட்டு நீ”

கடுப்பான சிரஞ்சீவி “நான் ஒன்னும் ட்ரைவர் இல்ல”

புவன் “டேய் என்ன நீ சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கடுப்பு ஆகுற”

 சிரஞ்சீவி புலம்பல் தொடங்கினான் “இப்போ எல்லாம் இனிக்கும்டா அப்புறம் அவ எனக்கு வேலை கெடச்சிருச்சு  அருண் நான் பாரீன் போறேன்னு போக போறா நீ துண்டு தலையில போட்டுக்கிட்டு போகபோற”

புவன் “நீ என்ன மச்சான் சாபம்ல்லாம் உடுற” கேட்டு சிரித்தான் 

சிரஞ்சீவி “சாபம் எல்லாம் இல்லடி… உண்மை… உண்மைய பேசுறேன்”

புவன் அவனை கண்டுகொள்ளாமல் அவன் போன் திரையை தீவிரமாக பார்த்துக்கொண்டு இருக்க சிரஞ்சீவிக்கு இன்னமும் எரிச்சல் ஆனது.

சிரஞ்சீவி “அடேய் காதல் மன்னா என்ன கண்டுக்காம செஸ் விளாடுறல்ல. இரு இரு வரட்டும் அந்த ராட்சசி அவ கச்சேரியில வம்பு பண்ணுறேனா இல்லையா பாரு”

சிரஞ்சீவி பேசி முடிக்கவும் சட்டென அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தவன் புவன் “சரிடா என்ன இப்போ உன்கிட்ட பேசிட்டு வரணுமா? வா பேசலாம்” 

சிரஞ்சீவி “ப்பா உன்ன நாய விட மோசமா நடத்தும் போதே இவ்வளவு அடங்கி போறியே. அதுவே நானும் உன்னதான் கட்டிப்பேன் புவன்னு அவ  சொன்னான்னா என்ன மறந்தே மறந்துருவ தானே மச்சான்”

எப்போதும் போல எரிச்சல் உண்டானாலும் புவன் “கண்டீப்பா மறந்திருவேன்” என்றான்.

கிண்டலாக சிரித்தான் சிரஞ்சீவி. புவனுக்கு கோபம் வந்தது, ஆனாலும் பேசமுடியாமல் அமர்ந்திருந்தான். இப்போதிருக்கும் நிலையில் பூமிகா இவர்களை அதுவும் புவனை திரும்பி பார்ப்பதே அதிசயம் இதில் எங்கே சிரஞ்சீவியை புவன் மறப்பது!?

அருண் அவன் விளையாட்டில் கவனம் இருந்தாலும் “ரொம்ப பேசாத” என்றான்.

 புவன் அடுத்த நாள் அருண் ஷிவானியை அழைத்துவர ஏர்போர்ட் போகவிருப்பதை சொல்லாமல் “உனக்கு உன் வாய்தான் மச்சான் எதிரி” என்று சொல்லி சிரிக்கவும் அருணும் சிரித்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!