Skip to content
Post Views: 1,970
… யாழின் மதிமுகன் ….
அவள் அலைபேசியில் இருந்து குறுஞ்செய்தியை அழிக்க முயன்ற நேரம் வெடுக்கென்று அவளது கையில் இருந்த அலைபேசியை பிடுங்கிய சத்யவர்தன் அவளை அனல் பார்வையை வீசி எரித்துக் கொண்டிருந்தார். எதுவும் பேசாமல் தனது போர்வையால் முகத்தை போர்த்திக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள். அவள் மீதிருந்த நம்பிக்கை சத்யவர்தனால் அலைபேசியை ஆராய முடியவில்லை. அவளும் அழிக்க முயன்றதை அழிப்பதாய் இல்லை….
இவள் அழுது கொண்டிருந்தததை எவருக்கும் தெரியாமல் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான் அவள் விரும்பும், அவளை விரும்பும் அவளது தோழன். உலகத்திற்கு உதித்தாலும் ஏனோ அவளுக்காக மட்டும் உதிப்பதாக எண்ணுபவள். எங்கோ இருந்தவன் இவ்வேளையில் அவள் கொள்ளும் கவலையில் பங்கு கொள்வதாக இதோ சாளரத்தின் வழியே படர்ந்தான் சந்திரன். இதுவே இவளது நட்பிற்கு இலக்கணமாகிய வாழ்வு..
Advertisement
அழுவதை பார்த்துக் கொண்டிருந்த சந்திரன் இவள் அழுகையினூடே உறங்கியதை கண்டவுடனே சாளரத்தின் திசையை மாற்றிக் கொண்டிருந்தான்.. இவர்களுக்காக புனைந்த நட்போ, இல்லை வாழ்வின் எதார்த்தத்தை இயற்கையோடு இணைந்து காணும் இவளின் தன்மையோ எல்லாம் அறிய போவது இவளின் நாயகன் ஒருவனே!
Advertisement
சந்திரன் மறைந்து ஆதவன் உதித்திருந்த பொழுது அது. தன் சிறிய பையில் அனைத்து டிபன் டப்பாக்களையும் அடுக்கிக் கொண்டிருந்த சத்யவர்தன், அவள் பெயரை கூட உச்சரிக்காமல் “எழுப்பி ஸ்கூல்க்கு அனுப்பிவிடு எந்தவித பிரச்சனையும் வேண்டாம்” என தன் மனைவி மித்ராவைப் பார்த்துக்கூறி தயாராகிவிட்டார் தனது அலுவலக பயணத்திற்கு…
Advertisement
தன்னை நம்பி வந்த மித்ரா மற்றும் தனது மகன், மகளைக் கருத்திலும் கண்ணுமாக பார்த்துக்கொள்ள 50-ஐ தாண்டிய கிலோமீட்டர் தொலைவில் தனது பணியை செய்வதில் அலாதிப்பிரியம். வங்கியில் இருப்போ, நிலபுலங்களோ, பரம்பரை பட்டாக்களோ இல்லை. ஆனால் இருக்கும் அரசு வேலையில் நேர்மை. சொந்தங்கள் மத்தியில் இவர் அழைக்கப்படும் பெயர் “நியாயஸ்தன்”. பிறரிடம் நியாயம் பேசாதவர் தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு செயலிலும் நியாயத்தை பின்புலனாக கொண்டவர்.
Advertisement
ரயில் வண்டியில் ஜன்னல்ஓர இருக்கையில் அமர்ந்து ஏதோ தன் மகளைப் பற்றிய சிந்தனையில் ஆழந்து கொண்டிருக்க, அவர் அருகில் அமர்ந்திருக்கும் கல்லூரி மாணவனின் கையில் இருந்த அலைபேசியில் “தென்மதுரை வைகைநதி…” என்று இளையராஜா இசையமைத்துக்கொண்டிருந்தார்.
—-
எப்.எம்-மில் சிநேகிதனே… சிநேகிதனே… என்று ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க தன் உறக்கத்தில் இருந்து எழுந்தவளிடம் 7.15 என்று காட்டிவிட்டு நான் என் வேலையை செய்கிறேன் என்றது மணிக்கடிகாரம். 5.00 மணிக்கு நான் அழைத்தபோது எழவில்லை, இப்போது நான் ஏன் உன்னை எழுப்பவேண்டும் என்று கடிகாரம் தன்னிடம் கேட்பதாய் நினைத்துக்கொண்டிருந்தவளுக்கு உண்மையில் இதே வரியுடன் “படிக்கக்கூட உன்னால் முடியவில்லை” என்ற வரியும் சேர்ந்து அவள் செவிகளில் வந்தடைந்தது. ஆம், மித்ராவின் உச்சரிப்புகளே அவை…
ப்ச்ச்… என்பதை மட்டும் உதிர்த்தவள் விரிப்புகளை கூட எடுத்துவைக்காமல் குளித்து வந்து சீருடை அணிவது வரை மட்டுமே தன் வேலை என்று சொல்லாமல் தலைவார உட்கார்ந்து கொண்டிருந்தாள் மித்ராவின் வருகைக்காக. அதற்குப்பின் மதியஉணவு, சிற்றுண்டி என அனைத்தையும் எடுத்து வைப்பது மித்ராவின் வேலையாக, புத்தகங்களை மட்டும் பைகளில் அடுக்கிக்கொண்டு நடக்கும் தொலைவில் இருந்த தன் பள்ளிக்கு லேடிபேர்ட்-இல் ஊர்ந்துச்செல்ல தயாரானால் அவள்.
மதியஉணவு, இடைவேளை சிற்றுணவு அனைத்தையும் எடுத்துக்கொண்டு வந்த மித்ராவிடம் பைபை அம்மா என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு வீதியின் அந்தம் இருந்த தன் இல்லத்திலிருந்து தொடக்கத்திற்கு வந்து அங்கிருந்த வளைவில் வளைந்த போது “யாழ்” என்ற குரல் ஒலித்தும் திரும்பி பாராமல் சென்று கொண்டிருந்தாள்.
நேற்று இல்லத்தில் அலைபேசியின் குறுஞ்செய்தியை அழிக்க முயன்ற அந்நிகழ்வின் போது அவளது நட்பின் இலக்கணமாக நிலவு சாளரத்தின் வழியே படர்ந்தது போல், ஒளி வீசும் இக்காலைப் பொழுதில் ஆதவனின் ஒளி-யை தன் சைக்கிள் பயணத்தின்போது தன் கண்களால் ஒளி பொருத்திக் கொண்டிருந்தவளுக்கு “யாழ்” என்ற குரலின் ஒலி அவள் செவிகளில் எதிரொலிக்கவில்லை என்பதே உண்மை. ஆதவனின் ஒளியை விட “யாழ்” என்ற குரலொலி அவளது வாழ்வை பிரகாசிக்க வைக்கும் என்பதை ஏனோ அவள் உணரவில்லை.
பள்ளி இறைவழிபாட்டில் “தமிழ் யாழினி” என்ற பெயரை ஒலிபெருக்கி ஒலித்துக்கொண்டிருக்க கரவொலியால் மைதானம் இசை கேட்டுக்கொண்டிருந்தது. சென்ற மாதம் மாணவர்களுக்கான ஆசிரியர் தின கவிதைப் போட்டியில் பள்ளியில் ஆசிரியர்களுக்காக அவள் சமர்பித்த கவிதையை அவளது புகைப்படத்துடன் பிரபல மாத இதழில் வெளியிட்டு “முதல் பரிசையும்” வென்றதாக தலைமை ஆசிரியர் பாராட்டிக்கொண்டிருக்க, தான் எழுதிய வார்த்தைகள் ஆனால் தான் வெளியிடவில்லை யாராக இருக்கும் என்று அவள் எண்ணுவதற்குள் பாராட்டு மழையும், பரிசுகளும், வழிபாடும் கடந்தாகிவிட்டது…
பாராட்டால் மகிழ்ந்தாலும் ஒருபுறம் தன் உயிர்நட்பான சிந்தியா ஏன் பள்ளிக்கு வரவில்லை என்ற கவலையும், யார் இதை செய்தார்கள் என்ற குழப்பமும் தமிழ் யாழினியை வாட்ட, சிந்தியாவாகத்தான் இருக்க முடியும் என்று தீர்க்கமானாள். பள்ளி முடியும் நேரத்திற்காக காத்திருந்து தன் வீட்டிலிருந்து 10 நிமிட பயணத்தில் இருந்த சிந்தியா வீட்டிற்கு மகிழ்வுடன் தன் மிதிவண்டியில் சென்றவளுக்கு பேரிடியாக இருந்தது சிந்தியா அமர்ந்திருந்த கோலம்….
– இசைக்கும்
error: Content is protected !!