Skip to content
Post Views: 1,233
“எங்களைப் பார்த்தா உனக்கெப்படி தோணுது?” ஆவலுடன் சிந்து கேட்க,
“எங்க மேனேஜர் இருக்கிற அமைதிக்கு அவர்லாம் லவ் செய்ற ஆளு போலத் தெரியலையே! அரேஞ்ச் மேரேஜ்ஜா தான் இருக்கனும்” என்றாள் அன்னம்.
அவளின் கூற்றில் புன்னகைத்தவளாய், “கல்யாணமே ஆகாதோனு நினைச்சிட்டு இருந்த எனக்குக் கடவுளா பார்த்து கொடுத்த வரம் இவர்” என்றாள் சிந்துஜா.
“அடடா புருஷனை பத்தி பேசினா முகமெல்லாம் சிவக்குதே” என்று அன்னம் கேலி செய்ய,
Advertisement
வாய்விட்டுச் சிரித்த சிந்துஜா, “ஒத்துக்கிறேன்மா உனக்கு வாய் ஜாஸ்தி தான். அதுக்குனு என்னை இப்படிக் கேலி செஞ்சி நிரூபிக்க வேண்டாம்மா” என்று அவளைக் கிண்டல் செய்ய,
முகத்தைச் சுருக்கி, “சிந்துக்கா” எனச் சிணுங்கினாள் அவள்.
அங்கே மற்ற டீம் ஆட்கள் ஆங்காங்கே நின்று கொண்டு பேசியவாறு உண்டு கொண்டிருக்க, இன்பாவும் நங்கையும் அந்த வட்ட மேஜையில் தனித்து அமர்ந்திருந்தனர். நங்கை உறங்கி கொண்டிருந்த தனது மகளை மார்போடு அணைத்து தட்டிக் கொடுத்தவாறு அமர்ந்திருந்தாள்.
Advertisement
அவளிடம் என்னவெல்லாமோ பேச மனம் துடித்தாலும், வார்த்தை வராது தடுமாறியவனாய் நங்கையை இன்பா பார்த்திருக்க, “அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க இன்பா?” எனக் கேட்டாள் நங்கை.
Advertisement
தன்னை அவள் நினைவு வைத்திருக்கிறாள் என்பதில் நெஞ்சில் நிம்மதி படர, குரலை செருமியவனாய், “நல்லா இருக்காங்க” என்றான்.
“உங்க அண்ணன் அண்ணி கூட உன் குடும்பம் சேர்ந்தாச்சா?” எனக் கேட்டாள்.
“ஹ்ம்ம் அம்மா அப்பா அவங்க கூடத் தான் இருக்காங்க” என்றான்.
Advertisement
“சிந்து உங்கம்மா பார்த்த பொண்ணா? ஐ மீன் அரேஞ்ச் மேரேஜா?” எனக் கேட்டாள்.
ஆமென அவன் தலையசைக்க,
“குட்”
“குட் செலக்ஷன்” என்றவள்,
“உன் பாஸ்ட் லவ் பத்தி உன் மனைவிக்குத் தெரியுமா?” எனக் கேட்டாள்.
‘எதுக்கு இப்ப இதைக் கேட்குறா?’ என யோசித்தவாறே இல்லையென அவன் தலையசைக்க,
“ஹ்ம்ம் கேவலமா ஒரு பொண்ணைத் திட்டி என் வாழ்க்கைலருந்து விரட்டி அடிச்சிட்டேன்னு சொல்ல வாய் வராம சொல்லாம விட்டுட்டியோ?” நக்கலாய் கேட்டிருந்தாள் நங்கை.
வெகு இயல்பாக இருந்த அவளின் முகத்தில் இருந்து அவளின் உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை.
“நங்கை” என்றவன் அதிர்ந்தவாறு பார்க்க,
“பட் பாஸ்ட் இஸ் பாஸ்ட்ல! அதைப் போய் எதுக்கு ப்யூச்சர் லைஃ பார்ட்னர்கிட்ட சொல்லிட்டு இருக்கனும். யாருக்கும் உண்மையா இருந்து தான் உனக்குப் பழக்கமே இல்லையே” வெகு இயல்பாய் கூறியிருந்தாள் நங்கை.
அவளின் பேச்சில் கோபம் பொங்க, “நங்கை” என அடிக்குரலில் சீறியவனோ, தன்னைக் கட்டுப்படுத்தியவனாய்,
“இன்னுமா அதெல்லாம் மறக்காம இருக்க நீ” என அதிர்வுடன் கேட்டான்.
தன்னை அவள் நினைவு வைத்திருக்கிறாள் என்று மகிழ்ந்தவனுக்கு, அவள் அந்நிகழ்வினை மறக்காமல் இருப்பதினால் தான் தன்னை மறக்காமல் இருக்கிறாள் என்று புரிந்தது.
“இதெல்லாம் ஆயுளுக்கும் மறக்க முடியாதுனு தான் ஒரு காலத்துல நினைச்சேன். தப்பா பேசுனவனே எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா வாழும் போது தப்பு செய்யாத நான் ஏன் நினைச்சிட்டு இருக்கனும்னு கடந்து வந்தாச்சு” என்றாள் நங்கை.
சுருக்கென நெஞ்சில் நெருஞ்சி முள் குத்திய வலி அவனுக்கு.
“ஏன் இப்படிப் பேசுற நங்கை” குற்றவுணர்வுடன் அவன் கேட்க,
“எனக்கு மட்டும் டைம் மிஷின் கிடைச்சதுனா உன்னைச் சந்திச்ச அந்த நாளே என் வாழ்க்கைல இல்லாம ஆக்கிருப்பேன். சுந்தர் மட்டுமே என் மொத்த வாழ்க்கையிலும் நிறைஞ்சி இருந்திருப்பான். கரும்புள்ளியா கூட உன்னை என் வாழ்க்கைல நுழைய விட்டிருக்க மாட்டேன்” மென்மையான குரலில் சீறியிருந்தாள் அவள்.
இன்பா ஏதோ கூற வாயெடுக்கும் போது, சிந்துஜா தனது மகனுடன் அங்கு வந்து விட, அமைதியாகி விட்டான் இன்பா.
இத்தனை தவறானவனாகவா தன்னை அவள் நினைத்து வைத்திருக்கிறாள்? இன்பாவிற்கு மனது ஆறவேயில்லை.
தன் மீது இன்னும் இத்தனை கோபமாய் அவள் இருப்பாளென அவன் நினைத்திருக்கவே இல்லை. ஏதேனும் வகையில் அன்று தான் அவ்வாறு பேசியதற்கானச் சூழ்நிலையையும் காரணத்தையும் அறிந்திருப்பாள் என்றே நினைத்திருந்தான் அவன்.
ஆனால் அவளின் இந்த நேர்முகத் தாக்குதல் அவனை நிலைகுலைய செய்திருந்தது. குற்றவுணர்வு அதிகமாகி மனது பாரமாகிப் போனது.
நங்கைக்கு நெஞ்சமெல்லாம் கோபத்தில் காய்ந்து கிடந்தது. ஏன் தான் இத்தனை கோபம் கொள்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு.
அச்சமயம் அவளின் அலைபேசி அலற, மகளைத் தோளில் தூக்கியவாறு கைபேசியை எடுத்துக் கொண்டு சற்றுத் தள்ளி நடந்தவாறு சென்றவள் அழைப்பை ஏற்றாள்.
“என்னடா பப்ளிமாஸ்! இன்னும் வீட்டுக்கு போகலையா?” மறுபக்கம் கேட்ட கணவன் சுந்தரின் குரலில் இங்குச் சரேலெனக் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
“எனக்கு உன்னை இப்பவே பார்க்கனும்! கட்டிப்பிடிச்சிட்டு அழனும்” கமறிய குரலில் உரைத்தாள் நங்கை.
பதறி விட்டான் சுந்தர். “என்னடா? என்னாச்சு? அங்கே எதுவும் பிரச்சனையா?” எனப் பதறியவாறு கேட்டான்.
“இல்ல இல்ல! அதெல்லாம் ஒன்னுமில்லை!” அவனின் பதட்டமான குரலில் தன்னை மீட்டுக் கொண்டவளாய்,
“ஐ மிஸ்டு யூ சோ மச்! அதான் அப்படிச் சொல்லிட்டேன்! இங்க ஒரு பிரச்சனையும் இல்லை” என்றாள்.
“உஃப்” என்ற அவனின் பெருமூச்சு கேட்டது அவளுக்கு.
“அதான் நான் வர இன்னும் மூனு நாள் ஆகும்னு கொஞ்ச நேரம் முன்னாடி தானே சொன்னேன்” என்றவன் சொன்னதும் தான், தான் அவன் மீது அந்நேரம் கோபம் கொண்டு பிசியாக இருப்பதாக உரைத்து பின்பு பேசுவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தது நினைவுக்கு வந்தது அவளுக்கு.
“ஸ்ஸ்ஸ் ஆமால்ல! உன் மேல நான் கோபமா இருந்தேன். உன்கிட்ட பேசவே கூடாதுனு நினைச்சேன்” என்றாள்.
அவளின் பேச்சில் சிரித்தவனாய், “ஏன் பப்ளிமாஸ் இந்த மூட் ஸ்விங்! என்னமோ சரியில்லைன்னு தோணுதே” என்றான்.
தன்னை அணு அணுவாய் அறிந்து வைத்திருக்கும் அவனது அன்பில் நெக்குருகிப் போனாள்.
“எனக்கு உடனே உன்னைப் பார்க்கனும் போல இருக்கு!” மீண்டுமாய்க் கண்களில் நீர் சூழ அவள் உரைக்க,
“இப்ப என் பப்ளிமாஸ் பத்திரமா வீட்டுக்குப் போய்ச் சேருவியாம். அப்புறம் உன் புருஷனுக்கு வீடியோ கால் போடுவியாம். அப்புறம் நைட் முழுக்க என்னைப் பார்த்துட்டே இருப்பியாம்! சரியா! கண்ணைத் தொட” என்றதும்,
கைபேசி வைத்திருந்த கையைக் கொண்டே கண்களைத் துடைத்துக் கொண்டு, “சரி நான் வீட்டுக்கு போய்ட்டு போன் செய்றேன்” என்றவளாய்த் தனது இருக்கைக்குச் சென்றாள்.
இன்பா அவனது டீம் மக்களை வழியனுப்பி விட்டு அவனது மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அங்கே அன்னம் இல்லாமல் இருப்பதைப் பார்த்து விட்டு, “அன்னம் எங்கே சிந்து” என்று கேட்டாள் நங்கை.
“மோகன் கூப்பிட்டாங்கனு போனா நங்கை” என்றாள் சிந்துஜா.
“ஓ இந்தப் பொண்ணு வந்துட்டா கிளம்பலாம்னு பார்த்தேன்” என்றவாறு அமர்ந்து விட்டாள் நங்கை.
“டயர்ட்டா தெரியுறீங்களே? எதுவும் குடிக்கிறீங்களா?” என வாஞ்சையுடன் சிந்துஜா கேட்க, வேண்டாமெனத் தலையசைத்து சிந்துவின் கைகளைப் பற்றியவளாய், “உங்களைக் கட்டிக்கிட அன்னம் மேனேஜர் ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கனும்” என்றாள்.
“இல்ல இல்ல! அவரைக் கட்டிக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கனும் நங்கை. இப்படி அன்பான அக்கறையான கணவன் கிடைக்கிறதே வரம் தானே” பெருமை பொங்க தூரத்தில் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தவளாய் சிந்துஜா கூற, புன்னகைத்தாள் நங்கை.
அன்னம் வரவும் சிந்துவிடம் விடைபெற்று நங்கையும் அன்னமும் கிளம்ப, தனது மேனேஜரை வழியனுப்பி விட்டு வந்த இன்பாவுடன் கிளம்பியிருந்தாள் சிந்துஜா.
இரவு பத்து மணியளவில் வீட்டை அடைந்தனர் இன்பா குடும்பத்தினர்.
வீட்டிற்கு வரும் போதே யுகேந்திரன் உறங்கியிருக்க, அவனைக் கட்டிலில் கிடத்திவிட்டு சிணுங்கிய மகனை போர்வை போர்த்தி உறங்க வைத்தவனாய் இன்பா அமர்ந்திருக்க, ஓய்வறைக்குச் சென்று சுத்தப்படுத்திக் கொண்டு இலகுவான உடைக்கு மாறி வந்திருந்தாள் சிந்துஜா.
“பால் எதுவும் குடிக்கிறீங்களாப்பா? யுகிக்கு ஆத்தி எடுத்து வைக்கப் போறேன். உங்களுக்கும் வேணும்னா எடுத்துட்டு வரேன்” என்று கேட்டாள் சிந்து.
“இல்லமா வேண்டாம்” என்றவன் கூறியதும், அவன் முகம் பார்த்து தலையை வருடியவளாய், “முகம் ஏன் இவ்வளோ சோர்வா இருக்கு. வண்டி ஓட்டிட்டு வந்த டயர்ட்டாப்பா?” எனக் கேட்டாள்.
தனது தலையில் இருந்த அவளின் கைப்பற்றி வருடியவனாய் ஏக்கத்துடன் அவள் முகத்தை ஏறிட்டான். நடந்தவை அனைத்தையும் அவளிடம் கூறி அவளின் மடியில் தஞ்சமடைய ஏங்கியது அவன் உள்ளம்.
பெருமூச்செறிந்தவனாய் எழுந்தவன், “நீ போய் யுகிக்கு பால் எடுத்துட்டு வா! நான் டிரஸ் சேஞ் செஞ்சிட்டு வரேன்” என்று ஓய்வறைக்குள் சென்றான்.
‘என்னாச்சு இவருக்கு? ஏன் இப்படி இருக்காரு. பரிசு வாங்கின பிறகு அவ்ளோ ஹேப்பியா இருந்தாரே! மேனேஜர்கிட்ட பேசிட்டு வந்த பிறகு தான் ஏதோ யோசனைலயே இருக்காரு. ஏதோ ஆபிஸ் பிரச்சனையை யோசிச்சிட்டு இருக்காரு போல்! என்னனு கேட்கனும்’ என்று மனதோடு நினைத்துக் கொண்டவளாய் சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஓய்வறையில இருந்து இன்பா வெளியே வரும் போது படுக்கையில் மகனின் வலது புறமாய்ப் படுத்தவளாக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் சிந்துஜா.
மகனின் இடதுபுறமாய்ச் சென்று படுத்த இன்பாவிற்கு உறக்கம் கண்களை எட்டவில்லை.
அன்றிரவு நெடுநேரம் உறங்காது நங்கை பேசியதை பற்றியே சிந்தித்திருந்தவன், நங்கையிடம் அன்று நடந்த அந்நிகழ்விற்கான காரணத்தை விளக்கி, அவளுக்குத் தன் மீதிருக்கும் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டுமென முடிவு எடுத்தப் பின்பே சற்று நிம்மதியாகி உறக்கத்திற்குள் ஆழ்ந்தான்.
error: Content is protected !!