Skip to content
Post Views: 1,481
“எப்படி இரண்டாவதா ஒரு காதல் உன் மேல எனக்கு வந்துச்சுனு தெரியாம தவிச்சிட்டு இருந்தேன், உன்கிட்ட உண்மை சொல்லாம உன்னை நெருங்கவும் முடியாம நெருங்கினதை ஏத்துக்கவும் முடியாம மனதோடும் உடலோடும் போராடிட்டு இருந்தேன்!”
“அப்படி ஏன் தவிச்சிட்டு இருக்கனும். உண்மையைச் சொல்லிருக்கலாமே” எனக் கேட்டாள் சிந்து.
Advertisement
“சொல்லிருக்கலாம் தான். உண்மையைச் சொன்ன பிறகு நீ என்னை வெறுத்துட்டீனா? என்னை விட்டு விலகி போக நினைச்சீனா அதைத் தாங்குற மனவலிமை என்கிட்ட இல்லை சிந்து” கைகள் விடாது அவளின் தலையைக் கோதிய வண்ணமிருக்க, உருகியது அவனது குரல்.
‘அப்பவே அவ்ளோ காதலா என் மேல’ என விழி விரிய ஆச்சரியத்தில் அவனை அவள் பார்த்திருக்க, மேலும் தொடர்ந்து பேசினான் அவன்.
Advertisement
Advertisement
“ஊர் உலகத்துல எல்லாருமே என்னைக் கெட்டவன்னு சொல்லிட்டு இருந்த போது, என்னை நல்லவன்னு நம்பினவ நீ மட்டும் தான் சிந்து! அந்த நம்பிக்கையை எனக்கும் கொடுத்துவ நீ! அப்படிப்பட்ட நீ என்னை வெறுப்பா பார்த்தா நான் எப்படித் தாங்குவேன் சொல்லு இல்ல என்னைப் பிடிக்காத பார்வை பார்த்தா நான் என்ன ஆவேன் சொல்லு! மனசுல அப்படி ஒரு பயம் அப்ப இருந்துச்சு. அது என்னை உன்கிட்ட உண்மையைச் சொல்ல விடாம தடுத்துச்சு” மென்மையான குரலில் அன்றைய தனது நிலையை உரைத்திருந்தவனை வியப்புடன் பார்த்திருந்தாள் சிந்து.
“கெட்டவரா? நீங்களா? ஏன் எல்லாரும் அப்படி நினைக்கனும்?” என்று கேட்கும் போதே சிந்துவின் மூளையில் காலை நடைபெற்ற நிகழ்வு எட்டிப்பார்க்க,
Advertisement
“ஆமா காலைல நங்கை அப்பாகிட்ட பாவ மன்னிப்புக் கேட்டீங்களே! அந்த விஷயத்தை வச்சி தான் கெட்டவன்னு சொல்றீங்களா? நிஜமாவே நங்கையை நீங்க அப்படிப் பேசினீங்களாப்பா?” ஆற்றாமையுடன் தான் கேட்டிருந்தாள்.
நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது சிந்துவிற்கு. அந்நிலையில் அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்.
தனது கணவன் ஒரு பெண்ணை இவ்வாறு இழிவாகப் பேசினான் என்பதையே ஏற்றுக் கொள்ள இயலவில்லை அவளால்.
ஆமென அவன் தலையசைக்க,
அச்சோவெனத் தனது வாயின் மீது கை வைத்து மூடியவளாய் எழுந்து அமர்ந்தவள், “எவ்ளோ பெரிய வார்த்தையைச் சொல்லிருக்கீங்க? உங்களுக்கு அப்படிலாம் பேச தெரியுமா?” அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள்.
“பாவம் நங்கை! எவ்ளோ மனசொடஞ்சி போய்ருப்பாங்க! நீங்க செஞ்ச காரியத்துக்கு உங்களைக் கெட்டவன்னு சொல்லாம நல்லவன்னு கொண்டாடுவாங்களா? நல்லவேளை வாய்ப்பேச்சோட உதைக்காம விட்டாங்களேனு சந்தோஷப்பட்டுக்கனும்” என்று கோபத்துடன் முறைத்தாள் சிந்து.
“இல்ல அடியும் வாங்கினான். நங்கையோட க்ளோஸ் ஃப்ரண்ட் சுந்தர் என்னை அறைஞ்சாரு” என்றான் இன்பா.
“என்னது அடி வாங்குனீங்களா?” என்றவாறு என்னவோ இப்பொழுது தான் அவன் அடி வாங்கியது போல் அவனது கன்னத்தைத் தடவினாள்.
செய்தது தவறென்றாலும் அச்சூழலில் அனைவரின் நிந்தனைகளுக்கும் உள்ளாகித் தனியாளாய்த் தவித்து நின்றிருப்பானே என அவனுக்காகப் பரிதவித்தது அவளின் மனது இப்பொழுது.
“எல்லார் முன்னாடியும் அடிச்சாரா?” பாவமாய் அவனைப் பார்த்தவாறு கேட்டாள்.
ஆமென அவன் தலையசைக்க, “உங்களுக்கு ரொம்ப அவமானமா போயிருக்கும்ல!” அவளின் மனசாட்சியோ, ‘உன் புருஷன் செஞ்ச வேலைக்கு அந்தப் பொண்ணுக்கு எவ்ளோ அவமானமா இருந்திருக்கும்’ என்று இவளுக்கு அறிவுறுத்த,
“நான் நங்கையைப் பேசினதுலேயே என் மானம் மரியாதைலாம் போய்டுச்சு சிந்து. இதுல அவர் அடிச்சதுலாம் பெரிய அவமானம் கிடையாது! அவர் இன்னும் என்னை நாலு அடி அடிச்சிருந்தா கூட வாங்கியிருப்பேன்” அமைதியாக உரைத்திருந்தவனை அன்புடன் நோக்கியிருந்தாள் சிந்து.
‘எல்லாம் அவங்க அம்மானால தானே! ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க முடியாம என்ன வேலை செஞ்சி வச்சிருக்காரு! மாமா மட்டும் நல்லா இருந்திருந்தாருனா இவரைச் சரியாக வழி நடத்திருப்பாரு. மாமா சொல்றா மாதிரி இவரோட அண்ணன் அளவுக்கு இவருக்கு விவரம் பத்தலை தான்’ அவளின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றாலும் அனைத்தும் கணவனைக் குற்றவாளியாக்காமல், அவனுக்குச் சாதகமாக அமையாத சூழலையும் மனிதர்களையும் சாடியது கணவன் மீது காதல் கொண்ட அவளின் மனது.
அடி வாங்கியதை விடத் தானே தனது பேச்சின் மூலம் தன்னுடைய மரியாதையைக் குறைத்துக் கொண்டேன் என்று வாக்குமூலம் அளிப்பவன் திருந்தியவனாகத் தானே இருக்க வேண்டும்.
கணவன் அவ்வாறு பேசியதாய்க் கேட்டது கோபத்தை அளித்திருந்த போதிலும், திருந்தியிருப்பவனைக் குற்றம் சாட்டிப் பேசுவது தவறு என்பதால் கனிவுடன் அவனைப் பார்த்திருந்தாள்.
‘உன்னை எனக்குப் புரிகிறது’ என்பதான பார்வை அது.
சிந்துவை இழுத்து அணைத்துக் கொண்டவன், “இப்ப கூட என்னை வெறுப்பா பார்க்க மாட்டேங்கிற! குற்றம் சுமத்தி திட்ட மாட்டேங்கிற! என் நிலையைப் புரிஞ்சிக்க முயற்சி செய்ற பார்த்தியா! இது தான் என் சிந்து! இதை விடப் பெரிசா என்னை யாரு நேசிச்சிட முடியும் சிந்து” என்றவனாய் அவளின் உச்சியில் முத்தமிட்டவன் தன் மார்போடு அவளது முகத்தை அழுத்திக் கொண்டான்.
அதன் பிறகு தனது வாழ்வில் தான் அடைந்த துன்பத்தையும், சிந்து அவளறியாமலேயே இவனின் காதல் தோல்வியிலிருந்து வெளி வர உதவியிருந்ததையும் விளக்கினான் இன்பா.
“நானா? என்னால உங்க காதல் தோல்வியை விட்டு வெளில வந்தீங்களா?” ஆச்சரியப் பாவனையில் சிந்து கேட்க, ஆமென்றவன் அன்றைய நிகழ்வுகளையும் அவை அவனுக்கு அளித்திருந்த ஆறுதலையும் அவளுக்கு விளக்கியிருந்தான்.
“அப்புறம் ஏன் ஆறு மாசம் என்னைத் தவியாய்த் தவிக்க விட்டீங்க? உங்களுக்கு என்னைப் பிடிக்கலைனு நினைச்சு எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? உங்களுக்கு என் மேல எப்ப காதல் வந்துச்சோ தெரியாது ஆனா உங்களைப் பார்த்த நாள்லருந்து ஒருவிதமான ஈர்ப்பு உங்க மேல எனக்கு இருந்துச்சு. எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். அதான் அண்ணனோ பெயர் சொல்லியோ உங்களை நான் கூப்பிட்டதே இல்லை. இப்பலாம் சொல்றாங்களே க்ரஷ்னு அந்த மாதிரி அப்ப எனக்கு நீங்க இருந்தீங்க. நீங்களே கணவரா வர போறீங்கனு தெரிஞ்சதும் நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கும் அளவே இல்லை. ஆனா அந்தச் சந்தோஷத்துக்குலாம் சேர்த்து வச்சி அடுத்த ஆறு மாசம் என்னை அழ விட்டுட்டீங்க. முதலிரவு அன்னிக்கு மயக்கம் போட்டதால் இப்படி என்னை விட்டு விலகிட்டீங்களோ-னுலாம் நினைச்சுக் கலங்கியிருக்கேன் தெரியுமா! முத்தம் கொடுத்தப்போ நடுங்கினதுல எனக்கு உங்களைப் பிடிக்கலைனு நினைச்சு விலகி போய்ட்டீங்களோனு நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன். காரணமே சொல்லாம ஒருத்தரை விலக்கி வைக்கிறது அவங்களை எவ்ளோ காயப்படுத்தும் தெரியுமா? ஏன் அப்படிச் செஞ்சீங்க?”
அவனின் சட்டையைப் பிடித்து உலுக்கியவாறு இத்தனை நாட்களாய் மனத்திற்குள் அமிழ்ந்திருந்த அந்நாட்களின் மனவலிகளை எல்லாம் இன்று அவனிடம் கொட்டியிருந்தாள் சிந்து.
கண்களில் துளிர்த்த நீருடன் கோபமாய்க் கேட்டிருந்தவளின் கண்ணீரைத் துடைத்தவனாய், “நீ இவ்ளோ காயப்பட்டிருப்பனு தெரியாது சிந்து! அப்பவும் தவறான முடிவைத் தான் நான் எடுத்திருக்கேன்னு இப்ப புரியுது. ஆனாலும் உன்னைக் கஷ்டப்படுத்த விரும்பாம தான் நான் விலகியிருந்தேன்” என்றவன்,
“கல்யாணம் முடிஞ்சி அஞ்சு நாள் உன் கூட இருந்தேனே ஞாபகம் இருக்கா சிந்து?” எனக் கேட்டான்.
“இருக்கு! அதெப்படி மறக்க முடியும். என் வாழ்க்கைல நான் ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருந்த நாட்கள் அது” என்றவள் சொன்னதும் இன்பமாய் அதிர்ந்து தான் போனான் இன்பா.
அந்நாட்களின் நினைவிற்குள் பயணமானார்கள் இருவரும்.
அன்று முதலிரவின் முத்தப்பொழுதில் அவளின் உடலில் அவன் உணர்ந்த நடுக்கத்தில் தன்னிலை அடைந்து விலகிச் சென்று நின்றவனின் மனசாட்சியோ அவனைக் கழுவி ஊற்றியது.
‘உன்னோட முன் காதலை சொல்லாம வாழ்க்கையை ஆரம்பிக்க மாட்டேன்னு சொன்னியே! இப்ப என்ன செஞ்சிட்டு இருக்க நீ?’ என்று மனசாட்சி கேள்வி எழுப்பிய பொழுதினில் தான் தனக்குச் சிந்துவின் மீது காதல் துளிர்த்திருந்ததை உணர்ந்தான் இன்பா.
ஆம் திருமணத்திற்கு முன்பு அவளின் நற்குணங்களையும் தன் மீதான அவளின் அன்பினையும் வைத்துத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்திருந்தவன், திருமணத்திற்குப் பின்பு தான் அவளின் மீதான தனது காதலை உணர்ந்திருந்தான்.
பால்கனியில் நின்றிருந்தவனின் முதுகை கட்டிலில் அமர்ந்தவாறு பார்த்திருந்தவளுக்கு, ‘ஏன் முத்தம் கொடுத்தாரு? ஏன் பாதிலேயே விட்டுட்டு போய்ட்டாரு’ என்ற கேள்வி தான் எழுந்தது.
அப்படியே கட்டிலில் சாய்ந்து அவள் உறங்கி விட, அடுத்த அரை மணி நேரம் கழித்து அறைக்குள் நுழைந்தவன் உறங்கும் சிந்துவின் அருகிலமர்ந்து அவளின் முகத்தைக் காதலாய்ப் பார்த்திருந்தான்.
“என் மேல நிறையக் காதல் வச்சிருக்க என் கணவன்! அன்பும் பாசமும் கொட்டி வளர்க்க பிள்ளைங்க! இத்தனை வருஷ தனிமையையும் வெறுமையையும் போக்க எனக்கே எனக்குனு இப்படி ஒரு குடும்பம் வேணும்ங்க. அது போதும். நான் நிம்மதியா இருப்பேன்”
அன்று தனது ஆசையாகச் சிந்து சொன்னது இன்று இவனது காதில் ரீங்காரமிட, “நிச்சயமா உன்னோட ஆசையை நான் நிறைவேத்துவேன் சிந்துமா” உறங்குபவளின் கையைப்பிடித்து உறுதிமொழி அளித்தவனாய் கைகளைப் பற்றியவாறே அருகில் படுத்துக் கொண்டான்.
error: Content is protected !!