Skip to content
Post Views: 1,356
இரவு தாமதமாக உறங்கியதில் காலை தாமதமாகவே அவனுக்கு விழிப்பு வர, அருகில் சிந்து இல்லாமல் இருப்பதைப் பார்த்தவன் நேரத்தைப் பார்த்தான். காலை ஒன்பது மணியாகியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டவனாய் எழுந்தவன், “சிந்து” என்று கூவினான்.
“இதோ வரேன்ங்க” என்று அவசரமாக மேலறைக்கு வந்தவளின் கொலுசொலி அவனின் காதினை நிறைக்க, மென்னகை புரிந்தான்.
Advertisement
“எழுந்துட்டீங்களா? காபி எடுத்துட்டு வரவா?” எனக் கேட்டவளிடம் வேண்டாமெனத் தலையசைத்தவனாய், “என்னை எழுப்பிருக்கலாம்ல! நீ எத்தனை மணிக்கு எழுந்திருச்ச?” எனக் கேட்டான்.
“நான் எப்பவும் போல ஆறு மணிக்கே கீழே சமையல் வேலை பார்க்க போய்ட்டேன்” என்றவள் கூறியதும் நெற்றிச் சுருங்க, “நீ வேலை பார்த்தியா? ஏன்? வீட்டு வேலைக்கு ஆள் வைக்கச் சொல்லிருந்தேனே” சற்று கோபமாகவே கேட்டான்.
Advertisement
Advertisement
அவனின் அதட்டலான பேச்சில், “இல்ல அவங்க இன்னிக்கு லீவ்னு அத்தை சொன்னாங்க. அதான்” எனச் சற்று திணறலாகவே அவள் கூற,
எரிப்பது போல் அவளைப் பார்த்தவாறு கட கடவெனப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியவன், “அப்பா அப்பாஆஆஆ” என நடுக்கூடத்தில் நின்று அழைத்திருந்தான்.
Advertisement
அவனின் அழைப்பில் அவனது தாய், தந்தை, அண்ணன், அண்ணி என அனைவரும் அங்கே வந்திருந்தனர். பின்னே முதலிரவு முடிந்து மறுநாள் காலை மணமகன் கூவிக்கொண்டு வந்து நின்றால் பதறும் தானே அனைவருக்கும்.
கலைந்த தலைமுடியும் உறங்கிச் சோர்ந்த விழியுமாய் நடுக்கூடத்தில் நிற்பவனைக் கேள்வியாய் நோக்கினர் அனைவரும்.
அவனது அண்ணியும் அம்மாவும் சமையலறை பக்கமே செல்லவில்லை என்பது அவர்களின் நலுங்காத உடையும் புத்துணர்வான முகமுமே பறைசாற்ற, மேலும் கோபமேறியது அவனுக்கு.
மனத்தில் நடுக்கத்துடன் கைகளைப் பிசைந்தவாறு கணவனின் அருகில் நின்றிருந்தாள் சிந்து.
“அப்பா, வீட்டு வேலைக்கு ஆள் வைக்கலையா நீங்க?” எனக் கேட்டான்.
“வச்சிருக்கோம்ப்பா! இன்னிக்கு ஏதோ லீவ்னு காலைல தான் உங்கம்மா என்கிட்ட சொன்னா! நேத்து கல்யாண வேலைக்குலாம் கூட மாட இருந்தாங்கல! அதான் இன்னிக்கு ரெஸ்ட் எடுக்க லீவ் போல” என்றவர் சொன்னதும்,
“வீட்டு வேலைக்காரங்க லீவ்னா! என் பொண்டாட்டியை வேலைக்காரியா நடத்துவீங்களா நீங்க?” எனக் கேட்டவாறு தாயையும் அண்ணியையும் தீக்கனலாய்ப் பார்த்திருந்தான்.
சிந்துவிற்கு நெஞ்சில் பனிமழை சாரல்! முதன் முதலாகத் தனக்காகப் பரிந்து வந்து மற்றவரிடத்தில் சண்டையிடும் உறவைக் காண்கிறாள்! அனைத்திற்கும் கலங்கி பயந்து நின்ற காலங்கள் ஓடிவிட்டது. இனி தனக்காகக் கணவன் இருக்கின்றான் என்கின்ற மனத்தைரியத்தை ஆசுவாசத்தை அந்நொடி அவளுக்கு அளித்திருந்தான் அவன்! பூரிப்பில் நெகிழ்ந்து கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்திருந்தாள் சிந்து.
“என்னடா நீ இப்படிப் பேசுற! அவங்க அவங்க வீட்டுல சமைச்சா வேலைக்காரினு அர்த்தமா! அப்ப இத்தனை நாளா உங்களுக்கு நான் தானே சமைச்சிப் போட்டு வளர்த்தேன்! அப்ப நான் இங்கே வேலைக்காரியா இருந்தேன்னு அர்த்தமா என்ன?” எனக் கேட்டார் பூர்ணம்.
“என் பொண்டாட்டி உங்களை மாதிரி முன்னாடி மகாராணியா இருந்துட்டுக் கல்யாணம் முடிஞ்சி வந்து வேலை செஞ்சிருந்தா எனக்கு அப்படித் தோணிருக்காது. ஆனா நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அவளை அப்படித் தானே நடத்துனீங்க! இப்ப என்ன நினைச்சி அவளை வேலை வாங்குறீங்கனு தான் கேட்குறேன். அவளை மட்டும் சமைக்க விட்டுட்டு உங்களுக்குத் தேவையான வேலைலாம் வாங்கிட்டு இப்படி இரண்டு மகராசிகளும் வந்து நிக்கிறீங்களே அதுக்குப் பேரு தான் வேலைக்காரியா நடத்துறதுனு சொல்றேன்” என்று சூடாகத் திருப்பிக் கொடுத்தவன்,
“இனி என் பொண்டாட்டி தனியா கிடந்துலாம் இந்த வீட்டுல ஒன்னும் சமைக்க மாட்டா! அதையும் மீறி வேலைக்காரி மாதிரி நடத்துனீங்கனு தெரிஞ்சிது இனி இந்த வீட்டு பக்கமே வர மாட்டேன். நானும் என் மனைவியும் மட்டும் தான் குடும்பம்னு சென்னைலயே இருந்துடுவேன் சொல்லிட்டேன்” என்று எச்சரித்தவனாய் மாடிப்படி ஏறியவன் நின்று சிந்துவை பார்த்து முறைத்ததில் அவனுடன் படியேறி இருந்தாள் சிந்து.
“இவளோட மாமா இவளை ஆள் மயக்கினு சொன்னது சரி தான் போல! ஒரே நாள்ல எப்படி என் பையனை மயக்கி வச்சிருக்கா! நமக்குனு வரதுலாம் இப்படி இருக்கே! நான் வேண்டாம் வேண்டாம்னு தலையால அடிச்சிக்கிட்டேன்! கேட்டீங்களா” என்று பூர்ணம் அவர்களின் அறையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்க, என் காது கேட்காது என்பது போலவே எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அமர்ந்திருந்தார் கந்தசாமி. மகனின் செயலில் பரிபூரண நிம்மதியுடன் இருந்தார் பூர்ணத்தின் கணவர்.
“உங்க தம்பிக்கு ஓவர் கொழுப்பாகிப் போச்சு. அவளுக்குச் சமைக்கப் பிடிக்கலைனா அவளே வந்து சமைக்க முடியாதுனு சொல்ல வேண்டியது தானே. இந்த வீட்டுல எனக்கு வேணும் வேண்டாம்ங்கிறதை நானே தானே சொல்லுறேன். இந்தப் பொண்ணுக்கு என்ன உங்க தம்பி மௌத் பீஸா” என்று கணவனிடத்தில் புலம்பினாள் திவ்யா.
இன்பாவின் அறையில் அவன் முன் தவறு செய்த பிள்ளை போல் தலை கவிழ்ந்து நின்றிருந்தாள் சிந்து.
“இங்க பாரு சிந்து! நீ இந்த வீட்டு மருமக! என் பொண்டாட்டி! வேலைக்காரி கிடையாது! அவங்க தான் சொன்னாங்கனா செய்ய முடியாதுனு சொல்ல வேண்டியது தானே! உனக்காக நீ தான் பேசனும் சிந்து! எப்பவும் நானே வந்து பேசிட்டு இருக்க முடியாது” என்றவனைப் பார்த்தவள்,
“இன்னிக்கு ஒரு நாள் நான் சமைக்கிறேனே! இல்லைனா ஹோட்டல்ல ஆர்டர் செஞ்சி தான் சாப்பிடுவாங்க எல்லாரும். நாளைக்குத் தான் வேலைக்காரங்க வந்துடுவாங்கல” என்று கூறவும் கோபம் தலைக்கேற, ‘இதற்கு மேல் இருந்தால் அவளைத் திட்டி விடுவோமோ’ என்று அஞ்சியவனாய் அவளிடம் ஏதும் பேசாது குளியலறைக்குள் புகுந்து கொண்டான் இன்பா.
அவன் ஒப்புதல் கொடுக்காது சென்றதில் அவள் சமையலறை பக்கமே செல்லவில்லை என்றாலும், தான் அவ்வளவு கூறியும் அவள் இவ்வாறு கேட்டது அவனது கோபத்தைத் தூண்டிவிட்டிருக்க, அடுத்து வந்த நாட்களில் அவளிடம் பேசாமல் முறைப்புடனேயே சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.
அதனால் தான் இந்த நாட்களைத் தனது வாழ்வின் சந்தோஷமான நாட்களாய் சிந்து கூறியதில் இன்ப அதிர்ச்சிக்குள்ளானான் இன்பா.
தினமும் அவளை எங்கேனும் அழைத்துச் சென்றான். ஓரிரு வார்த்தைகள் தேவைக்கேற்ப பேசினானேயன்றி அதைத் தவிர்த்து ஏதும் பேசவில்லை இன்பா. ஆனால் அவனுக்கும் சேர்த்து வைத்து பேசினாள் அவள். தனக்குப் பிடித்தவற்றை அவனிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். தனக்குப் பிடித்தமானது, வேண்டியது, வேண்டாதது, தனது வாழ்வில் நிகழ்ந்தது என நிறையப் பேசினாள். அவனுக்காகத் தினமும் ஒரு பதார்த்தத்தையாவது தனது கையினாலேயே சமைத்துக் கொடுத்தாள். அதனை முறைத்தவாறே வாங்கிக் கொண்டாலும் உச்சிக்கொட்டி உண்டிருந்தான் இன்பா.
நாள் முழுக்க அவனுடனேயே இருப்பவளின் கண்கள் ரசனைப்பார்வையாக மட்டுமே தான் அவனைப் பார்த்திருக்கும். அவனது உடை அதை உடுத்தும் நேர்த்தி, கைபேசியைப் பிடித்திருக்கும் பாங்கு, மீசையைச் சரி செய்து தலையைக் கோதும் விரல்கள், கூர்மையான கண்கள், மென்மையான உதடுகள் என அணு அணுவாக அவனை ரசித்து உள்வாங்கியிருந்தவளின் ரசனைப் பார்வையை உணர்ந்து பெரும்பாலும் வெட்கப்புன்னகையுடன் பூரித்த மனநிலையில் தான் அவளுடன் நாட்களைக் கடத்தியிருந்தான் இன்பா.
ஐந்தாம் நாள் மாலை, “சிந்து” என்று அறையிலிருந்து அழைத்தவனின் முன்பு வந்து நின்றவளின் கண்களில் தெரிந்த துள்ளலையும் பூரிப்பையும் பார்த்துக் குறுஞ்சிரிப்பை உதிர்த்தவனின் இதழ்களைப் பார்த்திருந்தாள் அவள்.
அவளின் பார்வையை நோக்கியவனின் இதழ்கள் மேலும் விரிய, கைகள் தலையைக் கோத, வெட்கத்தை மறைக்கக் கண்கள் அறையெங்கிலும் அலைபாய்ந்தன.
தொண்டையைச் செருமி தன்னிலை வந்து அவளைக் கலைத்தவனாய், “நான் நாளைக்குச் சென்னைக்குப் போறேன் சிந்து. அங்க நமக்காக வீடு பார்த்துட்டு வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்” என்றவனைத் துள்ளல் பூரிப்பெல்லாம் மறைந்து அலைகழித்த விழிகளிடம் சோகமாகப் பார்த்தாள் சிந்துஜா.
“எவ்ளோ நாள் ஆகும்?” எனக் கேட்டாள்.
“ஹ்ம்ம் ஒரு பத்து நாள் ஆகும். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே வீடு பார்க்க புரோக்கர்கிட்டலாம் சொல்லி வச்சிருந்தேன் தான். ஆனாலும் எதுவும் சரியா கிடைக்கலை. இப்ப போய்ப் பார்த்துட்டு ரெடியானதும் வரேன்” என்றவன் சொன்னதும்,
“அத்தை இன்னும் நிறையச் சாங்கியம்லாம் இருக்கு, கோவிலுக்குலாம் போகனும்னு சொன்னாங்களே” என்று கேள்வியாய் அவனை அவள் பார்க்க,
“அதுலாம் எங்கேயும் நீ போக வேண்டாம். உங்க அத்தை வீட்டுலருந்து யாரு வந்தாலும் போய் மதிச்சு கூடப் பேசாத! உன்னை மதிக்காதவங்களை நீ மதிக்கனும்னு அவசியமில்லை. பெரிய இடமா கட்டி கொடுத்திருக்கோம்னு பெருமை பேசிட்டு வருவாங்க. நீ அவங்க பக்கம் கூடப் போகாதே! நான் அப்பாகிட்ட சொல்றேன். அவங்க முன்னாடிலாம் போய் நீ நிக்க வேண்டிய அவசியமே இல்லை” என்றவனைப் பார்த்துச் சரியெனத் தலையசைத்தவள்,
“நான் உங்க அம்மாவை அத்தைனு சொன்னேன். குலத்தெய்வ கோவிலுக்குக் கூட இன்னும் போகலைனு சொல்லிட்டு இருந்தாங்க. எங்கே கூப்டாலும் நீங்க வர முடியாதுனு சொல்லிட்டதா சொல்லி வருத்தப்பட்டாங்க” என்றாள்.
தனது உறவுகளை அவளது உளவுகளாய் ஏற்றுக்கொண்டு பேசியதில் மனம் கனிந்தவனாய், “நம்ம வீடு பார்த்துச் செட்டில் ஆகிட்டு அடுத்து அம்மா சொல்ற எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்துடலாம் சரியா” என்றவனைச் சோகச்சித்திரம் போல் பார்த்திருந்தாள் சிந்துஜா.
அவளது கலங்கிய விழிகளைப் பார்த்து கைகளை நீட்டி தன்னருகே வருமாறு அழைத்தான்.
அவனின் கைப்பற்றி அருகே வந்து நின்றவளின் முகத்தினைப் பற்றியவன், “உனக்கு என்னைப் பிடிக்குமா சிந்து?” கண்களைப் பார்த்தவாறு கேட்டான்.
சிறிதும் யோசிக்காது, “ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்றாள்.
“எனக்காகக் கொஞ்சம் பொறுத்துக்கோ! சீக்கிரம் உன்னை என்கூடவே கூட்டிட்டு போய்டுறேன்” என்றவனின் விழிகளை விட்டு இதழ்களையே அவள் பார்க்க,
“சிந்து யூ ஆர் டெம்ப்டிங் மீ” என்றவனாய் அவளை இறுக அணைத்திருந்தான். ஒரு நிமிடம் உறைந்து நின்றவளின் கரங்கள் மறுநிமிடம் அவனைச் சுற்றி வளைத்திருந்தன.
சில நிமிடங்கள் இருவரும் மற்றவரின் அணைப்பையும் கதகதப்பையும் தனக்குள் சிலிர்ப்புடன் வாங்கிக் கொண்டவர்களாய் அமைதியாக நின்றிருந்தனர்.
சிந்துவின் தோளில் தாடையைப் பதித்தவனாய், “சிந்து ஐ நீட் சம் டைம்! உன்கிட்ட நிறையா பேசனும். ஹ்ம்ம் சொல்லனும். நமக்குனு நான் பார்க்கிற வீட்டுல நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் சிந்து. நீ ஆசைப்பட்ட மாதிரியான வாழ்க்கையை உனக்குக் கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்றவன் நிமிர்ந்து அவளைப் பார்க்க, நாணத்துடன் சரியெனத் தலையசைத்தாள்.
வருவான் என்ற நம்பிக்கையுடன் மறுநாள் ஏக்கமும் தவிப்புமாய் அவனுக்கு விடைக்கொடுத்து அனுப்பிய சிந்துவை அடுத்த ஆறு மாதங்கள் அவன் பார்க்கவே வரவில்லை.
error: Content is protected !!