Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என் இனிய இன்பனே 23

மடியில் படுத்திருந்த இன்பாவின் தலையை வருடியவாறு அமர்ந்திருந்தாள் சிந்துஜா.

எப்பொழுதும் சிந்து தான் அவனது மடியில் தஞ்சம் புகுந்திடுவாள். அவனது மடியில் படுத்தாலே அவளின் மனம் ஏகாந்த நிலைக்குச் சென்று விடும்.



Advertisement

இன்று இன்பாவுடனான பேச்சில் அவனது வலியை உணர்ந்தவளாய் அவனைத் தனது மடியில் தாங்கியிருந்தாள்‌‌. கைகள் அவனது தலையைக் கோதிய வண்ணமிருக்க, அவளது மனமோ இன்பாவுடனான தனது இல்வாழ்க்கையை எண்ணியவாறு இருந்தது.

சென்னைக்கு வந்த பிறகு துவங்கிய அவர்களது வாழ்வில் என்றும் அவளை இன்பா வருத்தியதே இல்லை என்று கூற முடியாது. அவனது கோபத்தைப் பல சமயங்களில் வெளிப்படுத்தி விட்டு அவளைக் காயப்படுத்தியதை எண்ணி வருந்தி மன்னிப்புக் கேட்டுச் சமாதானம் செய்து என அவர்களின் துவக்க கால வாழ்க்கை நிறைய நிறைகளும் குறைகளும் கலந்தவையாக இருந்தன.

Advertisement

Advertisement

நிறைய விட்டுக் கொடுத்தலும் குறைந்த எதிர்பார்ப்புகளும் கொண்டவையாக வருடங்கள் கடந்தோட தானாகவே இல்வாழ்க்கை உருமாறிக் கொண்டிருந்தது.

முதலில் சிந்து அவனிடம் எதிர்த்துப் பேச வெகுவாகத் தயங்கி அழுகையிலேயே அனைத்தையும் வெளிபடுத்திக் கொண்டிருக்க, தன்னிடம் அவள் தைரியமாக அவளது இயல்பில் இருக்கலாம் எனக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக இலகுவாய்த் தன்னிடம் அவளின் அனைத்து உணர்வுகளையும் பகிரும் வண்ணம் அவளை மாற்றியிருந்தான் இன்பா.

Advertisement

குடும்ப நிதி நிலவரங்கள் முழுவதையும் அவளது கட்டுப்பாட்டில் விட்டிருந்தான். அவளின் முடிவே இறுதியானது என அனைத்தையும் அவளிடம் ஒப்படைத்திருந்தான்‌. அதுவே அவளுக்கு மிகுந்த உற்சாகமளித்துத் தன் கூட்டிலிருந்து வெளியே வர பேருதவியாக இருந்தது.

அப்படியே அவளது அன்றாட நிகழ்வுகளைக் கேட்டும் தன்னுடையதைப் பகிர்ந்துமெனக் கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள்ளான மன இடைவெளியை வெகுவாகவே குறைத்திருந்தனர்.

‘இதே வேற யாரையாவது நான் கல்யாணம் செஞ்சிருந்தா என்னை இந்தளவுக்குச் சுயமா சிந்திக்கவும் சுயமா முடிவெடுக்கவும் விட்டிருப்பாங்களா? படிக்காத உனக்கு என்ன தெரியும்னு அடக்கித் தானே வச்சிருந்திருப்பாங்க! இவரோட படிப்புக்கு என்னை எப்பவும் தாழ்வா நடத்தினதே இல்லையே! எத்தனை தடவை படிக்கச் சொல்லி வற்புறுத்தினாரு! நான் தானே முடியாதுனு திட்டவட்டமாகச் சொன்னேன்’ எண்ணியவாறு அவள் இருக்க,

“மன்னிப்பை விடப் பெரிய தண்டனை இல்லை தெரியுமா சிந்து” என்றான் இன்பா.

குனிந்து மடியிலிருந்தவனின் முகத்தினைப் புரியாத பாவனையில் பார்த்து வைத்தாள் அவள்.

“இப்ப தான் இன்னும் குற்றவுணர்வா இருக்கு சிந்து! இதுவே முதல்லயே இதெல்லாம் சொல்லிருந்தா நங்கையைப் பார்த்ததும் அப்ப எனக்கு உண்டான உணர்வுகளை எல்லாம் உன்கிட்ட தான் வந்து சொல்லிருப்பேன். உன்கிட்ட சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் முடியாம, நங்கைகிட்ட என் நிலைமையைச் சொல்லியே ஆகனும்ன்ற என் உணர்வை கட்டுப்படுத்தவும் முடியாம போராடிட்டு இருந்திருக்க வேண்டிய சூழலே வந்திருக்காதுல!” என்றவன் கூற,

“கணவன் மனைவிக்குள்ள எதையும் மறைக்காம எல்லாத்தையும் தெளிவாகச் சொல்லி வாழ்ந்துட்டா பிரச்சனையே இல்லைப்பா! அப்படியே எந்தப் பிரச்சனை வந்தாலும் அவங்க கூட இருக்காங்கன்ற தைரியம் கூடுதல் பலம் தரும்” என்றவள்,

“இப்ப சொல்லுங்க‌! நங்கையைப் பார்த்ததும் என்ன தோணுச்சு? ஏன் அவங்ககிட்ட பேசனும்னு நினைச்சீங்க?” எனக் கேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டதும், சட்டென எழுந்து அமர்ந்து விட்டான் இன்பா.

“ஆர் யூ கம்பர்டபுள் டாக்கிங் அபவுட் திஸ்? நிஜமாவே உனக்குக் கஷ்டமா இல்லையா?” எனக் கேட்டான் இன்பா.

இல்லை எனத் தலையசைத்தவளாய்,

“என் புருஷனுக்கு நான் முக்கியமா இருக்கனும்ன்ற பொசசிவ்லயும் என்னை இத்தனை நாளா முட்டாளாக்கி வச்சிருக்கீங்களோன்ற ஆதங்கத்துலயும் வந்த கோபம் தான் அது. எப்ப உங்களுக்கு நான் இல்லாம வாழ்க்கையே இல்லைனு புரிஞ்சிதோ, நீங்க என்னைத் தான் முழுசா காதலிக்கிறீங்கனு தெரிஞ்சதோ மத்ததெல்லாம் எனக்குப் பெரிய விஷயமாவே படலைங்க‌! அதிலும் பத்து வருஷம் முன்னாடி நடந்தது! உங்க முன் காதல் பத்தி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நேசிச்சவங்களைப் பிரியுறது எவ்ளோ கொடூர வலி! அதுவும் தானே வலிக்க வலிக்கப் பேசி பிரிய வச்சது உங்களை எந்தளவுக்குக் காயப்படுத்திருக்குனு என்னால புரிஞ்சிக்க முடியுதுங்க! ஆனால் இப்ப நீங்க நங்கைகிட்ட பேச நினைச்சது தான், அதுவும் என்கிட்ட சொல்லாம மறைச்சு பேச நினைச்சது தான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு! இன்னும் உங்க முதல் காதலைக் கடந்து வராம இருக்கீங்களோனு ரொம்பக் கவலையா இருக்கு” மனதிலுள்ளதை அப்படியே கொட்டியிருந்தாள் சிந்துஜா.

சிந்துவின் கண்களை நேராகப் பார்த்தவன், அவளின் உள்ளங்கையைத் தனது கைக்குள் பொத்தி வைத்தவனாய், “மன்னிச்சிடு சிந்து” என்றவன்,

“கடந்து வந்துட்டேன் சிந்து! உன்னைக் காதலிக்கிறேன்னு தெரிஞ்சப்பவே கடந்து வந்துட்டேன்! வேற ஒரு பொண்ணை மனசுல வச்சிட்டு இன்னொரு பொண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்றது ஏமாத்துக்காரத்தனம்னு எனக்குத் தெரியும் சிந்து. நான் அந்தத் தவறை செய்யலை. முழுசா அந்தக் காதலை விட்டு மனசால வெளில வந்த பிறகு தான் உன்னைக் கரம் பிடிச்சேன்.

அதுவுமில்லாம இன்னொருத்தரோட மனைவியை மனசுல நினைச்சிட்டு இருக்கிற அளவுக்குக் கேவலமானவன் இல்லை நான் சிந்து. அது எவ்ளோ தவறான செயல்னு எனக்குத் தெரியும் சிந்து.

அவளை என் மனசுல நல்ல தோழியாகத் தான் வச்சிருக்கேன் சிந்து. எங்கே இருந்தாலும் அவ சந்தோஷமா வாழனும்ன்ற எண்ணமும் வேண்டுதலும் எனக்கு எப்பவும் இருந்தது. அன்னிக்கு நங்கையைப் பார்ட்டில பார்த்தப்ப கூட அவ நல்லா வாழுறாலனு தெரிஞ்சிக்கனும்ற ஆவல் தான் எனக்கு இருந்துச்சு‌.

ஆனா நங்கை அப்படிப் பேசினது என்னை ரொம்பவே ஹர்ட் பண்ணிடுச்சு சிந்து. இன்னுமா அந்த நிகழ்வையும் என்னுடைய வார்த்தைகளையும் கடக்க முடியாம வலியோட வாழ்ந்துட்டு இருக்கானு கஷ்டமா போச்சு. அவ இதெல்லாம் கடந்து வந்து நிம்மதியா வாழ்ந்துட்டு இருப்பானு நினைச்சிட்டு இருந்த என்னோட பெரிய நம்பிக்கைல விழுந்த பெரிய அடி அது! ரொம்பக் குற்றயுணர்வாகிப் போச்சு சிந்து மா!

நங்கை கூடப் பேசனும்னு நினைச்சது என்னுடைய நிலையை எடுத்துச் சொல்லனும்னு நினைச்சதுலாம் என்னுடைய குற்றயுணர்வில் இருந்து வெளிவர நான் எடுத்த முயற்சி! நான் பேசிய பேச்சுக்கு அவ வாயாலேயே மன்னிச்சிட்டேன்னு சொன்னா என் மனசுக்கு கிடைக்கும் நிம்மதிக்காகத் தான் நான் பேசனும்னு நினைச்சேன்.

அதுக்காக நான் செஞ்சதுலாம் சரின்னு சொல்ல மாட்டேன். என் மேல நிறையத் தப்பு இருக்குனு புரியுது சிந்து. ஐ பிராமிஸ் யூ! இனி இப்படி நடக்காது! உன்கிட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டேன்! என்னை விட்டு போகனும்னு மட்டும் நினைச்சிடாத சிந்து மா” அவளின் உள்ளங்கையில் சத்தியம் செய்தவாறு பேசியவன் கெஞ்சலுடன் முடித்திருந்தான்.

“ஓஹோ உங்களை விட்டு போய்டுவேன்னு வேற நினைப்பா உங்களுக்கு” உதட்டைச் சுழித்தவாறு அவள் கேட்க,

“ஆமா சாயங்காலம் முழிக்கும் போது நீ பக்கத்தில் இல்லைனதும் என் உசுரே என்கிட்ட இல்லை. என்னை விட்டு போய்ட்டீயோனு நினைச்சு பதறி அடிச்சி மாடிக்கு வந்து பார்த்தா மேடமுக்கு வாழ்க்கையை விட வத்தல் பெரிசுனு போய் மயக்கம் போட்டு வச்சிருக்கீங்க” என்று கேலி செய்தான் அவன்.

“பின்னே நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அதை அரைச்சு காய வச்சிருக்கேன்! மழைல நினைஞ்சிட்டா என்னவாகுறது” இன்னுமே தீவிரமாய் வத்தலுக்காகப் பொங்கிக் கொண்டு பேசியவளை ரசனையும் சிரிப்புமாய்ப் பார்த்திருந்தவன்,

“உன்னைத் தவிர வேற யாரும் இந்தச் சிச்சுவேஷனை இவ்ளோ ஈசியா எடுத்திருக்க மாட்டாங்க சிந்து” என்றான்.

“நான் ஈசியா எடுத்துக்கிட்டேன்னு யாரு சொன்னா? அப்படிலாம் ஒன்னும் இல்லை! நான் இன்னும் கோபமா தான் இருக்கேன்” உதட்டைச் சுழித்துப் பழிப்புக் காட்டியவாறு அவள் கூற,

“ஓஹோ அப்படியா? கோபமா இருக்கிறவ பாயிண்ட் பாயிண்ட்டா என்னைத் திட்டு பார்ப்போம்” என்றவனாய் புருவத்தை உயர்த்திவாறு அவளைப் பார்த்தான்.

“ஹான்.. அது.. அது வந்து” என்று அவள் தடுமாற,

“அடியே கள்ளி! பத்து வருஷமா உன் கூடக் குடும்பம் நடத்துறேன். கோபம் வராம உனக்குத் திட்ட வராதுனு எனக்குத் தெரியாதா?” என்று அவளின் காதை மென்மையாய் திருக, “ஆஆஆ விடுங்கப்பா” பொய்யாய் அலறியவள் அவனின் கைகளில் கிள்ளி வைத்தாள்.

“ஷ் ஆஆஆ அடியேய்” என்று அவள் கிள்ளிய இடத்தைத் தேய்த்தவனாய் முறைத்தான். வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் இவள்.

“சரி வா! தூங்குவோம்! ரொம்ப நேரம் ஆகிடுச்சு” என்றவாறு சோஃபாவில் இருந்து அவன் எழுந்து நிற்க, அவனை நோக்கி இரு கைகளையும் நீட்டியவளாய் அவனைப் பார்த்தாள் அவள்.

சிரிப்புடன் அவளின் நெற்றியில் முத்தமிட்டவனாய் அவளைத் தனது கைகளில் அள்ளியிருந்தான். அவனது கழுத்தில் மாலையாய் கைகளைக் கோர்த்துக் கொண்டாள் அவள்.

தனது முகத்தினருகே அவளது முகம் வருவது போல் தூக்கியவன் கன்னத்தில் முத்தமிட்டவனாய், “உனக்கு என்ன குழந்தை வேணும்டா சிந்து” எனக் கேட்டான்.

“உங்களுக்கு எது வேணுமோ அதுவே போதும்! நீங்க ஹேப்பியா இருந்தா நான் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருப்பேன்” கண் சிமிட்டி உரைத்தாள்.

மேலும் பல முத்தங்களை வாரி வழங்கியவனாய் படுக்கையில் அவளை விட்டவன், அருகில் படுத்திருந்த மகனைச் சரியாகப் படுக்க வைத்து, அவனைச் சுற்றியிருந்த பொம்மைச் சாமான்களை எல்லாம் எடுத்து வைத்தான்‌.

மகனின் வலது புறம் அவள் படுத்திருக்க, இடது புறம் வந்து படுத்துக் கொண்டான் இவன்.

மகனின் மீது போட்டிருந்த கணவனின் கை மீது கை வைத்தவளாய் அவனைப் பார்த்தவாறே உறங்கிப் போனாள் சிந்து.

மறுநாள் காலை சிந்துவின் வாந்தியொலியில் தான் எழுந்தான் இன்பா.

வாந்தி எடுக்கையில் அவளின் தலையைப் பிடித்து முதுகை வருடி, அவளையும் அந்த இடத்தையும் சுத்தம் செய்து அவளைக் கட்டிலில் அமர வைத்தான். வாந்தியை நிறுத்துவதற்குத் தேவையானதை அளித்து விட்டு அவளை உறங்கச் சொன்னவன்,

மகன் எழுந்ததும் அவனுக்குத் தேவையானதை கொடுத்து விட்டு காலை உணவை தயார் செய்து அவளை உண்ண வைத்து மாத்திரையும் அளித்தான்.

சோர்வுடன் சிந்து சோஃபாவில் அமர்ந்திருக்க, யுகேந்திரன் அங்குமிங்குமாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்க, வீட்டின் அழைப்பொலி கேட்டது.

சமையலறையில் அடுப்பை அணைத்தவனாய் வெளியே வந்தவன், தான் போய்த் திறப்பதாகக் கூறிச் சென்று போய்க் கதவை திறந்தான்.

இவனை முறைப்பாய் பார்த்தவாறு நின்றிருந்தார் கந்தசாமி.

“அப்பா! என்னப்பா சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க!” ஆச்சரியமாகக் கேட்டவனாய் கதவைத் திறந்து அவர் உள்ளே வர வழி விட்டான்.

அவனிடம் ஏதும் கூறாது உள்ளே வந்தவரை, “வாங்க மாமா! உட்காருங்க” என்று சிந்து வரவேற்க,

“நல்லாயிருக்கியா மா” என அவளின் நலனை விசாரித்த கந்தசாமி, “யுகி எங்கம்மா?” என்றவராய் உள்ளே எட்டிப் பார்த்தவர், அவன் அங்கு விளையாடுவதைப் பார்த்து விட்டு அமர்ந்தார்.

“என்னப்பா திடீர்னு சொல்லாம வந்திருக்கீங்க?” எனக் கேட்டவாறு இன்பா சோஃபாவில் அமர,

அவன் பேசியது காதில் கேட்காதது போல், “எத்தனை மாசம்னு சொன்னாங்கமா?” எனச் சிந்துவிடம் கேட்டிருந்தார் கந்தசாமி.

இன்பாவின் முகம் மாறிப்போனது.

“நாற்பது நாள் ஆகியிருக்கு மாமா” என்றவள் கூறவும்,

மீண்டுமாய் இன்பா, “அப்பா உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்றான்.

அவன் வாழ்வில் முதல் முறையாக அவனது தந்தை அவனைத் தவிர்க்கிறார். நெஞ்சம் என்னமோ செய்தது.

இவள் சங்கடமாய் இன்பாவையும் கந்தசாமியையும் பார்க்க, டூர்ர்ர்ர் என்று வாயில் சத்தமிட்டவாறு தனது நடை வண்டியை இருச்சக்கர வாகனமாய் எண்ணி படுக்கையறையில் இருந்து முகப்பறைக்குத் தள்ளிக் கொண்டு வந்தான் யுகேந்திரன்‌.

மகனின் பேச்சைக் காதில் வாங்காதவராய், “யுகி தம்பி! தாத்தாக்கிட்ட வாங்க” என்றவர் அவனைக் கைகளில் தூக்கி வந்து தனது மடியினில் அமர வைத்தார்.

அவன் அவரின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவனாய் தா தா தா எனக் கொஞ்சும் மொழியில் அழைக்க, அவனது கன்னத்தில் முத்தமிட்டவராய் பேரனைக் கொஞ்சினார் இவர்.

இன்பாவின் கண்கள் ஏக்கமாய்த் தந்தையை எதிர்நோக்கி இருக்க, “எப்பம்மா யுகியை ஸ்கூல்ல சேர்க்கிறதா இருக்கீங்க?” என்று சிந்துவிடம் அவர் கேட்க,

“ஹான் மாமா! என்னங்க! நீங்க தானே ஏதோ ஸ்கூல்ல விசாரிச்சீங்க! சொல்லுங்க மாமாகிட்ட” பேசுமாறு கணவனிடம் கண் ஜாடை காட்டினாள்.

மாமனார் தனது கணவனைத் தவிர்க்கிறார் எனப் புரிந்து இவளாக அவனைத் தங்களது பேச்சினில் இழுத்தாள்.

“அப்பா என் மேல கோபமா இருக்கீங்களா?” எனக் கேட்டான் இன்பா.

மீண்டும் ஏதும் பதிலுரைக்காது யுகியை கீழே இறக்கி விட்டு அவனை விளையாட உள்ளே அனுப்பினார்.

“உன் மாமியார் பத்தி உனக்குத் தெரியும் தானே சிந்து! மத்தவங்களைக் கஷ்டப்படுத்துற மாதிரி தானே அவ பேசுவா! ஆனாலும் இது வரைக்கும் அவகிட்ட எந்த விஷயத்தையும் நான் மறைச்சதில்லை தெரியுமா! உன் புருஷனுக்கு ஆக்சிடெண்ட் ஆனதை அந்த நேரத்துக்குச் சொல்லலைனாலும் பின்னாடி காலம் பார்த்து அவகிட்ட சொல்லிருக்கேன். அந்த நேரம் சொன்னா பிரச்சனை வரும்னா சொல்லாம ஒத்திப் போட்டு பின்னாடி நேரம் பார்த்து அவகிட்ட சொல்லிடுவேன். என்னைப் பத்தி தெரியாதது அவகிட்ட எதுவும் இல்லைன்ற அவளோட நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் நடந்துக்கனும்னு நினைப்பேன். நீயும் அப்படியான நம்பிக்கை தானே அவன் மேல வச்சிருப்ப! என்ன செஞ்சி வச்சிருக்கான் இவன். இவனை என் பிள்ளைனு சொல்லவே…” என்று ஆத்திரமாக அவர் முடிக்கும் முன்னமே,

அவசரமாக, “மாமா” என்று இடையிட்டு நிறுத்தியவள், “அப்படிலாம் சொல்லாதீங்க மாமா! என் விஷயத்தில் அவர் ஒன்னும் அவ்ளோ பெரிய தப்பு செய்யலை. நீங்க அத்தையைப் பார்த்துக்கிறதை மாதிரி… சொல்லப்போனா அதை விட அதிகமாகவே என்னை அவர் நல்லா பார்த்துக்கிறார் மாமா” என்றாள்.

கவலையில் சுருங்கிய கணவரின் முகத்தைக் காண சகிக்காது, படபடவென அவனுக்காகப் பரிந்து வந்து பேசியிருந்தாள் சிந்து.

“உன்னால தான் அவன் இப்படி இருக்கான். எப்படி நீ அவனை மன்னிச்சு விடுறமா சிந்து! என்ன காரியம் செஞ்சி வச்சிருக்கான். அந்தப் பொண்ணு பத்து வருஷம் ஆகியும் மறக்காம இருக்கானா எவ்ளோ காயப்பட்டிருப்பா! நேத்து கேட்க கேட்க மனசு ஆறலை எனக்கு! வளர்ந்த பிள்ளைகளோட காதல் கல்யாணம்லாம் அவங்களோட முடிவுனு நான் எதுவும் கேட்காம விட்டது தப்போனு இப்ப என்னை யோசிக்க வச்சிட்டான் இவன்” என்று இன்பாவை கோபக்கனலாய் பார்த்தார் அவர்.

முந்தைய நாள் சிந்துவின் கர்ப்பத்தைப் பற்றித் தந்தையிடம் கூற அழைத்தவன், இருந்த மன உளைச்சலில் முதல் முறையாகத் தனது தந்தையிடம் நங்கையிடம் தான் முன்பு பேசியது தொடங்கி இப்பொழுது சுரேந்தரிடம் மன்னிப்புக் கேட்டது அதன் பிறகு சிந்துவிற்குத் தெரிந்து கோபம் கொண்டது வரை அனைத்தையும் கூறியிருந்தான்.

“மாமா அது பத்து வருஷம் முன்னாடி நடந்தது. எதுக்கு முடிஞ்சதை தூக்கி சுமந்துட்டு இருக்கனும்னு நானே அவரை அதெல்லாம் தூக்கி போட்டுட்டு நிம்மதியாக இருங்கனு தேத்தி வச்சா நீங்க வந்து திரும்ப அவரை அதுக்குள்ளயே கொண்டு போறீங்களே” மாமனார் மீதே அந்தப் பேச்சை அவள் திருப்பிப் போட,

சிந்துவை முறைத்து விட்டு இன்பாவை திரும்பிப் பார்த்து, “உன் வாழ்நாள்ல நீ செஞ்ச ஒரே நல்ல காரியம் சிந்துவை கல்யாணம் செஞ்சது தான்டா!” என்று கூறினார்.

அவரருகில் வந்து கைகளைப் பற்றியவனாய், “அதுக்கும் காரணம் நீங்க தானேப்பா! உங்க அட்வைஸ் இருக்க வரைக்கும் நான் என்னிக்கும் தப்பு செஞ்சது இல்லைப்பா! நானா எடுத்த முடிவுகள் தான் என் வாழ்க்கைல நிறையத் தவறாகப் போய்டுச்சு! மன்னிச்சிடுங்கப்பா! இனி கவனமாக இருக்கேன்” என்றான்.

அமைதியாக மகனின் தலையை வருடி தோளில் தட்டிக் கொடுத்தார் கந்தசாமி.

வாசலில் அழைப்பொலி கேட்க, தான் திறப்பதாகக் கூறிச் சென்ற இன்பா, அங்கே புதியவர் ஒருவர் நிற்பதைக் கண்டு, “சொல்லுங்க சார்! யார் வேணும்? என்ன வேணும்?” எனக் கேட்டான்.

“நாங்க இந்த அபார்ட்மெண்ட்க்கு புதுசா வந்திருக்கோம். இங்கே பர்த்டே கேக் செஞ்சி கொடுக்கிற கடை பத்தி பக்கத்து வீட்டுல விசாரிச்சேன். உங்க மனைவி வீட்டுலயே பேக்கிங் ஆர்டர் எடுத்துச் செய்றதா சொன்னாங்க. அதான் ஆர்டர் கொடுக்கலாம்னு வந்தோம்” என்றவர் சொன்னதும்,

“வாங்க! வாங்க! உள்ளே வாங்க!” என்று அவரை இன்பமாய் வரவேற்ற இன்பா,

“சிந்து! கேக் ஆர்டர் கொடுக்க வந்திருக்காங்கமா” என்றான்.

அவர்களிடம் சில நிமிடங்கள் பேசி ஆர்டரை பெற்றுக் கொண்டவள், அடுத்த வாரத்தில் குறித்த தேதியன்று கேக் கொடுக்கப்படும் என்றும் அதற்குரிய முன் பணத்தையும் கூறிப் பெற்றுக் கொண்டாள்.

அந்த அண்டை வீட்டினரை வாசல் வரை சென்று வழியனுப்பி வந்தவள், மாமனாரின் அருகில் அமர்ந்தவளாய்,

“இதோ இந்த வேலை நான் எனக்குனு சுயமாகச் சம்பாத்தியம் வச்சிருக்கனும்னு சொல்லி அவர் கத்துக்க வச்சி ஏற்பாடு செஞ்சி கொடுத்தது மாமா. எனக்குப் படிப்பு வராதுனு சொன்னதும் சமையல்ல விருப்பம்னு தெரிஞ்சி அதுல என்ன செய்யலாம்னு அவரே யோசிச்சி கத்துக்க வச்சி என்னை ஒரு பிசினஸ் செய்ற அளவுக்குக் கொண்டு வந்தது என் மேல் அவருக்கு இருக்கும் அக்கறையும் அவரோட காதலும் மட்டுமே தான் மாமா! இனி எனக்காக என் முன்னாடி அவரைத் திட்டாதீங்க மாமா! பின்னாடி வேணா திட்டிக்கோங்க” சிரிப்புடன் கண்களைச் சிமிட்டியவாறு உரைத்தவள் படுக்கையறைக்குள் சென்றாள்.

அதே சமயம் தந்தையின் கையில் காபியை அளித்தவனாய் அவரருகில் இன்பா வந்து அமர, “மன்னிச்சிடு தம்பி! கோபத்துல என்னமோ பேசிட்டேன்” என்றார் கந்தசாமி.

“அட என்னப்பா நீங்க! அப்படிப் பார்த்தா நான் எவ்ளோ மன்னிப்பு கேட்கனும்” தந்தையின் கைகளைத் தனது கைக்குள் வைத்துக் கொண்டு அவன் கூற, படுக்கையறையில் இருந்து இந்தக் காட்சியைக் கனிவுடன் பார்த்திருந்தாள் சிந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!