Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

யாழினியன்

Priya Milirvannan’s யாழினியன் – 08

  1. … தலையங்கமும்… தலையெழுத்தும்…

 

புகழின் வீட்டை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த இனியனுக்கு கண்ணில் தென்படும் அனைத்தும் கானல்நீர் போல் தோன்றிக்கொண்டிருந்தது. (வெய்யோன் மங்கும் பொழுதில் கானல் நீர் என்பது இல்லாத ஒன்று தான். அது போல் தான் நட்பில் துரோகம் என்பது என்றும் இல்லாத ஒன்று என்பது இனியனது ஆழ்ந்த உணர்வாகும்). புகழ் வீட்டை அடைந்திருந்த இனியனிடம் “எழில் எங்கே?” என்று புகழ் முன்மொழிவான் என இனியன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதே உண்மை.

 

புகழும், இனியனும் எழிலைத் தேடிக்கொண்டிருந்தனர். பெரியகோவிலைச் சுற்றி நடப்பது இவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியாகத் தான் எப்போதும் இருக்கும். ஆனால் இன்று இனியனுக்கோ மிகப்பெரும் பாரமாகத் தோன்றியது. இரவு 10 மணி ஆகியும் எழிலைப் பற்றி எவ்வித தகவலும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவரவர் இல்லம் நோக்கி சென்றுவிட்டனர்.



Advertisement

 

அழைத்துச் சலித்து கடைசி அழைப்பாக எழிலின் அலைபேசிக்கு இனியன் அழைத்தபோது  “தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்” என்பதே பதிலாக வந்தது. அன்று மாலை கல்லூரியில் வெள்ளைச் சட்டை மற்றும் சிறிது பச்சை, ஊதா நிறத்தில் வரிகள் கொண்ட வேட்டி அணிந்திருந்த ஐந்து நபர்கள் எழில் பெயரை ஏன் உச்சரித்தனர் என்பது மட்டுமே இனியனின் எண்ணத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. உறக்கமும் எவ்வித பிரதிபலிப்பும் இன்றி அவனை ஆட்கொண்டிருந்தது.

 

Advertisement

          காலைக் கதிர் இனியனின் அறையின் சாளரத்தின் வழியே படர்ந்திருந்தது. “நாளது செய்தி” நாளிதழுடன் வெண்பாவும், கையில் சர்க்கரைப் பொங்கலுடன் இனியனின் அம்மா அபிராமியும் இனியனுக்காக இல்லத்தின் வரவேற்பறையில் காத்துக்கொண்டிருந்தனர். ஆம், முதன் முதலாக கல்லூரி சார்பாக இனியனால் எழுதப்பட்ட தலையங்கம் “நாளது செய்தி” நாளிதழில் வெளிவந்திருந்தது. “மிதிலை இல்லமானது” மற்ற நாட்களை விட இன்று “இனியனின் நாளது செய்தி இல்லம்” என்பது போல் நாளிதழ்களால் நிறைந்திருந்தது. 

Advertisement

 

          இவை எதுவும் இனியனுக்கு எவ்வித மனமகிழ்வையும் கொடுக்கவில்லை. ஆம், எழில் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன், எப்போதும் எழுந்தவுடன் தன் அறையில் இருக்கும் “ராமர் பட்டாபிஷேக படத்திற்கு வணக்கம் தெரிவித்து, எல்லாம் இன்று நன்மையே; எல்லாருக்கும் எப்போதும் மனமகிழ்வே; என்ற வரியை உச்சரிப்பான்” ஆனால் இன்று எதுவும் செய்யாமல், கல்லூரிக்கு கிளம்பி அலைபேசியுடன் நேரே வரவேற்பறைக்கு வந்திருந்தான். வெண்பாவிற்கு இனியனின் இன்றைய நாள் குறித்து சிறிது ஐயம் ஏற்படத்தான் செய்தது. 

 

Advertisement

          தலையங்கத்தையும் படிக்கவில்லை. சர்க்கரைப் பொங்கலையும் சாப்பிடவில்லை. அதே நேரம் இனியனின் அலைபேசி அழைத்துக் கொண்டிருந்தது. மறுமுனையில் புகழ் இருந்தான். “எழில் என் வீட்டில் தான் இருக்கிறான் கல்லூரிக்கு வந்து விடு நாங்களும் வந்துவிடுகிறோம்” என்றுக்கூறி அழைப்பைத் துண்டித்திருந்தான் புகழ். கண்ணிமைக்கும் நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் புகழ் வீட்டை அடைந்திருந்தான் இனியன். ஆனால், புகழும் எழிலும் தற்போதுதான் கல்லூரிக்கு கிளம்பினார்கள் என்பதை புகழின் அம்மா மூலம் தெரிந்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தான்.

 

          கல்லூரி அருகே இருந்த புத்தகக்கடையில் இனியனின் தலையங்கம் குறித்த விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. அருகில் இருந்த தேநீர் கடையில் நின்றிருந்த கல்லூரி மாணவர்கள் இனியனைப் பார்த்தபோது சிறிது கலக்கத்துடன் தேநீர் கோப்பையை வைத்துவிட்டு கல்லூரிக்குள் பயணித்தனர். இளங்கலை இதழியல் “துறைத் தலைமை ஆசிரியர்” அறை முன்பு 20 நபர்களுக்கு மேல் கூடியிருந்தனர். நேற்று மாலை கூடியிருந்த அதே ஐந்து நபர்களும் அதில் அடங்கியிருந்தனர். 

 

 அப்போதுதான் இனியனுக்குப் புரிந்தது எவ்வளவு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டோம் என்பது. ஆம், “உங்கள் தொகுதியில் சட்டமன்றம்” என்ற தலைப்பிற்குப் பதில் “முதல்வரின் முயலாமை..” என்ற தலைப்பில் தலையங்கம் வெளிவந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் “இவ்வாறு துணிச்சலான தலையங்கத்திற்கு களஆய்வு மேற்கொண்ட இதழியல் மூன்றாம் ஆண்டு மாணவர் இனியனுக்கு பாராட்டுகள் என்றும் இடம்பெற்றிருந்தது.” 

 

          கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் ஆளும்கட்சியின் முயலாமையை மட்டுமே பிரதிபலிப்பதாக தலையங்கம் இருந்தது. இது தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட அந்த தஞ்சாவூர் தொகுதியில் மாற்றம் ஏற்படும் என்பதே இப்போதைய பிரச்சனையாக இருந்தது. இவை அனைத்திற்கும் எழில்தான் காரணம் என்பதை ஒருவிதத்தில் இனியன் ஊகித்துக்கொண்டான்.

 

          துறைத் தலைமையாசிரியரிடம் நிலைமையை எடுத்துக்கூறி சிறிது நேரம் அவகாசம் பெற்றிருந்தான் இனியன். அதற்கிடையில் புகழ் எழிலை கல்லூரிக்கு அழைத்து வந்திருந்தான். ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களும், கல்லூரி முதல்வர் மற்றும் துறைத்தலைமை ஆசிரியரும் ஒரு அறையில் கூடியிருந்தனர். எழில் வருகை இனியனுக்கு சிறிது ஆறுதல் தந்தது. நண்பனுக்கு ஒன்றும் இல்லை என்ற நிம்மதியும், தன்மேல் தவறு இல்லை என்பதை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் என்றும் நிம்மதி பெருமூச்சு விட்டான் இனியன்.

 

( எழிலின் வருகை இனியனுக்கு நிம்மதி பெருமூச்சா? அல்லது நட்பின் பாவனையில் உள்ள வண்ணமற்ற பூச்சுக்களா? காண்போம் அடுத்த அத்தியாயத்தில்)

 

– இசைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!