Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரும்பில் ஓர் இதயம்

இரும்பில் ஓர் இதயம்…..13

இரும்பில் ஓர் இதயம்…..13

காலை பரிதி கண்விழிக்கும் போது மிருதுளா அவனின் பக்கத்தில் இல்லை எங்கு சென்றிருப்பாள் என்று சுற்றி பார்க்க,அவனின் தலைமாட்டில் ஒரு தாள் இருக்க,

“ராட்சசி வேலைக்கு போயிட்டா போல….”என்று பல்லை கடித்துக் கொண்டு எடுத்து பிரிக்க,ஆரம்பமே மிகவும் தூக்கலாக தான் இருந்தது,

“மிஸ்டர் களவானி சார்….பல்லை ரொம்ப கடிக்காதீங்க….தாடை வலிக்கும்….அப்புறம் சாப்பாடு எல்லாம் பக்கத்திலேயே வச்சிருக்கேன் சாப்பிடுங்க…அப்புறம் நான் என்ன சொல்ல வரேன்னா….நான்….நான்…..நான் வேலைக்கு போறேன்….வாரேன் களவானி….அப்புறம் நானும் உங்க கிட்டேந்து ஒன்னை களவாடிட்டேன் அது என்னனு கண்டுபிடிச்சு வைங்க சாய்ந்தரம் வந்திடுவேன்….”என்று மிருதுளா எழுதியிருக்க,பரிதிக்கு வெகு நாட்களுக்கு பிறகு முகத்தில் புன்னகை பூத்தது அதனுடனே மிருதுளா கூறியபடி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் ஏனோ உணவை மட்டும் உண்ணவில்லை இத்தனை நாள் அவள் ஊட்டி விட உண்டவனுக்கு ஏனோ மனம் ஏங்க மீண்டும் சோர்வுடன் படுத்துவிட்டான்.



Advertisement

மிருதுளா தனது வேலை முடித்து வரும் வரை பரிதி படுத்து தான் இருந்தான்.மிருதுளா உற்சாகமாக வீட்டினுள் நுழைய பரிதி படுத்திருக்கவுமே அவனை தொந்தரவு செய்யமால் சாப்பாட்டு பாத்திரங்களை பார்க்க காலை சமைத்து வைத்த உணவு அப்படியே இருக்கவும் கோபமாக அவனிடம் நெருங்கும் முன் எழுந்தவன்,

“பசிக்குது….சாப்பாடு….”என்று கேட்க,

“ஏன் காலையிலேந்து சாப்பிடாம இருந்தீங்க….ஆங்….”என்று அவள் அடுத்த சண்டைக்கு தயாராக,பரிதி சோர்வுடன் படுத்துவிட்டான்.உண்மைக்கும் அவனிற்கு உடம்பில் தெம்பு இல்லை அவளுடன் வாதிட அதனால் அமைதியாக அவன் படுக்க,

Advertisement

“ப்ச்….படுக்காதீங்க….இதோ வந்துடுறேன்….”என்றுவிட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் அவனிற்கு உணவை தட்டில் பிசைந்து ஊட்ட தொடங்க சிறு குழந்தை போல் அவன் வாங்குவதை பார்த்தவளுக்கு கோபம் வந்தாலும் தான் ஊட்ட வேண்டும் என்பதற்காகவே அவன் சாப்பிடவில்லை என்பதும் புரிந்தது.கிட்டதட்ட அவள் சமைத்த அனைத்தையும் சாப்பிட்டுவிட்டான்.

Advertisement

“ம்ம்ம்….இவ்வளவு பசியிருக்கு நான் ஊட்டிவிட்டா தான் சாப்பிடுவேன்னு குழந்தை மாதிரி உட்கார்ந்திருந்தீங்கலா….”என்று மிருதுளா மென்மையாக தான் கேட்டாள் ஏனோ கோபத்தை அந்த நொடி அவனிடம் காட்ட பிடிக்கவில்லை.அவனோ உடல் சோர்வு அதோடு சாப்பிடாததன் சோர்வு அனைத்தும் ஆட்கொள்ள மீண்டும் படுத்துவிட்டான்.

“உடனே படுக்காதீங்க….கொஞ்ச நேரம் சாய்வா உட்காருங்க….”என்றுவிட்டு அவனை எழுப்பி தலையணை முதுக்கு கொடுத்து உட்கார வைத்தாள்.சற்று நேரம் கழித்து அவனிற்கு அவள் மாத்திரைகளை நீட்ட அதை அவன் வாங்க கைகளை நீட்டியவன் அப்போது தான் அவளின் கைகளை கவனித்தான்.அன்று அவன் அவளிற்காக களவாடிய வளையல்கள் அவளின் கைகளில் மின்னியது.அதனை கண்டவனுக்கு நெஞ்சில் ஆனந்த அதிர்ச்சி.எப்படி இவளுக்கு என்று நினைத்தவன்,

“அப்போ சண்டகாரி நேத்து நான் பேசினதை கேட்டிட்டு போலவே….இனி ஓவரா போவாளே….எதுக்கும் நாம தெரியாத மாதிரி கெத்தா இருப்போம்….”என்று நினைத்தவனுக்கு அப்போது தான் காலை கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருந்தது நியாபகத்திற்கு வர,

Advertisement

“களவானி இதை தான் களவாடினியா….”என்று வாய்விட்டே அவன் புலம்ப அவன் மாத்திரை நீட்டிக் கொண்டிருந்தவள் அவன் வாங்காமல் இருக்கவும்,

“என்ன என் கையையே பார்த்திக்கிட்டு இருக்கீங்க….மாத்திரை சாப்பிடுங்க….”என்று கூற அவளிடம் இருந்து வாங்கி முழுங்கி விட்டு அவளை பார்க்க,அவளோ அடுத்த வேலைக்கு சென்றுவிட பரிதிக்கு சற்று ஏமாற்றமாக போனது.உண்மையில் மிருதுளா அவனிடம் அதைக் காட்டி அவனை வெறுப்பேற்ற தான் வந்தாள் ஆனால் அவன் இருந்த நிலையை கண்டவுடன் அனைத்தையும் மறந்துவிட்டாள்.

வெளியில் இருந்த பொது குழாயில் துணிகளை துவைத்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு பெண்,

“என்ன மிருதுளா கையில வளையல் மின்னுது….உன் புருஷன் வாங்கிட்டு வந்ததா….”என்று கேட்கும் போது தான் அவளிற்கு நினைவே வர,ஆமாம் என்றவள் அப்படியே துணிகளை போட்டு விட்டு அவள் நகர,

“அட என்ன பொண்ணு வெட்கமா….”என்று அவரின் கிண்டலை எல்லாம் காதில் வாங்காமல் வேகமாக ஓடிவந்து பரிதியை பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

“ம்ஹம்….இவரை பார்த்தாலே நான் மத்தது எல்லாத்தையும் மறந்து தான் போயிடுறேன்…..எப்படியும் கண் முழிப்பார்ல அப்ப இருக்கு….”என்று கருவி விட்டு சென்றாள்.  

இரவு பத்து மணிக்கு மேல் தான் பரிதிக்கு முழிப்பு வர தூக்கம் கலைந்தவன் மிருதுளாவை தேட அவளோ வெளியில் பேசிக் கொண்டிருந்தாள்.தன் பக்கத்தில் இருந்த டம்பளரை எடுத்து சுவற்றில் ஓங்கி அடிக்க சத்தம் கேட்டு வந்தவள் அவனை முறைத்துக் கொண்டே,

“எதுக்கு இப்ப சாமான உடைச்சிக்கிட்டு இருக்கீங்க….”என்று கத்த,

“என்னை தூக்கிவிடு….”என்றான்

“அதுக்கு என்னை கூப்பிட வேண்டியது தான….”என்று கூறிக் கொண்டே அவனை எழுப்ப,

“அதை தான் செஞ்சேன்…..”என்று அசராமல் கூறிவிட்டு சென்றான்.

“எதே உங்க ஊர்ல இப்படி தான் கூப்பிடுவீங்களா….”என்று அவள் கேட்க பதில் அளிக்க அவன் இல்லை.

“திமிரு இருக்கட்டும்….”என்றவள் தன் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கும் போது அவளின் வளையல்களை பார்த்தவுடன்,

“ச்சை திரும்பியும் மறந்துட பார்த்தான் பாரு….வரட்டும்….”என்று அவனிற்காக காத்திருக்க,தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவனிடம் வேண்டும் என்றே வளையல்களை ஆட்டி ஆட்டி அவள் ஏதேதோ பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுக்க மறுபக்கம் தான் எந்த மாறுபாடும் இல்லை.

“ச்சை எதுவும் தெரியலையா இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறாரா….”என்று அவளை குழப்பி விட்டான்.ஆனால் அவள் காணத நேரங்களில் அவனின் முகத்தில் தெரிந்த மெல்லிய புன்னகையை அவள் கவனிக்கவில்லை.

“சண்டக்காரி என்னென்ன வேலையெல்லாம் செய்யுறா….”என்று தனக்குள் கூறிக் கொண்டவன் அவளின் செயல்களை ரசிக்க தான் செய்தான்.அவனிற்கு உணவை ஊட்டிவிட்டு இருவருக்கும் படுக்கை விரித்தவளுக்கு நேற்றைய இரவின் தாக்கம் மனதில் எழ தயக்கம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது.

அதனால் அவனின் முகத்தை பார்க்காமல் அவனிற்கு அனைத்தும் செய்ய பரிதிக்கு அவளின் நிலை புரிந்தாலும் தெரியாததை போல் காட்டிக் கொண்டான்.பரிதியை படுக்க வைத்துவிட்டு அவளும் படுக்க செல்ல அவளின் இடையை இறுக்கமாக வளைத்தது பரிதியின் கரங்கள்.அவனின் முகமோ அவளின் கழுத்தில் ஆழமாக புதைந்து அவளின் வாசம் பிடிக்க,

“போங்க….தள்ளி போங்க……நான்….நான் உங்க கிட்டேந்து ஒன்னை திருடினேன் அது என்னனு கண்டுபிடிக்க சொன்னேன் கண்டுபிடிச்சீங்களா….”என்று மூக்கை உறுஞ்சியபடி கேட்க,

“அதான் வளையல் டான்ஸ் ஆடி காமிச்சியே அப்புறம் என்ன….”என்றவன் குரல் அத்தனை குழைவாக வர,மிருதுளா தான் வாயை பிளந்தாள் அவனின் பதிலில்.

“ப்பா….நான்….”என்றவளின் இதழ்கள் அடுத்த வார்த்தைகள் பரிதியின் இதழ்களுக்குள் அடைக்கலமாக அவனின் மொழிகள் அவளுள் அடைக்கலம் ஆனது.இருவரின் உடலும்,மனமும் ஒருவருடன் ஒருவர் பிணைந்து ஓர்ருயிர் என மாறியது.ஒருமாத காலம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை அவளுக்கு ஆனால் அத்தனை இனிமையாக கழிந்தது.

வேலைக்கு செல்வதில் தான் சற்று சிரமம் உணர்ந்தாள் அதுவும் அவனிற்காக என்ற போது அதுவும் இனித்தது.அவள் எவ்வளவு வேலை செய்து வந்தாலும் அவள் தான் ஊட்டி விட வேண்டும் அதனால் காலை வேலைக்கு செல்லும் போதே அவனிற்கு உணவை ஊட்டிவிட்டு தான் செல்லுவாள் மதியம் அவளின் உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு வந்து அவனிற்கு உணவு கொடுத்துவிட்டு தான் போவாள்.திவி கூட கிண்டல் செய்வாள்,

“என்னடீ உன் மகாராஜாவுக்கு சாப்பாடு கூட நீ தான் ஊட்டிவிடனுமா….அவரா சாப்பிட மாட்டாரா…..”என்று கேட்க,

“ம்ம்ம்….அதான் மகாராஜானு சொல்லிட்டியே அப்புறம் அப்படி தான் இருப்பார்….”என்று மிருதுளாவும் பதில் தந்துவிட்டு தான் வருவாள்.வெளியிடத்தில் அவனை எங்கும் விட்டுக் கொடுக்கமாட்டாள்.அவனிற்கு செய்வதில் அத்தனை பிடித்தம் அவளிற்கு அவனும் தன் இள வயது ஏக்கங்களை மனைவியின் மூலம் தீர்த்துக் கொண்டிருந்தான்.ஆக இருவரின் வாழ்வும் சரியான பாதைக்குள் பாதி நுழைந்திருந்தது.ஆம் பாதி தான் இன்னும் சில முரண்பாடுகள் இருவரிடமும் உண்டு தான் ஆனால் அதை இருவருமே இப்போது பேசிக் கொள்ள விரும்பவில்லை என்பது உண்மை.

இதோ பரிதியின் கால் காயம் முற்றிலுமாக ஆறியிருந்தது.இப்போதெல்லாம் நன்றாகவே நடக்க தொடங்கிவிட்டான்.மிருதுளாவிற்கு அவன் குணமானதில் மகிழ்ச்சி அடைவதைவிட பயம் தான் வந்தது எங்கே மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டாள் என்ன செய்வது என்று.அதை அவனிடம் கேட்கவும் பயம் நான் மாறவேமாட்டேன் என்று அவன் கூறிவிட்டால் என்ன செய்வது என்று.ஆக அவளின் மனதின் அழுத்தம் கூடி தான் போனது.

“ஏன்டீ ஒரு மாதிரி இருக்க….ஏதாவது பிரச்சனையா….”என்று திவி அவளின் முக இறுக்கத்தை கண்டு கேட்டவளிடம் சிரித்து மழுப்பிவிடுவாள்.

மிருதுளாவிற்கு திடீர் என்று மனதில் இதற்கு ஒரு தீர்வு உதிக்க அதன்படி செய்து பார்த்தால் என்ன என்று மனதும்,மூளையும் கூறியது.அது பரிதியை வேலைக்கு என்று வெளியில் அனுப்பாமல் தன்னுடனே வைத்துக் கொள்வது.அவன் வெளியில் சென்றால் தானே திருடுவான் அவனிற்கு தேவையானது அனைத்தையும் தானே செய்தால் அவன் வெளியில் செல்லமாட்டான் என்று ஒரு குறுட்டு நம்பிக்கை.ஆனால் மிருதுளா ஒன்றை மறந்தாள் பரிதி அவனாக நினைத்து மாறினால் தான் உண்டு இல்லையேல் அதன் விளைவு மோசமாக தான் இருக்கும்.

அவளின் முடிவு சரியா தவறா என்று ஆராயாமல் அதன்படி நடக்க தொடங்கினாள்.மாலை வந்தவுடன் அவனுடனே ஒட்டிக் கொண்டு தான் திரிவாள்.எப்போதும் ஒட்டுதல் என்பது அவனாக இருக்க இப்போது அவளாக வந்து ஒட்டவும் அவனும் தன்னை மறந்து அவளுடன் தான் திரிவான்.ஆக பரிதியின் கவனம் முழுவதும் தன்னிடம் மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொண்டாள்.

முதலில் பரிதிக்கு மனைவியின் இந்த அதிகபடியான ஒட்டுதல் எதனால் என்று புரியவில்லை.ஆனால் அவளாக தன்னிடம் இழைய மனதும்,உடலும் மேலும் அவளுடன் ஒன்றி போனது அந்த புது கணவனுக்கு.ஆனால் நாளாக அவனின் பித்து நிலை சற்று தெளிய தொடங்கியது.அப்போது கவனிக்க தொடங்க மிருதுளா அவனை எப்போதும் கண்காணிப்பது அவன் எங்காவது வெளியில் செல்லுகிறேன் என்று கூறினாலும் வேண்டாம் என்று மறுப்பது என்று அவனை தனது கைக்குள் வைத்துக்கொள்ள நினைக்க,அதோடு அவள் வேலை செல்லும் முன்பும் அவன் எங்கு செல்லமாட்டான் என்று ஒரளவிற்கு தெரிந்த பின் தான் செல்லுவாள்.இதையெல்லாம் கவனித்தவனுக்கு விஷயம் ஓரளவிற்கு பிடிப்பட்டுவிட்டது.

“என்னை உன் இஷ்டத்துக்கு வளைக்கலாம் நினைக்கிறியா…..ம்ம்ம்…..நானா மாறுனா தான் உண்டு….ப்ச் உனக்கு இன்னும் என்னை புரியலையே…”என்று வருத்தபடுவது போல் சிறிது நேரம் யோசித்தவன்,

“பார்க்கலாம்….என்ன செய்யுறானு….”என்றுவிட்டு நினைத்தவன் அதை அடுத்த நாள் காலை செயலும் படுத்தினான்.மிருதுளா எப்போதும் எழும் போது பரிதி இல்லை.விடியாற்காலை எங்கு சென்றிருப்பான் என்று நினைத்தவள் வீட்டின் வெளியில் வந்து தேடிவிட்டு உள்ளே வந்தவள் அன்றைய நாளிற்கான வேலைகளை செய்ய தொடங்கினாள்.ஆனால் அவளின் மனமோ அவனிடமே இருந்தது எங்கு சென்றிருப்பான் என்று மீண்டும் மனதில் அபாய சங்கு ஒலிக்க கைகள் நடுங்க அப்படியே அமர்ந்துவிட்டாள்.

கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகி கன்னத்தில் இறங்க மனமோ எதைஎதையோ நினைத்து நிலை கொள்ளாமல் தவிக்க தொடங்கியது.ஏற்கனவே இரண்டு நாட்களாக அவளின் உடம்பும் ஏதோ போல் தான் இருந்தது அதை கவனிக்கும் நிலையில் தான் அவள் இல்லையே.தன்னை மறந்து அல்லவா அவனை பார்த்துக் கொண்டாள் ஆனால் இன்று அனைத்தும் இடிந்து விழுவது போல் கண்முன்னே தோன்ற அதை பார்க்கும் சக்தி இல்லாமல் மயங்கி சரிந்தாள்.

மிருதுளா கண்விழிக்கும் போது திவ்யா தான் அவளின் தலையை தடவியபடி கண்களில் நீர் கோர்க்க அமர்ந்திருந்தாள்.அவளின் முகத்தை பார்த்தபடி இருந்தவளுக்கு மனதில் சொல்ல முடியாத வேதனை,

“ஏய் மண்டு எதுக்குடீ கண்ணை இப்ப கசக்குற….எந்திரி….”என்று அவளை அதட்டி அவளின் கண்களை துடைத்தவிட்ட திவ்யா.

“ம்மா….இவ கொஞ்ச நாளாவே சரியில்லைமா….நான் என்னனு கேட்டதுக்கு ஒண்ணுமில்லனு மழுப்பிட்டா….ஆனா இப்பல்ல தெரியுது….”என்று திவ்யா கூற,மிருதுளாவிற்கு அனைத்தும் தப்பாகவே தெரிந்தது.ஏற்கனவே மனவுளைச்சலில் இருந்தவளை திவ்யாவின் வார்த்தைகள் இன்னும் பயமுறுத்த,அவளின் மடியிலேயே தலை கவிழ்ந்து கதறி அழுதாள்.

நாயகிக்கும்,திவ்யாவிற்கும் ஒன்றும் புரியவில்லை அவர்கள் பயந்து மிருதுளாவை எழுப்ப அவளோ எழும்பவே மாட்டேன் என்பது போல திவ்யாவின் மடியில் கதற,

“மிருது கண்ணு….இந்த சமயத்துல இப்படி உடம்பை படுத்திக்க கூடாதுமா….”என்று நாயகியின் வார்த்தைகள் மிருதுளாவின் காதை அடைந்ததை போல் தெரியவில்லை.

“அடியே ஏன்டீ இப்ப அழுது ஊரை கூட்டுற….வயத்துல இருக்குற குட்டிக்கு ஏதாவது ஆகிட போது….”என்று திவ்யா கத்தவும் தான் மிருதுளாவின் அழுகை நிறுத்திவிட்டு வேகமாக எழ,

“ஏன்டீ இப்படி வேகமாக எழற….ம்மா பாருங்கமா இவளை….சந்தோஷமா இருக்க வேண்டிய சமயத்துல இப்படி அழுகாச்சி படம் காட்டிக்கிட்டு இருக்கா….”என்று திவ்யா குறைபட,

“திவிமா நீ கொஞ்ச நேரம் சும்மா இரு….நம்ம வீட்டுக்கு போய் கொஞ்சம் சுடு தண்ணி எடுத்துட்டுவா….போ….”என்று மகளை அனுப்ப பார்க்க,

“ப்ச்….இப்ப என்ன இவ கிட்ட நீங்க தனியா பேசனும் அதான….போறேன்….”என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு செல்ல பார்க்க,

“திவிமா….நிஜமா உன்னை தவிர்த்து நாங்க எதுவும் ரகசியம் பேச போறதில்லை….போ போய் அவளுக்கு தொண்டை வரண்டு போயிருக்கும் தண்ணி எடுத்துட்டுவா….”என்று முறைத்து நின்ற மகளை சமாதானம் செய்து அனுப்பியவர் மிருதுளாவிடம் திரும்பி,

“மிருதுமா….”என்று மென்மையாக அழைக்க,அவளோ தான் கேட்ட செய்தி உண்மைதானா என்ற ரீதியில் அமர்ந்திருக்க,அவளின் தோள்களை தொட அதில் தன்னிலை பெற்றவள்,

“ஆங்….என்னம்மா….”என்று கேட்க,

“என்ன கண்ணு எதாவது பிரச்சனையா….உன் முகம் களைப்பையும் தான்டி ஏதோ போல இருக்கு….”என்று அந்த பெரியவர் சரியாக கணித்து கேட்க,மிருதுளா பதிலேதும் கூறாமல் தலையை குனிந்து கொண்டாள்.அதிலே அவளிற்கு சொல்ல விருப்பமில்லை என்று புரிந்து கொண்டவர் அதை விடுத்து,

“மிருது கண்ணு….இங்க பாரு…..”என்று அவளின் முகத்தை தன்னை பார்க்க நிமிர்த்தியவர்,

“உன் கஷ்டத்தையெல்லாம் கடவுள் போகிட்டார்….”என்றவர் முகத்தில் அத்தனை ஒளி,அதை கண்டுவள் தனது கைகளை வயிற்றில் வைத்துவிட்டு  நிமிர்ந்து அவரை பார்த்து உண்மையா என்பது போல் பார்க்க,அவரோ

“ஆமா கண்ணு….உனக்குள்ள ஒரு உயிர் வளருது….”என்று கூற,

“அதை தான நானும் சொன்னேன்….உடனே என்னை வெளில தள்ளுன…”என்று முகத்தை தூக்கி வைத்தபடி வந்தாள் திவி,

“இந்தாடீ மகாராணி குடி….”என்று அவளின் முகத்திற்கு நேராக தண்ணீரை நீட்ட,அவ்வளவு நேரம் இருந்த கடின தன்மை நீங்கி சிரித்தவாரே,

“நானும் மகாராணி ஆகிட்டேனா….”என்று கேட்க,

“ம்ம்ம்….உன் புருஷர் மகாராஜானா….நீ மகாராணி தான….முதல்ல தண்ணியை குடி….”என்று கூற மிருதுளாவும் மறுக்காமல் வாங்கி குடித்தாள்.காலையில் இருந்த மனநிலை நொடி நேரத்தில் மாறியிருந்தது.மனதின் அழுத்தங்கள் எல்லாம் மறைவதை போல் பிரம்மை.அந்த மகிழ்ச்சியுடன் தனது வயிற்றை அவள் தடவி பார்த்துக் கொண்டிருக்க,வாசலில் யாரோ கணைக்கும் குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க பரிதி தான் நின்றிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!