Skip to content
Post Views: 1,407
ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் காலை வேளையில்!
“ஏன்ப்பா இந்த வாந்தி பாடாய்ப் படுத்தது! யுகி வயத்துக்குள்ள எவ்ளோ சமத்தா இருந்தான்! இந்தப் பாப்பா என்னை வச்சி செய்யுதே” என்று வாந்தி எடுத்த சோர்வில் அருகில் நின்றிருந்தவனின் வயிற்றில் முகத்தைப் புதைத்தவளாய் புலம்பினாள் சிந்துஜா.
Advertisement
அவளின் தலையை வருடி முதுகைத் தடவியவாறுச் சிரித்தவனாய், “பாப்பானு முடிவே செஞ்சிட்டியா?” எனக் கேட்டான்.
“ஆமா பொண்ணா தான் இருக்கும்னு தோணுது. பொண்ணு பிறந்து அந்தப் பொண்ணை நீங்க வளர்க்கிற விதத்தைப் பார்க்கனும்ப்பா! எனக்கே தனியா சொந்தக் கால்ல நிக்கனும்னு அவ்ளோ பார்த்து பார்த்துச் செய்றீங்களே! நம்ம பொண்ணுக்கு என்னலாம் செய்வீங்கனு பார்க்கனும். என்னை மாதிரி இல்லாம என் பொண்ணு தைரியமா வளர்வதைப் பார்க்கனும். வெளிநாட்டுக்குலாம் தனியா போய்ப் படிச்சி வேலை பார்க்கனும். மொத்தத்தில் நான் வாழாத வாழ்க்கையை என் பொண்ணு வாழுறதைப் பார்க்க ரொம்ப ஆசை ஆசையா காத்துட்டு இருக்கேன்ப்பா” என்று கனவுகள் மின்ன பேசிய மனைவியை ஆதூரமாய்ப் பார்த்திருந்தான் இன்பா.
Advertisement
Advertisement
“நீ சொல்றது போல நம்ம பொண்ணை அவளோட சொந்த கால்ல நிக்கிற மாதிரி தான் நாம வாளர்ப்போம். ஆனா படிப்பு, வேலை, வாழ்க்கைத்துணை எல்லாம் அவங்கவங்க விருப்பம். அவங்க விரும்பி தேர்ந்தெடுக்கிறது சரியா தப்பானு கைட் செய்ற வேலை தான் நமக்கு. அப்படித் தான் பிள்ளைங்களை வளர்க்கனும்” அவனது தாய் தந்தையர் மூலமாகக் கற்றிருந்த அனுபவப்பாடத்தின் விளைவாக இவ்வாறு கூறியிருந்தான் இன்பா.
அந்நேரம் அவனது கைபேசி அலறியது.
Advertisement
அங்கே மேஜையில் இருந்த கைபேசியை எடுத்துப் பேசியவனின் முகம் தீவிரமாய் மாற, அவனுக்குக் காலைக் காபி தயாரிக்கும் பணிக்காக அடுக்களைக்குள் நுழைந்தாள் சிந்துஜா.
அவனிடம் காபியைக் கொண்டு வந்து கொடுத்த சமயத்தில், “சரி பாலாஜி! நான் மோகன்கிட்ட பேசுறேன்” என்றவனாய் இணைப்பைத் துண்டித்துக் காபியைக் கையினில் வாங்கியவன், “ஆபிஸ்ல இஷ்யூவாம்! பாலாஜி தான் கால் செஞ்சாரு. நான் அவசரமா கிளம்பனும் சிந்து! கீதாக்கா வீட்டுல வேலை செய்றவங்களை இன்னிலருந்து நம்ம வீட்டுக்கும் வேலைக்கு வர சொல்லிருக்கத் தானே! நீ சமையலை மட்டும் பாரு! மத்த வேலைலாம் அவங்களை வச்சி செஞ்சிக்கோ! சம்பளம்லாம் நீயே பேசிடு” என்றான்.
சரியென்றவளாய் மகனுக்குப் பாலை ஆற்றிக் கொடுத்தாள் சிந்து.
அதே நேரம் அங்கே அலுவலகச் சிற்றுண்டிச் சாலையில் (கேண்டீன்) அமர்ந்திருந்த அன்னத்தின் கண்கள் நீரைப் பொழிய, “அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல! எதுக்கு அழுதுட்டு இருக்க நீ! நீயே அழுது காட்டிக் கொடுக்காத” எனச் சமாதானம் செய்து கொண்டிருந்தான் மோகன்.
மோகனின் கைபேசி அலற, அழைப்பை ஏற்றவனாய், “சொல்லுங்க இன்பா” என்றான்.
“பாலாஜி போன் செஞ்சி சொன்னான் ஏதோ பிரச்சனைனு! எப்படிடா திடீர்னு சர்வர் டவுன் ஆகும். நம்ம சைட்ல எதுவும் பிரச்சனையா? நைட் ஷிப்ட்ல ஒழுங்கா தானே மானிட்டர் செஞ்சிட்டு இருந்தீங்க” எனக் கேட்டான் இன்பா.
“நம்ம மேல எதுவும் தப்பில்லை இன்பா. இது வேற டீம் பிராப்ளமா தான் இருக்கனும். என்னனு நான் பார்த்து சரி செஞ்சிட்டு தான் கிளம்புவேன்” என்று இணைப்பைத் துண்டித்தான் மோகன்.
மோகனும் அன்னமும் முந்தைய நாள் இரவுப்பணியில் இருந்த போது, மோகன் உறங்கி விட, அன்னம் செய்த தவறான அப்டேட்டால் காலை சைட்டில் இஷ்யூ வந்து விட்டது. முதலில் அன்னத்திற்கே தன்னால் தான் இஷ்யூ வந்ததென்றே புரியவில்லை. ஆனால் மோகன் அதனை உடனே கண்டுபிடித்து விட்டான்.
இதைச் சரி செய்வதற்கான தீர்வு மோகனுக்குத் தெரிந்தாலும், அதற்கான அனுமதி (access) சர்வர் டீம்க்கு தான் உள்ளது என்பதால் அவர்களைத் தொடர்பு கொண்டு கூறினான்.
அதற்குள் காலை ஷிப்ட்காகப் பாலாஜி வந்து விட, அவரைப் பார்த்துக் கொள்ளக் கூறிவிட்டு அன்னம் அழுவதைக் கண்டு அவளைக் கேண்டீனுக்கு அழைத்து வந்து சமாதானம் செய்து கொண்டிருக்கிறான்.
இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய மாலையானது. அது வரை அன்னமும் மோகனும் அலுவலகத்தில் தான் இருந்தனர். முந்தைய நாள் இரவு அலுவலகத்திற்கு வந்தவர்கள் மறுநாள் மாலை வரை அலுவலகத்தில் தான் இருந்தனர்.
மாலை வரை நீடித்த இப்பிரச்சனை கிளைண்ட்டிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
பிரச்சனையைச் சரி செய்ததும் கிளைண்டுடனான தனி மீட்டிங்கில் இருந்தான் இன்பா.
அதே நேரம் இங்கே வீட்டிலிருந்த சிந்துவின் கைபேசி அலற, மடித்துக் கொண்டிருந்த துணியை அப்படியே போட்டுவிட்டு கைபேசியை எடுத்தவள்,
“சொல்லுங்க திவ்யாக்கா! எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டவாறு மெத்தையில் அமர்ந்தாள்.
“நம்ம கண்ணாவுக்கு நாளைக்குப் பர்த்டே வருதுல! அதான் நம்ம ஃபேமிலி வரைக்கும் கெட் டூகதர் மாதிரி வச்சி செலிப்ரேட் செய்யலாம்னு பிளான் செஞ்சிருக்கோம். நீயும் இன்பாவும் வந்துடுங்க சரியா” என்று அழைத்தாள் திவ்யா.
“பர்த்டே பார்ட்டியா?” என்று யோசனையுடன் கூறியவளாய், “நான் அவர்கிட்ட கேட்டு சொல்றேன்க்கா! ஏற்கனவே ஆபிஸ்ல ஏதோ இஷ்யூனு சொல்லிட்டு இருக்காரு! நைட் லேட்டா தான் வருவார் போல! நாளைக்கு எப்படி இருக்குமோ!” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,
“சரி பிறந்தநாளைக்கு வர முடியலைனா வீக்கெண்ட் வாங்க!” என்றாள் திவ்யா.
“நான் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேனேக்கா” என்று சிந்து சற்று தயங்கியவாறு கூற, சரி என வைத்து விட்டாள் திவ்யா.
அடுத்த அரை மணி நேரத்தில் அவளது மாமியாரிடம் இருந்து அழைப்பு வர, கைபேசியைப் பார்த்தவளாய், ‘ஆஹா இந்தக்கா எதுவும் பத்த வச்சிட்டாங்களா? இவங்களுக்கு இது தானே வேலை’ என மனதோடு எண்ணியவளாய் அழைப்பை ஏற்றாள்.
“அத்த” என அவள் தொடங்கும் முன்னமே,
“ஏம்மா மகாராணி! உங்க புருஷனை கேட்காம நீங்க எதுவும் செஞ்சதில்லையோ! இல்ல உன் பேச்சை மீறி தான் உன் புருஷன் நடந்திடுவானா இல்ல நீ தான் நடக்க விட்டுருவியா! சொந்த பந்தம்னு யார் கூடயும் அவனை ஒட்ட விடாம உனக்கே அடிமை மாதிரி அவனை வச்சிக்கலாம்னு நினைக்கிறியா?” என்று அவர் பொரிந்து தள்ள,
‘ஆஹா பத்த வச்சிட்டியே திவ்யாக்கா! என்னைப் போட்டுக் கொடுத்தே மாமியார்கிட்ட நல்ல மருமகனு பெயரை நிலைநாட்டிக்கிறாங்க! என்ன மனுசங்களோ’ அலுப்பாக மனதோடு எண்ணியவளாய்,
“இல்லத்த அவருக்கு வேலை இருக்கானு கேட்டுட்டு…” என்று சிந்து முடிக்கும் முன்பே,
“வேலை இருக்குனா ஞாயித்துக் கிழமை வர வேண்டியது தானே! அன்னிக்கு அவனுக்கு லீவ் தானே! அதுக்கும் அவனைக் கேட்கனும்னு சொன்னியாமே! ஏற்கனவே என்னை விட்டு அவனைப் பிரிச்சி கூட்டிட்டு போய்ட்ட! இப்ப அவனோட அண்ணன் குடும்பத்துக் கூடவும் சேர விடாம உன்னை மாதிரி அவனை அனாதையா நிக்க வைக்கலாம்னு நினைக்கிறியா?” என்று கேட்டார்.
அனாதை என்ற வார்த்தையில் கடுப்பானவளாய், “அத்த நானும் என் பிள்ளையும் இருக்கும் போது அவர் எப்படி அனாதை ஆவாரு! நானா உங்கப்பிள்ளைய எங்கேயும் போகாதீங்க யார் கூடவும் ஒட்டாதீங்கனு சொல்லிட்டு இருக்கேன். அவர் அப்படி இருந்தாருனா நான் என்ன செய்யுறது! உங்க பிள்ளை என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறதுக்கு முன்னாடியே தான் உங்ககிட்ட பேசுறதை நிறுத்திட்டாருல! பின்னே ஏன் எல்லாத்துக்கும் என்னைக் குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க” எனக் கத்தியிருந்தாள் சிந்துஜா.
அவளின் உடல்நிலை மாற்றங்களும் சோர்வும் ஏற்கனவே அவளைப் படுத்தி எடுத்திருக்க இதில் இவரும் சேர்ந்து கடுப்படிக்கவும் இத்தனை நாளாய் பொறுமையாகக் கேட்டிருந்தவள் இன்று பொங்கியிருந்தாள்.
“யாரு சொன்னது அவன் கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட பேசுறதை நிறுத்திட்டான்னு. உன்னைக் கட்டிக்கிறதுக்கு முன்னாடி அவனுக்கு என் மேல வருத்தமும் கோபமும் இருந்துச்சு தான். ஆனா அதுக்காக என்னை மொத்தமா ஒன்னும் அவன் ஒதுக்கி வச்சிடலை. நேர்ல பார்க்கும் போது நாலு வார்த்தை நலம் விசாரிப்பான். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவான்! அவங்க அப்பா போன்ல என்கிட்ட பேசுவான். என்னிக்கு உன்னை இங்கிருந்து சென்னைக்குக் கூட்டிட்டு போனானோ அன்னிலருந்து இன்னிக்கு வரைக்கும் என்னைத் திட்ட மட்டும் தான் போன் செஞ்சிருக்கான் தெரியுமா! அதுவும் இந்தப் பத்து வருஷத்துல நாலு நேரம் தான் பேசியிருப்பான். இந்த வீட்டுப் பக்கமே வரவேயில்லை. உனக்குப் பிள்ளை பிறக்க தாமதமாகுதுனு நான் என்னமோ சொல்லிட்டேன்னு கொந்தளிச்சிட்டு போன் செஞ்சி ஏசினான். பேரனை பெத்தவளை கவனிக்கப் பெத்தவனு யாரும் உனக்கு இல்லையேனு நான் அங்கன ஒரு மாசம் வந்து இருந்தப்ப கூட அவன் மூஞ்சு கொடுத்து பேசலை தெரியுமா! என் பிள்ளை என்கிட்ட முகம் கொடுத்து பேசிட மாட்டானானு நான் தவிச்சி கிடக்கிறது உனக்கு எங்க புரிய போகுது” என்றவர் சொல்லும் போதே அவரின் குரல் தழுதழுத்தது.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவிற்குப் பேரதிர்ச்சி!
‘அப்ப எனக்காகத் தான் அவங்க அம்மாகிட்ட பேசாம இருக்காங்களா? அவரோட முதல் காதலுக்காக இல்லையா’ இன்ப அதிர்ச்சியுடன் இதனை அவள் உள்வாங்கியிருக்க,
தனது தழுதழுத்த குரலை செருமி சரி செய்தவராய் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பூர்ணம் ஆங்காரமாய், “நீ சொல்லிக் கொடுக்காமலா உன்னை நான் திட்டுறது அவனுக்குத் தெரியுது. பிள்ளையும் கிள்ளி விட்டுட்டு என்கிட்ட வந்து தொட்டிலை ஆட்டுறது தானே உன் வேலை. அப்பாவியா நடிச்சி என் பிள்ளையைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு என்கிட்ட இருந்து பிரிச்சிட்டல! உன்னை விட அந்தத் திவ்யா எவ்வளவோ பரவாயில்ல தெரியுமா! அவ சம்பாதிக்கிற காசையும் என்கிட்ட மாசா மாசம் கொடுத்துடுவா! எனக்கு உண்மையாவும் நடந்துக்கிறா” பேசிக் கொண்டே போனார்.
‘ஆமா அப்படியே சம்பாதிக்கிற மொத்த காசையும் கைல கொடுக்கிறாங்களாக்கும். உங்களைக் காக்கா பிடிக்க உங்க கைல கொஞ்சம் காசு கொடுக்கிறாங்க. உண்மையா நடந்துக்கிறதா காண்பிக்க என்னை உங்ககிட்ட போட்டுக் கொடுக்கிறாங்க. இது தெரியாம ஏமாளியா அவங்ககிட்ட ஏமாந்து இருந்துட்டு இந்த அத்தைக்குப் பேச்சை பாரு’ மனதோடு பேசிக் கொண்டவளாய் கைபேசியை ஸ்பீக்கரில் போட்டு மேஜையில் வைத்து விட்டு எதிரே அமர்ந்து விட்டாள் சிந்துஜா.
பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து பேசிய பூர்ணம், “ஞாயித்துக்கிழமையாவது உன் புருஷனைக் கூட்டிட்டு வர்றியா இல்லையா?” என அதட்டலாய் கேட்க, “வரோம் அத்தை” என்று சத்தமாய்க் கூறியவள், ‘வந்து தொலையுறோம்’ என்று வாய்க்குள் முனகிக் கொண்டாள்.
தனக்காக கணவன் தனது தாயிடம் பேசாமல் இருந்ததை எண்ணி மனம் பூரித்துப் போனது சிந்துவிற்கு.
‘ச்சே இது தெரியாம அவரோட முதல் காதலுக்காகச் சண்டை போட்டுத் தான் அவங்க அம்மாகிட்ட பேசாம இருக்காருனு சொல்லிச் சண்டை வேற போட்டுட்டேனே’ நினைத்தவாறு அமர்ந்திருந்தவளின் மனம் உடனே இன்பாவிடம் பேச வேண்டுமென ஆர்ப்பரிக்க, கைபேசியைக் கையில் எடுத்தாள்.
இங்குக் கிளைண்டுடன் பேசிவிட்டு வந்த இன்பா தனது டீமுடன் மீட்டிங் வைத்தான்.
இன்பாவின் முகத்தில் பிரச்சனை முடிந்த மகிழ்வை விட அதிகமான குழப்பமும் வாட்டமுமே தென்பட்டன.
“சைட் இப்ப வர்க் ஆனாலும், நாம இதைச் சரி செய்ய லேட் செஞ்சிட்டதா கிளையண்ட் சொல்றாங்க. அவங்க நஷ்டத்துக்கு நாம பொறுப்பேத்துக்கனும்னு சொல்றாங்க. எதனால் இந்தப் பிரச்சனை வந்துச்சுனு கண்டுபிடிச்சு, எதிர்காலத்துல இந்த மாதிரி பிரச்சனை வராதுன்னு நாம உறுதி மொழி அளிக்கனும்னு சொல்றாங்க. கடைசியா ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க, அவங்களுக்கு இன்னிக்கு ஆன நஷ்டத்துக்கான பெனாலிட்டி (அபராதம்) நாம கட்டனும்னு சொல்றாங்க” மீட்டிங் அறையில் மொத்த குழுவின் முன் அமர்ந்து இன்பா இதைக் கூற, மோகனும் அன்னமும் ஸ்தம்பித்துப் போயினர்.
‘எதனால் இந்தப் பிரச்சனை வந்துச்சுனு பார்க்கும் போது நாம செஞ்ச தப்பு தான்னு கண்டுபிடிக்க நிறைய வாய்ப்பு இருக்கே! அவங்க கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி நாமளே சொல்லிட்டா என்ன’ எனத் திருதிருத்த முழியுடன் யோசித்தாள் அன்னம்.
இந்த இடத்தில் தான் பிரச்சனையின் தீவிரம் மோகனுக்கும் அன்னத்திற்கும் புரிந்தது.
இதற்கு மேல் இன்பாவிடம் இதனை மறைக்க முடியாது எனப் புரிந்தது மோகனுக்கு. இன்பா உதவி செய்தால் தான் அன்னத்தினால் தான் இந்தப் பிரச்சனை வந்தது என்பதைக் கிளைண்ட்டிடம் காண்பிக்காமலும் அபராதம் கட்டும் அளவுக்கு இந்தப் பிரச்சனை செல்லாமலும் தவிர்க்க முடியுமெனத் தீர்க்கமாகத் தெரிந்ததும் இன்பாவிடம் நடந்ததை உரைத்தான் மோகன்.
அன்னம் வெளிறிப்போன முகத்துடன் அமைதியாக நின்றிருக்க, மோகன் கூறியதை கேட்ட இன்பா, “இவ்வளோ கேர்லெஸ்னஸ் ஆகாது அன்னம். இப்ப எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பாத்தியா? கிளைண்ட்க்கு நாம பெனால்டி கட்டுற சூழ்நிலை வந்தா, இப்படித் தான் நஷ்டத்தோட பிராஜக்ட்டை நடந்துவியானு என் சீனியர் மேனேஜர் என்னைக் காரி துப்புவாங்க” கோபமாய் உரைத்திருந்தான்.
அன்னத்திற்குக் குற்றவுணர்வாகி போனது.
அன்னத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, “விடு இன்பா! அந்தப் பொண்ணைத் திட்டி என்னவாகப் போகுது. இதை எப்படிச் சரி செய்றதுனு பார்க்கலாம்” என்றான் பாலாஜி.
அந்நேரம் இன்பாவின் கைபேசி அலறியது. இருந்த கடுப்பில் அழைப்பை எடுக்க மனமில்லாது இருந்தாலும், மனைவிக்காக வைத்திருந்த பிரத்யேக ஒலியழைப்பு அவளின் உடல்நிலையில் ஏதேனும் பிரச்சனையோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க அவசரமாக அழைப்பை ஏற்றான் இன்பா.
error: Content is protected !!