Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 3.1

உல்லாசமாக விசிலடித்து வீட்டிற்குள் நுழைந்தவன் நாசி நுகர்ந்த வாசனையில், நேராக சென்று நின்றது அன்னை இருக்கும் சமையலறைக்கு தான். மகனுக்காக தானே நின்று, பார்த்து பார்த்து பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தார்.

“ம்மா, பசி வர வச்சிடுறிங்க…” அன்னையைக் குற்றம் சாட்டி, கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் சமையல் மேடையிலே போட்டு, அன்னையின் கை வண்ணத்தில் உருவான உணவை ருசிக்க துவங்கிவிட்டான்.

“எல்லாம் பாத்து பாத்து தான் செஞ்சிருக்கேன், தைரியமா சாப்பிடுடா.”

அவன் விருப்பத்திற்கிணங்க உணவை பரிமாறியவர், அவன் வசதியாக அமர அவனது பொருட்களை அப்புறப்படுத்த துவங்கினார் திட்டிக்கொண்டே. “பாரு, ஒரு பொருளை ஒழுங்கா வைக்க தெரியுதா உனக்கு? எல்லாம் அப்டி அப்டியே போட்டுட்டு போய்டுறது. ஒழுங்கா டிகிரி முடிச்சிருந்தா இப்டி பண்ணிருக்க மாட்ட.”



Advertisement

ஏழு வருடங்கள் முன்பு தன்னுடைய படிப்பு, எதிர்காலம் அனைத்தையும் துறந்து, முழு மூச்சாக விளையாட்டில் கவனம் செலுத்தத் துவங்கினான்.

“என்ன மதி, எதுக்கு இப்ப அதெல்லாம்? படிச்சிருந்தா கூட இந்நேரம் இவ்ளோ சம்பாதிச்சிருக்க மாட்டேன். மாசம் சம்பளம், ப்பைட் பார்ட்னர்ஷிப், ப்ராண்ட் அம்பாசிடர், ஆட், லான்ச் ஈவென்ட்ஸ்னு எனக்கே கணக்கு இல்லாம போய்கிட்டு இருக்கு. இப்படிப்பட்ட நிலைமைலயும் அந்த டிகிரிதான் உங்களுக்கு பெருசா படுதா?”

அன்னையோ சமாதானம் ஆகவில்லை. நாட்டின் மிகப் பெரிய பிரபலம், ஒரு டிகிரி படிக்கவில்லையா என பலரும் அவர் காது படவே பேசிவிட்டனர்.

Advertisement

சிலர் ஒரு படி மேலே சென்று, “ஆனாலும் டிகிரி முடிச்சிருக்கலாம் மேடம்.” நேரடியாக வத்திவிட்டு சென்றுவிட, அன்று முழுதும் வீட்டினர் மதிவர்தினியின் புலம்பலைக் கேட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும்.

Advertisement

“ஆமாடா, எனக்கு அதுதான் பெருசு. இப்ப கூட ஒன்னுமில்ல, கரஸ்லயாவது ஒரு டிகிரி வாங்கேன் அஸ்வின். அம்மா பெருமையா வெளிய சொல்லிக்குவேன்ல?” மகனின் நாடி பிடித்து கெஞ்சினார் மதி.

அவனோ அவருக்கு உணவை ஊட்டிவிட்டு, “நீங்க உங்க மகனை பத்தி பெருமை பேச கூடாது மதி. ஊர் மட்டும் தான் பேசணும், பேசுதுல? நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க.”

“அதுக்கு…” அன்னையை மீண்டும் பேச விடாமல் உணவு ஊட்டி நிறுத்தினான் புத்திரன்.

Advertisement

“போடா…” மகனை உரிமையாய் அடித்து மீண்டும் அவன் பொருட்களை ஒதுக்க துவங்கியவர், ஆரோஹி கொடுத்த அந்த கவரை பார்த்து, “இது என்னடா?” கேட்டார்.

தலையை உயர்த்தி பார்த்தவன் இதழ்களில் வெட்கமே இல்லாமல் ஒட்டிக்கொண்டது சிரிப்பு, “மொய் கவர் ம்மா.” என்றான்.

அவனை விசித்திரமாக பார்த்தவர், “ஊருக்கெல்லாம் மொய் வை, உனக்கு ஒன்னும் நடக்க காணும்.”

‘போச்சு, அடுத்த பஞ்சாயத்து’ என்றெண்ணியவன் உணவு தட்டை எடுத்து வரவேற்பறை வரவும், மகனை விடவில்லை அந்த அன்னை.

அவன் பின்னேயே வந்துவிட்டார்.

“எத்தனை நாள்தான் இப்டி ஓடிட்டே இருக்க போற? எங்களுக்கும் உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசை இருக்காதா? உன் வயசுல பசங்க எல்லாம் கல்யாணம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதெல்லாம் பாக்குறப்போ எங்களுக்கும் ஆசை இருக்காதாடா?”

காதே கேட்காதது போல் உண்ணும் மகன் மேல் வெறி ஏற, தட்டை வாங்கி ஓரம் வைத்து, “பதில் சொல்ல போறியா, இல்லையா நீ இப்போ?”

“அவன் எப்படி சொல்லுவான், அவன்தான் மும்பை பக்கம் செட்டில் ஆக பிளான் போட்டுட்டானே…”

உணவு புரையேறி பதற்றத்தோடு தம்பியைப் பார்த்து திரும்பினான் ஆடவன். கண்களை உருட்டி செய்தியை மாற்றி கூறு என்னும் ஆணை அதில் இருந்தது.

“டேய் போடா…” என்ற இளையவன், கைப்பேசியை எடுத்து அன்னை கையில் ஒப்படைத்து, வெற்றி புன்னகையோடு தமையனிடம், “இந்த நாளுக்காக நான் எவ்ளோ மாசம் தெரியுமா வெயிட் பண்றேன்?” ஜெயந்த் முகம் எங்கும் ஆனந்தம் கூத்தாடியது.

அன்னையிடம் தாவி, “பாருங்க ம்மா, மூணு மாசம் முன்னாடி லண்டன்க்கு நீங்க வர்றேன்னு சொல்லியும், கேக்காம கழட்டிவிட்டு தனியா போனான்ல. அப்போ அந்த பொண்ணு கூடதான் போயிருக்கான். பாருங்க, ஒரே நாள் போஸ்ட் பண்ணிருக்காங்க, ஒரே இடம். இதுல டிரஸ் கோட் வேற…

அப்புறம் இது அந்த பொண்ணு பர்த்டே பார்ட்டில எடுத்தது. இது அந்த பொண்ணோட அம்மா ஒரு பொட்டிக் ஸ்டார்ட் பண்ணதுக்கு, அழையா விருந்தாளியா போய் பப்ளிசிட்டி பண்ணிட்டு வந்துருக்கான் உங்க மகன்.”

மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே சென்ற சகோதரனின் வாயினைத் தாவி அடைத்தவன், அவனை அப்படியே சோபாவின் பின்னிருந்து இழுத்து சோபாவில் போட, அதற்கு மேல் தன்னுடைய நாரதர் வேலையை செய்ய முடியாமல் போனது ஜெயந்தால்.

ஆனால் அன்னையிடம் மாட்டிக்கொண்டானே… அரசல் புரசலாக தகவல்கள் காதில் விழுந்தாலும், மகன் தன்னை மீறி எதுவும் செய்திட மாட்டான். தன்னுடைய விருப்பத்தை அறிந்து செயலாற்றுவான் என்கிற நம்பிக்கை, அதிகமிருந்தது அன்னைக்கு.

சகோதரனை அடக்கி அன்னையைப் பார்த்த அஸ்வினுக்கு இன்று ஒரு பெரிய கச்சேரியே உள்ளதென தெரிந்துவிட்டது.

“எத்தனை நாள் நடக்குது அஸ்வின் இது?”

“ஒரு வருசமா…” தனக்கு பதிலாக, பதில் கொடுத்த சகோதரனை பார்த்து, “பிசினஸ்மேன் மாதிரி கொஞ்சமாவது நடந்துக்கோடா.” பாவமாக கெஞ்சினான் அஸ்வின்.

“அவனை என்னடா திட்டுற? உன்னை கிரிக்கெட்டுக்கு அனுப்புறப்பவே என்ன சொன்னேன் நான்? இந்த காதல் கத்திரிக்காய் எதுவும் வேணாம்னு தானே கண்டிஷன் போட்டேன். அதை தவிர உன்னை ஏதாவது சொல்லிருப்பேனா? உன் படிப்பு, நம்ம பிஸ்னஸ்னு எதுவுமே எனக்கு பெருசா படல, உன்னோட லட்சியத்துக்கு முன்னாடி.”

“மதி போதுமே, அந்த பொண்ணுகிட்ட பேசி பாக்குறீங்களா? நல்ல பொண்ணு மதி.”

இத்தனை பேசியும் கேட்காத மகனை தீயாய் முறைத்தார், “சரி உனக்கு வேணும்ல, நீ அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ. ஆனா நான் வர மாட்டேன் உன் கல்யாணத்துக்கோ, உன் வீட்டுக்கோ. உன் அப்பா, தம்பி யாரையும் தடுக்கவும் மாட்டேன்.” ஏதோ போல் பேசி செல்லும் அன்னையைப் பிடித்து மீண்டும் அருகில் அமர்த்தினான்.

“என்ன ம்மா இது பிடிவாதம்?”

“யாருடா பிடிவாதம் பிடிக்கிறது நீயா, நானா? என்னை விட நீ லவ் பண்ற பொண்ணு தான் முக்கியமா போச்சா உனக்கு?”

“உங்கள லண்டன்க்கு போறப்போ விட்டுட்டு போனப்பவே தெரிஞ்சிருக்கணுமே…” கிடைத்த இடைவெளியில் ஒரு ரயிலையே ஓட்டினான் ஜெயந்த்.

“சும்மா தான் இரேன்டா…”

சகோதரனை திட்டி அன்னையிடம், “ம்மா, லவ் வரைக்கும் எல்லாம் போகலமா. புடிச்சிருக்கு, அந்த பொண்ணை. எனக்கு செட் ஆவானு தோனுது. அவ அப்பா பெரிய பாலிவுட் ஸ்டார். ஆனா அந்த பந்தா எதுவும் இல்லாம அடக்கமா தான்மா இருப்பா.”

மதி, “லவ் இல்லனா… என்ன அர்த்தம்?”

“லவ்… லவ் இல்ல, இன்ட்ரஸ்ட் ம்மா. வேவ்லென்த் மேட்ச் ஆகி லவ்க்கு ப்ராசஸ் பண்ணிட்டு இருக்கோம்.”

நாகரிகம், நவீனம் என வளர்ந்திருந்தாலும், பிள்ளைகள் என வரும் பொழுது இந்திய தாய்மார்கள் இருபது வருடங்கள் பின்னோக்கி பயணித்து விடுகின்றனர்.

அதனாலே தயங்கி பயந்துதான் உண்மை நிலவரத்தை மறைக்காமல் கூறிவிட்டான். கோவம் அப்பிக் கிடந்த முகத்தில் இப்பொழுது இன்னதென்று கூற முடியாத நிம்மதி.

மகனை விட துள்ளலான மனநிலை அன்னைக்கு வந்தது. சிரிப்போடு எழுந்தவர், “அப்போ இது செட் ஆகாது. நான் உனக்கு பொண்ணு பாக்குறேன், நீ போய் நிம்மதியா சென்ச்சுரி அடிச்சிட்டு வா.”

“அடடே, வீட்டுல விஷேசமா?”

ஜெயந்த் ஆர்வமாக தலையை விட, அவனை தலையை அழுத்தி அன்னையை முறைத்தான் அஸ்வின், “என்ன இது கல்யாணம், பொண்ணுனு. என்னோட விருப்பம்னு ஒன்னு இருக்குமா.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!