Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வருவதோ! புது வசந்தம்!

வருவதோ! புது வசந்தம் ! அத்தியாயம் 15

வருவதோ! புது வசந்தம்!

அத்தியாயம் 15

   அலையடித்த மனம் அமைதி கண்டது. மெதுவாக மரத்தில் சாய்ந்து கண் மூடி கொண்டாள் மது. அந்த அமைதியை ரசிக்க தொடங்கினாள். நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. இப்படி எந்த சிந்தனையும் இல்லாமல் மனம் அமைதி கண்டு. அடுத்து எதுவும் நடக்கட்டும், ஒரு கை பார்த்து விடலாம் என்ற தன்னம்பிக்கை வந்தது. அந்த தைரியத்தை கொடுத்தது தன் கணவன் தான்.

    கரிகாலன் அருகில் இல்லை. ஆட்டோ கூட்டி வர வெளியே சென்றிருக்கிறான். அவன் குணத்தில் மதுக்கு சில முரண்பாடுகள் உண்டு. எப்பவும் அவனை பற்றி எண்ணும் அம்மஞ்சி, சாம்பார்சாதம் என்றதோடு ஏமாளி என்று பட்டத்தையும் சேர்த்து கொள்ளலாம்.



Advertisement

   சரி விடு மது. கணவன் ஏமாளியாக இருந்தால் என்ன நீ ஏமாறாமல் இரு, அவனை திடப்படுத்தி கொண்டு வா… உன் துணை அவன், அதில் உறுதியாக நிக்க, சரி செய்ய வேண்டியது உன் கடைமை.தன்னை விட்ட காரணத்தை ஏற்று கொள்ள முடியவில்லை தான். அவன் தாயை யோசித்தவன், தன்னை யோசிக்க வில்லையே. இரத்த சொந்தம் வேறு தான் போலும், அதை கேள்வி கேட்டு கணவனை மடக்கி பிடித்து என்ன ஆக போது, அவன் அறிவு அவ்வளவு தான். கடந்து செல்ல வேண்டும். சில விசயங்களை ஆராயாமல் விட்டு விட்டால் தான் அடுத்த கட்ட வாழ்க்கையே…

    ஆட்டோ வரும் ஒளி கேட்க, எழுந்து கொண்டாள். எத்தனை பேருக்கு காட்சி பொருள் ஆனோமோ… அவளை முன்னே விட்டு அடுத்து அமர்ந்தான் கரிகாலன். தன்னை தோல் உரச அமர்ந்த கணவனை ஆச்சர்யமாக பார்த்தாள் பெண். அப்படி எல்லாம் கிடையாது கரிகாலன். எப்பவும் தள்ளி தான் அமருவான். இன்று எதார்த்தமாகவே சேர்ந்து அமர்ந்து விட்டான். கணவன் வாசம் நாசியை நிறைக்க, உள்ளே ஒரு துள்ளல். அவன் தோல் சாய மனம் உந்திய போதும் அடக்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.

   அவளுக்கு பிடித்த ஹோட்டலுக்கு தான் அழைத்து வந்து இருந்தான். திகைத்து போய் கணவனை பார்க்க,

Advertisement

   “முகம் கிறங்கி போய் தெரியுற மது. சாப்பிடாம வந்தையா?…” என்று கேட்டவன், பதில் எதிர்பார்க்காமல் முன்னே சென்றான்.

Advertisement

  உன்னால் தாண்ட படுபாவி, சாப்பாட்டை மறந்து பல நாள் ஆகிப்போச்சு என்று மனதில் நினைத்து கொண்டு அவன் பின் சென்றாள்.

  மதுக்கு எப்போதும் கணவனிடம் தயக்கம் கிடையாது. அதுவும் உணவு விசயத்தில் சுத்தமாக கிடையாது. வயிறு நிறைய அசை பட்டதை எல்லாம் கேட்டு வாங்கி உண்டாள்.

   இன்னும் கரிகாலன் அவளை அழைத்து செல்வது பற்றி பேச வில்லை. அவளும் கேட்க வில்லை. அவனின் பெரிய இக்கட்டு பணம் தான் என்று அவளுக்கு நன்கு தெரியும். கொஞ்சம் சுயநலமாக சிந்திக்க தொடங்கினாள் மது. அவன் வீட்டு பக்கம் பைசா தேராது. ஓரளவு வசதி இவள் வீடு தான். கரிகாலன் என்ற பேரை கேட்டாலே கத்தும் தாய், ஒதுங்கும் தந்தையை வைத்து கொண்டு கணவனுக்கு எப்படி உதவ… தொகை பெரியது என்று மட்டும் தோன்றியது.

Advertisement

    ஒரே வழி, தனக்கு கொடுக்கும் சீரும், நகையும் தான். அது தான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளி என்பதால் கணவன் சம்மதிக்க மாட்டான். நாம் ஏன் விட வேண்டும். வசதியும் இருக்க செய்தால் தான் என்ன?… எனக்காக எடுத்தது தானே, என் கணவன் உழைப்பு யாருக்கோ வட்டியாக மாற, இந்த நகை என் கழுத்தில் பாரம் தான். அப்பாவிடம் பேசி எனக்கு உரியதை வாங்கி கொண்டே என் கணவனிடம் செல்வேன்…

    ஒரு தெளிவு கண்டவுடன் தான், தன் கணவனோடு இருக்கும் நேரத்தை ரசிக்க தொடங்கினாள். அங்கிருந்து புறப்பட்டு மால் சென்று ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கி வர, சோர்ந்து போனான் கரிகாலன். ஆனால், மதுக்கு மட்டும் உற்சாகம் குறையவில்லை. இந்த மூன்று மாத அழுத்தம், இதில் தான் கறையும் என்பது போல, கணவன் கையை விடாமல் சுற்றி கொண்டிருந்தாள். உண்மையில் அவளின் சந்தோச மனநிலையை வெளிப்படுத்த தெரியவே இல்லை.காலையில் கிளம்பும் போது இருந்த குழப்பம் கூட தற்போது இல்லை.

  மல்லிகையை பந்தாக வாங்கி இரு பக்கமும் தொங்கி வழியும் அளவுக்கு விட்டாள். அவளுக்கு முடி குறைவு, தோல் வரை தான் இருக்கும். அப்படி இருக்க இடுப்பு வரை பூ வைப்பது வேடிக்கையாக தான் இருந்தது.

  அதை கரிகாலன் கேலி செய்ய, கண்டுகொள்ளவே இல்லை பெண். அட போடா!… நீளமான முடி உள்ள பெண்கள் தான் தலை நிறைய பூ வைக்க முடியும் என்றால், நாங்கள் எல்லாம் எங்கே போவது… எங்களுக்கு எல்லாம் பூ வைக்கும் ஆசையே இருக்காத… பூவை தூக்கி முன் பக்கம் போட்டு கொண்டாள்.

   மஞ்சள் நிற அனார்கலி சுடிதாருக்கு, முன் பக்கம் வழியும் மல்லிகை பூவும் அவளை ரொம்ப அழகாக காட்டியது. கணவன் கண்கள் அடிக்கடி வட்டமிடுவதை கண்டு, ஒரே பூரிப்பு தான் மதுமிதாக்கு. ஆயிரம் பேர் அழகு என்று சொன்னாலும், கணவனின் கண்களில் தென்படும் ரசனை தானே பெண்ணுக்கு வேண்டும்.

   தன்னை, கணவன் பார்க்கிறான், ரசிக்கிறான் என்ற உணர்வே, அவளை பறக்க செய்தது. அவன் பார்வை தன் மீதே இருக்கும் வண்ணம் பார்த்து கொண்டாள். ஒரு கட்டத்தில் கணவனிடமே கேட்டு விட்டாள்…

    “கொஞ்சம் அதிகமா தான் சீன் போடுறேனா கரிகாலன்?…” என்று மது கேட்க.

   “ஆமா மது… கொஞ்சம் ஓவர் தான்…” என்றான் புன்னகை முகமாக.

  உண்மையில் சிரிப்பு தான் கரிகாலனுக்கு வந்தது. ஏதோ வயது பெண், காதலன் கவனத்தை ஈர்க்க செய்யும் செயல்களை எல்லாம் கணவனை ஈர்க்க மது செய்ய, அப்படி ஒரு சிரிப்பு கரிகாலனிடம். உன்னை கண்டு கொண்டேன் மது.

   “கண்டு புடிச்சாலும், கண்டுக்காத மாதிரி ரசிக்கனும் கரிகாலன். அது தான் நல்லா இருக்கும். இப்படி என்கிட்ட வந்து சொல்ல கூடாது. உங்களுக்காக தான் நான் ஓவர் சீன் போடுறேன். அதை என்கிட்டவே வந்து சொன்ன எனக்கு எப்படி இருக்கும்…”

  “எப்படி இருக்கும்?…” என்றான் கணவன் கேள்வியாக.

 “ம்ம், விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி இருக்கும். நீங்க ஊருக்கு வாத்தியாரா இருந்தாலும், இந்த விஷயத்துல உங்களுக்கு நான் தான் வாத்தியார். கொஞ்சம், கொஞ்சமா கத்துக்கலாம். இப்ப சுத்தி பார்ப்போம் வாங்க…” என்று இழுத்து சென்றாள்.

  இந்த இடமெல்லாம் அவனுக்கு புதிது தான். ஒரே ஊராக இருந்த போதும், இங்கு எல்லாம் வந்ததே இல்லை. இள வயதிலேயே குடும்ப பொறுப்பை சுமந்ததால், தனக்கென்று தனிப்பட்ட செலவு, கேளிக்கை, பொழுதுபோக்கு என்று எதுவும் கிடையாது. வேலை கிடைக்கும் போதே, பொது கடன் இருந்தது. அடுத்து தங்கை கல்யாணம், சீர், பிரசவம், காது குத்து என்று கடமை முடிய. கரிகாலன் இள வயது கடந்து, கல்யாண வயது வந்து விட்டது. சொந்த வீடு கூட இல்லாதவனுக்கு யார் பெண் தருவது. திரும்ப ஒரு சுமை அவன் முதுகில், அது அடுத்தவருக்கு என்று இல்லாமல் தனக்கானது என்பது மட்டும் தான் திருப்தி. இவ்வளவு சம்பாத்தியத்தில் தனக்கென்று ஒன்று செய்கிறான் அல்லவா… இடம் வாங்கவும் சிரமமே, இதற்கு இடையில் வரும் வீட்டு விசேசம், தங்கை சீர், குடும்ப செலவு என்று கையை கடிக்க, வாங்கிய இடத்தில் வீடு கட்டவே முடியவில்லை. இதில் மதுவோடு திருமணம் பேச்சு ஆரம்பிக்க, தன் நிலை சொல்லி தட்டமுடியாமல் நன்றி கடன் தடுத்தது. அத்தோடு, அவளின் கடந்த காலம் கொண்டு தான், தானும் நிராகரிக்கிறோம் என்று எண்ண கூடாதே. அந்தளவிற்கு மது மேல் மரியாதை அதிகம் இருந்தது. உண்மையில் மரியாதை தான் அவள் மீது, பிடித்தம் எல்லாம் மனைவி என்று ஆனா பின் தான்.

   மதுவோடு கல்யாணம் பேசிய பின் தான், அவசர அவசரமாக லோன் போட்டு வீட்டு வேலை ஆரம்பித்தது. அதற்கும் ஆப்பு வைப்பது போல் அண்ணன் பணம் கேட்க, தயங்கி நின்றவனை தாய் சரிகட்ட, முழுதாக கடன் என்ற சூழலுக்குள் மாட்டி கொண்டான். வெளிவரும் மார்க்கமும் தெரியாமல், மனைவியை உடன் அழைத்து செல்லவும் முடியாமல் தடுமாறி நிற்கிறான்.

 ஆனால், அவன் மனைவியோ… தன்னை உடன் அழைத்து செல்ல சொல்லி கேட்க போவதே இல்லை. அவள் ஒரு பக்கம் தன் கணவனை மீட்கும் திட்டம் போட்டு விட்டாள் அல்லவா…

  அடுத்து இருவரும் சென்றது ஒரு பேக்கரிக்கு தான். மதுக்கு பால் கேக் ரொம்பவும் பிடிக்கும். மூன்று வேளை உணவு முடிந்த பின், அவள் உண்பது ஒரு குட்டி பால் கேக் தான்.

   அங்கு சென்ற பின் அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் கணவனிடம் கேட்டு வாங்கி கொண்டாள். கணவனின் கை பிடித்து ஒவ்வொன்றாக பிடித்ததை பார்த்து, பார்த்து வாங்கினாள். சிறு பிள்ளையின் துள்ளல் அவள் நடையில், அவள் தந்தையின் பின் ஒரு பாதுகாப்பான அடைக்கலம், இதமாக இருந்தது.

  சிறு வயதில் பள்ளி விட்டு வீடு செல்லும் போது, தந்தை தான் அழைத்து செல்ல வருவார். அவரோடு தினமும் கடைக்கு வந்து பால் கேக் வாங்கி சாப்பிடாமல் செல்லவே மாட்டாள். அடுத்து வயது ஏற, நட்பு வட்டம் பெருகியது. அதன் பின் எங்கு சென்றாலும் அவள் நட்புகளோடு தான். நீண்ட காலம் சென்று கை பிடித்து கடை விதி வருவது கணவன் கரிகாலன் உடன் தான்.

   மாலை நெருங்க கரிகாலன் ஊர் செல்ல வேண்டும். முகத்தில் சிரிப்போடு தான் கணவனை வழியனுப்ப சென்றாள். திரும்ப ஒரு ஆட்டோ பயணம், இருவரும் கை கோர்த்து தான் அமர்ந்து இருந்தார்கள். மனதில் ஏக்கம் நிரம்பி வழிந்தாலும் சூழ்நிலை பிரித்து வைத்தது.

    கரிகாலன் பேருந்தில் ஏறும் முன் அவள் கையில் ஐந்தாயிரம் பணம் கொடுத்தான். கேள்வியாக மது பார்க்க, “ உன் செலவுக்கு மது. உங்க வீட்டுல குடுப்பாங்க தான், இருந்தாலும் இதையும் வச்சுக்கோ. ரொம்ப சீக்கிரம் எல்லாம் சரி செய்வேன். தைரியமா இரு, ஏதாவது ஒரு சங்கடம் வந்தால் ஒரு போன் பண்ணி சொல்லு, ஓடி வந்துருவேன். சும்மா மனசுல வச்சு மறுக கூடாது சரியா… பார்த்து இரு மது…” என்று கரிகாலன் விடைபெற.

   “சரி கரிகாலன். ஊருக்கு போனதும் போன் பண்ணுங்க. தினமும் போன் போடுங்க, சங்கடபடாம வீட்டுல சமைச்சு சாப்பிடுங்க. நைட் தூங்கும் முன்ன சாமி கும்பிட்டு தான் தூங்கணும். ஏதாவது ஒரு குழப்பம் இருந்தா, என்கிட்ட பேசுங்க. நீங்களா தனியா ஒரு முடிவு எடுக்காதீங்க. எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்ல கத்துகோங்க. தேவைக்கு மட்டும் இல்ல, எதுவாக இருந்தாலும் என்கிட்ட ஃப்ரீயா பேசணும். சரியா!…” என்று ஆயிரம் பத்திரம் சொல்லி தான் வழியனுப்பி வைத்தாள்.

     கரிகாலனிடம் தன் வலிகளை சொன்னாளே தவிர. தன் வீட்டின் நிலவரத்தையோ அல்லது முரண்பட்ட தன் வீட்டு ஆட்கள் பற்றியோ சொல்லவே இல்லை. அது அவளின் மனதில் வைத்திருக்கும் திட்டத்திற்கு சரி கிடையாது. காரியம் பெருசா, வீரியம் பெருசா என்றால் காரியம் தான் பெருசு. அவள் படித்த படிப்பிற்கு ஒரு வேலைக்கு போகலாம் தான். ஆனால், அந்த வருமானம் கணவனின் கடன் தேவையை நிவர்த்தி செய்யாதே. அவளுக்கு தேவை ஒரு பெரிய தொகை.

    பொழுது மசங்கும் நேரம் சந்தோசமாக வீடு வரும் மதுவை தான் பார்த்து நின்றாள் ரம்யா. ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது, அவளின் நடத்தை. ஏதோ வயது பெண் போல துள்ளல் நடையோடு, முகம் முழுக்க பூரிப்பாக, கனவில் மிதப்பவள் போல் வந்து கொண்டு இருந்தாள்.

  ஆராயும் பார்வையோடு ரம்யா எடை போட்டாள். கொஞ்சம் ஆடம்பர சுடிதார் தான், இரு பக்கம் வழியும் மல்லிகை சரம், கை நிறைய பை என்று வித்தியாசமாக இருந்தாள். இத்தனை நாள் அவள் முகம் காட்டும் வாட்டம் இன்று இல்லை. மது முகத்தில் ஒரு தெளிவு, அமைதி என்பதை விட, அதில் ஒரு பூரிப்பு இருந்தது. புது மணப்பெண் போல முகம் ஏகத்திற்க்கும் சிவந்து தனி அழகை கொடுத்தது.

     வீட்டுக்கு வந்தவுடன், கரிகாலனிடம் இருந்து போன் வர, மது முகம் விகாசித்தது. தன்னை பின் தொடர்ந்து வரும் ரம்யாவை மறந்தவள் போனுடன் ஐக்கியமாகி விட்டாள்.

    “இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன், கரெக்ட்டா போன் பண்ணிட்டீங்க. எங்க போய்ட்டு இருக்கீங்க?… நைட் எத்தனை மணிக்கு வீடு போவீங்க?… கருப்பட்டி ஜீரணி வாங்கி கொடுக்க மறந்துட்டீங்க…வீடு போற வரை சாப்பிடாம இருக்காதீங்க. பஸ் எங்கவாது நின்னா ரெண்டு தோசையாவது சாப்பிடுங்க. வெறும் வயித்துல டிராவல் பண்ணாதீங்க. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை போன் பண்ணனும். தூக்கமா?… ம்ம்கூம், நீங்க பத்திரமா ஊர் போற வரை தூக்கமே வராது…” என்னும் பேச்சுக்கள் நீள, அதிர்ந்து போனாள் ரம்யா.

    அவள் குறுக்கு புத்தி, நல்ல விதமாக யோசிக்கவே இல்லை. அவள் நினைப்பில் கரிகாலன் என்ற ஒருவன் வரவே இல்லை. தற்பொழுது யாரோவோ பிடித்து விட்டாள். அழகாக இருந்தால் இப்படி ஆட வேண்டுமா… வளர்ப்பு சரியில்லை.

   தை தொட்டு பொங்கல் நாள் வர தொடங்கியது. மதுக்கு தலை பொங்கல், வீட்டில் பேச்சே இல்லை. அவர்களை பொறுத்த வரை, மது திருமண வாழ்வு முடிந்து விட்டது. தீபாவளி அன்று பேச்சுக்கள் ஏதுமில்லாமல் தான் கடந்தது. தங்கள் வாழ்வை தாங்களே சரி செய்து கொண்டார்கள் என்று இரு வீட்டாருக்கும் தெரியாது.

  அதுவும் மீனாட்சி, வெளிநாட்டு மாப்பிள்ளை எண்ணி கனவில் இருக்கிறார். அந்த கரிகாலன் கண் முன் தன் மகளை சீரும் சிறப்புமாக வாழவைக்க வேண்டும் என்பது தான் அவர் லட்சியமாம். தன்னை மகிழ்ச்சியாக வாழ வைப்பது தன் கணவன் மட்டும் தான் என்னும் முடிவை மகள் என்றோ எடுத்து விட்டாள் என்பதை அறியாமல் தான் போனார்.

   அன்று இரவு சாப்பிட அமர்ந்த மதுவை அழுத்தமாக பார்த்தாள் ரம்யா. பேபி பிங்க் கலர் சுடிதார், அதே கலர் லிப்ஸ்டிக், விரிந்த கூந்தல் என்று ஏதோ பார்ட்டி செல்வது போல் தயாராகி வந்தாள். கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாலும், வாய் துருதுருக்க கேட்டு விட்டாள் ரம்யா.

 “ஏதாவது பார்ட்டிக்கு போறயா மது?…”

 “ம்கூம், அதெல்லாம் எதுவுமில்லை. தூங்க தான் போறேன்…” என்று சொன்ன மது, உணவில் கவனமானாள்.

  மதுவின் எண்ணம் முழுக்க வீடியோ கால் வரும் கணவன் பற்றி இருந்ததால், தன்னையே கவனிக்கும் அண்ணியின் முகத்தை காண தவறினாள். தினமும் பல முறை போனில் பேசி கொண்டாலும், வீடியோ கால் என்பது எப்போதாவது தான் கரிகாலன் செய்வான். அன்று மட்டும் தன்னை சிறப்பாக அலங்கரித்து கொள்வாள் மது.

    இரவில் கூட மோகினி போல் அலங்காரம் செய்து அமர்ந்திருக்கும் மனைவியை கேலி செய்தாலும், அவன் கண்கள் அவளை ரசிக்கும். தனக்காக செய்யும் அலங்காரம் அல்லவா… கணவன் கேலியை எல்லாம் தூசி போல் தட்டி விடுவாள். அவன் கண்ணில் தெரியும் ரசனையே, அவளுக்கு போதுமானது. அவன் கேலி பேச்சு கூட மதுவை முகம் சிவக்க வைத்து விடும்.

 ரம்யா முடிவு செய்து விட்டாள். இவள் வேற யாருடனோ தொடர்பில் இருக்கிறாள் என்று, பின்னே ஒருவனை திருமணம் செய்து இன்னோருவனுடன் பேசுவதற்கு பெயர் என்ன, தொடர்பில் இருக்கிறாள் என்று தானே அர்த்தம். அவளை ஆட விட்டு, ஆதாரத்தோடு பிடித்து, வீட்டார் முன் நிறுத்த வேண்டும் என்று எண்ணினாள்.

  அதற்கு முதற்கட்டமாக தன் கணவனிடம் லேசாக தெரிவித்தாள். முதலில் மாதவன் நம்ப வில்லை. ஏற்கனவே ஒரு முறை மனைவி பக்கம் நின்று, குடும்பத்தை இழந்தாச்சு. திரும்பவும் மனைவி பக்க சாய மனம் மறுத்தது. ஆனால், ரம்யா விடவில்லை. அவ்வளவு உறுதியாக அடித்து சொன்னாள். தன் இரு பிள்ளைகள் மீது கூட சத்தியம் செய்தாள். மாதவன், தான் நேரில் வந்து விசாரித்து தெரிந்து கொள்வதாக சொன்ன பின் தான் மனம் அமைதி கண்டாள் ரம்யா.

   தீபாவளியை தவர விட்டாச்சு பொங்கலாவது கணவன் உடன் சேர்ந்து வெளியில் போக நினைத்திருந்தாள். ஆனால், கரிகாலன் அதிக வேலை வர முடியாது என்று சொல்லி விட்டான். கவர்மென்ட் லீவ், இவனுக்கு மட்டும் என்ன வேலை. மது யோசிக்க, இரண்டு நாளில் பதில் தெரிந்தது.

    மதுவின் அக்கவுண்ட் கணக்கில் பத்தாயிரம் பணம் வந்து விழ, யார் என்று பார்த்தால் கணவன் தான். கரிகாலன் வாங்கும் சம்பளத்தில் பாதி லோனுக்கு போய்விடும், மீதி கடனுக்கு வட்டி கட்டனும். அதை தாண்டி இருக்கும் கொஞ்சமும் அவர்கள் வீட்டுக்கு கொடுக்க, அவன் செலவுக்கு தான் சரியாக இருக்கும். எப்படி மிச்சம் பிடித்தாலும் பத்தாயிரம் சேர்க்க முடியாது.

   கணவனிடமே கேட்க முடிவு செய்தவள். அவனிடமே கேட்டும் விட்டாள். முதலில் சமாளித்தவன், அவளின் முரண்டு பிடியில் சொல்லி விட்டான்.

    “மது… அது வந்து, வேலைக்கு போறேன்…” என்று தயங்கி.

  அதிர்ந்தவள், “என்ன வேலை கரிகாலன். இது என்ன புதுசா?… பார்த்திருந்த வேலை என்ன ஆச்சு?… நேரம் எப்படி?… ஏன் என்கிட்ட சொல்லல?..” படபடவென கேள்வியாக மது கேட்க.

   திணறி தான் போனான். “கொஞ்சம் நெருக்கடி மது. வேற வழியில்லாம தான் போனேன். சாயங்கால வேலை தான். பக்கத்துல அரசி மில்லுல கணக்கு எழுதுற வேலை. ஆறரை மணிக்கு போய் பன்னிரெண்டு மணிக்கு வருவேன்…” இனி மறைக்கும் எண்ணமில்லை என்பது போல் சொல்லி விட, கலங்கி போனாள் மது.

   கடன், பணத்தேவை எதையும் விரிவாக சொல்லவும் மாட்டேன் என்கிறான். மாலை ஐந்து மணி வரை பள்ளி இருக்கும், அதன் பின் ராத்திரி பன்னிரெண்டு மணி வரை ஓயாத வேலை. இப்படி சம்பாதித்து யாருக்கு, ஒன்றுமில்லாமல் கடனுக்கு தான் போகுது. அன்று தன் தந்தை நகை கேட்கும் போதே, தங்களுக்கு தேவை இருக்கு என்றால் அல்லது சீர் வேண்டும் என்று இவனே கேட்டால் கூட இவ்வளவு பிரச்சினையும், பிரிவும் கிடையாதே. யாரோ ஒருவனிடம் கடன் வாங்குபவன், கட்டிய மனைவியிடம் தன்மானம் பார்த்து என்ன ஆகப்போகிறது. சத்திரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இருந்திருக்கலாம் அல்லவா… அப்படி என்ன தன்மானம்.

    நடுத்தர வர்க்க ஆண்களின் தலையெழுத்து, ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தன் போல் குடும்ப பாரம் தலையில் ஏறி விடும். இவனுக்கு என்று எப்போது தான் வாழ்வான். அவனுக்காக செலவு செய்வானா.., மாட்டானா… இதில் தானும் அவன் தலையில், அவன் பொறுப்புகளில் தன்னையும் சேர்த்து கொண்டான். நல்ல கணவன் தான். தன்னை வருத்தி கூட குடும்பம் காக்கிறான். இவன் கஷ்டம் என்று ஓயும், நீ ஏதாவது செய்தே ஆகவேண்டும் மது.

    அவள், அந்த பணத்தில் பத்து ரூபாய் கூட செலவு செய்ய வில்லை. உண்மையில், அதை செலவு செய்ய மனசு வரவில்லை. அதை பார்க்கும் போதெல்லாம், அதன் பின் இருக்கும் கணவனின் கஷ்டம் தெரிய, அந்த பணத்தை தொட கூட மனதில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!