Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 1

மறக்குமோ மாமன் எண்ணம்..

 

ஹீரோ : அகத்தியன் அம்மையப்பன் 

ஹீரோயின் : அதிமதுராந்தகியம்மை 



Advertisement

 

அத்தியாயம் 1

 

Advertisement

வருடம் 2000

Advertisement

 

அதிகாலை நான்கு மணி ஆகிவிட்டாலும்.. இருள் இன்னும் பிரியாது நள்ளிரவாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது.. அதோடு உடலைத் துளைக்கும் கூதல் காற்றுடன் மழைத்துளிகளாய் பனித்துளிகள் சேர்ந்து கொண்டாலும்.. அம்மையப்பன் மாளிகையில் உள்ளோர் அனைவரும் குளித்து முடித்து பட்டுடுத்தி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர்.. அதோடு ஊர்மக்களும் தங்கள் வீட்டு விஷேசம் போல் வேலை செய்து கொண்டிருந்தார்கள்..

 

Advertisement

பின்னே மேட்டுப்பாளையத்தின் ஜமீன் குடும்பமும் அவ்வூரின் பெரிய குடும்பம் என்றழைக்கப்படும் அம்மையப்பன் ஜமீன் குடும்பத்தின் இளவரசனுக்கு திருமணம் என்றால் சும்மாவா.. அதுதான் ஊர் அதிகாலை வேளையிலும் திருவிழா போல் காட்சியளிக்கிறது..

 

அம்மையப்பன் ஜமீன் பல தலைமுறைகள் கண்டது.. ஒவ்வொரு தலைமுறையினரும் தங்களின் பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் தங்களின் முன்னோர்களின் பொருட்கள் என அனைத்தையும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.. இவர்களுக்கு குலதெய்வமே தங்களின் முன்னோர்களான அம்மையும் அப்பனும் தான்.. இவர்கள் குடும்பத்தின் ஆண் வாரிசிற்கு, பேரின் இறுதியில் அம்மையப்பன் என்றுதான் பெயர் வைப்பார்கள்.. இதுவரை இவர்கள் தலைமுறையில் எத்தனை பெண் வாரிசுகள் பிறந்தாலும் ஒற்றை ஆண் வாரிசு மட்டுமே இருக்கிறது.. அடுத்து ஆண் குழந்தைகள் பிறந்தாலும் அவை நிலைப்பதில்லை.. இதற்கு காரணம் என்னவென்று இதுவரை அவர்களுக்கு புரியவில்லை.. ஏதோ முன்னோர் சாபம் என ஊருக்குள் கதை உண்டு..

 

இப்பொழுது அம்மையப்பன் குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கான ஆண் வாரிசு இருபத்தியிரண்டு வயதான அகத்தியன் அம்மையப்பனுக்கு தான் திருமணம்..

 

அங்கன என்ன வேடிக்கை பார்க்குறீங்க.. வந்து வேலைய பாருங்கடா.. என அதட்டிக் கொண்டிருந்தார் அவ்வீட்டின் மருமகள் வேதவல்லி.. அகத்தியனின் தாய்..

 

நங்க (நங்கை-அண்ணி) உன்ன ஐயன் கூப்டாரு வந்து என்னன்னு கேளு.. என்றார் மரகதம் அம்மையப்பன் வீட்டின் பெண்வாரிசு.. அகத்தியனின் அத்தை.. 

 

ஆத்தி.. மாமா அகத்தியன் கிளம்பிட்டானான்னு பாக்க சொன்னாங்.. இங்கன உள்ள வேலையில மறந்துட்டேன் நங்க.. என பதறியவாறு செல்ல.. மரகதம் தன் அண்ணியின் ஓட்டத்தை பார்த்து சிரித்தவாறு சென்றார்..

 

அங்கு கல்யாண வேலைகள் நடக்கட்டும் நாம் அம்மையப்பன் மாளிகையில் உள்ளோரை பார்த்துவிடுவோம்.. அம்மையப்பன் மாளிகையின் மூத்தோர்.. அம்மையப்பன் மற்றும் பேச்சியம்மை தம்பதியர்.. அவர்களுக்கு மகள், மகன் என இரு பிள்ளைகள்.. மகள் மரகதம்.. மகன் சிவநேசன் அம்மையப்பன்.. மரகதத்திற்கு தன் தங்கை மகன் நாகநாதனை திருமணம் செய்து வைத்தார்.. அவர்களுக்கு திருநாவுக்கரசு திருச்செல்வன் என இரு ஆண்பிள்ளையும்.. கலையரசி என்ற பெண் மகவும் உள்ளனர்..

 

சிவநேசனுக்கு பேச்சியம்மையின் தம்பி மகள் வேதவல்லியை திருமணம் செய்து வைத்தார்கள்.. அவர்களுக்கு இரு பெண்கள் அமிர்தவல்லி பவளமல்லி.. அதற்க்கடுத்து பதினைந்து வருடத்திற்கு பிறகு பல வேண்டுதல்களுடன் பிறந்தவன் அகத்தியன் அம்மையப்பன்..

 

இதில் அமிர்தல்லி திருநாவுக்கரசுவிற்கும்.. பவளமல்லி திருச்செல்வனுக்கும் பல வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்துவிட்டது.. அவர்களுக்கும் நான்கு மூன்று வயதில் பிள்ளைகள் இருக்கின்றனர்.. 

 

கலையரசியை அவள் தந்தைவழியில்.. அத்தை முறையில் உள்ள குடும்பத்தில் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள்.. மொத்தத்தில் இவர்கள் பெண்ணேடுத்து பெண் கொடுக்கும் வழக்கம் உடையவர்கள்.. முடியாத பட்சத்தில்.. ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட முறையில் சம்மந்தம் வைத்துக்கொள்வார்கள்..

 

அவரவர்க்கு தனியாக சொத்துக்கள் இருந்தாலும் கலையரசியை தவிர்த்து மற்ற அனைவரும் அம்மையப்பன் மாளிகையில் தான் இருக்கின்றனர்..

 

அம்மணி.. என்னாச்சு ஏன் வெட்ட வெளியவே பார்க்கிறவ.. என வினவினார் அம்மையப்பன்.. 

 

பேச்சியம்மை “கொஞ்சம் மனசு ஒருமாதிரியா இருக்குங் மாமா”

 

“ஏன் அம்மணி நீயும் உன்ற மவளும் ஆசைப்பட்ட மாதிரி கண்ணாலம் நடக்குதுல்ல.. பிறகென்ன..”

 

“எல்லாம் அந்த சோசியர் சொன்ன சேதிதாங்.. மனசகிடந்து உறுத்திக்கிட்டு கிடக்கு..” என்று கூறியவரின் நினைவு.. ஒருமாதம் முன்பு தங்கள் மாளிகையில் நடந்ததை நோக்கிச் சென்றது..

 

*****************************

 

அம்மையப்பன் மாளிகையே நடந்த விஷயங்களில் சற்று அதிர்ந்து தான் போனது.. அமிர்தவல்லி ஒருபுறம் கண்ணீர் விட்டுகொண்டிருக்க.. திருநாவுக்கரசுவு தவிப்புடன் தன் மனைவி பார்த்துக் கொண்டிருந்தார்.. மற்றவர்கள் அனைவரும் என்ன செய்வது என புரியாது இருந்தார்கள்..

 

நடந்தத விடுங்க.. இனிமே இதப்பத்திய பேச்சு வேணாம்.. இந்த சேதி கடுகளவு வெளிய கசிஞ்சாலும் இத்தனை தலைமுறையா நாம சேர்த்து வச்ச கவுரவம் எல்லாம் மண்ணோட மண்ணாப் போயிடும் பாத்து நடந்துக்கோங்க.. என அம்மையப்பன் இறுகிய குரலில் கூற சிலரைத் தவிர மற்றவர்களின் மனம் நிம்மதியானது..

 

“இப்போ நடக்கிறதெல்லாம் பார்த்தா ஏதோ தப்பா நடக்க போறது மாதிரி தோணுதுங்க மாமா.. எதுக்கும் நம்ம பிள்ளைங்களுக்கு ஜாதகம் பாத்துட்டு வருவோமா” என பேச்சியம்மை கேட்க.. அம்மையப்பனும் தலையசைத்தார்..

 

அம்மையப்பன் குடும்பத்தின் ஆஸ்த்தான சோதிடர் முன் அம்மையப்பனும் அவர் துணைவியும் அமர்ந்திருக்க.. சோதிடரோ அவர்களிடம் எப்படி சொல்வது என சங்கடத்தோடு அமர்ந்திருந்தார்..

 

“என்ன சோசியரே.. உம்பட முகத்தை பாத்தா வேண்டாதத சொல்லுறது போலயிருக்கு.. என்னனாலும் சொல்லுங்க.. பாத்துக்கலாம்” என்றார் அம்மையப்பன்..

 

“அதுங்கய்யா உங்க வீட்டுல உள்ளவங்க செஞ்ச கர்மா எல்லாம் ஒரு இடத்துல மரமா பெண் ரூபத்துல வளர்ந்துகிட்டு இருக்கு.. அதுவா உங்களை தேடி வராது.. உங்க குடும்பத்துல யாரவது அதுகிட்ட போனா.. அன்னையில இருந்து உங்க குடும்பத்துக்கு கஷ்டகாலம் தான்.. உயிர் சேதம் பொருட் சேதம்ன்னு எது நடக்கும்னு சொல்ல முடியாது.. அதோட மொத்த கோபமும் நம்ம சின்னய்யா தலையில தான் விடியும்.. அவரோட உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்.. அதுமட்டும் இல்லங்கய்யா” என மேலும் சில விஷயங்களை கூற பேச்சியம்மை ஆடிப்போய்விட்டார்..

 

அவர் முன்னர் கூறியதே அவரின் மனதை அறுத்துக் கொண்டிருக்க அடுத்து கூறியதோ அவரின் சர்வத்தையும் ஒடுங்க வைத்தது.. அம்மையப்பனுக்கு அதிர்ச்சி தான் ஆனாலும் அதற்கு மாற்று இருக்கிறதா என யோசித்துக் கொண்டிருந்தார்..

 

“இதுல இருந்து எங்க குடும்பத்தை எப்படி காப்பாத்துறது சோதிடரே.. எதாச்சும் பரிகாரம் இருக்கா..”

 

“நம்மளோட கைரேகையை எப்படி மாத்த முடியாதோ அதேமாதிரி தான் நம்ம தலையெழுத்தும்.. இதுதான் நடக்கணும்ன்னு இருந்தா அதை யாராலையும் மாத்த முடியாது.. அதான் உங்க மனசை திடப்படுத்திக்க சொன்னேன்.. அந்த பொண்ணுகிட்ட நீங்க போகாதவரை உங்களுக்கு பிரச்சனை கிடையாது.. அதோட நம்ம சின்னய்யாக்கு இருபத்தியிரண்டு வயசுல கல்யாணம் நடக்கலைன்னா அடுத்து நாற்பது வயதுக்கு மேலதான் நடக்கும்.. என மேற்கொண்டு சில விஷயங்கள் சொல்ல அம்மையப்பனும் பேச்சியம்மையும் மேலும் அதிர்ந்தனர்.. பல யோசனைகளுடனும் குழப்பங்களுடனும் இருவரும் வீட்டிற்கு வந்தனர்..

 

“என்னத்தே என்னாச்சு ஏன் ஒருமாரி இருக்கிங்..” என வேதவல்லி கேட்க அகத்தியனின் திருமண விஷயத்தை மட்டும் கூறி.. மற்றதை மறைத்து விட்டனர்.. மரகதம் மட்டும் தாய் தந்தை முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என புரிந்து கொண்டார்..

 

“ஐயா.. சோசியர் வேற என்ன சொன்னாருங்.. உங்கட முகமே சரியில்லையே” என யாருமற்ற தனிமையில் மரகதம் கேட்க.. பேச்சியம்மை கண்ணீருடன் அனைத்தையும் கூறினார்..

 

“இப்போ என்ன செய்யுறது கண்ணு” என புலம்பலாய் பேச்சியம்மை கேட்க.. மரகதம் அதிர்ச்சி தெளிந்து அவரை சமாதானம் செய்தார்..

 

“இங்க பாருங்ம்மா.. அந்த பிள்ளைய நம்மகிட்ட சேக்காத வரை நல்லதுன்னு சொல்லிருக்காங்கள்ள பிறகென்ன.. எம்பட மகனை நான் தட்டி வைக்கிறேன்.. இனி அவேன் அந்த பிள்ளை பக்கமே போவமாட்டான்.. நீங்க இத நினச்சு வெசனப்படாதீங்க..” என்று கூறியவர் கையோடு தன் மூத்த மகனையும் எச்சரித்தார்..

 

“இங்க பாரு சாமி.. நம்ம குடும்பம் ரொம்ப பாரம்பரியமானது.. இங்க நமக்குன்னு ஒரு மரியாத இருக்கு.. இப்போ உன்ற சட்டையில தெரியாம ஒரு கறை விழுந்துடுச்சு.. அத உடனே எடுக்கோனும்.. இல்லை.. அதை மறைக்கோணும்.. அதைவிட்டுப்போட்டு கூடவே வச்சுக்கனும்ன்னு நினைக்காத சாமி.. உன்னால என்ற பிறந்த வூட்டுக்கு ஒரு பிரச்சனையும் வரக்கூடாது.. என்ற தலைமேல கைவச்சு சத்தியம் பண்ணு… இனிமேக்காட்டி அந்த பிள்ளை பக்கமே நீ போகக்கூடாது.. மீறுனா என் பொணத்தை தான் நீ பாப்பே.. அந்த பிள்ளை வாழ்க்கை முழுமைக்குமான பணத்தை கொடுத்துட்டு நீ விலகிக்க..” என மிரட்டலும் கெஞ்சலுமாக சொல்ல.. திருநாவுக்கரசு தன் குடும்பத்திற்காக இரண்டாம் முறை தன் மனசாட்சியை கொன்று புதைத்தார்.. 

 

வேதவல்லி மகனின் ஜாதகத்தில் உள்ள விஷயத்தை கேட்டு மிகவும் பயந்து விட்டார்.. பல வருடங்களுக்கு பின் பிறந்த மகன்.. ஒற்றையாய் நின்றுவிடுவானோ என பயந்து நிற்க.. வீட்டினர் அகத்தியனிற்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.. அதிலும் சிக்கல் இருப்பது பேச்சியம்மை அம்மையப்பன் மரகதத்திற்கு தானே தெரியும்.. அதனால் அவர்களும் அவனின் ஜாகத்திற்கு பொருத்தமான பெண்ணை தேட ஆரம்பித்தனர்..

 

அப்பொழுது அவர்களே எதிர்பாராமல் வண்ணம் வேதவல்லியின் ஒன்றுவிட்ட அண்ணனின் மகள் அன்பழகியின் ஜாதகம் அகத்தியனுக்கு பொருத்தமாய் இருக்க.. அடுத்தடுத்த வேலைகள் ஆரம்பமாயின.. ஆனால் அகத்தியனின் சம்மதம் தான் எளிதில் கிடைக்கவில்லை.. மிகுந்த போராட்டத்திற்கு பிறகுதான் ஒப்புக்கொண்டான்..

 

*********************************

 

இங்க பாரு அம்மணி இப்போதைக்கு நம்ம குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. இத மட்டும் மனசுல வச்சுக்கோ.. தேவையில்லாதத நெனச்சு உடம்ப கெடுத்துக்காத.. இன்னைக்கு நம்ம பேரன் கண்ணாலம்.. அதைப்பத்தி மட்டும் நென.. வா என அழைக்க வேதவல்லி உள்ளே வந்தார்..

 

மாமா வரச்சொன்னிங்..

 

ஹ்ம்ம் ஆமாம்மா.. எல்லாம் தயாராகிடுச்சுல்ல.. உன்ற மவன் எங்க..

 

மாமா.. அதப்பத்திதான் சொல்ல வந்தேங்.. அவேன் தோப்புக்கு போயிருக்கானுங்.. என உள்ளே சென்ற குரலில் கூற.. அம்மையப்பன் கோபமானார்..

 

என்ன இது.. உனக்கும் உன்ற மவனுக்கு நேரம் காலம் தெரியாதா.. கண்ணாலத்தை வச்சுக்கிட்டு தோப்புக்கு போயிருக்கான்.. ஏதாவது ஆனா என்ன பண்றது.. எங்க உன்ற புருசன்.. அவனை அனுப்பிட்டு இவன் என்ன பன்றான்.. என அவர் சத்தமிட்டு கொண்டிருக்க..

 

ஐயா.. கொஞ்சம் பொருங்.. எம்பட மருமவன் அதெல்லாம் நேரத்தோடு வந்துடுவாறுங்.. என மரகதம் அவரை சமாதானம் செய்து.. தன் அண்ணியை அங்கிருந்து கிளப்பினார்..

 

ஏனுங்.. ஏன் இப்படி கோபப்படுறீங்.. அதெல்லாம் நல்லபடியா கண்ணாலம் நடக்கும்ங்க மாமா.. என்று கணவனின் பயம் அறிந்து ஆறுதல் கூறினார் பேச்சியம்மை..

 

இங்கு இவ்வளவு பிரச்சனை நடந்துகொண்டிருக்க.. அதற்கு காரணமானவனோ.. தோப்பின் சற்று உள்ளடங்கிய பம்பு செட்டினுள்.. வெள்ளம் போல் பாய்ந்து வந்த நீரினுள் மூழ்கி எழுந்து நீந்திக் கொண்டிருந்தான்..

 

அடேய்.. இங்கனயா இருக்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணாலத்தை வச்சுக்கிட்டு இன்னைக்கும் இங்க வந்து நீந்திக்கிட்டு கிடக்க.. அங்க உன்ற ஆத்தாவயும் ஐயனையும் அப்பச்சி ஏசிக்கிட்டு இருக்காங்டா.. சீக்கிரம் வா என கத்திக்கொண்டிருந்தான்.. அகத்தியனின் உயிர்த்தோழன் சரவணன்..

 

அவன் குரல் செவியினுள் நுழைந்தாலும்.. சற்று நேரம் கழித்தே வெளிவந்தான் நம் நாயகன்.. 

 

கோதுமை நிறத்தில்.. இளமையின் வலிமையோடு.. முகத்தில் நீர் வழிய.. வசீகர சிரிப்புடன்.. ருத்ராட்ச மாலை அணிந்து.. மேலாடையின்றி வெண்ணிற வேஷ்டி மட்டும் உடுத்திக் கொண்டு வந்தவனைக் கண்டு சரவணன் மொழி மறந்து சில நிமிடங்களேனும் அவனையே ரசித்துக் கொண்டிருந்தான்..

 

அகத்தியன்.. இருபத்தியிரண்டு வயது வாலிபன்.. இந்த குழந்தையும் பால் குடிக்குமா என என்னும் முகம் கொண்டவன்.. அவன் புன்னகைத்தால் எதிரில் உள்ளோருக்கும் தானாகவே புன்னகை வந்துவிடும்.. வயதுபெண்களை கேட்கவே வேண்டாம்.. அவனின் தோப்பிலும் வயலிலும் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் வேலை செகிறார்களோ இல்லையோ.. இவனை சைட் அடிக்கும் வேலையை மட்டும் சிறப்பாக செய்வார்கள்.. அப்படியான ஆணழகன்.. அவனுக்கு திருமணம் என்ற செய்தி பல பெண்களின் மனதை கொன்றுவிட்டது..

 

தீவிர சிவபக்தன்.. எந்நேரமும் நெற்றியில் திருநீர் கீற்றுடன் தான் இருப்பான்.. மந்திரவாதியின் உயிர் கூண்டில் உள்ள கிளியிடம் உள்ளது போல் இவனின் உயிர் அவன் குடும்பத்தினரிடம் தான் உள்ளது.. அவனுக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்தது அவன் குடும்பமே.. அவர்களுக்கு ஒன்றேண்டால் துடித்து விடுவான்.. அதற்கு காரணமானவர்களை அழித்து விட்டுத்தான் அடுத்த வேலையை பார்ப்பான்.. அகத்தியனின் புன்னகை முகம் எவ்வளவு அழகானதோ.. அவனின் கோபம் முகம் அதைவிட ஆபத்தானது.. அவனுக்கு தெரியவில்லை அவனின் கோபமெல்லாம் யட்சினியையொத்த ஒருத்தியிடன் செல்லுபடியாகாது என்றும்.. அவள் முன்னே அவனால் சில நிமிடத்திற்கு மேல் முறைபாய்க் கூட ஓர் பார்வை பார்க்க முடியாது என பாவம் அவனுக்கு தெரியவில்லை.. 

 

அவன் குடும்பத்தினரின் கர்மவினையால் பிறந்து.. யட்சினியாய் வளர்ந்து நிற்பளைக் கண்டு அவன் என் செய்வான்..? அவளிடமிருந்து தன் குடும்பத்தினரை எப்படி காப்பாற்றுவான்..? ரட்சகனாய் அவன் குடும்பத்தை ரட்சிப்பானா..? இல்லை யட்சினியின் யட்சனாய் மாறுவானா..? காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!